சந்தர்ப்பம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 24, 2021
பார்வையிட்டோர்: 2,326 
 

பார்த்தீபன் அமைதியாக சோபாவில் சாய்ந்து இருந்தான்.அவனது தாய் அகிலா இன்னும் தூங்கவில்லையா?என்ற கேள்வியுடன் அவன் அருகில் வந்து உட்கார்ந்தாள்.இல்லை அம்மா,போய் படுத்தால் தூக்கம் வரமாட்டேங்குது,சங்கவி நினைவாகவே இருக்கு என்றதும் அகிலாவிற்கு பொங்கியது கோபம்,அடக்கி கொண்டாள்.அடிப்பட்டு இருக்கும் அவனை மேலும் வார்த்தைகளால் காயப்படுத்த அவள் விரும்பவில்லை,அவன் தலையை அவளின் தோளில் சாய்த்துக்கொண்டாள் அகிலா இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் அவளை நினைத்துக் கொண்டிருப்ப,முடிந்தது முடிந்துவிட்டது.

உன்னை வேண்டாம் என்று தூக்கிப் போட்டவளை இன்னும் ஏன் நினைத்துக் கொண்டிருக்க என்று ஆறுதலாக சொன்னாள் அகிலா பார்த்திபனிடம்.நான் என்ன தப்பு பன்னினேன் அம்மா என்று அகிலாவின் மடியில் படுத்துக்கொண்டான் அவன்.தலையை தடவிவிட்டாள் அகிலா,கவலைப் படாதே அவளுக்கு உன்னுடன் வாழ கொடுத்து வைக்கவில்லை,என்றாவது ஒரு நாள் தெரியும் உன் அருமை,நீ ஒரு தப்பும் பன்னவில்லை,இப்போது போய் உள்ளே தூங்கு என்று அவனை அனுப்பி வைத்தாள் அகிலா.தற்போது அவளுக்கு தூக்கம் வரவில்லை.சங்கவியின் நினைவு வந்தது அகிலாவிற்கு.

சங்கவியும்,அவளுடன் காலேஜ் படிக்கும் ஒரு சில மாணவர்களும் பார்த்திபன் ஊருக்கு வந்திருந்தார்கள்.கால்நடை ஆராய்ச்சி பிரிவில் படிக்கும் அவர்கள்,அதைப் பற்றி மேலும் விபரங்கள் தெரிந்துக் கொள்வதற்காக அந்த ஊரை தெரிவு செய்து இருந்தார்கள்,வந்தப் பிறகு பார்த்திபன் வீட்டில் தங்குவதற்கான ஏற்பாடுகளை அந்த ஊர் பஞ்சாயத்து தலைவர் செய்து கொடுத்தார்.வசதியான குடும்பம் அவனுடையது,

அப்போது தான் முதல் முதலாக சங்கவியைப் பார்த்தான் பார்த்திபன்.

பொட்டு வைத்து,நெற்றியில் திருநீறு பூசியிருந்தாள்,அவளின் பொது நிறத்திற்கு அது எடுப்பாகவே தெரிந்தது.மற்றப் பெண்கள் எல்லோரும் பேன்ட்,சட்டையில் இருந்தார்கள்.அவள் மட்டும் சல்வார் போட்டு துப்பட்டாவை அழகாகப் போட்டிருந்தாள்.எந்த விதமான மேக்கப்பும் இல்லை,தலைக்கு எண்ணெய் வைத்து வாரி இருந்தாள்.சிரித்த முகம்,கவர்ச்சியான கண்கள்,பார்ப்பவர்கள் உடனே கவரக்கூடிய தோற்றம் அவளுடையது.சங்கவி மற்றைய பெண்களைப் போல் தயக்கம் காட்டவில்லை பார்த்திபன் வீட்டில்.

அதுவே பார்த்திபனுக்கு அவளை பிடித்தது,அகிலாவுடன் நன்றாகப் பேசினாள்,உரிமையுடன் அவர்கள் வீட்டில் இருந்தாள்.அவ்வப் போது ஏதாவது உதவி செய்து தருவதாக அவர்கள் சமையல் அறையிலும் புகுந்து கொண்டாள் அவள்,உனக்கு படிக்க இருக்கும்,எனக்கு உதவிக்கு தனம் இருக்கா என்று அகிலா தடுத்தாலும்,அவள் இல்லை ஆன்டி பரவாயில்லை,நாங்கள் இத்தனைப் பேர் வந்திருக்கோம் நீங்கள் இரண்டு பேர் மட்டும் எவ்வளவு தான் செய்வீங்கள்,நானும் கொஞ்சம் செய்து தருகிறேன் என்று அவளும் இவர்களுடன் சேர்ந்துக் கொள்வாள்,மூவரும் சிரிப்பு சத்தத்துடன் வேலை செய்வார்கள்.

இதையெல்லாம் கவனித்த பார்த்திபனுக்கு தன்னையறியாமல் சங்கவியின் மீது ஓர் ஈர்ப்பு,மற்றைய பெண்களை விட அவனுக்கு சங்கவியை நன்றாகவே பிடித்திருந்தது,

அகிலாவிற்கும் அவளை பிடித்திருந்தது,நான்கு நாட்கள் தங்கியிருந்தார்கள் அவர்கள்,அந்த நான்கு நாட்களும் அகிலாவிற்கும்,தனத்திற்கும் பொழுது போனதே தெரியவில்லை,சங்கவியின் கலகலப்பான பேச்சி,சிரிப்பில் அவர்கள் மயங்கி தான் போனார்கள்.

சங்கவியிடம் அகிலா அவள் குடும்பத்தைப் பற்றி விசாரித்தாள். அப்பா நகை கடை வைத்திருக்கார்,அண்ணாவும் படித்து முடித்துவிட்டு அப்பாவுடன் கடையில் இருக்கான்,அம்மா வீட்டில் தான் ஆன்டி இருக்காங்கள் என்று அவள் சாதாரணமாக சொன்னாள்.அகிலாவிற்கு ஆச்சிரியமாக இருந்தது,இவ்வளவு வசதிகள் இருந்தும் எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் இருக்கும் சங்கவியை பார்த்து இந்த காலத்தில் இப்படியும் ஒரு பெண்ணா என்று மனதில் நினைக்கத் தோன்றியது,சங்கவியை பார்த்ததில் இருந்து பார்த்திபனுக்கு இப்படி ஒரு பெண் அமைந்தால் நன்றாக இருக்கும் என்று அவள் மனதில் பட்டது,தற்போது இவள் குடும்பம் நம் குடும்பத்திற்கு ஒத்துவருமா?என்ற கேள்வியும் மனதில் தோன்றியது.

அகிலா சங்கவியிடம் சொன்னாள் பார்த்திபனும் நன்றாக படித்திருக்கான்,முழுவதும் விவசாயத்தைப் பற்றிதான் அவனுக்கு தெரியும் என்றாள் அகிலா,ஆமா ஆன்டி ஊரில் சொன்னார்கள்,பார்த்திபன் கூறும் முறையில் விவசாயம் செய்து விளைச்சல் அதிகம் என்று,உங்கள் மகனுக்கு நல்ல பெயர் இருக்கு ஆன்டி..ஊரில் என்றாள் சங்கவி.அதை கேட்க்கும் போது அகிலாவிற்கு சந்தோஷமாக இருந்தது.இதை கேட்க்க அவன் அப்பா இல்லையே என்ற வருத்தமும் தோன்றியது.உனக்கு பார்த்திபனை பிடித்திருக்கா என்றாள் அகிலா,இது என்ன கேள்வி ஆன்டி,எங்கள் எல்லோருக்கும் உங்கள் இருவரையும் பிடித்திருக்கு என்றாள் அவள்.

கட்டாயம் நம் வீட்டுக்கு ஒரு தடவை வரவேண்டும் ஆன்டி,என்று வீட்டு போன் நம்பரையும்,வீட்டு விலாசத்தையும் கொடுத்தாள் சங்கவி.கட்டாயம் வருகிறோம்,எங்களை மறந்து விடாதே உனக்கு நேரம் கிடைக்கும் போது நீயும் இங்கு வந்து போ என்று அகிலா கூறினாள்.ஆன்டி அவள் அப்பா சங்கவியை எங்கும் விடமாட்டார்,இங்கும் முடியாது என்று தான் சொன்னார்,காலேஜ்,படிப்பு என்பதால் விட்டார்,என்று இன்னொருத்தி கூற,சங்கவி அமைதியாக நின்றாள்.

கலகலப்பாக சங்கவி இருந்துவிட்டுப் போனப் பிறகு,வீடே அமைதியான மாதிரி உணர்ந்தாள் அகிலா.அதையே வாய் விட்டு கூறினாள் தனம்,அந்த புள்ள நல்ல புள்ள அம்மா,வீட்டில் இருக்கும் மட்டும் பொழுது போனதே தெரியவில்லை என்றாள்.பார்த்திபனும் அவளை நினைக்க தவரவில்லை.அகிலா ஒரு நாள் சங்கவியின் வீட்டுக்குப் போன் பன்னினாள்.அவளின் அம்மா சுகுனா எடுத்தாள்,தன்னை அறிமுகம் படுத்திக் கொண்டாள் அகிலா, நானே உங்களுக்கு போன் பன்னி நன்றி சொல்லனும் என்று நினைத்தேன்,சங்கவியை நன்றாகப் பார்த்துக் கொண்டதாக அவள் வந்து சொன்னாள்.அவளும் உங்கள் வீட்டு போன் நம்பரை எனக்கு கொடுக்கவில்லை என்றாள் சுகுனா,அதற்கு என்ன பரவாயில்லை என்றாள் அகிலா.

உங்கள் பொண்ணு தங்கமான பொண்ணு,கட்டிக்கப் போகிறவன் கொடுத்து வைத்தவன்,கதையோடு கதையாக சங்கவிக்கு மாப்பிள்ளை ஏதும் அமைந்து இருக்கா? என்றாள் அகிலா,இல்லை இனி தான் பார்க்க ஆரம்பிக்கனும் படிப்பை முடித்துவிட்டாள், வேலைக்குப் போகவேண்டும் என்று ஆசைப் படுகிறாள்,ஆனால் அவளின் அப்பாவிற்கு அதில் விருப்பம் இல்லை,எந்த கெட்டப் பெயரும் வந்திடாமல் நம் ஜாதிப் பையனை பார்த்து கட்டி வைக்கனும் என்று நினைக்கிறார் என்றாள் சுகுனா.

உங்களுக்கு விருப்பம் என்றாள் என் மகன் பார்த்திபன் இருக்கான்,சங்கவியை எங்களுக்கு பிடித்திருக்கு நீங்கள் யோசித்துப் பாருங்கள் என்றாள் அகிலா,எனக்கும் உங்களை பிடித்திருக்கு,சங்கவியை நன்றாகப் பார்த்துக்குவீங்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கு,முதல் ஜாதகப் பொருத்தத்தைப் பார்ப்போம்,இருவருக்கும் பொருத்தம் என்றால்,கட்டாயமாக இதைப் பற்றி அவரிடம் பேசிவிட்டு உங்களுக்கு முடிவை கூறுகிறேன் என்று போனை வைத்துவிட்டாள் சுகுனா.

இரண்டு நாட்களுக்குப் பிறகு சுகுனா போன் பன்னி இருவருக்கும் ஜாதக பொருத்தம் நன்றாகவே இருக்கு,சங்கவி அப்பாவிற்கும் பார்த்திபனை பிடித்திருக்கு,உங்கள் கணவர் பெயர் இராமலிங்கம் தானே? ஊரில் விசாரித்தப் போது,மரியாதையுடன் வாழ்ந்துவிட்டுப் போனவர்,என்று சொன்னார்களாம்,அப்படியா! என்றாள் அகிலா,நாங்கள் எப்போது பெண் பார்க்க உங்கள் வீட்டுக்கு வருவதற்கு ஏற்பாடு செய்வது என்றாள் அகிலா,நல்ல காரியத்தை தள்ளிப் போடக்கூடாது அடுத்த வாரம் என்றாலும் பரவாயில்லை என்றாள் சுகுனா.இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு போனை வைத்து விட்டார்கள்.

பார்த்திபனின் மாமா,அத்தை,சித்தி ஊர் பெரியவர்கள் இரண்டு பேர்,அகிலா,பார்த்திபன் என்று சரியாக ஏழுப் பேர் போய் சங்கவியின் வீட்டில் இறங்கினார்கள்.அனைவரையும் அன்புடன் வரவேற்றார்கள் சங்கவியின் குடும்பம்.அப்பா நடேசன்,அண்ணா சுரேஷ்,சுகுனா,சங்கவி பாட்டி நாகவள்ளி அனைவருக்கும் பார்த்திபனை நன்றாகப் பிடித்தது,சங்கவி சேலை கட்டி,தலை நிறையப் பூ வைத்து காப்பியுடன் வந்து நின்றாள்.அனைவருக்கும் வணக்கம் சொன்னவளின் முகத்தில் சிரிப்பு இல்லை,அவளிடம் சில மாற்றங்கள் தெரிந்தது.பாட்டி நாகவள்ளி சங்கவியிடம் மாப்பிள்ளை பிடித்து இருக்கா? என்றாள்,அது எல்லாம் பிடித்திருக்கும் அம்மா..என்றார் நடேசன்.நாங்கள் எப்படியும் ஒரு பையனை பார்த்து தான் கட்டி வைக்கப் போகிறோம்.அது தம்பி பார்த்திபனாக இருந்துவிட்டு போகட்டும்.. ஏற்கெனவே அவளுக்கு அறிமுகம்மானவர் என்று சங்கவியைப் பார்த்து சிரித்தார்,அவள் ஒரு புன்னகையோடு தலையை குனிந்துக்கொண்டாள்.

அவளின் தலையில் பூ வைத்துவிட்டாள் பார்த்திபனின் அத்தை, முறைப்படி பெண் கேட்டு தட்டை மாற்றிக் கொண்டார்கள் இரு வீட்டார்களும்.நல்ல நாள் பார்த்து திருமண திகதியை குறித்துக் கொடுத்தார் ஐயர்.அதன் பிறகு திருமண ஏற்பாடுகள் ஒவ்வொன்றும் பார்த்து பார்த்துப் செய்யப்பட்டது,நிச்சியம் பன்னியப் பிறகு திருமண அழைப்பிதழ் அச்சிடப்பட்டு வந்தது,அதைப் பார்த்தப் போது பார்த்திபனுக்கு ஆயிரம் கனவுகள்,மனைவியாகப் போகும் சங்கவியை எப்படியெல்லாம் பார்த்துக் கொள்ளவேண்டும்,அவளுக்குப் பிடித்த மாதிரி தன்னை மாற்றிக்கவேண்டும் இப்படி பல கனவுகள்,கற்பனைகள்,ஆசைகள் திருமண நாளுக்காகப் காத்துக் கொண்டிருந்தான் அவன்.

முகூர்த்தகல் நாட்டியப் பிறகு,மங்கலப் பொருட்கள் வாங்கவும்,தாலி செய்ய பொன்னுருக்க,நலங்கு செய்ய என்று நாட்கள் ஓடிக்கொண்டிருந்தது.பரிசம் போட்டு பெண்ணை அழைத்துப் போக பார்த்திபன் வீட்டிலிருந்து மாமா,அத்தை,சித்தி என்று சிலர் வந்திருந்தார்கள்.சங்கவிக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்து முடித்தார்கள்,அவள் அப்பா,அம்மா,அண்ணா,பாட்டி கால்களில் வீழ்ந்து வணங்கினாள்.சுகுனாவும்,பாட்டியும் கட்டி அணைத்துக் கொண்டார்கள்,அவர்கள் கண்ணில் கண்ணீர் சங்கவியும் கலங்கிப் போனாள்,அப்பா நடேசன் கண்களிலும் ஒரு துளி கண்ணீர் எட்டிப் பார்க்கவே செய்தது,அண்ணன் சுரேஷ் மட்டும் வந்த கண்ணீரை கட்டுப் படுத்திக் கொண்டான்.சரி அம்மா நல்ல நேரம் போகுது வண்டியில் ஏறிக்க என்று யாரோ குரல் கொடுக்க,சங்கவி ஒரு முறை அனைவரையும் திரும்பி பார்த்து விட்டு,வண்டியில் ஏறிக் கொண்டாள்.பார்த்திபன் சங்கவி குடும்பம் தங்குவதற்காக ஒரு வீட்டை ஏற்பாடு செய்து இருந்தான் அவன் ஊரில்,அவளை அங்கு அழைத்துச் சென்றார்கள்.

அவர்கள் பின்னாடியே அவளின் சொந்தங்களும் வந்து சேர்ந்தார்கள்.சங்கவி பயண களைப்பு என்று சற்று நேரம் படுத்து விட்டாள்.அவளின் கண்களின் கண்ணீர் தலையணையை நனைத்தது,யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டாள் சங்கவி.அடுத்த நாள் காலையில் எல்லாம் பரபரப்பாக நடைப் பெற்றது,மணமேடையில் உட்கார்ந்திருந்த சங்கவியின் முகத்தில் சிறிதளவும் சிரிப்பு இல்லை,பொண்ணுக்கு வெட்க்கத்தில் சிரிப்பே வரமாட்டேங்குது என்றாள் நாகவள்ளி.

சங்கவியின் கழுத்தில் பார்த்திபன் மாங்கல்யத்தை கட்டி,நெற்றியில் குங்குமத்தை இட்டு,அம்மி மிதித்து,அருந்ததி பார்த்து,பால் பழம் ஊட்டி மனைவி ஆக்கிகொண்டான்.வந்தவர்கள் அனைவரும் வயிறார சாப்பிட்டு,மணமக்களை மனதார வாழ்த்தி விட்டு,பரிசளித்து விட்டும் போனார்கள்.மண்டபத்திலிருந்து சங்கவியுடன் பார்த்திபன் வீட்டுக்கு வரும் போது ஊரே திரண்டு இருந்தது.வலது காலை எடுத்து வைத்து உள்ளே வந்த சங்கவி பூஜை அறையில் விளக்கேற்றினாள்.

இருவருக்கும் பால்,பழம் கொடுத்தார்கள்.அகிலா சங்கவியின் அருகில் வந்து,முகத்தில் சிரிப்பே இல்லை சங்கவி பயமாக உள்ளதா என்றாள் மெதுவாக,இல்லை என்று தலையை ஆட்டினாள் சங்கவி்.அன்றே சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் குறித்து கொடுத்திருந்தார் ஐயர்.அது மட்டும் பார்த்திபன் வீட்டில் இருவரும் இருந்தார்கள்,ஒரு சில சுமங்கலி பெண்கள் மட்டும் ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கெஸ்ட் ஹவுஸ் இல் கொண்டுப்போய் விட்டார்கள் இருவரையும்,அறை அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்தது.

பார்த்திபன் அறையை பூட்டி விட்டு,கட்டிலில் உட்கார்ந்தான்,ஏன் சங்கவி ஒரு மாதிரியிருக்க என்னிடம் ஏதும் பயமா என்றான் அவன்,இல்லை உங்களிடம் நான் கதைக்க வேண்டும் என்றாள் அவள்,அவன் ஆச்சிரியமாக பார்த்தான் அவளை,என்னை ஏன் திருமணத்திற்கு முன்பு பிடித்திருக்கா? என்று நீங்கள் கேட்க்கவில்லை என்றாள்,அவனுக்கு தூக்கிவாரிப் போட்டது.என்ன பேச்சு இது,என்னை பிடித்திருக்கவும் தானே நீ தலையை ஆட்டின என்றான்.நான் வாய் திறந்து சொல்லவில்லையே,உங்களை பிடித்திருக்கு,என்றதும் அவன் ஆடிப் போனான்

பிறகு ஏன் என்னை பிடிக்காமல் கட்டின என்றான் பார்த்திபன் சந்தர்ப்பசூழ்நிலை,யாராவது வாய் விட்டு சொல்ல விட்டீங்களா? என்னை,நான் ஏற்கெனவே ஒருத்தனை காதலிக்கிறேன் அவன் பெயர் குரு,இதை நம் வீட்டில் கூறியிருந்தாலும் யாரும் சம்மதிக்க மாட்டார்கள்.அவர்களை பொறுத்த மட்டில் என் சந்தோஷம் முக்கியம் இல்லை,ஜாதி,அந்தஷ்து,பணம்,படிப்பு பதவி,அழகு,கம்பீரம் இப்படி தான் தேடியிருப்பார்கள் என்றாள் சங்கவி,இதை கேட்டதும் பார்த்திபனுக்கு தலையே சுற்றியது.

உனக்கு அறிவு இருக்கா படித்திருக்க தானே தாலி கட்டியப் பிறகு இதை இப்போது என்னிடம் சொன்னால்,நான் என்ன செய்ய வேண்டும் என்று நீ எதிர்பார்க்கிறாய் என்றான் பார்த்திபன்,ஒருத்தனை மனதில் நினைத்துக் கொண்டு உங்களுடன் எனக்கு வாழமுடியாது என்றாள் சங்கவி,திருமணத்திற்கு பிறகு நீ இப்படி கூறுவதே தவறு சங்கவி சரி அதையெல்லாம் இனி விட்டு தள்ளு,நான் தான் இனி உன் கணவன் என்றாகிவிட்டது இதை இனி யாராலும் மாற்ற முடியாது,காலம் எல்லாவற்றையும் மாற்றும் அது மட்டும் எனக்கு பொறுமையாக காத்திருக்க முடியும் உனக்காக என்றான் பார்த்திபன்.

என்னை மன்னித்து விடுங்கள்,எனக்கும் குருவிற்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் போதே பழக்கம் ஏற்பட்டது,அவனை பிரிந்து எனக்கு உங்களுடன் இனி வாழமுடியாது,என்னை காதலித்த பாவத்திற்காக ஒரு விபத்தில் அவனுடைய ஒரு காலையும் இழந்திருக்கான் அவன் என்றதும்,பார்த்திபன் நடுங்கி போய்விட்டான் தன்னையும் அறியாமல்,நானும் அவனும் ஒரே பாடசாலையில் தான் படித்தோம்,அவன் சைக்கிளில் தான் பாடசாலைக்கு வருவான்,நான் காத்திருந்து இருவரும் சேர்ந்து தான் பாடசாலைக்குப் போவோம்,ஒரு நாள் என்னை கண்ட அவசரத்தில் அந்தப் பக்கம் இருந்து இந்தப் பக்கம் வேகமாக சைக்கிளை திருப்பி கொண்டு வரும் போது எதிரே வந்த லாறியில் அடிப்பட்டு தூக்கி வீசுப்பட்டதை என் கண்களால் கண்டேன் ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டேன்.

உடனே பக்கத்தில் இருந்தவர்களின் உதவியுடன் ஆஸ்பிடல் கொண்டு போய் சேர்த்தோம் என்னுடன் இன்னும் இரண்டு மூன்று மாணவர்களும் சேர்ந்துகொண்டார்கள்,அவர்கள் வீட்டுக்கு தகவல் அனுப்பி,அவர்கள் தலைவிரி கோலமாக கத்திக் கொண்டு வந்து நின்ற அந்த காட்ச்சி இன்னும் என் கண்முன்னே நிற்குது,இன்னும் அதை நினைத்தால் பதறிப் போவேன்,அதைவிட அவனுடைய ஒரு காலை துண்டித்துவிட்டார்கள்,மருத்துவர் சொன்ன அடுத்த அதிர்ச்சியான விடயம் அவனுடைய இடுப்பு பகுதியின் கீழ் அவ்வளவாக எந்த உணர்ச்சிகளும் இனி இருக்காது என்று,ஒவ்வொரு நாளும் மாணவர்கள் அவனைப் பார்த்து விட்டு வந்து சொல்லும் தகவல்கள் என் காதுகளில் விழும் போது நான் புழுவாக துடித்துப் போனேன்.வெளியில் யாருக்கும் தெரியாது எங்களின் காதல்,அவன் என்னுடைய வகுப்பு மாணவன் என்பதால்,அவனுடைய வீட்டுக்கு மற்றைய மாணவர்களுடன் சேர்ந்துப் போய் பார்த்துவிட்டு வருவோம் அதனால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை.

அதன் பிறகு நான் அவன் வீட்டுக்கு அடிக்கடி போவேன் பாடசாலையில் நன்றாகப் படித்து ஓடி ஆடி திரிந்த குருவை,தற்போது கையில் ஊன்று கோலுடன் பார்க்கும் போது கத்தி அழவேண்டும் என்று தோன்றும் மனதை கட்டுப் படுத்திக்கொண்டு அவனுக்கு ஆறுதல் வார்த்தைகளை மட்டுமே பேசிவிட்டு வந்துவிடுவேன்.தொடர்நது படிக்க முடியாது என்றான்,அவனை சமாதானம் படுத்தி மறுப்படியும் படிக்க வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது,தற்போது படித்து முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறான் குரு,அவன் மறுப்படியும் வாழ்ந்துக் கொண்டு இருப்பதுவே,நான் அவனுடன் தொடர்ந்து இருப்பேன் என்று நான் கொடுத்த நம்பிக்கைகளும்,வாக்குறிதிகளும் தான் என்றாள் சங்கவி.

பிறகு ஏன் எனக்கு கழுத்தை நீட்டி என்னை ஏமாற்றினாய்,என்றான் பார்த்திபன்.ஊரில் உங்களை நல்லவர் என்றார்கள்,உங்களிடம் என் நிலமையை புரியவைத்து அவனுடன் போய்விடலாம் என்று நினைத்தேன் என்றாள் சங்கவி,உனக்கு திருமணம் என்றால் என்னவென்று தெரியுமா? நீ தமிழ் பெண் தானே? ஒருத்தனுக்கு ஒருத்தி என்பது நம் பண்பாடு அதை தூக்கி எறிந்து விட்டு போய்விட முடியுமா? என்றான் பார்த்திபன்.வாழ்நாள் முழுவதும் வேரு ஒருவனை மனதில் நினைத்துக் கொண்டு உங்களை ஏமாற்றி வாழ்வதை விட அவனுடன் போய் விடுவது நல்லது தானே என்றாள் அவள்.உன் மாதிரி ஒவ்வொரு பெண்ணும் நினைத்தாள் கலாச்சார சீர்கேடு என்றான்.யார் தான் இந்த காலத்தில் காதலிக்கவில்லை,எல்லோரும் திருமணம் முடித்தப் பிறகு வாழ்க்கையையும்,மனதையும் மாற்றிக் கொள்ளவில்லையா? காலங்கள் எல்லாவற்றையும் மாற்றும் என்றான்.

உண்மை தான் மற்றவர்களை,என்னை இல்லை என்றாள் சங்கவி, குரு மாதிரி ஒருத்தனுக்கு இனி பெண்கள் கிடைப்பது கஷ்ட்டம் நான் வாழ்நாள் முழுதும் அவனுடன் வாழ்வதற்கு ஆசைப்படுகிறேன்,அவனால் இனி ஒரு வாரிசைக் கூட இந்த உலகத்திற்கு கொடுக்க முடியாது அப்படி ஒருத்தனை எந்தப் பெண்களும் ஏர்எடுத்து பார்க்க மாட்டார்கள் என்றதும்,பார்த்திபன் அவளை ஆச்சிரியமாகப் பார்த்தான்.இதையெல்லாம் நீ உன் வீட்டில் இருந்தப்படி போராடி இருக்கவேண்டும் என்றான் பார்த்திபன்,அப்படி முடிந்திருந்தால் நான் ஏன் உங்களை கட்டி ஏமாத்துறேன் என்றாள் அவள்,ஏன் என்னைப் பார்த்தால் உனக்கு இளிச்சவாயன் போல் தெரிந்ததா? என்றான் பார்த்திபன்,அதற்கு மேல் சங்கவி அவன் காலில் விழுந்துவிட்டாள்,என்னை மன்னித்துவிடுங்கள் என்னை குருவுடன் சேர்த்து வைத்து விடுங்கள்,என்று கெஞ்சினாள் அவள்.

அவன் தடுமாறிப் போனான்.உன்னை எப்படி இனி குரு ஏற்றுக்கொள்வான்?தற்போது நீ என் மனைவி,அவன் அவ்வளவு முட்டாளா?என்றான்,இல்லை நாங்கள் இருவரும் போட்ட திட்டம் தான் இது,எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்றதும், என்னை பைத்தியக் காரனாக்கி அலையவிடனும் என்று முன்பே முடிவு பன்னிவிட்டீங்கள்,அப்படி தானே என்றான் பார்த்திபன்.பரிதாபமாக இல்லை,என்னை மன்னித்து விடுங்கள் என்று அழுதாள் சங்கவி்.

என்ன செய்வது என்று அவனுக்கு ஒன்றும் புரியவில்லை,அப்படியே கட்டிலில் சாய்ந்துவிட்டான் பார்த்திபன்,கண்களில் கண்ணீர், துடைத்துக் கொண்டான் பார்த்திபன்,சரி நீ புறப்படு என்றான்,குருவிற்கு போன் பன்னி பேசினான்,அவனும் அவனுடைய நண்பர்களும் வண்டியுடன் விடியற்காலை வந்து நின்றார்கள்.குரு வண்டியை விட்டு இறங்கினான்,கையில் கைத்தடியுடன்,ஒல்லியான நடுத்தர உயரம்,அவனைப் பார்த்த பார்த்திபனுக்கு தூக்கிவாரிப் போட்டது,நிச்சியமாக எந்தப் பெண்ணும் இவனுக்கு வாழ்வு கொடுக்கமாட்டார்கள்,எதைப் பார்த்து இவனை சங்கவி காதலித்தாள்,இது தான் காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்களோ!என்று மனதில் நினைத்தைக் கொண்டான்.

குரு பார்த்திபனிடம் எங்களை மன்னித்து விடுங்கள் அண்ணா, நான் ஆரம்பத்தில் சங்கவியை காதலிக்கவில்லை,அவள் தான் என்னை கட்டாயப்படுத்தி காதலிக்க வைத்தாள்.அதன் பிறகு ஒரு விபத்தில் என்னுடைய காலை இழந்துவிட்டேன்,அவளுக்கு குற்ற உணர்வு,அவள் மீது எந்த தவறும் இல்லை,அது என்னுடைய கெட்ட நேரம்,சங்கவி இல்லையென்றால் நான் இந்தளவிற்கு முன்னேறி இருக்க மாட்டேன் மறுப்படியும்,நான் எவ்வளவோ எடுத்துச் சொன்னேன்,அவள் கேட்க்க மறுத்தாள்,நீ இல்லை என்றால் நான் உயிருடன் இருக்க மாட்டேன் என்று சங்கவி அடம் பிடித்ததால் தான் நான் இந்த திட்டத்திற்கும் ஒத்துக் கொண்டேன் அண்ணா.

உங்களை ஏமாற்றுவது எங்கள் நோக்கம் இல்லை,அவளின் அப்பாவை எதிர்த்துப் போராட அவளுக்கு மனம் இல்லை,அவள் வீட்டில் இருந்து ஓடி வந்துவிட்டாள்,கௌரவம் போய்விட்டது என்று என் அப்பா தூக்கில் தொங்கிவிடுவார் என்றாள் சங்கவி,நான் எடுத்து சொன்னேன் சங்கவியிடம்,நாளை பார்த்திபனை கட்டியப் பிறகு,நீ என்னுடன் வந்துவிட்டாலும் அது இரண்டு குடும்பத்திற்கும் அவமானம்,தற்போது உன் குடும்பம் மட்டுமே பாதிக்கும்,நாளை எதுவும் அறியாத உங்கள் குடும்பமும் சேர்ந்து பாதிக்கும் இந்த திட்டம் வேண்டாம் என்று சொன்னேன் அண்ணா,சங்கவி தான் கேட்க்கவில்லை,பார்த்திபன் புரிந்து கொள்வார் என்று என்னை வற்புருத்தி சம்மதிக்க வைத்தாள் அண்ணா எங்களை மன்னித்து விடுங்கள் என்றான் குரு.

இப்போது மட்டும் சங்கவியின் அப்பாவிற்கு அவமானம் இல்லையா என்றான் பார்த்திபன்,அவரை பொறுத்தவரை மகள் கட்டி சென்றுவிட்டாள் என்று கௌரவமாக கூறிக்கொள்வார்,அதனால் தான் நான் உங்களுடைய ஊரில் திருமணமத்தை வைக்கும் மாதிரி அப்பாவிடம் அடம் பிடித்தேன் என்றாள் சங்கவி,தற்போது தான் பார்த்திபனுக்கு புரிந்தது,அவர்கள் பக்கம் இருந்து முக்கியமான சொந்தங்களை தவிர வேறு யாரும் திருமணத்திற்கு வரவில்லை எனக்கு எந்த கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை,அப்படி தானே என்றான் பார்த்திபன் சங்கவியிடம்.

உங்களுக்கு நல்ல குணம் இருக்கு,அழகு இருக்கு ஆயிரம் பெண்கள் உங்களை கட்டிக்க வருவார்கள் குருவை கட்டிக்க யாரும் வரமாட்டார்கள் என்றாள் சங்கவி,குரு பார்த்திபனிடம் சொன்னான் உங்களுடன் சங்கவி சந்தோஷமாம குடும்பம் நடத்துவாள் என்றாள்,நான் இப்போதே போய்விடுகிறேன் அண்ணா என்றான்,அவள் ஒரு போதும் சந்தோஷமாக இருக்க மாட்டாள் என்னுடன், நீயே அழைத்துக் கொண்டு போய்விடு என்றான் பார்த்திபன்,அவர்கள் இருவரும் பார்த்திபனிடம் நன்றி கூறிவிட்டு வாகனத்தில் ஏறி சென்றுவிட்டார்கள்.பார்த்திபன் மறுப்படியும் அறைக்குச் சென்றான்,சங்கவி அவன் கட்டிய தாலியை கலட்டி வைத்துவிட்டுப் போயிருந்தாள்.அதை கையில் எடுத்தவன் தற்போது உன்னையும் சந்தர்ப்பத்திற்காக பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள் என்று மனதில் நினைத்துக் கொண்டு ஏமாற்றத்துடன் வீட்டை நோக்கி நடந்தான் பார்த்திபன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *