வாழ்க்கை வாழ்வதற்கே





அந்தப் பள்ளியின் ஆண்டு விழா இறைவணக்க பரதநாட்டியத்தோடு ஆரம்பமானது. பள்ளி மாணவ மாணவியர் அமைதிகாத்து இறைவழிபாடு செய்தனர். பல இலக்கிய பேச்சாளர்கள் அறிவுத் திறனைத் தங்களது பேச்சில் காட்டிக் கொண்டிருந்தனர். பள்ளிப் பருவம் முடித்து நல்ல எதிர்காலம் அமைத்து எப்படி சீரோடும் சிறப்போடும் வாழ்வது என்று பலர் பிள்ளைகளுக்கு அறிவுரை கூறினர்.
வாழ்க்கையின் தத்துவத்தை விளக்கினார் ஒருவர். வாழ்க்கை நான்கெழுத்துக் கொண்ட ஒரு வார்த்தை. முதல் எழுத்து உன்னை “வா” என்றழைக்கிறது. அடுத்து ஏன் என்று கேட்க, “வாழ்” என்றுச் சொல்கிறது. (முதலும் இரண்டாவது எழுத்தும் சேர்ந்தது). எப்படி வாழ்வது என்று கேட்டபோது “கை” கொண்டு உழைத்து வாழ் (கடைசி எழுத்து). அப்போது என்ன கிடைக்கும் என்று கேட்டபோது “வாகை” வெற்றி கிடைக்கும் (முதலும் கடைசியும்) என்று அற்புதமான விளக்கத்தினை அளித்தார்.
அடுத்தப் பேச்சாளர் வாழ்க்கையை இரத்தின சுருக்கமாக “காலையில் தூங்கி எழுந்தால் காபி, இல்லையென்றால் பால்” என்றார். இது என்னடா புதுக் கதையாக இருக்கிறது என்று எண்ணும்போதே காலையில் கண்விழித்தால் காபி குடிக்கலாம், இல்லையென்றால் இறப்புதானே. இறந்தால் பால்தானே ஊற்றுவார்கள் என்று விளக்கம் வேறு அளித்தார்.
வேறொருவர் ஒரு கதையைச் சொல்ல ஆரம்பித்தார். ஒரு காட்டில் வழிப்போக்கன் ஒருவன் சென்று கொண்டிருந்தான். தன்னை ஒரு மதம் பிடித்த யானை துரத்துவதைப் பார்த்து, பயந்து ஓட ஆரம்பித்தான். அருகில் ஒரு பாழடைந்த கிணறு தென்படவே உயிர் தப்பிக்க, முன்னே பின்னே தெரியாத அந்தக் கிணற்றினுள் திடுப்பெனக் குதித்து விட்டான். இப்போது பயம் அவனை ஆட்கொண்டது.
விழுந்தவுடன் எப்படியோ சமாளித்து, அங்கு தென்பட்ட ஒரு மரக்கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்கினான். தன்னைச் சுதாரித்துக் கொண்டு மெதுவாகக் குனிந்து அந்தக் கிணறு எவ்வளவு ஆழம் இருக்கின்றது என்று பார்த்தான். கிழே ஒரு முதலை வாயைப் பிளந்து கொண்டு எப்போது இவன் விழுவான் நாம் எப்போது இவனை விழுங்கி பசியாறலாம் என்று காத்துக் கொண்டிருந்தது.
ஐயோ என்று பயத்தில் நடுங்கிப் போனான். கொஞ்சம் தெம்போடு அண்ணார்ந்து மேலே பார்த்தான். அங்கே ஒரு பெரிய தேன்கூடு இருந்தது. அதிலிருந்து தேன் சொட்ட ஆரம்பித்தது. அதைப் பார்த்ததும் அவனை அறியாமலேயே தலையை ஆட்டி வாயில் தேனை விழச் செய்து தேனை ருசிக்க ஆரம்பித்தான். துன்பத்தைக் கண்டு துவண்டு விடாமல் சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டால் இன்பம்தான் என்பதை உணர்ந்தான்
கதையில் வரும் யானை நம் வாழ்க்கையின் கால அளவைக் குறிக்கின்றது. முதலை வாழ்க்கையின் நிச்சயமற்ற முடிவாகிய, இன்றைக்கோ நாளைக்கோ வரப் போகின்ற இறப்பினைக் குறிக்கின்றது. தேன் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்துவிட வேண்டும் என்பதைக் குறிக்கிறது என்று கூறி, எல்வோருடைய வாழ்க்கையும் இதுதான் என்று பள்ளி மாணவர்களுக்கு அறிவுரைக் கூறினார்.
அடுத்துப் பேச வந்தவர் நம் வாழ்க்கை சிறப்பாக அமைய இரண்டே வார்த்தைகள் போதும். யாருக்காவது தெரியுமா என்று கேட்டார். மைதானம் நிசப்தமானது. அவரே தொடர்ந்தார். சொல்லப்படுகின்ற நல்லவைகளைச் “சரி” என்று ஏற்றுக்கொள். நீ ஏதாவது உன்னையறியாமல் தவறு செய்தால் உடனே அவர்களிடம் “ளுழசசல” என்று சொல்லி மன்னிப்புக் கேள். அதோடு அதை மறந்து விடு. வாழ்க்கையில் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வராது என்று கூறினார்.
அடுத்துப் பேசியவர், நேற்று உடைந்த பானை. நாளை மதில் மேல் பூனை இன்று கையிலுள்ள வீணை. நேற்றைய வாழ்க்கை உடைந்த பானை. நாளை என்பது நம் கையிலில்லை. ஆகவே அது எந்தப்பக்கம் விழப் போகிறோம் என்று தெரியாமல் மதில் மேல் உள்ள பூனை. ஆனால் இன்று நம்கையில் உள்ள நேரம் வீணை போன்றது அதை மீட்டி இசையில் லயிப்போம்.
தேர்வில் தோல்வி ஏற்பட்டால் மனசு உடைந்து போக வேண்டாம். தோல்வியே வெற்றியின் முதல்படி என்று நினைத்து அதை எதிர்கொள்ளுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே. எனவே கடவுள் கொடுத்த உயிரைக் காப்பாற்ற வேண்டியது அவரவரது கடமை. தற்கொலை முடிவு எடுத்து உயிரை மாய்த்துக் கொள்வது மிக மிக மடமை என்று கூறி தன் உரையை முடித்தார்.
ஆம். இதுதான் வாழ்க்கை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாமல் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். வாழ்க்கையில் ஒரு நாள் நமக்குப் பிறக்கின்றது என்றால் நமது ஆயுளில் ஒரு நாள் குறைகின்றது என்பதுதான் பொருள்.
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல்தோறும் வேதனை இருக்கும். வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை. எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும் என்கிறார் கண்ணதாசன்.
மேலும் ஏழையின் மனதை மாளிகை ஆக்கி இரவும் பகலும் காவியம் பாடி, நாளைய பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு. உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்றும் கூறுகின்றார்.
எனவே கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் அதிகம் எண்ணிப் பார்க்காமல் நாம் வாழும் இன்றைய நாளில் சிறப்பாக நாம் வாழ வேண்டும். அதுதான் வாழ்க்கை.
நான் ராணிப்பேட்டையைச் சேர்ந்த அல்போன்ஸ் மோசஸ். பல்வேறு உற்பத்தி பிரிவுகளில் மனிதவளத் துறையில் மேலாளராகப் பணியாற்றினேன். கடந்த 3 ஆண்டுகளாக வாரந்தோறும் சிறுகதைகள் எழுதி, புதுச்சேரியிலிருந்து வரும் வார இதழில் வெளியிட்டு வருகிறேன். முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் மற்றும் சென்னை மற்றும் மைலாப்பூர் பேராயரிடமிருந்து எழுத்தாளர் விருதைப் பெற்றுள்ளேன். ஆரோவில் ஐடிஐயில் துணை முதல்வராகவும் பணியாற்றியுள்ளேன். தேரி உயர்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…மேலும் படிக்க... |