வால்மீகி ராமாயணச் சுருக்கம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: October 8, 2024
பார்வையிட்டோர்: 7,307 
 
 

(1900ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆரணிய காண்டம் | கிஷ்கிந்தா காண்டம் | சுந்தர காண்டம்

26. சுக்கிரீவனோடு நட்பு

ஸ்ரீராமர் லக்ஷ்மணருடன் தாமரைகளும் நீலோத் பலங்களும் மீன்களும் நிரம்பிய பம்பையை அடைந்தார். அவ்வேரியைக் கண்டமாத்திரத்தில் அவர் உள்ளங் குளிர்ந்து இந்திரியங்கள் சலிக்க, சீதையினிடத்திலிருந்த ஆசை பெருகி மனக்கலக்கமுற்று புலம்புவராயினார்.- லக்ஷ்மணா,தெளிவான நீரினால் வைடூரியம் போலும் பம்பை நன்றாய் மலர்ந்த தாமரைகளாலும் ஆம்பல்களா லும் விருக்ஷங்களாலும் எவ்வளவு அழகாய் விளங்குகின் றது பார். அதைச் சூழ்ந்திருக்கிற அழகிய காட்டில் உள்ள ஒவ்வொரு மரமும் கோடுகள் சிகரங்கள் போலத் தோன்ற ஒவ்வொரு மலைபோலக் காணப்படுகின்றது. இப்பம்பை. துக்கத்தில் முன்னரே மூழ்கியிருக்கும், என்னை மேன்மேலும் வருத்துகின்றது. பறவைகள் இனிமையாக சப்திக்கின்ற வசந்தகாலம் சீதையைப் பிரிந்திருக்கும். எனக்கு சோகத்தை விளைக்கின்றது. லக்ஷ்மணா, முன்னரே துயரத்திலாழ்ந்திருக்கும் என்னை மன்மதன் பின்னும் தப்பிக்கச் செய்கிறான். அழகான கண்ணிமைகளையும் கருங் குழலையும் இன்சொல்லையுமுடைய சீதையைக் காணாது நான் உயிர் தரித்திருப்பதில் என்ன பிரயோஜனம்? என் னாயகியிருக்குமிடத்திலும் இவ்வாறே வசந்தகாலமாயின் அவளும் என்னைப் போலவே துயருறுவாள் என்பதில் சந்தேகமில்லை. வைதேகியின் அன்பு முழுதும் என் னிடத்திலேயே. அப்படியே என்னுடைய அன்பும் அவ ளிடத்திலே. அநேகவிதமான பறவைகள் இனியகுர லெழுப்பிக்கூவி எனக்கு வேட்கை பெருகச் செய்கின்றன. அதோபார், விசித்திரமான அம்மலைத் தாள்வரைகளில் மான்கள் ஆணும் பெண்ணுமாய் விளையாடுகின்றன. அவைகள் அங்ஙனமாக, நான் இவ்விடத்தில்மான் போன்ற கண்களை உடைய வைதேகியைப் பிரிந்து வாடுகின்றேன். தாமரை மலர்போன்ற கண்களையுடைய என்னுடைய பிராணநாயகி என்னைவிட்டுப் பரதந்திரையாய் எவ்வாறு உயிர்தரித்திருக்கின்றாள்? அவளுடைய முகமண்டலத் தைக் காணாது என் மனம் வாடுகின்றது. லக்ஷ்மணா, ஒப் பில்லாததும், இனியதும், நன்மை பயப்பதும், இடையிடை புன்முறுவலோடு விரவியதும், எளிதிற் பொருள் விளங் கும் சொற்கள் பொதிந்ததும், நல்ல நடையினை யுடையது மான அவ்வைதேகியின் வசனத்தை நான் எப்பொழுது கேட்கப் பெறுவேன்.” 

இவ்வாறாக மகாத்துமாவாகிய இராமர் திக்கற்ற வரைப்போல் புலம்புவதை லக்ஷ்மணர் பார்த்து காலோ சிதமான வார்த்தைகளை சொல்வாராயினார்:-” ரகுகுல திலக, உமக்குண்டாயிருக்கும் இந்தத் துக்கத்தை விட்டு விடுவீராக. உமக்கு மங்களமுண்டாகுக. புருஷோத்தம், நீர் விசனப்பட வேண்டாம். சுத்தாத்துமாக்களுடைய புத்தி இவ்விதமாய்க் கலக்கமடைவது கூடாது. இப் பொழுது சீதையின் பிரிவாலுண்டாயிருக்கும் துக்கத்தை நினைந்து பிரிய ஜனங்களிடத்தில் அதிக நேசம் பாராட் டக்கூடாதென்று அதை யொழித்துவிட வேண்டும். எண் ணெயில் அதிகமாய் நனைந்த வர்த்தி எண்ணெயின் ஈர முள்ளதேனும் எரிந்துவிடும். ஓ இராகவ, பாதாளம் சென்றாலும் சரி, அதன் கீழேபோயொளிந்தாலும் சரி, இராவணன் ஒரு நாளும் பிழைக்கப்போகிறதில்லை. முதலில் நாங்கள் அக்கொடிய அரக்கனுடைய சங்கதிகளை அறிந்துகொள்வோம்; உடனே அவன் சீதையைக் கொண்டுவந்து விட்டாலாயிற்று; இல்லையாயின் அவன் மரணமடைவது திண்ணம். தேவரீர் மனக்கலக்கத்தை மாற்றித் தைரியங்கொண்டு துயரம் நீங்கியிளுங்கள், காரியத்தைச் சாதிக்கவல்லவர்க்கும் கைநழுவின காரியம் எத்தனமின்றி மீட்டும் கூடாது. ஐய. இவ்வுலகத்தில் உற்சாகமே வலிமைக்குக் காரணம். அதனின் மிக்க வலியுள்ள தொன்றுமில்லை. அதைப் பெற்றவனுக்கு இவ் வுலகத்தில் கிட்டாததொன்றுமில்லை. உற்சாகமுள்ள புருஷர்கள் தாங்கள் செய்யும் தொழிலில் ஒருபொழுதும் மனச் சோர்வடையமாட்டார்கள். 

இவ்வாறு லக்ஷ்மணரால் தேற்றப்பட்டு விசனத்தில் மூழ்கியிருந்த இராமர் தம்மைப்பற்றிய சோக மோகங் களை முற்றும் துறந்து தைரியங் கொண்டார்.லக்ஷ்மணர் கூறிய மொழிகளை மனதில் சிந்தித்துக்கொண்டு இராமர் கானாறுகளும் குகைகளும் நிறைந்த அவ்வனத்தின் வினோ தத்தைப் பார்த்து தமது மனவருத்தத்தை அடக்கிக் கொண்டு தம்பியுடன் வழிநடந்தார். 

இராம லக்ஷ்மணர்கள் பெரிய ஆயுதங்களை கையில் தாங்கி அங்கு வருவதைக் கண்ட வானரோத்தமனாகிய சுக்கிரீவன் பயமடைந்தவனாய், நாற்புறமும் சுற்றிப் பார்த்து, ஓரிடத்திலும் நிலைகொண்டு நிற்க இயலாது உள்ளம் தடுமாறினான். பிறகு வசனிப்பதில் சமர்த்த னான அனுமான் வாலியின் கெட்ட செய்கைகளை நினைந்து பயமடைந்த சுக்ரீவனை நோக்கி “நீவிர் அனைவரும் வாலி யின் பயத்தை விட்டுவிடுங்கள். இந்தச் சிறந்த மலய பர்வதத்தில் வாலியினால் ஒன்றும் செய்ய முடியாது” என்றார். 

இந்தப் பொருள் பொதிந்த சொற்களை செவியுற்ற சுக்ரீவன் அனுமானை நோக்கி முன்னிலும் மேன்மையான வார்த்தைகளால் “நீண்ட கைகளையும் விசாலமான கண் களையும் உடையவராய் வில்லும் அம்பும் வாளும் தரித்துத் தேவகுமாரர்களைப் போல் விளங்கும் அவ்விரு வீரர்களை யும். கண்டால் யார்தான் அச்சமடையார்? அனுமானே. நீர் வேற்றுருவங்கொண்டு சென்று, அவர்களை இன்னா ரென்று தெரிந்து, அவர்களுடைய முகக்குறி, தோற்றம், பேச்சுக்களை நன்றாய்க் ஈவனித்து, அவர்களுடைய காரியம் யாதென்று அறிவீராக. அவர்கள் நம்மிடத்தில் நல்ல எண்ணம் உடையவர்கள் எனத் தெளிவீராகில் அவர்கள் முன் என்னைப் புகழ்ந்து பேசி அக்காலத்தில் அவர்களு டைய முகக்குறிகள் எவ்வாறிருக்கின்றன வென்றறிந்துக் கொள்ளும். அந்த வில் வீரர்கள் சுத்தாத்துமாக்களாக விருக்கும் பக்ஷத்தில் அவர்கள் இந்தக் காட்டிற்கு என்ன காரியமாக வந்தார்கள் என்று கேட்டறியும். அவர்க ளுடைய எண்ணம் நல்லதோ கெட்டதோவென்று தெரிந்து கொள்ளும்” என்றான். 

அனுமான் சுக்கிரீவனுடைய வசனங்களின் கருத்தை யறிந்து, ரிசியமூக பர்வதத்தினின்று புறப்பட்டு, சத்திய மும் பராக்கிரமுமுடைய ரகுநந்தனர்களிருக்கு மிடத்தை நாடிச் சென்று, தான் இன்னானென்று தெரியாதிருக்க வேண்டி தனது வானர உருவத்தை நீக்கி பிரமசாரி வேடங்கொண்டு அவர்களை அதிக வினயத்துடன் பணிந்து விதிப்படி பூசித்து, அவர்களைப் பார்த்து சொல்லலுற் றான்.- “ராஜரிஷிகளையும் தேவர்களையும் போலத் தேச சுள்ளவர்களாய்த் தோன்றும் நீவிர் அரியதவவிரதம் பூண்டவர்ளாய்க் காணப்படுகிறீர்கள். அங்ஙனமாகவும் இவ்வனத்திலுள்ள மான் கூட்டங்களையும் மற்றுமுள்ள விலங்குகளையும் வெருவச் செய்துகொண்டு நீங்களிங்கு வந்த காரணமென்ன? இராச்சியபாரத்தை வகிக்க யோக் கியர்களாயும் தேவதுல்லியர்களாயுமிருக்கும் நீவிர் இங்கு வரக் காரணம் யாது? ஒருவரை யொருவர் ஒத்துத்தோன் றும் தாமரைபோன்ற கண்களையுடைய மகாவீரர்களான உங்களைப் பார்க்குமிடத்து தேவலோகத்திலிருந்து வந்த வர்கள் போலத் தோன்றுகிறது. நீங்கள் இப்பூவுலகில் சுயேச்சையால் வந்துலாவுகின்ற சந்திர சூரியர்கள் பேர்ல் காணுகின்றீர்கள். மகா வல்லமைசாலியும் தருமாத்து மாவுமாய் விளங்குகின்ற சுக்ரீவன் என்னும் பெயருடைய வானராதிபன் ஒருவன் தமையனால் துரத்தப்பட்டு, அதிக துக்கமுடையவனாய் இவ்வுலகத்தில் அலைந்து திரிகின்றான். நான் அந்த மகாத்துமாவினால் அனுப்பப்பட்டு இங்கு வந்தேன். என் பெயர் அனுமான். அந்த வானரோத்தம னாகிய சுக்ரீவன் உங்களுடைய நட்பை விரும்புகின்றான். நான் அவனுடைய மந்திரி; ஜாதியில் வானரன்; வாயு குமாரன். நினைத்த உருவம் எடுக்க வல்லேனாதல்பற்றி பிரமசாரி வேடம் தரித்துச் சுக்கிரிவனுக்கு இதத்தைச் செய்யும்பொருட்டு ரிசியமூக பர்வதத்தை விட்டு இங்கு வந்தேன்’ என்று சொல்லிவிட்டு மௌனமாயிருந்தனன். 

இந்த வார்த்தையைச் செவியுற்ற சீமானாகிய இராமர் சந்தோஷமடைந்து, பக்கத்திலிருக்கும். லக்ஷ்மணரை நோக்கி “தம்பி, இவர் வானரேந்திரனும் மகாத்துமா வுமான சுக்ரீவனுடைய மந்திரி. அந்தச் சுக்ரீவனுடைய நன்மையைக் கருதி எம்மிடத்து வந்தனர். சுக்ரீவனுடைய மந்திரியாகையால் நட்பை யுண்டாக்கவல்ல சொன்னய முடைய மறுமொழி சொல்லு’ என்று சொன்னார். அது கேட்டு லக்ஷ்மணர் அனுமானைப் பார்த்து “ஓ புலவ, மகாத்துமாவாகிய சுக்ரீவனுடைய குணங்களை நாங்கள் செவ்வனே தெரிந்துள்ளோம். அவ்வானரேந்திரனைப் போய்க் காண்போம். சுக்ரீவனுடைய உத்தரவையனு சரித்து நீர் சொல்லுமாறு செய்கின்றோம்” என்றார். பிறகு அனுமான் அதிக உவப்புற்று வாக்கில் வல்லவ ராகிய இராமரைப் பார்த்து ” ஐய, யாது காரணத்தால் நீர் உம்முடைய தம்பியுடன் பயங்கரமானதும், நானாவித மான மிருகங்கள் சஞ்சரிப்பதும், பிரவேசிக்க கூடாததும், பம்பைக் கரையிலுள்ள மரச்சூழல்களால் அலங்கிருத மானதுமான இவ்வனத்துக்கு வந்தீர்?’ என்று வினாவினான். அதைக் கேட்டவுடன் லக்ஷ்மணர் இராமருடைய கட்டளையால் அவரைப் பற்றி அனுமானுக்குச் சொல்லத் தொடங்கினார்:- “மகா காந்திமானும் தருமத்தில் அபிமானமுள்ளவருமான தசரதர் என்று ஒரு சக்கரவர்த்தி யிருந்தார். இவர் அவருடைய மூத்தகுமாரனான் இராமர்; உத்தம குணங்களுடையவர். இவர் நாட்டைத் துறந்து காட்டில் வசிக்க என்னுடன் இங்கு வந்திருக்கிறார்; இவருடைய பாரியையான சீதை இவரைத் தொடர்ந்து வந்தாள். நான் இவருக்கிளையவன் எல்லாமறிந்தவரும் நன்றி மறவாதவருமான இந்த மகானுபாவனுடைய குணாதிசயங்களால் கவரப்பட்டு இவருக்கு குற்றேவல் செய்வதே விரதமாகக் கொண்டுள்ளேன். என் பெயர் இலக்ஷ்மணன். சுகத்திலிருக்கத் தக்கவரும், சர்வபூதங் களுக்கும் நன்மையை நாடுபவருமான இம்மகானுபாவன் பாக்கியத்தை இழந்து வனத்தில் வசித்து வருகையில் அரக்கன் ஒருவன் உருமாறி வந்து இவருடைய மனைவியை அபகரித்துச் சென்றான். அவ்வாறு இவருடைய மனைவியை அபகரித்துச் சென்ற அரக்கன் இன்னான் என்பது தெரி யாது. இதனால் நாங்கள் கலங்கும்பொழுது, திதியின்குமார னாகிய தனு என்பவன் சாபத்தால் அரக்கனுருக்கொண் டிருந்தானைக் கண்டோம். அவன் எங்களைப் பார்த்து “சுக்ரீவன் என்று ஒரு வானரத் தலைவனிருக்கிறான்.அவன் நுமது மனைவியைக் கவர்ந்து சென்றவனை கண்டறியத் தக்கவன் என்று சொல்லிவிட்டுத் தேஜோரூபந்திரித்து தேவருலகம் சென்றான். இப்பொழுது இராமரும் நானும் சுக்ரீவனைச் சரணடைந்தவர்களா யிருக்கிறோம். இவ்வுல கத்துக்கெல்லாம் வேந்தராயிருந்து அநேக தானங்கள் வழங்கி புகழ்பெற்றிருந்த இராமர் இப்பொழுது சுக்ரீ வனை தனக்கு தலைவனாக்க விரும்புகின்றனர்.இவ்வாறு லக்ஷ்மணர் கண்ணீர் பெருகச் சொல்லி நிற்க, பேசுதலில் வல்ல அனுமான் அவரைப் பார்த்து “இத்தகைய புத்தி விசேஷத்தைப் பெற்று கோபத்தை யடக்கி சாந்த சித்தர்களாய் ஐம்புலன்களை யவித்துள்ள மகா புருஷர்களை அவ்வானரேந்திரனே வந்து பார்க்கவேண்டும். அப்படி யிருக்க நீங்களே அவனைப் பார்க்கச் செல்லுவது அவ னுடைய பாக்கியமன்றோ? அவனும் நாடிழந்து தமைய னாகிய வாலியுடன் பகை கொண்டிருக்கிறான். அவனுடைய மனைவியை வாலி யபகரித்துக்கொண்டு அவனை அல்லல் செய்து வருவதால் அவன் பயந்து வனத்தில் வசிக்கிறான். சூரிய புத்திரனாகிய அந்தச் சுக்ரீவனும் எங்களுடன் சீதை யைத் தேடுவதில் வேண்டிய சகாயம் செய்வான்” என்று இனிய வார்த்தை சொல்லி பிரமசாரி உருவத்தை நீக்கி வானர வடிவுகொண்டு, அவ்விரு வீரர்களையும் தன்னிரு தோள்கள் மேலுமேற்றிக்கொண்டு, வந்த காரியம் பலித்த தென்று உள்ளம் பூரித்து, வானரமன்னவனிருந்த மலையைச் சேர்ந்தான். 

அனுமான் ரிசியமூகபர்வதத்தை விட்டு மலயபர்வதத்துக்கு வந்து வீரர்களான இராமலக்ஷ்மணர்களுடை வரவை வானரத்தலைவனுக்கு அறிவித்து “பெருமானே. இதோ தம்பி லக்ஷ்மணருடன் வந்திருக்கிறாரே இவர் இராமர்: மகா புத்திமான்; உண்மையான பராக்கிரம முடையவர்; இக்ஷ்வாகு குலத்தில் பிறந்தவர் ; தசரத சக்கரவர்த்தியின் குமாரர். இவர் தந்தையின் கட்டளை யைச் சிரமேற்கொண்டு வனவாசம் செய்யவந்தார். வந்த இடத்தில் இவரது மனைவியாரை இராவணன் அபகரித்துச் சென்றான். ஆதலின் இவர் உம்மை சரணமாக அடைந்திருக்கின்றனர். இவ்விரு சகோதரர்களும் உம் முடன் சிநேகம் செய்துகொள்ள விரும்புகின்றார்கள். பூசிக்கத்தக்கவர்களாகிய இவ்விருவரையும் நீர் தக்கபடி மரியாதை செய்து அழைத்துக் கொள்ளும்” என்றனன்.

அனுமா னிவ்வாறு சொல்லக்கேட்டு வானராதி பனாகிய சுக்கிரீவன் மனத்திற் சந்தோஷங்கொண்டு, இராமரிடத்தில் தான் கொண்டிருந்த பயத்தைத் தவிர்த்து, புறனோவியாகூலத்தைப் போக்கி, அழகிய மானிட உருவம் தரித்து, வெகு பிரீதியுடன் இராகவரை நோக்கி “ஐய, நீர் தருமவழி நின்று எல்லாரிடத்திலும் அன்பு பாராட்டும் தன்மையர் என்று உம்முடைய குணங் களனைத்தையும் யதார்த்தமாக மாருதி சொல்லக் கேட் டேன். பிரபுவே, வானரனான என்னோடு நீர் நட்புக் கொள்ள விரும்புவது எனக்கு மிக்க மேன்மையும் பெரிய லாபமும் ஆகின்றது. என்னுடைய சினேகம் உமக்கு வேண்டுமாகில் இதோ யான் நீட்டிய கையை உம்முடைய கையால் பற்றி செய்யவேண்டிய உறுதியைச் செய்து கொள்ளும்’ என்றான். இவ்வண்ணம் சுக்கிரீவன் சொன்ன இனிமையான வார்த்தையை இராமர் கேட்டு களிப்புற்று தமது கையால் வெகு சந்தோஷத்துடன் சுக்கி ரிவன் கையைப் பற்றினார்; அவனை இறுகத் தழுவிக் கொண்டார். இருவரும் தீயை வலம்வந்து, சினேக வுறுதி செய்துகொண்டார்கள். 

பின்பு சுக்கிரீவன் சந்தோஷத்தால் தன்னிரு கண் களும் மலர்ந்து தோன்ற இராமரைப் பார்த்து மதுரமான வார்த்தைகளால் “ஓ ரகுநந்தன, நானிந்தக்காட்டில் என் தேசத்தையும் மனைவியையு மிழந்து, மிக்க பய மடைந்து, எனது சத்துருக்களுக்கு அணுகமுடியாத இம் மலையை யடைந்து பிழைத்திருக்கிறேன். என் தமையன் வாலியினால் பகைப்பட்டு அவனுடைய பயத்தால் மதி கலங்கி இங்கு வசித்துக்கொண்டிருக்கிறேன். இவ்வாறு வாலியை நினைந்து பயங்கொண்டு திரியும் என்னை நீர் அபயப்பிரதானம் செய்து காத்தருளவேண்டும் என் றனன். இராமர் சுக்கிரீவன் சொன்னதைக் கேட்டுப் புன் முறுவல்கொண்டு, அவனை நோக்கி “கபிசிரேஷ்டனே, நட்பினது பயன் உபகாரமியற்றுதல் என நான் அறிவே னாகையால் உம்முடைய மனைவியை யபகரித்த வாலியை வதைக்கிறேன்.” என்று மறுமொழி பகர்ந்தனர். 

27. சுக்கிரீவன் இராமருக்குச் சீதையின் ஆபரணங்களை காண்பித்தல்

மறுபடியும் சுக்கிரீவன் மிகவும் சந்தோஷமடைந்து இரகுகுலத்துக்கு ஆனந்தகரனாய் விளங்கும் இராமரை நோக்கி “இராமா, என் மந்திரிமாருக்குள் முதல்வனான அனுமான் என்ன காரணத்தால் நீங்கள் மனித சஞ்சார மற்ற இக்காட்டை யடைந்திருக்கிறீர்கள் என்பதைச் சொன்னான். துயரத்தை விட்டு விடும். உம்முடைய நாயகியை நான் கொண்டுவருகிறேன். முன் ஒரு நாள் அரக்கனொருவன் ஒரு பெண்பிள்ளையை தூக்கிக் கொண்டு போகக் கண்டேன். அவள் மைதிலியாகத்தானிருக்க வேண்டுமென்று இப்போது அனுமானிக்கின்றேன். அக் கொடிய அரக்கன் அவளைக் கொண்டுபோகையில் அவள் “இராமா லக்ஷ்மணா” என்று கதறிக்கொண்டு போயி னாள். அப்பொழுது அவள் இராவணனுடைய மடியின் மேல் பாம்புபோல் துடித்துக்கொண்டிருந்தாள். எனது மந்திரிமார்கள் நால்வருடன் இம்மலையினுச்சியி லிருந்ததைப் பார்த்து, அவ்வம்மணி தனது மேலா டையையும் மங்களகரமான சில ஆபரணங்களையும் நாங் களிருந்த இடத்தை நோக்கி எறிந்தனள். அவைகளை நான் எடுத்துப் பத்திரமாய் வைத்திருக்கின்றேன். இதோ கொண்டு வருகிறேன். அவைகளைப் பார்வையிட்டு அவை கள் உம்முடைய மனைவியார் அணிந்திருந்தவைதானோ என்பதைத் தெரிந்துகொள்னும்” என்றான். 

சுக்கிரீவன் வெகு அன்புடன் இவ்வண்ணம் சொல்ல இராமர் “நண்பனே, அவைகளைச் சீக்கிரமாய்க் கொண்டு வாரும்; ஏன் தாமதிக்கின்றீர் என்றார். உடனே சுக்கிரீவன் விரைந்து ஒரு பெரிய குகைக்குள் நுழைந்து உத்தரீயத்தையும் அழகான அவ்வாபரணங்களையும் எடுத்துவந்து “இதோ பாரும்” என்று இராமருக்குக் காண்பித்தான். அவ்வாடையையும் ஆபரணங்களையும் இராமர் கையால் எடுத்ததும் அவருடைய முகம் சந்திர பிம்பம் பனியால் மறைக்கப்பட்டதுபோல் கண்ணீரால் மூடப்பட்டது. அவர் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த லக்ஷ்மணரைப் பார்த்து வெகு பரிதாபமாய் புலம்பத் தலைப்பட்டு லக்ஷ்மணா, அரக்கன் தன்னை அபகரித்துச் செல்லும்போது சீதை தன் சரீரத்திலிருந்து கழற்றி எறிந்த உத்தரீயத்தையும் ஆபரணங்களையும் பார்” என்று சொல்ல, லக்ஷ்மணர் அவரைப்பார்த்து “ஐயனே, நான் தினமும் அவருடைய பாதங்களை சேவித்தவனாகை யால் அவர் பாதங்களில் அணிந்திருந்த நூபுரங்களை யறிவேனேயன்றி அவர் கையிலும் காதிலும் அணிந்திருந்த கேயூரங்களையும் குண்டலங்களையும் அறியேன்” என்றார். பின்பு இராமர் சுக்கிரீவனை நோக்கி வெகு தீனமாய் சுக்கிரீவ, அக்கொடிய அரக்கன் என்னுயிர்க்குயிரா யிருக்கும் என் பிராணநாயகியைக் கவர்ந்துபோகையில் நீர் அவனை எவ்விடத்தில் எவ்வண்ணமாய்க் கண்டீர்?” என்றார். 

இவ்வாறு விசனம் விஞ்சியவராய் இராமர் சுக்கிரீவனை நோக்கிச் சொல்ல அவன் தன்னிரு கைகளையும் கூப்பிக் கொண்டு கண்களில் நீர் ததும்ப நாத் தழு தழுத்து அவ ரைப் பார்த்து, “மகா பாபியான அந்த ராக்ஷசனுடைய இருப்பிடம், சாமர்த்தியம், பராக்கிரமம், குலம் முதலிய வற்றுள் ஒன்றையும் நான் அறியேன். ஆயினும் மைதி லியை நீங்கள் அடையும்படியான பிரயத்தினம் செய் கிறேன். இது சத்தியம். ஒ சத்துருசூதன, சோகத்தை விட்டுவிடுங்கள். நீங்கள் உங்களுடைய பெரிய பராக்கிர மத்தைக் காண்பித்து இராவணனை அவன் கூட்டத்தா ருடன் சங்கரித்து சந்தோஷிக்குமாறு நான் தாமதமின்றிச் செய்யக் காத்திருக்கின்றேன். துயருற்றாலும், பொருளை யிழந்தாலும், பயமடைந்தாலும், உயிர்க்கிறுதி நேரும் காலம் வந்தாலும் தீரபுருஷர்கள் தங்களுடைய சுய புத் தியினால் நன்றாய்ப் பரியாலோசனை செய்து தெளிவுறுவார் களேயன்றி தைரியத்தைக் கைவிடமாட்டார்கள். கோழை மனமுள்ள சிறியர்கள் சங்கடம் நேரிடுங்காலத்தில் மன வலி தளர்ந்து, பாரம் மிகுந்த ஓடம் கடலில் தத்தளிப்பது போல் விசனாக்கிராந்தர்களாய் வருந்துவார்கள். உங்க ளிடத்தில் எனக்குள்ள அன்பின் மிகுதியால் இரு கைகளையும் கூப்பி வேண்டுகின்றேன். துக்கத்துக்கு கொஞ்ச மேனும் இடம்கொடாமல் ஆண்மைத்தனத்தை மேற் கொள்ளும். துக்கத்துக் கிடங்கொடுப்பவனுக்கு சுகம் என்பதேயிராது. அவன் எத்துணைப் பலவானாயினும் மெலிந்து வாடுவான். துக்கத்தில் முழுகி யிருப்பவனுடைய பிராணனுக்கே அபாயம் வந்துவிடும்.”

இப்படி இனிதாய்ச் சுக்கிரீவனால் தேற்றப்பட்ட இரா மர் சுக்ரீவனை தழுவிக்கொண்டு “சுக்கிரீவ, இவ்விதமான நண்பன் இத்துக்ககாலத்தில் கிடைப்பது மிகவும் அரிது. இனி நீர் மைதிலியைக் கண்டுபிடிக்கவும், துராத்துமா வாகிய அக்கொடிய இராவணனை வதைக்கவும் முயற்சி செய்யவேண்டும். அன்றியும் நான் உமக்காகச் செய்ய வேண்டிய காரியம் இன்னதெனத் தெளிவாகச் சொல்ல வேண்டும்” என்றார். 

சுக்கிரீவன் இராமருடைய வார்த்தைகளால் சந்தோஷ மடைந்து அவரைப்பார்த்து ‘நான் தமையனால் இடுக்கணெய்தி மனைவியையிழந்து வெகு துக்கமும் அச்ச முங்கொண்டு அதியுன்னதமான இந்த ரிஷியமூகபர்வதத் தில் வந்து வாசம் பண்ணுகிறேன். ஓ இராகவ, நான் வாலியால் நெருக்கப்பட்டு பெரும்பயங் கொண்டவனாய் இருக்கின்றேன். உலகம் யாவையும் காத்தருள்பவரே, இத்தகையேனாகிய என்னைக் காப்பது உமது கடன்” என்றான். இதைக்கேட்டு, தருமத்தையறிந்து அதன் வழி ஒழுகும் இராமர் சுக்கிரீவனை நோக்கி “உபகாரமியற்றுதல் நட்புக்கு லக்ஷணம்; தீங்கிழைத்தல் பகைவர் செயல். ஆதலால் உமது மனைவியை அபகரித்தவனை இன்றே சங் கரித்து விடுகின்றேன்” என்று கூறினார். 

இந்த வார்த்தையைக் கேட்ட சுக்கிரீவன் மறுபடியும் பேசத்தொடங்கி “ஓ இராம, சத்துருசங்காரகனாகியவாலி என்பவன் என் தமையன். பூர்வத்தில் அவனிடத்தில் எங் கள் தந்தை மிகவும் அன்பு பாராட்டிவந்தார். நானும் அவ னிடத்தில் அவ்வாறே அன்பு பாராட்டிவந்தேன். எங்க ளுடைய பிதா இறந்த பிறகு மந்திரிமாரனைவரும் “இவன் மூத்தவன்” என்று சொல்லி, எல்லாரும் சம்மதிக்க. வாலிக்கு முடிசூட்டி அவனை வானரர்களுக்கதிபதியாக்கி னார்கள். தன்னுடைய முன்னோர்களிடமிருந்து தனக்குக் கிடைத்த இராச்சியத்தை வாலி பரிபாலனம் பண்ணிவரு நாளில் நான் அவனுக்கடங்கி அடிமைபோலிருந்தேன். அக்காலத்தில் மகா பராக்கிரமசாலியாகிய துந்துபியின் மூத்தகுமாரனான மாயாவி என்னுமோர் அசுரனிருந்தான். ஒரு பெண் விஷயமாய் அவனுக்கும் வாலிக்கும் பெரும் பகை உண்டாயிற்று. அவன் ஒருநாளிரவில் அனைவரும் அயர்ந்து நித்திரை செய்கையில் கிஷ்கிந்தைக்கு வந்து, கோட்டைவாயிலில் நின்று உரக்கக் கர்ச்சனை செய்து, வாலியைச் சண்டைக் கழைத்தான். தூங்கிக்கொண் டிருந்த என் தமையன் பயங்கரமான அந்தக் கர்ச்சனை யைக் கேட்டு கொஞ்சமும் சகியாமல் எழுந்து வெகு வேக மாய் அவனை எதிர்க்க ஓடினான். அந்தப்புரத்து மாதர் அனைவரும் நானும் அவனை போகவேண்டாமென்று தடுத் தோம். வாலி எங்களனைவரையும் உதறிவிட்டு வெளியே சென்றான். அவனிடத்தில் எனக்கிருந்த அன்பினால் நான். அவனைத் தொடர்ந்து சென்றேன். அவ்வசுரன் என் தமையனையும் என்னையும் தூரத்தில் கண்டவுடன் திகி லடைந்து ஓடத்தலைப்பட்டான். அங்ஙனம் பயந்து ஓடு பவனை நாங்கள் துரத்திச் செல்லும்பொழுது சந்திரன் உதயமாகி வழி நன்றாகத் தெரிந்தது. அவன் ஓடிப் புற் களால் மூடப்பட்டு உட்புக வரிதாய் வெகு ஆழமாயும் பெரிதாயுமிருந்த ஒரு குகைக்குள் நுழைந்தான். நாங்கள் அக்குகையின் துவாரத்தில் சென்று நின்றோம். பகைவன் குகைக்குள் புகுந்ததைக் கண்ட வாலி, மிக்க கோபங் கொண்டு, மெய்பதற, என்னைப்பார்த்து ‘சுக்ரீவா, நீ இவ் விடத்திற்றானே வெகு ஜாக்கிரதையாய் இத்துவாரத் தைக் காத்துக்கொண்டிரு. நான் உள்ளே புகுந்து சத் துருவைச் சங்கரிக்கின்றேன்” என்றான். 

புகுந்தபின் நான் அவ்விடத்திலே ஒரு வருஷகாலம் காத்திருந்தேன்.வாலி திரும்பி வராமையால் நான் அவன் மரித்துவிட்டான் என்று பயந்து மிகவும் துயரமடைந் தேன். வெகுகாலத்தின் பின் அக்குகைக்குள்ளிருந்து இரத்தவெள்ளம் நுரைத்துக்கொண்டு மேலே கிளம்பி வந் தது. அதைக் கண்டதும் நான் அதிக துக்கமடைந்தேன். அசுரர்கள் கர்ச்சித்த சத்தம் என் காதில் விழுந்தது. சண்டைசெய்யச் சென்ற என் தமையனுடைய குரல் கேட்டிலது. இந்த அடையாளங்களால் நான் என் தமை யன் மாண்டான் என்று எண்ணி மலைபோன்ற பெருங் கற்பாறை யொன்றினால் அக்குகையின் துவாரத்தை மூடி விட்டு துக்காக்கிராந்தனாய்க் கிஷ்கிந்தை சென்று சேர்ந் தேன். இந்தச் செய்தியை நான் ஒருவருக்கும் வெளி யிடாது மறைத்து வைத்திருக்கவும் மந்திரிமார்கள் எல்லா வற்றையும் அறிந்து ஒருங்கு கூடி எனக்கு முடிசூட்டி வைத்தார்கள். நான் இராச்சியத்தை வகித்து நீதியாய் ஆண்டுவருகையில் வாலி அந்த அசுரனைக் கொன்றுவிட்டு கிஷ்கிந்தை வந்து சேர்ந்தான். நான் முடிசூட்டி அர சாண்டு வருவதைக் கண்டு என்னைப் பலவாறாக நிந்தித் தான். நான் அவனுக்குத் தக்க மரியாதைகள் செய்து அவனை அடிபணிந்து நின்றேனாகவும் அவன் கோபத்தால் என்னை வாழ்த்தவுமில்லை, அருள் புரியவுமில்லை.” 

“அதன் பின்பு, நான் என் க்ஷேமத்தைக் கருதி, என் மேல் கோபங்கொண்டிருந்த என் சகோதரன் பிரீதியைச் சம்பாதிக்க வெகுவாய் முயன்றேன். ‘ஐயா, நீர் உம்மு டைய சத்துருவைக் கொன்று க்ஷேமமாய்த் திரும்பிவந்த தற்கு சந்தோஷமடைந்தேன். அநாதரக்ஷகனா யிருக்கும் உம்மையன்றி எனக்கு வேறு நாதனில்லை. அநேக சலாகை களையுடைய உதயசந்திரன்போன்ற இக்குடையை உமக்கு நானே பிடிக்கிறேன்; வெண்சாமரை யிரட்டுகிறேன். நான் செய்யும் பணிவிடைகளை நீர் ஏற்றுக்கொள்ளும். மஹாராஜ, நான் வெகு துக்கத்தோடு ஒரு வருஷகாலம் அக்குகையின் துவாரத்தில் காத்திருந்தேன். பின்பு அக் குகையிலிருந்து கிளம்பின உதிரப்பெருக்கைக் கண்டு நடுங்கி சோகத்தால் பரிதபித்து மனம் கலங்கி ஒரு மலை யின் கொடுமுடியைப் பெயர்த்தெடுத்துக் குகையின் வாயை மூடிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுக் கிஷ்கிந்தை வந்து சேர்ந்தேன். நீர் இல்லாத காரணத்தால் நகரத்தார் என்னை அரசனாக்கினார்களேயன்றி மற்றில்லை. என்னி டத்தில் ஒப்புவிக்கப் பட்டிருந்த இந்த இராச்சியத்தை நான் இப்போது உம்மிடத்தில் ஒப்புவித்துவிட்டேன். என்மீது கோபம்கொள்ளவேண்டாம்” என்றிவ்வாறு நான் அன்புடன் சொல்லவும் வாலி என்னைக் கடிந்துபேசி ‘சீ ! நீ கெட்டாய்!’ என்று சொல்லி என்னை யோட்டி விட் டான். இராகவ, என்னை இவ்வாறு அவமானம் செய்து என் மனைவியையும் பிடித்துக்கொண்டான். அவனுக்குப் பயந்து சமுத்திரஞ் சூழ்ந்த காடடர்ந்த இப்பூமி முழுதும் நான் அலைந்து திரிந்து ஒருகாரணத்தால் வாலியால் அணு கொணாத இந்த ரிசியமூக பர்வதத்தில் துக்கத்துடன் பிரவேசித்தேன். வாலிக்கும் எனக்கும் பகை நேர்ந்த விதம் முற்றும் சொல்லிவிட்டேன். இராகவ, நிர்த்தோஷியாகிய எனக்கு இப்பெரிய விசனம் வந்திருக்கிறது” 

இவ்வாறு சுக்கிரீவன் சொல்லத் தருமமறிந்த பெரு விறல் இராமர் புன்னகைகொண்டு சுக்கிரீவனைப் பார்த்து “இலக்குத் தவறாதனவும் நன்றாகத் தீட்டப்பட்டுச் சூரிய னைப்போல் விளங்குவனவுமாகிய எனது பாணங்கள் உம் முடைய மனைவியை அபகரித்துக்கொண்ட அந்தக் கொடிய பாவி வாலியின்மேல் பாயப்போகின்றன. நாம் சீக்கிரம் கிஷ்கிந்தைக்குப் போவோம். நீ முன்பு போய் உன் கொடிய சகோதரனை சண்டைக்கழை” என்றார். 

பின்பு எல்லாரும் கிஷ்கிந்தைக்கு வேகமாய்ச் சென்று அடர்ந்த காட்டின்கணுள்ள மரங்களில் மறைந்து நின்றார் கள். அப்போது சுக்கிரீவன் தனது ஆடையை யிறுக்கிக் கட்டிக்கொண்டு வாலியைப் போரிற் கழைத்து பயங்கர மாகக் கூச்சலிட்டான். தன் சகோதரன் இட்ட கூச்சலை வாலிகேட்டு பெருங் கோபமடைந்து மேற்குத் திக்கி லிருந்து தோன்றும் சூரியனைப்போல் தன்னகரத்தைவிட்டு வெளியே வந்தான். உடனே ஆகாயத்திலே புதனும் அங் காரகனுஞ் சண்டையிடுவதுபோல வாலியும் சுக்கிரீவனும் இடியேறுபோலக் கைகளால் அறைந்து வச்சிராயுதம் போன்ற முட்டிகளால் ஒருவரை யொருவர் குத்தி வெகு பயங்கரமாகப் போர்புரிந்தார்கள். இராமர் வில்லை எடுத் துக்கொண்டு பார்க்க, அவர்கள் இருவரும் உருவத்தில் பேதமின்றி அசுவினி தேவர்களைப் போலக் காணப்பட்ட னர். அதனால் அவர் எவன் வாலி, ஏவன் சுக்ரீவன் என்று தெரிந்துக் கொள்ளாதவராய் தனது பாணத்தைப் பிர யோகியாது நின்றார். அதற்கிடையில் சுக்கிரீவன் வாலிக் குத் தோற்று இராமரைக் காணாது ரிசியமூகபர்வதத்தை நோக்கி ஓடினான். 

அப்போது இராமர் லக்ஷ்மணரோடும் அனுமானோடும் சுக்கிரீவன் இருந்த காட்டிற்குச் சென்றார். அவரைக் கண்டு சுக்கிரீவன் வெட்கமடைந்து பூமியைப் பார்த்துக்கொண்டு பரிதாபமாக “இராகவ, வாலியைச் சண்டைக் கழை என்று என்னை ஏவி, உம்மு டைய பராக்கிரமத்தையும் எனக்குக் காட்டி, என்னைச் சத்துருவினால் அடியுண்ணப்பண்ணி செய்யாத காரியம் செய்தீர்?” என்றான். இவ்வாறு சுக்கிரீவன் சொன்னதை இராமர் கேட்டு மறுமொழி கூறலுற்றார்:-“ஐய சுக்கிரீவ, யாது காரணத்தால் நான் பாணம் தொடுக்கவில்லை யென் பதைக் கேளும். ஆபரணாதிகளாலும் உருவத்தாலும் நடையுடைகளாலும் நீங்களிருவரும் ஒருவரையொருவர் ஒத்திருக்கின்றீர்கள். குரலாலும், தோற்றத்தாலும் பராக்கிரமத்தாலும் உங்களுக்குள் ஒரு பேதமும் நான் காணவில்லை.வானரோத்தம, உங்களுடைய உருவத்தின் ஒற்றுமையினான் மயங்கி என்னுடைய பாணத்தை யான் விடவில்லை. ஆகையால், நீர் போய் மறுபடியும் யுத்தஞ் செய்யும். பயப்படவேண்டாம். போர் புரியும்போது உம்மை நானறிந்துகொள்ளும்படி நீர் உம்முடைய உட வில் ஓரடையாளம் தரித்துக்கொள்ளும்.’ என்றார். உடனே லக்ஷ்மணர் நாகபுஷ்பக்கொடியைப் பிடுங்கி மகாத்துமாவாகிய சுக்கிரீவனுடைய கழுத்தில் போட, கொடியை அணிந்த சுக்கிரீவன் பௌர்ணிமையில் நடு ராத்திரியில் நக்ஷத்திரங்கள் சூழ்ந்து விளங்கும் சந்திரன் போலவும் சந்தியாகாலத்தில் கொக்குக்கள் சூழ்ந்து விளங் கும் மேகம்போலவும் பிரகாசித்தான். பின்பு அவன் மனந்தேறி முகமலர்ச்சியடைந்து இராமருடன் கிஷ்கிந் தைக்குப் போயினான். 

28. வாலிவதை 

அவர்களனைவரும் வேகமாய் கிஷ்கிந்தையை யடைந்து ஓர் அடர்ந்த காட்டில் மரங்களின் பின் மறைந்து நின்றார்கள். அப்போது சுக்கிரீவன் தன் பரிவாரங்கள் சூழ்ந்து நிற்க,நாற்புறமும் சுற்றிப் பார்த்து வெகு கோபங்கொண்டு அண்டமுகடு கிழியும்படி ஆர்த்து, வாலியைச் சண்டைக் கழைத்தான். சுக்கிரீவன் இட்ட பேரிரைச்சலை அந்தப்புரத்திருந்த வாலி கேட்டு பெருங் கோபங்கொண்டு பூமி பிளந்து போமாறு காலெடுத்து வைத்து விரைந்து புறப்பட்டான். அப்போது தாரை மிகவும் பயந்து வாட்டமுற்று வாலியினிடத்தில் அதிக அன்புகாட்டி அவனைக்கட்டித் தழுவிக்கொண்டு அவனைத் தடுப்பாளாயினாள். 

“வீர, ஆற்றுப் பெருக்கைப்போலப் பொங்கி யெழு கின்ற உம்முடைய கோபத்தை விட்டுவிடும். நீர் அதனை இரவிற் புனைந்திருந்த பூமாலையைக் காலையிற்றுயிலெழும் போது களைந்து விடுவதுபோல் நீக்கிவிடும். சுக்கிரீவனு டன் நீர் நாளைக்குப் போர் செய்யலாம். நான் ஏன் உம் மைத் தடுக்கின்றே னென்பதைக் கேளும். முன் உம்மால் அடிபட்டுத் தோற்றோடின சுக்கிரீவன் மீளவும் உம்மை போருக்கழைப்பதைப் பார்த்தால் எனக்குச் சந்தேகமுண் டாகின்றது. அவன் துணை யாருமின்றி வந்திருப்பதாக நான் எண்ணவில்லை. தலைவ, நமது குமாரன் அங்கதன் சொல்ல நான் முன் கேள்விப்பட்டதை இன்று கேளும். அவன் காட்டில் திரிந்தபோது தன்னுடைய சாரர்களால் சுக்கிரீவனைப்பற்றி அறிந்த சமாசாரத்தை என்னிடம் சொல்லினன். அதாவது : அயோத்திமா நகரத்து மன் னன் புதல்வரிருவர், இரமரர் லக்ஷ்மணர் என்னும் பெய ருடையவர்கள், மகாசூரர்கள்,போரில் வெல்லற் கரியர் கள், காட்டில் வந்திருக்கிறார்கள். அவர்கள் சுக்கிரீவ னுக்கு நன்மை செய்யவேண்டி இவ்விடம் வந்திருக்கிறார் கள். உம்முடைய சகோதரன் சுக்கிரீவனுக்கு யுத்தத்தில் துணை இராமர். அவர் ஊழித்தீயை ஒத்தவர்; பகைவரை அழிப்பவர்; சாதுக்களுக்குச் சரணமாயுள்ளவர்; புன் கணுற்றோர்க்குப் புகலிடமானவர். இத்துணைப் பெரிய ஆற்றலுடைய இராமரோடு நீர் முரணுவது யுக்தமன்று. யான் சொல்வதைக் கேளும். இராமரோடு சிநேகம் செய்து சுக்கிரீவனிடத்துள்ள பகையை ஒழித்து அவனுடைய அன்பை மீட்டும் பெறுவது உமக்கு நன்மை யென் றெண்ணுகின்றேன். இக்கணமே சுக்கிரீவனை யழைத்து இளவரசாக்கும். உம்முடைய தம்பியை நீ ரன்றோ லாலனைசெய்யவேண்டும்? உம்முடைய நன்மை யை நான் விரும்பினவள் என்று என்னுடைய எண்ணத் தின்படி உமக்கு நடக்க இஷ்டமானால் நான் வேண்டிக் கொள்வதை நீர் செய்யும்; நான் கூறும் நற்புத்திகளைக் கேளும்.” என்றாள். 

தாரை இவ்வாறு சொல்ல், வாலி அவளைக் கடிந்து “மாதே, என் தம்பியும் சத்துருவுமான சுக்கிரீவ னிவ்வாறு உறுமிக் கர்ச்சிக்க நான் அதைக்கேட்டு எப்படி பொறுத் திருப்பேன்? இராமரால் எனக்குக் கெடுதி நேருமென்று நீ பயப்படவேண்டாம். தரும முணர்ந்தவருமான நன்றி யறிந்தவருமான இராமர் எங்ஙனம் தீமை செய்வார்? நீ ஏன்.என்னைத் தொடர்ந்துவருகின்றனை? மற்றைப் பெண்களோடு திரும்பிச்செல். என்னிடத்தில் நீ அன்பும் ஆசையுமுடையவள் என்பதை முன்னரே காட்டி விட்டாய். நான் அங்கே சென்று சுக்கிரீவனோடு போர் செய்து அவனுடைய செருக்கை அடக்கி விடுகிறேன்.” என்று சொன்னான். பொன்னிறமுடைய சுக்கிரீவன் ஆடையை நன்றாக இறுக்கிக் கட்டிக்கொண்டு பற்றியெரி யும் அக்கினிபோல விளங்கிக் கொண்டிருக்கக் கண்டு. வாலி பெருங் கோபங்கொண்டு, மடியைத் தற்றுக் கொண்டு சுக்கிரீவனுக்கு முந்துற்று கையோக்கி நின்றான். அவர்களிருவரும் விருத்திராசுரனையும் இந்திரனையும் போல ஒருவரையொருவர் முட்டிகளாலும், முழங்கால் களாலும், கால்களாலும், தோள்களாலும் தாக்கி, போர் புரிந்தார்கள். அப்போது சுக்கிரீவன் வரவர இளைத்து அடிக்கடி இராமரிருக்கு மிடத்தைப் பார்த்தான். இவ் வண்ணம் சுக்கிரீவன் சங்கடப்படுவதை மகா பராக்கிரமசாலியான இராமர் பார்த்து வாலியை வதைப்பதற்காக யமனுடைய காலசக்கரத்தைப்போல தன் வில்லை வளைத் தார். அவர் செய்த நாணோசையைக் கேட்டு பறவைகளும் விலங்குகளும் யுகாந்த காலத்திற்போல நடுங்கி நாற்றிசை களிலும் ஓடின. இராமரது வில்லிலிருந்து விடப்பட்ட, அக்கினி போன்றதும், காலனை நிகர்த்ததும், வச்சிரா யுதத்தை ஒத்ததுமாகிய அந்தப் பெரும்பாணம் தனது மார்பிற் பாய, வாலி சாய்ந்து பூமியில் விழுந்தான். 

கீழே வீழ்ந்தும், இந்திரன் கொடுத்த காஞ்சன மாலையை அணிந்திருந்ததினால் அவனுடைய பிராணன் போகவுமில்லை, தேககாந்தி குறையவுமில்லை, பராக்கிரமம் நீங்கவுமில்லை. அம்மாலையால் அவன் அந்தியில் தோன் றும் செவ்வானம்போலப் பிரகாசித்தான். வாலி அவ் வாறு போர்க்களத்தில் அணைந்த அக்கினிபோல விழுந் திருப்பதைக் கண்டு இராமர் லக்ஷ்மணருடன் சென்று அவனைப் பார்த்தார். இராமரையும் மகாபலம் பொருந் திய லக்ஷ்மணரையும் கண்டமாத்திரத்தில் வாலி வணக்க மாயும் தைரியமாயும் அறந்தழுவிய சில வார்த்தைகளைப் பேசுவானாயினான்:- 

“நீவிர் இராஜகுமாரர்; பிரதாபமுடையவர்; கண் ணுக்கினியர்; நல்ல குலத்திலுதித்தவர்: பலாட்டியர்; காந்தியுடையவர்; விர்தம்பூண்டுள்ளவர்; அப்படியிருந் தும் பராமுகனாயிருந்த என்னை எய்து நீர் யாது பயன டைந்தீர்? இவ்வுலகிலனைவரும் உம்மைக் கருணைக்கட ளென்றும் குடிகளுடைய நன்மையில் நாட்டமுள்ளவ ரென்றும் ஐம்புலன்களையு மவித்தவரென்றும் புகழ்ந்து கொண்டாடுகிறார்கள். உம்மைப்பார்த்தால் இராஜ குமாரராகவும் கண்டோரால் விரும்பப்படும் தன்மை நோக்கமுடையராகவும் விரதம் பூண்டவராகவும் காணப் படுகின்றீர். காகுத்த, யாதொரு குற்றமும் செய்யாத என்னை அம்பெய்து கொன்றீர்; இத்தகாத காரியத்தை ஏன் செய்தீரென்று சாதுக்கள் கேட்டால் நீர் யாது சொல்வீர்? என்முன் நின்று போர் செய்திருப்பீராகில் நீர் இந்நேரம் என்னால் கொல்லப்பட்டு யமலோகம் போயிருப்பீர். நீர் முன்னரே என்னிடம் சொல்லியிருந் தீரானால் ஒரே பகலில் மைதிலியை உம்மிடம் கொண்டு வந்து விட்டிருப்பேன். இராவணனை உயிருடனே கழுத் தைப் பிடித்துத்தள்ளி கொணர்ந்திருப்பேனே. நான் சுவர்க்கம் புகுந்ததற்பின் சுக்கிரீவன் அரசாளவேண்டியது நியாயமாயினும், போரில் இவ்வண்ணம் நீர் என்னை வஞ் சகமாக கொன்றது நியாயமன்று. 

வாலி இவ்வாறு கொஞ்சம் கடிந்து தருமத்தோ டொத்த சொற்களைக் கூற,இராமர் அவனை நோக்கி ‘தரு மம், அர்த்தம்,காமம்,லௌகிகம் இவைகளை யறியாமல் சிறு பிள்ளைபோல நீர் ஏன் என்னைக் குற்றங் கூறுகின் றீர்? மலைகளும் காடுகளும் செறிந்த இப்பூமிமுழுவதும் இக்ஷ்வாகு வமிசத்தவரைச் சேர்ந்தது. இதிலுள்ள மிரு கங்களுக்கும் பறவைகளுக்கும் மானுடர்களுக்கும் தண் டனை புரிதற்கும் அனுக்கிரகம் செய்வதற்கும் உரியார் அவர்களே. இப்போது உண்மையைக் கடைப்பிடித்து நேர்மையுடனொழுகும் தருமாத்துமாவும், தருமார்த்த காமங்களை யறிந்தவருமாகிய பரதர் இவ்விராச்சியத்தைப் பரிபாலித்து, நிக்கிரகானுக்கிரகம் செய்துவருகின்றனர். பரதருடைய கட்டளையைச் சிரமேற்கொண்டு நாங்கள் அறநெறி தப்பி நடப்பவர்களை விதிப்படி சிக்ஷித்துவருகின் றோம். நீர் தருமத்தைக் கெடுத்து காமத்தின் வசப்பட்டு அநியாயம் செய்து அரசர்க்குரிய நீதிமார்க்கத்தினின்றும் தவறி யிருக்கின்றீர். அறநெறியிற் செல்லும் தந்தை, தமையன், குரு ஆகிய இம்மூவரும் பிதாக்களாகப் பாவிக் கப்படுவர்; தம்பி, தனயன், சீடன் ஆகிய இம்மூவரும் தரு மம் வழுவாது நிற்பாராயின் புத்திரராகப் பாவிக்கற் பாலர். இவற்றிற்கெல்லாம் தருமமே காரணம். நான் உம்மைக் கொன்றதன் காரணம் புராதனமாயுள்ள தரு மத்தை விட்டுவிட்டு நீர் உம்முடைய தம்பியின் மனைவியை கவர்ந்துகொண்டீர் என்பதே. லக்ஷ்மணனைப்போல சுக் கிரீவர் எனக்கு நண்பராயினார். நான் அவருக்கு அவரது மனைவியையும் நாட்டையும் மீட்டுக்கொடுப்பதாக வான ரர்கள் முன் வாக்களித்தேன். நான் செய்த பிரதிக் கினையை நிறைவேற்றாது வாளாவிருப்பேனோ? தருமசாஸ் திரத்தை யனுசரித்தே இவ்விதமான பெரிய காரணங் களால் நான் உம்மைத் தண்டித்தேன்.நீர் இதை அறிந்து கொள்ளும்.மற்றுமோர் காரணமு முண்டு. அதையும் சொல்லுகிறேன் கேளும். அதைக் கேட்டபின் என்மீது கொள்ளும் கோபத்தை ஒழித்துவிடும். மாமிசத்தை அபேட்சிக்கும் மனிதர்கள் அநேக மிருகங்களை வலைகளா லும், கயிறுகளாலும், பலவிதமான கண்ணிகளாலும், எதிர்ப்பட்டும் மறைந்து நின்றும் பிடிக்கிறார்கள். நீர் தருமம் இன்னதென்றுணராது, கோபத்தால், முன்னோர் களுடைய தருமத்தை அனுசரிக்கும் என்னைத் தூஷிக்கிறீர்” என்று சொன்னார். 

இவ்வாறு இராமர் சொல்லக்கேட்ட வாலி தன்னைப் பலவாறாக நிந்தித்து தன்னிருகைகளையும் கூப்பிக்கொண்டு இராமரை நோக்கி “புருஷோத்தம, நீர் சகல தருமங்களையு மறிந்தவர்; எப்பொழுதும் குடிகளுடைய நன்மையை நாடு பவர் ; இது செய்யத் தகுந்தது, இது செய்யத்தகாதது என் பதை தெளிவாயுணர்ந்தவர். நான் இப்போது என்னைப் பற்றியும், என் மனைவி தாரையைப்பற்றியும் மற்றுமுள்ள பந்துக்களைப்பற்றியும் விசனப்படவில்லை; பொன்னாலாய அங்கதங்களையணிந்த நற்குணங்களையுடைய எனது புத் திரன் அங்கதனைக் குறித்தே விசனப்படுகிறேன். அவன் தாரையினிடத்து எனக்குப் பிறந்த ஒரே குமாரன்; யாது மறியாப் பாலகன்; ஆயினும் மகாபலவான். அவனை நீர் காப்பாற்றவேண்டும். சுக்கிரீவனைப் போலவே அங்கதனையும் பாதுகாக்கவேண்டும். அவர்களைக் கண்டிப்பதும், காப்பாற்றுவதும், காரியா காரியங்களறிந்து நடக்கச் செய்வதும் உம்முடைய பொறுப்பு. அரச,நீர் பரதலக்ஷ் மணர்களிடத்தில் அன்பு பாராட்டுவதுபோலவே சுக்கிரீவ னிடத்திலும் அங்கதனிடத்திலும் அன்பு பாராட்டவேண்டும். குற்றமற்ற தாரையை சுக்கிரீவன் என் குற்றத்திற்காக அவமதிக்காதபடி நீர் செய்யவேண்டும்” என்று சொல்லி நிறுத்தினான். அப்போது இராமர் நல்லறிவு பெற்ற வாலியைச் சாதுக்களால் அங்கீகரிக்கப்படும் தரும தத்வமொட்டின நன்மொழிகளால் சாந்தப்படுத்தினார். 

வாலி இராமர் சொன்ன சொற்களைக் கேட்டுப் பேசா திருந்தான். அவனுடைய மனைவி தாரை இராமர் எய்த பாணத்தால் வாலி மாண்டான் என்று கேள்விப்பட்டு, மெய் நடுங்கி தன் குமாரனுடன் தானிருந்த குகையை விட்டு வெளிப்பட்டாள். சோகத்தால் மெலிந்து புலம்பி, தனது தலையிலும் மார்பிலும் கைகளாலறைந்துக்கொண்டு வாலி விழுந்து கிடக்குமிடத்திற்குச் சென்றாள். இராமர் தமது சிறந்த வில்லை ஊன்றிக்கொண்டு நிற்பதையும் அவ ரைச் சார்ந்து லக்ஷ்மணரும் சுக்கிரீவனும் நிற்பதையும் தாரை கண்டாள். அவர்களை அவள் கடந்துச் சென்று, தனது நாயகனருகில் போய் அவன் மடிந்து கிடப்பதைக் கண்டு, மெய்பதறி, மூர்ச்சையடைந்து பூமியில் விழுந் தாள். தூங்கி விழித்தவள்போல அவள் மறுபடி எழுந்து, காலபாசத்தால் கட்டுண்டிருக்கும் கணவனைப்பார்த்து “ஆரியபுத்திர!” என்று கூவி அழுதாள். 

அப்போது விண்ணிலிருந்து விழுந்த விண்மீன்போலத் தரையில் கிடந்த தாரையை வானரத் தலைவனாகிய அனுமான் கண்டு அவளைத் தேற்றுவானாயினான்:- 

“உயிர்கள் எல்லாம் அறிந்தும் அறியாதும் செய்த நல் வினை தீவினைகளினால் சுக துக்கங்களை அடைகின்றன. நீவிர் உம்மைக் குறித்து துக்கப்படவேண்டியவரா யிருந்து கொண்டு மற்றொருவர் பொருட்டுத் துக்கப்படுவானேன்? நீவிரே ஏழையாயிருந்துகொண்டு மற்றோரேழையின் பொருட்டு பரிதாபப்படுவது யாதுகாரணம் பற்றி? நீரிற் குமிழிபோல நிலையற்ற இந்தயாக்கை காரணமாக யார் பொருட்டு யார் துக்கப்பட வேண்டியவர்களா யிருக்கிறார் கள்? இனி உயிரோடுள்ள உமது குமாரன் அங்கதனைப் பாதுகாத்து மற்று மும்மால் செய்யவேண்டியவைகளைச் செய்தல் உமக்குத் தக்கது. நல்லாய், இங்குள்ள சிரேஷ்டர்களும், இந்த அங்கத குமாரனும், இந்த வானர ராச்சியமும் எல்லாம் இனி உம்முடைமையன்றோ? ஆத லால் இனி சோகத்தையும் தாபத்தையும் விட்டு விடும். உம்முடைய சொல்லின்படி அங்கதன் அரசாளட்டும். அந்திய கருமங்கள் செய்யவேண்டிய காலமிதுவே. அவை கள் செய்தாயினபின் அங்கதனுக்கு முடிசூட்டும். பின்பு உமது புத்திரனைச் சிம்மாசனத்தில் வீற்றிருக்கக் காண உமக்குத் துக்கம் ஆறிவிடும்.”

இந்த வார்த்தைகளை தாரைகேட்டு அருகில் நின்ற அனுமானைப் பார்த்து “அங்கதன் போன்ற நூறு குமாரர் களை உடையவளாயிருத்தலினும் இங்கு மாண்டுகிடக்கும் வீரனாகிய என் நாயகனோடு உயிர்துறப்பதே எனக்கு’ மேலான காரியம். என் நாயகனுக்குச் செய்யவேண்டிய பிரேத கர்மங்களைச் செய்விப்பதற்காவது, அங்கதனுக்கு முடிசூட்டுவதற்காவது யான் உரியளல்லேன். அந்தக் கடமைகளெல்லாம் அங்கதனுக்குச் சிற்றப்பனான சுக்கிரவனைச் சேர்ந்தவை. ஐய அனும, நான் இந்த இராச்சி யத்தை அங்கதனுக்குக் கொடுக்கவேண்டுமென்று நீர் எண்ணுவதை விட்டுவிடும். இந்தக் காரியத்தில் பிள்ளைக்குப் பந்துவாயுள்ளவன் தந்தையே அன்றித் தாயல்லள்.” என்று கூறினாள். 

மரணதசையை யடைந்த வாலி மூர்ச்சை தெளிந்து, கண் விழித்து மெதுவாக மூச்சுவிட்டு சுக்கிரீவனைக் கண்ணூற்று அன்போடு கூறுவானாயினான்: 

“சுக்கிரிவ, நான் உனக்குச் செய்த குற்றங்களை நீ மனத்திற்கொள்ளற்க. அவற்றை யான் அறியாமையா லும் வினைவலியாலும் செய்தேனென்று கொள். ஒரே காலத்தில் நாங்களிருவரும் தமையன் தம்பியாய்க் கூடி யிருந்து இந்த ராச்சியத்தை அனுபவித்தற்கு எங்களுக்கு விதியில்லை என்று எண்ணுகிறேன். அன்றேல் இப்படிச் சம்பவிக்கவேண்டிய காரணமென்ன? என்னை யமபுரஞ் சென்றவனாகப் பாவித்து நீ இன்றைக்கே இந்த ராச்சி யத்தை வகித்துக்கொள். அரச. இந்தத் தசையில் நான் சொல்லுவனவற்றை, அவை செய்தற்கரியனவா யிருப்பி னும், நீ செய்யவேண்டும். தரையில் விழுந்து கண்ணீர் விட்டழுகின்ற அங்கதனைப் பார். அவன் குழந்தை; கஷ்டமறியாதவன்; இதுவரையும் செல்வத்தில் வளர்ந்த வன்; இனிமேலும் இன்பத்தை அனுபவிக்கவேண்டியவன். என் உயிரினு மினிய என் குழந்தையாகிய இவனை, யானிறந்ததன் பின், நீ அவன் குறைகளை முடித்து, உன் வயிற்றிற் பிறந்த குழந்தைபோலப் பாவி. இவ்விளைஞன் ஊக்கமும் வலியுமுடையன்; வீரத்தில் உன்னை யொத்த வன்; அரக்கர்களுடைய போரில் உனக்கு முன்னின்று பேராண்மை செய்யத்தக்கவன். இராமருடைய வேலை களை நீ சிறிதும் பின்னில்லாது செய்யவேண்டும். பின் னிற்பையாயின் உனக்கு பாபம் உண்டாம்; அவர் கோபங் கொண்டு உன்னைத் தண்டிக்கவுங் கூடும். சுக்கிரீவ, என் கழுத்திலுள்ள இந்தத் திவ்விய பொன்மாலையை எடுத்து நீ அணிந்துக்கொள்: இதிலுள்ள லக்ஷ்மி யானிறந்தாற் போய்விடுவள்.” 

சகோதர வாஞ்சையால் வாலி இவ்வாறு கூற, சுக்கி ரீவன் சினந்தணிந்து மகிழ்ச்சிகுன்றி, இராகு கௌவப் பட்ட சந்திரன்போல் ஒளியிழந்து, அவன் சொன்ன சொற் களை அங்கீகரித்து, அவன் கொடுத்த காஞ்சனமாலையைப் பெற்றுக்கொண்டான். வாலி,பொன்மாலையைக் கொடுத்துவிட்டு, உயிர்விட ஆயத்தமாகி, தன் முன்னே நிற்கும் தனது பிள்ளையாகிய அங்கதனைப்பார்த்து ”மகனே, இனி நீ சுக்கிரீவன் சொற்படிநின்று, காலமு மிடமுமறிந்து, சுகமடைதல் காரணமாக உனக்கு நேருந் துக்கங்களைப் பொறுத்து நடந்துக்கொள். என்னிடத்தில் வளர்ந்ததுபோல நீ இன்னும் இருப்பையாகில்,சுக்கிரீவன் உன்னை மதிக்கமாட்டான். நீ ஒருபோதும் சுக்கிரீவனு டைய பகைவர்களோடு சேராதே. அவனுடைய நல்வாழ் விலே எப்போதுங் கருத்துடையவனாய், அவனுக்கடங்கி நடந்துகொள். நீ யாருடனாவது அதிக நண்பு பாராட்ட வும்,வேண்டாம், நண்பு பாராட்டாது நடக்கவும் வேண் டாம்; இவை யிரண்டும் மிக்க தீமை பயக்கும்; ஆதலால் நடுத்தரமாக நடந்துகொள்” என்று சொல்லி, அம்பு தைத்த வருத்தம் மேலிட்டமையால் கண்களைப்புரட்டி வாயைத்திறந்து உயிரை விட்டான். 

அதன்பின் இராமர் துக்கமடைந்த லக்ஷ்மணரோடு, சுக்கிரீவனுக்கும் தாரைக்கும் அங்கதனுக்கும் தேற்றறிவு கூறுவாராயினார்:- 

”அழுவதும் துக்கப்படுவதும் இறந்துபோன வாலிக்கு நன்மை பயப்பனவாகா. ஆதலால் இனி அவனுக்குச் செய்யவேண்டிய அந்திய கர்மங்களைச் செய்வது தக்கது. உலக வழக்கத்தோடொட்டி நீங்கள் மிகவும் கண்ணீர் பெருக்கி அழுதுவிட்டீர்கள். இனிச் செய்யக்கடவ கிர்த் தியங்களைச் செய்யாது பாணிப்பு தக்கதன்று. உலகத்தில் காலமே முதற்காரணம்; காலமே கர்ம சாதனம்; காலமே எல்லாவுயிர்களின் தொழிலுக்குங் காரணம்.” இவ்வாறு இராமர் கூறி லக்ஷ்மணரைப் பார்த்து “விரைவில் வாலியி னுடைய பிரேதகாரியங்களைச் செய்வி’ என்று சொன்னார். 

அதன்பின் சுக்கிரீவன் வாலியின் அந்தியகர்மங்களைச் செய்வதற்குக் கட்டளை யிடுவானாய் “வானரர்கள் விலையுயர்ந்த மணிகளை இறைத்துக்கொண்டு முன்னே போகட் டும்; அதன்பின் பிரேதயானம் செல்லட்டும்” என்றான். 

அதைக்கேட்டு வானரத் தலைவர்களும் மற்ற வானரர் களும் அரசனையிழந்த துக்கத்தால் அங்கதனைக்கட்டி அழுதுகொண்டு. சென்றார்கள். நாயகனையிழந்த தாரை முதலிய வானரப் பெண்கள் “வீர, வீர” என்று சொல் லிப் பரிதபித்தார்கள். பின்பு அங்கதன் சிதைக்கு நெருப்பு வைத்து அதனைச் சுற்றிவந்து நீர்க்கடன் செய்வதற்காக ஒரு நதியின் புண்ணிய தீர்த்தக்கரையில் போய்ச் சேர்ந் தான். அங்கே சுக்கிரீவனும் தாரையும் மற்றை வானரர் களும் அங்கதனை முன்னிட்டுக்கொண்டு தர்ப்பணஞ் செய் தார்கள். பெருவிறலினையுடைய இராமர் சுக்கிரிவன் போல் தாமும் துக்கமடைந்து வாலிக்குச் செய்யவேண்டிய நீர்க்கடன் முதலியவற்றைச் செய்வித்தார். 

29. சுக்கிரீவன் பட்டாபிஷேகம் 

அப்போது துக்கமுற்று ஈரவாடையோடிருந்த சுக் கிரீவனை வானரர்களும் மகாமாத்திரர்களும் வந்து சூழ்ந் தார்கள். அவர்கள் எல்லாரும் சோர்வில்லாத இராமரை அடைந்து கைகுவித்துக்கொண்டு பிரமதேவன் முன்நிற் கும் முனிவர்களைப்போல நின்றார்கள். அப்போது அனு மான் கை குவித்துக்கொண்டு இராமரை நோக்கி “ஐய, சுக்கிரீவன் உம்முடைய உதவியினால் பெறுதற்கரிய இந் தப் பெரியவானர ராச்சியத்தைப் பெற்றுக்கொண்டான். இனி உம்முடைய ஆஞ்ஞையின்படி அவன் இந்த நகரத் துட் புகுந்து அரசாட்சி செய்யவேண்டும். முறைப்படி அபிஷேகம் செய்யப்பெற்று அவன் உம்மை “மணிகளும் மாலைகளும் கந்தங்களும் ஓஷதிகளும் கொண்டு பூசை செய்யவேண்டும். ஆதலால் நீர் இந்த அழகிய மலைநகருக் குச் சென்று சுக்கிரீவனுக்கு பட்டாபிஷேகம்செய்து வான ரர்களை மகிழ்வித்தருளும்” என்று கேட்டான். அதற்குத் தரமாக இராமர் அனுமானை நோக்கி “அனுமானே, என் தந்தையாரின் கட்டளைப் பிரகாரம் நான் இந்தப் பதினான்கு வருஷங்கள் கழியுமளவும் ஒரு நகரத்திற்குள்ளா வது நாட்டிற்குள்ளாவது புகமாட்டேன். நீங்கள் எல்லாரும் சுக்கிரீவனை நகரத்துக் கழைத்துக்கொண்டுபோய் விரைவில் அபிஷேகம் பண்ணிவையுங்கள்’ என்றார். பின்பு அவர் சுக்கிரீவனை நோக்கி “நீர் உலக வழக்கத்தை அங்கதனை இளவரச அறிந்தவர். இந்த வீரமுடைய னாக்கி வையும். இது மழைக்காலமான நான்குமாதங்களுள் முதலாகிய ஆவணி மாதம். இப்போது சீதையைத் தேடு வதற்கு யாதொன்றுஞ் செய்துகொள்ள முடியாது. ஆதலால் நீர் உமது நகருக்குப்போம். நான் லக்ஷ்மணனோடு இந்த மலையில் இருக்கிறேன். கார்த்திகை மாதம் பிறந்த வுடன் இராவணனை கொல்வதற்கு நீர் முயற்சி செய்ய வேண்டும். ஆதலால் நீர் உமது நகரம்போய்ச்சேர்ந்து அபி ஷேகம் பண்ணப்பெற்று உமதன்பர்களை மகிழச்செய்யும்” என்றார். 

இராமரால் இவ்வாறு ஆஞ்ஞாபிக்கப்பட்டு வானரர் தலைவனான சுக்கிரீவன் வாலியால் கட்டப்பட்ட அழகிய கிஷ்கிந்தைக்குப் போயினான். அவனைச் சூழ்ந்து கொண்டு பல்லாயிரம் வானரர்கள் அந்நகரத்துள் புகுந்து சுக்கிர வனை, ஆயிரங் கண்ணனாகிய இந்திரனைத் தேவர்கள் அபி ஷேகம் செய்து வைத்தாற்போல, பட்டாபிஷேகம் செய்து வைத்தார்கள். 

வானரர்களெல்லோரும் கிஷ்கிந்தைக்குப் போய்ச் சுக்கிரீவனுக்கு பட்டாபிஷேகஞ்செய்ய, இராமர், ல மணரோடு பிரஸ்ரவணமலையை யடைந்தார். அந்த மலைச் சிகரத்திலுள்ள ஓரகன்ற பெரிய குகையை அவர் தமக் கிருப்பிடமாக செய்துக் கொண்டு லக்ஷ்மணரை நோக்கி “இந்த மலைக்குகை அழகாயும், விசாலமாயும் நல்ல காற் றுடையதாயுமிருக்கின்றது; இதில் நாங்கள் இந்த மழைக்காலத்தைக் கழிப்போம். இந்த மலைக்கோடு உன்னதமான தாயும், அழகுள்ளதாயும் கறுப்பும் வெளுப்பும் சிவப்பு மான கற்களையுடையதாயும்,அநேக தாதுக்கள் நிறைந்த தாயும், குகைகளும் அருவிகளுமுடையதாயுமிருக்கின்றது. திரிகூட பர்வதத்திலே பெருகும் கங்கையைப்போல குகைக்கு முன்புறத்தில் தெளிந்த நீருடைய நதியொன்று கிழக்கு முகமாக ஓடுகின்றது பார். ரிஷி கூட்டங்கள் வந்து தங்கப்பெற்று, இந்த அழகிய நதி வெகு ரமணியமா யிருக்கின்றது. அந்தச் சந்தன மரங்களின் பத்தி நிரல்பட வைத்தாற்போல காணப்படுகின்றன பார். இவ்விடத் திற்குச் சுக்கிரீவனுடைய அழகிய நகரமாகிய காடு சூழ்ந்த கிஷ்கிந்தை மிகவுந்தூரமன்று; அங்கே மிருதங்கத் தொனி யோடு கீத வாத்தியங்களினொலியும் கேட்கின்றது” என்று சொல்லிவிட்டு இராமர் லக்ஷ்மணரோடு வசிக்கலானார். 

உயிரினுமினிய தம் மனைவியைப் பறிகொடுத்து வருந்திய இராமருக்கு அங்கு வசித்ததனால் சிறிதும் இன்ப முண்டாகவில்லை. இந்தத் துன்பத்தினால் கண்ணீர் விட்டு அறிவிழந்து எப்போதும் துக்கத்திலாழ்ந்து கிடந்த இராமரை ஒத்த துன்பத்தையுடைய லக்ஷ்மணர் தேற்று வாராய் “வீர, நீர் துன்புற்றதுபோதும்; நீர் துன்பமடை தற்கருகரல்லர். துன்பப்படுபவர்கள் எல்லா வகையாலும் முயற்சி இல்லாதவராவார்கள். இது நீரறிந்ததே. இப்போது கார்காலம் வந்துவிட்டது; இனிக்கூதிர்க்காலம் வருமளவும் பொறுத்திரும்; பின் இராவணனை அவன் சுற்றத்தோடும் இராச்சியத்தோடும் அழிக்கலாம். நீறு பூத்த நெருப்பை நெய்யாகுதியினால் சுவாலிக்கச் செய்வது போல் தூங்கியிருக்கின்ற உமது வீரியத்தை நானெழுப்பி விடுகிறேன்’ என்று கூறினார். லக்ஷ்மணர் கூறிய இந்த இதமான வார்த்தையைக் கேட்டு இராமர் அவரை அன்போடு நோக்கி “லக்ஷ்மண, அன்பும் நேயமும் இதமும் உண்மையும் ஆண்மையுமுடையவர்கள் சொல்வதை நீயும் சொல்லினை.சர்வ காரியங்களையும் கெடுக்கின்ற இந்தத் துன்பத்தை ஒழித்துவிட்டு ஆண்மை செய்வதில் தடைப் படுதலில்லாத ஊக்கத்தை யான் பூண்டுக்கொள்ளுகிறேன். உன்னுடைய சொற்படி நான் சரற்காலத்தின் வரவையும் நதிகளின் தெளிவையும் சுக்கிரிவனுடைய தயவையும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். வீரர்கள் ஓருபகாரம் செய்யப் பெறுவார்களாயின் அதற்குப் பிரத்தியுபகாரம் செய்யாதுபோகார்கள். பிரத்தியுபகாரம் செய்யாதவர்கள் பெரியோர்களுக்கு மனவருத்தத்தை உண்டாக்குவார்கள்” என்று சொன்னார். 

30. சுக்கிரீவன் சீதையைத்தேட வானரர்களை அனுப்புதல் 

மழைக் காலம் கழிந்தது. ஆகாயம் நிர்மலமாய் மேகங்களும் மின்னலும் நீங்கி விளங்கிற்று.பொருள்களை நிச்சயஞ்செய்தவனும், பொருள் நூல்களை அறிந்தவனும், கால தர்மங்களை நன்றாயுணர்ந்தவனுமாகிய அனுமான் வானர ராஜனை யடைந்து கூறலுற்றான்:- 

“அரச, உமக்கு இராச்சியமும் கீர்த்தியும் கிட்டி விட்டன; குலமுறையாக வந்த செல்வமும் வளருகின்றது; நண்பினருடைய கூட்டுறவே எஞ்சி நிற்கின்றது; அதை இனி நீர் செய்துகொள்ள வேண்டும். காலத்தை யறிந்து நண்பர்களிடத்தில் நன்றாய் நடப்பவனுக்கு இராச்சியமும் கீர்த்தியும் பிரதாபமும் பெருகும்.’நாம் இப்போது நமது மித்திரராகிய இராமருக்குச் செய்ய வேண்டிய காரியம் வைதேகியிருக்குமிடத்தைத் தேடுதல். செய்யக் கடவ காரி யத்தை விரைவிற் செய்ய வேண்டுமென்ற விருப்பமுடைய வராயின் அது செய்தற்கு வானரத்தலைவர்களைக் கட்டளை யிட்டருளும்.” 

இந்த வசனத்தைக் கேட்டு சுக்கிரீவன் நல்ல புத்தி அடைந்து, எல்லாத் திக்குகளிலுமுள்ள சகல. சைனியங் களையும் சேர்க்கும்படிக்கு தன்னால் நன்கு மதிக்கப்பட்டவனும் எப்போதும் சுறுசுறுப்புள்ளவனுமான நீலனை நோக்கி “எனது சேனைகளெல்லாம் தங்கள் தலைவர்களோடு தடை யின்றி இங்கே வரும்படி செய். என்னுடைய கட்டளை யினால் திகாந்தரங்களிலுள்ள தலைவர்களும் விரைவாகச் செல்லுபவர்களும் சீக்கிரமாக வந்து சேரட்டும். அங்ஙனம் வந்து சேர்ந்த பின் நீயே சென்று அவர்களைப் பார். பதி னைந்து நாளிற்குள் வராதவர்களுக்குப் பிராண தண்டனை செய்; இதில் விசாரம் வேண்டியதில்லை” என கட்டளையிட்டான். 

வானம் மேகங்கள் நீங்கி வெளியாக, காமத்தினாலும் சோகத்தினாலும் வருந்திய இராமர் மழைக் காலத்திர வினால் நொந்து, ஆகாயம் வெண்மையடைந்ததையும், சந்திர மண்டலம் நிர்மலமாயிருப்பதையும், சரற்காலத் திரவு நிலவுபரந்து விளங்குவதையும் கண்டு, வைதேகியை பற்றிச் சிந்திப்பாராயினார். பின்னர் இராமர் மைதிலியை நினைத்து முகம் வாடி லக்ஷ்மணரை நோக்கிச் சொல்லலுற் றார்:-“ஆயிரங்கண்ணன் பூமியை மழையினால் குளிரச் செய்து பயிர்களை வளர்த்துத் தமது காரியத்தை முடித்துக் கொண்டு போய்விட்டான். மேகங்கள் மிகப் பயங்கரமாக முழங்கி, மலைகளுக்கும் மரங்களுக்கும் முன் சென்று. நீரைப் பொழிந்துவிட்டு, இளைப்பாறுகின்றன. அரசர்கள் யுத்தத்திற்காயத்தம் செய்தற்கேற்றகாலம் வந்துவிட்டது. சுக்கிரீவன் அதற்கேற்ற முயற்சி ஒன்றும் செய்யக் காண வில்லை. சீதையைக் காணாது சோகமுற்றிருக்கும் எனக்கு இந்த மழைக் காலத்து நான்கு மாசங்களும் நூறு வருஷங் கள் போலக் கழிந்தன. பெரு விறலாய், நீ சுக்கிரீவனிடம் போய்ப் பார்த்து வா” என்றார். 

அப்போது பூதூளி எழுந்து ஆகாயத்தின் கண்ணே சூரியனுடைய தீவிரமான உஷ்ண கிரணத்தை மறைத் தது. பூதூளி மிகுதியால் திசைகள் மூடுண்டன. பூமி, மலை, காடு, பெருங்காடு முதலியவெல்லாம் நடுங்கின. அதன்பின் மேருமலை போன்றவர்களும் கூரிய பற்களை யுடையவர்களும் மகாபலமுள்ளவர்களுமான கணக்கிறந்த வானரர்களும் வானரத் தலைவர்களும் பூமியும் மலைகளும் காடுகளும் மறையும்படியாக வந்தார்கள். சுக்கிரீவன் கை கூப்பிக்கொண்டு இராமருக்கு வானரர்களெல்லாரும் வந்ததை அறிவித்து விட்டு “எனது தேயத்திலுள்ள இந்திரன் போன்ற வலி படைத்த நினைத்த ரூபமெடுக்க வல்ல வானரர்களெல்லாரும் வந்துவிட்டார்கள். ஆண்மை யிற் சிறந்தவர்கள்; காரியத்தில் தேர்ந்தவர்கள்; தரை யிலும் நீரிலும் சஞ்சரிப்பவர்கள்; மலைகளில் வசிப்பவர்கள். உம்மிடத்தில் வந்துள்ள உமது சைனியத்திற்கு நீரே கட்டளை செய்ய வேண்டும். இவர்கள் செய்ய வேண்டிய காரியம் எனக்கு நன்றாய்த் தெரியுமாயினும் நீரே முறைப் படி அதைக்கட்டளையிடல்வேண்டும்” என்று சொன்னான்.

இவ்வாறு கூறிய சுக்கிரீவனை இராமர் தன் கை களால் கட்டித்தழுவி “பேரறிவாள், நமது வைதேகி உயிரோடிருக்கிறாளா இல்லையா என்பதையும் இராவணன் எவ்விடத்தில் வசிக்கின்றான் என்பதையும் அறிய வேண்டும். இவை அறிந்தபின் நாம் செய்யத்தக்கதை நானும் நீருமாகச் செய்வோம். இந்தச் சேனையை ஏவுதற்கு உரியவன் நானுமன்று, லக்ஷ்மணனுமன்று; அது செய்யவேண்டியவர் நீரே. என்னுடைய காரியத்தில் செய்யவேண்டியதிதுவென்பதை நீரே கட்டளையிடும்.” என்று சொன்னார். 

இராமர் இவ்வாறு கூறினவுடன் சுக்கிரீவன் அவருக் கும் புத்திமானாகிய லக்ஷ்மணருக்கும் முன்னிலையில் மலை போன்றவனும் இடிபோன்ற குரலுடையவனுமாகிய விந்தனென்னும் வானரத்தலைவனை நோக்கி “நூறாயிரம் வானரர்கள் சூழ, மலைகளும் சோலைகளும் காடுகளுமடர்ந்த கீழ்த்திசைக்குச் செல். அங்கே மலைகளிலும் வனங்களிலும் நதிகளிலும் சீதையையும் இராவணனுடைய இருப்பிடத்தையும் தேடு. அழகிய பாகீரதிகதியிலும், சரயு, கெளசிகி, காளிந்தி, யமுனைகளிலும், யமுனா நதியின் கரையிலுள்ள பெரிய மலைகளிலும், சரஸ்வதி, சிந்து நதிகளிலும், மாணிக்கம் போன்ற நீரையுடைய சோனை நதியிலும், மலை களும் காடுகளுஞ் செறிந்த மகி,காளமகி நாடுகளிலும், பிரம்மமாலம், விதேகம், மாளவம், காசி, கோசலம், மகதம், புண்டரம், வங்கம் முதலிய நாடுகளிலும், தசரதன் மருகி யும் இராமர் மனைவியுமாகிய சீதையைத் தேடுங்கள். நீங்கள் உதய பர்வதத்தை அடைந்து வைதேகியையும் இராவணனுடைய இருப்பிடத்தையுங்கண்டு ஒரு மாதத் திற்குள் திரும்பிவிடவேண்டும். ஒரு மாதத்தின்மேல் நிற்கப்படாது; நின்றால் என்னால் கொல்லப்படுவீர்கள்; மைதிலியைக்கண்டு உங்கள் காரியத்தை முடித்துக் கொண்டு திரும்பிவிடுங்கள்.” என்று கூறினான். 

அந்தப்பெரிய வானர சேனையை அனுப்பிவிட்டு குறிக்கப்பட்ட வானரர்கள் சிலரைச் சுக்கிரீவன் தென் றிசைக் கேவுவானாயினான். பேராற்றலுள்ள அங்கதனைத் தலைவனாகக் கொண்ட, வேகமும் ஆண்மையுமுள்ள, அக்கினி குமாரனான நீலன், அனுமான், பிரமதேவன் புத்திரனாகிய பெருவலிவுடைய ஜாம்பவன், முதலிய வீரர் களைத்தேசங்களையறிந்த அரிகுலத்தலைவன் தெற்குத் திக் குக்குப் போங்களென்று கட்டளையிட்டான். அவர்களுக்கு முன்னே போகும்படி தாமதமின்றிச் செல்லவல்ல பெருஞ் சேனையையும் ஏவினான். பின்பு அவன் தென்றிசையில் எந்த இடம் போதற்கரிதா யிருக்குமென்பதைப்பற்றி அவர்களை நோக்கிச் சொல்லத் தொடங்கி ” ‘ஆயிரஞ் சிகரங்களையுடைய விந்தமலையையும், பெரும்பாம்புகள் தங்குவதும் கடத்தற் கரியதுமாகிய நருமதா நதியையும், அழகிய கோதாவரியையும், பெரிய கிருஷ்ணவேணி நதியையும், பெரும் பகுதிகளையுடைய வரதா நதியையும், நீங்கள் காண்பீர்கள். விதர்ப்பம், ரிஷிகம், மாகீஷம், வங்கம், கலிங்கம், கௌசிகம்,மலைகளும், நதிகளும், குகை களுமுடைய தண்டகாரணியம், கோதாவரி நதி முதலிய வற்றையும் காண்பீர்கள். அவ்வாறே ஆந்திரம், புண் டரம், சோளம், பாண்டியம், கேரளமுதலிய நாடுகளையும் காண்பீர்கள். பின்பு தாதுக்கள் நிறைந்ததும்; விசித்திர மான சிகரங்களையுடையதும், பல வர்ணமான பூக்கள் நிறைந்த சோலைகளையுடையதும், சந்தன வனங்கள் செறிந்ததுமான பெரிய அயோமுக மலையைத் தேடுங்கள். அதன்பின் தெளிந்த நீரையுடைய அழகிய காவேரி நதியை அங்கே காண்பீர்கள். அந்த மலயமலையின் சிகரத் திலே ஆதித்தனுக்குச் சமமான மிகுந்த ஒளியையுடைய முனிசிரேஷ்டரான அகத்தியரைக் காண்பீர்கள். பின்பு அம்மகரிஷியிடத்தில் விடைபெற்றுக்கொண்டு முதலைகள் நிரம்பிய பெரிய தாமிரபருணி நதியைத்தாண்டுங்கள். நான் கூறியவைக ளெல்லாவற்றையும் தேடி மற்றுள்ள வைகளையும் பார்த்துவிட்டு வைதேகி சென்ற வழியை யறிந்து திரும்பிவரக் கடவீர்கள். ஒரு மாதத்திற்குள் திரும்பி வந்து நான் சீதையைக் கண்டேனென்று முதலிற் சொல்லுபவன் எனது செல்வத்துக்கொப்பான செல்வத் தையடைந்து சுகமனுபவிப்பான்’ என்றான். 

சுக்கிரீவன் அந்த வானரர்களைத் தக்ஷிணதிசைக் கனுப்பிவிட்டு மேகம்போன்ற சுஷேசணனை நோக்கினான். அவன் தாரையின் பிதாவாகிய அச்சந்தரும் ஆண்மையினை யுடைய தன் மாமனைக்கிட்டிக் கைகூப்பிப்பணிந்து, மேற் குத்திசைக்கேவுபவனாய் “வானரவீரர்காள், சுஷேணர் முதலாக நீவிர் இருநூறாயிரவர்சென்று வைதேகியைத் தேடுங்கள். சௌராஷ்டிரம், வாகிலிகம், சூரதேசம்,பீம் தேகம் முதலிய தேசங்களையும் மணற்காடுகளையும், உயர்ந்த சிகரங்களையுடைய மலைகளையும், மலைக்கூட்டங்க ளாற் சூழப்பட்ட துர்க்கங்களையும் தேடினபின், சிறிது தூரம் மேற்கே சென்றால், திமிமீனும் முதலையும் நிறைந்த சமுத்திரத்தைக் காண்பீர்கள். சிந்துநதி போய் கடலிற் சங்கமமாகின்ற இடத்தில் பெரிய மரங்களடர்ந்த நூறு கொடுமுடிகளையுடைய பெரிய ஹேமகிரியென்றொரு மலை யிருக்கின்றது. அந்த அழகியமலைப்பக்கத்தில் சிங்கை என் னும் பறவைகளிருக்கின்றன. அவைகள் திமிமீனையும் யானைகளையும் தங்கள்கூடுகளிற் கொண்டுபோய்வைக்கும். அங்கேயுள்ள ஆறுகள் குளங்கள் துர்க்கங்களெல்லாவற் றிலும் சீதையையும் இராவணனையுந் தேடவேண்டும். வைதேகியையும் இராவணனுடைய இருப்பிடத்தையுங் கண்டு ஒரு மாதத்திற்குள் திரும்பிவிடுங்கள். ஒரு மாதத் தின்மேல் நிற்கப்படாது; நின்றால் நீங்கள் உயிரிழப்பீர் கள்” என்றான். 

வானரோத்தமனாகிய சுக்கிரீவன் ஏறு போன்ற சத வலி என்னும் வீரனை நோக்கி “உன்னைப்போலும் நூறா யிரம் வானரர்கள் உன்னைச் குழ்ந்துவர, நீ யமனுடைய குமாரனோடும் உனது மந்திரிகளோடும் இமய மலையாகிய காதணியையுடைய வடதிசைக்குச் சென்று குற்றமில்லாத இராமருடைய பத்தினியை எவ்விடத்திலும் தேடவேண் டும். புத்தியும் ஆண்மையு முடைய நீங்கள் நதிகளையும், மலைகளின் நடுக்களையும்,வனத்திலுள்ள துர்க்கங்களையும் தேடுங்கள். சீனம், பரமசீனம், நீகாரம் முதலிய நாடு களையெல்லாம் பெயர்த்தும் பெயர்த்தும் தேடி இமயமலை யையும் அவ்வாறு தேடுங்கள். அங்குள்ள வெட்பாலை வனம், பத்மகவனம் தேவதாருவனம் என்னும் வனங்க ளொவ்வொன்றிலும் இராவணனையும் வைதேகியையுந் தேடுங்கள். யான் கூறிய இடங்களையும் யான் கூறா தொழிந்த மற்றை இடங்களையும் நீங்கள் தேடவேண்டும். காற்றும் நெருப்பும் போன்றவர்களே, நீங்கள் வைதேகி யைக் கண்டு பிடிப்பீர்களாயின் இராமருக்கும் எனக்கும் பிரியமாகிய செய்கையைச் செய்தவர்களாவீர்கள்’ என்று சொன்னான். 

வானர வேந்தனாகிய சுக்கிரீவன் அநுமானே சீதை யைத் தேடுங்காரியத்தைச் செய்து முடிக்கவல்லனென முழுதும் நம்பி, அவனை நோக்கி “அரிபுங்கவ, பூமியிலா வது, ஆகாயத்திலாவது, அம்பரத்திலாவது, தேவருலகத் திலாவது, நீரிலாவது, உனது செலவிற் கொருதடை யிருப் பதாய் நான் காணவில்லை. அசுரலோகம், கந்தருவலோகம் நாகலோகம், நரலோகம், தேவலோக முதலிய எல்லா லோகங்களையும், சமுத்திரங்களையும் மலைகளையும் நீ நன்றாயறிவாய். வீர, செலவாலும் வேகத்தாலும் ஆண் மையாலும் விரைவாலும் நீ உனது பிதாவை ஒப்பாய். நீ ஆகையால் சீதையை அடையும் வழியை நீதான் தேட வேண்டும்.” என்று கூறினான். அதுகேட்டு இராமர் தமது காரியம் அனுமானாலேயே கைகூடவேண்டுமென்று அறிந்து, காரியம் கைகூடியவராகத் தம்மை மதித்து, இந்திரியங்களும் மனமுங் களிப்படைந்து தமது பெயர் பொறிக்கப்பட்ட மோதிரத்தை ஜானகிக்கு அறிகுறியாக அனுமானிடத்தில் கொடுத்து வானரோத்தம, இந்த அடையாளத்தினாலே ஜானகி உன்னை என்னிடத்தி லிருந்து வந்தவனாகத் தடையின்றி அறிந்துகொள்வாள். உன்னுடைய தொழிலாற்றலும் வலியும் சுக்கிரீவன் உன் னிடத்து வைத்த நம்பிக்கையும் எனக்குக் காரியம் சித்தி யாகுமென்று சொல்லுகின்றன” என்று கூறினார். 

சீதையைத் தேடும்படி சுக்கிரீவனால் அனுப்பப்பட்ட வானர வீரர்கள் அவன் சொன்னவாறு எல்லாத் திசை களுக்கும் விரைந்து சென்றார்கள். அவர்கள் குளங்கள், சிற்றாறுகள், கரிகாடுகள், மலைகள், வெளிகள், நகரங் கள், கடத்தற்கரிய பேராறுகள், மலைகள், முதலிய யாவற் றையுந் தேடினார்கள். மகாபலமுடைய விநதன் தனக் கிட்ட கட்டளையின்படி கிழக்குத் திக்கைத்தேடி சீதை யைக் காணாதவனாய் தன் மந்திரிளோடு திரும்பிவந்தான். வீரனாகிய சதவலி வடக்குத்திசை முழுதுந் தேடிவிட்டு தனது சேனைகளுடன் திரும்பிவந்தான். சுஷேசணன்வான ரர்களோடு மேற்குத் திசையைத் தேடிவிட்டு ஒரு மாச மானவுடன் சுக்கிரிவன் முன் வந்து சேர்ந்தான். அவர்க ளெல்லாரும் பிரஸ்ரவ்ண மலையின்மேல் இராமரோடு வீற் றிருந்த சுக்கிரீவனைக் கிட்டிப் பணிந்து “எல்லா மலைகளும் சோலைகளும், காடுகளும், ஆறுகளும், கடல்களும், ஊர் களும் தேடியாய்விட்டன; நீர் கூறிய குகைகளெல்லாம் தேடியாய்விட்டன; கொடிகள் படர்ந்த மரச்சுழல்க ளெல்லாந்தேடியாய் விட்டன ; காட்டிடங்களிலும், துர்க் கங்களிலும், பள்ளங்களிலு முள்ள பெரிய மிருகங்க ளெல்லாந் தேடிக் கொல்லப்பட்டன. உதாரகுணமும் பெருந்திறலுமுடைய பெரியாய், அனுமானே மைதிலி யைக் காண்பான்; ஏனெனில் அவனே அவள் போன திசைக்குச் சென்றிருக்கின்றான்” என்றார்கள். 

31. அனுமான் முதலானோர் தென்றிசையில் தேடுதல் 

அனுமான் தாரனோடும் அங்கதனோடும் சுக்கிரீவன் குறித்த திசையை நோக்கி விரைந்துச் சென்றான். அவர்கள் வெகுதூரஞ் சென்று விந்தமலையின் குகைகளையுங் காடு களையும், மலைக்கோடுகளையும், கடக்கமுடியாத ஆறுகளை யும்,குளங்களையும், பெரிய மரங்களையும், தேடியும் சீதையைக் காணவில்லை. அதன்பின் அவர்கள் பயங்கர மான அலைகள் வீசி முழங்கும் வருணனுக்கிருப்பிடமாகிய கரையற்ற பெருங்கடலைக் கண்டார்கள். அப்போது அறிவிற்சிறந்த இளவரசனான அங்கதன் “வானரர்காள், எங்களரசன் கட்டளையினால் நாங்கள் எல்லாரும் கார்த் திகை மாதத்திற்குள் சீதையைத் தேடுவதாகச் சொல்லிப் புறப்பட்டு வந்தோம்; அந்த மாதம் கழிந்துவிட்டது; இனிச் செய்யவேண்டிய காரியம் என்ன? அரசன் ஏவிய காரியத்தைச் செய்துமுடிக்காத நாங்கள் கொலைக்காளா வோம்; இதிற் சந்தேகமில்லை. வானர ராஜனுடைய ஏவலைச் செய்யாது யாவன் சுகமடைந்தவன்? சுக்கிரீவன் குறித்தகாலம் கழிந்தமையால் நாம் பட்டினிகிடந்து உயிர் துறத்தல் தக்கது. ஆகையால் இந்தச் சமுத்திரத்தின் புண்ணியதீரத்திலேயே நான் பட்டினி கிடக்கின்றேன்’ என்று கூறினான். அந்ததன் இவ்வாறு சொல்லிவிட்டுப் பெரியவர்களை வணங்கி, மனம்வருந்தி, அழுதுகொண்டு பூமியில் தருப்பையின்மேல் உட்கார்ந்தான். வானரவீரர் கள் அங்கதனுடைய எண்ணத்தை அறிந்துகொண்டு தண்ணீரைக்குடித்துவிட்டுக் கிழக்கு முகமாக விருந்தார் கள். அவர்கள் நீர்க்கரையில் தெற்கு முகமாகப் பரப்பிய தருப்பையின்மேல் இருந்துகொண்டு இதுவே எமக்கு ஏற்றது” என்று எண்ணினார்கள். 

வானரர்கள் அந்த மலையின்மேலே பட்டினியிருந்து உயிர் துறக்க நிச்சயித்து உட்கார்ந்தபோது அங்கே கழுகரசன் வந்தான். அவன் சம்பாதி என்று கூறப் படுபவன்; நீடித்த ஆயுளுடையவன்; ஜடாயுவின் சகோ தரன்; வலியாலும் ஆண்மையாலும் புகழ்படைத்தவன். அங்கிருந்த வானரர்களைக் கண்டு சந்தோஷமுற்று ”இவ் வுலகத்தில் ஒவ்வொருவனையும் அவன் வினைப்பயன். தொடருகின்றது. அதனாலன்றோ எனக்கென்று நியமிக் கப்பட்ட இந்த உணவு நெடுங்காலங் கழித்து என்னிடம் வந்திருக்கின்றது” என்று சொன்னான். 

பசித்திருந்த அந்தப்பறவையின் வார்த்தையை அங்க தன் கேட்டு மிகவும் கவலையடைந்து அனுமானை நோக்கி “சீதை என்னும் வியாஜத்தை வைத்துக்கொண்டு சூரிய புத்திரனாகிய யமன் தானே வானரர்களை அழிக்கும் பொருட்டு இங்கு வந்திருக்கிறான். இராமருடைய காரிய மும் முடிவுபெறவில்லை. நமதரசன் கட்டளையும் நிறை வேறவில்லை. அப்படியிருக்க வானரர்களுக்குத் தெரியா மலே அவர்களுக்கு இந்த விபத்து வந்திருக்கின்றது. சீதைக்கு நன்மை செய்யும் பொருட்டு முன் கழுகரசனான ஜடாயு இங்கே யாது செய்தானென்பதை நீங்கள் முழு தும் கேட்டிருக்கின்றீர்கள். இவ்வாறே விலங்கு சாதி யுள்பட எல்லாப்பிராணிகளும், எங்களைப்போலவே, தம்முயிரைக்கொடுத்து, இராமருக்கு வேண்டியவற்றைச் செய்கின்றன. கழுகரசன் யுத்தத்தில் இராவணனால் கொல்லப்பட்டுச் சுகமடைந்தான்” என்று கூறினான். 

அங்கதன் வாயிலிருந்து வந்த சொற்களைக்கேட்டு கூரிய மூக்கும் பெரிய குரலுமுடைய சம்பாதி வானரர் களைநோக்கி “என்னுடைய மனத்தை நடுங்கும்படி செய்து என்னுயிரினுமினிய சகோதரன் ஜடாயுவினுடைய மர ணத்தைப்பற்றிப் பேசுகின்றவன் யாவன்? ஜனஸ்தானத் தில் இராக்ஷசர்களுக்கும் ஜடாயுவுக்குமிடையில் யுத்தம் எப்படி யுண்டாயிற்று? நெடுநாள் கழித்து இப்போது தான் என் சகோதரன் பெயரை நான் கேட்கிறேன். நான் இந்த மலைத்துர்க்கத்திலிருந்து இறங்க விரும்புகின்றேன். குணங்களை யறிந்தவனும் ஆண்மைக்காக யாவராலும் புகழப்படுபவனுமாகிய என் தம்பியின் கீர்த்தியை நெடு நாளைக்குப்பின் கேட்டு மிகவும் சந்தோஷமடைந்தேன். வானரவீரர்காள், ஜனஸ்தானத்தில் வசித்த எனது தம்பி ஜடாயுவின் மரணத்தைப்பற்றி நான் அறிய விரும்பு கிறேன்.” என்றான். 

அங்கதன் மலைச்சிகரத்தி நின்று சம்பாதியை இறக்கி ‘கழுகரச, பிரதாபமுடைய ரிக்ஷரஜன் என்று ஒருவானரவேந்தன் இருந்தான். அவ்வரசன் என் பிதா மகன் ; தருமகுணமுடையவன். அவனுக்கு வாலி என்றும் சுக்கிரீவன் என்றும் இரண்டு குமாரர்கள். அவர்கள் அளவற்ற பலமுடையவர்கள். எனது பிதாவாகிய வாலி என்னும் அரசன் இவ்வுலகத்தில் தன் தொழிலாற்றலால் பேர்போனவன். தசரத குமாரராகிய இராமர் இவ்வுல கிற்கெல்லா மரசர்; இக்ஷ்வாகு குலத்தில் வந்த பெருந்தேர் வீரர். அவர் தருமவழியில் நின்று தந்தை கட்டளையை நிறைவேற்றவேண்டி, தன் தம்பி லக்ஷ்மணரோடும் மனைவி சீதையோடும். தண்டகாவனத்திற்கு வந்தார். அவருடைய மனைவியை ஜனஸ்தானத்திலிருந்து இராவணன் வலிந்து எடுத்துக்கொண்டு போய்விட்டான். இராமருடைய தந் தையின் நண்பனாகிய ஜடாயுவென்னும் கழுகரசன் சீதையை இராவணன் ஆகாயமார்க்கமாக எடுத்துக் கொண்டு போவதைக்கண்டு அவனைத் தேரழித்துப் பூமி யில் இறக்கிவிட்டான். பின்பு அவன் மூப்பினால் இளைப் படைந்திருந்தமையின் இராவணனால் கொல்லப்பட்டான். ஜடாயு இராமரால் பிரேத சம்ஸ்காரம் செய்யப்பெற்று நற்கதியடைந்தான். பின்பு இராமர் என் சிற்றப்பனான சுக்கிரீவனோடு நட்புக்கொண்டார்; அவரே என் தந்தை வாலியையும் கொன்றார். சுக்கிரீவன் மந்திரிமார்களோடு என் தந்தையால் ஊரைவிட்டுத் துரத்தப்பட்டிருந்தான். இராமர் வாலியைக்கொன்று சுக்கிரீவனுக்கு அபிஷேகம் செய்தார். வானர வீரர்களுக்கெல்லாம் அரசனாகிய சுக்கிரீவனால் நாங்கள் ஏவப்பட்டோம். இராமர் சொற் படி நாங்கள் சீதையை எவ்விடங்களிலும் தேடினோம். இராத்திரியில் சூரியனுடைய ஒளியைக் காணக்கூடாத வாறு வைதேகியை நாங்கள் தலைப்படவில்லை” என்று கூறினான். 

உயிர் போவதுபோலிருந்த வானரர்கள் இந்தப் பரி தாபமான வார்த்தையைக் கூற, சம்பாதி அவர்களை நோக்கி “வானரர்காள். என் தம்பி ஜடாயு யுத்தத்திலே இராவணனால் கொல்லப்பட்டான் என்று நீங்கள் சொல் லுகிறீர்கள்.மூப்பினாலும் சிறகின்மையினாலும் நீங்கள் சொன்னதைக்கேட்டுப் பொறுத்திருக்கிறேன். எனது தம்பியைக் கொன்றதற்காகப் பழிவாங்க நான் இப் போது வலியன் அல்லேன். முன்னொரு காலத்தில் விருத் திராசுரன் கொலையுண்டபோது நாங்களிருவரும் ஒருவரை ஒருவர் வெல்லவேண்டுமென்று கிரண வரிசைகளாற் சொலித்துக்கொண்டிருந்த ஆதித்தனுக்குக் கிட்டப்பறந்து சென்றோம். ஆகாயமார்க்கத்திலே நாங்கள் அதிவேக மாகச் சுற்றிப் பறந்துபோனபோது, சூரியன் உச்சியில் வர, ஜடாயு இளைப்புற்றான். சூரியகிரணத்தினால் என் தம்பி வருந்துவதைக்கண்டு நான் என் சிறைகளினால் அவனை மறைத்தேன். அப்போது நான் சிறகர் கரிந்து விந்த மலையின்மேல் விழுந்தேன். அன்று தொட்டு நான் இங்கேயே யிருந்தமையின் என் தம்பியுடைய செய்தி ஒன்றுமறியேன்” என்று கூறினான். 

சம்பாதி இவ்வாறுசொல்ல, பேரறிவுடைய அங்கதன் அவனைநோக்கி “நீ ஜடாயுவின் சகோதரனானால்,நீ நான் சொன்னதைக் கேட்டிருத்தலின், அந்த ராக்ஷசனுடைய இருப்பிடம் உனக்குத்தெரியுமோ? சொல்’ என்று கேட் டான். பின்பு சம்பாதி, வானரர்களை மகிழ்விப்பவனாய் வானரர்காள்,நான் என் சிறகெரிந்து வலிகுன்றினவனா யிருக்கிறேன்; ஆகையினால் நான் வாக்கு மாத்திரத்தினா லேயே இராமருக்கு ஒரு பேருதவி செய்கின்றேன். இராம ருடைய காரியமாகிய இதனை நான் முதலில் செய்கின் றேன். கொடிய இராவணன் அழுகும் இளமையுமுடைய ஒரு பெண்ணணங்கை எடுத்துக்கொண்டுபோனதை யான் கண்டேன். அந்நல்லாள் அப்போது “இராமா இராமா” என்றும் “லக்ஷ்மணா” என்றும் கதறிக்கொண்டு, உடல் நடுங்கி, தான் அணிந்திருந்த ஆபரணங்களைக் கழற்றி எறிந்தாள்.அவளுடைய சிறந்த கோசிகப்பட்டு மலையி னுச்சியிலெறிக்கும் வெயில்போன்றிருந்தது; கரிய.இரா க்ஷசன் மடியிலிருந்த அவள் கார்மேகத்தில் தோன்றும் மின்னல்போல விளங்கினாள். இராமருடைய பெயரைச் சொல்லினமையால் அவளை சீதையென்று நான் எண்ணுகிறேன். அவன் இருப்பிடத்தைச் சொல்லு கிறேன் கேளுங்கள். அவன் விச்சிர வசுவின் புதல் வன்; வைச்சிரவணனுக்குத் தம்பி. அவன் வசிப்பது இலங்கைநகரத்தில். அந்த அழகிய நகரம் விசுவகர்ம னால் செய்யப்பட்டது; அது சழுத்திரத்திலே நூறு யோசனை தூரத்தில் ஒரு தீவின்கணுள்ளது. சீதை அங்கே யிருக்கிறாள். அவ்வேழை கோசிகப்பட்டுடுத்து இராவணனுடைய அந்தப்புரத்திலே இராக்ஷசிகளால் காவல் செய்யப்பட்டு அழுதுகொண்டிருக்கிறாள். வான ரர்காள், நீங்கள் ஊக்கத்தோடு மிக விரைவாக அங்கே செல்லுங்கள். நீங்கள் சீதையைக்கண்டு திரும்புவதை நான் ஞானத்தினால் காண்கின்றேன். நான் இங்கிருந்துக் கொண்டே இராவணனையும் ஜானகியையும் காண்கின் றேன். அப்படிப்பட்ட திவ்வியமான சிறந்த கண்பார்வை எங்களுக்குண்டு. உணவின்வலியாலும் எங்கள் இயற்கை யாலும் நாங்கள் எப்போதும் நூறுயோசனைக் கப்பா லுள்ளதையும் காண்போம். உப்புச் சமுத்திரத்தைக் கடப்பதற்கு வழிபாருங்கள். நீங்கள் வைதேகியைக் கண்டு உங்கள் காரியத்தை முடித்துக்கொண்டு திரும்புங் கள். என்னைச் சமுத்திரக்கரைக்கு எடுத்துக்கொண்டு போய்விடுங்கள். சுவர்க்கமடைந்த என் பெருமையுடைய தம்பிக்கு நான் நீர்க்கடன் செய்ய விரும்புகின்றேன்” என் றான். அப்போது மிகுந்த வேகத்தையுடைய வானரர்கள் சிறகெரிந்திருந்த சம்பாதியை சமுத்திரதீரத்திலே அவ னாற் குறிக்கப்பட்ட இடத்திற் கொண்டுபோய்விட்டு மறு படியும் அவனை அவனிருந்தவிடத்திற்கு கொண்டுவந்து சேர்த்து, சீதையின் செய்தியைக் கேள்வியுற்றுச் சந்தோஷமடைந்தார்கள். 

அந்த மலையின் சிகரத்தில் நீர்க்கடன்செய்து ஸ்நானம் பண்ணிவிட்டிருந்த சம்பாதியை வானரவீரர்கள் நான்கு புறத்திலும் சூழ்ந்திருந்தார்கள். அப்போது சம்பாதி நம் பிக்கை கொண்டு சந்தோஷத்தோடு வானரர்கள் சூழ விருந்த அங்கதனை நோக்கி “வானரர்காள், சத்தம் பண் ணாது ஒரே மனத்துடன் கேளுங்கள். குரியனுடைய வெயிலினால் உடல்வாடி அவனுடைய கிரணத்தினால் சூடுண்டு நான் முன்னர் இந்த மலையின் சிகரத்தின்மேல் விழுந்தேன். விழுந்தபின் ஆறு நாள் இரவும் பகலும் மூர்ச்சையடைந் திருந்தேன். பின் நான் கடல்களையும் மலைகளையும் நதி களையும் அருவிகளையும் காடுகளையும் கடற்கரைகளையும் பார்த்து இது இவ்விடமென்று அறிந்துகொண்டேன். களிப்படைந்த பறவைக் கூட்டங்கள் நிறைந்திருத்தலி னாலும் குகைகளும் சிகரங்களுமுடைமையினாலும் தென் சமுத்திர தீரத்திலுள்ள விந்தமலை இதுவென்று நான் நிச்சயித்தேன். இங்கே தேவர்களாலும் பூசிக்கப்படும் புண்ணியாசிரம் மொன்றிருந்தது.; நிசாகரர் என்னும் பெயருடைய பெரிய தவமுனிவர் அவ்வாசிரமத்தில் வசித் தார். நான் அந்த புண்ணிய ஆசிரமத்தை யடைந்து பக வான் நிசாகர முனிவரைக் காணவேண்டி ஒரு மரத்தினடி யில் காத்திருந்தேன். அப்போது அம்முனிவர், ஸ்நானம் செய்துவிட்டு, உடலம் ஒளிக்க வடக்கு நோக்கி எனக்குச் சமீபமாக வந்துகொண்டிருந்தார். முனிவர் என்னைக் கண்டு சந்தோஷமடைந்து ஆசிரமத்துள் புகுந்து ஒரு முகூர்த்தம் கழித்துவந்து என்னை நோக்கி “உன்னுடைய சிறகுகளும் தூவிகளும் உனக்குப் புதிதாக மறுபடியும் முளைக்கும். உன்னுடைய உயிரும் பார்வையும் ஆண்மை யும் பலமும் மறுபடியும் வரும்.ஒரு பெரிய காரியம் இவ் வுலகத்தில் நடக்கப் போகின்றதென்று முன்பு கேட்டிருக் கின்றேன். இராமரால் அனுப்பப்பட்ட வானரர்கள் சீதையைத் தேடி வருவார்கள்; அவர்களுக்கு நீ சீதையின் செய்தி முழுதையும் சொல்லு. நீ இதைவிட்டு ஒருபோதும் போகாதே. நீ எங்கே போவாய்? காலத்தையும் இடத்தை யும் உனக்குச் சிறகு முளைத்தலையும் பார்த்துக்கொண்டு நீ இங்கேயே இரு. உனக்கு இன்றைக்கே சிறகு முளைக் கும்படி நான் செய்யமாட்டேன்.” என்றார். முனிவரர் இவ் வண்ணம் பலவாறாக என்னைப் புகழ்ந்துரைத்து எனக்கு விடை தந்துவிட்டுத் தமதாசிரமத்துள் புகுந்தார்.”

இவ்வாறு வானரர்களோடு பேசிக்கொண்டிருந்த சம் பாதிக்கு வானரர்களுடைய கண் முன்னிலையில் சிறகு முளைத்தது. சம்பாதி தன்னுடைய உடலில் சூரியனைப் போல ஒளியுடைய சிறகு முளைத்ததைக் கண்டு ஒப்பற்ற சந்தோஷங்கொண்டு வானரர்களைநோக்கி, “அளவி லாற்றலுடைய நிசாகர முனிவர் கிருபையினால் சூரிய கிர ணத்தினால் எரிந்துபோன என் சிறகுகள் முளைத்துவிட் டன். எல்லா வகையாலும் முயற்சி செய்யுங்கள் ; நீங்கள் சீதையைக் காணுவீர்கள்.நான் சிறகுபெற்றது உங் கள் முயற்சி சித்திக்கு நம்பிக்கை புகட்டுவதாக யிருக்கின்றது” என்றான். இப்படிச் சொல்லிவிட்டு சம்பாதி மலையுச்சியில் நின்று ஆகாயத்தில் பறந்தான். 

வானரவீரர்கள் இராவணனுடைய இருப்பிடத்தைக் குறித்துச் சம்பாதி சொன்னவற்றைக் கேட்டுச் சந்தோ ஷங்கொண்டு சீதையைக் காண விரும்பி சமுத்திரக் கரைக்குச் சென்றார்கள். அவர்கள் அந்தத் தென் சமுத் திரத்தின் வடகரையில் தங்கி. கடல் ஆகாயம்போல் விரிந்து கடத்தற்கரிதா யிருத்தலைக் கண்டு யாது செய்வ தென்று மனங் கலங்கினார்கள். வானரர்களுக்குள் சிறந்த அங்கதன் கடலைக்கண்டு சேனைகள் மனம் கலங்கினதை அறிந்து அவர்களுக்குத் தேற்றறிவு சொல்லி “மனத்தைக் கலங்க விடப்படாது; மனக்கலக்கம் மிகவும் குற்றமுடை யது. சீற்றங்கொண்ட பாம்பு ஒரு குழந்தையைக் கொல்லு மாறு போல மனக்கலக்கம் ஒருவனைக் கொன்றுவிடும். தனது ஆண்மையைக் காட்டவேண்டிய காலத்தில் மனங் கலங்குபவன் ஒளிகுன்றிப் புருஷார்த்தத்தையும் இழந்து விடுவான்’ என்று கூறினான். பின்பு அங்கதன் வானரச் சேனைக்கும் வானரத் தலைவர்களுக்கும் பணிந்து ”இந்தக் கடலைக் கடக்கும் பெருந்திறலுடையான் யாவன்? பகை வர்களை யடக்கும் சுக்கிரீவனைச் சத்தியவானாகச் செய் பவன் யாவன்? வானரர்காள். எந்த வீரன் நூறு யோசனை தாவ வல்லவன்? இந்த வானரத் தலைவர்களின் பயத்தை நீக்குபவன் யாவன்? உங்களுள் எவராலாவது இந்தக் கடலைக் கடக்க முடியுமானால் எங்களுக்கு இப் போதே அபயம் கொடுங்கள் என்று கூறினான். அங்க தன் சொன்னவற்றைக் கேட்டு, கஜன், கவாக்ஷன், கவயன், சரபன், கந்தமாதனன், மயிந்தன், துவிவித்ன், சுஷேணன், சாம்பவன் முதலிய வானரவீரர்கள் கடலைக் கடத்தலில் தங்கள் தங்களுக்குள்ள வலியை முறைப்படி சொல்லினார் கள். இவர்கள் இவ்வாறு சொல்ல, வானர வீரர்களுக்குள் மூத்தோனாகிய சாம்பவன் அவர்களுக்கு வந்தனை செய்து ‘முன்னர் என்னிடத்தில் இக்கடலைக் கடக்க ஆற்றலிருந்தது; நான் இப்போது வயசின் மறுகரையில் வந்துவிட்டேன். ஆயினும் நான் தொண்ணூறு யோசனை செல்வேன். இந்த வலியினால் காரியம் முடியமாட்டாது” என்றான். 

பின்னர் அங்கதன் “இந்தப் பெரிய நூறு யோசனை தூரத்தையுங் கடக்க என்னால் முடியும்; திரும்பி வருவ தற்கு எனக்கு சக்தி உண்டோ இல்லையோ என்று சொல்ல முடியாது” என்றான். சாம்பவன் அவனை நோக்கி ‘வானரோத்தம, கடலைக் கடத்தலில் உமக்குள்ள வலியை நாங்கள் அறிவோம். நீர் நூறாயிரயோசனை கடக்கவும் திரும்பி வரவும் சமர்த்தர் அன்றோ? அடியேங்கள் உம் மைப் போமென்றேவல் தக்கதன்று, அப்ப, தொழுவர் கள் இறைவனை ஒருபோதும் ஏவப்படாது. நீரே எங் களை ஏவல்வேண்டும். வீர, இந்தக் காரியத்திற்கு ஒரு குறையும் வாராது. இந்தக் காரியத்தைச் செய்துமுடிக்க வல்லானை நான் அனுப்புகின்றேன்” என்றான். 

சாம்பவன், அநேக நூறாயிரம் பேரடங்கிய வானர சேனை துக்கப்பட்டுக்கொண் டிருப்பதைப்பார்த்து, அநு மானை நோக்கி வானரர்களுக்குள் வீர, நூன்முழுதறிந்த புலவ, மௌனமாய்த் தனியிடத்திற் போயிருந்துகொண்டு ஏன் பேசாதிருக்கின்றாய்? நீ உன் வலியினாலும் ஆண்மை யினாலும் வானர வேந்தனாகிய சுக்கிரீவனுக்கும் இராமருக் கும் லக்ஷ்மணருக்கும் ஒப்பானவன். உன்னுடைய பலமும் புத்தியும் உரனும் ஆண்மையும் யாவருக்கும் தெரிந்தவை. நீ ஏன் அவற்றை அறியவில்லை? ஆண்மையாலும் தாவுஞ் சத்தியாலும் நீ வாயுவை ஒத்தவன். நாங்கள் இப்போது நீ உயிர்போயிருக்கின்றோம். நீ எங்களை இப்போது காப் பாற்றவேண்டும். வானரோத்தம, எழுந்து கடலைக் கடப் பாயாக” என்றான். 

அநுமான் வானரர்கள் புகழப்புகழ வளர்ந்து சந்தோ ஷத்தால் வாலை. அசைத்துப் பலமடைந்தான். பின்னர் வானரர்கள் நடுவினின்றும் எழுந்து, மயிர்ப்புளகங் கொண்டு, அவர்களுள் மூத்தோர்களைப் புகழ்ந்து ‘வானர வீரர்காள், நான் கடிய வேகத்தோடு ஆகாசத்திலே திரி கின்ற சோதிவர்க்கங்களுக்கு மேலே செல்லவும் வல்லேன். கடலை வற்றச்செய்வேன்; தரையைப் பிளந்துவிடுவேன். நான் வைதேகியைக் காண்பேன். நீங்கள் களிகூறுங்கள். நான் ஒரே தாண்டில் இலங்கையையும் கடந்து அப்பாற் செல்வேன் என்று எனக்குத் தோன்றுகின்றது” என்று சொன்னான். இவ்வாறு கூறி அநுமான் கர்ச்சிக்க அதனை வானரர்கள் கண்டு சந்தோஷமும் ஆச்சரியமும் அடைந் தார்கள். அநுமான் கூறிய வார்த்தையைச் சாம்பன் கேட்டு ‘வீர. கேசரிபுத்திர, வாயுகுமார, உன் சுற்றத்தா ரின் துக்கத்தை நீ போக்கிவிட்டனை. முனிவர்களுடைய அருளாலும் வானர மூத்தோர்களுடைய அநுமதியாலும் பெரியோர்களின் அநுக்கிரகத்தாலும் நீ பெரிய கடலைக் கடப்பாயாக. நீ திரும்பி வரும்வரையும் நாங்கள் ஒற் றைக்காலில் நின்று தவஞ்செய்வோம். வானரர்களுடைய உயிரெல்லாம் உன்னைத் தொடர்ந்துவரும்” என்று கூறி னான். பின்னர் அநுமான் சிறந்த மகேந்திர மலையின்மேல்’ ஏறி உலாவினான்.

– தொடரும்…

– வால்மீகி ராமாயணச் சுருக்கம் (நாவல்), முதற் பதிப்பு: 1900, கே.மகாதேவன், பிரசுரகர்த்தர், விஜயதசமி, 17-10-1953.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *