விதியின் எழுத்து
(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அருவிக் கரையிலிருந்து புறப்படுவதற்கு முன்னால் நாங்கள் எல்லோரும் ஒரு சிறு கல்லைக் கொண்டு மலை மேலே தட்டித் தட்டி எங்களுடைய பெயர்களைக் கொத்தினோம். அழிகின்ற இந்த நிலையில்லா உலகத்தில் பின் சந்ததிகளுக்காகச் செய்துவிட்டுச் செல்லும் சிரஞ் சீவிக் காரியம் அது!
நாங்கள் மட்டும் என்ன? நிலைத்து நிற்கவேண்டும் என்று விரும்பாதவர் யாருண்டு இந்த உலகில்? அதோ மீசையும் தாடியும் வளர்ந்து, முடியெல்லாம் சின்னா பின்னமாய்ப் பின்னிச் சுருண்டு ஒன்றிச் சரடு சரடாகத் திரிந்து போய்க் கிடக்கிற அந்தக் கிழவனுங்கூட மலை யிலே பெயரைப் பொறிக்கிறானே!
நானும் நண்பர்களும் அந்தக் கிழவனையே பார்த் தோம். மலையின் மேலே பெயர் பொறிப்பதற்கான யோக்யதை எங்களுக்குத்தான் இருந்தது என்ற ஆணவத் தில், கிழவனைச் சற்றுக் கூர்மையாகவே பார்த்தோம். அவனோ எங்கள் அனைவரையும் மிஞ்சிவிட்டான். கண்ட கண்ட இடத்தில் எல்லாம், மலையில், மரங்களில், புல் தரையில்-இடமிருந்தால், கையெட்டினால் அந்த மேகத்திலே கூடப்-பெயர் பொறிக்க முனைந்து நின்றான் கிழவன்!
மெதுவாக நடந்தேன். ஒவ்வொரு இடமாக நின்று பெயர் பொறித்துவிட்டு மரங்களூடே எங்கள் பார்வையினின்றும் அவன் மறைந்ததும், வேகமாக நடந்து போய் அவன் பெயர் பொறித்திருந்த இடத்தைப் பார்த்தேன்.
‘பார்வதி’, ‘பார்வதி’, ‘பார்வதி’ என்று அந்த மலை யெல்லாம் பொறித்துத் தள்ளி யிருந்தான் கிழவன். அச்சுக் குண்டான எழுத்துக்கள், வண்ண வண்ண வடிவம்!
“என்ன இது! ஒரு பெண்ணின் பெயராக அல்லவா இருக்கிறது!” என்று நண்பர் ராமசாமி ஆவலோடு வந்து பார்த்தார்.
ஆமாம்; ஒரு பெண்ணின் பெயர்தான்; கிழவனுடைய பெயர் இல்லை! பாபநாசத்தின் கல்யாண தீர்த்தத் துறையிலே இருந்த அந்த மரம், செடி, கொடி, பாறைகள் எல்லாம் பர்வத குமாரியின் அந்த வண்ணப் பெயரைத் தாங்கி, ‘பார்வதி’, ‘பார்வதி’ என்று நின்றன!
2
‘ஆனந்த விலாஸ்’ பங்களாவுக்கு நாங்கள் திரும்பிய போது நன்றாய் இருட்டிவிட்டது. ‘ராச் சாப்பாட்’டை முடித்துக்கொண்டு வெளியே வந்தேன்; நதி வளைந்து திரும்பிய அந்தக் கோணத்தில் இறங்கி, பாறைகளுக்கு மேலே நடந்து போய், உயரமான ஓர் இடத்தில் உட்கார்ந்துகொண்டேன். நிலா வெளிச்சத்தில் பாப நாசம் மலை- பொதிகை மலை – எதிரே நின்றது. தாமிர வருணி நதி வானத்திலிருந்து நிலவு உருகி வந்து தண்ணீராக ஓடுவதுபோல மின்னி மின்னி நடந்தது. தமிழ்த் தென்றல்’ என்று சொல்கிறார்களே அந்த ரம்யமான காற்று, அகஸ்திய முனிவரின் ஞான வாசனையோடு மலையிலிருந்து இறங்கி வந்து அந்த நிலவுத் தண் ணீரில் தவழ்ந்து உடம்பிலே சுருண்டது. எவ்வளவு நேரம் அப்படியே இருந்திருப்பேனோ தெரியாது!
‘பார்வதி’ என்று ஒரு குரல் கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பினேன்.
பாறைக்கு மேலே அந்தக் கிழட்டு மனிதன் நின்று கொண்டிருந்தான்!
“என்ன பார்க்கிறீர்கள்? தனிமையைக் கலைத்து விட்டேன் என்றா? பயப்படாதீர்கள், நான் பைத்திய மில்லை!”
எனக்கு எப்படி இருந்திருக்கும் இந்த வார்த்தை களைக் கேட்டதும் என்பதை, நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்!
கிழவன் என் அருகில் வந்தான். நான் சொல் வதற்கு முன், என் எதிரே பாறையில் சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டான். மடியில் இருந்து ஒரு காவிக் கட்டியை எடுத்துத் தனக்கு முன்பாக அந்தப் பாறையில் ‘பார்வதி’ என்று எழுதினான்.
“சரி; எழுதிவிட்டேன். இனிமேல் பேச ஆரம்பிக்க லாம்; சொல்லுங்கள், உங்கள் அமைதியை இப்பொழுது நான் கெடுக்கவில்லையே?”
“இப்பொழுது என்ன? என் அமைதியை நீங்கள் கெடுக்க ஆரம்பித்துச் சில மணி நேரம் ஆகிறது!” என்றேன்.
“அப்படியானால் அந்த அமைதியை மீண்டும் நிலை நிறுத்தி விட்டுத்தான் செல்வேன் நான்!”
இப்படி கூறிவிட்டுக் கிழவன் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தான்.
3
பார்வதி எனக்கு அத்தை மகள். எங்கள் அத்தை எங்கள் குடும்பத்திலேயே “கண்ணே கண்ணு’ என்று பிறந்த ஒரே பெண்குழந்தை-நான்கு சகோதரர்களுக்கு ஒரு சகோதரி.
பார்வதி அந்த ஒரே ஒரு அத்தையின் ஒரே மகள். அவள் பிறந்த இரண்டு வருஷத்துக்கெல்லாம் அத்தையும் காலமாகிவிட்டாள்.
அத்தை காலமாகும்போது எனக்கு ஐந்து வயது. என்னையும் பார்வதியையும் கையிலே ஒன்று சேர்த்துப் பிடித்து அப்பாவிடம் ஒப்படைத்து, “தம்பி, இந்த இரண்டும் உன் குழந்தைகள்” என்று சொல்லிவிட்டு அத்தை உயிர் துறந்தாள்.
எங்கள் மாமா – பார்வதியின் தகப்பனார் – எப்பொழுதுமே குடும்பப் பொறுப்புத் தெரியாத ஒரு ‘மைனர்’. ஆகவே, இரண்டு வயதிலிருந்தே பார்வதி எங்கள் வீட்டில்தான் வளர்ந்தாள்.
பார்வதி நல்ல அழகி. ‘நல்ல’ என்ற வார்த்தையைக் கிறுக்குத் தனமாகத்தான் உபயோகிக்கிறேன். வேறு அவளுடைய அழகை எப்படி வர்ணிப்பது?
சில பெண்கள் பார்ப்பதற்குக் கவர்ச்சியாய் இருப்பார்கள். ஆனால் மனம் இருக்கிறதே, அதற்குள் ஆயிரத்தெட்டுக் கோணல்கள் இருக்கும். எங்கள் பார்வதி அப்படியில்லை; உள்ளமும் உடம்பும் சேர்ந்து ஒருமித்து உருவாகிய ஒரு நல்ல அழகி.
சில பெண்கள் நல்ல சிவப்பாய் இருப்பார்கள். முகத்தில் ஆழாக்கு அழகு இராது. சில பெண்கள் கன்னங்கரேல் என்று இருப்பார்கள். ஆனால் முகத்தில் ஒரு காந்தம் இருக்கும். எங்கள் பார்வதி சிவப்பும் இல்லை; கறுப்பும் இல்லை; பொது நிறம். முகத்தில் ஒரு மின்னல். கண்ணைப் பறிக்கிற மின்னல் இல்லை. கண்களை நிரப்பிக் ‘குளு குளு’ என்று நிலவு வீசுகிற ஒரு தேஜஸ்!
பார்த்தீர்களா, பார்வதியை வர்ணித்துக்கொண்டே போகிறேன். கதையைச் சொல்லவில்லையே உங்களுக்கு!
பார்வதி மிக மிகக் கெட்டிக்காரி. அவள் வாய் திறந்து பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். நேரம் போவதே தெரியாது. வேடிக்கை வரும்; சிரிப்பு வரும்; ஹாஸ்யம் கும்மாளி போடும்! அதே சமயம் பெரிய பெரிய உண்மைகள், தத்துவங்கள் வந்து மின்னல் பளிச்சிட்டுக் கண்ணைப் பறிக்கிறமாதிரி நம்முடைய மனசை ஒரு பறி பறித்து நிற்கும்!
பள்ளிக்கூடத்தில் எந்த வகுப்பிலும் பார்வதிதான் முதல் மார்க்கு. நான் – என்னைப்பற்றி நானேதான் சொல்ல வேண்டும்-படிப்பில் என்றைக்குமே மந்தம் தான். ஆணும் பெண்ணும் ஒன்றாகப் படிக்கிற பள்ளிக் கூடத்தில் நாங்கள் படித்ததால், அவள் எல்லாப் பரீக்ஷையிலும் முதல் மார்க்கு. நான்தான் கடைசி மார்க்கு!
அப்பொழுது எங்கள் தலைமை ஆசிரியராக இருந்தவ ருக்குக் கூட்டுக் கல்வி முறையில் பெரிய ஆர்வம். பெண் பிள்ளைகள் ஆண் பிள்ளைகளைத் தோற்கடிக்கிறார்கள் என்று சொல்லிக்கொள்வதில் அபாரமான திருப்தி அவருக்கு. இப்படிச் சொன்னாலாவது ரோசம் உண்டாகி ஆண் பிள்ளைகள் கவனமாகப் படிக்கமாட்டார்களா என்று ஓர் ஆசை!
இந்த ஆசை என் விஷயத்தில் முழுத் தோல்வியாக முடிந்தது! பார்வதி கெட்டிக்காரி என்றால் எனக்கு ஏன் ரோசம் வரவேண்டும்? எனக்குப் பெருமை அல்லவா அதில்!
அவளோடு போட்டி போட்டுப் படிக்க முடியாத காரணத்தினால் இப்படிச் சொல்லவில்லை நான். உண்மையிலேயே அவளுடைய சாமர்த்தியம் எனக்கு வராது. எங்கள் வகுப்பில் வேறு யாருக்குமே வராது! அவள் தனிப் பிறவி.
எஸ்.எஸ்.எல். ஸி. பரீக்ஷையில் பிரமாதமான மார்க்குகள் வாங்கித் தேறினாள். நானோ ‘பத்தாவது’ தாண்ட மாட்டாமல் கலைந்து நின்றுவிட்டேன். நின்றே போய்விட்டேன்!
இந்த சந்தர்ப்பத்திலே பார்வதியின் மேல்படிப்பு விஷயமாக எங்கள் குடும்பத்தில் ஆராய்ச்சி நடந்தது. எங்கள் மாமாவோ அத்தை இறந்த பிறகு எப்படி எப்படியெல்லாமோ அலைந்து திரிந்து உடம்பையும் பேரையும் கெடுத்துக்கொண்டு, இந்த உலகத்தை விட்டு மறைந்தார். நானோ படிப்புக்கு ஒரு வகையாக முற்றுப் புள்ளி வைத்துவிட்டேன். இந்த நிலைமையில் அவளை இன்னும் மேலே படிக்கச் சொல்வது எப்படி என்று எங்கள் வீட்டில் யோசித்தார்கள். அம்மாவுக்கு மனத்துக் குள்ளே என்னைப்பற்றிய கவலை; மகனுக்கு மேலாக மருமகள் படிப்பது எப்படி என்ற நினைப்பு!
பார்வதி ரசாயனத்தை இஷ்ட பாடமாக எடுத்துப் படித்து மாகாணத்திலேயே முதலாவதாகத் தேறி யிருந்ததால், அந்த சாமர்த்தியம் வீணாவதைத் தலைமை ஆசிரியர் விரும்பவில்லை. நானும் விரும்பவில்லை. பார்வதியிடம் எனக்கு இருந்த இந்த மதிப்பையும் அன்பையும் யாருமே புரிந்துகொள்ள முடியவில்லை. பார்வதிக்கே முடியவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
4
பார்வதி மேல்-படிப்புப் படிப்பது என்று தீர்மானம் ஆயிற்று. அப்பாவுக்கு இஷ்டமில்லை. அம்மாவுக்கு இஷ்ட மில்லை. பார்வதிக்குமே இஷ்டமில்லை! ஆனால், நான் மட்டும் பிடிவாதமாக இருந்தேன். என்னுடைய பிடி வாதத்தை எதிர்க்க யாராலும் முடியவில்லை!
பார்வதி மேல்-படிப்புப் படித்தாள். தொடர்ந்து படித்தாள். படிக்கப் படிக்கப் படிப்பிலே உத்சாகம் வந்துவிட்டது. ரசாயன சாஸ்திரத்தில் ஆனர்ஸ் வகுப்பில் ராஜதானியிலேயே முதலாவதாகத் தேறினாள். உடனே அதே கல்லூரியில் பேராசிரியை உத்தியோகமும் கிடைத் தது. அவளுக்கு விழுந்த புகழ் மாலைகளையெல்லாம் என்னுடைய கழுத்திலேயே மானசீகமாகச் சூட்டிக் கொண்டேன் நான். ஆனால் உலகமோ என் கழுத்தில் அவளுடைய மணமாலையைச் சூட்டத்தான் காத்திருந்தது.
அம்மா சொன்னாள்: “பார்வதி கண்ட கண்ட ஆண் பிள்ளைகளோடு பழகுவது எனக்குப் பிடிக்கவில்லை. காலா காலத்தில் கல்யாணம் பண்ணாமல் பெண்களைப் படிக்க விடுவதே இப்படித்தான்!”
எனக்கு அப்படிப் படவில்லை. பார்வதி எல்லாரையும் போல் கல்யாணம் பண்ணிக்கொண்டு ‘புருஷனுக்குச் சமைத்துப் போடுவதற்காகப் பிறந்த’ ஒரு யந்திரம் இல்லை. ரசாயன உலகமே அவளால் எத்தனையோ சாதனைகளை எதிர்பார்த்திருந்தது. அவள் ஒரு மதாம் கியூரி, ப்ளாரன்ஸ் நைடிங்கேல்! கடவுள் அவளைப் படைக்கும்போது உலகத்தின் கண்முன்பு பல அதிசயங் களைச் செய்து காட்ட நினைத்தார்-என்றெல்லாம் எண்ணி னேன். ஆனால் கடவுள் நினைப்பு வேறுவிதமாக இருந் திருக்கிறது என்று பின்னர்தான் தெரிந்தது!
அர்த்தமில்லாமல் கடவுளின் பெயரை இழுக்கிறேன் என்று நீங்கள் குற்றம் சாட்டுவீர்கள். என்னை மன்னிக்க வேண்டும். இந்த உலகில் அநேக காரியங்களை விளக்குவ தற்குக் கடவுள்தான் வந்து உதவுகிறார். இல்லையென்றால், மனித் அழிவுக்கான பல கேள்விகளுக்கு விடையே இல்லாமல் நாம் குமைய வேண்டியது தான். நானும் அப்படித்தான் குமைந்தேன். என்னைவிட அதிகம் குமைந்தவள் பார்வதிதான்.
பார்வதிக்குப் பேராசிரியர் வேணுகோபாலனிடம் உண்மையான நேசம் இருந்தது. வேணுகோபாலனுக்கும் அப்படித்தான்-பரஸ்பரம். என்வரையில் நான் இவர் கள் பழகுவதை ஆதரிக்கவே செய்தேன். அழகும் கல்வியும் நிறைந்த ஒரு பெண்ணின் மனம் எனக்கு நன்றாகப் புரிந்தது. அந்த மனம் எந்த வகையான ஆடவர்களின் உறவில் ஆனந்தம் அடையும் என்பதை நான் உணர்ந்திருந்தேன். ஆனால் அம்மாவுக்கு அது புரியவில்லை.
“படித்திருந்தால்தான் என்ன! இப்படியா பேச்சு பேச்சு பேச்சு என்று ஆண்களோடு திரிவது2 எனக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை!” என்றாள் அவள்.
“அம்மா, நீ ஒரு கர்நாடகம். பார்வதியின் புத்தியும் சாதுர்யமும் உனக்கு என்ன தெரியும்? அவள் நம்முடைய குடும்பத்தில் பிறக்க வேண்டியவளே இல்லை. மேனாடு களில் இப்படி ஒரு கெட்டிக்காரப் பெண் இருந்தால்…?”
“போதும் போதும்; நீ படித்த படிப்புக்கு இப்படிப் பேசத்தான் வேண்டும்.”
“நான் படிக்கவில்லை. பாழாய்ப் போகிற ‘ஸையன்ஸ்’ எனக்கு வரமாட்டேன் என்கிறது. ஆனால் பார்வதி அப்படியில்லை. எத்தனை புதுப்புது விஷயங்களைச் சொல்கிறாள் தெரியுமா? காலேஜ் எல்லாம் அதிசயப் படுகிறது!”
அம்மா இதற்குமேல் என்னோடு பேசவில்லை. அவளுக்கு என்னுடைய மனமே புரியவில்லை. அவள் கவலை, பார்வதியை மருமகள் ஆக்க முடியவில்லையே என்பதிலே தான் இருந்தது!
இந்த நிலைமையில்தான் ஒரு நாள் பார்வதி என்னுடைய அறையில் நுழைந்தாள்:
“அத்தான், உங்களோடு ஒரு விஷயம் மனம் விட்டுப் பேசவேண்டும். அனுமதி தருகிறீர்களா?” என்று கேட்டாள்.
“நானும் அதே விஷயத்தை உன்னிடம் மனம் விட்டுப் பேசவேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் எனக்குத் தைரியம் வரவில்லை. நீயே வந்துவிட்டாய். என்ன இருந்தாலும் உன்னுடைய அறிவின் பலம் எனக்கு வராதுதான்.”
“சரி, சரி! திரும்பத் திரும்ப இப்படியே சொல்லா தீர்கள். நானா படிக்கவேண்டும் என்று சொன்னேன்! நீங்கள் தானே வற்புறுத்தினீர்கள்? இப்பொழுது நீங்களே உங்களைக் குறைத்துப் பேசிக்கொண்டால்…?”
“மனம் விட்டுச் சொல்கிறேன். பார்வதி, நீ ஒரு அபூர்வமான புத்திசாலி. உன்னைப் பற்றி நான் எவ்வளவு பெருமை அடைகிறேன் தெரியுமா? நாலு பேர் உன் பேச்சையும் திறமையையும் பாராட்டிச் சொல்லும் போது எனக்கு இந்த ஜன்மம் எடுத்ததன் பலனே கிட்டி விட்டது போலப் பெருமை உண்டாகிறது.”
“அத்தான், நீங்கள் இப்படியெல்லாம் பேசினால் எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. நான் ஒரு அசடாகப் பிறந்தேன் இல்லையே என்று அடிக்கடி நினைக்கிறேன்.”
“இல்லை, அப்படி நினைக்கக்கூடாது நீ. புத்திசாலித் தனம் என்பது கடவுள் கொடுக்கிற வரம். அது எல்லா ருக்கும் கிடைப்பதில்லை. உனக்குக் கிடைத்திருக்கிறது. அதை முற்றிலும் உணர்கிறேன் நான். உன்னுடைய அறிவுக்கு முன்னால் நான் ஒரு துரும்பு. சத்தியமாகச் சொல்லுகிறேன். என்னை நம்பு”
பார்வதி ஒன்றுமே பதில் பேசவில்லை. அவளுடைய கண்கள் இரண்டும் கலங்கின. வார்த்தைகள் வராமல் தடுமாறிக் கண்ணீர் வந்தது.
“நீ என்ன சொல்ல வந்தாயோ அதை இன்னும் சொல்லவில்லை – அப்படித்தானே?” என்று கேட்டேன்.
“ஆமாம். அது உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“பார்வதி, கடவுள் எனக்குப் படிப்பைத் தரவில்லை, ஆனால் உன்னை அறிந்து கொள்ளக்கூடிய சக்தியைமட்டும் கொடுத்திருக்கிறார். உன் மனம் எனக்குத் தெரியும். வேணுகோபாலனை மணந்துகொள்ள நீ ஆசைப்படுகிறாய். ஆனால் அதே சமயம் என்னை எண்ணி அநுதாபப்படுகிறாய் மனசாக்ஷி என்று ஒன்று இருந்துகொண்டு உன்னை வதைப்பது எனக்குத் தெரியும்.’
பெருமூச்சு விட்டுக் கொண்டு பார்வதி பேச ஆரம்பித்தாள்:-
“அத்தான், முதலில் இந்த அறையில் நுழையும் போது என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என்று யோசித்துக் கொண்டே வந்தேன். ஆனால் நீங்கள் என் காரியத்தைச் சுலபமாக்கி விட்டீர்கள். இனி நான் சொல்ல வேண்டியது என்ன இருக்கிறது?”
“நீ வேணுகோபாலனை மணந்துகொள்வது எனக்கு பூரண சம்மதம். முழு விருப்பம். உண்மையில் அந்தத் திருமணத்தை நான் வற்புறுத்துகிறேன். நம் இருவருக் குள்ளும் கல்யாணம் என்பது அர்த்தம் இல்லாத வெறும் சடங்காகத்தான் முடியும். உன்னுடைய மனம் இருக்கும் நிலை வேறு, என் மனத்தின் நிலை வேறு. உனக்கு ஏற்ற வரன் வேணுகோபாலன் தான்.”
பார்வதி பேசாமல் இருந்தாள்.
“என்ன யோசிக்கிறாய்?” என்று கேட்டேன்.
“இன்னும் ஒரு வாரத்தில் அவரிடம் முடிவாக என் கருத்தைச் சொல்வதாகக் கூறியிருக்கிறேன். அதனால்தான் இன்று இங்கு வந்தேன். ஆனால் வந்த பிறகோ நிலைமை இன்னும் கடினமாகிவிட்டது நீங்கள் சுலபமாக முடிவு சொல்லிவிட்டீர்கள். எனக்கு அப்படிச் சொல்ல முடியவில்லை. அத்தான், வாஸ்தவமாகச் சொல்கிறேன், உங்கள் அன்பு என்னைத் திகைமுட்டச் செய்கிறது!”
இப்படிச் சொல்லிவிட்டுப் பார்வதி எழுந்து சென் றாள். அதன் பிறகு ஒரு வாரம் வரை அவள் என் அறைப் பக்கம் வரவில்லை. ஞாயிற்றுக்கிழமை மாலை நானே அவள் அறைக்குச் சென்றேன்.
“என்ன பார்வதி, ஒரு வாரம் ஆகப் போகிறதே. முடிவுக்கு வந்தாயா?” என்று கேட்டேன்.
“ஆமாம். நாளைக்கு வேணுகோபாலனைச் சந்திக்கிறேன்” என்றாள்.
”சரி'” என்று சொல்லிவிட்டுத் திருப்தியோடு சென்றேன்.
மறுநாள் மாலை பார்வதி என் அறைக்கு வந்தாள்.
”என்ன! சொல்லிவிட்டாயல்லவா?” என்று கேட்டேன்.
“ஆமாம். ஆனால் நீங்கள் சொன்னபடி இல்லை!”
“அப்படியென்றால்?”
“அத்தான், இனி இந்த ஜன்மத்தில் தங்களைத் தவிர வேறு ஒருவரை மணப்பது என்பது இல்லை. அதையே தான் வேணுகோபாலனிடம் சொல்லிவிட்டேன்” என்றாள்.
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது!
“அத்தான், இந்த உடம்பு தங்களுக்கு என்று வளர்க்கப்பட்டது. இந்த உள்ளம் சிறு வயதில் தங்களுக்குச் சொந்தமாகிவிட்டது. இப்பொழுது புதிதாக வேறு ஒருவருக்கு எப்படி இதில் உரிமை உண்டு?”
உணர்ச்சியினால் அவளுடைய உடல் நடுங்கியது.
“பார்வதி, நீ எத்தனையோ படித்தவள். உனக்கு நான் சொல்லியா தெரியவேண்டும்? நாம் இருவரும் கணவன் மனைவி என்று குடித்தனம் செய்வது இயல்கிற காரியமா? நீயே சொல். விஞ்ஞான உலகில் உன்னுடைய முன்னேற்றத்துக்கெல்லாம் நான் ஒரு பெரிய முட்டுக் கட்டையாக நிற்பேன். கணவன் என்ற உரிமை – உணர்ச்சியின் வசமாகி, படிப்படியாக உன்னுடைய நண்பர்கள், உனது நடமாட்டம், பேச்சு எல்லாவற்றை யும் நான் சந்தேகிக்க ஆரம்பித்துவிடுவேன். பிறகு வாழ்க்கை இருவருக்கும் நரகமாகிவிடும். வேண்டாம், வேண்டாம். அது முடியாத காரியம்…”
அறையில் ஒரு மௌனம் வியாபித்தது. வெகு நேரம் இருவரும் பேசாமல் இருந்தோம்.
“சரி, அத்தான், நான் உங்களைப் பிறகு பார்க் கிறேன்” என்று சொல்லிவிட்டுப் பார்வதி சென்றாள்.
அன்று இரவு சாப்பிட்டுவிட்டு மாடிக்குப் போனால் அவள் அறையில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. எட்டிப் பார்த்தேன். நாற்காலியில் சாய்ந்துகொண்டு பார்வதி கடும் யோசனையில் இருந்தாள்.
“என்ன இது? இன்னும் சாப்பிடவில்லையா?” என்று கேட்டேன்.
“இல்லை! எனக்கு இன்று ஒன்றும் வேண்டாம். எப்படியோ இருக்கிறது உடம்புக்கு.”
“உடம்புக்கு ஒன்றும் இல்லை. எல்லாம் மனக் குழப்பம்தான். அதிகமாகப் படித்தவர்களே எப்பொழு தும் இப்படித்தான், சிறு விஷயத்தையும்கூடப் பலமாக யோசிப்பார்கள்.”
“இல்லை, இல்லை. இது சிறு விஷயமே இல்லை. என் மூளையை யெல்லாம் குழப்புகிற பெரிய விஷயம்…”
“அதெல்லாம் இல்லை. இரவு உறங்கிவிட்டுக் காலை யிலே எழுந்தால், எல்லாம் தெளிவாகிவிடும். படுத்துக் கொள்” என்று சொல்லிவிட்டு நான் திரும்பினேன்.
அவ்வளவுதான். அதன் பிறகு பார்வதியை நான் பார்க்கவேயில்லை. மறுநாள் காலை அவளுடைய மேஜை யின் மேல் ஒரு கடிதம் இருந்தது. அதை எடுக்கிற அவ சரத்தில், அதன் மேல் வைத்திருந்த கண்ணாடிக் குண் டைக் கீழே தள்ளிவிட்டேன். தரையிலே விழுந்து விளிம்பு உடைந்து ஓடியது அது. பதறுகிற கையோடு கடிதத்தைப் பிரித்தேன்.
“அன்புள்ள அத்தானுக்கு,
இரண்டு வயதில் என் அன்னை உங்களிடம் என்னை ஒப்படைத்து மறைந்தாள். அந்த வினாடியிலிருந்து நான் உங்களுக்கே உரியவள். இந்த உடம்பை வளர்த்தவள் உங்கள் அம்மா. இந்த உள்ளத்தை வளர்த்தது நீங்கள். இப்பொழுது இந்த உள்ளம் இன்னொருவரை நாடினால் அது மன்னிக்க முடியாத பெரும் பாவம். என்னையே மருமகள் என்று சதா கனவு கண்டு வந்த அத்தையின் முன்பு நான் எப்படி இன்னொருவரை மணப்பது? உங் களுக்கு ஏற்ப என்னை நான் மாற்றிக்கொண்டு வாழலாம் என்றாலோ, உங்கள் மனப்பான்மையிலும், நீங்கள் சொல்கிற வாதத்திலும் உண்மை இருக்கிறது. நியாயம் இருக்கிறது. உங்களைத்தான் நான் மணக்க வேண்டும் என்று நீங்கள் என்னை வற்புறுத்தி இருந்தால் ஒருவேளை அதை மீறுவதற்கு என் மனம் துணிந்திருக்கக் கூடும். ஆனால் நீங்களோ எனது நலத்துக்காக உங்களைக் கழித் துக் கொள்கிறீர்கள். உங்களுடைய அந்த எல்லையற்ற அன்பைக் கண்டு என் உள்ளம் தடுமாறுகிறது. என்ன செய்வேன்! நான் படித்த ரசாயன சாஸ்திரத்தில் மனித அறிவையும் மன நிலைகளையும் நினைத்த மாத்திரத்தில் மாற்றி அமைக்கக் கூடிய ரசவாத வித்தை எதுவும் இல்லையே!
இன்று நாம் பிரிகிறோம். காலம் என்ற நதியின் கரையில் ஒரு நாள், ஒரு ஜன்மத்தில், நாம் இருவரும் மீண்டும் சந்திப்போம். அப்பொழுது நமக்குள் அறி வினாலோ, அழகினாலோ, மன நிலையினாலோ எவ்வித பேதமும் இராது; அப்பொழுது முடிவற்ற அந்தக் கால நதியின் கரையில் மனம் ஒத்து நாம் நடந்து செல்வோம் –
பார்வதி.”
5
தாடிக் கிழவர் எழுந்தார்.
“உங்கள் கதை ஆச்சரியமாக இருக்கிறது. காத லிலும் ஒரு புதுமையான காதலாக இருக்கிறது உங்கள் காதல்!” என்றேன்.
“ஐந்தாறு காதலைக் கண்டுவிட்ட மாதிரி பேசு கிறீர்களே-சொல்லுங்கள் பார்க்கலாம், பார்வதி எங்கே சென்றிருப்பாள்?- காலம் என்னும் நதி என்று சொன்னாளே, அது இந்த நதி மாதிரிதான் இருக்குமோ? அதன் கரை இந்தப் பாறை மாதிரிதான் கடினமாக நிற்குமோ? சொல்லுங்கள், உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்! தெரியாவிட்டால் என்னைப் பற்றி மதிப்புரை சொல்லாமல் மௌனமாக நடவுங்கள். அவ்வளவு தான் – நமஸ்காரம்.”
“சுந்தரம்!” என்று கூப்பிட்டுக்கொண்டே பங்களா நண்பர் என்னைத் தேடிப் பிடித்து அங்கே வந்துவிட்டார். அவர் தலை தெரிந்ததோ இல்லையோ, கிழவர் ‘விறு விறு’ என்று நடக்க ஆரம்பித்தார்.
‘சரிதான். இவ்வளவு நேரமாய்க் காணோமே என்று பார்த்தேன். இந்தக் கிழவனிடமா அகப்பட்டுக் கொண்டீர்கள்!” என்றார்.
“ஏன்?” என்று ஆவலோடு கேட்டேன்.
“இனிமேல் இந்தக் கிழட்டுப் பயல் பங்களாப் பக்கம் வந்தால் காலைத் தறித்துவிடும்படி காவல்காரனிடம் சொல்லியிருக்கிறேன்” என்றார் நண்பர் ஆவேசத்தோடு.
“என்ன அப்படி?”
”என்னவா, பத்து நாள் முன்பு நம்முடைய பங்க ளாச் சுவர் முழுவதும் ‘பார்வதி, பார்வதி’ என்று காவிக் கட்டியினால் கிறுக்கித் தள்ளிவிட்டான் இந்தக் கிறுக்குப் பயல்! மறுபடி வெள்ளையடித்து ஒரு வாரந்தான் ஆகிறது. காலம் போகிற போக்கைப் பாருங்களேன் – இதற்குப் பெயர் கிறுக்குத்தனமா, இல்லை, வம்புத்தனமா?”
அந்தக் கேள்விக்கு என் மனதுக்குள்ளேயே நான் பதில் சொல்லிக்கொண்டேன்:
“இரண்டும் இல்லை. இதற்குப் பெயர்தான் அன்பு! அவன் எழுதுகிறானே எழுத்து, அதுதான் அவனுடைய விதியின் எழுத்து!”
– இந்த தொகுப்பில் உள்ள பன்னிரண்டு கதைகளும் கல்கி, ஆனந்த விகடன், கலைமகள், வசந்தம் முதலான பத்திரிகைகளில் வெளியானவை.
-மஞ்சள் ரோஜா முதலிய கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1954, பாரி நிலையம், சென்னை.
![]() |
மீ. ப. சோமசுந்தரம் (Mi. Pa. Somasundaram; 17 சூன் 1921 – 15 சனவரி 1999) ஒரு தமிழ் எழுத்தாளர். மீ. ப. சோமு என்பது இவரது புனைபெயர். இவர் பத்திரிக்கை, கவிதை, புதினம், சிறுகதை, கட்டுரை, இசை போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர். 1962ல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர். வாழ்க்கைக் குறிப்பு சோமு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில்…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: December 5, 2025
பார்வையிட்டோர்: 107
