வெம்மை  நிமிடங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 22, 2026
பார்வையிட்டோர்: 132 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

தேங்காய்களிரண்டும், நாட்டுக்காய்கள் சிலவும் தக்காளியும் மட்டுமே போதுமானதா யிருந்தது!

அது தாண்டி வாங்குவதில்லை வாங்கினாலும் வைத்திருக்க முடியவில்லை வீட்டில்!

என்னதான் குளிர்சாதனப்பெட்டி இருந்தாலும் அது செயற்கை செறிவூட்டல்தானே என்கிற எண்ணத்தில்!

தேங்காய்க்கு வழக்கமாய் வாங்குகிற பெரியவர் கடை, சென்றதும் அவரே தேங்காய்களை எடுத்து விலை சொல்லி வாங்கிக் கொள்வார்!

இத்தனை வருட பழக்கத்தில் இருவருக்கும் இடையிலான பழக்கம் சில பத்து வார்த்தைகளே!

வாங்க என்பார் கடை நடை மிதிக்கையில், சரிங்க சார் என்பார் சொல்லி விட்டு கிளம்புகையில்!

நாட்டுக்காய்க்கு ரெட்டியபட்டிக்காரர் கடை. சுரைக்காய்க்காக அவரிடம் போய் நின்றது. இன்று வரை, எப்பொழுதாவது வாழைப்பூ நன்றாக இருக்கும்!

மதியம் ஒரு மணிவாக்கில்தான் முழிப்பு வருகிறது.திரும்பப் படுக்கிற எண்ணமெல்லாம் இல்லை!

நேற்றிரவு தூக்கம் பிடிக்கவில்லை. என்ன செய்ய? பிடித்ததை நினைத்து படுத்திருந்தான்!

மனைவியிடம் சொன்னபொழுது குமட்டில் நாலு இடித்தாள்! “தலைக்கி மேல வளர்ந்த புள்ளைக்கி தகப்பங்குற நினைப்புல இருங்க,சும்மா மதி பெரண்ட மாதிரி பேசிக்கிட்டு அலையாம, நாளைப்பின்ன பக்கத்துல வந்து காதுல ஏதாவது சொல்லுங்க, அப்பறம் இருக்கு, வாயில சூடு வைக்கிறேன் சூடு”

“நீ பாக்குற பார்வையிலயும்,பேசுற பேச்சுலயும் இருக்குற சூட விடவா நீ வாயில வைக்கப்போற சூடு இருந்துறப் போகுது” என நெருங்கி அவள் தோள் தொட்டு முன் நெற்றியில் விழுந்திருக்கிற முடிக்கற்றைகள் ஒதுக்கி பேசும் போது நெஞ்சில் இருக்கிற நரைத்த முடிகள் பிடுங்கி ஈரம் தடவி மீசையில் ஒட்டவைப்பாள் “இப்பிடி ஏதாவது சொல்லி சமாதானம் பண்ணீருவீங்களே? கிறுக்கு மனுசா”என்கிற பேச்சுடன்!

“சமாதானத்து கிட்ட சமாதானமா பேசாம யார்கிட்ட பேசுவாங்கலாம் பின்ன?” என சொல்கிற பொழுதுகளில் இப்ப என்ன டீதான வேணும் என மந்திரத்தில் வரவழைத்து ஒரு குவளை தேநீர் தருவாள்!

“ஒனக்கு” என்றால் வேண்டாமென்று விடுவாள், “இந்த மாதிரி கண்ட நேரத்துல கண்டமானிக்க பேசீட்டு கண்ட நேரத்துல டீக்குடிச்சிட்டு திரியிற ஒரு பைத்தியம் போதும் இந்த வீட்ல” என்பாள்.

“ஏய்” என நரை பாய்ந்த சடை முடி பிடித்து இழுக்கிற போது தோள் சாய்கிறவள் பேச்சு “அட பைத்தியக்கார மனுசா” என காதுரசி காற்றில் கலந்து புறாக்காலில் கட்டிய கடிதமாய் காலனிடம் போய்ச் சேரும்!

இரவு எப்படியேனும் நான்கு அல்லது ஐந்து முறையாவது எழுந்திருக்க வேண்டியதிருக்கிறது!

அநியாயத்திற்கு வேர்கிறது உடல். வீட்டை விட்டு வெளியில் போய் நின்றாலும் குளுமை இல்லை.ஒரே வெம்மை,வெம்மை, வெம்மை தான் தரையைத் தொட்டால், சுவரைத் தொட்டால், கட்டிலைத் தொட்டால், சேர் டேபிளைத் தொட்டால், இப்படி எதைத் தொட்டாலும் வெம்மையே!

தரை மேனி காய்ந்து வெம்பி,போர் குழியில் தண்ணீர் குறைந்து, கிணற்றில் நீர் வற்றி, கண்மாய் காய்ந்து போய்!

தோட்டமாய் இருந்த வீட்டின் பக்க வாட்டு வெளி ஏதுமற்று வெற்று மேனி காட்டி படர்ந்திருந்தது!

கட்டாந்தரையாய் கிடந்த கரட்டை பண்டுதம் பார்த்து பூக்கச் செய்யவே கொஞ்சம் நாட்களானது இரண்டாண்டுகளுக்கு முன்!

இருபத்தைந்து வருடங்கள், ஏதுமே செய்யாது எங்கள் கால்த்தடம் பட்டு மட்டுமே இறுகிப் போயிருந்த நிலம், இங்கு குடி வந்த நாளிலிருந்து!

வேப்பமரத்தினடியில் முளைத்துக் கிடந்த புற்களை வெட்டிய போது மண்வெட்டியை திருப்பி அடித்து எம்பச் செய்த மண்!

வீட்டில் கடப்பாரை இருந்தது, மண்வெட்டி இருந்தது,வேறு சின்ன சின்ன உழவின் கருவிகளும்!

ஆனால் நாற்பத்தியோரு ஆண்டிற்கு முன்பான உழைப்பின் மிச்சம்  இன்னமும் உடல் ஒட்டிக் கிடக்கிறதா தெரியவில்லை!

கடப்பாரையால் மண்ணைக் குத்தினான், இறங்கவில்லை, திரும்பவும் குத்தினான், கொஞ்சம் நெகிழ்வு பட்டது தரை, குத்திய மண்ணை கரிசல் கட்டிகளாய் புரட்டிப் புரட்டிப் போட்டான்!

மழை நீர் நனைத்து நொதித்துப் போகிற கட்டியை தூசியாக்கி வெட்டி பண்படுத்தி ஆட்டுப் புழுக்கையை பரப்பி வெட்டி விட்டு தூறலாக நீர் தெளித்து விட்டால் மண் பூத்துப் போகும் தானே?

நல்ல வேளையாக, மண்ணை பூக்கச் செய்ய உடல் ஒத்துழைத்தது!

நாற்பத்தியோரு ஆண்டுகளுக்கு முன்பாய் உழைப்புடன் உறவுபட்டுத் தெரிந்தவனின் உடல் இப்பொழுதும் கொஞ்சமாக வேனும் ஒத்துழைத்தது சந்தோஷமாயிருந்தது!

முதல் தடவை ஆர்வத்தில் கத்திரி கொஞ்சம், தக்காளி கொஞ்சம் வெண்டை கொஞ்சம் தட்டாம் பயிறு கொஞ்சம், புடலை, அவரை என விதையூன்றியதில் வெண்டை மட்டுமே வந்தது. இருபது கிலோ பரித்திருப்பான். கழுத்துயரமும் நெஞ்சுயரமும் வளர்ந்திருந்த செடிகளிலிருந்து!

மண்ணும், மழையும்,உரமும்,உழைப்பும் கொல்லையில் பறித்து குழம்பில் போட்ட காய்களுக்கு ருசி தந்திருந்தது!

வீட்டிற்கு போக அக்கம், பக்கம் கொடுத்தான், சந்தோஷம் சொன்னார்கள்!

ஏக்கர் கணக்கில் ஏரோட்டி பாத்தி கட்டி நீர்பாய்ச்சி விளைவித்தவனின் உழைப்பு வீட்டின் பக்கவாட்டு வெளியில் சுருங்கி நின்று போனது தான் வெண்டைக்காய் தந்து ஓய்ந்து விட்டு!

இரண்டாவது தடவை போட்ட கீரையும் வஞ்சகமில்லாது பலன் தந்து ஓய்ந்திருந்தது!

ஓய்ந்து வரண்டிருந்த கரிசலின் வெற்று மேனி பார்த்து கடக்கிற பொழுதுகளெல்லாம் சற்று வெறுமை பூண்டே!

இரு சக்கர வாகனம் நிறுத்தி விட்டு வாங்கி வந்ததை அவளிடம் கொடுத்த போது அவளது புடவையிலிருந்து உதிர்ந்த பூவெடுத்து அவ்விடம் சேர்க்கிறான்!

உச்சிப்பிள்ளையார் கோவிலிருந்து இறங்கிய நாளன்றில் வாங்கியது. ஒன்று காட்டன்.மற்றது மில் சேலை,ஒன்றுக்கு இரண்டாக எடுத்துக்கொண்டாள் என்பது பற்றி இது நாள் வரை அவள் மீது எவ்வித புகாரோ வருத்தமோ இல்லை இவனுக்கு!

அப்படியெல்லாம் ஒன்றுக்கு இரண்டாக புடவை எடுத்து விட மாட்டாளா எப்பொழுதாவது என்றெண்ணிய பொழுதுகள் பின்னுக்குப்போய் இப்பொழுதாவது எடுத்திறாளே என சந்தோஷபடுகிற இவனால் எப்படி அவள் மீது புகாரையும் வருத்தத்தையும் வைத்து விட முடியும்?

கோவிலின் கீழ் பாகனுடன் நின்றிருந்த யானைக்கு தர்பூசணி வாங்கித் தந்த போது சற்றே வெறித்தாள். தூர விலகி நின்று கொண்டாள், அருகிலழைத்து தரச்சொன்ன போது வேண்டாம் என்றாள்!

அவ்விடம் விட்டு கிளம்பும் போது நான் ஒரு தடவை குடுத்துப் பாக்கட்டுமா என்றாள்!

கடைக்காரர் வெட்டிக்கொடுத்த அரைப்பழத்தை யானை வாங்கித் தின்றதும் சந்தோஷித்துப் போகிறாள். முகமெல்லாம் பல்லாக கைதட்டி ஆரவாரித்துச் சிரிக்கிறாள்!

நான்கு துண்டுகள், நான்கு தடவை,நான்கு ஆரவாரம், நான்கு கை தட்டல், நான்கு சிரிப்பு,

இவனுக்கானால் விழி நிறைந்து போகிறது.

நிறைந்த விழி துடைக்காது ரயிலேறி வீடு வரும் வரை அவளின் கை தட்டலும் ஆரவாரமும் மனம் நிறைத்து!

வீடு நுழைந்ததுமாய் அதைச் சொன்ன போது “அட பைத்தியக்கார மனுசா”என தோள் சாய்கிறாள்!

இப்பொழுது சேலை பூபற்றி சொன்ன போது “அட பைத்தியக்கார மனுசா” என்கிற சொல்லுதிர்க்காது அவளும் நகர்கிறாள் இவனுடன் கைகோர்த்து!

நாளும் கிழமையுமாய் நெசவிட்டு வந்த முதுமை புன்முறுவல் பூக்கிறது மெதுவாய்!

                                     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *