மரமேற இயலாதபோது…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 25, 2021
பார்வையிட்டோர்: 3,339 
 

அந்தப்பாதை அப்படியே தான் இருந்தது. நீண்டு கொஞ்சம் மேடேறி, கண் மறைக்கும் மேடு இல்லை, கொஞ்சமே உயர்ந்திருந்த மேடு அவ்வளவுதான், அப்புறம் வலது பக்கமாக திரும்புவது போன்ற சாகசத்துடன் சற்றே சற்று வளைவு, மறுபடி நேர்க்கோடாய்ச்சென்று இப்போது கொஞ்சம் கோபத்துடன் இடது பக்கம் திரும்பி மறைந்தே விட்டிருந்தது. அப்போதும் அப்படித்தான். அதில் எதிர்பாரத கணத்தில் மூச்சிரைக்க சைக்கிளில் வரும் ஜான்சன் வாத்தியார், சில இரவுகளில் மட்டுமே வரும் அந்த டப்பா வைத்த சைக்கிள் வண்டி, அதில் கண்ணைக்கூசும் பெட்ரோமாக்ஸ் விளக்குடன் ஒன்றிரண்டு ஈக்களும் மொய்க்கும் சோன்பப்படி ராம்லால், மத்தபடி எப்போதும் காலியாகவே இருக்கும் பாதை. ராத்திரியில் கூட ஈ வருமா என்று அப்போதெல்லாம் இவனுக்கு சந்தேகம். ஆனால் யாரிடமும் கேட்டதில்லை.

ஜான்சன் வாத்தியார் மட்டும் சிரிக்காத முகத்துடன் “என்னடே! வீட்டுக்கணக்கை முடிச்சியா” என்று கேட்டுவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் மேலும் மூச்சிரைக்க பெடல் பண்ணிக்கொண்டே போய்விடுவார். ஒவ்வொரு முறையும் இவன் விளையாடிக்கொண்டிருக்கும் பம்பரத்தையோ கோலியையோ நிறுத்திவிட்டு பதில் சொல்ல யோசிப்பது போல முகத்தை வைத்துக்கொள்வான். அதற்குள் ஜான்சனின் சைக்கிள் நூறடிக்கு மேல் போய்விட்டிருக்கும். ராம்லால் இவன் வீட்டு வாசலில் மட்டும் அதிகம் நேரம் நின்று பெல் அடித்துவிட்டு போவான். அந்தத்தெருவிலேயெ தாத்தா மட்டும்தான் எப்பவாவது சோன்பப்டி வாங்கி இவனுக்குத்தருவார்.

“எனக்கு வேணாம் சக்கரை இருக்கே”என்று சொல்லிவிட்டு இவன் கிண்ணத்தில் கொட்டின பேப்பரை ஒரு வாகாய் உருட்டி மிச்சமீதமிருக்கும் சோன்பப்டி துண்டுகளை வாயில் கவிழ்த்துக்கொள்வார்.

வீடு மட்டும் அப்படியே தான் இருந்தது. வாசலில் அந்த போகைன்வில்லா இன்னும் பழுப்பேறி கொம்புகள் உருண்டு திரண்டு இலைகள் மேலேறி ஆனால் அடர்த்தி குறைந்து நோஞ்சானாய் போயிருந்தது. காம்பௌண்டு சுவற்றில் இன்னும் அந்த ஸ்டம்ப் கீறின செங்கல் கோடுகள். கொஞ்சம் மங்கிப்போய்விட்டிருக்க, அந்தப்பக்க ஓரத்தில் கல் பெயர்ந்து அப்படியே குறைப்பாட்டுடன் தங்கிவிட்டது. வாசல் கேட் அதே சிகப்பு. வீடு இன்னும் பழையதாகி இருந்தது. வலது பக்க தோட்டத்தில் அந்த மாமரம் இன்னும் பெரிதாகி இன்னும் ஸ்திரமாகி இருந்தது.

எங்க அப்பா நட்ட மரம் என்று தாத்தா சொல்லுவார். மாடிக்கு வெகு அருகில் செல்லும் அந்தக்கிளை அப்படியே, ஆனால் இன்னும் தடித்திருந்தது. கிளை மரத்தில் சேரும் இடத்தில் அந்த பொந்து…..

இவன் மெதுவாக வீட்டு வாசலில் போய் நின்றான். நடமாட்டம் தெரியவில்லை. உள்ளே போகலாமா வேண்டாமா என்று தயங்கினான். இப்போது சட்டென்று ஜன்னலில் சலனம். கர்ட்டன் விலகி ஒரு அழகிய சின்னப்பெண்ணின் முகம் தெரிந்தது. அவள் முகத்தில் கெள்விக்குறி, பிறகு ஒரு ஆச்சர்யம். சில வினாடிகளில் வாசல் திறக்கப்பட்டு வெளியே வந்து கேட்டருகில் வந்தாள்.

”என்ன வேணும்? யாரு?”

பன்னிரெண்டு வயதிருக்கலாம். தலை வாரப்படாமல் சற்றே அலட்சியமான ஸ்திதி. பொட்டில்லை. கழுத்தில் மெல்லிய செயின். எனக்கு மூளை இருக்கிறது. உங்களுக்கு…? என்று ஆங்கிலத்தில் கேட்ட டீ ஷர்ட். முழங்கால் வரை இருந்த டைட் லெக்கின். லட்சணமாக இருந்தாள்.

“யாருன்னு கேட்டேனே? யார் வேணும்?”

”இல்லை சும்மா…!”

”என்னது?”

”நான் இந்த வீட்டுல குடி இருந்தேன். இந்த ஊருக்கு வந்ததுனால பாத்துட்டு போலாம்னு வந்தேன்!”

இப்போது அவள் முகத்தில் தெளிவு. புன்னகை கூட.

“இந்த வீட்டுலயா? எப்போ?”

”அதாச்சு! நெறய வருஷத்துக்கு முன்ன?”

“ஸ்கூலும்போதா?”

”காலேஜ் வரைக்கும் இங்கதான் இருந்தேன்!”

”ஓ நாங்க நாலு வருஷம் முன்னாலதான் வந்தோம்!”

தயங்கி நின்றான்.

“வீட்டுல அப்பா அம்மா இல்லியா?”

”இல்ல வெளில போயிருக்காங்க. ஒரு கல்யாணம்”.

”ஓ அப்படியா? சரி நா கிளம்பறேன்”

அவன் தயக்கத்தைப்பார்த்துவிட்டு அவள் கொஞ்சம் தைரியமாகப்பேசினாள்.

“உள்ள வந்து பாக்கறீங்களா?”

”இல்ல வாணாம். சும்மா தோட்டத்த மட்டும்….?”

”வாங்க”

சிகப்பு கேட்டைத்திறந்து விட்டாள்.மெதுவாக நடந்து மா மரத்தை அடைந்தான். அவளும் பின்னால் வந்தாள்.

”இங்க தாத்தாவோட இருந்தேன். தாத்தா ரிடயர்ட் ஆர்மி!”

”எங்க அப்பாகூட ஆர்மிதான். வெறும் கர்னல்தான்.”

”அதென்ன வெறும் கர்னல்?”

”இதுக்குள்ள ப்ரிகேடியர் ஆகியிருக்கணூம். ஆனால் ஆகலை.”

”கர்னலும் பெரிய பதவிதானே!”

அவள் சுவாரஸயப்படவில்லை.

”இங்கெல்லாம் விளையாடீருக்கீங்களா?”

”நெறய! இந்த மாமரத்துக்கடியிலதான். சரி, சோன்பப்டி இப்பல்லாம் வருதோ?”

”ஓ! ராம்லால்னு ஒரு தாத்தா வருவாரு!”

ராம்லால் தாத்தாவா?

இந்த மரத்து மேலதான் பாதி நேரம் இருப்பேன். மாடி வழியா அதோ அந்தக்கிளை மேல வந்து, அங்க பாரு, அந்த சீட்டு மாதிரி தண்டு, அங்கதான் உக்காந்துப்பேன்.

”ஓ! என்னால மரத்துல ஏறமுடியாது. நா மரத்தடியிலதான் வெளையாடுவேன்!”

”மரத்தடியில கோடு போட்டு கில்லி தாண்டு ஆடுவோம். அப்புறம் கோலி.”

”நா பாண்டி கோகோதான்.”

”அந்த பொந்து அப்படியே இருக்கு”.

”எது அந்த மரத்து மேல ஓட்டையா இருக்கே அதுவா?”

”ஆமாம். அதுல தான் என்னோட வெளையாட்டு சாமானெல்லாம் ரகசசியமாவெச்சுப்பேன்!”

”வெளையாட்டு சாமானா?”

”ஆமாம் கோலி, பம்பரம் அப்புறம் ஸ்கூல்ல திருடற பென்சில்..!”

”அய்யயோ! பென்சில்லாம் திருடுவீங்களா?”

சிரித்தான்.

”இன்னும் அதெல்லாம் அங்கயேதான் இருக்குமா?”

”இருக்கணும்! உனக்கு முன்னால இந்த வீட்டுல இருந்த பசங்க யாரானும் எடுத்திருக்கலாமே!”

”இப்ப ஏறிப்பாக்கப்போறீங்களா?”

”இல்ல என்னால இப்ப ஏறவே முடியாது!”.

”நா வேணா ஏறிப்பாக்கட்டுமா?”

”உன்னால ஏற முடியாதுன்னியே!”

”கொஞ்சம் டிரை பண்ணினா ஏறிடுவேன். இருங்க.”

படபடவென உள்ளே ஓடினாள். சில நிமிஷங்களில் மாடிக்கு வந்து மெதுவாகத்தவ்வி கிளையைப்பற்றிக்கொண்டு நகர்ந்து நகர்ந்து கிளை மேல் தவழ்ந்து பொந்துக்கு அருகில் வந்து விட்டாள்.

“ஜாக்கிரதை! பூச்சி கீச்சி இருக்கப்போறது!”

கிறீச்சிட்டாள்.

”இருக்கு இருக்கு!”

இப்போது அவள் கையில் குழப்பமாக சில பொருட்கள். இன்னும் துழாவினாள்.

”இருங்க எடுத்துண்டு வரேன்.”

அவன் கழுத்து வலிக்க ஆவலோடு பார்த்தான். மெதுவாக மீண்டு தவழ்ந்து கிளை மேல் நகர்ந்து மாடிக்குள் குதித்து கீழே வந்து விட்டாள். கையில் இருந்த பொருட்களை அவன் கைகளில் போட்டாள்.

கறுப்படைந்திருந்த கோலி குண்டுகள், அந்த சிகப்பு டாணா கோலி, ஆணி உடைந்த தலையாறி அடி வாங்கியிருந்த பம்பரம், நைந்து போன கறுப்பு ஜாட்டி, அப்புறம் அந்தக்கவர். வெளியில் டிசைன் கோடுகள் ஜரிகையில் போட்டு ஒரு ஆணும் பெண்ணும் நிற்கும் கல்யாணகோலம் கார்ட்டூனில் போட்டிருந்த கவர்.

கவர் இங்கேயா இருக்கு?

”சரி! நான் கிளம்பட்டுமா? நாழியாகிடுச்சே!”

”இந்தாங்க உங்க பொருளெல்லாம் எடுத்துக்குங்க!”

”வாண்டாம் எல்லாத்தையும் நீயே வெச்சுக்கொ. எனக்கு இந்தக்கவர் மட்டும் போறும்!”

அவள் தனக்குக்கிடைத்த திடீர் புதையலில் ஆழ்ந்திருக்க, இவன் நகர்ந்தான்.

”ரொம்ப தாங்க்ஸ் உனக்குத்தான்!”

இவன் குரல் தழுதழுத்ததோ?

அவள் தலையாட்டிவிட்டு உள்ளே போனாள்.

இவன் அந்த வளைந்த பாதையில் நடந்து போய் ஜான்சன் சைக்கிள் வரும் மேட்டில் இறங்கினவுடன் சற்று நின்று கவரைப்பிரித்தான்.

இத்தனை வருஷ பொந்து வாசத்தில்கூட கவரில் மணப்பெண்ணின் பெயர் அழியாமல் இருந்தது.

இப்போது மெல்லியதாகத்தொடங்கிய தூறல் வலுப்பெற்று மழை பெய்ய ஆரம்பித்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *