குழந்தையின் அழகு!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 24, 2019
பார்வையிட்டோர்: 45,830 
 

“எங்க குழந்தை!” தம்மைத் தாண்டி வெளி வந்த சொற்கள் அந்த உதடுகளுக்கு இன்னமும் ஒரு புதிய ஒளி தான். இன்னமும் அதன் மகிழ்ச்சியில் அவை வியப்புற்று நின்றன.

எதிர் முகத்தில் கேள்விக்குறி.

“உங்க….?”

“எங்க குழந்தை.”

உதடுகளில் மலரும் புன்னகைப்பூ. நாவில் சுரக்கும் அதன் தேன். ராஜனை அவன் வசமின்றியே இன்பம் சிரிப்பாக ஆக்கிரமித்தது.

எதிரே கல்லான மௌனம்.

சிரிப்பை நிறுத்திக் கொண்டு ராஜன் கேட்டான். ” என்ன அப்படித் திகைச்சுப் போயிட்டே வாசு? எங்க குழந்தை தான், அதிலென்ன சந்தேகம்?”

வாசு சுதாரித்துக் கொண்டான். பேச முயன்றான். முடியவில்லை.

“நம்பிக்கை வரவில்லையா வாசு? பேப்பர்ஸ் காட்டட்டுமா?”

“சேச்சே! டோன்ட் பி ஸில்லி.. ரொம்ப சந்தோசம் ராஜா. நல்ல முடிவு தான் பண்ணியிருக்கிங்க ரெண்டு பேரும்.”

“பேபி, இந்த மாமாவுக்கு குட் மார்னிங் சொல்லு?”

ராஜனின் அணைப்பிலிருந்த வடிவத்துக்கு இன்னும் ஒரு வயது நிறைந்திருக்காது. உலகம் அதற்கு ஒரு புதுப்பொருள். ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு ஒலியும் அதன் முகத்தில் ஒரு பெரிய கண்டுபிடிப்பாய் விடிந்தது. கண்கள் இடம் இடமாய்த் தாவிக் கவ்வின. குழந்தைக்குப் பேச்சு இன்னும் வரவில்லை. அவன் காட்டிய திசையைப் பார்த்து சிரித்தது.

“மாமாவுக்கு குட்மார்னிங் சொல்லும்மா, பேபி!”

ராஜன் குழந்தையாகி விட்டான். மழலை பேசிக் கொஞ்சினான். பேபியின் உருவில் தன் பூரிப்பை நோக்கிப் பேசினான். பல்லாண்டுக் கனவுகளின் சாரமான ஒன்று அவன் கரங்களில் சிரித்துக் கொண்டிருந்தது. அந்தக் கனவின் உருவகம் ஒரு தனி நபராய்ப் பரிணமிக்க காலம் செல்லும்.

குழந்தை ஏதேதோ சப்தங்களை எச்சில் தெறிக்கும் களிப்புடன் வெளியிட்டது.

“அட, குட்மார்னிங் சொல்றாளே என் பேபி!” ராஜன் குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டான். “எங்கே மாமாவுக்கு ஒரு முத்தம் கொடு பார்க்கலாம்?”

வாசு திடுக்கிட்டு லேசாய் பின்வாங்கினான். நண்பன் நீட்டிய உருவம் தன் மீது உரசி விடுமோ என்று முகம் கூசியது. ராஜன் அவன் நண்பன் தான். அதற்காக? நிஜமாகவே ராஜனின் குழந்தையாயிருந்தால் பிரச்சினையில்லை. வாசு வலியச் சென்று தூக்கிக் கொஞ்சுவான். இதுவோ? ‘எங்க குழந்தை.’ அப்படித்தானா? அவ்வளவு சுலபத்தில் அமைந்து போகிற உறவா இது? ‘ஆம்’ என்று வலியுறுத்தும் நண்பனின் இந்த ஒளிமுகம் தான் எத்தகைய புதிர்!

“வேணாண்டா!… பாவம். சின்னக் குழந்தை. தொந்திரவு பண்ணாதே…”

“இதிலே தொந்திரவு என்ன?”

ஆனால் பேபியே சட்டென்று தலையைச் சாய்த்து ராஜனின் கழுத்தில் புதைந்து கொண்டது.

“அட, என்ன வெக்கம் இதுக்கு, பார்த்தியா! உனக்கு மாமா வேணாமா? அப்பா தான் வேணுமா? அட கண்ணு!” ராஜன் மீண்டும் குழந்தையை அணைத்து முத்தமிட்டான். பிறகு, உக்காரு வாசு” என்றான்.

இருவரும் உட்கார்ந்த போது ராஜனின் மனைவி உள்ளேயிருந்து வந்தாள்.

”சந்திரா நம்ம பேபியை வாசுவுக்கு காட்டிக் கிட்டிருந்தேன்.”

“எங்க பேபி ரொம்ப அழகாயில்லேங்க,” என்றாள் சந்திரா கணவனின் நண்பனிடம். பதிலை அவள் எதிர்பார்த்தாய் தெரியவில்லை. ராஜன் இந்தக் கேள்வியை ஒரு சாங்கியமாய்க் கூடக் கேட்கவில்லை என்பது வாசுவுக்கு நினைவு வந்தது. தங்களுடைய குழந்தையின் அழகைப் பற்றி இருவருக்குமே சந்தேகமில்லை போலும்.

அவர்களுடைய குழந்தை!

“இருங்க. காப்பி கொண்டு வரேன்” என்று சந்திரா மறுபடியும் உள்ளே போனாள். நண்பர்கள் உரையாடினார்கள். ரஜனின் வாய் யந்திரமாய் பேசியது. ஆனால் கண்கள் பேபிக்கே அர்ப்பணம். கரங்களுக்கு

அந்தப் பூஞ்சதையே ஸ்பர்ச சுகத்தின் எல்லை.

விருந்தோம்பலை முடித்து விட்டுச் சந்திராவும் வந்து உட்கார்ந்து உரையாடலில் கலந்து கொண்டாள்.

“பேபி, அம்மா கிட்ட வரியா?” என்றாள், சிறிது நேரத்தில் குழந்தையை நோக்கிக் கரங்களை நீட்டியவாறு.

பேபி தலை நிமிர்ந்து அவளைப் பார்த்து சிரித்தது. சந்திரா குழந்தையை ராஜனிடமிருந்து வாங்கினாள். அது அவள் உடம்போடு ஒட்டிக் கொண்டது.

“அப்பா அம்மா ரெண்டு பேரையும் நல்லா புரிஞ்சு போச்சு பேபிக்கு!” என்று சந்திரா அதன் அடர்த்தியற்ற செம்பட்டை முடியை மெல்லத் தடவிக் கொடுத்தாள்.

“பின்னெ? பேபிக்குட்டிக்கு டாப் ஃ ப்ளோர் நல்ல கெட்டியில்லே?” ராஜன் உல்லாசமாய்க் குழந்தையின் மோவாயை ஒரு விரலால் தொட்டுக் கிளுகிளுப்பூட்டினான்.
கிளுகிளுத்துச் சிரிகும் குழந்தையை அணைத்துக் கொண்டு சந்திராவும் சிரித்து, “ஆமாம், கெட்டி தான், அம்மா மாதிரி!” என்றாள்.

“ஏன், அப்பா மட்டும் மக்கோ? பார்த்தியா பேபி, அம்மா எப்படி அப்பாவைத் திட்டறாங்கன்னு, அம்மாகிட்ட்டே இருக்காதே, இங்கே வந்துடு!” என்று கரங்களை நீட்டினான் ராஜன்.

சந்திரா பேபியைத் தன்னோடு அழுத்திக் கொண்டு,”ஆசையைப் பார்க்கலே! இத்தனை நேரமா உங்களண்டை தானே வச்சிருந்தீங்க! இப்பதான் நான் வாங்கிக் கிட்டேன், ஏதோ சாக்குச் சொல்லி உடனேதிருப்பி எடுத்துக்கிடனுமா? நீங்களே பாருங்க மிஸ்டர் வாசு. உங ஃப்ரெண்ட் செய்ற அக்கிரமத்தை?” என்றாள் உல்லாசமாக.
வாசு அந்தத் தம்பதியை மாறி மாறிப் பார்த்தான். இரு முகங்களிலும் மென்மையும் பாசமுமான ஒரே பாவனை. நாற்பதாண்டுகள் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்தால் கணவன் மனைவியரிடயே ஒரே மாதிரி முகபாவம் உருவாகி விடுமென்று சொல்வார்கள். நாற்பதாண்டுகள் வேண்டாம் ஒரு குழந்தை போதும் அந்த ஒற்றுமையை உருவாக்க என்று இப்போது தோன்றியது.

குழந்தை! ”எங்க குழந்தை” என்கிறார்கள். இவள் அம்மாவாம், இவன் அப்பாவாம். பற்பல வைத்தியர்களின் தொழில் முறைத் தீர்ப்பு ஒரு பொருட்டே இல்லை என்பது போல், உடலுக்கு ஒரு கர்ப்பம் அவசியமே இல்லை என்பது போல், எங்கோ விழுந்த ஒரு வித்து ஏதோ ஒரு விடுதியில் ஒதுங்க ‘அது இங்கு தான், அது எமக்குத் தான்’ எனும் அங்கீகாரமே எல்லாமாய் விளங்க முடியும்’ என்பது போல் இவ்விரு முகங்களில் புலனாகும் இந்தச் சாதனை, இந்த மகிழ்ச்சி…

எப்படி முடிகிறது இவர்களால்?

சிறிது நேரம் மூவரும் உரையாடலில் தொடர்ந்து ஈடுபட்டார்கள். அரசியல், சினிமா, இலக்கியம், குடும்பம், ஆபீஸ், சமூக நிலவரம் என்று பல்வேறு பொருட்களைப் பேச்சு தொட்டுச் சென்றது. சந்திராவின் மடியில் பேபி தூங்கி விட்டது. அதைக் கீழே இறக்காமலேயே அவள் பேசிக் கொண்டிருந்தாள்.

“சந்திரா தூங்கற குழந்தையை ஏன் மடியிலேயே வச்சிக்கிட்டிருக்கே? நன் எடுத்துப் போய் தொட்டில்லே போடறேன். கொண்டா” என்று எழுந்தான் ராஜன்.
சந்திரா கொடுக்கவில்லை. “வேணாங்க, இன்னும் அது அசந்து தூங்கலே. தொட்டா முழிச்சிக்கும்.”

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின், “இப்ப கொண்டா பேபியை” என்றான். அவள் மடியிலிருந்து ராஜன் பேபியை தூக்கிக் கொண்டான். அது சிணுங்காத போதிலும், தட்டிக் கொடுத்தான். உள்ளே எடுத்துப் போய் தொட்டிலில் போடவில்லை… கையில் அணைத்தபடியே அங்கு உட்கார்ந்து சினிமா விமர்சனம் செய்தான்.

“இப்போ இந்தப் பாரதி ராஜா வந்து…”

நேரம் கடந்தது. சினிமாக்கள் அக்கு அக்காகப் பிரித்து அலசப்பட்டன.

“தொட்டிலிலே போடப் போறேன்னு சொல்லி என்கிட்டே இருந்து வாங்கிக்கிட்டீங்களே? போடல்லேன்னா இப்படி மறுபடி என்கிட்டே கொடுங்க. ரொம்ப நேரமா வச்சிருந்தா உங்களுக்கு கை நோகும்” என்றாள் சந்திரா.

“இப்பத்தான் அசந்து தூங்க ஆரம்பிச்சிருக்குது, அசைக்க வேணாம்னு பார்க்கிறேன். கொஞ்ச நேரம் இப்படியே இருக்கட்டும், சந்திரா. உனக்கும் கால் மரத்துப் போகுமில்லே.”

ஒரு மணி நேரத்துக்குப் பிறகு கடைசியில் வாசு வீட்டுக்குக் கிளம்பிய போது கணவனும் மனைவியும் வாசலுக்கு வந்து விடை கொடுத்தார்கள். இப்போது பேபி சந்திராவின் கரத்திலிருந்தது. இன்னும் உறக்கம் முற்றிலும் தெளியாத கண்களைக் கொட்டியது. அந்த வீட்டில் ஒரு தொட்டில் அவசியமே இல்லை என்று வாசு நினைத்துக் கொண்டான்.

“மாமாவுக்கு டாட்டா சொல்லும்மா பேபி!” என்று சந்திரா பேபியின் கையைப் பற்றி அவன் பக்க்மாக அத்ற்கு வலிக்காமல் ஆட்டினாள். ராஜன் பேபியின் கன்னத்தை மிருதுவாய் வருடினான்.

சற்று அழகான குழந்தையாகவாவது தேர்ந்தெடுத்டிருக்கக் கூடதா? ஆனால் இவ்விருவரும் – இந்த அம்மாவும் அப்பாவும்? அதைப் பார்க்கும் போது, அதைத் தீண்டும் போது, அதை நோக்கிப் புன்னகை செய்யும் போது, அது அழகாகி விடுகிறதே! எப்படி?

“நான் வரேன் ராஜா! வரேம்மா.”

பேபிக்கு டாட்டா சொல்ல வேண்டுமோ? “ டாட்டா பேபி!”

வாசு வேகமாய் வெளியே நடந்தான். பஸ் ஏறினான். தன் வீட்டை அடைந்தான்.

உள்ளே நுழையும் போதே அழுகைக்குரல் கேட்டது. “சனியனே, இனிமே கிளாஸைக் கீழே போடுவியாடா?…

“கை நழுவிடுச்சு, வேணுமிண்ணே போடலே…”

“அப்படி நீ சொல்லிட்டா ஆயிடுச்சா? எங்களுக்கு நஷ்டம் நஷ்டம் தானேடா? துக்கிரிச் சனியன், உன்னை உட்கார வச்சுத் தண்டச் சோறு போடறதுக்குப் பலன் இதுவா? இனிமே கிளாஸைக் கீழே போடுவியா? திரும்பவும் போடுவியா?”

“ஐயோ அடிக்காதீங்க அத்தை. இனிமே போட மாட்டேன். ஜாக்கிரதையாயிருக்கேன். அடிக்காதீங்க… ஐயோ நோகுதே. அத்தை அடிக்காதீங்க…”

வாசுவின் சகோதரியின் மகனும்– தாய் தந்தையை இழந்த அனாதையாய் அவனிடம் வளர்ந்து வருபவனுமான ஏழு வயதுச் சிறுவன் வாசுவின் மனைவியிடம் அடி வாங்கிக் கதறிக் கொண்டிருந்தான். இது போன்ற காட்சிகள் அவ்வீட்டில் புதியதல்ல. வாசுவே கூட எவ்வவளவோ முறைகள் அந்தப் பையனைத் திட்டியும் அடித்தும் இருக்கிறான். ஆனால் இன்று வாசு அக்காட்சியால் இன்னதென்று விளங்காத ஒரு கலக்கம் கொண்டு நின்றான்.

நண்பன் வீட்டு திடீர்க் குழந்தையை அழகாக்குவது எது என்பது அவனுக்கு அக்கணம் புரிகிறார்போல் இருந்தது.

– ஜூலை 1980

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *