அப்பாவுக்குத் தெரியும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 30, 2022
பார்வையிட்டோர்: 12,298 
 

(1987 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குளித்துவிட்டு வந்த சங்கரனுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது.

மேஜை மேல் ஒரு சட்டையும், பேண்ட்டும் துவைத்து இஸ்திரி போட்டு வைக்கப்பட்டிருந்தது. சட்டை வெள்ளைச் சட்டை. அவனோ, லாண்டரியோ எந்தக் காலத்திலும் தராத வெண்மை நிறத்தில் துவைக்கப்பட்டிருந்தது அது, சோப்பும், உழைப்பும் மட்டுமா துவைப்பது? அக்கறையும் கூட வேண்டும்.

தன் மீது இவ்வளவு அக்கறையாக, தன் ஆடையை இவ்வளவு நேர்த்தியாகத் துவைத்து வைத்திருப்பது யாராய் இருக்க முடியும்?

இடுப்பில் கட்டியத் துண்டோடு வெளியே வந்தான் சங்கரன். அடுப்பறையை எட்டிப் பார்த்தான்.

“என்ன வேணும்?” என்றாள் அங்கு குக்கரிலிருந்து இட்லிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்த சுமதி.

“அம்மா இல்லையா?” “என்ன வேணும்? என்கிட்டே சொல்லுங்களேன்….” “என் சட்டையைத் தோய்ச்சது யார்?” “நான்தான். ஏன், செய்யக் கூடாதா?”

“அதுக்கில்லை… ரொம்ப நல்லா இருந்துச்சு… எதுக்கு உனக்கு வீண் சிரமம்…”

“தேங்க்ஸ்…” என்று ஒரே வார்த்தையில் அவனை வெட்டிக் கொண்டு, தன் காரியத்தையே கவனமாகத் தொடர்ந்தாள் சுமதி. ஆனால் மழைக்காற்று மாதிரி அவள் முகத்தில் நிலை பெற்றுப் போன குளிர்ச்சியான புன்ளகையைக் கவனிக்கத் தவறவில்லை சங்கரன்.

உடுத்துக் கொண்டு சாப்பாட்டு மேஜையில் வந்து அமர்ந்தான் சங்கரன்.

அம்மாவைக் காணோம். ஆனால் சுமதி தான் வந்தாள். தட்டில் இட்லிகளை எடுத்து இட்டாள். குட்டி வெள்ளை மேகம் மாதிரி ஆவி பறந்தது அவற்றின் மேல்.

“அம்மா எங்கே?” “ஏன்? நான் போட்டால் சாப்பிடக் கூடாதா?” “அம்மா எங்கேயாவது வெளியே போயிருக்காங்களா என்ன?” “இல்லை . லேசாக மயக்கமாக இருக்கிறதாம். படுத்திருக்காங்க.” “ஐயையோ… அந்த பாட்டில்லே…”

“பச்சை மாத்திரை ஒன்றும், வெள்ளையில் அரை மாத்திரையும் காபியோடு கொடுத்து படுக்க வச்சிருக்கேன். தூங்கி எழுந்தா எல்லாம் சரியாய் போயிடும்… நீங்க சாப்பிடுங்க…”

“ரொம்ப தேங்க்ஸ் சுமதி.”

“தேவையில்லை. சாப்பிடுங்கள். உங்கள் ‘ருசி’ எனக்குத் தெரியாது. ரெண்டு நாள் தானே ஆச்சு… இன்னும் ஒரு நாள் ‘டைம்’ கொடுங்கள். உங்களுக்கு என்ன, எப்படி, எது பிடிக்கும்ன்னு உங்களுக்குத் தெரியாததைக் கூட நான் சொல்வேன்…”

“டிபன் உண்மையில் பிரமாதம்!”

“எனக்கு சினிமா விமரிசனம் தேவையில்லை. உறைப்பு, உப்பு, எல்லாம் சரியான விகிதத்தில் இருக்கா, அதைச் சொல்லுங்கள்…”

“ஒ.கே.”

சர விளக்கு மாதிரித் தொங்கிக் கொண்டிருக்கும் தன் இரு சடைகளும், காற்றில் அசையும் ஊஞ்சல் சங்கிலி மாதிரி இருபுறமும் அசைய அவள் அடுப்பறைக்குச் சென்றாள்.

உண்டு முடித்து காலணி அணிய வந்தவன், அன்றைக்கு இரண்டாம் முறையாகத் திடுக்கிட்டான்..

அப்போதுதான் கடையில் வாங்கிய புத்தம் புது ஷூக்கள் மாதிரி பளபளத்துக் கண்ணாடி மாதிரி அவன் முகத்தைப் பிரதி பலித்தன அவனது ஒன்றரை வயசான பழைய காலணிகள்,

“இதுவும் நீ தானா?”

‘ஆம்’ என்று சொல்லவில்லை அவன்… மாறாக, “எப்படி இருக்கு?” என்றாள்.

“இதையெல்லாம் நீ எதுக்குச் செய்றே…?”

“ஏன்? நல்லாயில்லையா? பழக்கம் இல்லை … அதுதான், போகப் போகச் சரியாயிடும்.”

“சூ- அதுக்கில்லை . ‘இந்த’ வேலை?”

“வேலையில் உயர்வு என்ன, தாழ்ச்சி என்ன? சரியாகச் செய்தி ருக்கிறேனா? அதைச் சொல்லுங்கள்.”

ஒரு கணம் அவளைத் தீர்க்கமாகப் பார்த்துவிட்டு வெளி யேறினான் சங்கரன்.

அவளிடமிருந்து ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது.

இது – சுமதி, மாமா வீட்டுக்கு வந்த இரண்டாவது நாள், மாமாவைத் தவிர வேறு ஆதரவு இல்லை என்று அந்த வீட்டோடு வந்து ஒண்டிக் கொண்டவள் அவள். அம்மா படுக்கையாய்க் கிடந்து ஒரு மாலை வேளையில் சாகும்போது, தான் இனி ஓர் அனாதை என்று எண்ணினாள் அவள். அப்போது அருகில் இருந்த மாமா சொன்னார்: ‘சுமதி.. உலகத்தில் உயிர் வாழ நேருகிற அந்தக் கடைசி மனுஷன் தான் அனாதை உனக்கு நான் இருக்கிறேம்மா. என் தங்கை பெண் நீ, எனக்கு மகன் ஒருத்தன் தான். பெண் இல்லை, இனி நீயும் எனக்குப் பெண்… வா என்னோடு”

அம்மாவின் காரியம் முடிந்த கையோடு மாமா வீட்டுக்கு வந்துவிட்டாள். அத்தை சுமதியைக் கட்டிக்கொண்டு அழுதாள். அத்தை மகள் சங்கரன், “ஐ ஆம் சாரி சுமதி” என்றான். எல்லோரும் ஆதரவாகத்தான் இருந்தார்கள், மனிதர்கள் அடிப்படையில் நல்லவர்கள் தானே! சுமதிக்குக் கூரை கிடைத்தது.

“வீட்டுக்குப் பின்னால் எவ்வளவு நிலம் காலியாகக் கிடந்தது, ஓர் அழகான தோட்டம் போடலாம்” மாமாவிடம் சொன்னாள்,

போடேன்.” என்றவர் சில கணங்கள் சும்மா இருந்தார். பிறகு சொன்னார்:

“இது வெறும் களர் நிலம் சுமதி, நீர் வார்த்து, மண்ணைப் பண் படுத்தி, எரு விட்டு, எதை நீ விதைத்தாலும் நெருப்பு மாதிரி பற்றும். நீ புத்திசாலி. வீட்டை ஒழுங்கு படுத்திக்கொள்ள வேண்டியது உன் பொறுப்பு.

மாமா எப்போதும் இப்படித்தான் பேசுவார். ஒன்றுக்கென்று சம்பந்தம் இல்லாதது மாதிரிப் பேசுவார். சம்பந்தம் இல்லை என்று சொல்லி விடவும் முடியாது. யோசிக்க வேண்டும்.

“முயற்சி பண்றேன் மாமா….”

“செய்…”

கொஞ்சம் கீரைப் பாத்தி போட்டாள். கொஞ்சம் கனகாம்பரம், கொஞ்சம் பட்டு ரோஜாச் செடிகள், ஏன், ரோஜாப் பதியன்களைக் கூட நட்டு வைத்தாள். மாமா சந்தோஷமாக தூர நின்று அவளைக் கவனித்துக் கொண்டிருந்தார். அவர் மனசுக்குள் குதூகலம் குமிழி யிட்டது. அது அவர் முகத்தில் வெளிப்பட்டது, – “விதைத்து விட்டாய்… செடி தானே வளரும் என்று நினைத்து விடக் கூடாது. வெகு ஜாக்கிரதையாகக் கவனிக்க வேண்டும்.” என்று மாமா அவளைப் பார்த்துச் சொன்னார்.

“கவனிச்சுக்கறேன் மாமா.”

“செய். உன்னால் முடியும்…”

சங்கரன் ஒருநாள் தோட்டத்தைப் பார்த்துத் திடுக்கிட்டுத்தான் போனான். சுமதி வந்த பிறகு அவனுக்குத்தான் எத்தனை திடுக் கிடுதல், அங்கொன்றும், இங்கொன்றுமாக குத்துச் செடிகள் முளைத் திருந்த அந்தத் தோட்டத்துக்கு இவ்வளவு ஒழுங்கும், அழகும் எப்படி வந்தது என்று ஆச்சரியப்பட்டான். ஜமுக்காளம் விரித்திருந்த மாதிரி சின்னச் சின்ன இரைப் பாத்திகள், ஒரு சாண் அளவுக்கு வளர்ந்து நிற்கிற பல்வேறு வகைப்பட்ட பூச்செடிகள், பற்றிப் படர முயற்சிக் கும் ஒரு முல்லைக் கொடி எல்லாம் அதன் அதன் இடத்தில் முளைத்து வந்து கொண்டிருந்தன.

“இப்போதுதான் எல்லாம் முளைக்கத் தொடங்கியிருக்கு” என்றார் மாமா, சங்கரனைப் பார்த்து.

“இந்த சுமதி வந்து எல்லாத்தையும் அடியோடு மாத்திட் டாப்பா …”

மாமா திருப்தியுடன் சிரித்தார்.

“இன்னும் முழுசா இல்லை. இனி போக வேண்டிய தூரம் ரொம்ப இருக்கும்..

“ரொம்ப சாமர்த்தியக்காரிப்பா அவ.”

“அதிலென்ன சந்தேகம்…”

“பாவம்! அதிர்ஷ்ட க்கட்டை .”

“இல்லை. கட்டையாக நாம் அனுமதிக்கலாமா என்ன? தவிரவும், அதிர்ஷ்டமாவது ஒன்றாவது. அவளை எவன் அடை கிறானோ அவன் அதிர்ஷ்டக்காரன்…”

“நிச்சயமாக!” என்றான் சங்கரன்.

தோட்டம் மட்டும் இல்லை. அவன் அறையைக் கூட அவள் மாற்றியமைத்துத் தான் இருந்தாள்.

கறையும் அழுக்குமாக, ஒரு பக்கம் சுருண்டு கிடக்கும் அவனா லேயே சகிக்க முடியாத நாற்றம் மிகுந்த அவன் படுக்கை விரிப்பும், போர்வையும் மிகுந்த சோபை பெற்று விளங்கின. சுமதியால்தான், கால் வைக்கிற இடமெல்லாம் தற்தறக்கிற தரை மிகச் சுத்தமாகியது. ரஸம் போன மாதிரி இருந்த கண்ணாடி என்ன மாயமோ, பளிச் சிட்டது. மேஜை, நகர சபைக் குப்பை வண்டி, இப்போதோ ஓர் பெற்று விளங்கியது. புத்தகங்கள் ஒழுங்காக அடுக்கப்பட்டு, ரக வாரியாக அடுக்கப்பட்டிருந்தன. அழுக்குத் துணிப்பத்துகள் கண்ணில் விழுவது இல்லை.

ஏனோ அவளுக்கு நன்றி சொல்ல வேண்டும் எனத் தோன்றியது சங்கரனுக்கு. அழைத்தான்.

‘என்ன’ என்றவாறு அறைக்குள் நுழைந்தாள் சுமதி, “உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும் போல் இருந்தது.” “சொல்லுங்களேன்…” அவள் கால் விரலால் தரையில் கோடு கிழித்தான். “சொல்லுங்களேன்.”

“ஒன்றுமில்லை. உனக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றியது.”

“நன்றியா?” “அவன் முகம் சுருங்கியது. “நான் வர்றேன்” என்று சொல்லிவிட்டு மறைந்தாள் சுமதி.

செடிகள் நன்கு செழித்து வளர்ந்து விட்டிருந்தன. திட்டமிட்டு வளர்த்த ஒரு நந்தவனம் மாதிரி இருந்தது தோட்டம்,

அத்தைக்கு சமையலுக்குக் கீரை கிடைப்பதில் மிகுந்த திருப்தி, சங்கரனுக்கு நண்பர்களை அழைத்து வந்து தோட்டத்தைக் காட்டுவதில் பெருமை, மாமாவுக்கு ஏதோ ஒன்று வளர்வதில் மகிழ்ச்சி .

அத்தை கீரையைப் பறித்துக்கொண்டே சங்கரனிடம் சொன் னாள். சுமதி மாடியில் வற்றல் பரப்பிக் கொண்டிருந்தாள்.

“என்ன கையிடா இது! எதைத் தொட்டாலும் துலங்குது. எதை வச்சாலும் விளங்குது. மரம் நட்டா தோப்பா விளையுது. வாழை வச்சா களியாய் பழுக்குது. உடம்புக்குள்ளே எத்தனை பலம்! மனசுக்குள்ளே எத்தனை அழகு.. சங்கரா நான் ஒன்று சொல்வேன், கேட்பியா

“சொல்லும்மா…” அம்மா சொன்னது சங்கரனுக்குப் பிடித்துத்தான் இருந்தது. “நீயே அவகிட்ட பேசு… முன்னாலே அப்பாகிட்டே கேள்…” கேட்டான், அவர் சொன்னார்.

கேள், அதில் தப்பில்லை. ஆனால் ஒன்று, அப்பா அம்மா இல்லாதவள். தம்மையே அண்டியிருக்கிறவ. அதை நினைக்க வைக்கிற மாதிரி தீ பேசிடப்படாது. நீ எப்படியோ, அது மாதிரி தான் எனக்கு அவ. ஏன், உன்னைக் காட்டிலும் அவ எனக்கு உசத்தி. ஜாக்கிரதை…” என்றார் கறாராக.

“எனக்குத் தெரியாதாப்பா…” என்றான் சங்கரன்,

பட்டுத் துணியைத் தொட்டுப் பார்ப்பது மாதிரிதான் சங்கரன், சுமதியுடன் பேசினான், ஆனால் அவனையறியாமல் அவனாலேயே ஒரு பிளவு ஏற்பட்டு விட்டது.

“நான் உன்னை விரும்பக் காரணம்…” “காரணம்….?” அவன் யோசித்து விட்டுச் சொன்னான்.

“இந்த வீடு உன்னால அழகு பெற்றுச்சு. இந்த வீட்டை உருத் தெரியாம மாற்றி அமைச்சுட்டே என் அறைக்கு இவ்வளவு அழகு இருக்கிறது எனக்கே தெரியாமல் இத்தனை நாள் இருந்துச்சு… இந்தத் தோட்டம் எல்லாமே மாறிடுச்சே. நீ எனக்கு மனைவியா வந்தா, என் வாழ்க்கையும் இந்த வீடு மாதிரியே பிரகாசிக்கும்…”

அவள் யோசித்துக் கொண்டே நின்றாள்.

“என்ன யோசனை?”

“வேண்டாம்… உங்களுக்கு என்னைக் காட்டிலும் நல்ல மனைவி கிடைப்பா …” |

சுமதி போய் விட்டாள்.

சுமதி தோட்டத்தில் செடிகளுக்கிடையே ஒரு செடியாய் இருந்த போது மாமா சொன்னார்:

“சுமதி…. சங்கரனை மறுத்திட்டேயாமே? அதுக்கு உனக்கு சுதந்திரம் இருக்கு, மனசுக்குப் புடிக்கலைன்னா, அப்புறம் என்ன விவாகம்..? ஆனா, அதுக்கு ஏதேனும் குறிப்பிட்ட காரணம் ஏதானும் இருக்காம்மா? சொல்லலாம்னு நினைச்சா சொல்லு..”

அவள் சொன்னாள்: “மாமா, அவர் இந்த வீட்டையும் தோட்டத்தையும் ஒழுங்கு படுத்தினவளைத்தான் பார்த்தார். அவளைத்தாள் கட்டிப்பேன்னு நினைச்சாரு மாமா. என்னை அவரு பார்க்கவில்லையே. ”

மாமா மரத்துப் போய் நின்றிருந்தார். பிறகு சொன்னார்:

“சரி விடு… செடிகள்ளாம் இன்னும் ஆழமா வேர் பிடிக்கலை போல இருக்கே… கவனி..”

“சரி மாமா” என்றாள் சுமதி.

– 1987

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *