இருளிலிருந்தே ஒளி பிறக்கிறது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம் சமூக நீதி
கதைப்பதிவு: May 25, 2021
பார்வையிட்டோர்: 3,102 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“சின்னப்புக் கமக்காறன்ரை ஒரே பிள்ளை; சகோதரங்களில்லாதவனெண்டு தான் என்னை எல்லாரும் சொல்லுறவை. எனக்கும் தம்பியோ தங்கச்சியோ அண்ணையோ அக்காவோ இல்லாதது பெரிய மனவருத்தந்தான். எண்டாலும், எனக்கு ஒருவழியிலை சகோதரம் இருக்குது தானே. அவள் மங்கையர்க்கரசி, என்னைச் சதாசிவத்தண்ணன் எண்டு கூப்பிடேக்கை எனக்கு எவ்வளவு சந்தோசமாய் இருக்கும் தெரியுமே. அவள் என்ரை உடன் பிறந்த சகோதரமாய் இல்லாட்டிலும், நான் அவளிலை உயிரையே வைச்சிருக்கிறேன். அவளும் அப்படித் தான் என்னிலை நல்ல பட்சம். பொயிலைக்கண்டுக் காலத்திலை. நான் தோட்டத்திலை இறைக்கேக்கை, ஆச்சி எனக்குச் சாப்பாடு அனுப்பப் பிந்தினாலும் அவள் விடமாட்டாள்; ‘அண்ணன் பாவம் வெய்யிலுக்கை காயுது’ எண்டு சொல்லி, ஆச்சிக்கு கூடமாட ஒத்தாசையாயிருந்து, அவள்தான் எனக்குச் சாப்பாடு அனுப்பிவைப்பள். முந்தி அவள் இராமநாதன் கொலிச்சிலை படிக்கேக்கை, எனக்குப் பிடிக்குமெண்டு புதுப்புதுப் போசிலை எம்.சீ.ஆறினரை படங்களும், நல்ல நல்ல பாட்டுப் புத்தகங்களும் வாங்கித்தாறவள்.”

“அவளும் அவையின்ரை குடும்பத்திலை ஒரு பிள்ளை தான். அவளின்ரை அப்பாதான் எங்கடையூர்ப் பள்ளிக்குடத்திலை முதல் வாத்தியார். நாங்களெல்லாம் அவரை முதல்வாத்தியார் எண்டுதான் சொல்லிறது. எங்கட அப்பு. ஆச்சி போன்ற பெரியாக்கள் அவரைத் ‘திருநீத்துச் சட்டம்பியார்’ எண்டுதான் சொல்லுறவை. எந்த நேரமும் வெள்ளை வேட்டிகட்டிக்கொண்டு, நேஷனல் சேட்டு போட்டுக்கொண்டு பள்ளிக்குடத்துக்கு போகேக்கை வரேக்கை அவரை நான் றோட்டிலை காணுறனான். அவற்றை நெத்தியிலை பட்டையாய் பூசிக்கிடக்கிற அந்த மூண்டு குறித்திருந்த்தையும், நடுவிலை பென்னம் பெரிய வட்டமாய் வைச்சிருக்கிற சந்தணப் பொட்டையும், புடரியிலை அசைந்து கொண்டிருக்கிற அந்தச் சின்னக்குடுமியையும் காணேக்கை, எனக்குக் கையெடுத்துக் கும்பிடச் சொல்லிற மாதிரி ஒரு பத்தி இல்லை ஒரு பயம் வரும். வழியிலை எங்கையேன் என்னைக் கண்டால், கண்களை அகல விரித்து. மெல்லிய சிரிப்பு சிரிச்சு, ‘எப்படியடா சதாசிவம்’ எண்டு அவர் கேக்கேக்கை, எனக்கு உடம்பெல்லாம் குளிரிறமாதிரி இருக்கும். மயிர்க்கால்கள் எல்லாம் குத்திட்டு நிற்கும். அப்படிப்பட்ட அவருடைய செல்லப்பிள்ளைதான் மங்கையர்க்கரசி. அவரைப் பாக்கேக்கை ஏதோவொரு சந்தோஷமான பயமாய் இருக்க, அவளைப் பார்க்கப்பார்க்க ஆசையாய் இருக்கும். சதாசிவத்தண்ணன், சதாசிவத்தண்ணன் எண்டு அவள் சொல்லிற கதைகளைக் கேட்கக் கேட்க பசி கூடவராது. அவள் எத்தினை எத்தினை கதை சொல்லுவாள். எம்.சீ.ஆர். சிவாஜி நடிக்கிற படக்கதையளும் சொல்லுவாள்.”

Irul2

“எங்கடை வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளித்தான். அவையின்ரை புதுக் கல்வீடு இருக்குது. அவள் அவையின்ரை வீட்டிலும் பார்க்க எங்கடை வீட்டிலை தான் அதிகமாய் இருப்பள். பள்ளிக்கூட விடுதலை நாட்களிலை அவள் நித்தமும் எங்கடை வீட்டிலைதான் நிற்பள். ஆக நித்திரை செய்யத்தான் தங்கடை வீட்டுக்குப் போவள். எங்கடை வீட்டிலை ஆச்சிக்குச் சுகமில்லையெண்டால் அவள்தான் சமைப்பள்: மற்ற வேலையளிலை ஆச்சிக்கு கூடமாட ஒத்தாசையாக இருப்பாள். பழையது, புதியது, நல்லது நறியது எண்டு பாராமல் ‘உனக்குக் கூடாது மோனே; பழக்கமில்லை’ எண்டு ஆச்சி சொன்னாலும் கேளாமல் அடம்பிடிச்சுச் சாப்பிடுவள். எங்கடை வீட்டிலை ஏதேன் கொண்டாட்டமெண்டால் அவள்தான் நிண்டு, கலகலவென்று பேசி எல்லாத்தையும் நடத்துவள். எப்பனும் வெக்கமில்லாமல் எல்லாரோடையும் ‘பகிடிகள்’ விடுவள். எத்தினையோ பேர் ‘திருநீத்து வாத்தியாற்றை பெடிச்சி நல்ல பிள்ளை’ எண்டு சொன்னதை நான் கேட்டிருக்கின்றேன். அப்ப எனக்கு சந்தோசம், சந்தோசமாய் வரும். அவள் என்ரை தங்கச்சிதானே எண்டு எனக்குப் புழுகமாயிருக்கும்.”

“அவயின்ரை வீட்டிலை ஏதேன் கொண்டாட்டமெண்டால் என்னைத் தங்கடை வீட்டை வரச்சொல்லி அவள் பிடிவாதம் பிடிப்பள். நான் மாட்டேனெண்டு சொல் அவேன் எண்டு அவளுக்குத் தெரியும். திருநீத்து வாத்தியார் இருக்கிற இடத்திலை என்னாலை இருக்க ஏலாது. உவள் மங்கையர்க்கரசி எப்பிடித்தான் இருக்கிறாள் எண்டு நான் யோசிக்கிறனான். கடவுளுக்குப் பக்கத்திலை இருக்க, அழுக்கு வேட்டி கட்டுக்கொண்டு தோட்டம் செய்யிற அறிவில்லாத எங்களுக்கென்ன யோக்கியதை இருக்கு எண்டு நான் அவளைக் கேப்பேன். ‘ஐயா. உன்னைப் பார்க்க எவ்வளவு சந்தோசப்படுகிறார், நீ தான் சும்மா சும்மா பயப்படுகிறாய்’ எண்டு அவள் சொல்வாள். எனக்கு அவள் கெஞ்சிறதை பாக்க அழுகை வரும். எண்டாலும், கடவுள் போன்ற வாத்தியாரோடும். அவையின்ரை வீட்டை வாற வெள்ளை வேட்டி கட்டின மற்ற மனிசரோடும் நான் எப்பிடித்தான் புழங்கிறது எண்டு யோசித்துப் பார்ப்பேன். ‘என்னாலை முடியாது தங்கச்சி’;’என்னை விட்டுவிடு தங்கச்சி’ என்பேன், எனது குரல் கம்மும். ‘சரி அண்ணா’ எண்டு அவள் போய்விடுவாள். அவள் ஏமாற்றத்துடன் போவதைப்பார்க்க எனக்கு அழுகை வரும். மூலையிலை ஒழிச்சிருந்து அழுவேன்; நல்லாய் அழுவேன்: நெஞ்சிலை கனக்கிற மாதிரிக்கிடக்கிற அந்தப் பாரம் கரையு மட்டும் அழுவேன்.”

“நான் மூண்டாம் வகுப்பு மட்டும் தான் படிச்சிருக்கின்றேன். நான் மூண்டாம் வகுப்பிலை படிக்கேக்கை, மங்கையர்க்கரசி அரிவரியிலைதான் படிச்சவள். அவள் முதலாம் வகுப்புப் படிக்கேக்கையும், இரண்டாம் வகுப்புப் படிக்கேக்கையும் கூட நான் மூண்டுதான் படிச்சனான். அதுக்குப்பிறகு நான் பள்ளிக்குடத்துக்குப் போகேலை. போக மனம்வரேலை. அப்பு என்னை பள்ளிக்குடத்துக்குப் போகக் சொல்லி அடிச்சார். நான் போகேலை. மங்கையர்க்கரசி கூட கூப்பிட்டாள். நான் போகேலை. ஒரு நாள் முதல் வாத்தியார் கூட “நாலெழுத்துப் படிச்சால் தானேடா, நல்லாய் இருக்கலாம்; பள்ளிக்குடத்துக்கு வாவேன்ரா” எண்டார். நானொண்டும் சொல்லேலை. அந்தக் காலத்திலையும், நான் அவருக்கு முன்னாலை ஒண்டும் கதைக்க மாட்டேன். அண்டைக்கும் நான் வீட்டை வந்து அழுதேன்; மூலையிலிருந்து விக்கி விக்கி அழுதேன். அப்பு அடிக்கேக்கை கூட நான் அப்படி அழேலை. முதல் வாத்தியார் பள்ளிக்குடத்திற்கு வாவேன்ரா எண்டு சொன்னபோது எனக்கு அழுகை அழுகையாய் வந்தது. நல்லாய் அழுதேன். ஆச்சிகூடக் கண்டிட்டு ஏன்ரா அழுகிறாய் எண்டு கேட்டா. நான் ஒண்டும் சொல்லேலை. நல்லாய் அழுதேன்.”

“ஒம்பதாம், பத்தாம் வகுப்புகளிலை என்ன படிக்கினம் எண்டு எனக்கு விளங்கேலை. எங்கடை மங்கையர்க்கரசி கூட கண்டியிலை பதின்மூண்டாம், பதினாலாம் வகுப்பு படிச்சது தானே!. நீங்களெல்லாம் கண்டியிலை என்ன படிக்கிறியள் எண்டு ஒருநாள் அதைக் கேட்டனான். அதெல்லாம் உனக்கு விளங்காதடா அண்ணா’ எண்டாள். உண்மையிலை எனக்கு விளங்கேலைத்தான். நான்கூட வீரகேசரி, தினகரன், ஈழ நாடு பேப்பரெல்லாம் எழுத்துக் கூட்டி வாசிப்பேன் தானே. எம்.சீ.ஆறின்ரை பாட்டுப் புத்தகங்களும் வாசிக்கிறனான் தானே. மங்கையர்க்கரசியும் என்னைப் போலதானே பெரிய பெரிய கதைப் புத்தகங்களெல்லாம் வாசிக்கும். எனக்கு அதெல்லாம் வாசிக்க ஆசைதான். பதின்மூண்டாம், பதினாலாம் வகுப்புப்படிக்கிற மங்கையர்க்கரசி வாசிக்கிற புத்தகங்களை, மூண்டாம் வகுப்புப் படிச்ச என்னாலும் வாசிக்க ஏலும். ஆனால் எனக்கு நேரமில்லாததாலை நான் வாசிக்கிறேலை. அப்ப, அவை பதின்மூண்டாம், பதினாலாம் வகுப்பிலை என்ன படிக்கிறவை எண்டு எனக்கு விளங்கேலை.”

“பெரிய வகுப்புகளிலை இங்கிலீசு படிக்கிறதாக்கும் எண்டு நினைச்சிருந்தேன். மூண்டாம் வகுப்புக்கிடையிலை தமிழ் படிச்சா இங்கிலீசு படிக்க ஆறாம் வகுப்புப் போதும் தானே. அப்ப ஏன் கனக்க வகுப்புகள்; அப்ப ஏன் மங்கையர்க்கரசி கண்டிக்கு படிக்கப் போகவேணும்.”

“விடுதலையிக்கை ஒருநாள் அது எங்கடைவீட்டை நிக்கேக்கை , அதுக்கு ‘இங்கிலிசிலை’ ஒரு கடிதம் வந்தது. நான் தான் கடிதக்காறனிட்டையிருந்து அதை வேண்டி தங்கச்சியிட்டை கொடுத்தனான் . அதிலை கிறுக்கல் கிறுக்கலாய், நெளிஞ்ச நெளிஞ்ச இங்கிலீசு எழுத்துக்கள் : எனக்குக் காய்ச்சல் வந்தால் டிச்பென்சறியிலை மருந்து வேண்டேக்கை. அப்போதிக்கரி ஐயா எழுதித்தாற துண்டிலை, கிறுக்கல் கிறுக்கலாய் கிடக்கிற இங்கிலீசு எழுத்துக்கள் மாதிரி … என்ரை தங்கச்சிக்கும் இங்கிலீசிலை கடிதம் வந்ததாக்கும் எண்டு எனக்கு நல்ல புழுகம். எனக்குச் சந்தோசத்திலை சிரிப்புச் சிரிப்பாய் வந்தது. கடிதத்தை வேண்டிக்கொண்டுபோ கேக்கை நான் சிரிச்சுக்கொண்டுதான் போனனான். மணிச் சத்தம் கேட்டு வெளியாலை வந்த மங்கையர்க்கரசி ‘ஏண்டா அண்ணை சிரிக்கிறாய்’ எண்டு கேட்டுக்கொண்டே கடிதத்தை வாங்கினாள். அவள் இங்கிலீசு படிக்கிறதைப் பாக்க வேணுமெண்டு எனக்கு ஆசை ஆசையாய் கிடந்தது. ‘என்ன தங்கச்சி அதிலை எழுதிக்கிடக்கு’ எண்டேன்.

“அவள் முகத்தைச் சுழித்தாள்; எனக்கு இங்கிலீசு விளங்கேலையடா அண்ணா” எண்டாள்.

எனக்கு பெரிய ஏமாத்தமாய்ப் போச்சு. “பின்னை என்னடி பெரிய படிப்புப் படிக்கிறாய்” எண்டு சீறினேன். அவள் சிரிச்சாள். எனக்கு அழுகை, அழுகையாய் வந்தது. முகத்தைப் பொத்திக்கொண்டு வீட்டுக்குள் ஓடினேன் மூலையிலை இருந்து அழுதேன்.

அவள் எனக்குப் பின்னாலை வந்ததை நான் கவனிக்கேலை. ஏன் ரா அண்ணை அழுகிறாய் எண்டாள். இது பெரிய குழந்தை எண்டு சொல்லி என்னர கண்ணீரைத் துடைத்தாள். என்னண்ணா இப்பவும் குழந்தைப் பிள்ளை மாதிரி இருக்கிறாயே எண்டு என்னை நாப்பினாள்.

“இங்கிலீசு படியாமல் யூனிவேசிட்டியிலை அதுதான் கண்டியிலை அவை படிக்கிற பள்ளிக்குடம் என்னடி படிக்கிறாய் எண்டேன், ‘அதெல்லாம் உனக்கு விளங்காதடா’ அண்ணை என்றாள், வெள்ளைக்காரன் போன தின் பின்னாலை அவன்ரை பாசையை தாங்களேன் படிக்க வேணும் எண்டு கேட்டாள். எங்கடை நாட்டிலை இருக்கிற தமிழாலும் சிங்களத்தாலும் எல்லா வேலையும் செய்யலாம் தானே எண்டும் சொன்னாள்.

“அது சொன்னதிலை எனக்கு முழுதும் விளங்கேலைத் தான்; கொஞ்சந்தான் விளங்கிச்சுது. வெள்ளைக்காறன் போனதின் பின்னாலை அவன்ரை இங்கிலீசு எங்களுக்கு என்னத்திற்கு பெரிய பெரிய கதைப்புத்தகங்களெல்லாம் எழுதுகிற எங்கடை தழிழாலை, சின்னச் சின்ன கடிதங்களெழுதலாம் தானே- மூண்டாம் வகுப்பு படிச்ச நான் இதொண்டும் யோசிக்கேலை. பதின்மூண்டாம், பதின்நாலாம் வகுப்புப் படிக்கிற தங்கச்சிதானே இதையெல்லாம் சொல்லுது. யோசிச்சுப் பாத்தா அது சொல்லிறதெல்லாம் சரியாய்த்தான் கிடக்கு. அப்ப பதின்மூண்டாம், பதின்நாலாம் வகுப்பிலை இதெல்லாம் தான் படிக்கிறவையோ.”

“எங்கடை தோட்டத்துக்கும் வெள்ளைக்காரன் வந்தவனாம். முந்தி றெயில் றோட்டுப்போடேச்கை, அதைப்பாக்க வந்த ஒரு வெள்ளைக்காரன், எங்கடை தோட்டத்துக்கை வந்து பயித்தங்காய் புடுங்கித் திண்டவனாம். அப்ப எங்கடை… ஆச்சி குமரியாய் இருந்தவவாம். அவா வெள்ளைக்காரனைப் பார்த்து பயித்தங்காய்க்கு காசு தரச்சொல்லிக் கேட்டாவாம். அவன் ஒரு பயித்தங்காய்க்கு ஒருரூபா காசு கொடுத்தானாம். கொடுத்திட்டு எதோ இங்கிலீசிலை கேட்டானாம். ஆச்சி வெக்கப்பட்டு வீட்டை ஓடி வந்திட்டாவாம். அப்ப ஒருரூபாவுக்கு பத்துக் கொத்து அரிசி வேண்டலாமாம். அப்படிப்பட்ட வெள்ளைக்காரன் போனபின்னாலை இங்கிலீசு என்னத்திற்கு சரிதான்..”

“ஒரு நாள், பொழுது மங்கிற நேரம், தோட்டத்திலை பொயிலைக் கண்டுக்கு இறைக்கிறதுக்காக நான் மம்பெட்டி யோட போகேக்கை, றோட்டிலை இரண்டு காச்சட்டை பொட்ட பெடியங்கள், எங்கடை வீட்டைப்பார்த்துக் கொண்டு சைக்கிளோடே திண்டாங்கள். தங்கச்சி கிணத்தடியிலை உடுப்புத் தோய்ச்சுக்கொண்டு நிண்டது. எனக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது எங்கடை தங்கச்சியை இவை ரன் பாக்க வேணும். நான் அவையளுக்குப் பக்கத்திலை போனேன் போங்காற்றா உன்ரை சரக்கு நிக்குது எண்டு ஒருதன் மற்றவனிட்டைச் சொன்னான். மற்றவன் எங்கட கிணத்தடியைப் பார்த்துச் சிரிச்சான். அவருக்கு என்ன சிரிப்பு? நான் கிணத்தடியைத், திரும்பிப் பார்த்தேன். எங்கடை தங்கச்சியும் சிரிச்சமாதிரிக் கிடந்தது. நான் சைக்கிள்ளை நிண்டவங்களை முழிசிப் பார்த்தேன், என்ரை கையிலை மம்பெட்டியும் கிடந்தது. அவங்கள் பயந்திட்டாங்கள் போலை கிடக்கு; விர்றெண்டு சைக்கிளிலை ஏறிப் போட்டான்கள். அவங்கள் பேத்தும் நிண்டிருந்தால் எனக்கு வந்த கோபத்திற்கு ஒருவேளை மம்பெட்டியை பாவிச்சாலும் பாவிச்சிருப்பேன்”

“அண்டைக்கு பறுவம். அப்படி நிலவிலை எனக்கு தண்ணிகட்ட நல்ல ஆசை; எம்.சீ.யாற்ரை படத்திலை வாற நல்ல நல்ல சினிமாப் பாட்டுக்கள் பாடிக்கொண்டு அப்படி நிலவிலை தண்ணி கட்ட எனக்கு நல்ல புழுகம் புழுகமாயிருக்கும். ஆனால் அண்டைக்கு எனக்கு சரியான மனவருத்தமாய் இருந்தது. மங்கையர்க்கர அந்தப் பெடியங்களைப் பார்த்துச் சிரிச்சவளே; சிரிச்ச மாதிரித்தான் கிடந்தது. பொழுது கருகிற நேரத்திலை தற்செயலாய் அவள் நிமிந்து பாத்தது எனக்கு சிரிச்ச மாதிரி, தெரிஞ்சிருக்கும். அவள் சிரிச்சிருக்க மாட்டாள். அவள் திரு நீத்துச்சட்டம்பியாற்றை பெடிச்சி; என்ரை தங்கச்சி; நெடுகவும் நெடுகவும் அந்த நினைவுகள் தான் வந்தது. துக்கமாய் வந்தது. நெஞ்சை அடைச்சது; அழுகை வந்தது.”

இண்டைக்கு நாலைஞ்சு நாளைக்கு முந்தித்தான் அவளுக்கு மறுமொழி வந்தது. அவள் சோதினை பாஸாம்; இனிமேல் அவள் ஒரு வீஏயோ, பீஏயாம். அவள் துள்ளிக்கொண்டு எங்கடை வீட்டை ஓடி வந்தாள். ‘எங்கே சதாசிவத்தண்ணன்’ எண்டு ஆச்சியைக் கேட்டாள். ‘ஏன்ரி’ எண்டேன், “அண்னை நான் சோதினை பாசடா: உனக்கொரு பரிச தரப்போறேனெண்டாள். ” என்ரை தங்கச்சி சோதினை பாசு பண்ணியது எனக்கு நல்ல புழுகம். அவள் தன்ரை கையில் வைச்சிருந்த பாசலை தாறேனெண்டு சொல்லி நீட்டி, நீட்டி ஏய்ப்புக்காட்டினாள், நான் பாஞ்சு பாசலைப் பறிச்சுப் பிரிச்சேன்.”

“எனக்குச் சந்தோசம், சந்தோசம், சந்தோசமாய் வந்தது. என்ரை தங்கச்சி என்ரை தங்கச்சிதான். அவளை அப்படியே கட்டிப் பிடிச்சுத் தூக்கிகொஞ்ச வேணும்போலை எனக்குப் புழுகம் வந்தது, அவள் அதுக்கிடையிலை ஆச்சியிட்டை ஓடியிட்டாள். இப்பவும் அண்ணன் குழந்தைதான் எண்டாள்.”

“அவள் எனக்கொரு நீல டெர்லின் சேட்டுத்தான் பரிசு தந்தவள். முந்தியும், அவள் யூனிவேசிட்டிக்கு படிக்கப் போகேக்கையும் எனக்கொரு மஞ்சல் டெர்லின் சேட்டுத் தந்தவள், அதொரு சேட்டுத்தான் நான் இவ்வளவு நாளும் வைச்சிருந்தனான். நான் ஒரிடமும் சேட்டுப்போட்டுக் கொண்டு போறதுமில்லைத்தானே. எப்பவேன், என்னோடை தோட்டம் செய்யிற பெடியங்களோடை, டபிளிலை செக்கண் சோப் படத்திற்குப் போனாப்போறது தான். அதுவும் எம்.சீ.ஆறின்ரை சண்டைப்படம் எண்டாத்தான் நான் போவேன்.”

“சிலவேளை தங்கச்சி யூனிவேசிட்டியாலை லீவிலை வந்து நிக்கேக்கை அதோடையும் படத்துக்குப் போறனான். நான் மாட்டேன் மாட்டேனெண்டாலும் அது விடாது. நான் தனியலோடா, போறது அண்ணா; சும்மா ஒரு ஆம்பிளைத் துணைக்கு நீ வா; எனக்கு எல்லாம் தெரியுமெண்டு கேப்பாள். பின்னை நான் என்ன செய்யிறது, மஞ்சல் டெர்லின் சேட்டையும், போக்குவரத்து வேட்டியையும் நல்லாய்த் தோய்ச்சுப் போட்டிட்டு, அதோடை வசுவிலை படத்துக்குப் போறனான், அல்லாட்டில் நான், சந்தைக்குக் கூட வசுவிலை போறேலை.”

Irul

“யாழ்ப்பாணத்திலை அதுக்கு எல்லா இடமும் தெரியும் அது என்னையும் ஒரு ரூபா பத்துச் சதத்துத் திக்கேற்றுத்தான் எடுக்கச் சொல்லும். நான் மாட்டேனெண்டு போடுவேன். அறுபத்தைஞ்சு சதத்திற்கு கலறியிலை கிட்ட இருந்து தான் நான் படம் பார்ப்பேன். நான் சிலவேளை பின்னுக்குத் திரும்பி செக்கன் கிளாசைப் பாக்கிறனான். கடைசியாய்ப் படம் பாக்கேக்கை ஒரு பொடியன் தங்கச்சியைக் குறுகுறுப் பாய்ப் பார்த்தமாதிரிக் கிடந்தது. பொடியனையும் எங்கையோ பார்த்தமாதிரி எனக்கு ஞாபசும் வந்தது. எங்கே யெண்டுதான் ஞாபகம் வரேல்லை. அங்கை எல்லாம் அப்பிடித் தானே. ஆம்பிளையள், பொம்பிளையள் எண்ட வித்தியாச மில்லாமல் எல்லாரையும் குறுகுறுப்பாய் பாப்பினம்.”

“படம் முடிஞ்சு வரேக்கை இரண்டோ, மூண்டு பெட்டையள் மங்கையர்க்கரசி, மங்கையர்க்கரசி, மங்கையர்க்கரசி எண்டு தங்கச்சியைக் கூப்பிட்டினம், தங்கச்சி ‘இது நான் நான் சொல்லுற சதாசிவத்தண்ணன்’ எண்டு என்னை அவையளுக்குக் காட்டிச்சுது. எனக்கு நல்ல சந்தோசம் – வெக்கமாயுமிருந்தது. அந்தப் பெட்டயளிலை மஞ்சள் சீலை கட்டின கண்ணாடி போட்ட, சின்னப்பிள்ளை தான் நல்லபிள்ளை நீலச்சீலை கட்டின பிள்ளையும் ஒருமாதிரி; சின்னச் சட்டை போட்ட மற்றப்பிள்ளை சீ…. எனக்குப் பாக்க அரிகண்டமாய் இருந்துது. வாயிலையும் எதோ சிவப்புகளைப் பூசி …. அவரும் வந்தவர் போலை எண்டு சொல்லி அது சிரிச்சுது; தங்கச்சியும் சிரிச்சுது. எனக்கு ஒண்டும் பிடிக்கவுமில்லை; ஒண்டும் விளங்கவுமில்லை”.

“நான் பேந்து தங்கச்சிக்கு அந்த பிள்ளையோடை பழ காதையெண்டு சொன்னனான். அந்த மஞ்சல் சீலை கட்டின பிள்ளை நல்ல பிள்ளை; அப்பிடிப் பிள்ளையளோடைதான் பழக வேணும் எண்டும் சொன்னனான். எனக்கு அந்தப்பிள்ளையிலை பிடிச்சுப் போச்சு; அது நல்ல பிள்ளை.”

“தங்கச்சி வீட்டை சிலவேளை சைக்கிள்ளை பெடியங் களும் வாறவங்கள்; அது அவங்களோடை எல்லாம் சிரிச் சுக் கதைக்கும். பகிடியளும் விடும். வீட்டிலை இருத்தி தேத் தண்ணியும் கொடுக்கும். முதல்வாத்தியாரும் அதுக்கு ஒண்டும் பறையிறேலை”.

“நீ பொம்பிளைப் பிள்ளையல்லே; பெடியங்களோடை உப்பிடியே பழகிறது எண்டு நான் தங்கச்சியைக் கேட்டனான். அது பிலத்துச் சிரிச்சது. அண்ணை நீ இப்பவும் குழந்தையடா. பொம்பிளையளும் ஆம்பிளையளும் சிரிச்சுப் பழகிறதிலை என்ன பிழையடா. பிழை எண்ட தெல்லாம் அவங்கடை அவங்கடை மனசைப் பொறுத்தது எண்டு அது சொல்லிச்சுது. நானும் பேந்து யோசிச்சுப் பார்த்தனான். பொம்பிளையளும் ஆம்பிளையளும் பழகிறதிலை என்ன பிழை? ஒண்டுமில்லைத்தானே. இப்பதான் பதின்மூண்டாம் பதினாலாம் வகுப்பிலை என்ன படிப்பிக்கிறவை எண்டு எனக்கு விளங்குது.”

“நான் நேத்து பொழுது படேக்கை தோட்டத்தாலை வீட்டை வந்து பாத்தா தங்கச்சி அழுகிற மாதிரி நிக்குது. என்னைக் கண்டிட்டு விக்கி, விக்கி அழுதது. எந்த நேரமும் பகிடியள் விட்டுச் சிரிச்சுக்கொண்டிருக்கிற தங்கச்சி, அழுகிறதைப் பாக்க எனக்கு அழுகையாய் வந்தது. நான் அழேக்கையெல்லாம். அழுமூஞ்சி. இப்பவும் குழந்தையோ எண்டு என்னைக் கேட்டு என்னைப் பகிடி பண்ணி என்னை அழாமல் செய்யிற தங்கச்சி. அப்பிடி அழுவதைப் பாக்க ஏதோ கூடாதது நடந்து போச்சு எண்டு எனக்கு விளங்கியிட்டுது. ‘என்னடி நடந்தது’ எண்டு நானும் அழுகிற மாதிரிக் கேட்டேன். அதின்ரை கண்ணீரைத் துடைத்து. கையைப்பிடிச்சு சொல்லமாட்டியோ எண்டு கெஞ்சிக்கேட்டன். என்னை. ‘ஐயா கலியாணம் செய்து கொடுக்கப் போறாராம்’ எண்டு விக்கி அழுதது.”

“எனக்கு ஒண்டும் விளங்கேலை. கலியாணம் செய்கிற தெண்டால் எல்லாருக்கும் புழுகம் தானே. இவள் ஏன் அழுகிறாளெண்டு எனக்கு விளங்கேலை. அது நல்லது தானேடி. அதுக்கேன்ரி அழுகிறாய் எண்டேன்.”

“அவள் அழுகையை நிப்பாட்டி என்னை முழுசிப் பார்த்தாள். எங்கடை பெரிய பள்ளிக்குடத்திலை படிப்பிக்கிற சுப்பிரமணியம் தான் மாப்பிளை எண்டாள்.”

“எனக்கு அவரைத் தெரியும். எங்கடை ஊர்பெரிய பள்ளிக்குடத்திலை படிப்பிக்கிற நல்ல வாத்திமாரிலை அவரும் ஒருத்தரெண்டு அங்கை படிக்கிற பொடியங்கள் சொல்லிற வங்கள். நானும் சிலவேளை அவரைக் காணுறனான். ஆள் சைக்கிள்ளை போகேக்கை, வரேக்கை தேவாரம் மாதிரிப் பாட்டுக்களை மெதுவாய் பாடிக்கொண்டு போறவர். பெரிய பெரிய இங்கிலீசுப் புத்தகங்களும் கொண்டு போறவர். ஒரு நாள் அவர் சைக்கிள்ளை போகேக்கை புத்தகமொண்டு தவறி றோட்டுலை விழ, நான்தான் எடுத்துக்குடுத்தனான். அவரும் தங்கச்சி மாதிரி பீ ஏயோ எம்மேயோதானாம். மங்கையர்க்கரசிக்கு நல்ல பொருத்தமான ஆள்; அப்பேன் அவள் அழ வேணும்..”

“அவர் நல்ல மாதிரி மனிசன் தானேடி; உனக்கு நல்ல பொருத்தமான ஆள்; உதுக்கேன்ரீ பேச்சி அழுகிறாய் எண்டு நான் கேட்டேன்”

“அவள் தன்ரை சட்டைக்குள்ளாலை ஒரு படத்தை எடுத்து என்னைப் பாக்கச் சொல்லிக் காட்டினாள். ஒரு காச்சட்டை போட்ட நெடுவல் பெடியனும், ஒரு பொம்பிளையும். நான் கண்ணைக் கசக்கிப்போட்டு வடிவாய்ப் பார்த்தேன். பொம்பிளை தங்கச்சி, தங்கச்சியேதான் – இரண்டு பேரும் சோடியாய் சிரிச்சுக்கொண்டு நிக்கினம். பெடியனையும் எங்கையோ கண்டமாதிரி – ஓ! ஒருநாள் சைக்கிள்ளை நிண்டு தங்கச்சியைப் பாத்த பெடியன். படம் பாக்கேக்கை குறு குறுப்பாய் பாத்த பெடியன் ; எனக்கு தலை சுத்திச்சுத் மயக்கம் வந்தது; நெஞ்சை அடைச்சது: கண் இருண்டது; அழுகை அழுகை அழுகையாய் வந்தது

“அழுகையை அடக்கிக்கொண்டு, அவளை நிமிர்ந்து பாத்துக் கேட்டேன் நீ என்ரை தங்கச்சி தானோடி எண்டு”

“அவள் என்ரை காலிலைவிழுந்து கையாலை காலைக் கட்டிப் பிடிச்சுக்கொண்டு அழுதாள். நான் உன்ரை தங்கச்சி இல்லாட்டா வேறை ஆரடா உன்ரை அருமைத் தங்கச்சி எண்டு கேட்டாள். ஐயாவும், நீ என்ரை மேளாடி எண்டு பேசினது எண்டு சொல்லிக் கதறினாள். அண்ணை நீ ஒரு தெய்வம்; குழந்தை எண்டு நினைச்சேன், நீயுமா என்னை விரட்டிறாய் எண்டு கேட்டாள். எனக்கு அடக்க அடக்க அழுகை வந்தது. ‘அப்ப ஏன் தங்கச்சி உப்பிடிச் செய்தனி’ எண்டு கேட்டேன்.”

“அவள் கண்ணைத் துடைச்சுப் போட்டுச் சொன்னாள் அது என்ன வோடா. அண்ணா எனக்குச் சொல்லத் தெரியாது. எனக்கு அவரிலை பிடிச்சுப்போச்சு: அவருக்கும் அப்பிடித்தான். தாங்கள் பெத்ததுக்களுக்கு கலியாணம் செய்து பார்க்கிறதோடை தாய் தேப்பன்ரை பொறுப்புத் தீர்ந்துபோம். குடும்பம் நடத்துகிறது நாங்கள் தானே. எங்களோடை குடும்பம் நடத்தக்கூடியவங்களை தெரிஞ்கெடுக்க எங்களுக்கு அறிவு காணாதே. நாங்கள் விரும்பியவங்களுடன் நாங்கள் வாழவேணுமடா அண்ணா: ஐயா தான் சொல்லுறவரைத்தான் கலியாணம் செய்ய வேணுமெண்டு சொவ்லுறார். இவர் இல்லாமல் என்னால் வாழ ஏலாதடா. எண்டு சொல்லிக் கண்கலங்கிச்சுது தங்கச்சி; நானும் எவ்வளவோ மனத்தைக் கல்லாக்கி வைராக்கியமாயிருக்கத்தான் பார்த்தேன். என்னாலை ஏலாமல் போச்சுது. எனக்கும் கண்கலங்கிச்சுது. அது சொல்லுறதும் சரிபோலத்தான் எனக்குத் தெரிஞ்சுது. பதின்மூண்டாம் பதினாலாம் வகுப்பிலை என்ன படிப்பிக்கிறலையெண்டு எனக்கு விளங்கிப்போச்சு. எங்களைப்போலை மூண்டாம் நாலாம் வகுப்புப் படிச்சவையெல்லாம் இப்பிடி இப்பிடி புதிசு, புதிசாய் யோசிச்சுப் பார்க்க மாட்டினம். கனக்கப் படிச்சவைதான் புதிசு புதிசாய் யோசிப்பினம் போலை. தாங்கள் விரும்பினவையைத் தானே எல்லாரும் கலியாணம் செய்யிறதெண்டால் எவ்வளவு நல்ல யோசினை.”

“எனக்கு இப்ப ஒரு உதவி செய்ய வேண்டுமெண்டு தங்கச்சி கேட்டிது. அந்தப் பெடியன் பக்கத்தூர் பெடியன் தானாம். போய் நான் தாற துண்டைக்குடுத்து அவனைக் கூட்டியாறியோ எண்டு கேட்டதும்”

“நான் ஓமண்டிட்டேன். உந்த இருட்டுகளுக்கெல்லாம் நான் பயப்பிடமாட்டேன். அமவாசை இருட்டிலை கூட கைக் குறிப்பிலை தண்ணிகட்டிறனான்தானே. ஆக திருநீத்து வாத்தியாரை நினைக்கத்தான் பயமாய் சிடந்தது.”

“பேந்தென்ன? அவன் வந்தான் தங்கச்சியையும் அவனையும் நான் தான் வழி அனுப்பிவைச்சேன். அதுகள் படிச்சது தானே எங்கேயெண்டாலும் போய் சந்தோசமாய் வாழட்டும் எண்டு நினைச்சேன்”.

“அவை இரண்டு பேருமாய் போகேக்கை தங்கச்சி என்ரை காலிலை விழுந்து கும்பிட்டுது; ‘அண்ணா நீயொரு தெய்வமடா’ எண்டு சொல்லிச்சுது. ‘எங்களை ஆசீர்வதிச் சுவிட்டா அண்ணை’ எண்டு அது கேட்டது. எனக்கு வெக்கமாய்த்தான் கிடந்தது. சந்தோசமாயும் கிடந்தது. கண்ணீரும் வந்தது. ‘தங்கச்சி நீ எங்கையெண்டாலும் சந்தோசமாய் இருக்க வேண்டுமெண்டு’ நான் சொன்னேன். என்ரை குரல் கம்மி இருந்தது.”

“அவையள் அந்த இருட்டிலைபோக வெளிக்கிட்டினம். தங்கச்சியின்ரை புழுகத்தைப் பாத்து எனக்கு சந்தோஷம். சந்தோஷம், சந்தோஷமாய் இருந்தாலும், திருநீத்து வாத்தியாரை நினைக்க எனக்கு பயமாய்த்தானிருந்தது.”

“தங்கச்சி போகேக்கை சொல்லிச்சிது. ‘அண்ணா! ஐயாவை நினைச்சு பயப்படாதேயடா; காலம் மாற மாற அதுக்கேற்ப மனிசனும் மாறத்தானடா வேணும். ஐயாவும் மாறுவார்; அவற்றை கோபமும் அடங்கும் எண்டுதான் நினைக்கிறேன்.”

அழுது கொண்டே – அப்பிடிச் சந்தோசத்திலையும் அவையள் ஏன் அழவேணும் – கையளை ஆட்டிக் கொண்டே அவையள் போச்சினம். நானும் கையளை ஆட்டிக்கொண்டே நிண்டேன். என்னை மறந்து போய் ஆட்டி, ஆட்டி ஆட்டி கைவலிக்கத்தான் நிப்பாட்டினேன். என்ரை நெஞ்சு குளிர்ந்திருந்தது.

“நான் இப்ப திருநீத்து வாத்தியாருக்கும் பயப்படமாட்டேன். தங்கச்சி அவனோடை ஓடினதைப்பற்றி, அவர் என்னைக் கேட்டா நான் இப்ப அவருக்கு முன்னாலை துணிஞ்சு நிண்டு ஞாயம் சொல்லுவேன். ஓம்; உண்மையாச் சொல்லுவேன்.”

“இரா முழுக்க நித்திரை வரேல்லை; புரண்டு புரண்டு படுத்தேன். கோழி கூவிச்சிது; குருவி கத்திச்சிது; சாடை சாடையாய் விடிஞ்சது. இருட்டுப் போக வெளிச்சம் வந்தது.”

“தங்கச்சியும் அவனும் இப்ப வெளிச்சத்திலை நடப்பினம் எண்டு நான் நினைச்சேன்.”

– 1969 – கோடுகளும் கோலங்களும் – அலை வெளியீடு – மார்கழி 1976
– சாதாரணங்களும் அசாதாரணங்களும், முதற் பதிப்பு: அக்டோபர் 1983, நர்மதா பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *