கவிதைப்போட்டி

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 28, 2021
பார்வையிட்டோர்: 4,073 
 

‘காதம்பரி’ வார இதழில் கவிதைப்போட்டி வைத்திருந்தார்கள்.

ஒரு கவிதைக்கு உண்டான எதுகை, மோனை, யாப்பு, இலக்கணம் என்று எதுவும் இல்லாமல் நகைச்சுவையாகவோ, நக்கலாகவோ, குத்தலாகவோ இருக்கலாம். ஆனால் ரசிக்கும்படி மட்டுமே இருக்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை.

நிறைய கவிதைகள் போட்டிக்காக வந்திருந்தன.

சப் எடிட்டர் தேர்வு செய்து அனுப்பியிருந்த சில கவிதைகளை எடிட்டர் ராமநாதன் ஆர்வத்துடன் படித்துப் பார்த்தார்…

சிரித்துப்பார், உன் முகம் உனக்குப் பிடிக்கும்; மற்றவர்களை சிரிக்க வைத்துப்பார்; உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.

நீ நேசிக்கும் இதயத்தில் பல்லாண்டு காலம் வாழ்வதைவிட, உன்னை நேசிக்கும் இதயத்தில் சில நொடிகள் வாழ்ந்து பார், இதயத்தின் சுகம் தெரியும்.

வளர்ந்தபின் வளைவது பெருமை; வளைந்தே இருப்பது சிறுமை.

விரும்புவதால் கருவறையில் மீண்டும் இடம் கிடைப்பதில்லை; வெறுப்பதால் கல்லறையும் நம்மை விட்டுப் போகப் போவதில்லை. இருக்கும்போதே மகிழ்ச்சியுடன் இருப்போமே!!

மனநிறைவு என்பது இயற்கையாகவே நம்மிடம் உள்ள செல்வம்; ஆடம்பரம் என்பது நாம் தேடிக்கொள்ளும் வறுமை.

சில நேரங்களில் தனிமை கடினம்; சில நேரங்களில் தனிமைதான் இனிமை.

மரணத்தைப் பற்றிக் கவலைப்படாதே; நீ இருக்கும்வரை அது வரப்போவதில்லை; அது வரும்போது நீ இருக்கப் போவதில்லை.

புரியாததைப் புரிந்து கொள்ளுங்கள்; புரிந்ததைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; வெற்றி நிச்சயம்!!

வாழ்க்கை உன்னை எதிர்பாராத இடங்களுக்கு கூட்டிச் செல்லும்; ஆனால் அன்புதான் உன்னை வீட்டிற்கு அழைத்து வரும்.

அறிவுரை தேவைப்படும் போதுதான் ஆணவம் கண்ணை மறைக்கும்.

குண்டா இருந்தால் கொலஸ்ட்ரால் இருக்கான்னு கேக்கறாங்க; மெலிந்திருந்தால் சுகர் இருக்கான்னு கேக்கறானுங்க; கோபப்பட்டால் பிரஷர் இருக்குதாங்கறாங்க; அமைதியா இருந்தா ஏதும் பிரச்சினையான்னு கேட்குறாங்க… என்னா லைப்டா சாமி….

பெருமையா சொல்லிக்க முடியாதது விபச்சாரியிடம் வைத்திருக்கும் உறவு; லஞ்சமா வாங்குகிற பணம்.

வரப்புத் தகராறுக்கு கோர்ட்டுக்குப் போனா, வக்கீல் பீஸுக்கு வயலையே வித்தாகணும்.

ஒழுக்கம் இல்லாத கல்வி மூடி இல்லாத சோடா மாதிரி!!

படிக்கும் புத்தகத்தை பாதியில் புடுங்குவது, முதல் இரவு அறையின் கதவைத் தட்டுவது போலாகும்.

காசு வாங்காமல் கடமையாற்றியது அந்தக் காலம், அது பொற்காலம். கடமையாற்ற காசு வாங்கியது முற்காலம். காசு வாங்கியும் கடமையாற்றாதது தற்காலம்.

வாழ்க்கை என்பது நீ சாகும்வரை அல்ல; மற்றவர் மனதில் நீ வாழும்வரை.

நாம் தேவையில்லை என்று சிலர் நினைக்கத் துவங்கும் முன், நீ விலகி நிற்கக் கற்றுக்கொள்வது சிறந்தது.

ஆசைப்படுவதை மறந்து விடு; ஆனால் ஆசைப்பட்டதை மறந்து விடாதே!

என்னதான் நெருப்புக் கோழியாக இருந்தாலும், அதனால் அவிச்ச முட்டை போட முடியாது!

திடீர் சந்தேகங்கள்

தண்ணீரில் இருக்கும் மீனுக்குத் தாகம் எடுக்குமா?

மரத்தில் தூங்கும் பறவைகள் கீழே விழுமா?

‘நன்றாக மேம்படுத்தப்பட்ட நாய் உணவு’ அதை யார் டேஸ்ட் பண்ணிப் பார்த்தார்கள்?

பணம் மரத்தில் விளைவதில்லை, பின் ஏன் வங்கிகளுக்கு ‘branches’ ‘ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்?

நாம் தண்ணீருக்குள் அழ முடியுமா?

வட்டமாக இருக்கும் பீட்ஸாவிற்கு ஏன் சதுர டப்பா?

பசை ஏன் பசை பாட்டிலில் ஒட்டுவதில்லை?

மனைவி

ஒருவரே பல கவிதைகள் எழதியிருந்தார்.

கணவனின் வாயைப்பூட்டி அதன் சாவியை வத்திருப்பவளின் பெயர்.

பேன்களின் குடியிருப்பான கூந்தலை பிடித்துக்கொண்டு இயற்கை மணம் உண்டுதானே இதில்? என்று அதட்டிக் கேட்பவளே மனைவி.

பணத்தைச் செலவழிப்பது எப்படி என்ற கேள்விக்கு இலக்கணம்தான் மனைவி.

ஒருபொய் உண்மையாக வேண்டுமா? மனைவியிடம் அதை ரகசியம் வெளியே சொல்லிவிடாதே என்று சொன்னாலே போதும்.

கணவன் என்ற போட்டோவிற்கு, மனைவியே நான்கு பக்கமும் சட்டமாவாள்!!

மனைவி என்பவள் சுவற்றில் ஆணியில்லாமல் தொங்கும் கேலண்டர்.

மனைவியிடம் அதிக உண்மையும் சொல்லக்கூடாது; அதிக பொய்யும் சொல்லக்கூடாது.

மனைவி என்பவள் நான்கு பக்கமும் வீடியோ கேமிரா பொருத்தப்பட்ட உருவம்.

உண்மை வீரன், மனைவியின் பீரோவை அவள் முன்பே திறப்பவன்.

நல்ல கணவன், சரி, சரி, சரி என்று மனைவிக்கு தலையாட்டுபவன்.

வாஷிங் கம்பெனிக்காரர்கள் சர்வே எடுக்க வந்தார்கள். மனைவியிடம், “நீங்கள் துணிகளைத் துவைக்க எதை உபயோகிக்கிறீர்கள்?”

பதில்: “என் கணவனை…”

உன்னைப் பற்றித் தெரிய வேண்டுமா? உன் மனைவியிடம் கேட்டுப்பார் உன் யோக்யதையை; உன் மனைவியைப் பற்றித் தெரிய வேண்டுமா? பக்கத்து வீட்டுக்காரியிடம் கேட்டுப்பார் அவள் யோக்யதையை…

மனைவி புரட்டிப் புரட்டி செலக்ட் பண்ணினா புடவை; செலக்ட் பண்ணிட்டு புரட்டிப் புரட்டி எடுத்தா அது புருஷன்!!!

நீ மனைவி வேணும்னு நினைச்சா அது ஆசை; அப்புறம் சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சா, அது பேராசை.

மனைவி கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்து சமாளிப்பவன் புத்திசாலி; வாங்கிக் கொடுக்கிறேன் என்று சொல்லிச் சொல்லியே சமாளிப்பவன் திறமைசாலி!!

அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்; மனைவி பேசிப் பேசியே கொல்வாள்.

கல்யாணம் ஆகி மனைவி வந்தபின் ஒண்ணு அடி விழும், இல்லேன்னா முடி விழும்; அவ்வளவுதாங்க வாழ்க்கை.

மனைவி சொன்னால் கணவனுக்கு மகிழ்ச்சி; “ஊரிலிருந்து என் தங்கச்சி வரா…”

பட்டுச்சேலை கட்டினா மனைவி உட்பட எல்லா பெண்களுக்கும் எடுப்பாகத்தான் இருக்கும்; அதை வாங்கித்தர புருஷனுக்கு கடுப்பாகத்தான் இருக்கும்.

மூக்கும் முழியுமா இருக்கிற பொண்ணை விட, நாக்குக்கு நயமா சமைக்கிற பொண்ணுங்க தான் ஆண்களுக்குத் தேவையாம்!!!

யாரோ பெத்த பொண்ணை மனைவியா ஏத்துக்கிட்டு, காலம் முழுவதும் சோறுபோடும் உயர்ந்த உள்ளமே ‘ஆண்’.

கணவன் அடித்த காயங்கள் வலிக்கவில்லை; மாமியார் ஊற்றிய மண்ணெண்ணெய் கூட நாற்றமில்லை; பரதேசி மகளென்று புகுந்த வீடு கூறியதுகூட துக்கமில்லை; ஆனால் துணிப் பையோடு ஒவ்வொரு முறையும் பிறந்த வீட்டில் படியேறும்போது நெஞ்சம் கனக்கிறது. பணம் தின்னி கழுகளுக்கு என் தந்தையின் முதுகெலும்புதான் இரையாக வேண்டுமா???

அம்மா ஏன் எனக்குத் திருமணம் செய்வித்தாய்? மீசைக்காரனாக இருந்த என்னை தாடிக்காரனாக ஆக்கி விட்டாயே??

மின்சாரச் செலவு அதிகமாகிறதே என்று சிக்கனப் படுத்தினான் கணவன். சில மாதங்களில் மனைவி வைத்தாள் பிரசவச் செலவு!!!

நானும் வரதட்சிணை தர சம்மதிக்கிறேன். ஆனால் சிறு நிபந்தனை. எனக்குப் பதில் நீங்கள் குழந்தை பெற்றுக் கொண்டால்!!

தாய்க்குப் பின் தாரம்; தாய்க்குப் பின்பு பாரம்.

காதலியாய் அவள் தந்தது புன்னகை; மனைவியாய் அவள் கேட்டது பொன் நகை!!

அவளுக்கு சிரிப்பு மூணு முடிச்சு விழும் வரை; அவனுக்கு அதைப் போடும் வரை!!!

கொஞ்சி மகிழ்ந்தால் பூவுக்குச் சமம்; பொங்கி எழுந்தால் புயலுக்குச் சமம்.

புடவையால் மூடியிருக்கும் புரியாத புதிர்!

பெண்ணென்றால் பூத்துக்குலுங்கும் ஆண்கள், பெண்டாட்டி என்றால் வியர்த்து ஒழுகுவது ஏன்???

கஷ்டப்பட்டு வளர்த்தாள் தாய்; கஷ்டப்படாமல் வளைத்தாள் தாரம்!!!

நெருப்பை ஒளித்து வைத்திருக்கும் ஐஸ் பெட்டி.

எனக்கு சம்சாரம், என் அம்மாவிற்கு மின்சாரம்.

எடிட்டர் ராமநாதனுக்கு ‘மனைவி’ கவிதைதான் மிகவும் பிடித்திருந்தது. ஏனென்றால் தன் மனைவியையே பழி வாங்கிவிட்ட ஒரு அலாதியான திருப்தி அதில் கிடைத்தது. எனவே அதையே முதல் பரிசுக்கு தேர்வு செய்தார்.

சப்-எடிட்டரைக் கூப்பிட்டு கவிதை எழுதியவரின் சென்னை வீட்டிற்குச் சென்று பரிசுப் பணத்தைக் கொடுத்துவிட்டு, அவரைப் பேட்டிகண்டு, மனைவியுடன் அவரை அடுத்தவார அட்டைப்படத்தில் போட வேண்டும் என்று கட்டளையிட்டார்.

சப்-எடிட்டர் போனார். பின்பு அங்கிருந்து எடிட்டர் மொபைலுக்கு போன் செய்தார்.

“கவிதை எழுதியவரைப் பார்த்து பரிசுப் பணம் கொடுத்தாயா? பேட்டி முடிந்ததா, மனைவியுடன் அட்டைப் படம் மிக நன்றாக வர வேண்டும் புரிஞ்சுதா?”

“புரிஞ்சுது சார்…. ஆனா…”

“என்னய்யா ஆனா கீனான்னு இழுக்கிற?”

“அவருக்கு மூணு பொண்டாட்டி சார்… மூவரையும் அவரோடு அட்டையில் போடட்டுமா?”

Print Friendly, PDF & Email

1 thought on “கவிதைப்போட்டி

  1. நக்கலான கதை! நன்றாக வெளுத்து வாங்கினீர்கள் கண்ணன் ஸார்!
    லென்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *