பச்சை நிறப் பூனை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 14, 2022
பார்வையிட்டோர்: 4,333 
 

(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

நசீறாவின் முகத்தில் படர்ந்திருந்த ஒளி மங்கத் தொடங்கி இருளடைந்திருந்தது. இருளின் நிறம் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. உள் ஒடுங்கி பின்னப்பட்ட வலையொன்று வீசப்பட்டது போல் பகலையும் இரவையும் பிரித்துக் காட்டும் நிழல் படிமங்கள் மர்மமான முறையில் இறைந்துகிடந்தன.

இப்போதெல்லாம் வீட்டு வாசலை விட்டு வெளியே வருவதில்லை . வாசல்படிகளில் அறிமுகமான முகங்களும் உதடுகள் தெறித்துப் போடும் வார்த்தைகளும் நசுங்கிப் போயின. ரெண்டு மூன்று நாட்களாக நெருங்கிய உறவினர்கள் நிறைய துக்கங்களைச் சுமந்து இங்கு வந்து இறக்கிவைத்து விட்டுப் போய்க் கொண்டிருந்தனர். அக்கம் பக்கத்தினரின் அரவணைப்பு நிரம்பிய விசாரிப்புகளுக்கும் குறைவில்லை. வெறுமைக்குள் தன் அடையாளங்களை இழந்த மனசின் பிரியங்கள் தொலைந்த இடம் குறித்தும், அதனை மீண்டும் மீட்டெடுப்பது குறித்தும் அவ்வப்போது சில எத்தனங்கள் மட்டும் நிகழ்வதாய்த் தோன்றியது.

அக்கா அந்தச் சம்பவங்களைப் பற்றிப் பதற்றத்தோடு பேசிக் கொண்டிருந்தாள். முன்னூறு கிலோமீட்டர் நெரிசலிலும், நெருக்கடிகளிலும் பயணித்துப் புருஷனோடு வந்திருந்தாள். குடும்ப உறவுகளின் இழைகள் அறுபடாதவாறு காப்பாற்றிக் கொண்டு நல்லதுக்கும் கெட்டதுக்கும் பங்கெடுத்துக்கொள்ளும் ஒருசிலரில் அவளின் பெயரும் தவறாமல் இடம்பெறும்.

குழந்தைகளுக்குப் பள்ளிக்கூட விடுமுறை இல்லாததால் மாமியாரிடம் விட்டுவிட்டு வந்திருந்தாள். தூரங்களில் சிதறிக்கிடந்த மகரந்தங்கள், சூடிக் கொள்வதற்குப் பூக்கள் இல்லை.

“என்னதான் அப்படி பிரச்சினை உங்களுக்குள்ளேயோ கல்யாணங்கழிஞ்சு மூணு வருஷமாச்சு. கைக்குழந்தை வேற இருக்கு. பஷீரப்பா கல்யாணம் கழிஞ்சு நாலு மாசத்தில் மஸ்கட்டுக்கு போனவன் திரும்பிவந்து கொஞ்ச நாளுதான் ஆச்சு. அதுக்குள்ள எப்படியாக்கும் இது”…

நடுவீட்டுச் சுவரில் ஏற்பட்ட வெடிப்பு நிறைய நாட்களாகவே அப்படியே இருந்தது. இடித்துச் சுவரைப் புதுசாய்க் கட்டுவதற்கான அவசியம் ஏற்படவில்லை. திரையொன்றை விரித்துப் போட்டால் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு வெடிப்பு எதுவும் தெரியாது என்றாலும், யாரும் எதுவும் செய்யவில்லை.

நீண்டு போன மெளனத்தைக் கலைத்தவாறு பெரியப்பா பேச ஆரம்பித்தார்.

“மாமியாரு வூட்லதான் நசீறா இருந்தா. கல்யாணம் கழிஞ்ச நாளில் எல்லாம் அப்படி ஒண்ணுமில்ல. இப்பதான் ஒவ்வொரு பூதமா கிளம்பியிருக்கு…”

“மாப்பிள இவ படிச்ச ஸ்கூல்ல போயி டிசியும் சர்டிபிகேட்டும் வாங்க போயிருக்காரு. அங்க போன போதுதான் தெரிஞ்சுதாம், நசீறா எட்டாங்கிளாஸ் தோத்துப் போனவன்னு. கல்யாண சமயத்துல சம்பந்தம் பேசுனவங்க இவ பிளஸ்டூ முடிச்சிருக்கிறதா சொல்லி இருந்தாங்களாம்… மாப்பிள அத வச்சிகிட்டு ஏதாவது ஒரு முஸ்லிம் நர்சரி ஸ்கூல்ல வேலை வாங்கிடலாம்னு யோசிச்சிருப்பாரு போல இருக்கு…

காத்தூன் அக்கா இடைமறித்தாள், “மாப்பிள்ளைகூட கல்யாணகார்டுல எம்.ஏன்னு போட்டிருந்தார். ஆனா அவரு பி.ஏ கூட பாசாகலியே.. இத யாருட்ட போயி சொல்ல”

“அதப்பத்தி நாம பேசமுடியுமா… புள்ளய கொடுத்தவங்க”…

வீசிய காற்று அனலாகச் சுட்டது. குளிர்மையையும், சுகத்தையும் அள்ளிவாரி வீசிப்பழகிய காற்று அடிக்கடி தன் குணத்தை மாற்றிக்காட்டியது. காற்றுக்கெனச் சொந்தமான இயல்பு எதுவும் இல்லை போலும்.

“நிச்சயம்பலத்துல அம்பதாயிரம் ரூவா வச்சு கொடுத்திருக்கு. கல்யாண சமயத்தில் பேசினபடி முப்பத்தஞ்சு பவுனுக்கு உருப்படி போட்டிருக்கு. மாப்பிளைக்கு நிக்காஹ் மோதிரம் அரை பவுனுல.. கல்யாணம் முடிஞ்சு பொண்ணும் மாப்பிளையும் வழி கேக்கத்துல முத்திரைப் பவுனு… அப்புறம் அடுக்களை பாக்கறதுக்கு பிரிட்ஜில் இருந்து கரண்டி தட்டுமுட்டு சாமான்வரை எல்லாம் கொடுத்திருக்கு”..

தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை அலறி அழத் தொடங்கியது. நசீறா தொட்டிலை ஆட்டத் தொடங்கினாள். வெள்ளைக் கவுணி தொட்டிலின் அடிப்பாகம் நனைந்திருந்தது. குழந்தை பெய்த மூத்திரத்தின்மீது சாக்கைத் தூக்கிப் போட்டாள்.

“அது ஒண்ணும் இல்ல… எப்படியோ மாப்பிள்ள… கோவத்தில் சொல்லிட்டாரு. இனி என்ன செய்யேதுண்ணு யோசிக்கணும்”

“அதெப்படி கோவத்தில் சொல்வாரு…? ஜமாஅத்துக்கு பெட்டிஷன் கொடுத்து ஆலிம்சாமாரு, நிர்வாகிமாரு மத்தியிலதானே இது நடந்திருக்கு”

மழைத்தூறல் வெளியே விட்டபாடில்லை. பெரு மழை வரும் போலிருந்தது. சாயங்கால இருளும் பரவத் தொடங்கியது.

அப்போதுதான் வந்தார் தாசீன் எலப்பை. மழையில் நனைந்தவாறு தலைப்பாகைகட்டை அவிழ்த்து முகத்தைத் துடைத்தவாறு வீட்டுக்குள் நுழைந்தார்.

பள்ளியில் தொழுகைக்கு பாங்கு சொல்றதுக்கும் எடுபிடி வேலை செய்யறதுக்கும் ஊரில் உள்ள தாசீன் எலப்பைதான். வயசான காலத்தில் மாசம் இருநூறு ரூவா சம்பளமும் பூவுக்கு ஒருகோட்டை நெல்லும். பாத்திஹா ஓதப்போனா கெடைக்கும் ஏதாச்சும் கைமடக்கு. இபாதத்தோடும் தொழுகை வணக்கத்தோடும் வாழமுடியுதேன்னு உள்ள திருப்தியோடு திரியிற தாசீன் எலப்பை அந்த ஊரில் உள்ள நல்லது கெட்டதுகளை எல்லாம் எல்லாருட்டேயும் பகிர்ந்துக்கிடுவாரு.

“கல்யாண ரெஜிஸ்டருல எழுதியிருக்காமே.. அஞ்சுபவுன்ல தாலிசங்கிலி போட்டானாமே மாப்பிள, அத நீங்க திருப்பிக் கொடுத்திடணுமாம். எப்ப கொடுக்கப்போறியோ? ஜமாஅத்துல கேக்க சொன்னானுவோ?”

மெளனமும் சோகமும் எல்லோரின் முகத்திலேயும் அப்பியிருந்தது. நசீறாவுக்குத் தான் சாய்ந்திருந்த சுவர் சரிந்து விழுவது போலிருந்தது.

“அதெப்படி… நாங்க புள்ளக்கு முப்பத்தஞ்சு பவுனு போட்டு நிக்காஹ் செஞ்சு கொடுத்தோம். இப்ப அவ கழுத்தில் காதுல கிடக்க நகைகளை கணக்குப் பாத்தா பனிரெண்டு பவுன்கூட தேறாது. மீதிபவுன மாப்புள வூட்டுல தரச்சொல்லுவியளா”…

தாசீன் எலப்பைக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. சற்றுநேர மௌனத்திற்குப்பின் பேச ஆரம்பித்தார்.

“அதெப்படி நாமகேக்க முடியும்; வாழப்போனபுள்ள, மாப்பிள கேட்டான்னு இவகழத்தி கொடுத்திருக்கா. அதவச்சு அவன் வேற வெளிநாட்டுக்குப் போனான். இப்போ எல்லாத்தையும் முடிச்சிட்டு வந்து நிக்கானா அல்லது லீவுல வந்து நிக்கானான்னு கூட தெரியல. இதுல நாம ஒண்ணும் சொல்ல முடியாதுல்ல”

“எப்படியோ இப்ப உள்ள சூழ்நிலையில பாத்தா அவங்க்கூட அப்படி ஒண்ணும் மோசமான புள்ள இல்லைன்னு தெரியுது”…

மாப்பிள்ளைக்காகப் பரிஞ்சு பேசுவதைக் கேட்டதும் பெரியப்பா ஆவேசப்பட்டார்.

“அந்த பொலியாடி மொவன நீங்க வேறு நல்லவன்னு சொல்லுறீங்களா..?”

“பின்ன இல்லியா – அப்படி இல்லைன்னா இப்பம் மாப்பிள ஊருக்கு புதுசா இன்னொரு பெட்டிஷன் கொடுத்திருப்பானா..”

புதிர் போட்டார் தாசீன் எலப்பை

“என்னவோய் சொல்றீரு? இன்னொரு பெட்டிஷனா? அதுதான் ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டான்னு எல்லாத்தையும் சோலி தீத்தாச்சே.. இப்ப என்ன பெட்டிஷன் மயிரு…’’

“மாப்பிள்ளை கொடுத்த பெட்டிஷன்ல நான் குழப்பத்திலேயும் கோவத்திலேயும் எம்மனைவியை முத்தலாக் சொல்லிட்டேன். இப்படி நான் அவளோட சேர்ந்து வாழ விரும்புறேன். எங்கள் சேர்த்து வைக்கணும்னு சொல்லியிருக்கான்”,

“அதுதான் இன்னக்கு ராத்திரி ஊருல கமிட்டி வச்சிருக்காங்களாம். உலமா சபையில் உள்ள ஆலீம்களையும் கூப்பிட்டிருக்காங்களாம். உலமா சபையில் உள்ள ஆலீம்களையும் கூப்பிட்டிருக்காங்களாம் இத பத்தி பேச”..

எல்லாருக்கும் இந்தத் தகவல் அதிர்ச்சியாகவே இருந்தது.

தாசீன் எலப்பை குரலைக் கனைத்தவாறு ஸ்டூலில் நிமிர்ந்து உட்கார்ந்தார். ஒரு டீ குடித்தால் தேவலாம் போலிருந்தது. யாரும் டீ கொடுக்கவில்லை.

’தலாக் சொல்லி பிரிஞ்ச புருஷன் பொண்டாட்டி திரும்பவும் சேர்ந்து வாழணும்னா லேசுபட்ட காரியம் இல்ல. விலக்கப்பட்ட அந்தப் பொண்ண இன்னொருத்தனுக்கு கட்டிக்கொடுக்கணும். பழையபடி அந்த புதிய மாப்பிள அவள் தலாக் சொல்லணும். அதுக்கு பொறவுதான் பழைய மாப்பிளய அவ கட்டிக்க முடியும். மார்க்கச் சட்டம் இதத்தான் சொல்லுது”…

இறுக்கமும் மனசிற்குள் புரிய முடியாத வருத்தமும் ஒன்றெயொன்று கவ்வியது. பெரியப்பாவிற்கு இப்போது மனசுக்குள் வேறுவிதமான சந்தேகம் படரத் தொடங்கியது. ‘தலாக்’ சொன்னவன் திடீர்ன்னு பொண்டாட்டியோடு சேர்ந்து வாழப் போறேன்னு சொல்றதுக்கு காரணம் என்ன?… இது நடக்காதுன்னு தெரிஞ்சுகிட்டு நல்லவன் போல் நடிக்கிறானா.. இல்ல உண்மையிலேயே அவ உறவு வேணும்னு சொல்றானா –

ஒருவேளை நசீறாவின் அடிமனதில் சமாதியாகிப்போன ரகசியங்களில் இதற்கான பதில் கிடைத்திருக்கக்கூடும் என்றாலும் நிசப்தம். எதுவும் யாருக்கும் புரியவில்லை. நிலவிய மெளனத்தைக் கலைத்தவாறு தாசீன் எலப்பை பேச்சைத் தொடர்ந்தார்.

“தலாக் சொல்லப்பட்ட பொண்ண இன்னொருத்தனுக்கு கட்டிக் கொடுத்தா மட்டும் போதாது. அவனோடு அவ ஒருநாளாவது உடல் உறவு வச்சுக்கிடணும். அப்பதான் அவன் சொல்லுற தலாக்கும் செல்லுபடியாகும்”…!

“ஒய்.. என்ன கிண்டல் பண்ணுறீரா… வாய்க்கு வந்தபடி பேசுறீரே”.. படபடத்தார் பெரியப்பா.

“யாரப்பே இதெல்லாம் என்ன எனவாக்கும்?” காத்தூன் அக்கா பதற்றப் பட்டாள்.

தாசீன் எலப்பையின் முகமோ கடுகடுப்பாக மாறியது. உரக்கச் சத்தம் போட்டார். “இதெல்லாம் நாம் வச்ச சட்டம் ஒண்ணும் இல்ல… அல்லாவோட சட்டமாக்கும்”.

தாசீன் எலப்பை வீட்டைவிட்டு வேகமாக வெளியேறினார். தொட்டிலில் தூங்கிக்கிடந்த குழந்தை கீழிறங்கி கண்ணைக் கசக்கியவாறு எழுந்து நடக்கத் துவங்கியது. திடீரென்று குழந்தை வீறிட்டு அழுதது. எதிரே பச்சைநிறப் பூனை ஒன்று ஓலமிட்டுக் கரைந்தவாறு கண்களை உருட்டி, மீசைமுடிகளைச் சிலிர்த்துப் பயம் காட்டிக் கொண்டிருந்தது.

– சலாம் இஸ்லாம், சமீபத்திய இசுலாமியச் சிறுகதைகள், திரட்டு: களந்தை பீர்முகம்மது, அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 2002

– மின்னூல் வெளியீட்டாளர: http://freetamilebooks.com

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *