ஏது காரணம்!? ஏது காவல்!?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: June 18, 2021
பார்வையிட்டோர்: 12,513 
 

புறப்பட்டு இரண்டு நாட்கள் ஆனாலும் அவர்களிடம் ஏதும் களைப்பு தெரியவில்லை, ஏற்கனவே தொகுத்து வைத்துள்ள பாடல்களை பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் ஆனந்தமாக பயணிப்பதால் அவர்களுக்கு தலைச்சுமையும் தெரியவில்லை, நேற்று இரவு அவர்களது பயணக்குழு தங்கியிருந்த இடம் காடுசார்ந்த முல்லை நிலம் ஒன்றின் எல்லை பகுதியாக இருந்தது, மக்கள் வசிக்கும் ஊர்புறங்களும் கூப்பிடும் தூரத்திலேயே இருந்தது,

அவர்களது கூட்டத் தலைவருக்கு தனிக்கூடாரம் அடித்திருந்தார்கள் அவரது மெய்காவலர்களும் பணியாளார்களும் இன்று அதிகாலையிலேயே எழுந்து புறப்பாட்டுக்கு ஆயத்தமாகி கொண்டிருந்தார்கள்

அப்பொழுது தொண்டர்கள் அனைவரும் எழுந்து அவரவர்களது நியமானுட்டானங்களை நிறைவு செய்த பின்பு பரிசாரகர்கள் செய்தளித்த காலை உணவை உண்டு முடிக்கும் நேரத்தில் மெய்காவலர்களில் ஒருவர் வந்து

“தொண்டர்கள் அனைவரும் புறப்பட்டு முன்னே சென்று கொண்டிருக்கலாம், இனிச் செல்லும் வழியும் முல்லை நிலம்தான் என்பதால் கவனமுடன் செல்லுமாறு உத்தரவாகியுள்ளது” என்று கூறினார்!!

உடனேயே அந்த கூட்டத்து அன்பர்கள் தங்கள் தலைவரது கூடாரத்தை நோக்கி கிடந்து வணங்கி தத்தமது தலைச்சுமைகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர்,

அதுமுதல் ஆடலும் பாடலுமாக தொடர்ந்தது பயணம், “சேரதேசத்து அனுபவங்களை பற்றி கூட சிலர் சிந்தித்து கொண்டும் பேசிக்கொண்டும் நடந்தனர், சிலருக்கு சேரதேசத்து அரசரது கனிவும் பக்தியும் கண்முன்னும் மனதிலும் வந்து வந்து சென்ற போது தங்கள் தலைவரையும் எண்ணி எண்ணி மகிழ்ந்த படி இனிமையாய் காட்டுவழி கடந்து கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று தூரத்தில் பெரும்பறவைகள் சில கூச்சலிட்டது அதிர்ச்சியை தந்தது

“ஆஹா!! இதென்ன அதிசய சத்தம், பறவைகள் ஏன் இப்படி அலறுகின்றன!?”

“ஆம்!! ஆனால் இவற்றை கேட்டால் பறவைகள் எழுப்பும் ஓசை போல தெரியவில்லையே ஏதோ மனிதர்கள் மறைந்து கொண்டு ஓசை எழுப்புவது போல அல்லவா தெரிகிறது!!”

என்று ஒருவர் கூறும் பொழுதே சற்று தொலைவில் கருங்கல் ஒன்று “திடும்” என்ற ஒசையுடன் வந்து விழுந்தது

கல்விழுந்த அதிர்ச்சியில் கூட்டத்தினர் பலர் “சிவசிவா!! சிவசிவா” என்று அதிர்ச்சி அடைந்து இரிந்தனர், காட்டுச்சருகுகள் அவர்கள் காலடிபட்டு நொறுங்கின, என்ன நடக்கிறது என்று சுதாரிப்தற்குள் மேலும் பல கற்கள் வந்து விழுந்தன சிலருக்கு மேலே படுவது போல நெருக்கமாக கற்கள் விழுந்த சமயம் அச்சத்தில் கூட்டத்தினர் வெறுவி களையமுயன்ற போது,

கரிய பெரிய உருவங்களாக வித்யாசமான உடை அலங்காரங்களுடன் கூடிய பயங்கர உருவமுள்ள ஆண்கள் பலர் கொடூரமான ஆயுதங்களுடன் அவர்களை மூன்று பக்கம் சுற்றி வளைத்திருந்தனர்

“ஆஆ!! கள்வர்கள்!! கள்வர்கள்!!” என்று அவர்களை கண்ட தொண்டர்கள் கூச்சல் போட்டனர்,

கிழிந்த பழைய துணிகளை உடுத்தி நீண்ட குத்துவாள்களை உறையுடன் சேர்த்து இடுப்பில் கட்டியிருந்தனர், மாமிச வாடையுடன் கலந்த கள்முடைநாற்றம் அவர்கள் மீதிருந்து புறப்பட்டு கொண்டிருந்தது வில்முதலிய ஆயுதங்களும் வைத்திருந்த அவர்களை பார்த்து தொண்டர்களில் சிலர்,

“ஏஏ!! கள்வர்களே!! உயிர்கொலைக்கு அஞ்சாதவர்களே எங்களை ஏன் மறிக்கிறீர்கள் நாங்கள் யார் தெரியுமா!?” என்றார்!!

“நீங்க யாரா இருந்தாலும் எங்களுக்கு கவல இல்ல, நீளமா பேசி ஆவிய விட்றாதிங்க உங்களலாம் பாத்தா சைவதொண்டு பன்ற சாமிங்க மாதிரி தெரியுது உங்களுக்கு எதற்கு இவ்வளவு நகைநட்டுலாம்!? நல்லா பட்டையும் கொட்டையுமா இருக்கிங்க ஒழுங்கா எதிர்த்து பேசாம உங்கள்ட உள்ள பொருளல்லாம் போட்டுட்டு திரும்பி பாக்காம ஓடிருங்க!! அது உங்களுக்குலாம் நல்லது!!” என்றான் கள்வர்களில் ஒருவன்

“சைவம்தானடா நாங்கள் எல்லாம்!! ஆனால் ஒரு அறைவிட்டால் பரலோகத்தில் போய் விழுந்து விடுவீர்கள், எங்கள் தலைவரது மகிமை தெரியாமல் பேசிட்டு இருக்கிங்க, ஒழுங்காக வழியை விட்டு விலகுங்கள் அது உங்களுக்குலாம் நல்லது” என்றார் ஒரு திருக்கூட்டத்து அன்பர்

“அடடா!! பயந்து விட்டோம்!! உங்க தலைவருக்கும் தலைவரயே நாங்க பாத்திட்டோம்!! உங்களிடம் மிரட்டி காரியம் சாதிக்கலாம் என்று பார்த்தால் அதிகமாக பேசுகிறீர்கள்” என்ற கள்வர் முதல்வன் பயணிகளில் ஒருவரை பிடித்து இழுத்து அருகில் உள்ள பாறையில் மோதும்படி கொண்டு சென்றான்

“ஒழுங்காக உங்கள் பொருட்களை எல்லாம் போட்டுவிட்டு ஓடிவிடுங்கள், நாங்கள் எல்லாம் உயிர் கொலைக்கு அஞ்சமாட்டோம் எங்களிடம் உள்ள வில்லும் அம்பும் பார்த்துள்ளீர்களா!? அவை, காட்டுவிலங்குகளை எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் குத்தி குழிக்கும், தேவையில்லாமல் அதற்கு இரையாகாமல் சேரநாட்டு அரசர் உங்கள் தலைவருக்கு கொடுத்த பொன் பொருள் ஆபரணங்கள் ஆடைகள் அத்தனையையும் போட்டு விட்டு ஓடிவிடுங்கள், இல்லை என்றால் இவரது தலை மோதி சிதறுவதை காண்பீர்கள்” என்றபடி அவரை பாறையில் மோதுவது போல கொண்டு சென்றான்

உடனே!! “சிவதா!!சிவதா!! சரி நடப்பது அனைத்தும் நம்பி செயல், அனைவரும் அவரவரது தலைச்சுமைகளை இறக்கி வைத்துவிடுங்கள் அதோ தூரத்தில் நமது பெருமானார் வந்து கொண்டிருப்பது தெரிகிறது!!” என்றபடி அரசர் தந்த செல்வங்களை போட்டுவிட்டு ஓடத்தொடங்கினர் தொண்டர்கள்!!

உடனேயே அந்த கள்வர்களும் பொருட்களை எடுத்து கொண்டு ஓடிமறைந்தனர், பொருட்களை போட்டுச் சென்ற தொண்டர்கள், தங்கள் நாயகனாம் நம்பியாரூரப் பெருமானிடத்து விண்ணப்பம் செய்துவிடும் நோக்கத்தில் விரைந்தனர்!!

பஞ்சகச்சமாக கட்டிய வேட்டியின் மீது பச்சைநிற பட்டாடையால் இறுக்கி மார்பில் முப்புரி இலங்க, உடலெங்கும் நீற்றுக்கோலம் நிறைந்திருக்க ஆடவல்லான் பதக்கம் பதித்த முத்தாரமும் சிவந்த பட்டு உத்தரியமும் அணிந்து காலையில் பறித்து கோர்த்த தாமரை மாலை ஒன்றை அணிந்து கிரீடம் சாத்தாமல் சிகையை அள்ளி முடிந்து அதன் மீது நிர்மால்ய புஷ்பங்களால் முடிந்து கண்ணை பறித்து மனதை நிறைக்கும் கோலத்தில் ஞாலம் உய்யவந்த நம்பியாரூரப் பெருமானார் பேரழகே திருவுருவாய் அவர்களிடம் புருவங்களை சுருக்கி “என்ன நடந்தது!? ஏன் இப்படி ஓடி வருகிறீர்கள்!?” என்று கேட்டார்

“பெருமானே!! ஆளுடைய நம்பிகளே!! கள்வர்கள்!!, கள்வர்கள்!! கொலை பாதகத்திற்கு அஞ்சாதவர்கள் தங்கள் பொருட்களை எல்லாம் பறித்து கொண்டு விரட்டி விட்டனர்” என்றதனை கேட்ட நாயனார்

“என்ன!? நமது பொருட்களையா!? கள்வர்கள் கவர்ந்தார்கள்!? இந்த காட்டில் நம்மிடம் திருடவல்ல கள்வன் என்றால் அது நம்மை ஆளுடைய பிள்ளையாரின் “உள்ளங்கவர் கள்வனன்றி” வேறு யாரால் முடியும்!! ஆனாலும் உங்களை பார்த்தால் மிகுந்த அச்சமாக இருக்கிறீர்களே வாருங்கள் என்னுடன்” என்றபடி அழைத்து கொண்டு முன்னேறினார் நம்பிகள்

வேட்டுவகள்வர்கள் வழிமறித்த இடம்வந்த பொழுது தம் திருக்கூட்டத்தினரை கண்டு அந்த கள்வர்கள் இங்கா வழிமறைத்தார்கள்!? இவ்விடத்தை பார்த்தால் காட்டுக்குள் செல்லும் வழி போல தெரியவில்லையே இது ஊருக்குள் அல்லவா செல்கிறது!? ம்ம்ம்ம்!!”, என்று யோசித்த நாயனார்

“இது என்ன ஊருக்கு செல்லும் வழியப்பா!?” என்று தமது மெய்க்காப்பளர்களிடம் கேட்க, “முருகன்பூண்டிக்கு செல்கிறது சுவாமி!!” என்றனர் அவர்கள்.

மனதிற்குள் “ஆரூரா!!” என்றபடி “வாருங்கள்!!கள்வர்கள் சென்ற வழியிலேயே செல்வோம் அங்குதான் அந்த கள்வர்களின் தலைவன் இருக்கக்கூடும், இன்று பாடுகிற பாட்டில் அவரது தலைவர் இந்த திருட்டுத் தொழிலையே இதோடு விட்டுவிட வேண்டும்!!” என்றபடி நடக்கலாயினர்

ஊர்எல்லையில் எழுந்தருளியுள்ள வழிகாட்டும் விநாயகப் பெருமானை வணங்கிய நாயனார், திருமுருகன் பூண்டிக்கே தலைவரான இறைவரது ஆலயத்தை அடைந்து வாயிலை தொழுது, கோபுரத்தை இறைஞ்சி “திங்கள் முடி சடைக்கு அணிந்தவர் தம் திருமுன்பு!!” சென்று உள்ளுருகி “எங்கள் இறைவா!! இது என்ன விளையாட்டு!?” என்று இறைஞ்ச, அந்த உள்ளங்கவர் கள்வன் கள்ளமவுனம் சாதிப்பது கண்ட நாயனார்

“கொடுகு வெஞ்சிலை” என்று எடுத்து பழம் பஞ்சுரத்தில் பாடினார்.

உம்முடைய எருதின் கால்கள் உடைந்து விட்டதா!? உமது கால்தான் முடமாகிவிட்டதா!? எழுந்து சென்று ஊரைகாவல் காக்காமல் இங்கு எதற்கு இங்கு இருந்தீர்?, கள்வர்கள் வாழும் பகுதியில் உமது மனைவி நிறைய ஆபரணங்களை பயம் இல்லாமல் அணிந்திருப்பது கண்டால் உமக்கு திருட்டுபயம் இல்லை ஆதலால் நீர்தான் அந்த திருடர்களுக்கு தலைவனாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது!! என்றெல்லாம் நயமான கருத்துக்களை பொருத்தி

“மோதி வேடுவர் கூறை கொள்ளும் முருகன் பூண்டி மாநகர் வாய் ஏது காரணம்!? ஏது காவல்!? கொண்டு எற்றுக்கு இங்கிருந்தீர்!? எம்பிரானிரே!!” என்று நாயனார் பாடிய போது பாடல்கேட்ட இறைவனார் தமது சிவகணங்களை வேட்டுவ கள்வர்களாக மாற்றி நாயனாரிடத்து கவர்ந்த பொருட்கள் அனைத்தையும் கோபுரவாயிலில் விண்முட்ட குவித்தனர்!!

அதுகண்ட நாயனார், உள்ளம் நெக்குருகி “எந்தையார் திருவுளம் இருந்தவாறு என்னே!?” என்று கனிந்து

“சிந்தையில் சிவத்தொண்டன் ஊரன் உரைத்தன பத்தும் கொண்டு எந்தம் அடிகளை ஏத்துவார் இடர் ஒன்றும் தாம் இலரே!!” என்று அப்பதிகத்தை சிந்திக்கும் நம்மையும் வாழ்த்தி கடைக்காப்பு சாற்றி திருவாரூர் நோக்கி புறப்பட்டனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *