உள்ளுக்குள் உள் உள்ளேன்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 31, 2021
பார்வையிட்டோர்: 5,135 
 

‘சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி!…..’ சினிமா பாட்டு வரிகள் கேட்கும் போதெல்லாம் முகந்தனின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாய் வழிந்தோடும்.

‘அடி தாங்கும் உள்ளம் இனி இடி தாங்குமா?….இடி போல பிள்ளை வந்தால் அடி தாங்குமா?……ஒரு நாளும் நான் இது போல் அழுதவன் அல்ல…அந்த திருநாளை மகன் கொடுத்தான் யாரிடம் சொல்ல?’

கேட்டு கேட்டு மனதில் பதிந்த பாட்டு, சும்மா இருக்கும் பொழுதும் நினைவில் வந்து வாட்டியது. ….இப்படியே கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் உருண்டோடியது.

மகன் பிரகாஷ்…திருமணமாகி தானும் மனைவி லக்ஷ்மியும் ஐந்து வருடங்கள் தவமிருந்து பெற்ற பிள்ளை. அதனால், அவன் பிறந்ததும் அவர்கள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை!. ஆசை ஆசையை அவனை வளர்த்து வந்தார்கள். அவனுக்கு ஒரு காய்ச்சல் வந்தாலும் லக்ஷ்மியால் பொறுக்க முடியாது, உடனே அள்ளிக்கொண்டு டாக்டரை பார்க்க ஓடுவாள். மருந்து வாங்கி மறுநாளே சரி செய்துவிடுவாள். இப்படியாக நான்கைந்து முறை அவனை காய்ச்சலில் இருந்து மீட்ட, மூன்று வருடங்கள் ஓட, திடீரென்று ஒரு நாள் பிரகாஷ் இரத்த வாந்தி எடுத்தான்.

‘நேற்று என்பது கடந்துவிட்டது, நாளை என்பது நம் கையில் இல்லை, இன்றைய பொழுது மட்டுமே நிச்சயம் நம் கைவசம் என்பதால் மகிழ்ச்சியாய் அனுபவிப்போம்!’ என்று பேசும் ஒரு சாரார்களை பார்த்தால் ‘உனக்கு கஷ்டம் வந்தால் தெரியும்; பல மாதங்களாக தினம்தினம் பற்பல கஷ்டமும் கவலையும் அனுபவிக்கும் எங்களை, இதுபோல் துயரமான வாழ்க்கையை வாழ்பவர்களை பார்த்தால் இப்படி பேச மாட்டாய்’ என்று சீறுவார் முகுந்தன்.

‘ஆனால் ஆண்டவா, ஏன் எதற்கு இன்னின்ன கஷ்டம் வருகிறது என்று தெளிவாக புலப்படுத்த மாட்டேன் என்கிறாய்? நான் ஒரு பாவமும் செய்யவில்லை; என் மனைவியும் செய்யவில்லை; மூன்று வயது குழந்தை பிரகாஷ் செய்ய வாய்ப்பில்லை; முன்வினை, முன்ஜென்ம பாவம் என்கிறார்கள்…அது என்ன என்று தெளிவாக புரியவைத்தால் தானே மறுபடியும் அந்த பாவங்களை செய்யாமல் இருக்க முடியும்?…மனிதகுலம் தழைக்க முடியும்?!!.

என்ன தான் உன் லீலை? நீ உண்மையில் அன்பானவனா?….இல்லை கொடியவனா?? மனிதர்கள் மற்றும் அனைத்து உயிரினங்களும் உன் படைப்புகள் தான் என்றால் ஏன் இந்த விபரீத கொடூரமான விளையாட்டு? இதில் உனக்கென்ன அப்படியோர் மகிழ்ச்சி? ஆனந்தம்??….’ பிரகாஷுக்கு இரத்த சம்பந்தமான புற்று நோய் என்று காதில் விழுந்த தருணம் முதல் முகுந்தன் இப்படியாக அடிக்கடி மனதிற்குள் புலம்புவார்.

இப்படிப்பட்ட இரத்த சம்பந்தமான புற்று நோய் என்ன காரணத்தினால் வருகிறது என்பது இன்னும் முடிவான ஆராய்ச்சி செய்யப்படவில்லை என்றார் டாக்டர்.

“ஒரு வேளை….நீங்கள் அவன் நான்கைந்து முறை முன்பு காய்ச்சலில் அவதியுற்ற போது… அவனுக்கு அளிக்கப்பட்ட மருந்துகள், மிதம்மிஞ்சிய அளவில் தரப்பட்டு… அதன் இரசாயணம் நாளடைவில் இப்படி புற்று நோயை ஏற்படுத்தி இருக்கலாம்….ஆனால் அதுவும் ஒரு யூகம் தான்” என்றார் டாக்டர்

“இது பரம்பரை வியாதியும் இல்லை. ஆண்டவனை வேண்டிக்குங்க…50-50 சதவீதம் தான் பிழைக்கும் வாய்ப்புள்ளது” என்றார் முடிவாக.

“என்ன செலவானாலும் பரவாயில்லை, அவனை காப்பாற்றுங்கள்” என்றாள் லக்ஷ்மி. இந்த எட்டு மாதங்களாக அவர்கள் வங்கியில் சேமித்து வைத்திருந்த பணம் முழுவதும் கரைந்தது. வெளிநாட்டில் நல்ல வேலை கிடைத்த தருணம் இது நிகழ்ந்ததால்….அந்த வேலைக்கும் போக முடியாமல், கைவசம் இருந்த வேலையும் போய், சொல்லிமாளாத திண்டாட்டத்தில் இருவரும் உடல் பாதியாக மெலிந்துவிட்டு நடைப்பிணம் போல் வாழலானார்கள்.

புற்று நோய்க்கு மிகச்சிறந்த மருத்துவமனை அது என்பதால், இந்த எட்டு மாதங்களும் பிரகாஷை அங்கு தங்கவைத்து சிகிச்சை அளித்து வந்ததால், மேற்கொண்டு செலவிற்கு பணம் போதவில்லை. உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் சிலர் உதவி செய்தும் போதாமல், நகைகளை விற்று மகனை காப்பாற்றும் நிலைமை வந்தது. ஒரு சிலர் இந்த கோயிலுக்கு அந்த கோயிலுக்கு போய் பரிகாரம் செய்யச் சொன்னார்கள்…அதுவும் செய்தாகிவிட்டது.

தினம்தினம் அதே கடவுள்கள் முன்னின்று பிரார்த்தனை செய்வது ஏதாவது பலன் கொடுக்கிறதா என்பதும் புலப்படவில்லை.

மெலிந்து நொடிந்து போன இவர்களை அவ்வப்பொழுது பார்த்த முகுந்தனின் அண்ணார் ஒரு நாள் அழாத குறையாக ஆனால் கொஞ்சம் உரத்த குரலில் “நீங்கள் தெம்பாக இருந்து புன்னகையுடன் பிரகாஷை கவனித்து வந்தால் தான் அவன் குணமடைய ஏதுவாக இருக்கும்” என்று அறிவுரை கூறிவிட்டுப் போனார்.

ஒன்பதாவது மாதம்….இரசாயண மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை கொஞ்சம் பலன் அளித்து பிரகாஷ் குணம் அடைவது போல் தெரிய, அச்சமயம் கோவிட்-19 கிருமி காரணமாக நாட்டில் முடக்க நிலை ஏற்பட்டதால் டாக்டர் இனி பிரகாஷை வீட்டில் இருந்தபடி பார்த்துக்கொள்ளலாம் என்றார்.

“ஆனால் இந்த சிகிச்சை முழுவதும் பலன் தந்ததா? என்பதை இன்னும் ஏழு எட்டு வருடங்கள் பொறுத்திருந்துதான் தீர்க்கமாக சொல்ல முடியும். அதுவரை கொடுக்கப்படும் மருந்து மாத்திரைகளை தவறாமல் கொடுங்கள்.

அப்புறம்….மிகமிக முக்கியம், அவன் இருக்கும் இடம், போய் வரும் இடங்கள் எல்லாமே மிகத்தூய்மையாக இருப்பது அவசியம்; அதாவது, அவனுக்கு அடுத்த ஏழு எட்டு வருடங்கள் மீண்டும் காய்ச்சல் சளி ஏதும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்”

டாக்டரின் பேச்சு கொஞ்சம் நிம்மதியளித்தாலும்…பெருமூச்சு விட்டு அடுத்த சில வருடங்கள் பற்றிய சிந்தனை புதிய கவலையாக எழுந்தது…அவன் பள்ளி வாழ்க்கை?..மற்ற குழந்தைகளுடன் விளையாடும் வாழ்க்கை?.

இப்படி மீண்டும் இடிந்து போன நேரம் முகுந்தன் அண்ணார் வந்து கொஞ்சம் கைகொடுத்தார். ஆனாலும் முகுந்தனால் பழைய நிலைக்கு திரும்ப முடியவில்லை. பித்துப்பிடித்து விடும்போல் இருந்தது. சதா மனதிற்குள் ஆண்டவனை சாடினார்.

“எனக்கு ஏன் இந்த நிலை, எங்களுக்கு ஏன் இந்த நிலை? யார் என்ன பாவம் செய்தார்கள்? சொல்லித்தொலையேன்?…நீ என்ன வெறும் கல்லா??”

கோவிட்-19 முடக்க நிலை காரணமாக எல்லா கோயில்களும் வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டதால் கடவுள்மேல் சந்தேகம் வலுப்பெற்றது.

“நம்பிக்கை தான் வாழ்க்கை என்பதனால் தானே இந்த கோயில்களும் வழிபாட்டுத்தலங்களும் உள்ளன? இப்போ நீயே கைவிரித்து என்னை பார்க்க வரவேண்டாம் என்கிறாயே?..இது என்ன நியாயம்??…..இல்லை, இனி நான் கடைசியாக ஒருமுறை உன்னை பார்க்க வருவேன்….உன்னிடம் மண்டியிட்டு அழுது புலம்புவேன்…சினிமாவில் தான் நேரில் வந்தது போல் வந்து பதில் சொல்வாயா?….நான் நேரில் திருப்பதி திருமலை ஏழுமலையான் உன்னை பார்க்க வருவேன்….இதோ வருகிறேன்….நீ எனக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்…” என்று முணுமுணுத்தவாறே எழுந்து வீட்டைவிட்டு யாரிடமும் சொல்லாமல் திடீரென்று வெளியேறினார் முகுந்தன்.

கொஞ்சதூரம் தான் போயிருப்பார் ….அதற்குள் போலீஸ் அவரை மடக்கி விசாரித்து புத்தி சொல்லி வீடுவரை விட்டுவிட்டு சென்றார். நடந்ததை அறிந்த மனைவி லக்ஷ்மி ஓவென்று புலம்பி தலையில் அடித்துக்கொண்டு உட்கார்ந்து அழுது தீர்த்தாள். தன்னிலைக்கு வந்த முகுந்தன் அவளை அணைத்துக்கொண்டு தேம்பினார்.

“இனி இப்படி செய்யமாட்டேன்…சத்தியம்…..ஆனா கோயில் திறந்ததும் ஒரு நாள் போய் கண்டிப்பா அந்த பகவாணை பார்த்து கேள்விகேட்டுவிட்டு வருவேன்….எனக்கு பதில் தெரிந்தாக வேண்டும்…..ஆமாம்…” முகுந்தன் பேச்சில் இன்னமும் பித்த நிலையிருப்பது லக்ஷ்மிக்கு புரிந்தது.

என்ன நினைத்து லக்ஷ்மி எப்படி ஞானம் பெற்றாள் தெரியவில்லை, முகுந்தனை சாந்தப்படுத்த “அந்த பகவாணை ஏன் இனி பார்க்க போகணும்? அவன்தான் தெளிவா இந்த கோவிட்-19 மூலம் ‘நான் கோயில்ல எல்லாம் இல்லை’ன்னு சொல்றானே? புரியலையா உங்களக்கு? சமீபமா எத்தனை எத்தனை கொடுமை அட்டூழியம் கோயில்ல நடந்திருக்கு?…கோயில் நிர்வாகமே உண்டியல் பணத்தை கொள்ளை அடிச்சது…கோயில் உள்ளேயே சின்னஞ் சிறுசுகளை கற்பழிக்கறது…கோயில் சிலையையே திருடறது…இன்னும் என்னயென்ன நம்ம நாட்டிலே …உலகத்திலே?” என்றாள்.

“இல்ல லக்ஷ்மி…அப்படியெல்லாம் பேசப்படாது….நம்மளை தண்டிச்சுடுவார்…. நிலைமை சரியாகட்டும்…ஒரு நடை அந்த ஏழுமலையானை பார்த்து கேள்விகேட்டு பதில் கிடைத்தால் தான் இந்த ஜடம் அடங்கும்” முகுந்தன் தீர்மானமாக சொன்னார்.

அதன்பின் சில மாதங்கள் கழித்து கோயில்கள் திறக்கப்பட்டன. ஏழுமலையானை தரிசிக்க முகுந்தன் கிளம்பினார். பாத யாத்திரையாக வருபவர்களுக்கு சிறப்பு தரிசன வரிசை கிட்டும் என்பதால் மலையடிவாரம் வரை பேருந்தில் சென்று அங்கிருந்து பாத யாத்திரை ஆரம்பித்தார்.

முகுந்தன் தாத்தா காலம் முதற்கொண்டு வருடாவருடம் குடும்பமாக திருமலைக்கு வருவது வழக்கமாக இருந்தது. அது நினைவுக்கு வர “இப்படி உன்னை வழிபட்டும் எப்படி என்னை…என் பிரகாஷை சோதிக்க உனக்கு மனம் வந்தது?…நீ உண்மையில் இந்த பிரபஞ்சத்தில் யார்? எதற்காக இத்தனை பித்தலாட்டம்? நாடகங்கள்?….ஓம் நமோ நாராயணாய!…ஓம் நமோ நாராயணாய!….ஓம் நமோ நாராயணாய!….பதில்…பதில்…பதில்…” மற்றவர்கள் கவனிக்கிறார்கள் என்பதும் பொருட்படுத்தாமல் முணுமுணுத்தவாறு மலைப் படிகள் ஏறினார் முகுந்தன்.

இதற்கு முன் மலைப்படியேறிய அனுபவம் இல்லையென்றாலும், மனம் பக்திப்பரவசத்தில் திளைத்திருந்ததால் வலி ஏதும் அறியாமல் நடந்து, நான்கு மணிநேரம் கழித்து ஏழுமலையானை தரிசிக்க… இதோ வந்து சிறப்பு வரிசையில் நின்றார் முகுந்தன்.

“உன் திருவிளையாடல்கள் படித்திருக்கிறேன்…அறிந்திருக்கிறேன். சினிமா மூலம் பார்த்து இருக்கிறேன்… நீ யார் என்று எனக்கு புலப்படுத்த முடியாவிட்டாலும்… நான் யார்? எனக்கு, என் பிரகாஷுக்கு ஏன் இந்த சோதனை என்பதையாவது தெளிவுபடுத்த வேண்டுகிறேன்….. ஓம் நமோ நாராயணாய!…ஓம் நமோ நாராயணாய!….ஓம் நமோ நாராயணாய!….பதில்…பதில்…பதில்..” வரிசை நகர்ந்து ஏழுமலையான் வீற்றிருக்கும் இடத்தை நெருங்கியது.

வலது கையால் தன் பாதம் காட்டி நின்ற ஏழுமலையான் பார்வைக்கு தெரிந்ததும் பரவசமானார் முகுந்தன். “வருகிறேன்…உன் பாதங்களை அரவணைத்து கேட்கப் போகிறேன்… ஓம் நமோ நாராயணாய!…ஓம் நமோ நாராயணாய!….ஓம் நமோ நாராயணாய!..” முகுந்தன் பரவசமாக முழங்கியதை பார்த்தவர்களும் அவரோடு சேர்ந்து மேலும் கூட்டாக முழக்கம் எழுப்பினார்கள்.

ஏழுமலையானை நெருங்கியதும், யாரும் தன்னை தடுத்துவிடாத தருணம் பார்த்து…தடால் என்று அவர் பாதங்கள் அருகே விழுந்து…”சொல்லு சீனிவாசா சொல்லு…நான் என்ன பாவம் பண்ணேன்?” என்று அரற்றி அழுது புரண்டார். ஸ்தம்பித்துப்போன அர்ச்சகர்கள் சிலநொடிகள் செய்வதறியாது நின்றனர். பின் காவலுக்காக நின்றிருந்தவர்கள் சிலர் ஓடி வந்து அவரை அலாக்காக தூக்கிக்கொண்டு வெளியே வந்து ஒரு ஓரமாக அமர வைத்து தண்ணீர் கொடுத்தனர்.

தான் எதிர்பார்த்தபடி ஒன்றுமே நடக்கவில்லை என்பதை அறிந்த முகுந்தன் தலையில் அடித்துக்கொண்டு மேலும் அழலானார். அவரை ஆசுவாசப்படுத்தி தண்ணீர் குடிக்க வைத்த பின் காவலர்கள் கொஞ்சம் அறிவுரை கூறியவாறே நகர்ந்து போயினர்.

சுவற்றில் சாய்ந்து கால்களை நீட்டியவாறு இருந்த முகுந்தன், மிகுந்த களைப்பினால் அப்படியே கண் அயர்ந்தார்.

சில நொடிகளில் ஒரு கனவு….இல்லை, இது நிஜம் என்றது இன்னொரு மனம்….

“ஓம் நமோ நாராயணாய!…ஓம் நமோ நாராயணாய!….ஓம் நமோ நாராயணாய!…நான் யார்? எனக்கு, என் பிரகாஷுக்கு ஏன் இந்த சோதனை? சொல்லு சீனிவாசா சொல்லு…நான் என்ன பாவம் பண்ணேன்?” புலம்பல் தொடர்ந்தது அதில்…

பிரதான சன்னதியின் உள்ளிருந்து ஒரு குரல்…அசரீரி போல்… “முகுந்தா…எழுந்திரு….எழுந்திரு” என்றது.

“யாரு?…யாரு?” கண்ணைப்பறிக்கும் பிரகாச ஒளி முகுந்தனின் உடல் முழுக்க பரவசப்படுத்தியது…..அது பேரானந்தமாக உச்சி முதல் பாதம் வரை ஏதோ செய்து சிலிர்க்க வைத்தது

“நான் தான்…..நீ….நீ தான் நான்” என்றது குரல். சீனிவாசன், அந்த ஏழுமலையான் தான் பேசுகிறார் என்றது ஒரு மனம். ஆனாலும் நம்ப முடியாமல் தவித்தது

“என் மனசாட்சி தானே நீ?….என் மனசாட்சி தானே?” முகுந்தன் கேட்டார்.

“அப்படியும் வைத்துக்கொள்ளலாம்…உன்னுள் உள் உள்ளேன் நான் ….அது மனசாட்சி என்பது பெருமளவில் நம்பப்படுகிறது…”

“சரி….நான் என்ன பாவம் செய்தேன் சொல்?…..எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நான் எந்த பாவமோ தவறோ செய்ததாக தோன்றவில்லையே?”

“நீ….இன்னும் உன் போன்றோர்…சொல்லப்போனால் எல்லா மதத்தவர்களும் செய்யும் தவறுகள் பாவங்கள் ஏராளம் ஏராளம்…. சிறியது முதல் பெரியது வரை நிறைய செய்கிறீர்கள். தினந்தினமோ வாரம் ஒரு முறையோ…வீட்டிலோ வேலையிடத்திலோ… கோயிலிலோ வேறு எங்கோ….பற்பல சாமியை கும்பிடுவீர்கள்… மனசாட்சி என்று ஒன்று இருப்பதையும் அறிவீர்கள்….ஆனால் ‘யாரும் பார்க்கமாட்டார்கள் / அறியமாட்டார்கள் / இது ஒன்றும் பெரிய தவறோ பாவமோ இல்லை’ என்று நீங்களாகவே முடிவு செய்து கொண்டு மனசாட்சியை கொன்று விட்டு என்னென்னவோ செய்கிறீர்கள்…..கொஞ்சம் யோசித்துப்பார், நீ என்ன செய்தாய் என்பது விளங்கும்” இதை கேட்ட மறுநொடியே பிரகாஷ் மூன்று வயது இருக்கும் போது முகுந்தன் வேலை பார்க்கும் இடத்தில் நடந்த ஒரு சம்பவம் கண்முன் வந்தது…

முகுந்தன் கணக்காய்வாளர் வேலை செய்து வந்த இடத்தில் ஏற்கெனவே வேறு யாரோ செய்த ஒரு தவறை அவர் கண்டுபிடித்து மேலதிகாரியிடம் சொல்ல…அவர் அந்த தவறால் பல லட்சம் ரூபாய் லாபம் அடைந்த நபர் மூலம் முகுந்தனுக்கு ஐம்பதாயிரம் கைமாறியது. “இது இப்போ வெளியே தெரிந்தால் நம் கம்பெனிக்கு தான் அசிங்கம்…நீ ஏதும் தப்பு செய்யவில்லை, இந்த பணத்தை வைத்துக்கொண்டு உன் செல்லப்பிள்ளை பிரகாஷுக்கு விளையாட்டு மின்சார கார் வாங்கிக்கொடு” என்று பேசிய மேலதிகாரியிடம் பகைத்துக்கொள்ள மனம் இல்லாமல் அந்த பணத்தை வாங்கிவிட்டார் முகுந்தன். வாங்கிய பணத்தை மனைவி லக்ஷ்மி பார்த்து கேள்விகேட்கக் கூடாது என்பதால், அன்றைய தினம் வெள்ளிக்கிழமை வங்கியில் போட முடியாது, திங்கட்கிழமை வரை காத்திருக்க வேண்டியதால்…அந்த பணத்தை அரிசி மூட்டை உள்ளே அடியில் கண்ணுக்கு தெரியாதபடி வைத்தார். திங்கட்கிழமை வந்ததும் வங்கிக்கணக்கில் போட்டுவிட்டு அந்த வார இறுதியில் பிரகாஷுக்கு விளையாட்டு மின்சார கார் வாங்கி கொடுத்தார்.

“இப்போ புரிந்ததா? நீ அரிசி மூட்டையில் புதைத்து வைத்த பணம் தான் நஞ்சாக ரூபமெடுத்து, அந்த அரிசியை சாதமாக பிரகாஷுக்கு ஊட்ட..அவனுக்கு இந்த புற்று நோயை கொடுத்து…..அதன் மூலம் உனக்கு இந்த வாழ்க்கை படிப்பினை கொடுக்கப்பட்டுள்ளது. உண்மையில் உன் மனைவி லக்ஷ்மி அன்று சொன்னது போல் இந்த கோவிட்-19 மூலம் நான் உலக மக்களுக்கு சொல்லும் பாடமும் இது தான்….’மனசாட்சியே இறைவன் ஆட்சி’ என்பதை பரிபூரணமாக நம்பி நல்நெறியுடன் வாழுங்கள். மதங்களாலும் ஜாதிகளாலும் உண்டாகியிருக்கும் அமைதியற்ற நிலைமையை சரி செய்ய, இந்த மனசாட்சியின் மேல் உள்ள நம்பிக்கை ஒரு பெரிய சீர்திருத்தத்தை ஏற்படுத்தி மனிதகுலத்தை ஒன்றிணைக்கட்டும்….போ..இதை இன்று நீ உணர்ந்த உண்மையை உன்னால் முடிந்த அளவு உலகிற்கு எடுத்துச்சொல்” தெளிவு பெற்று கண்விழித்த முகுந்தன் உடனேயே அங்கப்பிரதிட்சணம் செய்து, செய்த பாவத்திற்கு மன்னிப்பு வேண்டினார்.

மறுநாள் வீடு திரும்பியவர் முகநூல் பக்கத்தில் இதை வெளிட்டார்:

(பின்குறிப்பு: பிரகாஷ் அதன்பின்னும் இரண்டுமுறை காய்ச்சலால் அவதியுற்றான்….ஆனால் தவறுகளையும் பாவங்களையும் உணர்ந்து நித்தமும் கடவுளை மனமுருகி முகுந்தன் வேண்டி பாவமன்னிப்பு கேட்டுக்கொண்டதால், நல்நெறிப்பாதைக்கு மாறிய அவன் மனசாட்சி பிரகாஷை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று காப்பாற்ற வழி செய்தது. சுமார் எட்டு வருடங்களுக்குப்பின் பிரகாஷ் நூறு சதவீதம் குணம் பெற்று நாள் வாழ்வு வாழலானான்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *