கூண்டை விட்டு வெளியே…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 15, 2021
பார்வையிட்டோர்: 8,414 
 

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

விடிந்ததும் கூண்டைத் திறந்து கோழிகளை விடுவிப்பதில் ஜானகிக்கு ஓர் ஆனந்தம்.

மாலையில் கூண்டில் அடைப் பது அம்மாவின் பொறுப்பு. ஜானகிக்கு வீட்டின் வாசல்புறத்தை விட கொல்லைப்புறம் மிகவும் பிடிக்கும். கொல்லையில் தான் மரங்கள் இருக்கின்றன. மரங்களில் பறவைகள் இருக்கின்றன. நடுவில் கிணறு. சுற்றிலும் மருதாணி, துளசி, ரோஜா, செவ்வந்திச் செடிகள். கிணற்றடியில் ஒரு துவைகல், எப்பொழுதும் குளிர்ச்சியாய் இருக்கும். கை வேலைகள் ஒழிந்த நேரம் துவைகல்லில் அமர்ந்து கொள்வாள். மேலே, மரங்களுக்கு ஊடே வானம் தெரியும். சின்னப் பறவைகள் குறுக்கிடும். காலடி குளிரும். குளிர்ச்சி உடலெங்கும் பரவும். காது மடல் களைத் தொட்டுப் பார்ப்பாள். பூவின் இதழ்போல் இருக்கும். விரல்கள் மெதுவாய் உதடுகளுக்கு வரும். பட்டும் படாமலும் தேய்த்து விடுவாள். இமைகள் தானே மூடிக் கொள்ளும்.

பௌர்ணமி இரவில் வெகு நேரம் அமர்ந்து இருப்பாள். நிலவின் ஒளியில் தென்னங்கீற்று பொன்னாய் அலையும். மரங்களும் செடிகளும் குளித்து நிற்கும். ஜானகிக்குச் சந்தோஷம் பொங்கும். யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாத சந்தோஷம். இப்படிச் சந்தோஷம் கொள்ள முடிவது, மனித இனத்துக்கு மட்டுமே கிடைத்த உன்னதம்.

வீட்டில் வறுமை இருந்தது. வீடு, அடமானத்தில் இருந்தது.

அப்பா குருநாதன், ஜோசியம் பார்ப்பார். ஜாதகம் எழுதுவார். பஞ்சாங்கம் பார்த்து கல்யாணம் சடங்குகளுக்கு நாள் குறித்துத் தருவார்.

‘குருநாதன் சொன்னது சொன்னதுதான். பிரம்மன் எழுத்து மாதிரி,’ என்பார்கள்.

‘ஒரு சொல் குருநாதன்’ என்று சுற்றுப்பட்டி எல்லாம் சொல்லும். வீட்டில் மனைவி மக்களிடமும் ஒரே சொல்தான். மறுக்கவோ, மாற்றவோ இடம் இருக்காது.

ஜோசியம். ஜாதகம் என்று பாதகமில்லாத வருமானம் இருந்தது. சேமித்துப் பழக்கம் இல்லை. பல்லி இரை தேடும் கதைதான். ஒரு பூச்சி கிடைத்தால் இன்றையப் பொழுது கழிந்தது. நாளையும் ஒரு பூச்சி கிடைக்கும்.

ஜானகி, செவ்வந்திப் பூச்செடிகளுக்கு இடையில் நின்று இருந்தாள். வாசலில் தபால்காரரைப் பார்த்ததும், செடிகள் நோகாமல் மெல்ல விலக்கிவிட்டு நடந்து வந்து தபாலை வாங்கினாள்.

தபால்காரர்கள், பெரும்பாலும் நல்ல செய்திகளையே சுமந்து வருபவர்கள்.

பிரித்துப் படித்ததும் குதித்து, முன்பத்தி, நடுப்பத்தி, சமையல் அறையைத் தாண்டி ஓடினாள்.

“அம்மா ….!”

“என்னடீ ஜானூ?” அம்மா லஷ்மி சமையல் அறையில் இருந்தாள்.

“ஆர்டர்ஸ் வந்திருச்சு!” கொல்லைப்புறத்துக்கு ஓடி கிணற்றடியில் வந்து நின்றாள்.

மரங்களும் செடிகளும் சந்தோஷத்தில் ஆடின. நிமிர்த்து மரங்களுக்கு ஊடே, பதினோரு மணிச் சூரியனைப் பார்த்தாள். பூவாய் குளிர்ந்தது.

“ஜானூ…” உள்ளிருந்து லஷ்மி கூவினாள்.

ஜானகி, ஒவ்வொரு மரமாய், ஒவ்வொரு செடியாய்த் தொட்டுத் தொட்டுச் சேதி சொன்னாள். ஓய்ந்த பாடில்லை. எத்தனை மரங்கள்! எத்தனை செடிகள்! எல்லாவற்றிலும் பூக்கள்!

‘வேலைக்குப் போனதும்… முதல்லே இந்த வீட்டை மீட்டனும்!’

Vel Ramamoorthy - Koondai Vittu Veliye - May 1991-2-picபூக்களுக்கு முத்தம் கொடுத்தாள்.

“அடியே ஜானகி……” அம்மா, கிணற்றடிக்கே வந்துவிட்டாள்.

“அம்மா… வேலைக்கு ஆர்டர்ஸ் வந்திருச்சும்மா!” வலது காலைச் செல்லமாய்த் தரையில் உதைத்தாள். கடிதத்தை அம்மாவின் நெஞ்சுக்கு நேராக நீட்டினாள்.

அம்மா, கடிதத்தை வாங்காமலே. “என்ன வேலைக்கு?” என்றாள்.

ஜானகி, கண்களை மூடிக்கொண்டு விபரம் சொன்னாள். லக்மி, மகளின் தோளைத் தொட்டு, “திருச்சிக்கா போகணும்?” குலுக்கினாள்.

“அம்மா… வேலை கெடைக்கிறது குதிரைக் கொம்பா இருக்கு. பாலிடெக்னிக் பட்டத்தைக் கையிலே வச்சிக்கிட்டு….நாலு வருசமா…நானும், எத்தனை இன்டர்வியூக்களுக்கு இதுவரை போய் வந்திருக்கேன்? இது நல்ல வேலை. கை நெறையா சம்பளம். ரெண்டே வருசத்திலே வீட்டுக்கடனை அடைச்சிறலாம்மா…..அம்மாவின் கைளைப் பிடித்துக் கொண்டாள்.

“உங்க அப்பா என்ன சொல்வாரோ…”

அப்பா சொன்னார்! ‘வேலைக்கு. வெளியூருக்குப் போகக் கூடாது’.

அம்மா, கதவோரம் பாதி உடம்பு தெரிய நின்றாள். ஒட்டிக்கொண்டு ஜானகி, தம்பிமார்கள் திண்ணையில் அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். அப்பா, வடக்குப் பார்த்துச் சம்பணம் இட்டிருந்தார்.

“அம்மா…நீ சொல்லும்மா. வீட்டை மீட்டனும்..தம்பிமார் படிக்கனும்…. எவ்வளவு கடன் இருக்கு…!” அம்மாவின் காதோரம் சொன்னாள்.

அம்மா, சேலைத் தலைப்பால் வாயைப் பொத்திக் கொண்டாள். ஒரு சொல் குருநாதனிடம் யார் பேசுவது?

“அம்மா…அம்மா …ப்ளீஸ்…. சொல்லும்மா. நம்ம கஷ்டமெல்லாம் தீர்ந்துடும்மா.” அம்மாவைக் குலுக்கியதில் இமையில் உடைந்து நீர் வழிந்தது.

குருநாதன் திரும்பினார். கையிலிருந்த பஞ்சாங்கம் ரெண்டாகக் கிழிந்தது. பூட்டுகளில் பேர்போன பூட்டு, திண்டுக்கல் பூட்டு, இப்போதெல்லாம் அலிகார் பூட்டு. சிங்கப்பூர் வழியாக வரும் சீனப் பூட்டுக்கள் பெயர் சொல்லுகின்றன.

அப்பா, ஒரு நல்ல பூட்டு. எல்லா அப்பா அம்மாக்களுமே பூட்டுப் பிறவிகள் தான். அவரவர் வீட்டுப் பெண்மக்களை. ஓர் இருட்டு அறைக்குள் போட்டுப் பூட்டுகிறார்கள். வலதுகை ஆட்காட்டி விரலில் சாவிக் கொத்தைக் கோர்த்துச் சுழற்றிய படியே தெருவில் வருகிறார்கள்.

‘நான் போட்டிருக்கும் பூட்டு தான் நல்ல பூட்டு.. ஹி… ஹி.. இல்லை என் பூட்டு…காலங் காலமாய உள்ள பூட்டு. கனத்த பூட்டு…ஹி… ஹி… ஹி’.

பூட்டுவதில் போட்டி… பல்லிளிப்பு .

குருதாதனுக்கு ஒரு தங்கை இருந்தாள். தமயந்தி.

இடி, மின்னலுக்குப் பயந்து, மலங்காட்டை விட்டுத் தப்பிப் பறந்து வரும் மாழ்பழத்தான் குருவி மாதிரி திரேகக் கட்டு. உள்ளங்கையில் வைத்து உருட்டி விளையாடத் தூண்டும் அழகு.

ஒரு பெண், புஷ்பவதி ஆகிவிட்டால் பள்ளிக்கூடப் படிப்பை நிறுத்தி விடும் காலம் அது. ஆங்கிலம் கற்றுத்தர, நடுப்பத்தி வரை வந்த ஆசிரியரை வீட்டார் நம்பினார்கள். தமயந்தியும் நம்பி, மடிவிரித்து விட்டாள், விசயம் வெளியே தெரிந்தவுடன் பிணமாகிப் போனாள்.

இந்த ஜானகியை அந்தப் பக்கம் கொடுத்து, அந்த தமயத்தியை இந்தப் பக்கம் வாங்கலாம். ஒரு கிளையில் பூத்த மலர்கள் போல் அப்படி ஓர் உருவ ஒற்றுமை!

இரை தேடப்போன பறவைகள், கொல்லையில் மரங்களுக்குத் திரும்பி கூச்சலிட்டுக் கொண்டிருந்தன.

“அப்புறம் ஏன் என்னைப் படிக்க வைக்கணும்? ஏன் இந்தக் கடன்படனும்?” ஜானகியின் முகம் சுருங்கி, மூக்கு விடைத்தது. அழுகையைத் தாண்டிய கோபம்.

“ஜானூ…!” மகளின் தோளில் சாய்ந்து அழுதாள் லஷ்மி.

மூத்தவன் மணி, தொண்டையை அடைக்கும் அழுகையை மீறி, “அம்மா…எனக்கு தம்பிக்கும் பள்ளிக்கூட ஃபீஸ் கட்ட, புத்தகம் வாங்க எவ்வளவு கஷ்டப்படுறோம்? ஒழுங்கான யூனிஃபார்ம் இருக்கா? அம்மா…அக்கா வேலைக்குப் போகட்டும்மா…” கெஞ்சினான்.

“மணி, உனக்குப் புரியாதுப்பா…”

ஜானகி, தாயாரைத் தொட்டு திமிர்த்தினாள்,

“எனக்குப் புரியதும்மா. நானும் தமயந்தி அத்தை மாதிரி எவனுக்காவது மடிவிரிச்சு, மாண்டு போயிருவேன்னு தானே….அப்பா என்னை வெளியூருக்கு அனுப்ப மாட்டேங்கிறார்?”

“ஜானூ…!”

தாயார் அதிர்ந்து போனாள். சின்ன மகளிடம் இருந்து எத்தனை பெரிய வார்த்தை!

“அம்மா….நான் படிச்சதெல்லாம் பரீட்சைக்காகவும் வேலைக்காகவும் மட்டுமில்லே. இந்த சமூகத்திலே என்னுடைய ஸ்தானம் பற்றிய தெளிவான சிந்தனை எனக்கு இருக்கு. சுய பிரக்ஞை உள்ள எந்தப் பெண்ணும்….கண்டதும் காதல் வயப்பட்டுக் கற்பிழந்து போகமாட்டாள். என் வாழ்க்கையிலே காதல் என்பதே சாத்தியமில்லைன்னு நான் சொல்ல வரலே. அடமானம் இருக்கிறவீட்டை மீட்டணும்…தம்பிமார் படிக்கணும். அதுவரை எனக்கு ஒரு காதலனோ கணவனோ தேவைப்படமாட்டான். என்னை நம்புங்க.”

“ஜானகி… உங்க அப்பா கிழிச்ச கோட்டைத் தாண்ட எனக்குத் தைரியம் இல்லேம்மா…பெரியவங்களோட ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் அர்த்தம் இருக்கும்மா”

மணி பாய்ந்தான். “பைத்தியக்காரத்தனமா பேசாதீங்கம்மா…அக்காவைப் படிக்க வச்சதிலே அர்த்தம் இருக்கு. வேலைக்குப் போகக் கூடாதுன்னு சொல்றதிலே கொஞ்சங் கூட அர்த்தமில்லே.”

“அம்மா….உங்க தலைப் பிள்ளையை ஒரு ஆம்பளைப் பிள்ளையா நெனச்சுக்கோங்க.”

நிலவை; தென்னங்கீற்று. மறைக்க வும் விலகவுமாய் அழகு காட்டியது. விடிந்தது.

குருநாதன், வழக்கம் போல், முகம் கழுவ கொல்லைப்புறத்துக்குப் போனார்.

சமையல் அறையில் மனைவியின் விசும்பல் ஒலி கேட்டது. நின்று. திரும்பி, “என்ன?” ஏறிட்டார்.

“நம்ம ஜானகி…” உள்ளங்கைகளை மலர்த்தினாள். குருநாதனின் கால்கள் லேசாய் இடறின.

“மணிப் பயல் எங்கே ?”

“ரெண்டு பேரும்…விடியுமுன்னே கிளம்பி….முதல் பஸ்ஸூக்கே…” முகத்தை மூடிக்கொண்டு குலுங்கினாள்.

குருநாதனின் திரேகம் தடுமாறியது.

பாதங்களைத் தேய்த்தபடி திரும்பினார். கிணற்றடிக்குப் போனார். நீரை இறைத்துத் தலைவழியே ஊற்றினார். மரங்களுக்கு ஊடே வானத்தைப் பார்த்துக் கத்தினார்.

“தமயந்தீ…”

மரங்களில் இருந்த பறவைகள் பதறி, திசைக்கு ஒன்றாய் சிறகடித்துப் பறந்தன.

இன்று விடியுமுன் கூண்டைத் திறந்து கோழிகளை விடுவித்தது தாயார் லஷ்மிதான்.

– மே 1991

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *