டாக்டர் வீடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 22, 2018
பார்வையிட்டோர்: 5,334 
 

நான் கடந்த முப்பது வருடங்களாக பெங்களூரில் ஒரு மல்டி நேஷனல் ஐடி கம்பெனியில் கை நிறைய சம்பளத்துடன் சந்தோஷமாக வேலை செய்கிறேன்.

நான், என் மனைவி சரஸ்வதி; மகன் ராகுல்; மருமகள் ஜனனி மற்றும் என் பேத்தி விபா ஆகியோர் டாட்டா நகரில் முப்பதாயிரம் ரூபாய் வாடகை வீட்டில் இருக்கிறோம்.

அடுத்த இரண்டு வருடங்களில் வைஸ்-பிரசிடெண்டாக ஓய்வு பெறப்போகும் என்னுடைய ஒரே தீராத ஆசை பெங்களூரில் ஒரு நல்ல வீடு சொந்தமாக வாங்கி செட்டிலாகிவிட வேண்டும் என்பதுதான். திருநெல்வேலி எனக்குச் சொந்த ஊர். அங்கு சொந்த வீட்டில் வயதான என் அம்மா, அப்பா இருக்கிறார்கள்.

பெங்களூரின் அமைதி; எப்போதும் கொட்டும் காவிரித் தண்ணீர்; உடம்பை வருடும் மெல்லிய குளிர்; சிறந்த கல்வி நிலையங்கள்; நேர்மையான கன்னட மக்கள் போன்ற சொகுசில் முப்பது வருடங்களாக அனுபவித்து விட்டு, என் ஓய்வுக்குப் பிறகு அந்த ஊரைப் பிரிய எங்களுக்கு மனம் வரவில்லை.

ஆகையால் ஒரு சொந்த வீடு வாங்கி அந்த வீட்டில் நிரந்தரமாக குடியேறும் எண்ணம் என்னுள் தீவிரமானது.

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை.

என் மொபைலில் OLX மேய்ந்து கொண்டிருந்தபோது ஒரு அருமையான வீடு இந்திரா நகரில் விலைக்கு வருவதை நான் அறிந்து கொண்டேன். வீடு முழுவதையும் வீடியோவில் பார்த்த பிறகு, அதை சரஸ்வதி, ராகுல் மற்றும் ஜனனியிடம் காண்பித்தேன். அவர்களுக்கும் அந்த வீடு பிடித்துவிட, உடனே அந்த வீட்டின் ஓனரை மொபைலில் தொடர்புகொண்டேன்.

அவர் பெயர் டாக்டர் மஞ்சுநாத் சாஸ்திரி. அந்த வீட்டை ஒன்றரை கோடி ரூபாய்க்கு விற்கப் போவதாகவும், விருப்பமிருந்தால் வீட்டை வந்து பார்க்கும்படியும் சொன்னார்.

சரஸ்வதி என்னிடம் அன்றைக்கு நான்கரை ஆறு ராகு காலம் எனவும், மதியம் இரண்டு மணிக்கு கிளம்பி அந்த வீட்டைப் போய் நேரில் பார்த்து முடிவு செய்யலாம் என்றாள்.

டாக்டருக்கு சொல்லிவிட்டு, நாங்கள் அனைவரும் என்னுடைய காரில் இந்திராநகர் கிளம்பிச் சென்றோம்.

டாகிடரின் வீட்டில் வெள்ளைநிற பென்ஸ் கார் நின்று கொண்டிருந்தது. காலிங் பெல் அழுத்தப்பட்டதும், டாக்டர் வந்து கதவைத் திறந்தார்.

நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் பெயர் சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்டதும், டாக்டர் மஞ்சுநாத் சாஸ்திரி எங்களை அன்புடன் வரவேற்று வீட்டைச் சுற்றிக் காண்பித்தார். எனக்கு கன்னடம் சுத்தமாகத் தெரியாது என்பதால் ஆங்கிலத்திலேயே எங்கள் உரையாடல்கள் இருந்தன.

60×40 சைஸில் 2400 சதுர அடியில் வீடு பார்க்க அழகாக இருந்தது. டைனிங் ஹால்; மூன்று பெட்ரூம்கள் அனைத்தும் இத்தாலியன் மார்பிளில் பள பளத்தன. பூஜா ரூம் மட்டும் இந்தியன் மார்பிளில் அம்சமாக இருந்தது. அனால் பூஜா ரூமில் நம்முடைய ராமர், கிருஷ்ணர், முருகர் போன்ற சாத்வீகமான சாமிகளுக்குப் பதிலாக ஏகப்பட்ட உக்கிரமான அம்மன்கள் நாக்கை நீட்டிக்கொண்டு காணப்பட்டன. அவைகளைப் பார்த்தால் சற்றுப் பயமாக இருந்தது. ஒரே ஆறுதல் அங்கிருந்த கஜலக்ஷ்மியின் படம் மட்டுமே.

வீட்டை மேலும் சுற்றிப் பார்த்தபோது ஒரு பெரிய அறையில் ஏகப்பட்ட மருத்துவ உபகரணங்களும்; கண்டாடிக் கூண்டில் ஒரு முழு மனித எலும்புக்கூடும் இருந்தன.

“டாக்டர் நீங்கள் எந்த ஹாஸ்பிடலின் எந்தத் துறையில் ஸ்பெஷலிஸ்ட்?” என்று கேட்டேன்.

அவர் புன்னகைத்தபடி, “ஐ யாம் எ ஸோல் ஹீலர்.. இந்த வீட்டில்தான் சிகிச்சை அளிக்கின்றேன்” என்றார்.

“ஓ ஐ ஸீ…”

டயாபடீஸ் அதிகம் உள்ளவர்களுக்கு முதல் பாதிப்பு முழங்காலுக்கு கீழேதான். அதிலும் அவர்களுக்கு பெரும்பாலும் கால் பாதங்கள் மரத்து விடும். அதற்காகவே பிரத்யேகமாக காஸ்ட்லி செருப்புகள், ஷூக்கள் தயாரிக்கப் படுகின்றன. பாதங்களுக்கு கீழே அமையும் ஸோல்கள் கவனத்துடன் மெத்தென்று மருத்துவ ரீதியாக தயாரிக்கப்படும். அதில் இந்த டாக்டர் ஆலோசனை வழங்கும் நிபுணர் என்று நான் புரிந்துகொண்டு, என் அப்பாவுக்கும் எக்கச்சக்க ஷுகர் என்பதால் “ஐ வில் ப்ரிங் மை பாதர் ஆல்ஸோ டு யூ பார் ட்ரீட்மெண்ட்…” என்றேன்.

“ஓ ஷ்யூர்.. ப்ளீஸ் ப்ரிங் ஹிம்.”

வீட்டை முழுவதுமாக சுற்றிப் பார்த்ததும், அனைவரும் ஹாலில் அமர்ந்துகொண்டு சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

“நீங்கள் ஏன் இந்த வீட்டை விற்கிறீர்கள் டாக்டர்?”

“என் டாக்டர் தொழிலுக்காக ஜெய்நகரில் இதைவிடப் பெரிதாக ஒரு வீட்டை கட்டிக் கொண்டிருக்கிறேன்… உங்களுக்கு இந்த வீடு பிடித்திருக்கிறதா?”

“ஆமாம்… எங்கள் அனைவருக்குமே ரொம்பப் பிடித்திருக்கிறது. ஆனால் வீட்டின் விலைதான் மிகவும் அதிகம் டாக்டர்.”

“தயவுசெய்து நீங்கள் இந்த லோகேஷனின் மார்க்கெட் நிலவரம்; வீட்டின் அமைப்பு; அதன் தரம் ஆகியவற்றை சிந்தித்துப்பாருங்கள்… சுற்றிலும் தோட்டத்துடன் இந்த மாதிரி இன்னொரு வீடு உங்களுக்கு கண்டிப்பாக அமையாது மிஸ்டர் கண்ணன்…”

“………………………….”

“நீங்கள் யோசித்து அடுத்த இரண்டு நாட்களில் முடிவெடுத்து எனக்குச் சொல்லுங்கள்…”

நாங்கள் அனைவரும் விடை பெற்றோம்.

வீட்டுக்கு வந்ததும் சரஸ்வதி என்னிடம், “வீடு ரொம்ப நல்லா இருக்குங்க…கண்டிப்பா வாங்கலாம். ஒரு கோடி இருபது லட்சத்துக்கு கேட்டுப் பாருங்க…” என்றாள்.

ராகுலும், ஜனனியும் அதையே ஒத்துப் பாடினார்கள்.

அடுத்த ஒருவாரம் டாக்டர் மஞ்சுநாத் சாஸ்திரியிடம் போனில் பேசிப் பேசி அவர் கடைசியாக ஒரு கோடி முப்பது லட்சத்துக்கு இறங்கி வந்தார். இந்திராநகர் போஷ் ஏரியா. வீட்டை விட்டுவிட எனக்கு மனம் இல்லை. என்னிடம் இருக்கும் பலவிதமான சேமிப்புகளில் 90 லட்சம் ரெடியாக இருந்தது. மீதி நாற்பது லட்சம்தான். வீடு வாங்க ஐம்பது லட்சம் என் கம்பெனியின் லோன் எலிஜிபிலிட்டி எனக்கு உண்டு. அதையும் வாங்கிவிடலாம் என்று முடிவு செய்தோம். இதுதவிர, ரிஜிஸ்ட்ரேஷன் செலவு வேறு.

வீட்டில் நாங்கள் அனைவரும் கூடிப் பேசி உடனே சரியென்று டாக்டரிடம் சொல்லிவிட்டோம்.

சரஸ்வதி எங்களிடம், “அந்த வீடு நம் பெயருக்கு ரிஜிஸ்டர் ஆகும்வரை யாரிடமும் இதைப்பற்றி மூச்சு விட வேண்டாம்…கண் போடுவார்கள்” என்றாள். அவள் எப்போதுமே அப்படித்தான். எதைப் பற்றியும் யாரிடமும் வாயே திறக்க மாட்டாள். சரியான அழுத்தக்காரி.

அடுத்ததாக நான் லீகல் ஒப்பீனியன் கேட்பதற்காக டாக்டரிடம் வீடு சம்பந்தப்பட்ட அனைத்து டாக்குமென்ட்களையும் வாங்கி எனக்குத் தெரிந்த ஒரு லாயரிடம் கொடுத்தேன்.

அடுத்த இரண்டு நாட்களில் டாக்குமெண்ட்ஸ் அனைத்தும் மிகச் சரியாக இருப்பதாகவும், வில்லங்கம் எதுவும் கிடையாது என லீகல் ஒப்பீனியன் எழுத்து மூலமாக லாயர் கொடுத்தார்.

அடுத்த வாரத்தில் திருநெல்வேலியிலிருந்து என் பெற்றோர்கள் வந்து அந்த வீட்டைப் பார்த்தனர்.

என் அம்மா, “வீடு திவ்யமா இருக்கு கண்ணா… நிலம்; நீர்; நெருப்பு; காற்று; ஆகாயம்; ஆகிய பஞ்ச பூதங்களில் நிலம் முதன்மையானது… பெங்களூரில் நிலத்துடன் ஒரு வீடும அமைந்தது பகவத் சங்கல்பம்…” என்றாள்… அப்பா “டாக்டரிடம் எப்போது என் காலுக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கலாம்?” என்றார்.

வீட்டில் அனைவரும் குஷியாயினர். எப்போதும் அந்த வீட்டைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தோம். என்னுடைய அம்மா காலண்டர் பார்த்து, “கண்ணா ஜூலை பதினைந்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை உனக்கு பர்த்டே… அன்றே அந்த வீட்டில் பால் காய்ச்சி குடியேறலாம்…” என்றாள்.

நாங்கள் அனைவரும் “ நல்ல ஐடியா…” என்று சம்மதித்தோம்.

டாக்டர் என்னிடம் இனிஷியல் அக்ரிமெண்டுடன் அறுபததைந்து லட்சம் அட்வான்ஸ் கேட்டார். நான் சரியென்று சொல்லி அதே லாயர் மூலமாக ஒரு அக்ரிமென்ட் தயார்செய்து அதில் டாக்டர் கையெழுத்திட்டதும், அறுபத்தைந்து லட்சத்தை ஆர்டிஜிஎஸ் மூலம் டிரான்ஸ்பர் செய்தேன்.

மீதிப் பணத்தை ரிஜிஸ்ட்ரேஷன் அன்று தருவதாக ஏற்பாடு.

எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது.

அன்று ஒரு சனிக்கிழமை…

என்னுடன் வேலை செய்யும் ஜெனரல் மனேஜர் கிரண் கெளடா தன் மகளுக்குப் பிறந்தநாள் என்று அவன் வீட்டிற்கு என்னை அழைத்தான். நானும் மிகுந்த உற்சாகத்துடன் அவன் வீட்டிற்குச் சென்றேன்.

பிறந்த நாள் பலூன் வெடித்து; கேக் வெட்டி அனைவரும் சந்தோஷமாக இருந்தனர். அப்போது டிவியில் ஏதோ ஒரு கன்னட சேனல் ஓடிக் கொண்டிருந்தது. நான் அதை அசுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அதற்கு அடுத்த நிகழ்ச்சியில் ஒருவர் நேர்த்தியான உடையில் வந்து தொடர்ந்து ஏதோ பேசினார்.

அவரை நான் எங்கோ பார்த்திருக்கிறேன்… சட்டென நினைவுக்கு வந்தது. அவர் எனக்கு வீட்டை விற்கும் டாக்டர் மஞ்சுநாத் சாஸ்திரி.

“இவர் என்ன புகழ் வாய்ந்த டாக்டரா கிரண்?”

“ஆமாம் கண்ணன் சார்… இவர் வராத கன்னட சேனல்களே கிடையாது. இவர் பெயர் டாக்டர் மஞ்சுநாத் சாஸ்திரி…இவர் பேய்கள் ஓட்டுவதில் நிபுணர். நம் போன ஜென்மத்துக் கதைகளையும் சொல்லுவார். அமானுஷ்யமான மனிதர்….”

இதைக்கேட்ட நான் அதிர்ச்சியடைந்தேன். ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் டாக்டரின் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்தேன். டாக்டரைச் சுற்றி நிறைய மண்டை ஓடுகள் இருந்தன. சிகிச்சைக்காக வந்த பலர் அவர் முன்னிலையில் ரத்த வாந்தி எடுத்தனர்.

எனக்கு நிதர்சனமாகப் புரிந்தது. பேய் ஓட்டும் ஒருவரிடமிருந்து வீட்டை வாங்குகிறேன். அதற்காக அறுபத்தைந்து லட்ச ரூபாய் என் சேமிப்பிலிருந்து அட்வான்ஸாக கொடுத்திருக்கிறேன்.

எனக்கு உடம்பு வியர்த்தது.

“என்ன கண்ணன் சார் உடம்பு சரியில்லையா?”

“ஆமாம் கிரண்… நான் உடனே வீட்டுக்கு கிளம்பி மாத்திரைகள் சாப்பிட்டால் சரியாகிவிடும்”.

அன்று இரவு எனக்குத் தூக்கம் வரவில்லை. இந்த டீலிங்கை விட்டு சாமர்த்தியமாக வெளியே வரவேண்டும். வீட்டில் இதைப்பற்றி சொன்னால் அனைவரும் பயந்து விடுவார்கள்.

திங்கட்கிழமை ஆபீஸ் செல்லாமல் டாக்டர் வீட்டுக்கு விரைந்தேன்.

“டாக்டர் ஐ யாம் ஸாரி… என்னை திடீரென்று யு.எஸ்ஸுக்கு இரண்டு வருடங்கள் ட்ரான்ஸ்பர் செய்து விட்டார்கள். வீடு வாங்கும் உத்தேசம் இப்போது எனக்கு இல்லை. தயவுசெய்து என்னுடைய முன் பணத்தை எனக்கே திருப்பியனுப்பி விடுங்கள். தொந்திரவுக்கு மன்னிக்கவும்…”

“ஹவ் கம் மிஸ்டர் கண்ணன்? நீங்கள் கொடுத்த அறுபத்தைந்து லட்சத்தை அப்படியே என்னுடைய ஆரக்கிடெக்டுக்கு கொடுத்துவிட்டேன். அவனுக்கு உடனே பணம் கொடுக்கத்தான் உங்களிடம் என் வீட்டை குறைந்த விலைக்கு விற்றேன். இன்பாக்ட் மீதிப் பணத்திற்காக நான் வெய்ட் பண்ணிக் கொண்டிருக்கிறேன். ப்ளீஸ் ஹானர் அவர் அக்ரிமென்ட் அண்ட் டூ த ரிஜிஸ்டரேஷன் க்விக்லி…”

“ப்ளீஸ் ஹெலப் மீ டாக்டர்.”

“நோ வே ஐ கேன் ஹெல்ப் யூ…”

டாக்டரின் விசிட்டிங் கார்டை வாங்கிக்கொண்டு வெளியேறினேன்.

வீட்டிற்கு வந்ததும் டாக்டரின் விஸிடிங் கார்டில் இருந்த athmasanjeevini.com என்கிற வெப்சைட்டில் அவரைப்பற்றி நிறைய படித்து புரிந்துகொண்டேன்.

எவ்வளவு பெரிய முட்டாள் நான்?

பேய்கள் விரட்டப்படும் ஒரு வீட்டை அதிகப் பணம் கொடுத்து வாங்குகிறேன்; அதற்காக அட்வான்ஸாக அறுபத்தைந்து லட்சம் கொடுத்துவிட்டு தற்போது முழிக்கிறேன்.

அந்த வீட்டைப் பற்றி, டாக்குமெண்ட்ஸ் லீகலாக பார்க்கத் தெரிந்த எனக்கு, அக்கம் பக்கத்தினரிடம் வீட்டைப்பற்றி விசாரித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற அக்கறை சிறிதும் இல்லை.

Soul healer என்றதை sole healer என்று நானே தவறாகப் புரித்துகொண்டேன். டாக்டரின் விஸிட்டிங் கார்டை அவரைச் சந்தித்த முதல்நாளே வாங்கி வைத்துக்கொள்ளத் தோன்றவில்லையே; ஏன்?

நான் ரொம்பக் கெட்டிக்காரன் என்று என்னைப்பற்றி எனக்குள் நானே என்னைத் தவறாக மதிப்பிட்டுவிட்டேன். Due diligence செய்தபின் முடிவெடுக்க எனக்குத் துப்பில்லை.

இந்த லட்சணத்தில் ஒரு பெரிய மல்டி நேஷனல் கம்பெனிக்கு நான் ஒரு பொறுப்புள்ள உயர் அதிகாரி. வெட்கக்கேடு.

யாருக்காவது இது வெளியே தெரிந்தால் சும்மா சிரிக்க மாட்டார்கள்; …யை வழித்துக்கொண்டு சிரிப்பார்கள்.

நான் இப்போது என்ன செய்ய?

வேதனையில் மனதிற்குள் அழுது கொண்டிருக்கிறேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *