கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 21, 2021
பார்வையிட்டோர்: 2,719 
 

“என்ன மகா.உங்க இரண்டு பேரையும் நாலு நாளா காணம். இவ்வளவு நாள் வராம இருந்து நான் பார்த்ததேயில்லையே… என்னாச்சு.??”

“கோவிந்தனுக்கு விட்டு விட்டு காச்சல் அடிச்சுகிட்டே இருந்திச்சின்னு சொன்னேனில்லம்மா..டைபாயிட் காச்சலாம்.. டாக்டர் ஊசி போட்டு மாத்தர குடுத்தாரு..பத்தியமா சாப்பிடணமாமில்ல..கண்ணு மறஞ்சா கண்டதயும் திம்பானே.. அதான் நின்னுட்டோம்..இந்த மாசம் யார் கண்ணில முழிச்சேனோ.முழி பிதுங்குது..துணிங்கல்லாம் நின்னு போச்சு!”

“பையனுக்கு பரவாயில்லையா.?? இன்னும் ஒரு மாசம் ஜாக்கிரதையா பாத்துக்கணுமே.எங்க விட்டுட்டு வந்த?”

“இவரோட தங்கச்சி வீட்ல..நல்லா பாத்துக்கும்…!”

மகேஸ்வரி எங்கள் வீட்டு ஸ்டோர் ரூமைத் திறந்து அவளுடைய இஸ்த்திரிப் பெட்டியை எடுத்துக் கொண்டு போனாள்.

அதற்குள் அவள் புருசன் பாபு. இஸ்த்திரி வண்டிக்கு அடியில் வைத்திருந்த கரியை எடுத்து சூடு பண்ணிக் கொண்டிருந்தான்..

நாங்கள் துபாயிலிருந்து சென்னைக்கு நிரந்தரமாய் குடியேற தீர்மானித்த பொழுது பெசென்ட்நகரில் நல்ல வீடாக அமைந்தது..

வீட்டு வாசலில் ஏற்கனவே தள்ளு இஸ்த்திரி வண்டி போட்டிருந்தார்கள் பாபுவும்..மகேஸ்வரியும்.!

நடு வயது தம்பதியர். இருவருமே மெலிந்த தேகம். உடல் முழுதும் சுறுசுறுப்பு..

“அம்மா. நாங்க பத்து வருஷமா இங்கதான் வண்டி போட்டிருக்கோம்.முன்னாடி இருந்தவங்க சொன்னாங்க..

‘பாபு..இந்த வீட்ட வித்துட்டு பம்பாய் போறோம்..புதுசா வரவங்க எப்படி இருப்பாங்கன்னு தெரியாது.. எதுக்கும் அவுங்க வந்ததும் பெர்மிஷன் வாங்கிடு..நீ இருந்தது எங்களுக்கு பெரிய துணையா இருந்திச்சு…நல்லபடி தொழில் பண்ணி முன்னுக்கு வாங்க’ன்னு சொல்லிட்டுத்தான் போனாங்க.

இங்க வண்டிக்கு லைசன்ஸ் கிடைக்கிறதே பெரிய காரியம்..

இந்த தெருவில் முதல்ல வண்டி போட்டவன் நான்தான்..இப்போ மூணு வண்டி நிக்கிது. அவ்வளவு போட்டியிருக்கிற தொழில் ..நீங்க சரின்னு சொன்னா!’

“என்னப்பா சொல்ற.உன்ன எதுக்கு நாங்க விரட்டணும்.. வீட்டு வாசல்ல இஸ்த்திரி வண்டி இருந்தா என்ன கசக்குமா.. நீங்க இருக்கிறது ஒரு காவலாச்சே.கவலையேபடாத!”

“ஏங்க.. உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்..!?”

“சொல்லேன்..!!”

“முதல்ல அந்த பேப்பர மடிச்சு வையுங்க.!”

“நான் கேட்டுகிட்டே தான் இருக்கேன்..சொல்லு..!”

“சரி.. நான் அப்பறமா சொல்றேன்..!!”

“ஐய்யய்ய..உன்னோட பெரிய வம்பா போச்சு.சொல்லு.!!”

“நம்ப வீட்டு வாசல்ல ஒரு இஸ்த்திரி வண்டி நிக்குதில்ல.??”

“நிக்குதா…???”

“ஆமா ..யானையே நின்னாலும் உங்க கண்ணுக்கு தெரியாதே.!”

“சொல்ல வந்த சமாசாரத்த சொல்லும்மா.!”

“ஏன்..அவசர மீட்டிங் ஏதாச்சும் இருக்குதா.. அதெல்லாம் தல முழுகிட்டுத்தானே இங்க வந்து செட்டிலானோம்..!!”

“சரி.. இஸ்த்திரி வண்டி.மேல சொல்லு..!”

“பாபுன்னு.. ரொம்ப வருஷமா நம்ப வீட்டு வாசல்லதான் இஸ்த்திரி வண்டி போட்டிருக்காரு.. மகேஸ்வரி பொண்டாட்டி.

இங்கேயே இருக்கலாமான்னு பெர்மிஷன் கேட்டாங்க.. நான் சரின்னுட்டேன்.!”

“இப்ப நான் முடியாதுங்கறேன்..!”

“என்னங்க..???”

“பின்ன என்ன..இதில எனக்கு என்ன வேலை சொல்லு..எல்லாமே உன் தீர்மானம் தானே.!”

“இப்போ சரிங்கிறீங்களா..

வேண்டாங்கறீங்களா.?..”

“வசு.நீ சொன்னது இனஃபர்மேஷன். பெர்மிஷன் இல்ல..உனக்கு நல்லாவே தெரியும்.நான் வீட்டு விஷயத்தில தலையிட மாட்டேன்னு..!”

“நீங்களும் அந்த பாபுவப் பாத்து ஒரு தரம் சரின்னு சொல்லிடுங்க.!! நமக்கும் ஒரு காவலாச்சு..!!”

“பாபு.. என்னப்பா..அம்மா சொன்னாங்க.”

“வணக்கம் சார்..”

“எவ்வளவு நாளா இந்த தொழில் செய்யுற .???”

ஏதோ டி.வி. பேட்டி மாதிரி ஆரம்பித்தார்..

“எங்கப்பாரு எல்லாம் வண்ணார் தொழில் பண்ணிக்கிடிருந்தவங்கதான் ஸார்..இப்ப ஏது தண்ணி.

அப்பா வீட்டிலேயே துணி தேச்சு குடுப்பாரு. நானும் கூட மாட எல்ப்பு பண்ணுவேன்.. அப்புறம்தான் பெரிய இடத்து சிபாரிசு பிடிச்சு .. லைசென்ஸ் வாங்கி .இங்க வண்டி போட்டேன்.”

“என்னப்பா ??டாட்டா.பிர்லா.ரேஞ்சுக்கு.???லைசென்ஸ் எல்லாம் ..???”

“சார்..இந்த மாதிரி மெயின் ஏரியால வண்டி போட கையிலேர்ந்து எத்தன லட்சம் ஆகும் தெரியுங்களா.?? எல்லாமே லோன்தாங்க..!!”

“அதெல்லாம் தான் துணி தேய்க்கும் போது மேல வச்சு ஏத்திடுவியே. இப்போ எத்தன வருஷமாச்சு..??”

“பதினெட்டு வயசில பெட்டிய தேய்க்க ஆரம்பிச்சேன்.இப்போ நாப்பது வயசாகிப்போச்சு.!”

“பெட்டியோட முதுகும் சேந்து தேஞ்சிட்டது போலயே..உடம்ப கவனிச்சுக்கோப்பா. என்ன உதவி வேணும்னாலும் கேளு..”

“தேங்ஸ் சார்.. நாங்களும் பயந்துகிட்டு இருந்தோம்.. இப்பத்தான் நிம்மதியா இருக்கு..!!”

பாபுவையும் மகாவையும் பார்த்து எனக்கு லேசாக பொறாமை வர ஆரம்பித்தது..

பாவம். இவர்களைப் பார்த்து பொறாமைப்பட என்ன இருக்கிறது என்று நினைப்பீர்கள்…!

காலையில் டாணேன்று எட்டு மணிக்கு ஆஜர்..

மகா கையில் ஒரு பெரிய தூக்குச்சட்டி..!!

காலை நாஷ்ட்டாவிலிருந்து , மதியம் சாப்பாடு வரை . அதில்தான்..

பாபு கையில் கரிப்பை..இஸ்த்திரி பெட்டிக்கு சாப்பாடு..

நேராக எங்கள் வீட்டு ஸ்டோர் ரூமைத் திறந்து இஸ்த்திரிப் பெட்டியை எடுத்துக் கொள்வாள்..

பாபுவின் வண்டியில் ஒரு குடித்தனத்துக்கு தேவையான அத்தனை சாமான்களும் இருக்கும்..

தட்டு..டபரா..தம்ளர்.கரண்டி..உப்பு.
சர்க்கரை.!

வண்டியில் அழகாக துணியை விரித்து, இஸ்த்திரி பெட்டிக்கு கரியைப் போடுவதற்குள், மகா அவளுடைய மண்பானையை நன்றாகக் கழுவி எங்கள் வீட்டிலிருந்து ஒரு குடம் நல்ல தண்ணி எடுத்துக் கொண்டு போவாள்..

அவர்களுடைய பிஸினஸ் டைம் ஆரம்பித்து விட்டது..

இனிமேல் அவர்களிடம் பேச்சு வார்த்தையே இருக்காது..!

மகா வீடு வீடாய் போய்..துணிமூட்டையுடன் திரும்பி வருவாள்..

ஒரு நாளைக்கு இத்தனை வீடு என்று ஏதோ கணக்கு இருக்கும் போலிருக்கிறது.

பாபு பக்கத்தில் கீழே உட்கார்ந்து கொள்வாள்..

முடிந்து வைத்த வெற்றிலை உள்ளே போனால்தான் வேலை ஓடும்..

பாபுவக்கு அரை மணிக்கு ஒரு தடவை ஒரு இழுப்பு இழுக்க வேண்டும்..பீடியோ..சிகரெட்டோ..!

சுருக்கம் நீக்கி பிடித்துக் கொள்வது.. ஒவ்வொரு துணியாக எடுத்துக் கொடுப்பது..இஸ்த்திரி போட்ட துணியை அடுக்கி வைப்பது.ஏதோ வேலை செய்து கொண்டே இருப்பாள்.

பத்துமணிக்கும்..மூணு மணிக்கும் டீக்காரனிடம் இரண்டு டீ..

மதியம் ஒன்றிலிருந்து இரண்டு வரை சாப்பாடு.. கொஞ்சம் ஓய்வு..

திறந்த வெளியில் நடக்கும் பிஸினஸ்..ஒளிவு மறைவு இல்லாத தொழில்.உழைப்பு ஒன்றே மூலதனம்..

வெறும் கணவன் மனைவி உறவு மட்டுமில்லை..

இருவரும் பிஸினஸ் பார்ட்னர்கள் போல அத்தனை ஒரு ஈடுபாட்டுடன்..!!

எப்படி முடிகிறது.???

அவர்களைப் பார்த்து பொறாமையாக இருக்கிறது என்று சொன்னேனில்லையா..!

இதற்காகத்தான்..!

என்னையும், என் கணவரையும் அந்த இடத்தில் நிறுத்திப் பார்த்தேன்..

ம்ஹூம்.. ஒரு நாள் கூடத் தாக்கு பிடிக்காது..!

மதியம் மூன்று மணிக்கு மேல் ஒவ்வோரு வீடாகப்போய் துணியைத் திருப்பி கொடுத்துவிட்டு வந்தாளானால் அன்றைய கதை முடிந்தது..

மகாவிடம் பேச்சுக் கொடுத்து, பேச்சுக் கொடுத்து சேகரித்த தகவல்கள்.

பாபு மகாவின் சொந்த அத்தை பையன்.கட்டினால் மகாவைத்தான் கட்டுவேன் என்று ஒற்றைக் காலில் நின்றவன்.

மகா பத்தாவது வரைபடித்தவள்.. குடும்பத்தில் மூத்த பெண்..

பாபு சிகரெட் பிடிப்பதைத்
தவிர வேறு எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன்..மகாவிடம் கொள்ளைப் பிரியம்..

தினமும் வரும் கலெக்க்ஷனை அப்படியே மகா கையில் குடுத்து விடுவான்..கையெழுத்துக்கூட போடத்தெரியாத கைநாட்டு.

மகாதான் CEO .M.D. எல்லாம்..பாபு working partner தான்..!

ஒரு விஷயத்தில் தான் எனக்கு சிறு உறுத்தல்.. கோபம் என்று கூட சொல்லலாம்…

ஆறு குழந்தைகள். நாங்கள் வரும்போதே கையில் இரண்டு.. இடுப்பில் ஒன்று.. வயிற்றில் ஒன்று..!

ஆண் குழந்தை வேண்டுமென்றா.?

அதுவும் இல்லை..!!

முதல் இரண்டு பையன். மாணிக்கம்.. சண்முகம்.அடுத்து லட்சுமி.. அப்புறம் நிர்மல் குமார்.. கோவிந்தன். கடைக்குட்டி பிரியா.

இப்போது மாணிக்கத்துக்கு பதினாறு வயது.. பள்ளியில் கடைசி வருஷம்..

“அம்மா..எம்பிள்ளைங்க எல்லாருமே நல்லா படிக்குதுங்க.

மாணிக்கமும், லட்சுமியும் ஸ்கூல்ல வச்சு எப்பவுமே ஃபஸ்ட்டுதான்.

இந்த தொழில் எங்களோட போவட்டும்.. அதுக்குத்தான் இரண்டு பேரும் உசிர விட்டு உழைக்கிறோம்..

பசங்கள பொட்டியத் தூக்க விடக்கூடாதுன்னு ஒரே முடிவா இருக்கோம்..

கோவிந்து ஒத்தந்தான் விளையாட்டுப் பிள்ளையாவே இருக்கான்…சின்னது கூட பொழச்சிக்கிடும்.கோவிந்துவ நெனச்சாத்தான் ரொம்ப கவலையா இருக்கு.”

“ஏன் மகா.. இவ்வளவு குழந்தைங்கள பெத்துகிட்டியே.. உன் உடம்பு என்னாறது.??

இங்கேயும் இடுப்பொடிய வேல.இதுங்கள எல்லாம் வளத்து ஆளாக்கணும்.

அளவோட பெத்து வளமோடு வாழுங்கன்னு
தெருவெல்லாம் முழங்கறாங்களே..உங்க காதுல விழல..??”

“ஏம்மா..நாங்க சொத்து சொகத்துக்கு ஆசப்படல.!
ஆசப்பட்டாலும் நடக்கிற காரியமா.??

என்னவோ தெரியலம்மா..
வீட்டுக்குள்ளாற நுழஞ்சதுமே இதுங்க அம்மா..அப்பான்னு ஓடி வந்து கட்டிக்கிடும்போது கோடி ரூபா கெடச்சமாதிரி ஒரு சந்தோஷம்.. இதுக்கு மேல என்ன சொத்து.??? என்ன சொகம்.??

காலை எட்டு மணி இருக்கும்.

“அம்மா..அம்மா..”என்ற குரல் கேட்டு வாசலுக்கு வந்தேன்.

மாணிக்கம் நின்றிருந்தான்..

“என்ன மாணிக்கம்.நீ வந்திருக்க..அம்மா எங்க.. ???அப்பா வரல ???”

பின்னால் லட்சுமி..
வெட்கப்பட்டுக்கொண்டு நின்றிருந்தாள்..

“லட்சுமி..இங்க வா..அட.. இவ்வளவு பெரிய பொண்ணா நீ.எங்க. நீங்க இரண்டு பேரும்.??”

“அப்பாவுக்கு மேலுக்கு சுகமில்ல..ராப்பூரா நெஞ்சு வலின்னு துடிச்சிகிட்டு இருந்தாரு..

காலைல ஆஸ்பத்திரிக்கு போகணும்னு அம்மா கண்டிஷனா சொல்லிடுச்சு..”

“நீயா தேக்கப்போற..உனக்கு தெரியுமா.?? படிக்கிற பிள்ளையாச்சே.!”

“ஓரளவுக்கு செய்வேம்மா. வீட்ல தேச்சு பழக்கம்தான்..இப்போ பரீட்சை முடிஞ்சு.லீவுதாங்கம்மா.. ஒண்ணும் பிரச்சனையில்ல..!”

“லட்சுமி துணி வாங்கிட்டு வரப்போறாளாக்கும்.தூக்க முடியுமா..????”

பதில் சொல்லாமல் சிரித்தாள்.

“இதோ.. ஸ்டோர் ரூமில இருக்கு பாரு பொட்டி.”

“லட்சுமி.சாப்பாடெல்லாம் நான் குடுத்தனுப்பறேன். நீங்க ஒண்ணும் சிரமப்பட வேண்டாம்.”

“வேண்டாங்கம்மா..அம்மா எல்லாமே செஞ்சு குடுத்திரிச்சு.

சாப்பிடும்போது கொஞ்சம் ஊறுகா மட்டும் கொடுத்தீங்கன்னா போதும் “

மாணிக்கம் தான் பேசினான்..லட்சுமி சிரித்துக்கொண்டே நழுவி விட்டாள்.

மனதில் ஏதோ அழுத்தியது.

படிக்கிறபையன்..!

பெட்டியைக் கையால் கூட தொட விடமாட்டேன் என்ற வைராக்கியத்திலிருந்த மகா.!

ம்ம்ம். நம் கையில் என்ன இருக்கிறது..???

பாவம்.. குருவி தலையில் பனங்காய் மாதிரி..லட்சுமி தூக்க முடியாமல் மூட்டையைத் தூக்கிக் கொண்டு வருவதைப் பார்க்கும் போது என்னுடைய இரண்டாவது பெண் அதிதி முகம் வந்து போனது..

ஸ்கூல் பேகில் இரண்டு புத்தகம் அதிகமானாலே முனகுவாள்.!!

“அம்மா.. இன்னிக்கு உங்க வீட்டு துணிய எடுத்துக்க சொன்னாங்க..மத்த வீடுங்கள நானு வந்து பாத்துக்கறேன்னு சொல்லிச்சு.!”

“நீ போ.. லட்சுமி. நான் துளசி கிட்ட குடுத்து விடறேன்.!!”

மூன்று மணிக்கெல்லாம் முடித்து விட்டு கிளம்பிவிட்டார்கள்.

எனக்கு மனசே சரியில்லை..

“நம்ப பாபுவுக்கு ஒடம்பு சரியில்லையாங்க..நெஞ்சு வலியாம். இன்னிக்கு மாணிக்கமும் , லட்சுமியும் தான் வந்தாங்க. பாவம்.. படிக்கிற பசங்க.”

“சதா சூட்டிலேயே நிக்கிறான்..பத்தாததுக்கு பெட்டியை தேக்கிறன்னா சும்மாவா.????

பசங்க அப்பா‌…அம்மாவுக்கு உதவியா இருக்கிறதில என்ன தப்பு. நாமதான் குழந்தைகள ஒரு வேலையும் செய்ய விடாம செல்லம் குடுத்து கெடுக்கறோம்..

அவுங்களுக்கு அதெல்லாம் கட்டுப்படியாகுமா…????”

அன்றைக்கு முழுவதும் தூக்கமில்லாமல் புரண்டு புரண்டு படுத்தேன்..

மூன்று நாளாய் மாணிக்கம் தான் வந்தான்.பாபுவுக்கு இருதயத்தில் ஏதோ கோளாறு இருப்பதாயும் இன்னும் டெஸ்ட் எடுக்க வேண்டுமென்றும் சொன்னான்..

“மாணிக்கம் , பரீட்சை நல்லா எழுதியிருக்கியா.??”

“நல்ல மார்க்கு வரும்மா.!”

“மேல என்ன படிக்கப் போற..??”

“பாலிடெக்னிக்குக்கு அப்ளிகேஷன் வாங்கி வச்சிருக்கேன். B.COM க்கும் அப்ளை பண்ணப்போறேன்.”

“வெரி குட். சார் என்ன உதவிவேணும்னாலும் செய்யறேன்னு சொல்லச் சொன்னாரு..””

“தேங்ஸ் மா.!!”

ஒரு வாரம் கழித்து இன்றைக்குத்தான் பாபுவைப் பார்க்க முடிந்தது..!

“மகா. ரொம்ப பயந்து போயிட்டேன்.இப்ப எப்படி இருக்காரு.??”

“செத்துப் பொழச்சாரும்மா..!
இப்பொத்தைக்கு உசிருக்கு ஆபத்தில்லைன்னு சொல்லியிருக்காரு..

இதயம் ரொம்ப பலவீனமாயி போயிரிச்சாம்..கனமான பொருள தூக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாரு..”

“பின்ன எதுக்கு அவசரமா வந்தீங்க..பெட்டி தேய்க்க முடியுமா.??”

“மாத்தி மாத்தி செய்யலாம்னு இருக்கோம்.இத விட்டா வேறு பொழப்பு தெரியாதேம்மா..!! கடன் வேற கழுத்த நெரிக்குது.. பாவம் லட்சுமி தான் வீட்டப் பாத்துக்குது.”

பாபு கருத்துப்போய் .. இன்னும் மெலிந்திருந்தான். அடிக்கடி இருமல் வேறு..

பத்து மணிக்கு ஒரு ஃப்ளாஸ்கில் ஹார்லிக்ஸூம் கொஞ்சம் பழங்களும் கொடுத்து விட ஆரம்பித்தேன்..

இவர் பாபு கையில் பத்தாயிரம் கொடுத்து ஆஸ்பத்திரி செலவுக்கு வைத்துக் கொள்ளச் சொன்னார்..

காலையில் பாபு.. மதியம் மகா..
‘ டிவிஷன் ஆஃப் லேபர்…!!

என் கண் பட்டிருக்குமோ..???

‘காத லொருவனைக் கைப்பிடித்தே,அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து,
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச்செய்து வாழ்வமடி.!’

இவள்தான் பாரதி கண்ட புதுமைப்பெண்ணா..???

பெண்விடுதலை என்று முழங்கும் மாந்தர்கள் மகாவைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டுமென்று தோன்றியது..!

டில்லியிலிருக்கும் மூத்த பெண் அஞ்சு எங்களை ஆறு மாதத்திற்கு வரச் சொல்லி உத்தரவு..

மாப்பிள்ளைக்கு ஆறுமாத ப்ராஜெக்ட்…ஜெர்மனியில்.

அஞ்சுவுக்கு மூன்றாவது மாதம்.. பெரிய பேத்தி மானசாவை தனியாய் சமாளிக்க முடியாது என்று கண்டிப்பாய் சொல்லிவிட்டாள்.!

அதிதி மாமனார், மாமியாரிடம்…

பாபு..மகாவைக் காவல் வைத்து விட்டு கிளம்ப மனசில்லாமல் கிளம்பி விட்டோம்..!

ஆறுமாதம் நீண்டு..நீண்டு.. இரண்டு வருஷமாகி விட்டது.. குழந்தை ப்ரீமெச்சூர் .. விட்டுவிட்டு வர முடியாத நிலை…

எதைப்பற்றியும் நினைக்க முடியாத அளவுக்கு வேலை..வேலை..வேலை..

இரண்டு வருடங்கள் கழித்து ஒரு வழியாய் எல்லாம் நல்லபடியாய் முடித்துக் கொடுத்து விட்டு வீடு திரும்பினோம்..

மதியம் மூன்று மணி இருக்கும்.

மாணிக்கம் தான் கேட்டைத் திறந்தான்..!

இவன் காலேஜில் இருக்க வேண்டியவனாச்சே..இங்க என்ன பண்ணிட்டிருக்கான்..????

“என்னங்க.. மாணிக்கம் எதுக்கு இங்க..??”

“வசு.. எல்லாம் அப்பறமா பேசிக்கலாமே ..! வந்ததும் வராததுமா.!”

எனக்கு இருப்பு கொள்ளுமா.???

கேட்டைத்திறந்து கொண்டு வெளியே வந்தேன் ‌.

மாணிக்கம் துணியைத் தேய்த்துக் கொண்டிருந்தான்..கீழே தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தாள் மகா…

“மகா..மகா.!”

“அம்மா.அம்மா..!!”

அதற்குமேல் பேசமுடியவில்லை..

நான் போகும்போது இருந்த மகாவா இது..!

நெற்றி நிறைய குங்குமப் பொட்டும்…கொண்டைக்கு சின்னதாய் மல்லிகைச் சரமும்.. வாய் சிவக்க வெற்றிலையுமாய் ..!

என் கண்முன்னால் நிற்பது அதே மகாவா.??

வாரியும் வாராத தலைமுடி.. கண்ணெல்லாம் பள்ளத்தில் இறங்கி.கசங்கிய புடவையுடன் , பாழ் நெற்றியுடன்..!

எல்லாமே புரிந்து விட்டது..!

மகாவை அப்படியே கட்டிக் கொண்டேன்.

“நீங்க போயி ஆறுமாசம்தாம்மா இருக்கும்.. ஒரு நாளு ரத்த ரத்தமா வாந்தி எடுத்தாரு..ஆஸ்பத்திரிக்கு போறதுக்குள்ளாறயே எல்லாமே முடிஞ்சிருச்சு.

மாணிக்கம் படிப்ப முடிக்க முடியலம்மா.

தம்பி ..தங்கச்சி நல்லா படிக்கட்டுமுன்னு ஒரே பிடிவாசி.!

என் வயிற்றில் அக்னி கொழுந்து விட்டு எரிந்தது.!

மாணிக்கம் பாபுவைப் போலவே தலை நிமிராமல் கருமமே கண்ணாயிருந்தான்.

மூன்று மாசம் போயிருக்கும்..!

மகாவும் லட்சுமியும் ஒரு தட்டைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள்..

வெற்றிலை..பாக்கு.. மஞ்சள். குங்குமம்.. ஒரு கல்யாணப் பத்திரிகை.

“அய்யாவையும் கூப்பிடுங்க.”

“என்ன விசேஷம் மகா.??”

“மாணிக்கத்துக்கு கண்ணாலம் வச்சிருகேம்மா..!”

“என்னது.? மாணிக்கத்துக்கா..?

இருபது வயசு கூட முடியலையே மகா.அதுக்குள்ள.??”

“இருத்தியொண்ணு ஆச்சும்மா.என்னால முடியலம்மா. லட்சுமி நல்லா படிக்கிறா..அவள வேலை வாங்க சங்கட்டமா இருக்கு..

சொந்த அத்த பொண்ணுதான்..மாணிக்கத்துக்கு பொருத்தமா இருப்பா. அவர் இருக்கும் போதே பேசி முடிச்சதுதான்..”

“இந்தா.. செலவுக்கு வச்சுக்கோ.”

ஒரு பெரிய கவரை மகா கொண்டு வந்த தட்டில் வைத்தார்..!

“அய்யா.. அம்மா.. கல்யாணத்துக்கு கட்டாயமா வந்திடுங்க. நீங்கதான் முன்ன நின்று கண்ணாலத்த நடத்திக் கொடுக்கணும்…”

“என்னங்க.இப்படியா அவசரப்பட்டு கல்யாணம் பண்ணுவாங்க.படிக்க வேண்டிய பையன்.!!”

“மகா..ஒன்னோட இடத்தில வச்சு அவுங்களப் பாக்காத. எனக்கென்னமோ அவங்க செய்யுறது சரியாத்தான் தெரியுது.!!”

அன்றைக்கு ராத்திரி மாணிக்கம் கனவில் வந்தான்..கூடவே புதுப் பெண்டாட்டி.

அடுத்த ஜெனரேஷன் பிஸினஸ் தொடர்கிறது..

அவள்தான் CEO.. அவன் ‘ working partner..!!

பாரதியின் பாடலொன்று நினைவுக்கு வந்தது..

‘அக்னி குஞ்சொன்று கண்டேன்.. அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
தழல் வீரதிற்குஞ்சென்று மூப்பென்றுமுண்டோ.!

வீரத்துக்கு வயதில்லை..!
பொறுப்புக்களுக்கும் வயதில்லை.

தீ அணைந்தாலும்..கனிந்த நெருப்பு..கனல்..தணல்.. சூடு.அத்தனை சீக்கிரம் ஆறிவிடுமா.?????

அவர்களின் இஸ்த்திரிப்பெட்டியின் தணல் கனிந்து கொண்டுதான் இருக்கும் !..

அவர்களுக்கு விருப்பம் இருந்தாலும். இல்லாவிட்டாலும்..!

அந்த சூட்டில் தான் அவர்கள் குளிர்காயவேண்டும்…!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *