வாழத்தெரிந்தவன்!






மீன் விற்பவரிடம் மொய்க்கும் கூட்டம் மீன் பிடிப்பவரிடம் செல்வதில்லை. மீன் பிடிப்பவரால் தான் மீன்கள் கடைக்கு வருகிறது என்பதை யாரும் யோசிப்பதில்லை. மீன் விற்ற பின் அவரிடம் வாங்க எதுவுமிருப்பதில்லை.
தாத்தா சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்களை வைத்திருப்பவரை மதிக்கும் அளவுக்கு, தாத்தாவைப்போல் சொத்து சேர்க்கும் திறமை இருப்பவரைத்தேடி யாரும் செல்வதில்லை. தாத்தா சேர்த்து வைத்த சொத்து அழிந்த பின் அவரால் சொத்து சேர்க்க இயல்வதில்லை. சாதாரண வாழ்க்கைக்கே திண்டாடுகிறார்கள்.
எதுவுமில்லாத ஒருவரால் தான் அனைத்தையும் கற்க இயலும். இருப்பவர்கள், இல்லாதவர்கள் அளவுக்கு கற்பதில்லை. எனவே இல்லாமல் போகும் போது தோற்றுப்போகின்றனர். இல்லாதவர் தன்னிடம் எதுவுமில்லையென தேடிப்போகும் தேடல் அனுபவங்கள் மூலமாக ஆயுளுக்கும் சம்பாதிக்கும் வழிகளைக் கற்றுக் கொள்வதால் பிறரை சார்ந்து வாழாத நிலைக்கு உயர்ந்து விடுகிறார்.
இல்லாதவரே எந்த நிலையிலும் வாழக்கற்றுக்கொள்கிறார். இருப்பவர் தன்னிடமிருப்பதை இழந்த பின் பொருள் தேடிப்பெறத்தெரியாமல் வறுமையில் வாடுகிறார்.
கந்தனுக்கு முன்னோர் சேர்த்து வைத்த சொத்துக்கள் எதுவுமில்லை. தந்தையும் சிறுவயதிலேயே இறந்து போனதால் பள்ளி விடுமுறை நாட்களை விளையாடக் கழிக்காமல் உள்ளூர் மளிகைக்கடைக்கு தினமும் பத்து ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு சென்று தனது பள்ளிச்செலவுகளுக்கு சேமித்துக்கொண்டான். அவனது தாயார் கூலி வேலைக்குச்சென்று உணவு, உடைத்தேவையை பூர்த்தி செய்தாள்.
இரவு நேரங்களில் தூக்கத்தைக்குறைத்து நூலகங்களிலிருந்து எடுத்து வந்த புத்தகங்களை படித்தான். தனக்குத்தேவையானதை யாரிடமும் கையேந்தாமல், உதவி பெறாமல் அரசு பள்ளியில் முதல் மாணவனாகத்தேர்ச்சி பெற்று கல்லூரிக்குள் நுழைந்தான்.
எந்த வேலையானாலும் அந்த வேலையை உடனே கற்றுக்கொண்டு செய்து முடிக்கும் ஆற்றல் இயல்பாகவே அவனிடம் இருந்ததால் தன்னைச்சார்ந்தவர்களுக்கு உதவி செய்ததால் நல்ல பெயரையும் சம்பாதித்தான்.
அவனது திறமை, ஒழுக்கம் பற்றி அறிந்த உள்ளூரைச்சேர்ந்த மில் அதிபர் அவனுக்கு சூப்பர்வைசர் வேலை கொடுத்ததோடு, நல்ல சம்பளமும், குடியிருக்க வீடும், ஓட்ட வாகனமும் கொடுத்தார்.
கந்தனைப்பொறுத்தவரை ஒரு தியேட்டருக்கு சினிமா பார்க்க போனால் கூட படத்தைப்பார்த்து ரசிப்பதோடு ‘இந்தக்காட்சியை வேறு மாதிரி எடுத்திருக்கலாம்’ என சிந்திப்பான். ‘இந்த தியேட்டர் போல நாம் ஏன் கட்டக்கூடாது?’ எனவும் யோசிப்பான்.
எண்ணம் போல் வாழ்க்கை என்பதை உணர்ந்தவன், படிப்படியான தனது முயற்ச்சியால் உயர்நிலைக்கு வந்து, தான் வேலை செய்யும் நிறுவனத்தை லாபகரமாக மாற்றியதால் சம்பளம் தவிர லாபத்தில் பங்கு பெறும் நிலைக்கு உயர்ந்தான்.
கந்தனின் நண்பன் ரகுவரன் சிறுவயதிலேயே முன்னோர்களது சொத்துக்கள் தவிர தந்தை ரியல் எஸ்டேட் தொழிலில் சம்பாதித்ததால் வெளிநாடு சென்று படித்து வந்தவன், தந்தையின் தொழில் தன் கைக்கு வந்ததும் அதிகளவில் கடன் வாங்கி முதலீடு செய்தான்.
அதிக விலை கொடுத்து வாங்கி, அதிக விலைக்கு விற்க முயன்றபோது விற்பனை மந்தமாக, கடன் கட்ட முடியாததால் நஷ்டத்திற்கு விற்கு கடன் அடைக்க குடியிருக்க வீடு கூட மிஞ்சவில்லை.
முதலாளி மகனாக வாழ்ந்து விட்டு, பின் வேலைக்கும் போக மனமில்லாமல், மனைவியைப்பிரிந்ததால் குடிக்கு அடிமையாகி, உடல்நிலை பாதிக்கப்பட்ட போது குடியிருக்க வீடு கொடுத்து, அன்றாட செலவுக்கு பணமும் கொடுத்து நண்பனுக்கு உதவினான் கந்தன்.
தான் கோடிக்கணக்கில் சம்பாதித்து வைத்திருந்தாலும் தனது மகன் சிகனுக்கு செல்வச்செழிப்பைக்காட்டாமல் தன்னைப்போலவே பள்ளிப்படிப்பின் போதே ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு வேலைக்கு அனுப்பினான்.
‘வாரிசுகளுக்கு மீனைப்பிடித்துக்கொடுக்காதீர்கள், மீனைப்பிடிக்கக் கற்றுக்கொடுங்கள். அப்போது தான் எந்த நிலையிலும் வறுமையின்றி வாழ்வார்கள்’ என நண்பர்களிடமும், உறவினர்களிடமும் கூறுவான் கந்தன்.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |