விருப்பமும் விபரீதமும்!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 3, 2025
பார்வையிட்டோர்: 6,104 
 
 

கண்களின் பார்வையை வருடிச்செல்லும் இமயமலைச்சாரலின் பசுமை போர்த்திய மரங்களின் அணிவகுப்பு, குளிர்ச்சியான மேகமூட்டங்கள் தழுவிச்செல்லும் போது ஏற்படும் உடலின் சிலிர்ப்பு, புதுமையான இடத்தில் பதுமையோடு இயற்கையை ரசிப்பதால் உண்டாகும் களிப்பு, மனதுள் உற்பத்தியாகும் அருவியில் மகிழ்ச்சி வெள்ளத்தில் குளிப்பு என ஆனந்தத்தின் எல்லைக்கே சென்றிருந்தான் முகன்.

முகன் சிகியை சென்ற வாரம் தான் பிரமாண்ட செலவில் ஊரே பார்த்து பொறாமை கொள்ளும் வகையில் ஆடம்பரமாக திருமணம் செய்த பின் வடநாட்டிற்கு இணையுடன் சுற்றுலா சென்றிருந்தான்.

அவனுக்கு மழைத்தூரலில் நனைவதும், மலைச்சாரலை ரசிப்பதும் மிகவும் பிடிக்கும். இளம் மனைவியும் அவனது விருப்பத்துக்கு பிணக்கின்றி இணக்கம் சொல்ல, வீட்டினருக்கு வணக்கம் சொன்னவன் இணையுடன் சொர்க்கத்தின் வாயிலை நோக்கிய பயணத்தின் முதல் படியாக விமானத்தில் ஏறினான்.

மலையோரம் செல்லும் நதியோரம் உள்ள ஓர் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஓர் அறையை இணையத்தின் மூலம் பதிவு செய்து விட்டுச்சென்றவன், அங்கு சென்ற பின் இயற்கையின் உச்சத்தை மனைவியுடன் சேர்ந்து ரசித்தான், இன்ப வாழ்வை மிச்சம் வைக்காமல் ருசித்தான்.

உண்டார்கள், உறங்கினார்கள், சுற்றினார்கள், சுதந்திரமாக கட்டுப்பாடுகளின்றி இன்பத்தின் எச்சத்தைக்கைப்பற்றினார்கள்.

ஒரு வாரம் இன்பச்சுற்றுலா வாழ்வில் பலருக்கும் கிடைக்காத பெறும் பேறு அவர்களுக்கு கிடைத்தது.

அங்கு வந்து செல்பவர்கள் பலரும் இளம் வயதினர். புதுமணத்தம்பதியர். 

‘இந்தியாவின் சுவிட்சர்லாந்து’ என பேஸ்புக்கில் அவ்விடத்தைப் படமெடுத்துப் பதிவிட்டான். ‘நீ அதிர்ஷ்டசாலி’ என பலரது கமெண்ட் ஒரே மாதிரி இருந்தது. அதற்கும் மேலாக ‘பூலோக சொர்க்கம்’ என மீண்டும் பதிவிட்டு பலரது தூக்கத்தைக் கெடுத்தான்.

சுற்றுலா நாட்களின் இறுதி நாளில் இன்னும் ஒரு வாரம் இருக்கலாம் என தோன்றியது.

மேகக்கூட்டங்கள் அவ்விடத்தில் சூழ்ந்ததால் இருள் மொத்தமாக ஆக்கிரமித்துக் கொண்டது. 

‘இரவு முடியாமல் இருக்கவேண்டும் என நினைத்தேன். நினைத்தது நடந்து விட்டது’ என பேஸ்புக்கில் பதிவு போட்டு பலரது வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டிருக்கும் போது திடீரென வானத்தில் இது வரை கேட்டிராத இடியின் சத்தம் கேட்டது. காதுகளை கைகள் தானாக மூடின. இனம்புரியாத அதிர்ச்சியால் உடல் நடுங்கியது.

மலை உச்சியில் மழை கொட்டியது என்பதை விட வானத்திலிருந்து பெரிய அருவி உருவாகி நீரைக்கொட்டியது. ‘ஆகாய கங்கை இங்கே வந்ததோ…?!’ என பேஸ்புக்கில் மறுபடியும் ஒரு பதிவு போட ஐந்தாயிரம் நண்பர்களும் லைக் போட்டது ஆரம்பித்து பத்து வருடங்களில் அதிக லைக் வாங்கிய பெருமை இப்பதிவிற்கு வந்ததை எண்ணி இனம்புரியாத பயத்திலும் இன்புற்று மகிழ்ந்தான். 

‘மேக வெடிப்பாக இருக்கலாம். நீங்கள் ஆபத்தில் இருப்பதை அறியாமல் இருக்கிறீர்கள்’ என ஒரு நண்பர் கமெண்டில் போட்ட பதிவைப்படித்த போது பயத்தில் மனம் பதைபதைத்த மறு நொடி மலையில் இருந்து காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு வருவதை அறை ஜன்னல் வழியே கண்டபோது ‘பிரகாசமாக எரிந்த விளக்கு அணைவது போல் நம் வாழ்க்கை இன்றோடு முடிந்தது’ என நினைத்து இருவரும் ‘வீல்’ என மரண ஓலம் எழுப்பி கதறிய அடுத்த நொடி அருகிலிருந்த பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதைப் பார்த்தார்கள்.

ஹோட்டலின் இரண்டாவது மாடிக்குள் சுனாமி அலைபோல் தண்ணீர் பீரிட்டு உள்ளே வந்த போது இருவருக்கும் பாதி உயிர் போயிருந்தது.

சில மணி நேரம் சென்ற பின் போகும் தண்ணீர் சற்றே குறைய ஆரம்பித்த போது போன உயிர் திரும்ப வந்தது.

ஹோட்டலைச்சுற்றிலும் ஆர்பரித்து சென்ற தண்ணீர் ஒரு பாறையின் உதவியால் ஹோட்டலை விட்டிருந்தது. ஆனால் சுற்றிலும் பாதையில்லை. வெளியேற வழியில்லை. 

ராணுவ ஹெலிகாப்டர் வந்ததில் கயிற்றின் மூலம் ஏறி காப்பாற்றப்பட்ட சில நொடிகளில் ஹோட்டல் மொத்தமாக ஆற்றுக்குள் தலை குப்புற விழுவதை ஹெலிக்காப்டரிலிருந்து பார்த்த போது ‘ஆபத்து மனிதர்களைத்தேடி வருவதில்லை. மனிதர்கள் தான் ஆபத்தைத்தேடி வருகின்றனர்’ என்பது புரிந்தது. 

இனிமேல் இது போன்ற ஆபத்தான சுற்றுலா ஸ்தலங்களுக்கு இனி ஜென்மத்துக்கும் வரக்கூடாது என உறுதியாக முடிவு செய்தான் முகன்.

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *