தங்க வயல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 2, 2021
பார்வையிட்டோர்: 6,407 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

புஸ்தகம் வாங்குவது குறைஞ்சிடுச்சி என்கிறதில எனக்கு உடன்பாடு இல்லே. வெளியீட்டாளர்கள் எழுத்தாளர்களை ஏமாத்தறதுக்கு டி.வி.யை முன்னிறுத்துறாங்க. டி.வி. யாரை பாதிக்குதுன்னா சாதாரண வாசகர்களைத்தான். நமக்கெல்லாம் பெண் ரசிகைகள் கம்மி. சுந்தர ராமசாமியின் நாவல்களை பாதிக்காது. நீல பத்மநாபனோட பள்ளிகொண்ட புரத்தையோ, தலைமுறைகளையோ பாதிக்காது. அசோகமித்ரனோட `தண்ணீர்’ஐ பாதிக்காது. ஜெயமோகனோட `ரப்பர்’ஐ பாதிக்காது. பாலகுமாரனோட நாவல்களை பாதிக்கும். சிவசங்கரியை பாதிக்கும். ஒரு நல்ல வாசகனுக்கு, படிப்பதில் கிடைக்கும் இன்பம் டி.வி.யிலே கிடைக்காது. டால்ஸ்டாய் நாவலை படிக்கிற இன்பம் டி.வி.யிலே கிடைக்குமா? – தோப்பில் முஹமது மீரான்

***

விலை உயர்ந்த ஏர்கண்டிஷன் செய்த அந்தப் பால் வண்ணக்கார், மகன் பறக்கப் போகின்ற அன்று காலையில் வீட்டு முற்றத்தில் வந்து நின்றது. வெளிநாட்டிற்குச் செல்லும் மகனையும் அவன் மனைவியையும் இரண்டு பேரப்பிள்ளைகளையும் விமான நிலையத்தில் ஏற்றிச் செல்வதற்காக! கார்கள் வீட்டுப் படியை ஒட்டி வந்து நிற்கும்படி, வீடு கட்டும்போது அவர் தூர நோக்கோடு அகலமான வாசலும் போட்டு, முற்றத்தில் சிமெண்டுத் தரையும் போட்டிருந்தார். வெளிநாட்டிலிருந்து வரும் மகனுக்கு உறங்குவதற்கு, அவனுக்காகக் கட்டிய அறையைக் குளிர்ச்சி யூட்டி வைத்திருந்தார். இப்போது அவர், அவருடைய அறைக்குள் உறங்குவதில்லை. வெளித்திண்ணையில் நிம்மதியாக, சுகமாக உறங்கி வருகிறார். மனைவி இறந்தது, மகன் கல்லூரியில் படிக்கும் போது. அவர் மறுமணம் செய்து கொள்ளாதது, இன்னொருத்தி மனைவியாக வந்து, மகனையும் தன்னையும் பிரித்து விடுவாளோ, கொடுமைப் படுத்தி விடுவாளோ என்ற அச்சப்பாட்டில்.

மகனுக்கு ஒன்று என்றால் அவள் மனம் பொறுக்க மாட்டாள். ஒரே மகனானதால் அவ்வளவு பாசம். வீடு கட்டும்போது மகனுக்காகத் தனி அறை. அவருக்கும் மனைவிக்கும் உறங்குவதற்குத் தனியாக ஒரு அறை. மகனுடைய அறை விசாலமானது. அறையோடு சேர்ந்து குளியல் அறை. அறையிலும், குளியல் அறையிலும் பளிங்குக் கற்கள்.

வெளிநாட்டிலிருந்து வரும் போது மகனுக்கும் பிள்ளைகளுக்கும் தங்குவதற்கு வசதியாகத்தான் வீட்டைக் கட்டியிருந்தார்.

அவனுடைய மனைவி ஒரு சீமைச் சரக்கு. வெளிநாட்டிலிருந்து முதல் முறை ஊருக்கு வந்தபோது அவளுடைய முகரைக்கட்டை சரியாக இல்லை . காலையில் விழித்ததும், ஒரே புலம்பல். ‘ஓ! என்னா சூடு! ராத்திரி ஒரு கண்ணுக்குத் தூக்கமே இல்லை’. அவள் அப்பன் வீட்டுல ஏசி இருப்பது போல! அவளைப் பார்க்காவிட்டாலும், பேரப் பிள்ளை களைப் பார்க்கணுமே! அந்த முறை மகன் விமானம் ஏறும் முன், ஏசி வாங்கி மாட்டிவிட்டார். குளிர்ச்சியூட்டிய அறையில் இரண்டு நாள் தங்கிவிட்டுத்தான் பறந்தார்கள்.

பெட்ரோல் மண்ணிலிருந்து வந்திறங்கிய அன்று, அவன் வாப்பா விடம் சொன்னான். ‘என் பிள்ளைகள் யூரோப்பியன் டாய்லெட்டில் தான் போவார்கள்’.

அவர் மகனிடம் குரல் அடக்கிக் கேட்டார் ‘அவளோ …?’

‘அவளுக்கும் இப்பம் அதுதான் வேணும்’ என்று அவன் சொன்ன போது, பொங்கி வந்த எரிச்சலை அவர் அடக்கிக்கொண்டார். சக்கடா வண்டிகூடப் போகாத பட்டிக்காட்டிலிருந்து வந்த பய பிள்ளைக்கு இப்போ யூரோப்பியன் டாய்லெட் கேட்குதோ? உடங்காட்டில் உட்கார்ந்ததெல்லாம் மறந்துட்டாளோ?

அவசரக் காரியமல்லவா? அப்போதே போய் பேரப் பிள்ளைகளை எண்ணி, யூரோப்பியன் க்ளோசெட் வாங்கி வந்து, மறுநாளே பழையதை இடித்துத் தள்ளிவிட்டு, அதே இடத்தில் மாட்டிவிட்டார். நாளை நமக்கும் பயன்படுமே, இப்பவே மூட்டுவலி தொடங்கிவிட்டது. பேரப்பிள்ளைகளுக்கு எங்குமில்லாத ஆனந்தம். பிள்ளைகள் உப்பாவை (பாட்டனார்) தொட்டு நின்றது அவளுக்கு விருப்பமாக இல்லை. அவருடைய விசர்ப்பு நாற்றம் பிள்ளைகளுக்கு மேல் பரவிவிடுமென்ற குமட்டல்.

ரோலர் உள்ள பையிலிருந்து கிரிக்கெட் மட்டையையும் பந்தையும் எடுத்துக் கொடுத்து, சிமெண்ட், முற்றத்தில் விளையாடத் தூண்டினாள். மம்மியுடைய ‘ஹராம்பிறப்பு’ (கெட்ட நோக்கம்) பிள்ளைகளுக்கு எங்கே புரியப் போவுது’. பிள்ளைகள் அவரை அனுகாமல் இருக்க அப்படியொரு தந்திரத்தைக் கையாண்டாள்.

நகரக் குடியிருப்பில் மனை வாங்கி வீடு கட்டித் தங்கிய பிறகும், அவருடைய கிராமிய உடை, நடை, பேச்சு எதுவும் மாறாதது அவளுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. பத்தாம் வகுப்பில் தோல்வி யுற்றாலும், அவள் இப்போது பொடிப்பொடி இங்கிலீஷ் பேசுவாள், கொஞ்சம் அரபிச் சொற்களும். சுடிதாருக்கு மாறிவிட்டாள் அல்லவா!

தூரத் தொலைவிலிருந்து வந்தோம். தன்னந்தனியாக இந்தப் பெரிய வீட்டைக் கட்டிக் காத்துக்கொண்டு கிடக்கிறார். இரண்டு மாத விடுமுறை, வயதான மாமாவோடு கொஞ்சம் அன்பாக நடந்துகொள்ள வேண்டுமென்ற இரக்கம்கூட அவளுக்கு இல்லை. எப்பவும் எறியும் கடியுமாக நிப்பாள். அதுதான் அவருக்கு அவள் மீது கோபம்.

அவருக்கு ஒரு சின்ன உதட்டு ஆசை. சிறுபயறும் சம்பா அரிசியும் போட்டுக் கஞ்சி காய்ச்சி, அதில் தேங்காய்ப்பால் விட்டுக் கடைஞ்சி, பால் போலாக்கி, புளித்துவையலும் கூட்டிக் குடிக்க ரொம்ப நாளாக மனசில் முளைவிட்டிருந்த ஆசை. மருமகக்காரி முகத்தில் நிலவு பரந்த ஒரு காலை நேரம், அவருடைய ஆசையைச் சூசகமாக வெளிப்படுத்தினார். எட்டிக் கடிப்பாளோ என்ற அச்சம் நெஞ்சுக்குள்.

‘ரொம்ப நாளா ஹோட்டலில் கண்டதும் கூடியதும் தின்று வவுறு பஞ்சராப் போச்சு. கொஞ்சம் பயத்தம் கஞ்சு போடேன்புள்ளே. பிள்ளைகளுக்கும் வயத்துக்கு ‘ராஹாத்தா’ (சுகம்)யிருக்கும்’,

கேட்டதும் விழுந்தடிச்சுச் சிரித்தாள். மூச்சுத் திணறச் சிரித்தாள். எதுக்காக இப்படிச் சிரிக்கிறாளென்று அவருக்குப் புரியவில்லை. இடிஞ்சு போய் நின்றார். ஒரு மட்டில் சிரிப்பை அடக்கிக்கொண்டு சொன்னாள். ‘எம்பிள்ளைகள் பயிறு கஞ்சியும் புட்டும் ரொட்டியும் ஒண்ணும் தின்னு பழக்கமில்லை. நூடில்ஸ்தான் தின்னுங்கோ, பெப்சி தான் குடிப்பாங்க’.

நூடில்ஸ் என்றால் என்னவென்று அவருக்கு முதலில் புரியவில்லை.

பிள்ளைகள் கரண்டியில் நூடில்ஸ் எடுத்துச் சாப்பிட்டுக்கொண்டு பெப்சி குடிக்கும் போது, அவர் அதைப் பார்த்து, மனசில் சொன்னார், ‘இந்த சேமியாக்குத்தானா, இந்த நூதனப் பேரு! அடேங்கப்பா!!’

அவனுடைய உம்மா இருக்கும்போது, வாரத்தில் இரண்டு நாட்கள் காலையில் பயத்தம் கஞ்சி போடுவது வழக்கம். அந்த ஊக்கம்தான். 67 வயசிலும் 10 மைல் நடக்கணுமா! ஒரு மூட்டை அரிசியை, ஒத்தக் கையால் இப்பம் தூக்கி விடணுமா! ரெடி, இந்தக் காய பலம் எது? ருசிபசியா… அவ ஆக்கிப்போட்ட உணவின் ஊக்கம்தானே?

அவன் பத்தாம் வகுப்பில் படிக்கும்போது, வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சம்தான். இரவு அவன் பாடப்புத்தகத்தை எடுக்கும் போது, அவள் அவன் பக்கத்திலே உட்கார்ந்து விளக்குத் திரியைத் தூண்டி வெளிச்சம் காட்டிக்கொண்டிருப்பாள். அவனுக்கு அவள் ஒரு வெளிச்சம். அவன் தூங்கச் சென்ற பிறகுதான் அவள் பாய் விரிப்பது. கடைசிப் பரீட்சை நாட்களில் விடிய விடிய மகன் பக்கத்திலே உட்கார்ந்து, அவனைப் படிக்கத் தூண்டிக்கொண்டே இருந்தாள். படிப்பில் முதல் மாணவனாகத் தேறிய செய்தி கேட்டு மகிழ அவள் அப்போது இல்லாதது, அவருக்கு வருத்தமாக இருந்தது. ரிசல்ட் வந்த பத்திரிகையை வாப்பாவிடம் காட்டும்போது, அவன் கண் கலங்கி இருந்தது. அதன் அர்த்தம், அவருக்குப் புரிந்துவிட்டதால் ஏன் என்று கேட்கவில்லை. அவருடைய கண்ணில் ஒரு மூலையில் சிறியதொரு கசிவு தட்டியிருந்ததை, அவன் கவனித்து இருக்கவில்லை. அவன் தலையைத் தடவி விட்டார்.

செல்ல மகனே!

தாயில்லாத பிள்ளை, மேல்படிப்புக்கு அனுப்புவதாக இருந்தால், ஹாஸ்டலில் தங்க வைக்காதீர்கள். நகரத்தில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கி, உங்கள் கண்பார்வையில் கல்லூரிக்குப் போய் வரட்டும் என்று உறவினர்கள் சிலர் உபதேசம் செய்தார்கள். காலம் கெட்டு விட்டது. பிள்ளைகள் கெட்டுப்போவதற்குத் தோதுவான சூழல். அந்நேரம்தான் ராகிங்கினால் உசிரை விட்டனர் சில மாணவர்கள். நல்ல வளர்ப்பாக மகனைக் கொண்டுவர வேண்டுமானால், கிராமத்தை விட்டு வெளியேறியாக வேண்டும். தன்னுடைய அருகாமையும் இன்றியமையாதது என்று அவருக்குத் தோன்றியதால், கிராமத்து ஒட்டு வீட்டை விற்று, நகரக் குடியிருப்பு ஒன்றில் வீட்டுமனை வாங்கி, வீட்டை விரைவில் கட்டிக் குடியேறிவிட்டார். பத்து மினிட்டில் நடந்து செல்லும் தொலைவில் மகன் படிக்கும் கல்லூரி. மகன் மீது கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டுமென்பதால்தான் இந்தக் குடிபெயர்தல். அவனுடைய நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டார். மகன் கல்லூரிக்கு டிமிக்கி கொடுக்காமல் ஒழுங்காகச் செல்கிறானா என்று கவனிப்பதற்கென்றே அவரே சமைத்து மதிய உணவை அவரே கல்லூரிக்கு எடுத்துச் சென்று கொடுத்து விட்டு, எச்சிப்பாத்திரத்தைச் சுமந்து வருவதை வழக்கமாக்கிக் கொண்டார். 4 மணியானால் வீட்டுத் தலைவாசலில் வந்து நிற்பது, மகனுடைய வரவை எதிர்நோக்கி. வீட்டுக்குப் பின்பக்கம்தான், கிரிக்கெட் களம். அதனால் பார்வையை விட்டு விலகிப்போக வாய்ப்பில்லை. அப்படிப் பதனமாக வளர்த்த மகனை, மிச்சம் கிடந்த ஒரு தோப்பை விற்றுத்தான் விசா வாங்கி அக்கரைக்கு அனுப்பியது.

பேரப்பிள்ளைகளுக்குப் பொட்டு பொடி மீன்கள் பிடிக்காது என்று அவள் சொன்னாள். மீன் என்றால் அறுக்குளா அல்லது ஆட்டின் ஈரல் ஃப்ரை செய்தது. அறுக்குளா மீன் கொள்ளை விலை சொன்னதால், ஆட்டு ஈரல் வாங்கி வரும்போது வழியில் போட்டிருந்த தென்மலை வருக்கைப் பலாப்பழத்தைக் கண்டு நாக்கில் எச்சில் ஊறியது. அதன் கொதியைக் கிளறும் வாசனை மூக்கைக் குடைந்தபோது, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, உப்பாவையும், பிறந்த மண்ணையும் பார்த்துச் செல்ல வந்த பேரப்பிள்ளைகளையும் மகனையும் நினைத்து, கேட்ட விலை கொடுத்து, ஒரு பலாப்பழத்தை வாங்கி, தோளில் கிடந்த துண்டைச் சும்மாடாக்கித் தலையில் சுமந்து நடக்க அவருக்கு வெட்க மாக இல்லை. என் பேர மக்களுக்குத் திங்க, உப்பா சுமந்து செல்கிறேன் என்ற பெருமை அவருக்கு அந்நேரம்.

‘வாப்பா யாரையாவது சுமந்து வரச் சொல்லக்கூடாதா? நீங்க ஏன் சுமந்திட்டு வந்தியே? என் மதிப்பைக் கெடுத்துப்போடுவீளே?’

‘என்னடா மதிப்பு? எம்பேரப்பிள்ளைகளுக்கு திங்க நான் சுமந்துட்டு வந்ததுனால என்ன குறைஞ்சு போச்சு…?’ அவர் உரிமையோடு கேட்டது அவள் காதில் விழுந்தது.

‘பேய்க்குப் பிறவிக் குணம் போகுமா?’ என்று அவள் உள்ளிருந்து ஒரு குதிகுதித்து வந்து கேட்டது, அவருக்குச் சுள்ளென்றிருந்தது.

பொத்து வந்த கோபத்தை உள்ளடக்கிக்கொண்டார்.

‘கேக்கும் சாக்கிலேட்டும் பிஸ்தாவும் தின்னு வளர்ந்த பிள்ளைகள். இந்தச் சக்கைப் பழமெல்லாம் வயத்துக்கு ஏக்காது. தூக்கிட்டுப் போங்கோ’.

முகத்தில் ஓங்கி அறைந்து விட்டாள். அவருக்கு அய்யோடா என்றாகிவிட்டது. இந்தத் துரத்தல் சொல் கேட்கவா, இவ்வளவு தூரம் தள்ளாடித் தள்ளாடி, இந்தப் பலாப்பழத்தைத் தலையில் முட்கள் குத்தச் சுமந்திட்டு வந்தேன்.

தலைவிதி! பெட்ரோல் மண் படுத்தும் பாடு அவளைச் சொல்ல வைக்கிறது. வைத்த இடத்திலேயே பலாப்பழம் இருந்தது. அதன் சுவாரஸ்யமான வாசனை வீட்டுக்குள் பரவியது. அவனுடைய உம்மா இருக்கையிலும் மவுத்தான பிறகும் பலாப்பழக் காலம் வரும் சந்தர்ப்பங் களில், அவனுக்காகத் தென்மலை வருக்கையாகப் பார்த்து வாங்கி வந்து வெட்டி, கொட்டையை எடுத்துவிட்டு, பலாச்சுளையைக் கொடுக்கும் போது, வாங்கி ஆசையோடு தின்ன காலத்தையெல்லாம் அவன் மறந்துவிட்டான் போலும்! ஆனால், அவருக்கு மறக்க முடியவில்லை .

தங்க வயல் வாரி வழங்கிய செழுமையில், மக்கள் சில அனுபவ நினைவுகளை எளிதில் மறந்துவிடுவதை நினைக்கும்போது வேதனை யாகத்தான் இருக்கிறது. மகனிடமும் அவன் மனைவியிடமும் வந்த மாற்றங்களை எண்ணியபடி வீட்டுக்குள் சென்றார். நேற்று வீட்டுக்குள் கிடந்த கட்டில், மேஜை, நாற்காலிகள் எதையும் அந்த இடத்தில் காண முடியவில்லை. முன்பு ஒருமுறை சிங்கப்பூரிலிருந்து கொண்டுவந்து சுவரில் அலங்காரமாக மாட்டியிருந்த இங்கிலாண்ட் கடிகாரத்தையும் காணவில்லை. பிரம்மை பிடிச்ச மாதிரி நின்றுகொண்டிருந்த அவர் எதிரே வந்த மகன் கேட்டான்.

‘ஏன் ஒரு மாதிரி முழிக்கியோ?’

‘இங்கே கிடந்த கட்டில், மேஜை, நாற்காலி எல்லாம் எங்கப்பா? சுவரில் மாட்டி இருந்த மணியையும் காணல்ல?’

‘பழைய மேஜையும் கட்டிலும் எதுக்கு? புதுசு வாங்கலாம். இப்பம் நல்ல குவாட்ஸ் கிளாக் கிடைக்குதே…’

‘எப்போ?’

‘அடுத்த தடவை வரும்போ?’

ஆறுதல் அடைந்தார். ஒற்றைக் கட்டை நமக்கு எதுக்கு நாற்காலியும் மேஜையும் பெரிய கட்டிலும் சுவர்க் கடிகாரமும்?

அவொ போன பிறகு, தலை சாய்க்கிற இடமெல்லாம் தமக்குப் பூ மெத்தை!

இன்று முற்றத்தில் மகனையும், பிள்ளைகளையும் ஏற்றிச் செல்ல வந்திருக்கும் ஏர்கண்டிஷன் செய்த விலையுயர்ந்த பால் வண்ணக்கார், சில தினங்களுக்கு முன் இது போல் வீட்டு முற்றத்தில் வந்து நின்றது. அதிலிருந்து காலுசராய் போட்ட இரண்டு பேர் இறங்கி, வீட்டைச் சுற்றிப் பார்த்தது எதற்கென்று இன்னும் அவருக்குப் பிடிபடவில்லை. யாரப்பா என்று கேட்டால், உங்க வேலையைப் பாருங்கோ என்பான். எதற்கு அந்தக் கேள்வி. பொருளாதார உயர்வு வரும்போது, பல நிலைகளில் உள்ள நண்பர்கள் வந்து ஒட்டிக்கொள்வார்கள். அதுவே இவனைப் போன்றவர்களுக்கெல்லாம் பெருமை.

போனமுறை வந்திருந்தபோது, வீட்டை எடுத்துக் கட்ட வேண்டு மென்றான். கட்டுவதற்கு எதிர்ப்புச் சொல்லவில்லை. கட்டப்பா, உன் மனம்போல் கட்டு.

வீடு என் பெயரில் இருந்தால்தான் பாங்குக் கடன் கிடைக்கும் என்று விளக்கம் சொன்னான். மறுபேச்சில்லாமல், சார் பதிவாளர் அலுவலகத் திற்குச் சென்று, அவன் காட்டிய இடங்களிலெல்லாம் விரல் உருட்டினார். பாங்குக் கடன் வாங்கி வீட்டை எடுத்துக் கட்டலயா என்று அம்முறை வந்தபோது, அவனுக்குக் கோபம் பொங்காத வகையில் மெல்லக் குரல் தாழ்த்திக் கேட்டும், அவனுடைய முகம் சிவந்துவிட்டது. கேட்பதை அத்துடன் நிப்பாட்டிக்கொண்டார்.

அவரும் அவளும் இணையாகப் படுத்து உறங்கிய பலா மரக்கட்டில் அந்த இடத்தில் இல்லை. அந்த அறைக்குள் அவளுடைய மூச்சின் சூடும் அவருடைய உடம்பின் வாசனையும்கூட இருந்தது. அறையில் கட்டிலுக்கடியில் ஏதோ ஒரு இருட்டு மூலையில் அவள் பதுங்கிக் கொண்டிருக்கிறாள். அவர் மகனுடைய முகத்தைப் பார்த்தது ஒரு கேள்வியாக இருந்தது. மகனுக்கு டக்கென்று புரிந்துவிட்டது. ‘போனா வரும்’ எரிச்சலான பதில்.

உடம்புக்கு ஏதாவது முடியாமையாக இருக்கும் போது மட்டும் அந்தக் கட்டிலில் போய்ப் படுத்துக்கொள்வது அவர் வழக்கம். ஒரு பெண் கை அவருடைய நெற்றியைத் தடவுவதை உணருவார். அந்த மென்மை யான கர ஸ்பரிச வேளையில், அந்திம மூச்சை விட்டால் அவளுடைய மூச்சோடு கரைந்து அறையில் அவர் மூச்சும் நிரம்பி நிற்கும். அவளுடைய வாசனையுடன் அவர் உடல் வாசனையும் கலந்து மூன்றாவது ஒரு வாசனையாக உருமாறி அறையில் கட்டி நிற்கும். மகன், பேரன், அவனுடைய மகன் இப்படிச் சங்கிலித் தொடராக வருபவர்கள் அதை முகர வேண்டும். இதுதான் பேரப்பிள்ளைகளின் தாய்வீடு. அவர்களை இந்த மண்ணோடு நிலையாக நிப்பாட்டும் ஆணிவேர்.

பறப்பதற்கு முந்தைய நாள். எடுக்கவேண்டிய பொருட்களை யெல்லாம், பைகளிலும் அட்டைப் பெட்டிகளிலும் கட்டி வைத்தார்கள். காலை பத்தரை மணிக்கு விமானம். காலை 7 மணிக்கு ஏற்றிச் செல்ல வந்த பால் வண்ண ஏசி கார், வீட்டு முற்றத்தில் படியை ஒட்டி நின்றது.

டிரைவரும் மகனும் பொருட்களை டிக்கியிலும் மேல்பகுதியிலும் வைத்துக் கட்டினார்கள்.

அவர் வெறிச்சோடிப் போய் மூளியாக்கப்பட்ட வீட்டைப் பார்த்தார். நிர்வாணமாக்கப்பட்ட சுவர்கள் மட்டும் கண்ணுக்குத் தெரிந்தன. ஒரு மின்விசிறிகூட இல்லையே என்பதைக் கவனித்தார். பரவாயில்லை. தெற்கிலிருந்து வரும் கடல் காற்றே போதும்.

‘எப்பா நான் தரையில் படுத்தால் உடம்புக்கு ஒத்துக்கிடாதே. நான் வெளிப்பக்கம் போட்டுப் படுத்திருந்த நார் கட்டில்…?’

‘இரண்டு வாரம் அட்ஜஸ்ட் செய்ங்க வாப்பா. நான் போனதும் ஒரு போல்டிங் கட்டில் வாங்கி அனுப்பி வைக்கிறேன்.’

‘மறந்திடாதே, அனுப்பி வை. மொசைக் தரை எனக்கு ஒத்துக் கிடாது.’

‘அனுப்புறேனு சொல்லியாச்சே. எங்கள ஏர்ப்போட்டுக்கு வந்து வழி அனுப்புங்க’.

மகனும் அவளும் பின் ஸீட்டில் உட்கார்ந்து கொண்டு கலகலவெனச் சிரித்தனர். முன் ஸீட்டில், பிள்ளைகளோடு மனம் நிறையத் துக்கத்தை நிரப்பிக்கொண்டு அவரும். பிள்ளைகள் இருந்தபோது வீடு கலகலப்பாக இருந்தது. வீடு நிரம்ப ஆட்கள் இருந்த மாதிரியான ஒரு சுக அனுபவம். பெத்த மகனையும் இந்த அருமை முகங்களையும், பார்ப்பதற்காகத் தன்னந்தனியாக அந்தப் பெரிய வீட்டில் இன்னும் எத்தனை வருஷம் எதிர்பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்? எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு வரப்போகிறார்களோ? அதுவரை தனியாக அந்த வீட்டில் பேரப் பிள்ளைகளின் நினைவோடு, மகனின் நினைவோடு.

‘வாப்பா நான் மாசா மாசம், முடங்காமல் செலவுக்குப் பணம் அனுப்புவேன். கவலைப்படாதீங்க!’

‘அனுப்பு’.

மகனுடைய சாமான்களை, டிராலியில் அடுக்கி வைத்து உருட்ட உதவி செய்தார். விமான நிலையத்திற்குள் செல்லும் வரை பேரப் பிள்ளைகளைத் தன்னோடு அணைத்து நிறுத்தி; முத்தமிட்டுக்கொண்டே இருந்தார். மகனுடைய கைப்பிடித்து முத்தமிட்டார். ‘நான் வீட்டை பத்திரமா பார்த்துக்கிடுவேனப்பா, இனிவரும்போது, வீட்டை எடுத்துக் கட்டு மோனே! அடிக்கடி போன் செய்’. அவருடைய தொண்டை கரகரத்தது.

‘மாமா, போயிட்டு வாரேன்’. எல்லாக் கோபத்தையும் தணித்த வளாகச் சிரித்த முகத்தோடு விடை கொடுத்தாள்.

உள்ளே நுழையும் வாசலை அடையும் போது, பிரியும் மகனை யும், பேரப் பிள்ளைகளையும் நினைத்து விம்மி, விம்மி அழுதார். நெரிசலுக்குள் தலையை நுழைத்து, ஜீன்ஸ் போட்ட பேரப்பிள்ளைகளைக் கண்ணில் கொஞ்சமாவது ஒத்தி எடுக்க முயன்றார். அவர்கள் சென்ற நுழைவாயிலைப் பார்த்துக்கொண்டே நின்றார்.

‘உள்ளே போயாச்சி, இனிப் பார்க்க முடியாதுப்பா. போவோம்’, பால் வண்ண ஏசி கார் டிரைவர் அவரைக் கூப்பிட்டான். பெத்த மகனையும், பேரப்பிள்ளைகளையும் பிரிந்து விட்டவேதனையில், நடை தள்ளாட காரில் ஏறினார். கண்ணீர் சொட்டிட, கார் கண்ணாடி வழியாக வானத்தைப் பார்த்தார், பெற்ற மகனை எட்டிப் பார்க்க.

மகனும் பேரப்பிள்ளைகளும் ஏறிய விமானம் பறந்து செல்கிறதா? வானத்திலிருந்து கண்களை எடுக்கவே இல்லை. டிரைவர் காரை, ஊர் பள்ளிவாசல் முன் நிப்பாட்டினான்.

‘ஏன் இங்கே நிப்பாட்டினாய்? வீட்டுக்குப் போட்டும்’

‘உங்க மகன், இந்தப் பள்ளி வாசலில்தான் இறக்கிவிடச் சொன்னார்’

‘எதுக்குப்பா?’

‘உங்க வீட்டை, எங்க முதலாளிக்கு உங்க மகன் விற்றுப்போட்டது தெரியாதா?’

அவர் பதில் ஏதும் பேசவில்லை. ஏசி காரை விட்டுக் கீழே இறங்கினார். இனி என் படுக்கை, இந்தப் பள்ளிவாசலில்தானா? மோதினார், ராத்திரி படுக்க விடுவாரா? உயரே வானத்தில் ஒரு சின்னச் சிலுவையாக ஒரு விமானம் பறந்து செல்லும் ஓசை, அவர் காதில் விழுந்தது.

‘இனி எந்த முகவரிக்கு, முடங்காம, மாசாமாசம் செலவுக்குப் பணம் அனுப்புவாய்?’

பறக்கும் ஓசை வழியாக விமானத்தைத் தேடியபடி கிள்ளி எறியப் பட்டவருடைய உள்மனம் கேட்டது.

– நன்றி: https://thoppilmeeran.wordpress.com/2012/01/04/தங்கவயல்/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *