கை எட்டும் தூரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 4, 2021
பார்வையிட்டோர்: 3,265 
 

(2003 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு பிடிப்பற்ற மனநிலையுடன் நடந்து கொண்டிருந்தான் இவன். ஹிருதயத்தினுள் சில தீர்மானங்கள் உள்ளறைந்து வலுவேறியிருந்தன. இந்தச் சமூகமும் , சுயவாழ்வும் கேள்விகளாய் அச்சுறுத்தின என்பது மட்டுமல்ல! ஒவ்வொரு தனிமனித வாழ்வு சார்ந்த காயங்கள், பிறமனிதனது பார்வையில் பெரிதாய் உறைக்கவேயில்லை என்பது யதார்த்தம்.

இயந்திரமயமாகிப் போன மனித மனங்களில் ஈரம் சிறிதுமில்லை.

இன்று-ஒரு தீர்மானம் அடிமனதில் உறுதியாய் பற்றிக் கொண்டுவிட்டது. அனுமானமின்றி, ஆத்ம திருப்தியாய், இந்த உலக ஒட்டுறவுகளிலிருந்து நிரந்தரமாய் நீங்கிவிடும் பிரயத்தனம்

இது ஒரு கோழைத்தனமான முடிவென்றா சொன்னீர்கள்? இல்லையில்லை, தன்னையே இரக்கமின்றி தண்டித்துக் கொள்ள விழைபவன் எவ்வாறு கோழையாக இருக்க முடியும்? நிர்ப்பந்தங்கள் தான் வாழ்விடத் தூண்டுகிறது என்றால், தற்கொலைக்கும் நிர்ப்பந்தங்களே காரணமாய் அமைகின்றன.

தன் மீது தானே கொள்ளும் அதீத அதிருப்தி தற்கொலையாகவும், பிறர் மீது கொண்ட வெறுப்பு எங்கும் வன்முறையாக நிகழ்கின்றன. சுகப்பிரசவம் என்று கேள்விப்படு கிறோம். சுகமரணம் என்று என்று எங்கும் எவரையும் அடையாளப் படுத்திவிட முடியுமா? இந்த உலகம் ஏதாவது ஒரு காரண கற்பிதத்தை மரணத்தின் மீது இடுகுறியாய் போட்டுவிடுவதை, மிகச் சாதாரணமாகவே நாம் ஏற்றுவிடுகிறோம். தனக்கோ , பிறருக்கோ தீங்கு செய்யவிழையும் வன்ம உணர்வின் முதற்சரடே துணிச்சலில் தான் பிறக்கிறது.

துணிவின்றி உலகில் எளிதில் செய்யக்கூடிய காரியம் எது தான் இருக்கிறது?

இருந்தென்ன செய்யப்போகிறோம்?

செத்துத் தொலைக்கலாம்.

செத்தென்ன ஆகப்போகிறது?

இருந்து தொலைக்கலாம்.

என்ற கல்யாண்ஜியின் கவிதை வரிகளில் தோய்ந்து குளித்தவன் இவன். அது எப்போதோ – இன்றைய உள் வெளி, மனஉணர்வு அழுத்தங்களால், கவிதையின் முதல் இரு வரிகளோடு மட்டுமே உடன்பாடு. பல மைல்களைக் கடந்து வந்த போதும் – இடமும் இலக்கும், இன்னும் தொலைவில்தான். புதிய உலகிற்கு போய்ச் சேருவது, என்ற தீர்மானம், உள்மனதில் உரம்பெற்றிருந்த போதிலும், பாச உறவுகளைப் பிரிவது, நினைவின் நெருக்கங்களை நிரந்தரமாக இழப்பது, பிரபஞ்ச ஒட்டுறவுகளை விட்டும் ஓய்ந்து போவது, என்பன அவனுள் நெருடல் தான்.

பூதாகரமிக்க இருப்பைவிட – மரணம் சாசுவதமானது, அழுத்த ஆரவாரங்களற்ற, சுமைகளற்ற மௌன வெளி, மனிதனை ஆட்கொள்வதெனில் – எத்தனை சுகமானது! வாழ்தல், இறத்தல் என்ற இரு முனைகளுக்கும் நடுவில் தத்தளித்துத் துயருறுவது தான் மனித இருப்பின் நிதர்சனங்களோ?

இருபத்தியேழு வயதில் இறகுகளைத் தொலைத்த பறவையின் உபாதையில் மனம் கசிந்து பேதலித்துப் போனான் இவன். காலையில் எழுந்து ஒரு ‘கிளாஸ்’ நீராகாரம், உள்ளே தள்ளிவிட்டுக் கிளம்பியவன் தான். தேனீர் தயாரிக்க சீனி, தேயிலை, முற்றாகத் தீர்ந்துவிட்ட கவலையில், அம்மா மூலையில் ஒடுங்கிப் போயிருந்தாள். அவற்றையேனும் வாங்கிக் கொடுக்க இயலாத வறுமை நிலையினை எண்ணி மனதிற்குள் கருவினான். பசிக்களைப்பினால் தலைசுற்றிக் கிறுகிறுக்க, கால்கள் சோர்ந்து நடுங்கின. படித்து முடித்து நல்ல சான்றிதழ்களோடு, வேலை தேடிச் சலித்து மூன்று ஆண்டுகள் நடந்து போயின. வேலை எளிதில் கிடைக்காது. கானல் காட்டி மறைந்தது. இந்த பட்ட மரம் இனி தளிர்க்கும் என்பதில் குடும்பத்து நம்பிக்கையும் வரண்டு போனது.

நிகழ்காலமே இருண்டிருக்கையில் எதிர்காலம் பிரகாசிக்கும் என்பதில் இவனுக்கு சிறிதும் நம்பிக்கை பிறக்கவில்லை . அகன்ற பரந்த நெற்றிப் பரப்பு, கூர்த்த விழிகள், பெரிய செவிகள், கண்களிலிருந்து கீழ் நோக்கி விரிந்தகன்ற கூர்நாசி, இவை அறிவு ஜீவிகளுக்கான அங்க லட்சணங்கள். இவையனைத்தும் அச்சொட்டாக இவனுக்கு வாய்த்திருந்தும், வாழ்க்கை வசதிகள் ஏன் வசப்படவில்லை ?

வசதியும், வாய்ப்பும் சில மந்த புத்திகாரருக்குத் தான் எளிதில் வாய்க்குமோ? ஒரு பக்கம் பிரக்ஞையற்றுப்போய், மூப்பிலும், நோயிலும் விழுந்துகிடக்கும் தந்தை, புஷ்டியான ஆகாரமின்றி சரியான மருத்துவமின்றி, ஆயுளை எண்ணிக் கொண்டிருந்தார் அவர்.

மகன் நம்பிக்கை நீர் வார்ப்பான் என ஆஸ்துமாவிலும், பசியாலும் பொறுமை காக்கும் தாய், முப்பது வயதாகியும், கழுத்து வேலி வந்து விழாமல் சாளரத்தை ஊடமாக்கி, உஷ்ணம் பெருமூச்சுவிடும் சகோதரி, குடும்ப வண்டியின் சக்கரங்கள் கழன்று சுக்கு நூறாகிப் போன இயலாமையில் தவித்து, ஜடமாகிப் போன இவன்.

முட்புதர்கள் வரண்டு நிடக்கும் காட்டில், சூழலோடு ஐக்கியப்பட்டு, வெறுமையோடிக் கிடக்கிறது வெளி. வாழ்வில் எட்ட முடியாத சிகரங்களே, கைநழுவிப் போன பின் – ஏதோவொரு சிகரத்தை எட்டி, உயிரை விட வந்தவன் இவன். மேற்கு மலையின் மீது போதைப் பொருள் அடித்தவனைப் போன்று சோர்ந்துகிடக்கிறான், அந்திச் சூரியன். மேகத்திட்டுக்கள் வானில் மெல்ல மெல்ல அசைந்து நகர்கின்றன. தழைந்து வரும் காற்று முகத்தில் உறைந்து குளிரை விதைக்கின்றது.

உடல் சோர்ந்து சில்லிடுகின்றது. தூரத்தே துண்டு துண்டாய், நீண்டு கிடக்கும் பச்சை வயலகள், அவற்றின் பாதுகாப்பிற்கு வேலியாய் நின்றசையும் கூனற் தென்னைகள். சில்வண்டுகளின் கிறுகிறுத்த சத்தமும், பட்சிகளின் பரிபாஷை ஒலியையும் தவிர வேறு சலனமில்லை . ஜனநடமாட்டமேயின்றி ஏங்கித் தவிக்கும் ஒண்டித் தடங்கள். இவன் மார்பிலிருந்து நீண்ட சுவாசமொன்று நெஞ்சழுத்தி வெளியானது. நாவரட்சியினால் தொண்டை வரண்டு போனது.

மலையடிவாரத்தில் தேங்கி நின்ற நீரோடையை பிரியமுடன் பார்த்தான். தேங்கியிருந்த நீரைக் கலக்கி கைகளினால் அள்ளிப் பருகினான். சிறிது முகத்திலும் தெளித்துக் கொண்டான். என்றுமில்லாத சுகத்தை மேனி அனுபவித்தது. சிறிது உற்சாகம் வந்துவிட்டதாக நினைத்தான். நெஞ்சில் மாறாத ரணங்கள் எரியத் தொடங்கின. எண்ண உணர்வுகளின் கடும் இம்சை, சல்லடை போட்டுத் துளைத்தன. சிறிது காலங்களாக அவனுக்கு தெய்வ நம்பிக்கையும் அற்றுப் போயிருந்தது.

விழிப்புக் கொண்ட அறிவுமனம், சில வேளைகளில், தெய்வ நம்பிக்கையையும், சாதாரணமாக்கிப் பார்ப்பதுண்டு. இவன் பெற்ற தாயை நினைவு கூர்ந்து இறுதியாக விழியோரங்களை ஈரமாக்கிக் கொண்டான். மலை உச்சிக்குச் சென்று, அதள பாதளத்தில் குதித்து, ஜீவனைக் கசக்கி எறிவது என்பது இவனது உறுதிப்பாடு! கீழே நின்று மலை உச்சியை அர்த்தமின்றி வெறித்துப்பார்த்தான். உச்சிக்குப் போனால் வானம் ‘மை எட்டும் தூரந்தான்’! ஆகாய வெளி அலட்டலின்றி மௌனம் தரித்தது. மேக அசைவின்றி, வான் பரப்பு சோகத்தில் திளைத்தது.

கீழ்வானில், பறவைகள் ஒரே திசை நோக்கி சிறகடித்துப் பறந்தன. அவை கரும் புள்ளிகளாய் கண்ணை உறுத்தின. மலை மடிப்புகளில் பனிப்புகை படர்ந்து கவிந்திருந்தது. தூரத்தில் நின்று பார்த்தால் மலை யானையின் கறுத்த முதுகினைப் போல் கம்பீரமாகத் தெரிந்தது. மலைப்பாறை எதற்கும் மசியாமல் விறைத்து நின்றது. இரவும், பகலும் பிரிவுச் சோகத்தில் கையைத்துக் கொண்டன. உறவும், பிரிவும் நிலையானதில்லை என்ற தரிசனத்தில் இவன் கொஞ்சம் நெகிழ்ந்து போனான்.

மலையடிவாரத்தை பற்றிப் படித்துக் கொண்டு மேல் நோக்கி ஏறத் தொடங்கினான். மலையின் உச்சி விளிம்பு நீண்டு உயரத்தில் தெரிந்தது. பாறைக்கற்களை இறுகப் பற்றிக் கொண்டு, இன்னும் சிறிது நேரத்தில் எல்லைக்குச் செல்வது சாத்தியமாகலாம். மலையின் இறுகிய மேனியில் ஒரு குழந்தையைப் போன்று உடல் குறுகித் தவழ்ந்து கொண்டிருந்தான்.

தடுக்கி விழுந்துவிடலாம் என்ற முன்னெச்சரிக்கையில், படர்ந்திருந்த காட்டுக் கொடிகளை தாவிப்பிடித்துக் கொண்டான். கிளர்ந்தெழும் உணாச்சிக் கொந்தளிப்புகளை அடக்கியாள்வது எச்சந்தர்ப்பத்திலும் எளிதான காரியமல்ல! ஆன போதும், இவன் நிதானமாகவே செயலில் இறங்கினான்.

“ஐயோ!……. ஐயோ! என்னைக் காப்பாத்த ஒருவருமில்லையா…..?” –

தீனஸ்வரத்தில் ஒரு அபயக்குரல் காற்றில் கலந்து வந்து இவன் செவிப்புலனை அதிரவைத்தது. ஒரு பெண்ணின் மரண அவலம் கவிந்த கூப்பாடு ஆபத்தொலியாக ஒலித்தது. அந்தக் காட்டுப் பிரதேசமெங்கும் கேட்கும் விதமாக குரல் தேய்ந்தும், உச்சஸ்தாயிலும் அதிர்வலைகளை எழுப்பியது.

இவன் செய்வதறியாது நிலைகுலைந்தான். வந்த காரியத்தை இடைநிறுத்திவிட்டு, குரல் வரும் திக்கை கூர்ந்து செவிமடுத்தான். மூலைக்குள் மின்னல் அதிர்ந்தது. இந்தக் காட்டுக்குள் வேண்டத்தகாத ஒரு கொடிய செயல் நடந்தேறப் போகிறதா? இதையெப்படித் தடுத்து நிறுத்துவது? மரண பயம் கலந்த அக்குரல் மிக அருகாமையிலே ஒலிப்பதாக இவன் உணர்ந்தான்.

இராட்சதக் கிளை பரப்பி இருள் கவிந்து பருத்திருக்கும் காட்டு மரங்களில் அடர்த்தியை விலக்கிக் கொண்டு அந்தக் காட்சி கண்ணில் படுவது சாத்தியமாய் இருக்கவில்லை. ஆளுயரத்திற்கு வளர்ந்திருந்த முள் பற்றைகள் அச்சமூட்டு வதாயிருந்தன. அசுர வேகத்தில் கணங்கள் ஓடி மறையும் முன் – இவன் விழிப்படைந்திருந்தான். துரித வேகத்தில் மரமொன்றைத் தாவிப் பிடித்து உயரத்திற்கு ஏறி, சுற்றுச் சூழலை வெறிகொண்டு நோட்டமிட்டான்.

அந்தக் கொடூரக் காட்சியின் முதற் படலம் ஒரு போராட்டக் களமாக மிகத் துல்லியமாகத் தெரிந்தது. தமிழ் திரைப்படங்களில் தினமும் கண்டு சலிப்படைந்து, எள்ளி நகையாடிய காட்சியொன்று தான் இங்கும் அரங்கேற முனைப்பு பெற்று நிற்கின்றது. இரசனைக்காக திரையில் பார்த்த காட்சி இன்று கண்ணுக்கு நேரே நேரிடையாக எதிர்கொள்ள வேண்டி வருமென இவன் ஒரு போதும் நினைத்திருக்கவில்லை.

அடர்ந்த காட்டு மரங்களுக்கு நடுவில் ஒரு வெள்ளைநிற ‘வேன்’ நிறுத்தப்பட்டிருந்தது. அவ்வாகனத்திற்கு அருகில் ‘ஹிப்பி’ போன்று முடி வளர்த்த ஒருவன் கலக்கம் கொண்டவனாய் காவல் காத்து நின்றிருந்தான். அதையொட்டிய காட்டுப் பற்றைக்குள் ஒரு இளம் பெண்ணை மற்றவன் பாலியல் வல்லுறவிற்காய் மூர்க்கத்தனமாக மல்லுக் கட்டிக் கொண்ருந் தான். வேங்கையின் கொலை வெறிக் கரங்களில் சிக்கிய மான்குட்டியாய் உயிரணுக்கள் துடித்துப் பதற போராடிக் கொண்டிருந்தாள் பெண்.

காட்டுப் பற்றைகளைக் குதறி ஊடுருவிக் களம் இறங்கினான் இவன். கனத்த காட்டுத் தடியொன்று தக்க தருணத்தில் கைக்குச் சிக்கியது. இவனை வாட்டி வதைத்த பசியும், மனப்போராட்டமும் விலகிப் போய் உடலில் யானைப் பலமேறி எதற்கும் துணிவுற்றான். கண் இமைக்கும் நேரத்தில் அவன் மீது பாய்ந்து சிரசைக் குறி வைத்து காட்டுத் தடியினால் அவனை மூர்க்கமாகத் தாக்கினான். எதிர்பாராத தாக்குதலினால் அவ்வெறியன் நிலை குலைந்தான். தலையிலிருந்து குருதிப் பெருக்கெடுக்க, மயக்கமுற்றுத் தரையில் சரிந்தான். இவனுக்கு உதவியாய் வந்த மற்றவனையும் அதிரடித் தாக்குதல் நடத்தி அவனையும் நொருக்கித் தள்ளினான்.

இவனது மனம் வேறு திசையில் இயங்க ஆரம்பித்தது. விரக்தியின் விளிம்புக்கு போயிருந்த இவனது ஆழ்மனதில் தன்னம்பிக்கை துளிர்த்தது. ஆடை கிழிந்து பாதி கேசம் துடிக்க பயத்தினால் நடுநடுங்கிக் கொண்டிருந்த அந்த இளம் பெண்ணை ஈரம் சொரியும் விழிகளால் பார்த்தான். காட்டுப் பாதைகளை ஊடுருவி அவளை அவசரமாக அழைத்துச் சென்றான். அவள் கண்கள் கலங்கியவாறு பேசினாள்.

“நான் ஆடைத் தொழிற்சாலையிலிருந்து வேலை முடிந்து பாதையால் வந்து கொண்டிருந்தேன். இந்த வெறிபிடித்த நாய்கள் என்னைப் பலவந்தமாக வேனுக்குள் இழுத்துப் போட்டு கடத்திக் கொண்டு வந்துவிட்டனர். என்னை மானபங்கப்படுத்திவிட்டு, காட்டுக்குள் கொலை செய்து போட்டு விட்டு வருவது தான் நோக்கம். ஒரு தெய்வம் போல் வந்து என் மானத்தையும், உயிரையும் மீட்டுக் கொடுத்த உங்களை என் நெஞ்சுக்குள் வைத்து பூஜிப்பேன். ஆண்டவன் உங்களைக் கைவிடமாட்டான்.”

அவள் நெஞ்சுருகி நன்றி சொன்னாள். பிரதான பாதையை அடைந்ததும், அவளுக்கு ஆறுதல் கூறி விடைபெறுகிறான் இவன்.

“நீ உயிரை மாய்க்கப் பிறந்தவனில்லை. இந்த உலகிற்கு நீ அவசியப்படுகிறாய். துணிந்து நில். வாழ்வின் மீது நம்பிக்கை கொள்! நீ வாழவேண்டியவன்.” அசரீரி போல் அந்தரத்மா அலறியது.

இவன் வாழ்வு பற்றிய புதிய புரிதல்களுடன் வீட்டை நோக்கி நகர்கிறான்..

– மே 2003 – நிஜங்களின் வலி சிறுகதைத் தொகுப்பு , மீரா பதிப்பகம், முதற்பதிப்பு: 23.05.2005

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *