கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 19, 2019
பார்வையிட்டோர்: 32,818 
 

செப்டம்பர் 1, 1939-ம் ஆண்டு, நாங்கள் சின்னக் கிராமம் போய்ச் சேர்ந்தோம். எனக்கு வயது எட்டு. அப்போது தான், இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியிருந்தது. 5-ம் தேதி, எங்கள் அத்தையின் கணவர் சுப்பைய்யருக்கு, சஷ்டியப்தபூர்த்தி. அத்தை, என் அப்பாவின் மூன்று அக்காக்களில் மூத்தவள். அவளுடைய இரண்டு தங்கைகளும் விதவைகள்.

`மெயின் லைன்’ எனச் சொல்லப்படும் ரயில் மார்க்கமாகச் சென்றால், மாயவரம் தாண்டி அடுத்த ரயில் நிலையம் மல்லியம். அங்கு இருந்து ஒரு கட்டைவண்டியைப் பிடித்து எட்டு மைல் சென்றால், சின்னக் கிராமம் என்றொரு கிராமம் வரும். அங்குதான் எங்கள் அத்தை இருந்தாள்.

சின்னக் கிராமம், ஒத்தைத் தெரு அக்கிரஹாரமும், ஐந்தாறு தெருக்கள் விவசாயத் தொழிலாளர்களும் இருந்த ஒரு குடியிருப்பு. அக்கிரஹாரத்துக்கு ஒரு முனையில் ஒரு பெருமாள் கோயில். இன்னொரு முனை வீட்டுக்காரர்தான், கிராமத்துத் தபால் அதிகாரி. `தபால்காரர்’ என யாரும் கிடையாது. அந்தக் கிராமத்துக்குக் கடிதம் வருவது எப்போதோ ஒருமுறை. அந்தக் கடிதத்தை அவரே உரியவரிடம் கொடுத்துவிடுவார். அவர்தான் அந்தக் கிராமத்துக்குப் பள்ளி ஆசிரியர். ஐந்தாறு பையன்களுக்கு ஒரே வகுப்பாக நடத்திவிடுவார். முறையான பள்ளி என்றால், மல்லியத்துக்குத்தான் போக வேண்டும். அப்படிப் போய்ப் படித்து, ஒரு மாணவன் சீமைக்குப் போய் ஐ.சி.எஸ் பட்டம்கூட வாங்கினான்.

அத்தைக்கு, எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால், அவள் வீட்டில் எப்போதும் விருந்தினர்கள். அண்ணன்மார்கள் இருவரும் நீரிழிவு நோய் கண்டு, உயிரைவிட்டாலும் அவர்கள் மகன்கள் நான்கு பேரில் யாராவது ஒருவன் அத்தை வீட்டில் பத்துப் பதினைந்து நாட்கள் இருந்துவிட்டுப் போவார்கள். அத்தைக்கு என் அப்பாவையும் சேர்த்து மூன்று தம்பிகள். அத்தையின் கணவர் சுப்பைய்யருக்கும் (நாங்கள் அத்திம்பேர் என அழைப்போம்) எழுத, படிக்கத் தெரியாது. வீட்டிலேயே இருக்க மாட்டார்.

காலையில் பழையது உண்டுவிட்டு வயலுக்குப் போய்விடுவார். பகல் ஒரு மணிக்கு வருவார். அத்தை வீட்டுக்கிணற்றுக்கு நீண்ட மூங்கில் வைத்த ஏற்றம் போன்ற ஏற்பாடு. அத்திம்பேர் வாளிவாளியாக எடுத்துத் தலையில் கொட்டிக்கொள்வார். அப்புறம் சாப்பிடுவார். உடனே மீண்டும் வயலுக்குப் போய்விடுவார். விளைவு, வீட்டில் இரண்டு பெரிய குதிர்கள். ஒன்று, சாணம் பூசிய செங்கல் குதிர்;

மற்றொன்று மரத்தினால் ஆனது. இரண்டும் பத்து அடி உயரம் இருக்கும். மேலே அழுத்தமாக மூடும் மூடி. ஏணி போட்டுத்தான் நெல்லை குதிரில் கொட்டுவார்கள். நெல்லை எடுப்பதற்கு, குதிரின் அடிப்பாகத்தையொட்டி ஒரு சிறு துவாரத்தை ஒரு சிறு மரப்பலகையால் தடுத்திருப்பார்கள். நெல் வேண்டும்போது தரையில் ஒரு முறத்தை வைத்து, பலகையைத் தூக்குவார்கள். நெல் மளமளவென விழும். ஒரு தடவைக்கு நான்கு முறம் எடுத்த பிறகு, மரப்பலகையைக் கீழே தள்ளிவிடுவார்கள்.

நெல் விழுவது நின்றுவிடும். நெல்லைக் குத்தி அரிசி எடுத்துச் சமைப்பார்கள். இதனால் அரிசி எப்போதும் பழையதாக இருக்கும். சாப்பிடுவது வாழை இலையில். சிறுவர்களுக்கு மட்டை இலைகள். வாழைமரத்தை வெட்டியவுடன் பட்டை உரிப்பார்கள். இப்படி உரித்த பட்டைகளையும் சீராக வெட்டி இரண்டு பட்டைத்துண்டுகளை ஈர்க்குக் கொண்டு தைத்துவிடுவார்கள். அநேகமாக அது சதுரமாக இருக்கும். சதுரத் தட்டில் சாப்பாடு!

அத்தைக்கு, குழந்தை இல்லை. கடைசித் தம்பியின் குழந்தையை சுவீகாரம் எடுத்துக்கொண்டாள். ராமநாதன் என்ற பெயர் கொண்ட அந்தப் பையனுக்கும் படிப்பு வரவில்லை. அவனுக்கு உடுப்பும் பிடிக்காது. கோவணத்தைக் கட்டிக்கொண்டு வயல், குளம் எனக் கிராமத்தைச் சுற்றிச்சுற்றி வருவான். அவன் மீது அத்தையும் அத்திம்பேரும் உயிரையே வைத்திருந்தார்கள்.

எங்கள் அக்காவுக்குத் திருமணம் நிச்சயமாகி சென்னை தியாகராய நகர் ராகவையா சாலையில் ஒரு மாளிகையை மூன்று நாட்களுக்கு வாடகைக்கு எடுத்துக்கொண்டோம். அந்த வீடு அழகப்பச் செட்டியாருடையது. `வாடகை ஒன்றும் வேண்டாம், பத்து நாட்கள் இருங்கள்’ – செட்டியார் சொல்லிவிட்டார். அவருக்கு `வள்ளல்’ என்ற பெயர் உண்டு. எங்கள் வரை அவர் வள்ளல்தான்.

கல்யாணத்துக்கு நான்கு நாட்கள் முன்பே அத்தை, அத்திம்பேர், ராமநாதன் மூன்று பேரும் வந்துவிட்டார்கள். பங்களாவில் இருந்த எல்லா மரங்கள் மீதும் ராமநாதன் ஏறி விளையாடினான். அடுத்த நாள் அவன் காணாமல்போய்விட்டான்.

அத்திம்பேர் பைத்தியம் பிடித்தவர்போல ஏதேதோ புலம்பினார். அத்தை, மீண்டும் மீண்டும் மாளிகைக் கிணற்றையே பார்த்தபடி இருந்தாள். எங்கள் அப்பாவும் ஊருக்குப் புதிதுதான். அக்கம்பக்கத்தில் தேடிய பிறகு, போலீஸில் மனு கொடுத்தார். அன்றிரவு யாருமே தூங்கவில்லை.

அடுத்த நாள் அதிகாலையில் ஒரு போலீஸ்காரர் வந்தார். “மவுன்ட் ரோடு போலீஸ் ஸ்டேஷனில் ஒரு பையன் கிடைத்திருக்கிறான். பெயர்கூடச் சொல்லத் தெரியவில்லை. உங்கள் பையனா எனப் பார்க்கிறீர்களா?”

அத்திம்பேர், அப்பாவை “வா… உடனே” என்று அதட்டினார். இருவரும் ஓட்டமும் நடையுமாக வாலாஜா சாலை சென்றார்கள்.

அது ராமநாதன்தான். எப்படி நான்கு மைல் போனான், எதற்குப் போனான் எனத் தெரியவில்லை. காவல் நிலையத்தில் அவனுக்கு பிஸ்கட் கொடுத்திருக்கிறார்கள். அப்பாவையும் அத்திம்பேரையும் பார்த்து, “நான் ஒண்ணும் வர மாட்டேன், போ!” என்றிருக்கிறான். காவல் நிலைய எழுத்தர் சந்தேகத்துடன்தான் பையனை அனுப்பினார். என் அப்பாதான் உறுதிமொழி எழுதிக் கொடுத்திருக்கிறார். கல்யாணத்துக்கு இல்லாமல் அத்திம்பேர், அத்தை, ராமநாதன் மூவரும் உடனே பகல் வண்டியில் ஊருக்குத் திரும்பிவிட்டார்கள். யாரும் அவர்களைத் தடுக்கவில்லை.
வாரம் ஒருமுறை நெல் குத்திப் பிரித்த அரிசி, தோட்டத்து வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு, சேனை, கருணை, ராமநாதன் என்று இருந்த அத்தை-அத்திம்பேர் வாழ்க்கையில் மாறுதல் வரத் தொடங்கியது. சஷ்டியப்தபூர்த்திக்குத்தான் எவ்வளவு உறவினர்கள் வந்தார்கள்!

கண் பட்டதுபோல காரணமே தெரியாமல் சுப்பைய்யர் முதுகில் ஒரு சிறு புண் தோன்றியது. அது சிறிது சிறிதாகப் பெரிதாகி, சீழ் வடிய ஆரம்பித்தது. இது நடந்தபோது அத்தை வீட்டில் விருந்தினர் யாரும் இல்லை. தபால்காரர், என் அப்பாவுக்குக் கடிதம் எழுதினார்.

என் அப்பாவுக்கு ஒரு வாரம்தான் விடுப்பு கிடைத்தது. எங்கள் ஊரில் இருந்து சின்னக் கிராமம் செல்ல, இரண்டரை நாட்கள் ஆகும். அத்திம்பேர் நிலைமை சற்று மோசம்தான். ஒரு நாட்டு வைத்தியர் வாரம் இருமுறை சீழ் அகற்றி, கத்தக்காம்பும் மஞ்சளும் சேர்த்துக் குழைத்து, புண்ணை அடைத்து, கட்டு கட்டுவார். `அவர் சீழ் எடுக்கும்போது என் அப்பாவுக்கு அழுகையே வந்துவிட்டது’ எனச் சொன்னார். ஒரு மெல்லிய மூங்கில் குச்சியின் நுனியில் துணியைச் சுற்றி, புண்ணில் நுழைத்துக் குடைவாராம் வைத்தியர்.

என் அப்பாவால் இரு தினங்களுக்குமேல் சின்னக் கிராமத்தில் இருக்க முடியவில்லை. திரும்பி வந்துவிட்டார். அவருடைய தம்பிகளை நான்கைந்து நாட்கள் இருந்துவிட்டு வரச் சொன்னார். அப்பாவுக்கும் அவருடைய தம்பிகளுக்கும் ஒரு பிரச்னைதான். ஒரு வாரத்துக்குமேல் விடுப்பு கிடைக்காது. ஒரு வாரத்தில் ஐந்து நாட்கள் பயணத்தில் போய்விடும்.

சுப்பைய்யர் இறந்துவிட்டார். இன்று அந்தப் புண்ணைப் புற்றுநோய் எனக் கண்டறிந்து, வைத்தியம் செய்வார்கள். எல்லாம் இன்றும் வாய்த்தான் பிழைத்தான் கதைதான். அத்திம்பேர் இறந்ததோடு, அத்தைக்கு இன்னொரு சூழ்நிலை மாற்றம். சுப்பைய்யருக்கு ஒரு தம்பி உண்டு என எங்களுக்கு எல்லாம் தெரியாது. அவர் சஷ்டியப்தபூர்த்திக்கு வரவில்லை. அந்தத் தம்பியும் இறந்துவிட்டார். அவருக்கு மனைவி, ஒரு பெண் இருந்திருக்கிறாள். பெண்ணை, கல்யாணம் செய்து கொடுத்துவிட்டார்கள். தம்பி மனைவி, சின்னக் கிராமத்துக்கு வந்து பங்கு கேட்டாள்.

அத்திம்பேருக்கு எழுதப் படிக்கத் தெரியாததால், ஒரு பத்திரமும் வைத்துக்கொள்ளவில்லை. ஆனால், கிராமத்தில் அவருக்கு மிகவும் மதிப்பு உண்டு. அவரே வயலில் இறங்கி உழுது, உரம் இட்டு, விதை விதைப்பார். அறுவடைக்கு மட்டும் ஆட்கள் அமர்த்திக்கொள்வார். கிராமத்துக் கணக்குப்பிள்ளை இரண்டு வயல்களைக் காட்டி, “இதுதான் அவருடையது” என்று சொன்னார்.

கிராமமே அதைத்தான் சொல்லியது. அத்தை, ஒரு வயலை தன் சகோதரன் மனைவிக்குக் கொடுத்துவிட்டாள். வீட்டில் ஓர் அறையை ஒழித்துக் கொடுத்தாள். சமையலறை பொது. இரண்டு சமையல் வேண்டாம் என்றும் சொல்லிவிட்டாள். அவளுடைய ஓரகத்திக்கு மிகுந்த வியப்பு. எழுதப் படிக்கத் தெரியாத அத்தை, உலக விவகாரங்களிலும் எவ்வளவு தெளிவாக இருக்கிறாள்!

ஓரகத்தி, சின்னக் கிராமத்தில் வந்து வசிப்பதில் அத்தைக்கு ஒரு சௌகரியம். வந்தவளை வீட்டையும் விவசாயத்தையும் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, ராமநாதனை அவன் பெற்றோர் வீட்டில்விட்டாள். அது செகந்திராபாத்தில் இருந்து ஐம்பது அறுபது மைல் தூரத்தில் இருக்கும் சின்ன ரயில் நிலையம். அங்குதான் என் சித்தப்பா, ஸ்டேஷன் மாஸ்டராக இருந்தார். அத்தை எங்கள் வீட்டில் ஒரு மாதம் இருப்பதாக வந்தாள்.

எங்களுக்கு எல்லாம் மிகுந்த உற்சாகம். அத்தை சமையல் சரியான தஞ்சாவூர் சமையல். நாங்கள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு அத்தையின் சமையலை ரசித்தோம்.

ஒருநாள் அப்பாவிடம் அத்தை, “ஏன்டா சபேசா… உங்கிட்டே ஒண்ணு கேக்கணும்” என்றாள்.

“என்ன அக்கா?”

“என் ரெண்டு கை விரல்களும் என்னவோ மாதிரி இருக்கு. இங்கே நல்ல டாக்டர் யாரையாவது கேக்கலாமா?”

“சாயங்காலம் போலாமா?”

அப்பா, அத்தையை ராம்கோபால் டாக்டரிடம் அழைத்துப்போனார். நானும் உடன் சென்றேன்.

டாக்டர் வீட்டில் இல்லை. அவர் ரயில்வே ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் இருந்த கே.ஈ.எம் ஆஸ்பத்திரியில் காலை ஒன்பது மணியில் இருந்து மாலை ஆறு மணி வரை டியூட்டியில் இருப்பார். நிர்வாகம் அவருக்கு ஆஸ்பத்திரிக்கு மிக அருகில் வீடு கொடுத்திருந்தது. ஊரில் மிகுந்த செல்வாக்கு உடைய டாக்டர். அந்த நாளிலேயே அவர் கார் வைத்திருந்தார். அவருக்குக் கொடுத்திருந்த வீட்டில், கார் நிறுத்த இடம் இல்லை. ஆதலால், காரை ஆஸ்பத்திரி வளாகத்திலேயே நிறுத்தியிருந்தார். அப்பா அந்த இடத்துக்குப் போய்ப் பார்த்தார். கார் இல்லை.

“ஏன்டா… சகுனம் சரியில்லையே!” என்று அத்தை கேட்டாள்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை அக்கா. நாம இங்கே அவர் வீட்டிலதானே உக்காந்திருக்கோம். ஏதாவது அவசர கேஸ் இருக்கலாம். வந்துடுவார்.”

ராம்கோபால் இரவு 8:30 மணிக்கு வந்தார்.

“அஞ்சு நிமிஷம் இருங்கோ” என்று சொல்லிவிட்டு உள்ளே போனார். கால் மணி நேரம் கழித்து வந்தார். “ஸாரி, உங்களை ரொம்பக் காக்கவெச்சுட்டேன்” என்று சொல்லியபடியே, “யாரது… உங்க உறவா?” என்று கேட்டார்.

“என் அக்கா.”

“நமஸ்காரம்மா. என்ன உங்களுக்கு?”

அத்தைக்கு, சட்டென சொல்ல ஒன்றும் தோன்றவில்லை. அப்பாதான் சொன்னார், “அவ கையைப் பாருங்க. ஏதோ மாதிரி இருக்குன்னு சொல்றா.”

ராம்கோபால், அத்தையின் இரண்டு கைகளையும் மேலும் கீழுமாகப் புரட்டிப்பார்த்தார். எங்கே வைத்திருந்தார் எனத் தெரியவில்லை. ஒரு இன்ஜெக்‌ஷன் மூலம் அத்தையின் ஒரு விரலைக் குத்தினார்.
நான் “ஓ” என்று கத்திவிட்டேன். அத்தை சாதாரணமாக இருந்தாள்.

ராம்கோபால் சொன்னார், “சபேசையர், உங்க அக்காவுக்குக் கையிலே உணர்ச்சியே இல்லை.”

“மரத்துப்போயிருக்கா?”

“இருக்கலாம் அல்லது வேறே ஏதாவது இருக்கலாம். நான் ஒண்ணு சொல்றேன், கேக்றேளா?”

“அதுக்குத்தானே வந்திருக்கோம்.”

“புருஷோத்தம் டாக்டர்கிட்டே காண்பியுங்கோ.”

“அவர் நாட்டு டாக்டர்தானே?”

“அவர் எல்.ஐ.எம் நானும் எல்.ஐ.எம்-தான். அவருக்கு இந்த மாதிரி விஷயங்களிலே அனுபவம் ஜாஸ்தி.”

புருஷோத்தம் டாக்டர் அருகில்தான், பஞ்சாபி கால்ஸா சத்திரத்துக்குப் பக்கத்துக் கடை. சாதாரணமாக 9 மணி வரை இருப்பார். அன்று 8 மணிக்கே வீட்டுக்குப் போய்விட்டார்.

அடுத்த நாளும் நான் போனேன். அத்தைக்கு ஆர்வம் போய்விட்டது. “என்னடாது! இருக்கிறவனுக்கு ஒண்ணும் தெரியலை. இன்னொருத்தன் எவ்வளவு நாழி காக்கவைப்பானோ?”

“இவரை உடனே பார்த்துடலாம் அக்கா. ராம்கோபால், வீட்டுல யாரையும் பார்க்கிறது இல்லை. அதனாலதான் லேட் ஆச்சு. புருஷோத்தம் டாக்டர் கடை வெச்சிருக்கார்.”

“கடையா?”

“யார்துனு தெரியலை. அங்கே வரிசையா ஒரே கடையா இருக்கும். ஆனா, புருஷோத்தம் டாக்டர் பக்கா டிஸ்பென்ஸரி வெச்சிருக்கிறார். என் மூத்தவ `வயத்து வலி வயத்து வலி’னு துடிச்சா.

புருஷோத்தம் டாக்டர்தான் ஒரு மருந்து எழுதிக் கொடுத்தார். உடனே சரியாச்சு.”

அத்தைக்கு நம்பிக்கை வரவில்லை. வேண்டா வெறுப்பாகத்தான் வந்தாள். அன்றும் நான் இருந்தேன்.

புருஷோத்தம் டாக்டர் அத்தையின் கைகளுடன் கால்களையும் பார்த்தார்.

“ஐயர்… கொஞ்சம் இந்தப் பக்கமா வர்றீங்களா?” என்று தனியாக அழைத்தார்.

என் அப்பாவுடன் நானும் போனேன்.

“நீங்க அக்காவுக்கு வைத்தியம் பண்ணணும்னா, டிச்பள்ளி கொண்டுபோவணும்” என்றார்.

டிச்பள்ளி, செகந்திராபாத்தில் இருந்து 90 மைல் தூரத்தில் இருந்தது. அங்கு ஜெர்மன் பாதிரிமார்கள் ஓர் ஆஸ்பத்திரி அமைத்திருந்தார்கள். அங்கு எங்கள் அப்பாவின் சிநேகிதர், எழுத்தர் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அந்த ஆஸ்பத்திரி குஷ்டரோகிகளுக்கு. நான் என் அப்பாவின் சிநேகிதருடன் அதைச் சுற்றிப் பார்த்திருக்கிறேன். எல்லாருமே குஷ்டரோகிகள். பரம ஏழையில் இருந்து சிறிது வசதி படைத்தவர்களும் அங்கு இருந்தார்கள். யாரைப் பார்த்தாலும் பயமாக இருக்கும். இரண்டாம் உலக யுத்தக் காலத்தில் அங்கே பிரிட்டிஷ் ஒற்றர்கள் இருந்ததாகச் சொல்வார்கள்.

“இல்லை, வேணாம். உங்க அக்கா மடி ஆசாரம் பார்க்கிறவங்க. வயசு எழுவது இருக்குமா?”

“எழுபத்தி இரண்டு.”

“இப்போ போய் அங்கே போட வேண்டாம். இப்படியே ஜாக்கிரதையாகப் பார்த்துங்க. முக்கியமா, அவங்க தூங்குறப்போ கை கால் விரல்களை மூடிக்கணும். எலி வந்து கடிச்சிடும்.”

“எலியா?”

“ஆமாம். பின்னே ஏன் விரல்லாம் குட்டையாகிறது?”

“எலி கடிச்சா?”

“ஆமாங்க. இது ரொம்பப் பேருக்குத் தெரியறது இல்லை.”

சிறிது நேரம் நாங்கள் பேசாமல் நின்றோம். அதற்குள் டாக்டருக்கு இன்னொரு நோயாளி வந்துவிட்டார்.

நாங்கள் வீடு திரும்பினோம்.

“என்னடா, வைத்தியர் என்ன சொன்னார்?” என்று அத்தை கேட்டவண்ணமே இருந்தாள்.

“ஒண்ணும் இல்லை. நீ இனிமே நன்னாப் போத்திண்டு படுக்கணும்.”

“எனக்கு வேத்து வேத்துக் கொட்டுமே?”

“பரவாயில்லை. ஆனா, நீ நன்னாப் போத்திண்டுதான் படுத்துக்கணும்.”

எங்கள் வீட்டில் நாங்கள் பார்த்துக்கொண்டுவிடுவோம். ஆனால், சின்னக் கிராமத்தில் அத்தைக்கு யார் போத்திவிடுவார்கள்?

அத்தை ஊருக்குப் போய்விட்டாள். என் அப்பா அவருடைய மாப்பிள்ளைகளால் பல விசித்திரமான சிக்கல்கள். தாங்க முடியாத வேதனையுடன் உயிரைவிட்டார். அப்பா வம்சத்திலேயே ஓர் ஆண்கூட 55 வயதைத் தாங்கவில்லை. நான் குடும்பத்துடன் சென்னைக்கு வந்தேன். என் அப்பாவை அடுத்து அவர் தம்பிகளும் அற்பாயுளில் உயிரைவிட்டார்கள். ராமநாதன் பிறந்த குடும்பம் கும்பகோணத்துக்குப் போய்விட்டது. அத்தையும் சின்னக் கிராமத்தில் இருந்து அங்கே போய் இருந்தாள். ஆனால், ஒருநாள் படுத்தவள் எழுந்திருக்கவே இல்லை. இந்த அநாயாச மரணம் அத்திம்பேருக்குக் கிட்டவில்லை. ராமநாதன்தான் அத்தைக்குக் கொள்ளி போட்டிருக்கிறான்.

நான் அத்தையின் 10-வது நாள் கிரியைகளுக்கு கும்பகோணம் சென்றிருந்தேன்.

அத்தைக்காகத்தான் போயிருந்தேன். ஆனால், என் முன்னோர்களுக்குத்தான் எள்ளும் தண்ணீரும் விடவேண்டியிருந்தது.

சாப்பாடாகி, ஈரத்துணிகளை ஒரு பையில் போட்டுக் கொண்டிருந்தேன். ராமநாதன் வந்தான்.

“என்னையும் அழைச்சிண்டு போ” என்றான்.

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

நான் பதில் சொல்லவில்லை. முதலில் என் அம்மாவுக்கு என் அப்பாவின் இரு தம்பிகளையும் சுத்தமாகப் பிடிக்காது. ஒரு காரணம் என் அப்பா ஒரு வேலையில் அமர்ந்துவிட்டார் எனத் தெரிந்தவுடன் அவர்களும் செகந்திராபாத் வந்துவிட்டார்கள். அவர்களுக்கு வேலை கிடைக்க ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியிருக் கிறது. அம்மா சொல்வாள்: `ஆறு மாசம் இரண்டு தடியன்களுக்கும் சோத்தை வடிச்சு வடிச்சுக் கொட்டினேன்’ என்று. ஆதலால் அவள் ராமநாதனை அத்தையின் சுவீகாரப் பிள்ளையாகப் பார்க்க மாட்டாள். அவன் அப்பாவின் பிள்ளையாகத்தான் பார்ப்பாள்.

சிறிது நாட்கள் கழித்து ராமநாதனும் செத்துப்போய்விட்டான். அவனுக்கு அத்திம்பேர் இறந்தபோதே, பாதி உயிர் போயிருக்கும்.

இதெல்லாமே எப்போதோ நடந்து முடிந்தவை. இதன் பிறகுதான் என் திருமணம் நடந்தது. ஆனால், என் வரை அத்தை நினைவுகள் எதுவுமே மறையாதுபோல் இருக்கிறது. என் எண்பத்தைந்தாவது வயதில் நான் என் முதல் மகன் வீட்டில் இருக்கிறேன். இதை தற்செயல் எனக் கூற முடியாது. அவன் வீடு சென்னை தியாகராய நகரில் இருக்கிறது. அதுவும் என் அக்கா திருமணம் நடந்த வீட்டின் எதிரிலேயே இருக்கிறது. அதாவது, அந்த வீட்டில்தான் என் அத்தையும் அவள் கணவரும் கதறிக் கதறித் தவித்தபோது, ராமநாதன் மவுன்ட் ரோடு போலீஸ் ஸ்டேஷனில் பிஸ்கட் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்!

– பெப்ரவரி 2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *