கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 22, 2018
பார்வையிட்டோர்: 7,206 
 

அவன் அன்று மிகவும் சந்தோஷமாக இருந்தான். அவன் கனவு தேசத்திற்குச் செல்வதற்கு விசா கிடைத்ததே அதற்குக் காரணம்.

போனமாதம் பணிக்கான நேர்முகத்தேர்வு நடந்தது. அவன் படித்த எலெக்ட்ரிகல் டிப்ளமோவிற்கு வெளி நாட்டில் அதுவும் அரசாங்க கம்பனியில் வேலைக் கிடைக்குமென்று அவன் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஒரே வாரத்தில் பணிக்கான ஆர்டரும் வந்துவிட்டது.

ஐந்து வருட கான்டிராக்ட். ‘விசா’ கிடைக்குமோ கிடைக்காதோ என்று எண்ணியிருந்தான்.

அரசாங்க கம்பெனி என்பதால் விசா கிடைப்பதில் எந்தச் சிரமமும் இல்லை என எத்தனை முறை ஏஜென்ட் உறுதியளித்தபோதும் இவன் சமாதானமாகவில்லை, ” சார் எம்பசில ஏதாவது காசு எதிர்பார்ப்பாங்களா? ” என்று கேட்டான்

“அதுமாதிரி, வேறு எந்தத் தவறான முயற்சியும் வேண்டாம், அப்புறம் அப்ளிகேஷனை நிராகரிச்சுடுவாங்க” என் ஏஜென்ட் எச்சரித்திருந்தான்.

சற்று முன் அந்த ஏஜென்ட் போன் மூலம் விசா கிடைத்துவிட்டதென்றும், டிக்கெட்டுக்கான பணத்தை ஏற்பாடு செய்யுமாறும், நேரில் வந்து பாஸ்போர்ட்டை பெற்றுக்கொள்ளுமாறும் கூறினார்.

அடுத்து எப்படியாவது தன் மனைவி ஜாயலை சம்மதிக்க வைக்க வேண்டும். ஆயிரம் கேள்விகள் கேட்பாள். ஏதாவது சொல்லி சமாளிக்கவேண்டும்.

இன்னமும் ஒரு வாரத்தில் தான் பயணப்படவேண்டும் என்ற இன்னொரு அதிர்ச்சி வேறு.

எப்படியும் அவனுக்கு விசா கிடைக்கப்போவதில்லை என்று, ஒப்புக்குத் தலையாட்டியிருந்தாள். நிஜமாகவே அவன் வெளி நாடு செல்வதென்பதை அவள் எப்படி எடுத்துக்கொள்வாள் என்று தெரியவில்லை. ஒரு பெண் தனியாகக் குடும்பத்தை பராமரிப்பதென்பது சற்று சிரமமான காரியம் தான்.

சொந்த நாட்டைக் குறை சொல்வது தவறுதான், இருப்பினும் சிலவற்றை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

எவ்வளவு நாள் தான் கடன் வாங்கியே காலந்தள்ளுவது. கடன் வாங்கி வீட்டை நடத்துவதே சிரமம், ஒரு நாட்டையே நடத்துவதென்றால்?.

ரூபாய் டாலருக்கெதிரான ஏற்ற இரக்கங்கள், பொருளாதார மந்த நிலை, பங்குச் சந்தைகளின் வீழ்ச்சி போன்ற சில காரணங்களால் அவன் வெளி நாடுகளில் வேலை தேடுவதில் மும்முரமாக இருந்தான்.

ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்தில் பிறந்து எலக்ட்ரிஷியன் தொழில் படித்தவனுக்கு வெளி நாட்டில் வேலை என்பது குதிரை கொம்பு. இப்படி ஒவ்வொரு நாளும் பொருமிக்கொண்டிருந்த போது தான், எதிர்பாராதவிதமாக அவனுக்கு அந்த யோகம் அடித்தது.

எப்படியாவது ஒரு ஐந்தாண்டுகள் மூச்சைப் பிடித்துக்கொண்டு கடினமாக உழைத்தால் போதும். பின்பு இங்கு வந்து செட்டிலாகி விடலாம். பிரிவென்பது கடினம் தான், ஆனால் இது தற்காலிக பிரிவு தானே!.கண்ணை மூடித் திறப்பதற்குள் ஐந்து வருடங்கள் ஓடிவிடும்.

ஒவ்வொரு வருடமும் தாய் நாட்டிற்குச் சென்று வரச் சம்பளத்துடன் கூடிய ஒரு மாத விடுமுறை, இன்ன பிற சலுகைகள். எப்படி அவளிடம் ஆரம்பிப்பது என்று தெரியாமல் அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தான்.

அவளே ஆரம்பித்தாள்…

“என்னங்க ஒரே நெர்வஸா இருக்கீங்க, விசா வருமோ? வராதோன்னா?”

“இல்ல விசா வந்திருச்சு, உன்கிட்ட எப்படி சொல்றதுன்னுதான்”

“அப்ப வெளி நாடு போறதுன்னு முடிவே பண்ணிட்டீங்களா?”

“அது உன் சம்மதத்தை பொறுத்துத் தான்” என்று இழுத்தான்.

“என் மனசுக்குப் பட்டதை சொல்லவா?”

“ம், சொல்லு”

” எனக்கு தெரிஞ்சு நீஙக ஃபாரின்லாம் போய் சம்பாதிக்க வேண்டிய அவசியமே இல்ல, இங்கேயே இருக்கிற வேலையை பார்த்தா போதும்.”

” அதுக்கில்லை ஜஸ்ட் ஒரு அஞ்சே வருஷம், ”

“அடிக்கடி இங்க வருவீங்களா?”

“ஒவ்வொரு வருஷமும் ஒரு மாச லீவ்”

“ஒருவேளை அங்கே போன பின்னால மனசு மாறி அங்கேயே செட்டில் ஆயிட்டிங்கன்னா?”

“சேச்சே வர்க் பர்மிட் கிடைக்கிறதே பெரும்பாடாயிருச்சு, இதுல நேஷ்னாலிட்டி வேறயா?, நானே ஆசைப்பட்டாலும் அது நடக்காது.!”

“ஆமாம் விசா கிடைக்கிறது இவ்வளவு சிரமம்னா உங்களுக்கெப்படி கிடைச்சது ?”

“கடந்த சில வருடங்களில் அவங்க நாட்டில ஏற்பட்ட பொருளாதார முன்னேற்றத்தில், தொழில் படிப்பு படிக்கிறவங்க ரொம்ப குறைஞ்சு போய்ட்டாங்களாம், அதனால ஸ்கில்டு லேபர்சை வெளி நாடுகள்லேர்ந்து தேர்வு செய்றாங்களாம் அதான் ஐய்யாக்கு யோகம்.”

“கரெக்ட்தான் பீட்டர், ஒண்ணை இழந்தா தான் இன்னொண்ணை பெறமுடியும்னு சொல்லுவாங்க, ஆல் த பெஸ்ட், நீங்க இந்தியாலேர்ந்து திரும்ப வர நாளை நான் ஆவலோட எதிர்ப்பார்த்திட்டிருப்பேன்” என்றாள் ஜாயல்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *