அத்தைக்கு கல்யாணம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 27, 2019
பார்வையிட்டோர்: 9,946 
 

வாசுகி கல்யாண மண்டபம்…

அன்றைய கல்யாணப் பரபரப்பில்..

காலை நேரம்.

சமையல் கலைஞர்கள் தங்கள் பணியைச் செய்து கொண்டு இருக்க, அறுபது வயது மதிக்க தக்க ஒருவர் சாம்பார் கொதிக்கும் இடத்தில் வேலைசெய்து கொண்டு இருக்கிறார்..

அங்கே சாம்பார் மட்டும் கொதிக்கவில்லை. அவரது மனமும்.. விசும்பி விசும்பி அழுகிறார்.

ஏன் ! என்னாச்சு!உங்களுக்கு! ஏன் கண் கலங்கியிருக்கு? ஏதாவது கண்ணிலே பட்டுட்டா?

அருகில் இருந்த உதவியாளர் இவரைப் பார்த்து கேட்டார்.

ஆமாய்யா, என் பெண் கண்ணிலே பட்டுட்டாய்யா!

என் பெண்ணைப் பார்த்தேன் இங்க! எனச் சொல்லி அழத் தொடங்கினார்.

போய் பேச வேண்டியதுதானே எனக் கூறி விட்டு, சரி,சரி,வேலையைப் பாருங்க. முதலாளி வாரார், ஏதாவது சொல்லப் போறார். எனக்கூறி சென்றார்.

முதலாளி கிட்டே வந்து , என்ன சங்கரா? சாம்பார் கொதி வந்திடுத்தே, இறக்கிடு. ஏன் ஒரு மாதிரி இருக்க, என்னாச்சு! என்றார்.

இருபது வருடம் முன் பிரிந்த தன் மனைவி மற்றும் பெண்ணைப் பார்த்ததாக கூறினார்.

எங்கே? என்றார்.

இங்கேதான்,மண்டபத்திலே

அப்புறம் என்ன? கூப்பிட்டு பேசவேண்டியதுதானே என்றார்.

கல்யாணப் பெண்ணே அவள்தானே முதலாளி. என்று கதறி அழுதார்.

என்ன சொல்றீங்க? மீனாம்மா உங்க மனைவியா? இந்த ஊர் தாசில்தார் அவங்க,

இவங்கச் சொல்லித்தான் மாப்பிள்ளை தம்பி நமக்கு சமையல் ஆர்டர் கொடுத்தார்.

சரிப்பா ! உன் வேலையை நிறுத்து.

நீ போய் உன் மக கல்யாணத்தையாவது கண் குளிர பாரு. நான் வேற ஆளை இங்க அனுப்புறேன். என்று கூறிச் சென்றார்.

அருகில் இருந்த மாப்பிள்ளைத் தோழன் இவர்கள் பேசியதை கேட்டு விட ,மாப்பிள்ளைக்கு தகவல் போனது.

என்னடா சொல்றே? கல்யாண நேரத்திலே?

நான் என்ன பொய்யாச் சொல்றேன்?
அவங்க பேசினத்தைத்தான் சொன்னேன். என்றான்.

அவங்க அம்மா, சுமதிக்கு அப்பா இல்லைன்னு அன்னைக்கே சொன்னாங்கடா!

இது என்னடா புது குழப்பமா இருக்கு.

நீ ஒன்றும் டென்ஷனாவாதே!
நான் போய் அவரை இங்கே அழைச்சுகிட்டு வர்றேன்,
பொறுமையா கேட்டு பின் முடிவெடுப்போம்,என்றுக் கூறி நண்பன் சென்றான்.

தம்பி, நீங்க எதுவும் தப்பா நினைக்காதீங்க! நான் அவரை ஓரமா உட்கார்ந்து பார்க்கச் சொன்னேன், தப்புதான். இப்ப வெளியே போகச் சொல்லிடறேன், நீங்க முகூர்த்தத்துக்கு ரெடியாகுங்க! என்றார் சமையற்காரர்களின் முதலாளி.

இல்லைங்க!அவர்கிட்ட நான் பேசனும்,நீங்களும் இருங்க. என்றார் மாப்பிள்ளை.

என்ன குழப்பம் ,சொல்லுங்க!

சார்,எனக்கு நாற்பது வயதிருக்கும், அப்போ சுமதிக்கு ஆறு வயதிருக்கும்.

கொஞ்சம் இல்லை நிறையக் குடிப்பேன். வேலையிழந்து, நான் வெட்டியாக ஊர்ச் சுற்றியதால், என் மேல் உள்ள கோபத்தில் மனைவி, தன் குழந்தையுடன்,
என்னை விட்டுப் பிரிந்துச் சென்றுவிட்டாள், நானும் பல இடம் தேடி அலைந்தேன், எங்கு மாற்றலாகிப்போனார் எனத் தெரியவில்லை.

பிள்ளையையும்,அவளையும் அதன் பின் பார்க்கவில்லை.

இரண்டு வருடம் கழித்து என்னை மறு வாழ்வு இல்லத்தில் சேர்த்தனர். நானும் நலம் பெற்று, அதற்குப்பின் இவரிடம் சமையல் வேலையில் சேர்ந்து இன்று வரை அவருடன்தான் இருக்கின்றேன்.

இப்போதெல்லாம் அவர் குடிப்பதுமில்லை, நாங்கள் சென்னையிலேயே அதிகம் ஆர்டர் எடுப்பதால், இந்த ஊருக்கு நாங்கள் வந்ததே இல்லை.

அடிக்கடி மனைவி, மகள் நினைப்பிலேயே வாடிடுவார், நல்லா வாழ்ந்து இருக்க வேண்டிய மனிதர் ,தனது குடியினால் பிரிந்துவிட்டார்.

இப்பொழுது மனைவியைப் பார்த்ததும்,மகளை கல்யாண கோலத்தில் பார்த்தும், அவர் ஏதோ அப்படி பேசிவிட்டார். நாம் ஏதும் புதிதாக பிரச்சினை கொடுக்க வேண்டாம் என்றார் முதலாளி.

இல்ல, நான் அத்தைகிட்டே பேசனும்! என்றான் பிடிவாதமாக,

வேணாம் தம்பி,

என்னை மன்னித்து விடுங்கள்! நான் இங்கேயிருந்து போய் விடுகிறேன், என்னால் கல்யாணம் நின்றால் இன்னும் வெறுப்பு என் மேல் அதிகமாத்தான் ஆகும். அவர்கள் நன்றாக இருக்கட்டும், என மாப்பிள்ளைக் காலில் விழப்போனார்.

தடுத்து விட்டு, நேராக சுமதியின் அம்மாவிடம் சென்றார்,மாப்பிள்ளை.

என்னங்க! சுமதி அம்மா ! என்றார் மாப்பிள்ளை.

அத்தைனு கூப்பிடுங்க மாப்பிள்ளை! என்றாள் சுமதியின் அம்மா.

நான் அத்தைன்னு கூப்பிடறது உங்க பதில்லேதான் இருக்கு.

சுமதிக்கு அப்பா இல்லைனு ஏன் பொய் சொன்னிங்க!

மாப்பிள்ளை? என்ன.. எனத் தயங்கினாள்.

இருபது வருஷமா கூட இல்லாதவரை, இல்லைன்னுதானே சொல்லனும்.

எல்லாம் எனக்குத் தெரியும்.

அப்பா கூட இல்லாத சோகம் எப்படி இருக்கும்னு நான் அனுபவிச்சு இருக்கேன்.

எனக்கு வரப்போகிற மனைவி இதுவரை அனுபவிச்சது போதும்.இனி அவள் அந்த வலியை அனுபவிக்க கூடாது.

அதனால என்ன செய்ய போறிங்க . மாப்பிள்ளை? எனப் பயந்தாள்.

உங்களுக்கு மறுபடியும் கல்யாணம் செய்யப்போகிறோம்.என்றான்.

மாப்பிள்ளை,? என ஆவேசமாக கத்தினாள்.

அறுபதாம் கல்யாணம்தான்! இவர்தான் மாப்பிள்ளை! ஓகேவானு பார்த்துச் சொல்லுங்க! அத்தை என்றார்.

தன் தவறை உணர்ந்து , திருந்தி,தங்களை காணாமல் இருபது ஆண்டுகளாக உழைத்துக்கொண்டு இருக்கிறார். அவரை மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள், இனியாவது உங்களுக்கான வாழ்க்கையை வாழுங்கள்.

சொன்ன மாதிரி அவரை மாப்பிள்ளை போல் அலங்கரித்து இருந்தார்கள் அவனின் நண்பர்கள்.

முகூர்த்த நேரம் முடியப்போகுது. மாப்பிள்ளையை அழைச்சுண்டு வாங்க! என்றார் ஐயர். வழக்கத்திற்கு மாறாக.

முதல்லே இவங்களுக்கு மாங்கல்யத்தை எடுத்துக் கொடுங்க! என்றார் மாப்பிள்ளை.

காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர்.

ஒரே மேடையில் இனைந்தன நான்கு மணங்கள்.

நனைந்தன அனைவரின் விழிகளும்..

Print Friendly, PDF & Email

1 thought on “அத்தைக்கு கல்யாணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *