கதையாசிரியர்:
தின/வார இதழ்: ராணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 10, 2021
பார்வையிட்டோர்: 7,804 
 

சுருதியை கைபிடித்து இறக்கியவள், ராஜுவை தோளில் சாய்த்து பையுடன் பேருந்திலிருந்து , அப்பா வந்திருக்கிறாரா என்று சுற்றும் முற்றும் பார்த்தாள் சுகந்தி.

அப்பா கணேசன் ஓடி வந்தார். ” வாம்மா… ஒரு மணி நேரம் முன்னாடி வந்து காத்துக்கிட்டிருந்தேன்….மாப்பிள்ளை வரலையா..? கேட்டுக்கொண்டே பேரனையும், பேத்தியையும் தூக்கி கொஞ்சினார்.

“அப்பா .. அவருக்கு திடீர்னு சேலத்துக்கு போகவேண்டியதாயிட்டு..திருப்பி அழைச்சிட்டு போக வர்றேன்னிருக்கார்.அப்புறம் வீட்டுல எல்லாம் எப்படி இருக்காங்க..? ”

“எல்லாரும் சௌக்கியம்தான்… நீ வர்ற செய்தி கேட்டதிலிருந்து பம்பரமா மாறிட்டாங்க உங்கம்மாவும், உங்க அண்ணி நந்தினியும்.”

“ரொம்ப மகிழ்ச்சியா இருக்குப்பா..”

“சரி..வா ஆட்டோ வருது.. என்றவர், ஆட்டோவை நிறுத்தி ஏறினார். சுகந்தியும் , குழந்தைகளும் உற்சாகமாக ஏறினார்கள்.

“தணிகாசலம் தெருவுக்கு போப்பா…” என்றார்.ஆட்டோ வேகம் எடுத்தது. பிறந்து வளர்ந்த மண்ணை மீண்டும் மிதிக்க போகிறோம் என்ற பூரிப்பில் ஆனந்த கூவலில் சுகந்திக்கு மனம் துள்ளியது.நிமிடங்கள் நகர்ந்து .. கரைந்தது கூட தெரியவில்லை. தெரு முனையில் இறங்கினார்கள்.” அம்மா நான்தான் முதல்ல.. ” என்று ஆர்வமாய் ஓடிய சுருதி, எதையோ பார்த்து பயந்தபடி பின்வாங்கினாள்.

“அம்மா அங்கே பாரேன்…பேய்….”

சுருதி சொன்ன இடத்தை நெருங்கிய சுகந்தி திடுக்கிட்டாள். தலைவிரி கோலம். கந்தை துணிகளோடு வெயிலில் சுருண்டு கொண்டிருந்த அந்த உருவத்தை எங்கோ பார்த்த மாதிரி இருந்தது…யோசித்தாள்.” அப்பா அது மனோகரி பாட்டிதானே.. ?”

“ஆமாம்மா…”

“ஏன் இப்படி..? சேகர் மாமா வீட்டில்தானே இருந்தாங்க…?”

“அதை ஏன் கேட்கிற.. தெம்பு இருக்கறவரை சொந்தக்காரங்களுக்கு மனோகரி பாட்டி மாடாட்டம் உழைச்சா.. இப்ப அவ கீழ விழுந்ததும் கவனிக்க யாருமில்லை. … பெத்தவங்களை பார்த்துக்கறதே கஷ்டம்னு நினைக்கிற இந்த காலத்துல… சேகர் யாரு..? மனோகரிக்கு ஒன்று விட்ட அக்கா புள்ள.. அவன் இரக்கப்பட்டாலும் அவன் பொண்டாட்டி இவளை சேர்த்துக்கலை தெருவில் யாராவது சாப்பாடு போட்டால் சாப்பிட்டுட்டு அந்த திண்ணயிலதான் முடங்கிக்கும். என்ன இருந்தாலும் வயசான காலத்துல நம்மை கவனிக்கறதுக்கு சொந்தமா நல்ல உறவுகள் இருக்கணும் சுகந்தி…” என்று பேசிக்கொண்டே வர, வீடு வந்துவிட்டது.

“சுக்ந்தி எப்படி இருக்கே…? சுருதி குட்டி… வாடா… ராஜு… என்றவாறு வரவேற்றனர் அம்மாவும்.. அண்ணியும்.

“நந்தினி … நேரம் ஆயுடுச்சு ஆகுதும்மா…எல்லாருக்கும் சாப்பாடு பண்ணிட்டியா..?”

தயாரா இருக்கு மாமா..வாம்மா சுகந்தி .. குழந்தைகளை கூப்பிடு சாப்பிடலாம்…”

கல கலப்புடன் சாப்பாடு முடிந்தது.

சுருதி , தாய்மாமன் மகன் யுவனுடன் விளையாட போய்விட்டாள். ராஜு தூங்கி விட்டான்.

சுகந்திக்கு அம்மா..அண்ணியுடன் அரட்டை கச்சேரி தொடங்கியது.உறவினர்களை விசாரித்த சுகந்தி, ” அம்மா மாலதி எப்படி இருக்கா..? பிறந்த வீட்டுக்கு வந்து போறாளா…?”

“அவ வந்து ஆறு மாசமாயிடுச்சும்மா…”

“என்னது…?”

“ஆமாம்மா… இப்ப அவ இங்கதான் இருக்கா…”

“விசேஷமா என்ன…”

“ம்…விசேஷம்தான்… கல்யாணமான மறுமாசமே…கணவனின் ஒட்டும் வேணாம்… உறவும் வேணாம்னு… இங்கே வந்துட்டா.. அவ அம்மா நொந்து போயிருக்கா…”

சுகந்திசாது.. மாலதி துணிச்சலும்…தன்னம்பிக்கையும் நிறைந்தவள்..நேர்மாறான குணங்கள் என்றாலும்.. சிறு வயதிலிருந்து இருவரும் தோழிகள். பக்கத்து வீட்டுக்காரர்கள்.

“திருமணம் என்பது அடிமை பந்தம் ” என்பாள் மாலதி. அவளுக்கு வயது ஏற.. ஏற.. அவள் அம்மா புலம்பினாள்.

தீடீரென ஒரு நாள் மாலதி திருமண அழைப்பிதழுடன் வந்தாள்… சுகந்தி ஆச்சரியத்துடன் .. ஆனந்த்தத்துடன் பார்த்தாள்..

வாழ்த்தினாள்.

சொன்னபடி திருமணத்திற்கு போனாள்.

“வாம்மா… சுகந்தி உன் தோழிக்கு நீயாவது புத்தி சொல்லேன்…என்று அழைத்து சென்றாள் அவள் அம்மா. திருமண மகிழ்ச்சியில் இருக்க வேண்டிய மாலதி கசங்கிய சேலையும்..வாடிய ரோஜா சகிதமாய் உட்கார்ந்திருந்தாள். முகத்தில் துளியும் மகிழ்ச்சி இல்லை.

“வந்தவுடனே பஞ்சாயத்து வச்சிட்டியா…?”

“பாரேன் சுகந்தி இந்த கல்யாண்த்திற்கு.. நான் சம்மதிச்சதே பெரிய விஷயம்…இதுல கோணி மாதிரி கனமான பட்டுசேலையை துணிக்கடை பொம்மை மாதிரி சுத்தி கட்டி அடிக்கிற மாதிரி.. நகை…
இப்படியெல்லாம்…..”

“உஷ்… அவசரப்படாதே மாலதி… தினமுமா… இப்படி செய்ய போறே…? இன்னிக்கு ஒரு நாள்தானே… நானே.. அழகா அலங்காரம் செய்துவிடுகிறேன்… ” கெஞ்சலாய் சொன்னாள்.

“இதுதான் கடைசி என் விருப்பத்திற்கு மாறா எது செய்தாலும்…அவ்வளவுதான்…” – எச்சரித்தாள்.

“பார்த்தியா… சுகந்தி இந்த திமிர் பிடிச்சவளை எவன் கட்டிக்குவான்? வெளியில கொடுத்தா சரிவராதுன்னு..எங்கண்ணன்தான் தன் மகனுக்கே கட்டிக்கறதா சொன்னார்.மாப்பிள்ளை சாரதியும் நல்லவன்…பொறுமைசாலி… இனி , இவ… அவனை என்ன பண்ண போறாளோ..? தெரியலை..” பயம் கலந்த பதற்றத்துடன் புலம்பினாள்.

ஒரு வழியாக கல்யாணம் முடிந்தது. சுகந்தி விடைபெற்றாள்.

அதன் பிறகு இப்போதுதான் இங்கு வர முடிந்தது.

பழைய நினைவுகளில் மூழ்கியவளை.. ராஜுவின் அழுகை சத்தம் கலைத்தது. குழந்தையை எடுத்தாள்.

“அம்மா நான் மாலதியை பார்த்துட்டு வர்றேன்”.. என்று பக்கத்து வீட்டிற்கு கிளம்பினாள்.

மகள் வாழாவெட்டியாய் வந்து விட்டதாலோ என்னவோ.. கண்களில் கருவளையம் சூழ்ந்து உருமாறிப்போயிருந்தாள் பார்வதி.

கண்களை இடுக்கி “யாரு சுகந்தியா…? வாம்மா..என்றாள்.

பாசம் குறையாமல் நலம் விசாரித்தாள். சுகந்தி பிறந்த வீட்டையே மறந்துட்டியா…?”

“என்ன மாமி பண்றது பக்கத்துலயா இருக்கு அடிக்கடி வந்து போக ..”

“அடிக்கடி வரமுடியலைன்னாலும்.. பாசம் குறைஞ்சிடும்மா என்ன..?”

“தினம் எல்லாரையும் நினைச்சிகிட்டேதானிருப்பேன்…. மாலதி எங்க மாமி…?”

“மாடியிலதான் இருக்கா…”

“அவ இன்னமும் அப்படியேதான் இருக்காளா…?”

“ஆமாம்மா… நாய் வாலை நிமிர்த்த முடியுமா..? இவ புத்தி தெரிஞ்சிருந்தும் என் அண்ணன் மகன் வாழ்க்கையை கெடுத்துட்டேன் ச…கண்களில் நீர் தளும்பியது.

“என்ன பிரச்சினை மாமி..?”

“இவளேதான் பிரச்சினை கட்டிபுருஷனுக்குதுணிதுவைக்கிறதிலிருந்து, சமைச்சாலும் சாப்பாடு எடுத்து வைக்கிறதில்லே..அதெல்லாம் அடிமைத்தனம் என்கிறாள். அது கூட பரவாயில்லை.. அவனுக்கு
மனைவியாக கூட நடந்துக்கலை..கல்யாணமாகியும் பிரம்மச்சாரி போல இருந்திருக்கான். வெளியே சொன்னா வெட்கக் கேடு சுகந்தி….”

“இவளுக்குதான் வாழ குடுத்து வைக்கலை…என் சொந்த கால்ல நிற்பேன்.. எதுக்கு தேவையில்லாம இந்த அடிமைத்தனம்னு வந்து நிக்கிறா… புத்திமதி சொல்லி பார்த்தாச்சு… திட்டியும் பார்த்தேன்… இந்த வீட்டில் எனக்கு உரிமை இருக்குன்னு சட்டம் பேசுறா…”

“என்ன மாமி பண்றது…?”

“நாளைக்கு இவ தம்பிக்கு கல்யாணமாகி அவன் பொண்டாட்டி வந்தா, இவளை மதிப்பாளா…? இவ கதி என்ன ஆகுமோன்னு நினைச்சு நினைச்சு தளர்ந்து போறேன்மா…”

பெருகி நின்ற கண்ணீரை துடைத்தவள்.. ” சரி அவளை போய் பாரு…நீயாவது பேசிப்பார்… நான் காபி கொண்டு வர்றேன்…”

பார்வதி சொன்னதும், சுகந்தி மாடி படியேறினாள்.மாலதியை பார்த்ததும் பரவசப்பட்டாள்.அவள் ஆங்கில நாவலில் மூழ்கியிருந்தாள்.அதே இளமை மிடுக்கு… முகத்தில் குறும்பு.

சுகந்தியின் கொலுசு சத்தம் அவளின் பார்வையை திருப்பியது.

“வாவ்… சுகந்தியா… வா…வா.. என்னடி ரெண்டு பெத்ததும் பாட்டி மாதிரி ஆயிட்டே…? இடுப்பில் இருந்த ராஜுவை அன்பாய் கிள்ளினாள்.

முதலிலேயே எப்படி கேட்பது என்று வேறு விஷயங்களை பேசிவிட்டு. ..

“மாலதி நீ பண்ணது சரியில்ல.. சாரதி எவ்வளவு நல்லவர்.. உன் வாழ்க்கையும் கெடுத்துகிட்டு… அவர் வாழ்க்கையும் கெடுத்துகிட்டு..நீ கல்யாணம் பண்ணாமலே இருந்திருக்கலாம்…”

“நானா கேட்டேன்…? அம்மாதான் கிணத்தில விழுந்திடுவேன்னு…அது …இதுன்னு சொல்லி.. பயமுறுத்தி.. கல்யாணம் பண்ணி வச்சாங்க..சாரதி நல்லவர்தான்… இல்லேன்னு சொல்லலை… அதுக்காக பின் தூங்கி முன் எழுந்து, துடைப்ப கட்டை.. அடுப்புன்னு என்னால இருக்க முடியாது….”

“அப்ப உன் வாழ்க்கை…?”

“பிக்கல்… பிடுங்கல்… இல்லாத நிம்மதியான … சுதந்திரமான வாழ்க்கை, கை நிறைய சம்பாதிக்க்றேன்… பிறகு என்ன கவலை?..”

“இதெல்லாம் குடும்பத்திலிருந்தா கிடைக்காதா…?”

“ஆமா.. புருஷன்.. மாமனார்… மாமியாருக்கு வேலை செய்யவே நேரம் சரியா இருக்கும். அதெல்லாம் என்னால் முடியாது.

அவள் பேச்சு குழந்தைக்கே பிடிக்கவில்லையோ என்னவோ.. அழ ஆரம்பித்தான்.

“பார்த்தியா… பத்து நிமிஷம் உன்னால மனம் விட்டு பேசமுடியலை..அதற்குள் குழந்தை அழுவுது…”

“குடும்பம்னா இதெல்லாம் சகஜம்…”என்று அவள் சொல்லி கொண்டிருக்கும்போது தெருவில் கூட்டம் கூடி ஏதோ வேடிக்கை பார்ப்பது தெரிந்தது. இருவரும் விசாரித்தனர்.

மனோகரி பாட்டி போய்விட்டாள்.அழக்கூட ஆளில்லை. அவன் உடல் கேட்பார்ற்று கிடந்தது.

“பார்த்தியா மாலதி …இதுவே புருஷன், பிள்ளைகள் என்று பாட்டிக்கு குடும்பம் இருந்திருந்தால் இப்படி ஆனாதையாக கிடப்பாங்களா? யோசிச்சி பாரு நாளைக்கு உனக்கும் இதே கதி வராதுன்னு என்ன
நிச்சயம்…? இப்ப இளமை முறுக்கு பரவாயில்லை.. வயசானா அரவணைக்க சொந்தம் வேணும்.

“போடி பைத்தியக்காரி .. இந்த உலகத்தில பணமிருந்தா போதும் எதையும் சாதிக்கலாம். எந்த கவலையும் வேணாம்..”

‘இவளை திருத்தவே முடியாது… என்ற முடிவுடன் கிளம்பினாள்.

அண்ணியுடன் தாய விளையாட்டு.. அண்ணனுடன் கேரம் …

பிள்ளைகளோடு கண்ணா மூச்சி…

அம்மாவுடன் கோவில்…

அப்பாவுடன் தோட்டம்… வயல்வெளி… என்று நாட்கள் போனதே தெரியவில்லை.

இதோ கோவைக்கு அழைத்து செல்ல கணவர் வந்துவிட்டார்.

புறப்படும் முன் மாலதிக்கு சொல்லி விட்டு போக வந்தாள்.

“உம்.. ஜெயிலுக்கு கிளம்பிட்டியா..? வாழ்த்துக்கள்…” கிண்டல்அடித்தாள்.

சுகந்தி புறப்பட, அம்மா கண் கலங்கினாள். அண்ணன்… அண்ணி பாசத்துடன் கையசைத்தனர். உறவுகள் தந்த மகிழ்ச்சி மனமெங்கும் நிறைந்து இருந்தது. தாய் வீடு சென்றால் பெண்களுக்கு தனி
உற்சாகம் பிறக்கிறதே…! இந்த உற்சாகம் … மகிழ்ச்சி .. பூரிப்பு.. எத்தனை அற்புதமானது… இந்த பிரிவு கூட ஒரு வகையில் சுகமான சுமைதானே.. பெருமிதத்துடன் நினைத்து மகிழ்ந்தவள் தாய் வீட்டின் நினைவுகளை அசை போட்டபடி அடுத்த மகிழ்ச்சியான நிமிடங்களை தேடி கணவன் வீட்டுக்கு பயணப்பட்டாள். இதையெல்லாம் மாலதி உணர்வாளா…? மனம் மாறி கணவன் வீட்டுக்கு செல்வாளா..?

நினைத்தவாறு சென்றாள்.

அவள் மறு முறை வந்த போது.. மாலதி…தாய் வீட்டில் இல்லை…கணவன் வீட்டிற்கு சென்றுவிட்டாள் என்று செய்தி கிடைத்தது. அதன் பிறகுதான் சுகந்திக்குள் நிறைந்தது நிம்மதி…!

– 26-01-2003

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *