அம்மா ஒரு கலைமகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 23, 2018
பார்வையிட்டோர்: 6,944 
 

பூஜை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.மக்கள் அங்குமிங்மாய் வரிசையில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர்.ஒவ்வொரு முகத்திலும் தீராத ஒரு இறைத் தேடல் படர்ந்து இருந்தது.
கவலைகள் அனைத்தையும் தன்மனத்தினுள் கடற்கரையோர மண்பொந்துகளில் தம்முட்டைகளைப் பதுக்கும் நண்டுகளைப் போல, புதைத்து வைத்துவிட்டு கோயில் வரிசையில் இறைவனடி சேர ஒரு மென்மையான அமைதியுடன் யட்சகர்கள் காத்திருந்தனர்.

ஒருவன் நெற்றியில் வெள்ளை நிறத்தில் விரளலவு தடிமன் கொண்ட மூன்று திருநீர்க் கோடுகளுடன்‌ வரிசையை நோக்கி நடந்து வந்தான்.அவன் நெற்றியிலிருந்த பட்டை அணிலின் முதுகில் செல்லும் அதே மூன்று வெந்நிற கோடுகளைப் போலவே சீரான இடைவெளி விட்டு போடப்பட்டிருந்தது. அவன் கடைசி ஆளாய் வந்து நிற்க வரிசை சாலையருகே நீண்டு சென்றது. முன்னாலிருந்தவரிடம் பூஜை நாலு மணிக்கு தானே என்று கேட்டான்.அவர் தன்னுள் ஒரு இறைப்பாடலை மெல்லிய‌குரலில் முனங்கிக் கொண்டிருந்தமையால் இவன் கேள்வி அவர் செவிகளுக்கு எட்டவில்லை. மீண்டும் ஒரு முறை கொஞ்சம் சுருதியை ஏற்றி அதே கேள்வியை கேட்க, அவர் தலை ஒருமுறை தரையிலெறிந்த பந்து போல் கீழே சென்று மேலெழும்பி ஆம் என்று மெளனமாய் பதில் சொன்னது. இன்னும்‌ கால்மணி நேரம்‌ மீதமிருந்தது. வரிசையின்‌ அளவும் , தான் அதில் கடைசி ஆளாய் நிற்பதும் அவனுக்கு சற்றே சலிப்பை ஊட்டியது.

அவன்‌ பார்வையை சுற்றத்தை நோக்கி திருப்பினான்.மஞ்சள் மாலைகள் வாயிலில் தொங்க தன் கணவனை திட்டியபடியே பூக்களைத் தொடுக்கும் பூக்காரப் பெண். வெறும் முப்பது தான் முப்பது முப்பது முப்பது என்று நிமிடத்திற்கு முப்பது முறை கரையும் தேங்காய் கடைக்காரர்.கூட்டம் எப்போது உள்ளே செல்லும் தன் திறமையை காட்டலாம் என்று ஆவலோடு காத்திருக்கும் செருப்பு திருடர்.வாழைப்பழம் விற்கும் அக்கா, அவளை போன்ற வீதியோர வியாபாரிகளிடம் மட்டுமே தன் வாதத் திறமையை காட்டி பேரம் பேசும் மக்கள் என பலரையும் அவன் கண்கள் நோட்டம் விட்டபடி இருந்தது. சாலையில் ஓரு பெண் சாக்கின் மேலமர்ந்தபடியே தரையை தேய்த்து தேய்த்து கூட்டத்தை நோக்கி முன்னகர்ந்து வந்தாள். அந்த சாக்கில் ஆங்காங்கே தெரிந்த சன்னல்களும் அதன் மங்கிய நிறமும் அச்சாக்கின் நிலையையும் அப்பெண்ணின் நிலையையும் எடுத்துகாட்ட போதுமானதாக இருந்தது. அவளது இரு கால்களும் இடது கையும் செயலிழந்திருந்தன. அவள் பிச்சைக்காரி என்று அவன் ஊற்ஜித்துவிட்டான். அவன் அவளை அலட்சியமாய் பார்த்து விட்டு வேறு திசைக்கு பார்வையைத் திருப்பினான். அவன் அலட்சியம் எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது ,ஆனால் அம்மா அதை பொருட்படுத்தாமல் சாக்கில் தவழ்ந்த படியே வரிசையை நெருங்கினாள்.அம்மா அலட்சியங்களை என்றுமே ஒரு பொருட்டாய் மதித்தில்லை மதிப்பதும் இல்லை.

என் அம்மா ஓர் இரும்பு மனிதி.என் வாழ்நாளில் அவள் அழுவதை அவள் நடிக்கும், மண்ணிக்க அம்மா வாழும் கூத்துகளிலன்றி வேறு எப்போதும் நான் பார்த்ததே இல்லை.அந்த காலத்தில் அவள் நடிப்பைக் கண்டு சுற்றுவட்டாரத்தில் அசராத ஆளே இல்லை. அவள் கூத்தில் நடிக்கும் போது இளம்பெண்கள் அனைவரின் கண்களும் அம்மாவையே ஆச்சரியமாய்,ஏக்கமாய்‌ காதல் வயப்பட்டு பார்த்துக் கொண்டிருக்கும்.அவர்கள் அம்மா ஒரேயொருமுறை தன்னை பார்த்து விட மாட்டாரா என்று ஏங்கிய காலங்களவை. அவர்களை பொருத்தமட்டில் அம்மா ஒரு ஆண், நன்கு வசீகரமாய் வேடமிட்டு நடிக்கும் ஒரு கலைக் கூத்தாடி. அம்மா இது வரை எல்லா கூத்திலும் ஆணாகதான் நடித்துள்ளாள். அவள் எந்த ஒரு குழுவிலும் இல்லை அவள் ஒரு தான்தோன்றி கூத்தாடி.அவள் பொதுவாக அருகிலுள்ள சிற்றூர்த் திருவிழாக்களில்தான் கூத்து போடுவாள்.அவள் பெண் என்று யாருக்குமே தெரியாதவண்ணம் ஆண் வேடமிட்டு நடிப்பாள். கூத்து முடிந்த பின் யாருக்கும் தெரியாமல் வேடத்தை கலைத்துவிட்டு வீடு திரும்பிவிடுவாள்.அவள் கூத்துகளுக்கு பணம் வாங்கமாட்டாள்.அவளின் தேவை என்றுமே பணமாய் இருந்திருக்க வில்லை.

குழந்தைப் பருவம் முதலே அவளுக்கு நடிப்பின் மேல் விவரிக்கவியலா அளவு காதல். காலப்போக்கில் அவளை விடவும், கலையின் மேல் அவளுக்கிருந்த காதல் பெரிதாய் வளர்ந்து நின்றது. எங்கே கூத்து நடந்தாலும் அங்கேயே காலம் நேரம் தெரியாமல் வேடிக்கை பார்த்து கொண்டு நிற்பாள். பின்னர் கண்ணாடி முன் அதே போன்று நடித்துப் பழகி கொள்வாள். அப்போதைக்கு எங்கள் ஊர்‌ கலைமகள் நாடகக் குழுவில் எப்பாடுபட்டாவது சேர்ந்துவிட வேண்டும் என்பதே அவளது ஒரே இலக்கு.அவர்கள் ஒத்திகை நடத்துவதை ஒளிந்து நின்று பார்த்து வியந்து கொள்வாள். எந்நேரமும் கண்ணாடி முன்னாலேயே இருப்பாள்.பருவக் கோளாறு என்றே வீட்டில் நினைத்தார்கள், ஆனால் அவளோ கண்ணாடியை தன் திறமையை பாராட்டும், குறைகளை சுட்டிக்காட்டி மேம்படுத்தும் ஓர் உற்ற தோழனாய் பார்த்தாள். அத்தோழன் மட்டுமே அவளது முழு திறமையையும், நடிப்பின்‌ மேல் அவள் வைத்திருந்த காதலையும் அறிந்திருந்தான். பதினைந்து வயதில் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு கலைமகள் குழுவில் சேரும் ஆசையை வீட்டில் சொன்னாள். அவள் அப்பா,அம்மா,ஊர் என‌ எல்லோரும் செய்த அடக்குமுறைகளால் அவள் கூத்தாடி குழுவில் சேரும் ஆசையை கைவிட்டுவிட்டாள். அவர்களைப் பொறுத்தவரை பெண்கள் கூத்தாடுவது இழுக்கான செயல். என் மகள் ஒரு கூத்தாடி என்று கூறுவதை விட அமரர் என்று கூறுவது மேல் என்று அம்மாவின் தந்தை கூறினார். வழக்கமான காதல் கதைகளில் வரும் சம்பவங்கள் அனனைத்துமே அரங்கேறின ,என்ன காதலனுக்கு அம்மாவின் கதையில் கூத்து என்று பெயர். இறுதியில் சொந்த மாமனுக்கே மணம் முடிக்கப்பட்டாள். கூத்து ஆசை இயல்பு வாழ்க்கையில் நடுவே தரைமட்டமானது. சிறிது காலத்தில் நானும் ஜனித்துவிட்டதால் அவளுக்கு அந்த எண்ணமே முற்றிலும் மறந்துபோனது.

வருடங்கள் கழிந்தன.அப்பாவிற்கு நாளுக்கு நாள் இருமல் அதிகமானது.அவர் உடல் நலம் செங்குத்தாக சட்டென குறைந்து‌ கொண்டே வந்தது. அப்பா அற்ப ஆயுளில் காசநோய்க்கு இறையானார். அம்மாவிற்கு விதவையென்ற பட்டம் ஊரார்களால் கேட்காமலேயே திணிக்கப்பட்டது. காலங்கள் செல்ல அவள் மேல் அன்பு செலுத்த துணையும், தோள்சாய நல்ல தோழனும் இல்லாதது மற்றும் விதவைப் பட்டம் பெற்றதால் அம்மாவால் மீண்டும் ஒரு ஆணை காதல் செய்யமுடியவில்லை. செய்தாலும் வெளியே சொல்ல முடியாமல் தன் மனதிலேயே புதைக்கநேரிட்டது. இந்த கட்டத்தில் தான் மீண்டும் கூத்தின் மீது அவளுக்கு காதல் அரும்பத் தொடங்கியது. பெற்ற மகனான என்னை விடவும்‌ கலையை மிக மூர்கமாய் காதலிக்கத் தொடங்கினாள். இளம்‌வயது விதவையவள். தன்‌ ஏக்கம் தாகம் தவிப்பு கவலை அனைத்திலிருந்தும் கூத்து மட்டுமே தன்னை விடுவிப்பதாக எண்ணினாள். நடிப்பின் மூலம் மட்டுமே அம்மா அவள் இருப்பை உணர்ந்து கொண்டாள். காலையில் எங்கள் நிலத்திலே உழைப்பாள் இரவில் பக்கத்து ஊர்களில் திருவிழாக்களில் யாருக்கும் தெரியாமல் கூத்து போடுவாள். தன்னை ஊர் பேச்சுகளிலிருந்தும் உடல்ரீதியாகவும் காத்துக்கொள்ளவே ஆண் வேடமிட்டு கூத்து கட்டினாள். அம்மா இரவுகளிள் தந்தையிடம் கண்ட காமத்தை காட்டிலும் கூத்தில் தான் அதிகம் தன்னிறைவு கொள்கிறாளென்று எனக்கு பலமுறை தோன்றியிருக்கிறது.

ஒருமுறை மேற்கே உள்ள‌ ஒரு ஊர்த் திருவிழாவில் கூத்து போட சென்றிருந்தாள். பொதுவாக எங்கள் ஊரைப்போல் கிழக்கில் இருக்கும் எந்த‌ ஊர்காரர்களுக்கும் அந்த ஊருக்குள் அனுமதி கிடையாது. ஆனால் அம்மாவோ கூத்து நடத்த கோயிலுக்குள்ளேயே வேடமிட்டு சென்றிருந்தாள்.அன்று அம்மா அவள் மிகவும் நேசித்த அவள் மனதுக்கு மிகவும் நெருக்கமான “இரத்த கண்ணீர்” படத்தின்‌ இறுதிக் காட்சியை‌ கூத்தாக போட்டிருந்தாள்.அவள் எம்.ஆர்‌ இராதாவாகவே உறுமாறினாள். ஆரம்பம்‌ முதலே அவள் அபார நடிப்பில் முழு கூட்டமும் மயங்கியிருந்தது.நடுவே அவ்வப்போது அவளுக்கு வயிற்றில் சிறிது வலி ஏற்பட்டது. அவள் கவனம் முழுதும் கூத்திலிருந்தமையாள், அவ்வலி மாதவிடாயின் வருகையை உணர்ந்தும் முன்னறிவிப்பென்பதை அவள் பெரிதுபடுத்திக் கொள்ளவில்லை. ஒவ்வோரு சொட்டாக உதிரம் அவளணிந்திருந்த வெள்ளை வேட்டியைத் தொட ஆரம்பித்து. அம்மா பேசிய ஒவ்வொரு வசனத்திலும் தீப்பொறி பறந்தது. கூட்டம் ஆர்பரித்து. திசையெங்கும் விசில் சத்தங்கள் பறந்தன. அவள் இறுதி வசனங்களை நெருங்கியபோது கூட்டத்தில் மயான அமைதி நிலவியது.மொத்த கூட்டமும் அவள் நடிப்பில் மயங்கியிருந்த வேலை கடுமையான வயிற்று வலியுடன் கூடிய உதிரப்போக்கு ஏற்பட்டதால் அம்மாவின் வெள்ளை வேட்டியின் பின்னால் இரத்தக்கரை கருஞ்சிவப்பாக வெளியே தெரிந்தது. அம்மா இப்போது அதை உணர்ந்து கொண்டாள். அங்கிருந்து வேகமாய் வெளியேற முயற்சித்தாள். ஆனால் கூட்டம் கூத்தின் இறுதிக்காட்சியை முடித்து விட்டு போகும் படி ஆரவாரம் செய்தது. இறுதியில் அம்மாவை வற்புறுத்த ஆரம்பித்து விட்டனர். அம்மாவிற்கு பயம் உச்சியில் ஏறியது. வார்த்தைகள் வரவில்லை. அவள் பெண் என்று தெரிந்தால் என்ன ஆகும் என்ற பயம் அடிவயிற்றை தாக்கி உதிரப்போக்கை மேலும் அதிகமாக்கியது.இதயத் துடிப்பு வழக்கத்தை விட பண்மடங்கு வேகமாய் துடித்தது. அம்மாவின் கண்கள் சருங்கியது. பார்வை மங்கி இறுதியில் கூட்டத்தின் நடுவே மயங்கி விழுந்துவிட்டாள்.

அம்மா விழித்த போது அவள் கைகள் ஒரு கம்பத்தில் கட்டப்பட்டிருந்தன. அவள் அரை நிர்வாணமாக்கப்பட்டிருந்தாள்.அவள் உடுத்தியிருந்த வேட்டியில் இரத்தக் கரை இன்னும் காயாமல் இருந்தது.ஊர் தலைவா் அங்கே வந்தார்.அவர் முகம் கடும் கோபத்தால் சிவந்திருந்தது. அவர் அம்மா அருகில் வந்தார். அம்மா முகம் பயத்தில் பதறிய காட்சி என் மனதில் இன்றளவும் ஆராவடுவாய் இருக்கிறது.

“கிழக்குல இருந்த வந்தத கூட மண்ணிச்சிருவேன் ஆனா எங்க கோயில இப்படி தீட்டாக்கிப்புட்டியேடி” என்று ஊர்‌ தலைவர் அம்மா வயிற்றில் ஓங்கி ஒரு உதை உதைத்தார். அம்மா மீண்டும் ஒருமுறை மயங்கினாள்.அவள் அங்கிருந்து எங்கள் ஊர்மக்களால் குத்துயுரும் கொலையுயிருமாய் மீட்கப்பட்டாள்.உடல் பெரும் சேதமுற்றிருந்தது. இப்போது நானும் அம்மாவும் மட்டும் தான்.எங்கள் ஊர் பஞ்சாயத்தில் அம்மா ஊருக்கு மாபெறும் இழுக்கை ஏற்படுத்திவிட்டாலென்று எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைக்க உத்தரவிட்டதால், அவளுக்கு சோறு தண்ணி குடுக்க கூட ஆள் இல்லை.நான் தான் அம்மா உடலை தேற்றினேன். அம்மா எதற்கும் கலங்கவில்லை மீண்டு‌ வந்தாள். மீண்டும் வயலுக்கு செல்ல ஆரம்பித்தாள்.ஆனால் அவளால் சிலகாலங்களுக்கு மேல் சமாளிக்க முடியவில்லை. ஆம் ஒற்றை ஆளாய் முழு அறுவடையே செய்திருந்தாலும் விளைச்சலை வாங்க யாரும் முன் வரவில்லை. வண்டி கட்டி பக்கத்து ஊருக்கு சென்று விற்கலாம் என்றால் வண்டிக்காரர்களும் வரவில்லை.

சொந்தம் பந்தம் உற்றார் உறவினரென அனைவரும் ஊருக்கு கட்டுப்பட்டு ஒழுக்கவான்களாய் வாழ்ந்தமையால் அந்த விளைச்சல் முற்றிலும் வீணாகியது. போதாதக்குறைக்கு சுத்துவட்டாரத்தில் இருந்த குக்கிராமங்களில் கூட அம்மாவைப் பற்றி தான் பலநாட்களுக்கு பேச்சு.இப்போது எங்களுக்கு சோற்றுக்கு ஒரு வழியும் இல்லை. பத்து வயது சிறுவனாய் நான் பசியில் அழுவதை கண்ட அம்மா வேறு வழியின்றி இரவில் நெடுஞ்சாலைகளில் லாரி ஓட்டுனர்களுக்கு தன்னை விற்கத் தொடங்கினாள்.நாங்கள் நாளொன்றுக்கு ஒரு வேலை மட்டுமே உண்ண பழகிக் கொண்டோம்.அம்மா அப்போதும் கூட அவர்களிடம் பணம் வாங்கியது இல்லை. உணவு வாங்கித் தர சொல்லுவாள். அதன்பின் அரைமணி நேரம் அவர்களுக்கு ஏதாவது கூத்து போட்டு மகிழ்விப்பாள்.அந்த அரைமணி நேரம், அம்மாவை மாத்திரைகளின்றி கவலைளை மறக்க சிரிக்க குறிப்பாக மேற்படி வாழ உந்தியது.அம்மா அவளைதான் அடகுவைத்தாலேயன்றி அவள் கூத்தை அல்ல.

சில காலங்களுக்கு பின்‌ காலராவின்‌ தாக்கம் ஊர் முழுக்க பரவியது. காலரா என்னையும் விட்டு வைக்கவில்லை. ஆம் நான் கொஞ்சம் கொஞ்சமாக அதற்கு இரையானேன். மருத்துவம் பார்க்க யாரும் முன்வரவில்லை.அம்மா என்னை தோல்களில் தாங்கிக்கொண்டு ஊர்ஊராக சுற்றித் திரிந்தாள்.மருத்துவம் பார்க்கும் படி ஊர் காரர்கள் உறவு காரர்கள் என எல்லாரிடமும் வெட்கத்தை விட்டு கெஞ்சினாள்.பலனில்லை. நான் அவள் தோல்களிலேயே மரணத்தை எய்தினேன். அம்மா தனிமரமானாள்.சொந்தமென்றிருந்த ஒரே ஓர் ஆளான நானும் இப்போது இல்லை. அம்மாவை அந்த நிலையிலும் அவள் நம்பும் கலைதான் அவளை சாக விடாமல் தடுத்தது. நான் இறந்த மறுநாளிலிருந்து இன்றுவரை அவள் மேற்கேயுள்ள அதே கோயிலுக்கு சென்று வெளியே தினமும் எதாவது கூத்து போட்டுக் கொண்டு தான் இருக்கிறாள். அவர்கள் அடித்தாலும் உதைத்தாலும் கை‌‌ கால்களை முடமாக்கினாலும் அம்மா ஒருபோதும் கூத்து போடுவதை ,நடிப்பதை ,வாழ்வதை நிறத்துக் கொள்ளவில்லை. இப்போதும் கூட அம்மா அதற்காகத்தான் தரையை தேய்த்து தேய்த்து தவழ்ந்து வருகிறாள். அவள் நிலையையும் கூத்தையும் பார்த்துவிட்டு பரிதாபப்பட்டு ஊர்காரர்கள் சில முறை பிச்சையாக சில சில்லறைகளை போட்ட பொழுதுகள் உண்டு ஆனால் அதை அம்மா பொறுக்கி எடுத்த பொழுதுகள் இன்றுவரை இல்லை.

ஊர்காரர்கள் கண்களுக்கும் உங்கள் கண்களுக்கும் அம்மா ஒரு சாதாரண மனிதியாய் ஒரு வேசியாய் தெரியலாம். ஆனால் தன் இருப்பின் மூலமாகவும் கலையின் மேல் கொண்ட தீராக் காதலினாலும் தன் கூத்தின் மூலமாகவும்,தன் உடைந்த கைகளால் துறுபிடித்த இச்சமூகத்தின் கழுத்தைப் பிடித்து தினம்தினம் கேள்வி கேட்கும் அவள்,என் அம்மா ஒரு கலைமகள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *