ஏழாம் பக்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 17, 2022
பார்வையிட்டோர்: 3,787 
 

இன்டர்நெட் யுகத்திலும் தினசரி செய்தித்தாள் படிப்பவர்களில் ஒருவரான கோபாலன் – தலையங்கத்தில் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு உள்ளே அவர் மனைவி சாருவுக்கும் மகள் ரேவதிக்கும் காரசாரமாக பட்டிமன்றம் நடந்து கொண்டிருந்தது. அவர் எப்போதும்போல் கண்டு கொள்ளாமல் இருந்தார்.

‘அம்மாவுக்கும் பொண்ணுக்கும் வேறே வேலையே இல்லை…’ என்று அவர் முணுமுணுத்தபோது “நீங்களே சொல்லுங்கோ” என்றவாறு சாரு கூடத்துக்கு வந்தாள்.

“என்ன சொல்லணும்?” என்று அவர் தலையைத் தூக்கியபோது ‘பை ஃபோகல்’ கண்ணாடி மூக்கு மேட்டில்சிறிது சரிந்தது.

“அதான்…முகுந்தன் அமெரிக்காவுலேந்து வந்திருக்கானாமே…நம்ம பாக்க அவன் இங்க வர்றதுக்கு நீங்கஒப்புக்க மாட்டீங்கன்னு ரேவதி சொல்றாளே…”

“காலம்பர எழுந்தவுடனேயே இந்த விவகாரத்தை ஏன் ஆரம்பிக்கற சாரு?”

அதுவரை பேசாமலிருந்த ரேவதி, “நான்தான் சொல்றேனே…முகுந்தன் அண்ணா இங்க வர்றதுல அப்பாவுக்குதுளிகூட இஷ்டமில்லேன்னு…விடேன் அம்மா!”

முகுந்தன்…முகுந்தன்…

அவனைப்பற்றி சாருவுக்கு எந்தவித குழப்பமுமில்லை. இது ரேவதிக்கும் கோபாலனுக்கும் ஏன் புரியவில்லைஎன்பது சாருவுக்கு புதிராகவே இருந்தது.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்… அப்போது ரேவதிக்கு ஒன்பதிருக்கும். ரேவதியின் அண்ணன் சாரதிக்குபதினைந்து. திடீரென்று ஒரு நாள் சாரதி பள்ளியிலிருந்து வீடு திரும்பவேயில்லை. குடும்பத்தை சோகவெள்ளத்தில் தள்ளிவிட்டு எங்கே போனான் என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை. சாரு நடை பிணமாக, கோபாலனுக்கு மௌன அழுகையே தண்டனை என்றாயிற்று. ரேவதிக்கு ஒன்றும் புரியாத வயது.

அடுத்த ஆண்டு ஊர்ந்து செல்ல, கோபாலன் ஒரு ஏற்பாட்டை செய்தார். அவருடைய நண்பர் மூலமாக ஒருசெய்தி வந்தது. சொந்த ஊரில் முகுந்தன் என்ற பையனுக்கு சென்னையில் காலேஜ் அட்மிஷன்கிடைச்சிருக்காம்… தங்கி படிக்க இடம் வேண்டியிருந்ததாம்…

“முகுந்தனை நம்ம கூட தங்க வைச்சுக்கலாமா…சாரு?” சாருவுக்காகத்தான்…

“அவனுக்கு எத்தனை வயசாம்?”

“இப்பதானே காலேஜ்ல சேரப் போறான்…பதினேழு…பதினெட்டு தேறுமா?”

“சரி…சீக்கிரமே வரட்டுமே சென்னையிலே கொஞ்சம் பழகிக்க வேண்டாமா?”

சொந்த மகன் சாரதியைஇழந்த தாயின் ஓலம் கோபாலனுக்குக் கேட்டது.

அடுத்த வாரமே ‘இங்க எல்லாமே எனக்கு புதுசு’ என்ற மிரண்ட பார்வையுடன் வந்து நின்ற முகுந்தனைப்பார்த்து கோபாலனும் சாருவும் ‘இவன் நம்ம சாரதி போலவே இருக்கானே’ என்ற எண்ணத்துடன் திகைத்துவிட்டனர்.

“வாப்பா, சாரதி…” என்று வரவேற்ற சாருவின் குரல் கம்மியத்து.

“நான் முகுந்தன்…” என்று சிரித்த முகத்துடன் சொன்னான்.

முகுந்தனை ‘சாரதி’ என்று கூப்பிடாமல் பழகிக் கொள்ள சாருவுக்கு ஒரு மாதத்துக்கு மேல் ஆனது. விரைவிலேயே அவனும் அவர்கள் குடும்பத்தில் ஒருவனாக ஒன்றினான்;

‘அண்ணா, அண்ணா’ என்று ரேவதியும் அவனுடன் பழகினாள்.

கல்லூரிப் படிப்பை முடித்ததும் மேற் படிப்புக்கு அமெரிக்கா போகும் வாய்ப்பு கிடைக்கவே, அவன் புறப்பட்டான்.

முகுந்தன் அமெரிக்கா போய் ஆண்டுகள் ஓடின…

சில நாட்களுக்கு முன் அவன் சென்னை வந்திருப்பதாய் கோபாலனுக்கு செய்தி எட்ட, சாருவுக்கு இருப்புகொள்ளவில்லை. “முகுந்தனை எப்ப பாக்கலாம்?” என்று துளைக்க ஆரம்பித்தாள்.

“அவனை பாக்காம இருக்கறதே நல்லது, சாரு!” கோபாலனின் குரலில் கடுமை.

“என்ன இப்படி பேசறேள்? அவன் நம்ம சாரதி மாதிரின்னு எத்தனையோ தடவை நீங்களே சொல்லியிருக்கேள்…”

“அதெல்லாம் அப்போ சொன்னது…’சாரதி, சாரதி’ அப்டின்னு மனசுல நினைச்சுண்டு வாயால மட்டும்‘முகுந்தன்’ னு கூப்டுண்டு, அவனை என்னமா பாத்துண்டே நீ உன் உணர்ச்சிகளை…பாசத்தை நொடியில நசுக்கிட்டான் பாத்தியா அதைதான் என்னால தாங்கிக்கவே முடியலே…”

“ஏதோ கோவத்துல ஒரு நாள்…அவன் என்னை பாத்து,‘நீ ஒண்ணும் என் அம்மா இல்லேன்னுசொல்லிட்டான்’. அதனாலே அவன் என் பிள்ளை இல்லேன்னு ஆயிடுமா என்ன? சாரதிதான் ஏற்கெனவே போயிட்டான்…முகுந்தனையும் இழக்க முடியாம தவிச்சேன்…அவன் எவ்ளோ தப்பு பண்ணியிருந்தாலும்பரவாயில்லை… அவனை நான் பாத்தாகணும்…” தன் புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டுஉள்ளே போனாள் சாரு.

துக்கம் தன்னையும் தீண்ட கோபாலன் தனக்குள்ளாகவே ‘இந்த சாரு மாறவே மாட்டாளா…பெருமாளே!’ என்று சொல்லிக் கொண்டார்.

மாலையில் ரேவதி வேலையிலிருந்து திரும்பிய சமயம் கோபாலன் வெளியே போயிருந்தார்.

ரேவதிக்கு வெளியே ஆட்டோ வந்து நின்ற சத்தம் கேட்டது. பொருட்படுத்தாமல் உள்ளே போனாள். ‘டக், டக்’ என வாசற் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்கவே, சாரு கதவைத் திறந்தாள்.

சாருவுக்குத்தன் கண்களையே நம்பமுடியவில்லை…

“நான்தான் முகுந்தன்…உள்ளே வரலாமா, அம்மா?”

“வாப்பா…வா, வா…முகுந்தா…” இந்த அம்மாவை மறக்கவேயில்லை. கண்கள் குளமாயின…

குரல்கள் கேட்டு வந்த ரேவதி மலைத்துப் போய் நின்றாள். ‘முகுந்தன் எவ்ளோ மாறிப் போய் விட்டான்…’. அவள் தன்னை சுதாரித்துக் கொண்டு, “வா… வாங்க அண்ணா…எப்போ அமெரிக்காவுலேருந்து வந்தே வந்தீங்க?” தடுமாறினாள். பழைய முகுந்தன் இல்லையே… பி. எச்.டி. பட்டதாரி…ஒருமையில் அவனைஅழைத்தால் சிறுமையாகப் படுமோ…?

மேலே தொடர்ந்தாள். “நீங்க பி.எச்.டி. வாங்கிட்டீங்கன்னு கேள்விப்பட்டோம்”

“தேங்க்யூ…நானா உங்களுக்கு தெரிவிக்கலேன்றதை இப்படி சொல்றியா, ரேவதி?”

சிரித்துக் கொண்டேமுகுந்தன் சொல்லி முடிக்கவும், வாசலில் கோபாலன் வந்து சேரவும் சரியாக இருந்தது.

“நீ எங்க மேல வைச்சிருக்கிற மதிப்பு, மரியாதையை வேற எப்படி சொன்னா உனக்குப் புரியும்?” என்றுகோபாலனின் தொனியிலிருந்து அவர் தன்னை என்றுமே மன்னிக்க மாட்டார் என முகுந்தனுக்குத் தோன்றியது.

“சார் நீங்க என் மேல கோபப்படறது நியாயம்தான்…” என ஆரம்பித்த முகுந்தனை, சாரு மேலே பேசவிடாமல்தடுத்தாள்.

“முகுந்தா…நீ இப்படி உட்காரு நான் டிபன், காபி எடுத்துண்டு வர்றேன்”

என்று சொல்லிவிட்டு, கோபாலன்மீது ‘நீங்க சித்த பேசாம இருங்கோ’ பார்வையை வீசிவிட்டு உள்ளே விரைந்தாள்.

தன் பையிலிருந்த பரிசுப் பொருள்களை ரேவதியிடம் நீட்டினான்; ரேவதி தன் தந்தையை ஒருமுறைப்பார்த்தாள். அவர் சலனமில்லாமல் தன்னுடைய ஈசிச் சேரில் இருந்தார். ஒருவித தயக்கத்துடனேமுகுந்தனிடமிருந்து பரிசுகளை வாங்கிக் கொண்டாள். ஆனால் பிரிக்கவில்லை. ஒருவேளை திருப்பிவிடநேர்ந்தால்…? ரேவதிக்கு தன் அப்பாமேல் சந்தேகம்.

அடுத்ததாக, முகுந்தன் அழகாக ‘பைண்டு’ செய்யப்பட்ட ஒரு தடியான புத்தகத்தை பையிலிருந்து எடுத்துகோபாலனிடம் நீட்டினான். அதை வாங்க விரும்பாமல், ‘இது என்ன?’ என்ற கேள்விக்குறியை தன் முகத்தில்காட்டினார்.

“இது என்னுடைய பி்எச்டி தீஸிஸ்…ஆராய்ச்சிக் கட்டுரை…” என்றான் முகுந்தன்.

எரிச்சலுடன், “கன்கிராட்ஸ்” என்றார் கோபாலன்.

சாரு, “இந்தா டிபன், காபி எல்லாம் சூடா சாப்பிடு, முகுந்தன்…”

என்று அவைகளை அவனுக்கு எதிரேவைத்தாள்.

“சார்…இந்த தீஸிஸ்…பக்கறீங்களா? இதெல்லாம் உங்க ரெண்டு பேரோட ஆசீர்வாதம்தான்…”

“பேச்சு ரொம்ப அழகுதாம்பா…”. கோபாலன் கடுப்புடன் சொன்னார்.

“ஏன்னா, இவன் இவ்ளோ ஆசையோட தர்றான்…வாங்கித்தான் பாருங்களேன்…” என்ற சாருவை எதுவுமே சொல்ல முடியாமல், வேண்டா வெறுப்பாக தீஸிஸை கையில் வாங்கிக் கொண்டார்.

பக்கங்களைப் புரட்டிக் கொண்டே போனவர் ஏழாம் பக்கம் வந்தபோது சட்டென நிறுத்தினார். மூக்குக்கண்ணாடியை சரி செய்து கொண்டு அந்த பக்கத்திலிருந்த ஒவ்வொரு சொல்லையும் மனதுக்குள்ளேயே படித்துக் கொண்டார்.

படித்து முடித்ததும் முகுந்தனை ஏறிட்டுப் பார்த்த அவர் கண்களில் கோபமில்லை…நீர் கோத்து நின்றது…இதை கவனித்த சாரு ‘என்ன ஆச்சு இவருக்கு…’ என யோசிக்கும்போதே கோபாலன் எழுந்தார். முகுந்தனும் எழுந்து நின்றான்.

“மை டியர், டியர் பாய்…” என்று சொல்லிக்கொண்டே முகுந்தனை அணைத்துக் கொண்டார்.

“இவர் நிமிஷத்துக்கு ஒரு மாதிரி நடந்துக்கிறாரே…” புரியாமல் நின்ற சாருவுக்கு அருகே ரேவதியின் குரல்ஒலித்தது. அவள் ஆராய்ச்சிக் கட்டுரையின் ஏழாம் பக்கத்தில் தமிழிலும் எழுதப் பட்டிருந்ததை உரக்கப்படித்தாள் –

சமர்ப்பணம்

‘என் கல்விக்கும் எனக்கு வாழ்வில் ஏற்பட்ட நம்பிக்கைக்கும் காரணமான என் பெருமதிப்புக்கும் அன்புக்கும் என்றும் உரிய திரு். கோபாலனுக்கும் அம்மா சாரு கோபாலனுக்கும் இந்த ஆராய்ச்சிக் கட்டுரையை ஒரு சிறு காணிக்கையாக அளிக்கிறேன்’

ரேவதி படித்து முடித்தாள்.

“முகுந்தனை சித்த விடுங்கோன்னா, அவனுக்கு மூச்சு திணறப்போறது…” என்ற கேலி செய்த சாருவின்குரல் கேட்டு கோபாலன் மனமார சிரித்தார். சாருவின் மனதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *