வாடை மாறிய வேளை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 3, 2025
பார்வையிட்டோர்: 2,809 
 
 

புத்தகரம் — நகரத்தின் கரையோரத்தில் ஒட்டிக் கிடந்த கயிறு.

நகரம், “இதைக் கையில் பிடித்தால் என்ன லாபம் கிடைத்துவிடும்?” என்று முகம் சுளித்தது.

கிராமம், “இதைக் கையில் எடுத்தால் நாமே நகர வாழ்க்கையின் அடிமைகளாக ஆகிவிடுவோமோ?” என்று அஞ்சியது.

இடையில் மாட்டிக்கொண்டவர்கள்? — அந்தக் கயிறையே வாழ்க்கையின் அடித்தளம் போல கட்டிக்கொண்டு, மொபைல் ஸ்கிரீனில் ‘லோடிங்…’ சின்னம் சுழல்வது போல, ஒரே வட்டமாகச் சுழற்சி செய்து கொண்டிருந்தனர்.


காலை ஏழு மணி.

சாதாரண நாளில், இதே நேரம், அடுப்பின் கொதிப்பு, குழந்தையின் அழைப்பு, பைக்கின் இரைச்சல் — வாழ்க்கை தானாகச் செல்கின்ற ஓசைகள். ஆனால் இன்று ஞாயிறு. சோம்பலும் மென்மையும் காற்றின் நடுக்கத்துடன் கலந்து, கவிதை போலத் தழுவும் அமைதி.

புத்தகரம் — நகரத்தின் பளபளப்பையும், கிராமத்தின் அடக்கம் கொண்ட பாரம்பரியத்தையும் சமன்செய்ய முயலும் இடைவெளி. ஒரு பக்கம், போனில் விரல்கள் ‘ஸ்க்ரோல்’ அடிக்கும் இளைஞர்கள்; மறுபக்கம், பக்கத்து டீக்கடையில் செய்தித்தாளைப் புரட்டிக்கொண்டு, உலகச் சிக்கல்களை பத்து நிமிடத்தில் தீர்த்துவிடும் மூத்தவர்கள். ஒரே தெருவின் இரு வேர்கள். ஒரே மண். ஒரே தேடல். வேறுபட்ட வழிகள்.


இன்று புத்தகரத்திற்கு ஒரு சிறப்பு நாள்.

புதிய சமுதாயப் பூங்கா திறப்பு விழா — விளையாட்டு, நடைபயிற்சி, புத்தக வாசிப்பு, கூட்டங்கள்… சுருக்கமாகச் சொன்னால், வாழ்க்கை முழுவதையும் ஒரே டப்பாவில் அடுக்கி வைக்கும் ஒரு நிழற்குடை.

இத்தனை நாள் தண்ணீரும் எண்ணெயும் போல வேறுபட்டுப் பாய்ந்த வாழ்க்கை, இப்போது ஒரே தேநீராகக் கலக்கப் போகிறது போல.

இது புதிதாகக் குடியேறியவர்களின் பகுதி.

அவர்களில் பெரும்பாலானோருக்கு இதுவரை பகுதிக் காரியங்களில் ஈடுபாடு? — “வாட்ஸ் அப்’ குழுவில் ‘குட் மார்னிங்’ போடுவது” வரை மட்டுமே.

ஆனால் அருகில் ஏதோ நடக்கிறது என்றால், பார்த்துவிடவேண்டாமா? அதனால், “நேரம் போகட்டும்” என வந்தவர்கள் கூட்டம்.

சிலர் பூங்கா திறக்கிறார்களா, Wi-Fi-யும் வரும் போல என்ற நம்பிக்கையுடன். சிலர், வீட்டில் மனைவி சுத்தம் பண்ணிக்கொண்டிருக்கிறார் — வெளியே வந்தால் உயிர் பிழைக்கும் என்ற அவசரத்துடன்.

விழா தொடங்க இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது.

சிறுவர்கள், பெண்கள், வயதானவர்கள் — எல்லாரும் ஒரே புன்னகையோடு, எதையாவது எதிர்பார்க்கும் கண்களோடு.


காலை எட்டரை மணி.

தூரத்தில் ஓர் ஹாரன் — ஓசை மட்டும் அல்ல, உத்தரவு: “நான் வர்றேன்… வழி விடு!” அதிகாரத்தின் இசை என்றால் இதுதான் — சிம்பொனி கச்சேரி இல்லை, சின்னச் சின்ன ஹார்ன் நோட்டுகள்.

பளபளத்த மெர்சிடீஸ் நுழைந்தது; பின்னால் ஆடம்பர கார்கள் வரிசை. கூட்டத்தில் ஒருவரின் குரல்: “எம்.எல்.ஏ. ஐயா வந்துட்டாரு!” — அதுவே போதும், முகங்கள் அனைத்தும் திசை மாற.

அது குமரேசன் — உள்ளூர் இளைஞர் அணித் தலைவர்; அவரின் குரலில், பெருமை, பரிவு, அடுத்த தேர்தலில் டிக்கெட் வேண்டுமென்பது — மூன்றும் கண்ணுக்கு தெரிந்தது.

கார், மேடையிலிருந்து சற்று தூரத்தில் நின்றது. கதவுக்கு முன் — கவுன்சிலர் கருணாகரன், குமரேசன், மேலும் வழக்கமான வெள்ளை சட்டை அணிந்த கட்சியாளர்கள் — முகங்களில் பக்தி, பயம், பத்திரிகை புகைப்பட ஆசை ஆகிய மூன்று வண்ணங்கள்.

கருணாகரன் கதவைத் திறந்த விதம் — அது கதவா, இல்லை சொர்க்க வாசலா என்று கூட சந்தேகப்பட வைத்தது.


காரிலிருந்து இறங்கினார் புகழ்வண்ணன் — எம்.எல்.ஏ. வெறும் எம்.எல்.ஏ அல்ல; “மக்கள் சேவையின் மறுவரைபடம்”, “நம்பிக்கையின் பிரகாசம்”, “வளர்ச்சியின் அவதாரம்” — என சுவரொட்டிகள் பல நாட்களுக்கு முன்பே தீர்மானித்திருந்த மனிதர்.

மேல் புது வெள்ளை சட்டை, கீழ் பளபளப்பான காட்டன் வேட்டி, கையில் ரோலக்ஸ், காலில் வெளிநாட்டு செருப்பு. ஒவ்வொன்றும் “இதை வாங்க உன் சம்பளம் போதாது” என்று சொல்வது போல. அவர் நடக்கும்போது, காற்றே திசை மாறியது — “நான் யார்” என்ற வாசனை அறிவிப்பாக..


புகழ்வண்ணன் இறங்கியவுடனே, கவுன்சிலர் கருணாகரன், குமரேசன், அடுத்தடுத்த தொண்டர்கள் — பூங்காவை சுற்றி விழும் குருவிகள் போல — ஒரே அலைப்பில் சூழ்ந்தனர்.

“ஐயா! நல்லா இருக்கீங்களா?” “பயணம் சௌகரியமா இருந்ததா?” “டீ கொடுங்கடா!” “தண்ணீர் பாட்டிலோட வா!” — ஒருவரையொருவர் தள்ளி ஓடி உபசரிப்பு.

கருணாகரன், புன்னகையோடு, தன்னுடைய குரலை பெரிதாக்கி, “ஐயா… மக்கள்லாம் உங்க வருகைக்காகத்தான் காத்திருக்காங்க!” என்றார் — தன்னால் இயன்ற அளவு பவ்யமாக.

புகழ்வண்ணன் புன்னகையுடன் தலையசைத்தார். ஒரே முறை சுற்றிப் பார்த்தார். பின்னர் மேடையை நோக்கிச் சென்றார்.


அந்த புன்னகையின் பின்புறம் — நாட்களாகச் சேமித்து வைத்த சலிப்பு. வரவேற்பும், பேச்சுகளும், ஆடம்பரங்களும் — ஒருகாலத்தில் பதக்கம்போல் பிரகாசித்தவை; இப்போது, சுவற்றில் தொங்கும் பழைய விருதுபோல், தூசி படிந்த பெருமை.

அவர் நடந்து வரும்போது, தெரு நாய்கள் சற்று ஆர்வத்துடன் பார்த்தன. புதிய முகமென்றால் பல்லைக் காட்டி “ஏய், யாரு நீ?” என்று சண்டை தொடுக்கும் அவைகள் — இன்று வாலை ஆட்டி “சார், நம்ம பக்கம்தான்” என்று விசுவாசம் காட்டின.

அவரது காலடியில் சுற்றி வந்து, விலையுயர்ந்த வாசனையை முகர்ந்தன. அது சாமான்ய வாடை அல்ல — முழு தெருவின் தம்பட்டத்துக்கும் மேலான ஒரு சுகந்தம்.

வெண்கலச் சிலை போல கூர்மைமிக்க முகம், மெழுகு போல் மென்மையான மேனி, பளபளப்பான வேட்டி — இவை நாய்களுக்கு “கடிக்கக் கூடாத” ஒளி.

அவற்றின் கண்களில் எளிய கணக்கு: “இவரோட சாப்பாட்டுல ஒரு துண்டு கிடைத்தாலே, நமக்கு தினமும் ராயல் விருந்துதான்.”

நாய்கள் அறிந்தவை — பணம் இருக்கும் இடத்தில்தான் பசியையும் ஆடம்பரமாக தீர்க்க முடியும். அவற்றுக்குப் “மரியாதை” என்பது — மூக்கால் முகர்ந்து முடிவு செய்வது.

அந்த நாய்கள் முகர்ந்தது — அவரின் வாசனையல்ல, வசதியின் வாசனை.


புகழ்வண்ணன் மேடையில், சிங்காசன சாயலில் அமர்ந்திருந்தார். அந்த நேரத்தில், “க்ரீச்… க்ரீச்…” என்று சங்கடப்படுத்தும் சைக்கிள் ஒன்று வந்து நின்றது.

பழைய ஹீரோ சைக்கிளிலிருந்து, மெதுவாக இறங்கினார் தர்மலிங்கம் அய்யா. விழாவின் “சிறப்பு விருந்தினர்” என்ற பட்டியலில் பெயர் இருந்தும், அவரை அறிவோர் — சொற்பத்தைத் தாண்டாது.

சமூகத்தின் அடித்தளத்திலிருந்து மனிதரைத் தூக்கி நிறுத்த முயன்றவர்; பல போராட்டங்களில் தலைமை தாங்கி, சிறையில் அடைக்கப்பட்டவர்.

ஆனால் இங்கே? பெரும்பாலோர், முகத்தில் பரிதாபத்தை சுமந்து கொண்டு, “ஏதோ தியாகி பென்ஷன் வாங்குறவரைப் போல இருக்கே… இன்னும் இவங்க மாதிரி ஆட்கள் உயிரோட இருக்காங்களா?” என்று மௌனமாக பேசிக்கொள்வார்கள்.

சிலர், ஒரு ஓய்வூதிய அட்டையை ஸ்கேன் செய்வதுபோல் அவரைத் தலை முதல் கால் வரை பார்வையிட்டு, பிறகு பக்கமாய் முகத்தைத் திருப்பிவிடுவார்கள்.


தர்மலிங்கம் புத்தகரம் பகுதியைச் சேர்ந்தவர் அல்ல. ஆனால் பின்தங்கிய கிராமங்களும் குடிசைப் பகுதிகளும் அவரின் காலடிச் சுவடுகளால் புதுப்பிக்கப்பட்ட மண்ணின் வாசனை அறிந்திருக்கின்றன.

பள்ளி என்று பெயரே இல்லாத இடங்களில் சுவரெழுதி பள்ளி கண்டவர். நூலகம் வேண்டும் என்று சொந்த நிலத்தை விட்டவர். மேடையில் பேசாமல், மண்ணில் சுழன்றவர்.

“மனிதன் பிறருக்காக வாழும்போதுதான் மனிதன்” என்ற பழைய நம்பிக்கையில் முழு வாழ்நாளையும் செலவிட்டவர்.

புத்தகரத்தில்? சாக்கடை கூட ‘ஆர்கிடெக்ட் டிசைன்’ போல் ஸ்டைலாக இருக்கும்; ஆனால் அவர் உழைத்த இடங்களில் குடிநீர் இன்னும் ‘அடுத்த வாரம் வருகிறோம்’ என்ற அறிவிப்பில் நின்றுகொண்டிருக்கிறது.

அவர் சைக்கிளை ஓரமாக நிறுத்தி, மெதுவாக நடக்கத் தொடங்கினார். அந்த நடையில் வேகமோ அக்கறையோ எதுவும் இல்லை. இருந்தது — ஒரு பழகிப் போன ஓய்வு.


தெரு நாய்கள் அவரைக் கண்டவுடன் “வெளியே போங்க” என்ற ஒற்றை குரல் போல சத்தமாகக் குரைத்தன. அது “எங்கள் பகுதியை காக்கிறோம்” என்ற சட்டப்படி குரல் இல்லை; உள்ளூர் மரியாதை பட்டியலில் இவரது பெயர் கிடையாது என்பதற்கான அறிவிப்பு.

அவரின் பழைய சட்டை, ஒளிவிழந்த வேட்டி — இவை அவருக்குள் தேங்கி நிறைந்த ஏமாற்றத்தைப் போல இருந்தன.

நாய்கள் முகர்ந்தது வாசனை அல்ல — வசதியின் இழப்பு. பார்த்தவுடனே அவைகளின் புரிதல்: “இவரிடம் எதிர்பார்க்க என்ன இருக்கப்போகிறது?”

அதனால்தான், குரல் மெலிந்து, வால் மெதுவாகச் சுருண்டது — அதுவும் ஒருவகை விலங்கு அரசியல்.


தர்மலிங்கம் அய்யா, நாய்களின் குரைப்பும், மக்கள் பார்வைகளும் அனுபவத்தில் புதிதல்ல என்பதைப் போல், ஒரு சிரிப்புடன் நடந்து வந்தார்.

புத்தகரத்தில் அவரைப் பற்றி யாரும் பெரிதாக அறியவில்லை; ஆனால் சிலர் மட்டும், முகத்தில் அரசர் வரவேற்பும், குரலில் உண்மையான மரியாதையும் வைத்து, “வாங்க அய்யா… உங்களைத்தான் எதிர்பார்த்தோம்!” என்று உள்ளார்ந்த பாசத்தை வெளிப்படுத்தினர்.

மேடையின் அருகே வந்து, ஒரு ஓரநாற்காலியில் அமர்ந்தார். கண்கள் சுற்றிப் பார்த்தன – நடைப்படி, பச்சைபரப்பும், நூலக கட்டிடமும். முகத்தில் ஒரு அமைதியான திருப்தி. “இங்குள்ள மக்களுக்கு இது ஒரு வரம்,” என்ற எண்ணம் மனதுக்குள் விரிந்து, “இதுபோன்றது என் கிராமங்களுக்கும் கிடைத்திருக்க வேண்டியதுதான்” என்ற கனவாக மாறியது.

புகழ்வண்ணன் மேடையில் வீற்றிருந்தபடி, தர்மலிங்கம் அய்யாவின் பக்கம் ஒரு நிமிடம் பார்த்தார். பார்வையில் பெருமிதம், முகத்தில் ஒரு அலட்சியம். அருகில் அமர்ந்திருந்த மன்ற செயலாளரை விழியால் கூப்பிட்டு, மெளனத்தில் பேசும் கலைபோல் கேட்டார்.

செயலாளர் சத்தம் குறைத்து, “ஐயா, அவர் பெயர் தர்மலிங்கம். பக்கத்து கிராமங்களில் சமூக சேவை

செய்றவர். நம்ம புத்தகரம் இளைஞர் மன்றம் அவரை விருந்தினரா அழைச்சிருக்காங்க. இங்க யாருக்கும் அவரை பத்தி பெருசா ஒன்னும் தெரியாது..” என்று மெதுவாக விளக்கினார்.

புகழ்வண்ணன் ஒரு பெருமூச்சு விட்டார். அவர் கண்கள் தர்மலிங்கத்தின் சட்டையிலும் வேட்டியிலும் ஓடின. தர்மலிங்கத்தின் அழுக்குச் சட்டை அவரது ‘லூயி பிலிப்’ சட்டைக்கு பக்கத்தில் இருந்தது. அவர் ஒரு கணம் அதைச் சரிசெய்தார். பின்னர் தன்னுடைய ‘ரோலக்ஸ்’ கடிகாரத்தை ஒரு முறையாகப் பார்த்தார். நேரம் ஓடிக் கொண்டிருந்தது.

தர்மலிங்கத்தின் எளிமை, புகழ்வண்ணனின் அகம்பாவத்தில் ஒரு மெல்லிய மர்மத் தாக்கத்தை விடுத்தது — முகத்தில் சிரிப்பு வராமல் போன இடையில், மனதில் ஒரு வினோத கசப்பு இருந்தது.

விழா தொடங்கியது.

முதல் வரவேற்பு பேச்சுகள் வழக்கம்போல நடந்தன. கவுன்சிலர் கருணாகரனும், இளைஞர் அணித் தலைவர் குமரேசனும், “நம்ம எம்.எல்.ஏ. ஐயா இல்லாம இக்கிராமத்துக்கு விடிவுகாலமே இல்லை! அவரால்தான் எல்லாமே..” என்று சத்தமிட்டு பேசினர். மேடையிலே குரல் அதிகமாகியதால் உண்மை குறைந்தது.

பின் மேடையின் மையத்தில் புகழ்வண்ணன் எழுந்தார். தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். “வாழ்க!” என்று கூச்சல்கள் மேகங்களைப் பிளந்தன — அல்லது அப்படியே பிளந்தது போல அவர்களுக்குத் தோன்றியது.

அவர் மைக் பிடித்தார். முதல் புன்னகை — அவசியமில்லாத அன்பின் முகமூடி. பிறகு, தனக்கே உரித்தான பிராண்டட் பாணியில் பேசத் தொடங்கினார்:

“அன்பான சகோதரர்களே! உங்கள் புகழ்வண்ணன் பேசுறேன்!

இன்று உங்க முன்னாடி நிக்கிற இந்த பூங்கா — உங்க கனவு. ஆனா அந்தக் கனவோட வழியில நின்னவர்கள் யாரு தெரியுமா? எதிர்க்கட்சியினர்!

அவங்க ஆட்சியில இருந்தபோது, இந்த மண்ணுல சாக்கடை கூட மூட முடியல. இன்று பூங்காவைக் கண்டதும், *‘இது எங்க திட்டம்தான்!’*ன்னு சொல்லுறாங்க. நான் கேக்கறேன் — அப்போ உங்க கையில் இருந்த அதிகாரம் எங்கே போச்சு?

(கூட்டம் ஆரவாரம்.)

புகழ்வண்ணன் (சிறிது குரல் உயர்த்தி): “அவங்க செய்யாம விட்டதை, உங்க புகழ்வண்ணன் சாதிச்சான்! இதுதான் உண்மை!”

(பேச்சு தொடர்கிறது. பெருமையும்…)

“இங்கே நின்றிருக்கும் ஒவ்வொரு மரமும், ஒவ்வொரு கல்லும், என் கண்ணோட்டத்தோடு தான் வந்ததுன்னு பெருமையோட சொல்லிக்க கடமைப்பட்டிருக்கேன்.”

(கூட்டம் கைதட்டுகிறது. அவர் சிரித்தபடி கூட்டத்தின் பக்கம் விரல் காட்டுகிறார்.)

“ஆனா மக்களே… உண்மையை சொல்றேன். சில சமயம் நம்ம கட்சிக்குள்ளேயும் சிலர்… (சிறிது நிறுத்தி, கூட்டம் எதிர்பார்க்கும் அமைதியை ரசித்தபடி) …நம்ம பக்கம் இருந்தும் எதிர் பக்கம் மாதிரி நடக்கிறாங்க.

புத்தகரம் மக்களுக்காக நான் அமைச்சரிடம் போய் இந்த கோரிக்கையையோடு நிக்கறப்போ, அவங்க என்ன பண்ணுறாங்க தெரியுமா? ‘அது முடியாது, சாங்க்ஷன் கிடைக்காது’ன்னு வாயில் புலம்புறாங்க.

(கூட்டத்தில் சிரிப்பு, கைதட்டல். பக்கத்தில் இருந்த கவுன்சிலர் வியர்வை துடைக்கிறார்.)

புகழ்வண்ணன் பெருமித சிரிப்போடு, “அவங்களுக்கு நான் ஒரே ஒரு வார்த்தை சொல்கிறேன் — ‘உங்க புகழ்வண்ணன் இருக்குறவரை, எதுவும் முடியாம போகாது!’”

(“வாழ்க! வாழ்க புகழ்வண்ணன்!” என்று தொண்டர்கள் கத்துகிறார்கள். அவர் கையை உயர்த்தி அமைதிக்கான சைகை கொடுக்கிறார்.)

“எதிர்க்கட்சியோ, நம்மக்குள்ளிருக்கும் சந்தேகக்கட்சியோ — யாராலும் புத்தகரம் முன்னேற்றம் தடுக்க முடியாது. ஏன்னா… நான் இருக்கிறேன்!

மக்களே நினைவில் வையுங்கள் — புகழ்வண்ணன் இல்லாத புத்தகரம் என்பது, கதிரவன் இல்லாத வானம் மாதிரி! ”

(கை முழக்கத்தில் ரோலக்ஸ் சூரிய ஒளியில் மின்னுகிறது. மேடையில் மாலை, சால்வை, கையேந்தல்கள். கீழே ஆரவாரம் — முகங்கள் தெரியாத கைதட்டல்கள். தர்மலிங்கம் அய்யா அமைதியாக அமர்ந்திருந்தார். முகத்தில் ஓய்வு, மனதில் ஒரே கேள்வி: “ஏன் இவர்கள் இவ்வளவு ஆர்வமாக பொய்யை கொண்டாடுகிறார்கள்?”)

அடுத்து தர்மலிங்கம் அய்யா பேச அழைக்கப்பட்டார். அவர் மெதுவாக எழுந்து, மைக்குப் போனார்.

புகழ்வண்ணன், கண்களை நிமிர்த்தியபடியே, முகத்தில் ஒரு சிரிப்பு இல்லாத சிரிப்போடு பார்வை பார்த்தார். தர்மலிங்கம் அய்யா மைக் பிடித்தார். குரலில்

சத்தமோ சாகசமோ இல்லை. ஆனால் ஒரு அமைதி இருந்தது — விழிப்புள்ளவர்களுக்கு கேட்கக் கூடிய அமைதி.

“இந்த சமுதாயப் பூங்கா, ஒரு நல்ல முயற்சி. ஆனால், இந்தப் பூங்கா ஒரு தனி மனிதனின் உழைப்பால் வந்தது அல்ல. இது உங்கள் உழைப்பு. உங்கள் வரிப்பணம். உங்கள் கோரிக்கை. மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது அரசின் கடமை. இதில் எந்தத் தனி மனிதனுக்கும் பெருமை இல்லை. நாம் ஒருவரைப் புகழ்ந்து பேசுவதால், நம் பிரச்சனைகள் தீர்ந்துவிடாது. நாம் சிந்தித்தால் மட்டுமே, நாம் முன்னேற முடியும்.”

மேடையில் ஒரு மெளனம்.

புகழ்வண்ணன் தன் சட்டையின் காலரை இழுத்துவிட்டுக்கொண்டார். அசௌகரியமா? இல்லை, வியர்வையா? அறிய முடியவில்லை.

தொண்டர்கள் விழியால் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். கருணாகரன், கீழே குனிந்து எதையோ தேடுவது போல் நாடகமாடினார். குமரேசன், மொபைலில் வாட்ஸாப்பை வெறுமனே ஸ்க்ரோல் பண்ணினார்.

“இன்று நாம் மகிழ்ச்சியடைகிறோம் என்பது உண்மை. ஆனால் இந்த மகிழ்ச்சி ஒரு சிறிய வெற்றியின் வெளிப்பாடே தவிர, முழுமையான தீர்வல்ல. இந்த பூங்கா ஒரு ஆரம்பம் மட்டுமே. நிஜத்தில், இந்த கிராமத்தில் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு — அனைத்திலும் இன்னும் வளர வேண்டிய பாதைகள் இருக்கின்றன.

இன்னும் எத்தனையோ கிராமங்கள் சுற்றி இருக்கின்றன; அவற்றில் குடிநீர், கழிப்பறை, போக்குவரத்து வசதிகள் இல்லை. குழந்தைகளுக்குப் பாடசாலை கூட இல்லை.

அந்த உண்மைகளை மறந்து, ஒரு பூங்கா நம் தேவைகளின் உச்சம் என்று எண்ணிவிடுவது மிகுதியான நம்பிக்கை.

நாம் விழாக்களை கொண்டாடுவதை விட, விழிப்புணர்வை வளர்ப்பது முக்கியம். ஓட்டுப் போடும் எண்ணிக்கையை விட, ஓர் உணர்வுள்ள மனதை உருவாக்குவதுதான் நம் முன்னேற்றம்.”

அவர் பேசி முடித்தார். மேடை ஒரு சில நொடிகளுக்கு மெளனமாக இருந்தது.

மெல்லிய கைதட்டல். அதுவும் சில இடங்களில் மட்டும்.

புகழ்வண்ணன், தன்னுடைய விரல்களால் இரண்டு முறை மெதுவாகத் தட்டினார். அது கைதட்டலா, ஏமாற்றமா, யாரும் புரியாத வகையில் இருந்தது.

தர்மலிங்கம் அய்யா, அமைதியாக மீண்டும் அமர்ந்தார்.


விழா முடிந்ததும், மக்கள் சுழல் காற்றில் விரிந்த தூசி மாதிரி பரவிப் போய்விட்டனர். சிலர் பேசிக்கொண்டே சின்ன சிக்கலாய் நடந்து சென்றனர்; சிலர் மோட்டார் சைக்கிளின் குரலில் வேகமாக பாய்ந்தனர். மேடையில் இருந்த பாராட்டு குரல்கள்? இப்போது அவை சாலையோர சத்தங்களாக மாறி, ஒரு சின்ன நினைவுப்பூச்சியாக மட்டுமே மீதமிருந்தன.

புகழ்வண்ணன், தன்னைச் சுற்றிய அடைமொழிகள் தூக்கும் கூட்டத்துடன், காரை நோக்கி பெருமிதம் ஊர்ந்து நடந்தார். இடையே, யாராவது பார்த்தால் மரியாதை காட்டும் ‘கடமை’ தலைஅசைப்பு; ஆனால் உள்ளுக்குள் ஒரு கசப்பான கோபம் தீபமாக ஒளிர்ந்து கொதித்துக் கொண்டிருந்தது.

அப்போதுதான் அது நடந்தது.

கார் நின்றிருந்த இடத்தில் ஒரு திறந்த சாக்கடை ஓடிக் கொண்டிருந்தது. மழை காரணமாக அதில் சகதியும், குப்பையும் கூடிக் கலைந்த வண்ணம் ஓடியது. வாசனை அசிங்கமாய், வெறுமை நிறைந்ததாக பரவியது. ஆனால் புகழ்வண்ணனுக்கு அவை எதுவும் தெரியவில்லை; தெரியவேண்டும் என்பதுமில்லை. அவரது விழிகள் மேடையில் கலைந்து செல்லும் கூட்டத்தையும், தன்னை வணங்கிச் செல்லும் மக்களையும் மட்டுமே பார்த்துக்கொண்டன — மற்றதெல்லாம் அவருக்குக் தெரியவில்லை.

அவர் காலை வைத்தார்.

‘சளக்!’

அவரது விலைமிகுந்த ‘பிரீமியம்’ வேட்டி, வடியாத சாக்கடை நீரில் நனைந்தது. அதன் ஓசை, ஒரு மேடையின் வீழ்ச்சியை ஒலித்தது. ‘ரோலக்ஸ்’ கடிகாரம் சற்று மங்கியது; அதில் மேக நீரின் ஒளிக்கதிர் தவழ்ந்தது. விலை உயர்ந்த லெதர் செருப்பு சாக்கடையில் மண்ணோடு கலந்தது. அவர் சிறிது தடுமாறி விலகினார். ஆனால் விழுந்தது மேடையிலிருந்து அல்ல — அந்த மேடையால் உருவாக்கப்பட்ட உண்மையற்ற பெருமை உணர்விலிருந்து.

தொண்டர்கள் தயக்கம் கொண்டனர். அவர்கள் வணங்குவதும், வாழ்க சொல்வதும் பழகியவர்கள். இந்த சூழ்நிலைக்கான இயக்கங்கள், அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லையல்லவா?

முதலில் கருணாகரன் ஓடினார். வேட்டியை மடித்தார். பிறகு குமரேசன் சட்டையை கழட்டி, முகத்தில் பசும்பொறுமை காட்டியபடி — அதிகாரத்தை காப்பாற்றும் பழக்கத்தோடு — அவரை தூக்கியெழுப்ப, கழுவ, துடைக்கத் தொடங்கினர்.

அந்த நேரம்… நாய்கள் குரைத்தன.

இதுவரை வாலை அசைத்து ஓரமிருந்த நாய்கள், இப்போது ஒரே சப்தத்தில் குரைத்தன. சட்டை, வேட்டி, எல்லாம் மாசாக இருந்தாலும், “இவர் இன்னும் எம்.எல்.ஏ தான்!” என்ற தொண்டர்களின் தன்னம்பிக்கை இன்னும் நிலைத்திருந்தது. ஆனால் நாய்கள் — அவைகளுக்கு பதவி, அதிகாரம் என்று ஒன்றும் புரியாது; வாசனைதான் உண்மை, சத்தியம். அந்த வாசனையே இப்போது மாறிவிட்டதல்லவா?

புகழ்வண்ணன், நிமிர்ந்து பார்த்தார். அவருடைய முகத்தில் கோபம் இல்லை. குழப்பம் மட்டும். அது தூண்டியது ஒரு அசௌகரியத்தை. தொண்டர்கள் அவரைச் சுற்றி, “ஐயா… காருக்குள்ளே ஏறுங்க… வீடு போயிடலாம்…” என்றனர்.

அந்த நேரத்தில், சாலை முழுக்க பரந்த அமைதிக்குள் சைக்கிள் ஓசை ஒலித்தது — மெதுவான சுழற்சி, ஆனால் தெளிந்த தீர்மானம். தர்மலிங்கம். பழைய சட்டை, பழைய சைக்கிள், சறுக்கலான அழுக்குத் தோற்றம். ஆனால் முகத்தில் ஒரு ஜோதி — வெண்மை இல்லாமல், வெளிச்சம் போல ஒளிரும் சித்திரம்.

அவர் யாரையும் பார்த்துக்கொண்டே இல்லை. யாரையும் நம்பவைக்கும் புன்னகையும் இல்லை. தனது வழியில் மெதுவாக சென்றுகொண்டார். கூட்டத்தில் ஒருவரும் கவனிக்கவில்லை. அவரோ — யாரும் கவனிக்கவேண்டும் என்பதற்காக வந்தவர் அல்ல.

புகழ்வண்ணன் நிமிர்ந்து ஒரு கணம் அவரைப் பார்த்தார். கேள்வியும் பதிலும் இல்லாத பார்வை. ஆனால் அதில் ஒரு நெருங்கிய குழப்பம், மெல்லிய அசௌகரியம் கலந்து இருந்தது. பின் எதுவும் சொல்லாமல், காருக்குள் நுழைந்தார். அவருடைய முகத்தில் ஒரு தீர்மானமற்ற நிலைதடுமாற்றம். அந்த முகம்… சில நொடியேனும் உண்மையாயிருந்தது.

கார் மெதுவாக நகரத் தொடங்கியது. பின்புறம் நாய்கள் குரைத்துக்கொண்டே பின் தொடர்ந்து வந்தன. முன்னால் ஒரு சைக்கிள் நகர்ந்தது — பழைய இரும்புச்சக்கரம், மெதுவான சுழற்சி. எதற்கும் எதிர்பாராத, ஆனால் எதையோ சென்று சேரும் போல.

அந்த நகர்வில் அமைதி மட்டும் அல்ல –

சற்று மதிப்பும் இருந்தது.

சு.அப்துல் கரீம் சு.அப்துல் கரீம் (மே 1979) மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர். கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் கணிதம் படித்து, பின்னர் கணினி பயன்பாடுகளில் முதுநிலை பெற்றார். தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் மென்பொருள் நிபுணராகப் பணியாற்றி வருகிறார். தொழில், வாசிப்பு, எழுத்து என அனைத்தையும் ஒருங்கே இணைத்து மதுரையில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். சிறுவயதிலிருந்தே புத்தக வாசிப்பில் ஆர்வம் கொண்ட இவருக்கு, அந்த வாசிப்பு தமிழின் மீதான காதலாகவும், பின்னர் எழுத்தின் மீதான…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *