கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2022
பார்வையிட்டோர்: 4,735 
 

(1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நிலைக்கண்ணாடியின் முன்னின்று தன்னை அலங்கரிப்பதில் ஈடுபட்டிருந்தாள், ஜானகி. கல்யாணராக ஆலாபனத்தை, அவளது உதடுகள் முனகிக்கொண்டிருந்தன. அவளது உள்ளத்தில் குதூகல அலைகள் எழும்பிக் குதித்தவண்ண மிருந்தன. அந்தக் குதூகல அலைகளிலே, அவளது சிந்தனைப் படகு ஒரே ஒரு எண்ணத்தைத் தாங்கிப் பாய் விரித்துச் சென்றது. “இன்றைக்குக் கூட்டிப் போவதாகக் கூறியிருக் கிறார்கள். ‘அவர்கள்’ வந்ததும் எப்படியாவது இன்று போகவேண்டும்.”

ஜானகி, ராஜாராமின் மனைவி. ராஜாராம் அவளை அடையக் கொடுத்துத்தான் வைத்திருக்க வேண்டும்; அவ்வளவு அழகி. நன்கு பழுத்துக் கனிந்த எலுமிச்சம்பழம் போன்ற மேனியுடையவள். ரொம்பவும் சிரமமெடுத்துச் செதுக்கிய சித்திரப் பதுமைபோல் இருந்தாள், அவள். அவளது யொவனம் நிறைந்த உடலில், அழகு பால் நுரைபோல நுரைத்துக்கொண்டிருந்தது.

அன்று அவள் தன்னை அலங்கரிப்பதில் ஒரு தனிக் கவனம் எடுத்துக்கொண்டாள். வாசனைத் தைலத்தால் நனைக்கப் பெற்ற கருங்கூந்தலை ஜடை பின்னி, ஜிலேபிக் கொண்டை போட்டிருந்தாள். மதர்த்து, கர்வத்தோடு நிற்கும் கருவிழிகளுக்கு மை தீட்டியிருந்தாள்; வலைக்கு எத்துப்படாத கெண்டை மீனைப்போல் துள்ளித் திரிந்தன அவை. நெற்றியிலேயமைந்த குஜிலிப் பொட்டு, சந்திரனை ஒட்டி, ரோஹிணியை நினைவுக்கிழுத்தது. கண்ணாடிக் கன்னங்களில், கம்மல் கற்களின் ஒளி ஜாலம் மினுமினுத்தது. இடுப்பிலே முன் கொசுவம் வைத்துக் கட்டிய கராச்சிப் புடவையின் முன் தாவணி, கருப்பு ஜம்பர் ரவிக்கையின் மேல் மாதவிக், கொடிபோல, படர்ந்து கிடந்தது. செளந்தர்ய லக்ஷ்மியே இறங்கி வந்ததுபோல இருந்தது, அவள் அலங்காரம்.

அலங்காரம் ஒருவாறு முடிவு பெற்றது, தலையில் பூச்சூட வேண்டியதொன்று தான் பாக்கி. புஷ்பத் தட்டிலே கிடந்து புன்னகை புரியும் ரோஜா மலர்களை எடுத்துத் தனது கொண்டை வளைவில், ஒவ்வொன்றாகச் சொருக ஆரம்பித்தாள்.

வாசற்கதவைத் தடாலென்று திறந்து கொண்டு, பேய்க் காற்றைப்போல, உள்ளே நுழைந்தான், ராஜாராம். கையி லிருந்த குடையைம், ஆபீஸ் கட்டையும் எறிந்துவிட்டு ‘காப்பி ஆயிற்று?” என்றான் கொஞ்சம் விறைப்பாக. அவனது நெஞ்சினுள் புகையும் சினத்தின் ஜூவாலையால் முகம் சிவந்துபோயிருந்தது.

“இல்லை. அதற்குள்………..”’ – ஜானகி ராஜாராமின் நிலையைக் கண்டு உள்ளூர நடுங்கினாள்.

“ஏன்?”

“இன்றைக்குச் சினிமாவுக்குக் கூட்டிப் போவதாகச் சொன்னீர்கள். அதற்கு உடை உடுத்திக் கொண்டேன், காப்பி வேண்டுமானால்……”

“களைத்து வருகிறவனுக்கு ஒரு கப் காபி கொடுக்க நேரமில்லையோ? அலங்காரம் பண்ணிக் கொண்டாளாம், அலங்காரம்! எதுக்கு இத்தனை அலங்காரம்? கொட்ட கையில், எவன் உன் அழகைப் பார்த்து மயங்கணும்?” கொஞ்சமும் யோசிக்காமல் ராஜாராம் இவ்வார்த்தைகளை வீசினான்.

ஜானகியின் உள்ளம் ஒரு குலுங்கு குலுங்கிற்று. அவள் கையிலிருந்த ரோஜா மலரின் இதழ்கள் அங்க அதிர்ச்சியால், உதிர்ந்து விழுந்தன. அவளது கண்டிக் கன்னத்தில் குபீலென்று ரத்தம் பாய்ந்தது. ராஜாராயின் விஷ்ந்தோய்ந்த வார்த்தை அம்புகளின் தாக்குதலை ‘அவளால் ‘தாங்க முடியவில்லை. வெடிச் சப்தம் கேட்ட மான்போல், உள்ளே ஓடினாள், அவளது உள்ளம் நிலை கொள்ளாமல், நங்கூரமற்று, பாய்மரமொடிந்த படகைப்போல், வேதனைப் புயலில் தத்தளித்தது.

“நான் யாருக்காக அலங்காரம் செய்து கொண்டேன். அவருக்காகத்தானே. அவருடைய களைத்த மனத்தில் களிப்பூட்டுவதற்குத்தானே. அவருடைய கட்டளையின் பேரில் தானே நானும் அலங்கரித்துக் கொண்டேன். கணவன் சொல்லைக் கடமையாக உணர்ந்து நடந்ததற்கா, இந்த அபவாதம்? ‘எதுக்கு இத்தனை அலங்காரம்?. எவனை மயக்க?’ – அப்பா! எவ்வளவு கர்ண கடூரமான வார்த்தைகள், இவை! அவர் இதைக் கொஞ்சமாவது உணர்ந்து கூறினாரா? ஒரு கணவன் தன் மனைவியிடம் பிரயோகிக்கும் வார்த்தைகளா, இவை? கடமையை உணர்ந்து பணிவிடை செய்ய எண்ணும் மனைவிக்கு அளிக்கும் பரிசா, இவ்வார்த்தைகள்!…ஆனால்…ஆனால்…!

“பணிவிடை! அவருக்குப் பணிவிடை செய்வது இப்படியா? இல்லை, ஆபீஸிலிருந்து களைத்து வீடு வந்து சேரும் அவருக்கு விச்ராந்தியாக இருக்க, நான் கட்டாயம் காபி தயாரித்துக் கொடுத்திருக்க வேண்டும்? கடமையை மறந்து, களிப்பில் இறங்கிய ‘எனக்கு இது வேண்டும்! ஆனால் இந்தச் சிறு தவறுக்கு இத்தனை பெரிய அபவாதமா?”.

“இத்தனை பெரிய அபவாதமா?” என்று அவள் நினைக்க நினைக்க, அவளுடைய உள்ளம் பொருமியது. உள்ளத்தின் பொருமல், கண்களின் வழியாய்க் கண்ணீ ரை உதைத்துத் தள்ளியது.

ராஜாராம் வேர்வையில் நனைந்த உடைகளைக் கழற்றி, ஸ்டாண்டில் மாட்டிவிட்டு, கைகால் கழுவக் குழாயடிக்குப் போனான். போகிற போக்கில், பக்கத்து அறையுள் சென்ற ஜானகியைப் பார்க்க எண்ணினான். ஆனால், உள்ளே இருந்து விம்மி விம்மித் தாளும் சோகப் பொருமலைத்தான் அவன் கேட்க முடிந்தது. அவனது மனத்தின் அலைகளை இழுத்துவீட்டு உயரச்செய்தது, அந்தப் பொருமல். ஒன்றும் ஓடாமல், மாடியை நோக்கி விர்ரென்று சென்றான், அவன். இன்று அவன் மனம் ஒரு நிலையிலில்லை. காரணம் ஆபீஸில் நடந்த ஒரு சம்பவம்.

நாற்காலியில் செயலற்றுச் சாய்ந்திருந்தான், அவன். அவனது சிந்தனையோ அடிபட்டு விழுந்த’ கருவண்டைப் போல், சுழன்று சுழன்று துடித்தது.

“என்ன மிஸ்டர் ராஜாராம், ‘புரோபேஷன் ‘ பீரியடி (3வயே இந்த மாதிரியெல்லாம் ஆரம்பித்தால், வாழ்க்கையில் உருப்படுவது தான் எப்படி?” என்றல்லவா ஆபீஸர் என்னைக் கேட்டுவிட்டார். என்னைப்பற்றி அவர் என்ன வெல்லாம் நினைத்திருப்பார்? இருந்தாலும், இந்தக் கல்யாணமய்யர் என் பெயரைக் கூறி, அனாவசியமாகப் பழியில் பங்கு கோரவேண் டாம். ஹெட் கிளார்க்காம்; ஹெட் கிளார்க்! அதற்காக, மற்ற பிளார்க்குகளைப்பற்றி, எது வேணுமானாலும் கூறலாமா? அந்தப் பேப்பருக்குக் கலியாணமய்யர் லஞ்சம் வாங்கியதும் எனக்குத் தெரியத்தான் செய்யும். ஆனால், நாம் நல்ல பிள்ளையாட்ட ஒதுங்கிப் பிழைக்கலாமென்று. இதைப்பற்றி ஒன்றுமே கூறாதபோது, இவர் ஏன் என் பெயரையும் இழுக்க வேண்டும்? ஆபீஸர் கேட்டாரோ இல்லையோ, “நான் மட்டுமில்லை. எல்லாக் குமாஸ்தாக் களுமே…” என்று எவ்வளவு சாதுரியமாகப் பேச்சை இழுத்தார், அவர். பாவி மனுசன்! தான் செய்த பழியின் பாவத்திற்கு, பங்காளியா சேர்க்கிறார்? ஆனால்……..

“ஆபீஸில் நடந்ததுக்கும், ஜானகியைக் கோபிப்பதற்கும் என்ன சம்பந்தம்? சே! அவளைப் பார்த்து என்ன சொல்லி விட்டேன். வீட்டிலே இருக்கிற அவள், களைத்து வரும் என்னை மகிழ்விப்பதற்காகத் தானே, அலங்கரித்துக் கொண்டாள். ஆத்திரத்தில், மனக்கசப்பில் என்னவெல்லாமோ உளறிவிட்டேனே. “சினிமாவிற்குப் போகலாம். சாயந்திரம் தயாராயிரு” என்று நான் தானே சொன்னேன். என் சொற்படி. நடந்ததற்கு மரியாதையா, இது? பாவம், அவள் பெண்ணல்லவா? என்னுடைய விஷ மூச்சில் பிறந்த வார்த்தைகளால் கருகிவிட்டாளே, அவள் யாருக்காக அலங்கரித்துக் கொள்ள வேண்டும்? எனக்கல்லாமல், வேறு யாருக்காக இருக்கமுடியும்? எனக்காகத்தான் அலங்கரித்துக் கொண்டாள். தாங்க முடியாத மனக்கசப்புடன் வந்த என்முன், திகட்டாத தேன் போல அலங்கார பூஷிதையாக வந்து நின்ற ஜானகியின் முன்னிலையில் ஏற்பட்ட உணர்ச்சிச் சிதைவினால், என்னத்தை யெல்லாமோ உளறிவிட்டேனே! எவன் மயங்க வேண்டும்? என்னைத் தவிர வேறு யாருக்கு இந்தப் பிரத்தியேக உரிமை உண்டு? போன வருஷம் நான் ஆபீஸிலிருந்து வரும்போது, நானே அவளுக்குப் பூ வாங்கிவந்து கொடுக்கவில்லையா? என் கரங்களாலேயே எத்தனையோ தடவை அதைச் சூட்ட வில்லையா? அந்த நாட்களெல்லாம் கனவா? இல்லை. ஆனால்……….!”

“மிஸ்டர் ராஜாராம்! ராஜாராம்!”

தெரு வாசலிலிருந்து வந்த குரல், அது ராஜாராமின் சிந்தனைச் சக்கரம் சட்டென்று நின்றது. மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தான், வருகிற வழியில் ஜானகியைப் பார்த்தான். அவள் ஜடையை அவிழ்த்துச் சாதாக் கொண்டை போட்டிருந்தாள். அவள் தலை இருண்டிருந்தது.

ஒரு ரோஜா மலராவது அதில் ஓளி செய்யவில்லை. அவள் கட்டியிருந்த கராச்சிப் புடவை, கொடியில் சாவதானமாகத் தொங்கிக்கொண்டிருந்தது.

வாசலில் வந்து பார்த்தான். ஹெட் கிளார்க் கல்யாணமய்யர் நின்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும், ராஜாராமுக்கு ஆங்காரம் பொத்துக்கொண்டு வந்தது. அப்படியே அவர்மேல் பாய்ந்து, மென்னியைத் திருகிவீடலாமா என்று எண்ணினான். ஆனால்……..

“மன்னிக்க வேண்டும், தம்பி” என்று பரிவோடு எடுத்த ஈடுப்பிலேயே வார்த்தைகள் வெளிவந்தன.

ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு “உட்காருங்கள்” என்றான் ராஜாராம்.

“தம்பி, நான் உங்கள் பேரையும் அனாவசியமாக இழுத்து விட்டேன். ஏதோ படபடப்பில் இன்னது சொல்கிறேம் என்று அறியாமல் சொல்லிவிட்டேன். அதற்காக இப்போது வருந்துகிறேன்”

“இதில், வருந்துவதற்கு என்ன இருக்கிறது? பாவத்திலும் பங்கு சேர்க்கத் துணிந்த பின் வருத்தம் எதற்கு?”

“அப்படிச் சொல்லக்கூடாது தம்பி. உங்களைப் போன்ற நல்ல பையனின் செல்வாக்கைக் குறைத்துவிட்ட பாவம் என்னை விடாது!”

“பாவம்” புண்ணியம் பார்க்கிறதாயிருந்தால் முதலிலேயே இந்த வழக்கத்தில் ஏன் ஸார் தலை, கொடுக்க வேண்டும்?”

“அப்படிப் பார்த்தால் முடிகிறதா? அளக்கிற படி செலவிற்கே காணவில்லை, மூத்த மகன் பி.ஏ படிக்கிறான். இளையவன் படிப்பு அப்படி அப்படித்தான். இன்னும். இரண்டு பெண்களுக்குக் கல்யாணமாகவேண்டும். இந்தப் பஞ்ச காலத்திலே, இவர்கள் கொடுக்கிற எண்பது ரூபாய் எந்த மூலைக்கு? ‘வாங்காமல்’ இருக்கமுடியுமா?”

“இருந்தாலும், மானம் வெட்கத்தை விட்டு …..”

“மானத்தையும் வெட்கத்தையும் கவனித்தால், பெற்ற பிள்ளைகளை நடுத்தெருவில் விடவேண்டியதுதான் தம்பி !’’

ராஜாராம் பெருமூச்சுவிட்டான். கல்யாணமய்யர் அசையாமலிருந்தார்.

“தம்பி, என்னைப்பற்றி என்னமும் மனசில் வைத்துக் கொள்ளாதே. இல்லையென்று சொல்லு தம்பி!” என்றார் கல்யாணமய்யர், ராஜாராமின் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டு. ராஜாராமுக்கு ஒன்றுமே ஓடவில்லை.

“நான் ஒன்றுமே நினைக்கவில்லை, ஸார்!” என்றான் சாந்தத்தை வருவிக்க முயன்று கொண்டு.

கல்யாணமய்யர் விடை பெற்றுக்கொண்டு போய் வீட்டார். ராஜாராம் வீட்டினுள் நுழைந்தான்.

தான் நடந்துகொண்ட அசம்பாவிதத்திற்காக ஹேட் கிளார்க் என்னிடம் மன்னிப்புக் கோரினார். நான் நடந்து கொண்ட அசம்பாவிதத்திற்கு ஜானகியிடம் மன்னிப்புக் கோரவா?” அவன் உள்ளம் அலைபாய்ந்தது.

ஜானகியிடம் பேசக்கூட அவனுக்குத் துணிவில்லை? கொஞ்ச நேரம் அசையாமல் அப்படியே நின்றான். “ஜானகி யைச் சாந்தப்படுத்து! படுத்து!’ என்று மனம் கதறியது, விறுவிறு என்று ராஜாராம் சமையலுள்ளில் நுழைந் தான்.

“காப்பி ஆயிற்று?” ரொம்பவும் தயக்கத்தோடு கேட்டான், முகத்தில் எழுதியிருந்த பீதியை மறைக்க முயன்று கொண்டு.

“ஆய்விட்டதே!” என்று காப்பியைக் கப்பில் எடுத்துக் கொண்டு, புன்னகையோடு வந்தாள் ஜானகி.

புன்னகையைக் கண்ட ராஜாராமின் மனம் குளிர்ந்தது; பீதி மறைந்தது.

காப்பியை வாங்கிச் சாப்பிட ஆரம்பித்தான். சாப்பிடும் போதே, அந்தச் சூடு பொருந்திய காப்பியில் எழுந்த தேன் கூடு போன்ற துரைக் குமிழிகள் உடைந்து மடிவதைக் கவனத்தான், சிறிது நேரம் மௌனம், பின் மீதிக் குமிழி களையும் ஊதி ஒழித்துவிட்டுக் காப்பியைச் சாப்பிட்டான்.

“நேரமாகிறதே, பிலிமுக்குப் போக வேண்டாமா?” என்றான், கண்ணீர் வழிந்து, வரி கிடந்த ஜானதியின் கன்னங்களை பார்த்துக்கொண்டு.

“இல்லை. இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம்” என்றாள் ஜானதி, தன் கையிலிருந்த நுரையற்ற மீதிக் காபீயையும்–ராஜாராமின் கையிலிருந்த டம்ளரில் ஊற்றி விட்டு.

– க்ஷணப்பித்தம் – முதற் பதிப்பு: அக்டோபர், 1952 – மீனாட்சி புத்தக நிலையம், 50, மேலக் கோரத் தெரு : மதுரை கிளை : 228, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *