கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 26, 2022
பார்வையிட்டோர்: 5,600 
 

“ராசாத்தி மகள் மூலையில் உட்கார்ந்து விட்டாள்.”

முந்தா நாளிலிருந்து ஊரில் இதே பேச்சுதான். ஊர்ப் பெண்கள் மூக்கில் விரலை வைத்தனர். வாயைப் பிளந்தனர்.

ஆச்சரியத்தில் மாய்ந்து போனார்கள். “நிஜந்தானா” “நிஜந்தானா” என்று ஒவ்வொரு பெண்ணும் திணறித் தவித்தார்கள்.

பூங்கோதைக்கும் ஆச்சரியம்தான். அத்துடன் கொஞ்சம் அதிர்ச்சியும்கூட. மனசுக்குள் மெல்லிய நெருடல். ஆழத்திற்குள் ஜில்லிட்டுப் பாய்கிற பயம்.

“அப்பவும் இப்படியா. அப்பவும் இப்படியா” என்று வாய்க்கும், கைக்குமாய் புலம்பிக்கொண்டிருந்தாள்.

புருஷனுக்கும், பிள்ளைகளுக்கும் எல்லாவற்றையும் கவனித்து, சமாளித்து முடித்துவிட்டு, கூலி வேலைக்குக் கிளம்பினாள் பூங்கோதை. அவளுடன் வந்து சேர்ந்து கொண்டாள் மாடத்தி.

அவளிடமும் சொல்லிச் சொல்லி மாய்ந்தாள் பூங்கோதை. மாடத்திக்குப் பிடிக்கவில்லை. வெடுக்கென்று மறுத்துப் பேசினாள்.

“பொம்பளைப்புள்ளே சடங்காகுறது ஒரு அதிசயமா? இதுக்குப்போயா… இப்படி வாயாடிக்கிட்டிருக்கே?”

“அப்பவும் இப்படியா பதினோரு வயசுகூட ஆகலே, இன்னும் தாவணியும் போடலை. அதுக்குள்ளேயா? இதெல்லாம் காலக் கூத்துதான்.

“அதுக்கென்ன. கணக்கா இருக்கு? சில உடம்புவாகு அப்படி அதனாலே இருக்கும்லே?”

“என்ன உடம்போ…! நாங்க எல்லாம் சீலை கட்டுன முழுத்த பொம்பளைகளா ஆனப்பெறகுதான், மூலையிலே உக்காந்தோம். இப்ப என்னடான்னா.. பால்குடி மறந்த புள்ளைககூட சமைஞ்சிருதுக.”

“அதுக இச்சையிலா நடக்குது? அதுக்கு அந்தப் புள்ளைக என்ன செய்யும்?”

“நானும் அதுகளை குத்தம் சொல்லலை”

“நீ சொல்றதும் வாஸ்தவம்தான். முந்தி மாதிரி இல்லே இப்ப. ரொம்பச் சின்னஞ் சிறுசுககூட “பொசுக் பொசுக்” குன்னு பூத்துருதுக”

“மூலை மூலைக்கு நடக்குற சினிமா. டிவிகளைப் பாத்துப் பாத்து… வர்ற சீரழிவு”

காலை வெயில் சுள்ளென்று தைக்கிறது. மாடத்தி நடையை எட்டிப்போட்டாள். இவளும் தொடர்ந்தாள்.

விலகி எங்கோ ஓடுகிற நினைவுகள்….

பூங்கோதை சின்னப் பிள்ளையாக, பாவடை கட்டியிருந்த சமயம்…

சினிமா என்றால் அதிசயம். பார்க்கக் கிடைக்காத அபூர்வம் ஆசைப்பட்டவுடன் பார்த்துவிட முடியாது.

சினிமா என்றால், அப்போ திருவேங்கடம் போகணும். கெஞ்சிக் கூத்தாடி. அய்யா – அம்மாவிடம் வசவுகள் வாங்கி, அப்புறம் சம்மதம் வாங்கி….

பெரியாள்களுடன் ஈடுகொடுத்து, நாலரை மைல் நடந்து சாகணும்.

கண்மாய்க் கரையில் – காய்ந்து பொடிப் பொடியான கரிசல் கட்டிகள் நெரிஞ்சிமுள்ளாய் குத்தும். அதையும் தாங்கிக்கொண்டு “லொக் லொக்” கென்று மூச்சிறைக்க ஓடணும்.

டூரிங் தியேட்டரில் மணலைக் கூட்டி, உட்கார்ந்து படம் பார்த்துவிட்டு… மையிருட்டில் முள்ளுக் காட்டில் மறுபடியும் நடை.

வீடு வந்து சேர்வதற்குள், கோழி கூப்பிட்டு விடும். மறுநாள் எழுந்திருக்க முடியாது. அடித்துப் போட்ட மாதிரி உடம்பெல்லாம் வலியெடுக்கும். அப்புறம் ரொம்ப நாளைக்கு சினிமா ஆசையே வராது.

இப்போது… அப்படியா?

வாரம் வாரம் டி.வி.யில் சினிமா. டி.வி. உள்ள புண்ணியவதிகள் வீட்டுக்குள் புளிச்சிப்பமாய் அடைந்து கிடந்து, சிறிசு, பெரிசுகள் எல்லாம் போய்ப் பார்த்து விடுகின்றன.

இதுவும் போதாதென்று. ஊர் மைதானத்தில் பத்து நாளைக்கு ஒரு தடவை “டெக்”கும், டிவியும் வந்துவிடும். யாரோ சிலர் ஏற்பாடு செய்திருப்பார்கள். வீடு தேடி வந்து கதவைத் தட்டுகிற சனியன்கள்.

ஊரே திரண்டு, விடிய விடிய கண் கூசாமல் பார்க்கும். ஒரு ராத்திரிக்கு நாலு படங்கள்.

இப்போது வருகிற சினிமாக்கள், மனுச மக்கள் உட்கார்ந்து பாக்கிற மாதிரியாகவா இருக்கிறது? ஒரு கதை உண்டா? கருத்து உண்டா? ஒரு இழவும் இல்லை.

ஒரே ஆடுகாலித்தனம்தான். காமக்கூத்தும், அசிங்கமும்தான், டவுசர் போட்ட சின்னப் பையனும், பொண்ணும் காதலிக்க தண்ணீரில் நனைய, தாவணியை உருவ…த்தூ! அசிங்கம்.

இந்தக் கூத்துக்களை மனம் கூசாமல் விடிய விடிய பார்த்து ரசிக்கிற சின்னதுகளும், பெரியதுகளும்…..

பெரியதுகளாவது… காடு கரைகளில் இந்த அசிங்கங்களைப் பேசிச் சிரித்து கழித்து விடுவார்கள்.

பாவம் சின்னதுகள்….

உள்ளுக்குள்ளேயே பொத்தி, பொத்தி அடைகாத்து.. ஒன்றுக்குப் பத்தாக யூகங்கள் பொறித்து…

தீயிலே பிடுங்கிப் போட்ட பிஞ்சுக் காய்களாக அதுகளே வெந்து வெடிச்சிருதுக….

இதைக் காலக் கூத்து என்பதா, சினிமா கூத்து என்பதா? ஹூம்… அடக் கூத்துவனே!….

“என்ன பூங்கோதை, சத்தத்தையே காணோம்?”

“ஒண்ணுமில்லே” என்றவள். பெருமூச்சுடன் வெளி உலகத்துக்கு வந்தாள். இழுத்துக் கொண்டு ஓடுகிற நினைவுகளை இழுத்துப் பிடித்தாள்.

“ராசாத்தி மகளைத்தான் நெனச்சுட்டு வாரீயா?”

“இல்லே. பொம்பளையா ஜென்மம் எடுக்குறதே ஒரு பாவம்தான்”

“ம்ச்சூ”

“இதெல்லாம் எங்க ஒழுங்கா நடக்குது? இந்தா, என்னைத்தான் பாரேன். புல்லு மொளைக்காத பொட்டக்காடா.. எம் பொழப்பு”

சட்டென்று குலுங்கிப் போய் விட்டாள் பூங்கோதை. பக்க வாட்டில் திரும்பி அவள் முகத்தைப் பார்த்தாள். மாடத்தி முகத்தில் கனத்து நின்ற சோகம். கண்களின் ஆழத்தில் ஒரு வேதனை.

பார்க்கத் திராணியில்லாமல் பாதையைப் பார்த்தாள் பூங்கோதை. மனசு கிடந்து அடித்துக் கொண்டது. பேச விஷயமே இல்லாமல் போய்விட்ட மாதிரி ஒரு வெறுமை.

அவர்களைச் சுமையாக அழுத்துகிற ஒரு மௌனம். ஆழ்ந்த துயரமான மௌனம்.

நல்ல வார்த்தை ஏதாச்சும் சொல்ல ஆசைப்பட்டாள். என்ன சொல்லித் தேற்றுவது?

சொல்லி ஆறுகிற சோகமா… மாடத்தி சோகம்?

எல்லாக் குமரிகளையும் போல, மாடத்தியும் நல்லபடியாக வளர்ந்தவள்தான். ஆட்டபாட்டமாய் கும்மாளம் போடுகிற புது வெள்ளமாய்.. கனவுகளோடு பொங்கிச் சிரித்தவள்தான்.

நல்ல இடத்தில்தான் வாழ்க்கைப்பட்டு வெட்கச் சிரிப்போடு போனாள். இன்பத் ததும்பலில் முதல் வருஷத்திலேயே ஆண் பிள்ளை பிறந்தது. செத்தும்போனது.

அப்புறம், அவள் வாழ்க்கையில் ஒரே சூறாவளிமயம்தான். புருஷனுக்கு என்ன கேடு வந்ததோ… அவள் மேல் தீராத சந்தேகம்.

குற்றம் சொன்னால்… இல்லையென்று நிரூபிக்கலாம் கூறுகெட்ட குருட்டுச் சந்தேகத்திற்கு.. ஏது வெளிச்சம்?

சீவி முடித்து பூ வைத்தால்… சந்தேகம்.

“எந்தப் புருஷனுக்காக?” என்று கத்திக்குத்து.

வருத்தத்தில் நொந்துபோய் எண்ணெய் தேயாமல் காய்ந்து கிடந்தால்… அந்நேரமும் ஈட்டிதான் நெஞ்சில் பாயும் “எந்தப் பயலை நினைச்சு?”

அனுதினமும் செத்துச் செத்து வாழ்ந்தாள்.

“அப்பன் சாயலுமில்லாம, ஆத்தா ஜாடையுமில்லாம புள்ளை பொறந்துருக்கு, பாரு எங்க கிடந்து பொறந்துச்சோ… இது”

பிறந்து செத்த பிள்ளை பற்றி ஒரு கிழவி வெள்ளைத்தனமாய் சொன்ன இந்த வார்த்தைதான். அவனுக்குள் விஷமா இறங்கி. ரத்தமெல்லாம் பரவி, மூளையின் நிறமே நீலம் பாய்ந்து…

வாழ்க்கை செத்தது.

அடியும், உதையுமாய் அவள் உடம்பு ரணப்பட கொத்திப் பிடுங்குகிற பாம்புச் சொல்லில் மனசு நரகமாக…

அஞ்சு வருஷ இழுபறிக்குப் பிறகு ஒரேயடியாக துரத்தப்பட்டு…

வாழாவெட்டியாக இங்கு வந்து விழுந்தவள்தான்.

ஆதரவாயிருந்த அம்மா என்கிற ஜீவனும் ஒடுங்கிப் போய்ச்சேர.. ஒற்றைப் பனைமரமாய் இவள்.

காய் காய்க்காத வெற்று மரம்.

இதோ… சூன்யமே ஒரு விடுதலையாகத் தோன்ற… பாதி ஆயுளைக் கரைத்துவிட்டாள்.

கோடைப் பருத்திச் செடி. நெஞ்சுப் உயரத்துக்கு இருந்தது. கால்வைத்து விலகிச் செல்ல முடியவில்லை. அத்தனை அடர்த்தி.

ஆனால், அவ்வளவாக காய்கள் இல்லை. இருக்கிற காய்களும் பூச்சி விழுந்து…. சூத்தையாகி….

அங்கொன்றும் இங்கொன்றுமாய் பருத்திச் சுளைகள், நோயில் வெம்பி வெடித்ததைப் போல…. குத்தலும், கருகலுமாய்….

ஓடி ஓடி பருத்தி எடுத்தாலும் மடி நிறைய மறுக்கிறது. மடியில் கிடக்கிற பருத்தியும் பங்கப்பட்டு மூளியான பெண் வாழ்க்கையைப் போல…. கொத்தையும், கொதுக்கலுமாய்….

வாய்க்காலில் வரிசை வரிசையாக அகத்திகள் அதன் சிம்புகளில் சோற்றுத் தூக்குச் சட்டிகள்.

அவளைச் சுற்றிலும் பேச்சுத் சத்தம். ஊர்ப்புரணிகள், கேலி, கிண்டல், சிரிப்புச் சத்தங்கள், பூங்கோதை நிறைபிடித்து பருத்தி பொறுக்கினாள். கட்டை விரல் காந்துகிறது.

அவளுக்குப் பக்கத்து நிறையில் பருத்தி எடுத்து வருகிறவள் சுந்தரி, ரொம்பப் பிந்திக் கிடந்தாள்.

“ஏன் சுந்தரி…. கொமரிப்புள்ளே. இப்படிப் பிந்திக் கிடக்கே? விறுவிறுன்னு எடுத்து வாயேன்…”

“வந்துக்கிட்டுத்தான் இருக்கேன். மதினி. நீங்கதான் “பொடு, பொடு”ன்னு போறீக?

…இவள் குமரியாகி ஏழெட்டு வருஷமாகிவிட்டது. கூடுதலாகக் கூட இருக்கும். இன்னும் இவளுக்கு மாலை பூக்கவேயில்லை.

இவளுக்குப் பிறகு ஊரில் பூத்த பெண்கள் எல்லாம், மாலை பூத்து, பிரசவம் முடித்து பிள்ளையும் கையுமாக மாறிவிட்டார்கள். இவளைச் சுற்றி கால வெள்ளம் இயல்பாய் கடந்த ஓட. இவள் மட்டும் நாணலாய் நின்று கொண்டே இருக்கிறாள்.

பார்க்க லட்சணம்தான். மூக்கும் முழியுமாய் சிவந்த திரேகமுமாய் கட்டான அமைப்புதான். பார்த்த எவனும் சொக்கிப் போவான். அப்படியும்….

வந்த வரன்கள் எல்லாம் நகை பிடித்தால் பெண் பிடிக்கலே பெண் பிடித்தால் நகை பத்தாது.

ஒவ்வொரு காரணம். வாய்ப்புகள் நழுவி ஓட… இவள் பூத்த பூவாகவே காலமெல்லாம்.

இவளுக்கும் மனசு இருக்கு. ஆசை இருக்கு. சிலிர்ப்பு இருக்கு. உயிர் இருக்கு. ஆனாலும் மரக்கட்டையாக கிடந்து தீரணும்.

இது என்ன கொடுமையோ…

இப்போதெல்லாம் –

ஊர்ப் பெண்கள் முதுகுக்குப் பின்னால் குசுகுசுக்க ஆரம்பித்து விட்டனர். “இவா பூத்த நேரம், தோஷமான நேரம்.”

பாவம், இவள்! உள்ளுக்குள் எம்புட்டுரணப்படுகிறாளோ. சொல்லி அழமுடியாத அவமானத்திலும், அவஸ்தையிலும் தினம் தினம் நொந்து புழுங்கி…

வாழும் உயிரே சுமையாகி, வெதும்பி, வெந்து… வறண்டே போய்விடுவாள்.

இவளைப் பெற்று வளர்த்த வயறு, என்னமாய் கொதிக்கும்? அடப் பாதரவே. இந்தக் கொடுமை எந்தப் பாதகத்திக்கும் வரக்கூடாதடியம்மா….

சயாங்காலம் பூங்கோதை மனசில் பிள்ளைகள், பள்ளியிலிருந்து வந்திருப்பார்கள். அடைத்த கதவில் வந்து முட்டியிருப்பார்கள். அம்மாவை ஆவலோடு தேடியிருப்பார்கள். மடியில் விழுந்து நடந்த விளையாட்டு சண்டைகள் பற்றியெல்லாம் கெஞ்சல் கெஞ்சலாய் சொல்லி மகிழ ஆசைப்பட்டிருப்பார்கள்.

பாவம், அம்மாவைப் பார்க்காமல், அடைத்த கதவைப் பார்த்து ஏங்கிப் போயிருப்பார்கள்.

நினைக்க நினைக்க இவளுக்குள் தவிப்பு. மனசுக்குள் இந்த நினைப்பு பின்னிக்கொள்ள… வேலை, வெறும் பாரமாய்த் தோன்றியது.

மனம் பரபரக்கிறது. வீடு நோக்கி ஆலாய்ப் பறக்கிறது.

ஆயிற்று விரிந்த சமுக்காளத்தில் கொட்டிய பருத்தியை பெரிய பொட்டலமாகத் கட்ட… மாடத்தியும், பூங்கோதையும் நடையைக் கட்டினர்.

இப்போது –

பூங்கோதை நடையை எட்டிப் போட்டாள். பிள்ளைகள் மனசைச் சுண்டியிழுக்க, கால், தரை பாவாமல் துரிதப்பட்டது.

ஊருக்குள் பாய்ந்தாள். தெருவைக் கடந்தாள். வீடு இருக்கும் தெருமுனையைத் தொட்டுவிட்டாள் அதே –

பூட்டிக்கிடக்கிற கூரை வீடு. வாசல் படியில் மூன்று பைக்கட்டுகள்.

மற்ற இரண்டும் விளையாடப் போயிருக்குமோ….

வீட்டு வாசலில் மூத்தவள் மட்டும் சுருண்டு உட்கார்ந்திருக்கிறாள். ஏழாம் கிளாஸ் படிக்கிறாள். வெட்டுப்பட்ட கொடியாக வாடியும் போயிருக்கிறாளே, எதுக்கு?

முகம் வெளுத்துப் போய் அப்படியென்ன வாட்டம்? அழுது கரைந்த மாதிரி, கண்களில் அப்படியென்ன சோர்வு? சுருண்டு கிடக்கிற அளவுக்கு அந்தச் சின்ன உடம்பில் என்ன தளர்வு?

பூங்கோதைக்குள் பகீரென்றது. அடிவயிற்றைக் கலக்கியது. மனசில் நெருடல். ஆழத்தில் ஜில்லிட்டுப் பாய்ந்த பயம், திகில்.

ஒருவேளை… பூத்து உக்காந்துட்டாளா? ஐயய்யோ… அதுக்குள்ளாகவா?…. அடிப்பாதகத்தி!

இன்னும் பத்து எட்டுக்கள்தான். பூங்கோதைக்குள் பயத்தின் நடுக்கம். குப்பென்று உடம்பெல்லாம் வியர்க்கிறது.

மனசில் வியர்வைத் துளிகளாக…. சுத்தரி, மாடத்தி…. ஒரு கணம் வந்து மறைய-

படபடப்பு. கால்கள் பரபரத்து பின்னலாட-

ஓடிப் பாய்ந்தாள். மனசெல்லாம் பதைத்துப் போக….. படபடத்துக் கேட்டாள்.

“என்னாடி… என்னம்மா செய்யுது… என்னடி, சொல்லித் தொலையேண்டி”

“ஒண்ணுமில்லேம்மா…”

“பிறகு ஏன்? இப்படி வாடிப் போயிருக்கே?”

“மத்தியானத்துலேயிருந்து மண்டையடிக்கு”

அம்புட்டுத்தானா?”

அவளுக்கு அப்போதுதான் உயிரே வந்தது. மனசின் முறுக்கெல்லாம் தளர்ந்தது. கால் தரையில் ஊன்றிவிட்ட மாதிரி ஒரு நிம்மதி.

பயத்தில் படபடத்த மனசு சற்று அடங்கியது. வியர்வையில் காற்றுப்பட்ட மாதிரி… மனசுக்குள் ஒரு குளிர்ச்சி.

கதவைத் திறந்தாள். மகளை ஆதரவோடு அணைத்துக் கொண்டே, உள்ளே வந்தாள். நடையில் உட்கார்ந்து சுவரில் சாய்ந்தாள்.

உஸ்ஸ்ஸென்று விட்ட பெருமூச்சில் உடம்பின் – மனசின் – அயற்சி முழுவதும் கரைய –

“குடிக்க கொஞ்சம் தண்ணீ குடு”

தண்ணீர்ச் செம்பை நீட்டிய மகளைப் பார்த்தாள். பூங்கோதை உள்ளுக்குள் முள்முள்ளாய் உறுத்தல். மனுஷத்தனமான உறுத்தல்.

பயந்தது சரிதானா, தெளிந்ததும் சரிதானா?

புள்ளை வளர்றதை நெனச்சு சந்தோஷப்பட வேண்டிய பெத்தவள்…. நா எதுக்குப் பயப்படணும்.

அவளுக்குள் வெட்கமான ஒரு வேதனை உணர்வு

மறுபடியும் மனசுக்குள் மாடத்திகள்….. சுந்தரிகள்…

“பொண்ணா ஜென்மமெடுத்தவளை கிழிச்சு கேவலப்படுத்துகிற ஊரு உலகத்துக்குப் பயந்து என்ன ஆகப்போறது? துன்பம் வந்தா செத்தா போறோம்? மல்லுக்கட்டிப் புரளலியா? அப்படித்தான் இதுவும்.”

அந்தப் பெற்ற மனுஷிக்குள் புதிய தெளிவு. துணிச்சலில் வந்த பாசப்பெருக்கேடு.

“இப்ப வா… கண்ணு” என்று எல்லை மீறிய கனிவில் கூப்பிட்டாள்.

புரியாமையில் நெருங்கிய சிறுமியை பற்றி இழுத்து மடியில் போட்டு இறுகத் தழுவிக் கொண்டாள்.

அவளது பிஞ்சுக் கன்னத்தை வலது கையால் வருடி… நெகிழ்ந்து போன மனசோடு மகளின் நடு நெற்றியில் முத்தமிட்டாள், வாழ்த்துவதைப் போல!

குழைந்து மிருதுவாகிப் போயிருக்கும் அம்மாவின் உணர்வுகளை உள்வாங்க முடியாமல், மிரள மிரள விழித்தாள், அந்தச் சிறுமி.

பூங்கோதையின் கண்களில் ஏனோ ஈரக் கசிவு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *