கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 25, 2021
பார்வையிட்டோர்: 6,840 
 

மத்தியானம் மணி மூணை நெருங்கிக்கொண்டிருந்தது.

நண்பன் வீட்டை இவன் விசாரித்துக் கண்டுபிடித்துப் போய்க் கதவைச் சொட்டும்போது வந்து திறந்தது எதிர்பாராத, அந்தப் பெண்பிள்ளை.

வீடு மாறிவிட்டதோ என்று திகைத்தபோது, “வாங்க” என்று மலர்ச்சியுடன் விரியத் திறந்தாள் கதவை.

அவளுக்குப் பின்புறம் கண்களால் துழாவினான். தையல் மெஷினிலிருந்து அவள் எழுந்து வந்திருக்கவேண்டும்.

“நீங்க வருவீகண்ணு இந்நேரவரைக்கும் காத்துக்கிட்டிருந்தாக; அவசரமா ஒரு இடத்துக்குப் போயிருக்காக. வந்திருவாக இப்பொ ; உக்காருங்க.”

தயங்கி, மேலும் வீட்டினுள் பார்த்தபோது நண்பனும் அவன் மனைவியும் சிரித்துக்கொண்டு நின்றார்கள் போட்டோவில்.

“வந்ததும் உங்களெ சாப்பிடச் சொன்னாக. சாப்பிடுதியளா; எலை போடட்டுமா?”

சட்டையைக் கழத்தியதும் ஹேங்கரை நீட்டியது அந்தக்கை. இவனுக்கு பாத்ரூம் போகணும் போலிருந்தது. அங்கே என்று காட்டிக் கொடுத்தாள்.

குளிர்ந்த நீரை அள்ளி அள்ளி மேலே இறைத்துக்கொண்டான். தண்ணீருக்குள்ளேயே தவளையாகிவிடனும் போலிருந்தது.

பாத்ரூம் கதவைத் திறந்தபோது கையில் டவலுடன் நின்று கொண்டிருந்தாள். வாங்கி விரித்து முகத்தில் ஒத்திக்கொண்டபோது ஒரு நல்ல சலவையின் மணம்.

டவலை முகத்திலிருந்து எடுத்துவிட்டு அவளைப் பார்த்தான். நேசப் புன்னகையுடன் இவனைக் கவனித்துக்கொண்டிருந்தாள். ‘குழந்தை அந்நியனுடன் பழகிவிட்டது; சகஜம் வந்துவிட்டது’ என்று நினைத்தான்.

இவன் அவளைக் கவனித்தான். பதினோரு வயசுக்கான உடம்பு. ஒல்லி. கொஞ்சம் உயரம். சட்டையும் பாவாடை மட்டும்.

மேஜையில் போடப்பட்ட இலையின் முன் உட்கார்ந்துகொண்டு புறங்கைகளையும் துடைத்துக்கொண்டே கேட்டான்.

“உன் பேர்?”

“புவனா” பாதி நாணத்தோடு பாதிச் சிரிப்பு. கொஞ்சம் தலை கவிழ்ப்பு.

“மனோகருக்கு நீ என்ன வேணும். சொந்தமா?”

இல்லை என்ற மெதுவான தலையசைப்பு.

மேலேயிருந்து வந்துகொண்டிருந்த கண்ணாடி வெளிச்சத்தை ஒரு மேகம் கடந்தபோது ஏற்பட்ட வெளிச்சக் குறைவு.

“நீ சாப்ட்டாச்சா?”

முடிந்தது என்று தலையசைப்பு, முகத்தில் பழைய நாணம் சிரிப்பு தலைகவிழ்ப்பு வந்துவிட்டது! இனியும் மேகம் கடக்காமல் பார்த்துக் கொள்ளணும்!

ஜன்னல் வழியாக, பக்கத்துவீட்டுப் பசுவின் மடியில் தண்ணீர் அடித்து கழுவிக்கொண்டிருப்பது இவனுக்குத் தெரிந்தது. காம்புகள் விறைப்பாகிவிட்டன. இப்பொழுது கறக்கத் தொடங்கலாம்.

“நீ பள்ளிக்கூடத்து லீவுக்கு இங்கே வந்திருக்கயா?”

களுக்கென்று சிரிப்புடன் ஒரு தலைகவிழ்ப்பு.

“இப்போ ஏது பள்ளிக்கூடத்துக்கு லீவு!”

அது இவனுக்கும் தெரியும்! ரசம் உண்மையிலேயே நன்றாய் இருந்தது. “ரசம் ரொம்ப நல்லா இருக்கே; நீதான் வச்சயா?”

“ஹுக்கும் சும்மா சொல்றீக”.

இவளேதான்; இவள் வைத்ததுதான்!

“என்ன வகுப்பு படிக்கிறே நீ?”

கால் பெருவிரலால் தரையில் அரைக்கால் வட்டம் போட்டுக் கொண்டு, “நா பள்ளிக்குடம் போகலே; படிப்பை நிறுத்தியாச்சு.”

இது நம்ப கேஸ் என்று நினைத்துக்கொண்டான்.

“எதுவரைக்கும் படிச்சே?”

*ஆறாவது வரை”

கொஞ்சங் கொஞ்சமாய் அவள் தன்னைப்பற்றி சொல்லிக் கொண்டு வந்தாள். சோபாவில் இவன் உட்கார்ந்துகொண்டே கேட்டான். அவள் தையல் மெஷினில் உட்கார்ந்து தைத்துக்கொண்டே சொன்னாள்.

அவள் மனோகரின் மனைவிக்கு ஏதோ ஒருவகையில் தூரத்து உறவாம். தாயும் தகப்பனும் கண்ணை மூடிவிட்டார்கள். இவளோடு மொத்தம் நாலு உடன்பிறப்புகள். இவளே மூத்தாள். குடும்பத்தைக் காப்பாத்தியாக வேண்டும்! குடும்பத் தலைவன் பிடித்த செங்கோலைத் தைரியமாக ஏற்றுக்கொண்டாள்.

இந்த நகரத்தில் நடக்கும் ஒரு தையல் ஸ்கூலில் சேர்ந்து படிப்பை முடித்துக்கொண்டாள். தவணைமுறையில் ஒரு தையல் மெஷின் வாங்கிக்கொடுத்திருக்கிறார்கள் இவர்கள்.

ஊரில் போய், துணிகள் தைத்துக் கொடுத்து அதிலிருந்து வரும் வருமானத்தைக்கொண்டு முறைப்படி மெஷினுக்கும் பணம் கட்டிக் குடும்பத்தையும் காப்பாற்றவேண்டும்.

இவன் மூச்சை உள்ளுக்கு இழுத்து வேகமாக வெளியே விட்டு “யப்பா, குருவி தலையிலெ பனங்காயெ வச்சிட்டயே’ என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டான்.

“உனக்கு என்ன வயசாகுது?”

வலதுகைப் பக்கமுள்ள வீலில் உள்ளங்கை பதிந்து வேகமாக ஓடிய மெஷினை மெதுவாக்கி, “பதினாலு,” என்றாள்.

மனசுக்குள், ‘பதினாலு!’ என்று சொல்லி வியந்தான். இந்த நாட்டின் வளர்ச்சியைப்போல் இவளும் பாதிக்கப்பட்டிருக்கிறாள். ஊட்டம் நிறைந்த உணவும் மனநிறைவும் கொண்டிருந்தால் இப்போது இவள் ஒரு பறவையைப் போலிருப்பாள் என எண்ணினான்.

“தக்கிற நேரமும் வீட்டுவேலையும் போக பாக்கி நேரங்கள்ளெ எப்பிடிப் பொழுதெப் போக்குவெ!”

“கதைப் பொஸ்தகம் படிப்பேன்; கதைண்ணா ரொம்பப் பிடிக்கும் எனக்கு.”

‘அப்படியா; எனக்கும் கதைண்ணா ரொம்பப் பிடிக்கும் எழுத’ என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டான்.

வாசல் கதவு திறந்தது. மனோகர் தம்பதி கையில் குழந்தையுடன் உள்ளே நுழையும்போதே ஆச்சர்ய ஆனந்தத்துடன் இவனை நெருங்கினார்கள். “நீ வராமப் போயிடுவயோண்ணு நெனைச்சேன்; நீ அப்பிடி செய்யக்கூடிய ஆசாமிதானே” என்று இவனுடைய தோளைப் பிடித்து நிமிட்டினான்.

பிறகு தனது குழந்தையிடம் “பாத்தியா, இதாரு பாரு சுண்டல் மாமா வந்திருக்கார்” என்றான் மனோகர்.

முன்பு இவன், தன் நண்பர்கள் இவனிடம் குஷியான சமாச்சாராம் சொன்னால் *அடிரா சுண்டல்!” என்று சொன்னதை இன்னும் ஞாபகமாய் வைத்துக்கொண்டிருக்கிறானே என்று நினைத்தான்.

குழந்தையை இவன் கைகள் நீட்டித் தன்னிடம் அழைத்தான். அது முகத்தைத் திருப்பிக்கொண்டது.

குழந்தைக்கு வயசு எட்டுமாசம் இருக்கலாம். பெரிய்ய கண்கள். அழகாக இருந்தது.

‘அய்யோ, குழந்தைக்கு ஏதாவது விளையாட்டுச் சாமான் வாங்காமல் வந்துவிட்டோமே’, என்று வழக்கம்போல் தன்னைக் குறைபட்டுக்கொண்டான்.

“என்ன பேர் வச்சிருக்கே!”

“அனுசுயா.”

“அப்போ பொல்லாத பெண்ணாத்தான் இருப்பா; சந்தேகம் வேண்டாம்!” என்றான்.

இவர்களுக்கு காபி வந்தது.

பிறகு அனுசுயாவுக்கு பால் வந்தது. அப்பன் மடியில் அவள் சொகுசாகப் படுத்து அட்ணக்கால் போட்டுக்கொண்டு பாட்டில் பாலைக் கொஞ்சங் கொஞ்சமாய் உறிஞ்சிக்கொண்டே இவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் அப்படி இவனைப் பார்த்தது, யாருடா நீ எங்க வீட்டுக்கு வந்திருக்கே என்பது போலிருந்தது!

மனோகர் தன் குழந்தையின் எதிர்காலத் திட்டத்தை இவனிடம் விவரித்தான். “நா இவளுக்கு பரதநாட்டியம் கத்துக்கொடுத்து, ஆசியாவிலேயே இப்படி யாருமில்லை என்று ஒரு நாட்டிய ராணியாக்கப் போறேன்,” என்றான்.

இவன் அவள் முகத்தைப் பார்த்தான். பாவங்களைக் கொண்டு வரக்கூடிய வசதியான முகம்; அதுக்கு முகம்கூட அதிகம். இந்தப் பெரிய கண்களே போதும் என்று நினைத்தான்.

***

நாட்டிய ராணி ஆனபிறகு இவள் தன் மடியில் இப்படி உட்காரச் சம்மதிப்பாளா என்று ஒரு நினைப்பு வந்தது இவனுக்கு! இப்போது இவன் மடியில் கதகதப்பாக இறங்கி தொடை இடுக்கு வழியாக ‘நாட்டியராணி’யின் ஒண்ணுக்கு வழிந்துகொண்டிருந்தது.

“வேட்டியை நனைச்சிட்டா,” என்று இவன் சொன்னபோது அங்கே ஒரு கூட்டுச் சந்தோஷ ஆரவாரம் எழுந்தது. “அனுசுயாவுக்கு உங்கமேலே ரொம்பப் பிரியம்,” என்றாள் புவனா. கிராமங்களில் இப்படி ஒரு நம்பிக்கை என்று நினைத்தான்.

மனோகர் துணி பீரோவைத் திறந்து இவனுக்கு மாற்றிக்கொள்ள ஒரு புது கைலியை எடுத்துத் தந்தான். அதை வாங்கிக்கொண்டு இவன் பக்கத்து அறைக்குள் போனான். பெற்றுக்கொள்ளும்போதே அந்தக் கைலியின் ஸ்பரிசம் மிருதுவாக இருந்தது. காவி நிறத்திலிருந்த அதை இவன் தனது முகத்தருகே கொண்டு சென்றபோது அந்த நிறத்திற்கே உண்டான ஒரு மணம் இருந்தது. நிறத்துக்கு என்றே – ஒவ்வொரு நிறத்துக்கும் – ஒரு மணம் உண்டு என்று இவன் நண்பர்களிடம் குறிப்பிடும்போது சிரிப்பார்கள்.

கைலி அணிந்துகொண்டு வந்தபோது இதமாக இருந்தது. தன்னைச்சுற்றி ஒரு புனிதம் நிறைந்ததுபோல ஒரு எண்ணம்.

அறையில் தான் கலைந்த வேட்டியை புவனா எடுத்துக்கொண்டு அனுசுயாவையும் இவனையும் பார்த்துச் சிரித்துக்கொண்டே குளியலறைக்குப் போனாள்.

மறுநாள் காலை ஆகாரத்துக்கு மேல் மனோகர் தம்பதி ஆபீஸுக்குப் புறப்பட்டுப் போய்விட்டார்கள். மத்தியானத்துக் கெல்லாம் வந்துவிடுவதாகவும் வந்ததும் ஒரு படத்துக்குப் போகலாம் என்றும், பேசாமல் படுத்துத் தூங்கு என்றும் சொல்லிவிட்டுப் போனார்கள். இவனும் ஒரு சின்னத் தூக்கம் போட்டான்.

பகல் பத்து மணி இருக்கும். இவனுக்கு முழிப்புத் தட்டும்போது, தையல் மெஷினின் கடகட சத்தம் இவனை எழுப்பியது.

அந்த இடத்தில் வந்து பார்த்தபோது ஏகப்பட்ட வீட்டுப் பழைய துணிகளைக் குவித்து வைத்துக்கொண்டு புவனா சுறுசுறுப்பாகத் தைத்துக்கொண்டிருந்தாள். இவனைப் பார்த்ததும் வேகமாகச் சுற்றிய வீலில் கைபொத்தி வேகத்தைக் குறைத்தாள் சிரிப்புக் கலந்த நாணத்துடன்.

இவன் அவளுக்கு எதிரே இருந்த பலகையில் உட்கார்ந்து அவள் தைத்துக் கொண்டிருப்பதையே பார்த்துக்கொண்டிருந்தான், யார் முதலில் பேச ஆரம்பிப்பது என்ற போட்டி இருப்பதுபோல் தெரிந்தது அவர்கள் மௌனம்.

அவள் தலையில் வாசனையில்லாத மலிவுவிலைப் பூ இருந்தது. அரக்கு நிறக் குங்குமம் ‘உருட்டி விழிக்காமல்’ சாந்தமாக நெற்றியில் இருந்தது. அவள் நிறத்துக்கு அந்தக் கலர் பொருத்தமாகப் பட்டது.

அவனுடைய மௌனத்தின் தீட்சண்யத்தைப் பொறுக்காமல் அவள் களுக்கென்று சிரித்து அதை உடைத்தாள்.

இப்போது இருவருமே பேசத் தயார்; ஆனால் எப்படி, எதைப்பற்றி ஆரம்பிப்பது!

“நா ஊருக்குப் போகணும்.” அவள்தான் ஆரம்பித்தாள். “அப்புறம் இங்கே வரமுடியாது.”

“ஏன் வரமுடியாது?” என்று இவன் கேட்டான். அதுக்குப் பதில் சொல்லவில்லை; இவனை மட்டும் பார்த்தாள்.

“மெஷினையெல்லாங் கொண்டுபோகணும்; சித்தப்பா கூட வருவாக ஊர் வரைக்கும்.” சித்தப்பா என்றது மனோகரை.

“அனுசுயாவுக்கு நா ஒரு சட்டை தச்சிருக்கேன். தெரிஞ்சா சித்தி கோபிப்பாங்க. இது ஒருத்தருக்கும் தெரியாது. நா ஊருக்குப் போற அண்ணைக்கி என் அன்பளிப்பா அனுசுயாவுக்குக் கொடுத்துட்டுப் போகணும்.”

தையல் மெஷினில் பொருத்தப்பட்டிருந்த சிறிய ‘இழுப்பு வை இழுத்து அவள் தைத்து வைத்திருந்த சட்டையை எடுத்துக் காட்டினாள். ரொம்ப நல்லா இருந்தது.

இவனுக்குத் தன்னுடைய சட்டையில் பாக்கெட் கொஞ்சம் தையல் விட்டிருந்தது ஞாபகம் வரவே எடுத்துக்கொண்டு வந்து கொடுத்து, தைத்தபிறகு போட்டுக்கொண்டான்.

பின்பும் அவர்கள் கொஞ்சநேரம் சந்தோஷமாக பேசிப் பொழுதைக் கழித்தார்கள். அப்போதும் அவள், மத்தியில் ரெண்டு மூணுதரம் “நா ஊருக்குப் போயிருவேன்; நா இனி இங்கே வர முடியாது,” என்று பிரஸ்தாபித்தாள்.

அதில் அவள் என்ன செய்தி வைத்துச் சொல்கிறாள் என்று மண்டையை உடைத்துக்கொண்டும் புரியவில்லை இவனுக்கு!

தொண்டையில் குரல் எழுப்பிப் பேசுகிறது ஒருவிதம். குரலை எழுப்பாமல் மனசைக்கொண்டு மவுனமாக எதிராளியிடம் பேசச் செய்கிறது ஒருவிதம். இரண்டாவது முறையில்தான் என்னால் பேச முடிகிறது என்று இவன் நினைத்தான்.

மறுநாள் காலையில் இவன் ஊருக்குப் புறப்பட்டான். எல்லோரிடமும் சொல்லிக்கொண்டான்; அனுசுயாவிடம்கூட, புவனாவை மட்டும்தான் காணவில்லை.

“அவ எங்கே புவனா?”

“மார்க்கெட்டுக்குப் போயிருக்கா காய்கறி வாங்க; வர கொஞ்ச நேரமாகும்” மனோகரின் மனைவி சொன்னாள்.

இவனோடு பஸ் ஸ்டாண்டுவரை மனோகர் வந்தான்.

டப்பா பஸ்ஸாக இல்லாமல் நல்ல பஸ்ஸாக பார்த்து வைத்துக் கொண்டான். கூட்டம் அதிகமாக இல்லை. பஸ்ஸில் ஏறிக்கொள்ளும் முன் ஒருதரம் சொல்லிக்கொள்ள ஆரம்பித்தான். இடதுகையால் சட்டையின் இடது மார்பைத் தொட்டான்.

“என்ன! வலியா?” மனோகர் கேட்டான்; அவன் முகத்தில் ஒரு சின்னத் திகில்.

“சே, நீ ஒண்ணு. அதெல்லாமில்லை சும்மாதான்” என இவன் சொன்னாலும் ‘இதயத்திலே யாரோ கல்லை விட்டு எறிஞ்சுட்டாங்கடா’ என்று மனசு சொல்லிக்கொண்டது.

இவனையறியாமலேயே இவன் கை தொட்டது, பாக்கெட்டைத் தான் என்று பிறகு நினைத்தான்.

– குமுதம் 25 மார்ச் 1976

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *