வக்கணை
கதையாசிரியர்: வீ.அய்யனார்
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: August 9, 2026
பார்வையிட்டோர்: 99
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல – ஒரு வெறகு வெட்டி இருந்தா. தெனக்கிம், மலயில போயி, வெறகு வெட்டி பொளச்சுக்கிட்டிருந்தா. அவனுக்கு ஒரு மக் இருந்தா. அவன, ஆடு மேய்க்க போகச் சொன்னா. அண்ணக்கி, சாரமழ சல்சல்லுண்டு அடிக்குது. அடிக்கவும், எனக்கு கானம் வறுத்துக்குடு, அப்பத்தா, ஆட்டுக்குப் போவேண்டு சொன்னா.
சரிண்டு, அவனுக்கு கானம் வறுத்துக் குடுத்தா. குடுக்கவும் ஆடுகள மேய்க்கப் பத்திக்கிட்டு போறா. பகலெல்லாம் ஆடுகள மேச்சுட்டு ஒரு எடத்ல ஆடுகளப் படுக்கப் போட்டுட்டு, இவ், வறுத்த கானத்தத் திங்கிறா.
திங்கயில -, ஆடுக, கருவேல நெத்து திண்டதுனால ஆடுக, அசக்குப் போடுதுக, அசகுக்குப் போடயில, கருவேல வெதய கடுபுடு – கடுபுடுண்டு மெல்லுதுக. ஆடுக, கடுபுடுண்டு மெல்லவும், இவ், நம்மள, ஆடுக, வக்கண குத்துதுண்டு நெனச்சு; என்னா ஆடுகளே!! என்னய வக்கண குத்துறீங்களா? ஒங்கள இப்ப என்னா செய்யிறே பாருங்கண்ட்டு, அருவாள எடுத்து; எல்லா ஆடுகளயும் வெட்டிப் போட்டுட்டா. வெட்டி எறிஞ்சிட்டு, வீட்டுக்கு வந்தா.
வீட்டுக்கு வரவும், எங்கடா மகனே? ஆடுகளண்டு அப்ப கேட்டா. கேக்கவும், ஆடுகளப் படுக்க போட்டுட்டு, கானந் திண்டே, அதுக என்னய வக்கண குத்துச்சுக. பூரா ஆடுகளயும் வெட்டி எறிஞ்சுட்டேண்டு சொன்னா.
அடப்பாவி! இப்டியா செய்வேண்டு, ரெண்டு போடு போட்டா. மறுநா விடிஞ்சுச்சு, இவன, வீட்ல இருடாண்ட்டு, வெறகு வெட்டப் போறா. வெறகு வெட்டப் போகயில, எனக்கு கானம் வறுத்துக்குடு, அப்பத்தா வீட்ல இருப்பேண்டு சொல்றா. கானம் வறுத்துக் குடுத்திட்டு, வீட்ல, இருடாண்ட்டு போயிட்டாங்க. பெத்த மனசு; எத்தன தப்பு செஞ்சாலும் மன்னிக்குது.
தாயுந் தகப்பனு, வீட்ல இருடாண்ட்டு மலக்கிப் போயிட்டாங்க. நல்லா மல்லாந்து கட்ல்ல படுத்துக்கிட்டா. படுத்துக்கிட்டு, வறுத்த கானத்த திண்டா. அப்ப, மொகட்ல ஒரு எலி, கூரயக் ‘கடுக் – கடுக்ண்டு கொறிக்குது. இவனுங் கடுக்-கடுக்ண்டு மெல்றா. எலியுங் கூரயக் கடுக்-கடுக்ண்டு கொறிக்குது.
கொறிக்கவும் -, என்னா எலியே! நா கானந் தின்னுறத வக்கணையா காட்டுற, ஒன்னய கொல்றே பாருண்ட்டு, வீட்ல திய்ய வச்சு விட்டுட்டா.
தாயுந் – தகப்பனும் காட்ல இருந்து, வீட்டுக்கு வந்தாங்க. வந்து பாக்கயில, வீடு வெந்து போயிக் கெடக்கு. என்னடா? இப்டிண்டு கேக்கவும் -, நா கானந்திண்டே, ஒரு எலி என்னயப் பாத்து வக்கண காட்டுச்சு. எலிய கொல்றதுக்கு, திய்ய வச்சேண்டு சொன்னா. சொல்லவும் இண்ணக்கி நம்ம வீட்டக் கொளுத்துனவ், நாளக்கி, அடுத்தவங்க வீட்டயும் கொளுத்துவாண்ட்டு; வாடா! எங்க கூடண்டு, மலக்கிக் கூப்ட்டுக்கிட்டு போறாங்க.
கொண்டு போன கஞ்சிக் கலயத்த, மரத்ல தூக்கி விட்டுட்டு தகப்ப வெறகு வெட்டுறா. தாயி அத எடுத்து ஒண்ணு சேக்குறா.
வேல செஞ்சுகிட்டிருக்கயில, இவனுக்கு அகோரப் பசி படுத்துக்கிட்டே மேல பாத்தா. கலயத்ல கஞ்சி இருக்கு. ஒரு கல்ல விட்டெறிஞ்சா. எறியவும் -, கலயம் பொத்துக்கிருச்சு. பொத்துக்கிறவும் -, கஞ்சி ஒழுகுது. ஒழுக – ஒழுக பூரத்தயும் குடுச்சுட்டா.
மத்தியானமாச்சு, தகப்ப கஞ்சி குடிக்க வந்தா. வந்து பாத்திட்டு, எங்கடா? கஞ்சிண்டு கேட்டா. கேக்கவும் -, அந்தா இருக்குலப்பா, வெல்லக்கட்டிண்டு, ஓட்ட வழியாத் தெரியிற மேகத்தக் காம்ச்சா.
காமிக்கவும் இவனுக்கு ரொம்பக் கோவம். கோவமா இருக்கயில, இவ சும்மா இருக்க மாட்டாம, இந்த ஆறு எங்கப்பா போகுதுண்டு கேட்டா. பசி வேகத்ல, இந்த ஆறு, ஒங்க நடு வீட்டுக்குப் போகுதுண்டு சொல்லிட்டா.
சொல்லிட்டு, வெறகு வெட்டப் போயிட்டா. போகவும், இவ், வெறகெல்லாம் எடுத்து-எடுத்து, ஆத்ல எறிஞ்சிட்டா. வெறகு வெட்டி முடிஞ்சதும், வெறகு கெடக்ற எடத்துக்கு வந்தா. வெறகு ஒண்ணு கூட இல்ல. எங்கடா வெறகுகளண்டு கேட்டா.
கேக்கவும் -, இந்த ஆறு எங்க போகுதுண்டு கேட்டே. நடு வீட்டுக்குப் போகுதுண்டு சொன்னயில -, அதா, ஆத்ல எடுத்து போட்டுட்டேண்டு சொன்னா.
இந்நேரம் நடு வீட்டுக்குப் போயிருக்கும்ப்பாண்டு சொன்னா. நடு வீட்டுக்கு போயிருக்குமா? நிய்யும் நடு வீட்டுக்குப் போடாண்டு, அடிச்சுத் தூக்கி ஆத்ல போட்டுட்டா. ஆதல் போறா. போகயில –
பாட்டாளி வாரர் பாடிப்புடி
தேட்டாளி வாரர் தேடிப்புடி-ண்டு
சொல்லிக்கிட்டே…. வெள்ளத்ல மெதந்துகிட்டு போறா.
பலர் அங்கிட்டொருத்த, வாழக்கி காவ காத்துக்கிட்டிருந்தவ்; இதென்னாடா, இப்டி சொல்லிக்கிட்டுப் போறா. இவனத் தூக்குனா, நமக்கு தொணயா இருக்கும்ண்ட்டு, தூக்குனா.
தூக்கி , உம்பேரு என்னாண்டு கேட்டா கேக்கவும், “தோல் இருக்க சொள முழுங்கி”ண்டு சொன்னா.
சொல்லவும் வாழத் தோட்டத்த பாத்துக்க, நா வீட்டுக்குப் போயிட்டு வரேண்டு சொல்லிட்டுப் போயிட்டா. போகவும் -, தோலு இருக்க, பழத்த பூராவும் பிதுக்கி – பிதுக்கித் திண்டுட்டா. வீட்டுக்கு போயிட்டு தோட்டக்கார வந்தா. வந்ததும் எங்கடா? பழத்தக் காணம்ண்டு கேட்டா. நாந்தா சொன்னனில்ல – எம்பேரு தோல் இருக்க சொள முழுங்கிண்டு, அதா திண்டேண்டு சொன்னா. சொல்லவும், அவனும் அடுச்சுத் தூக்கி ஆத்ல போட்டுட்டா. போடவும்,
பாட்டாளி வாரா பாடிப்புடி
தேட்டாளி வாரா தேடிப்புடி-ண்டு
சொல்லிக்கிட்டே மெதந்துகிட்டுப் போறா. அங்கிட்டொருத்த, நெல்ல அடிச்சு, களத்ல குமுச்சு வச்சிட்டு, காவ ஒக்காந்திருக்கா. ஆத்ல போனவனத் தூக்கி, உம்பேரு என்னாண்டு கேட்டா. கேக்கவும் -, எம் பேரு “சூட்டச் சுத்திப் பொறிப் பெறக்கி”ண்டு சொன்னா.
அப்ப, நெல்லப் பாத்துக்க. நானு வீட்டுக்குப் போயிட்டு வரேண்ட்டு போறா. போகவும் -,
போகவும் -, நெல்லுல திய்ய வச்சு விட்டுட்டு, சுத்தி வி ழுகுற பொறியப் பெறக்கி திண்டுகிட்டிருந்தா.
நெல்லுக்கார் வந்தா. என்னாப்பா இப்டி செஞ்சுட்டேண்டு கேட்டா. நாந்தா அப்பவே சொன்னனில்ல: எம்பேரு சூட்டச் சுத்திப் பொறிப் பெறக்கிண்டு. அதா பொறி பெறக்குரேண்டு சொன்னா.
சொல்லவும் அவனும், அடிச்சு ஆத்ல தூக்கிப் போட்டுட்டா. போடவும்,
பாட்டாளி வாரா பாடிப்புடி
தேட்டாளி வாரா தேடிப்புடி-ண்டு
சொல்லிக்கிட்டு, மெதந்து போறா. போகயில -,
அங்கிட்டொரு வண்ணர், துணி தொவச்சுக்கிட்டிருந்தா. இவ சொல்லிக்கிட்டு வர்ர சத்தங்கேட்டு, தண்ணிக்குள்ள இருந்து தூக்கி, துணிகளுக்கு காவ இருடாண்ட்டு; வண்ணர் வீட்டுக்குப் போயிட்டா. வீட்டுக்குப் போயிட்டு வரங்குள்ள, பட்டுத் துணிகௗவா பெறக்கியெடுத்துக்கிட்டு ஓடிப் போயிட்டா வெகுதூரம் போயி, ஒரு புளிய மரத்ல பட்டுத் துணிகள கெட்டி விட்டுட்டு, மரத்துக்கு கீழ ஒக்காந்துகிட்டா.
அப்ப, அந்த வழியா ஒரு குதுரக்கார் வந்தா, வந்தவ், என்னாப்பா இதுண்டு கேட்டா. கேக்கவும் -, இதாங்க பட்டு காக்கிற மரம்ண்டு சொன்னா. சொல்லவும் -, இந்த மரத்த வெலைக்கி தாரயாண்டு கேட்டா. கேக்கவும் – நூறு பவுங்காசுண்டு சொன்னா.
வெலச் சொல்லிட்டு, இந்தக் காப்ப (மகசூல்) நா எடுத்துக்குறே. அடுத்த காப்பு ஒனக்குண்டு சொன்னா. குதுரக்கார சரிண்ட்டா. பட்டுத் துணிகள எடுத்துக்கிட்டு, காச்சாப் பாரு; காய்க்கலண்டா, தண்ணிய நல்லா காயவச்சு ஊத்துண்டு சொல்லிட்டு, குதுரயப் புடுச்சுக்கிட்டுப் போறா.
போயி -,ஒரு எடத்ல, குதுரய கெட்டி வச்சிட்டு, குதுரச் சாணில பவுங்காசுகளப் பெதச்சு வச்சு, தெரியாததுபோல கிண்டிக்-கிண்டி எடுத்துக்கிட்டிருக்கா. எடுத்துகிட்டிருக்கயில-, அங்கிட்டிருந்து, தகப்பனும் மகனும் பொண்ணுப் பாக்க வராங்க. வந்தவங்க, என்னாப்பா! சாணில இருந்து பவுங்காச எடுத்துக்கிட்டிருக்கண்டு கேட்டாங்க.
அதுக்கு இவ, இது பவுங்காசு போடுற குதுர, இப்பத்தா சாணி போட்டுச்சு. அதுல இருந்த பவுங்காசக் கௌச்சு (கிண்டி), எடுத்துக்கிட்டிருக்கேண்டு சொன்னா.
சொல்லவும், அவங்க, இந்தக் குதுரய வெலைக்கித் தாரயாண்டு கேட்டாங்க. கேக்கவும் -, இவ், ஆயிரம் பவுங்காசு குடுங்கண்டு சொன்னா, சரிண்ட்டாங்க. ஆயிரம் பவுங்காச வாங்கிக்கிட்டு, பவுங்காசு போட்டாப் பாரு, போடலண்டா; குதுரய படுக்க வச்சு, ஒலக்கயப் போட்டு அமுக்குங்கண்டு சொல்லிட்டு போயிட்டா.
இவங்க, இப்ப பவுங்காச போடும், பெறகு பவுங்காசு போடும்ண்டு, பொறுத்துப்-பொறுத்துப் பாத்தாங்க.பவுங்காசு போடல. குதுர சாணிதே போடுமா! பவுங்காசா போடும்? போடாம இருக்கவும் -, குதுரய விழுக்காட்டி, ஒலக்கய போட்டு அமுக்குனாங்க. அமுக்கவும் -, குதுர செத்துப் போச்சு. தூக்கி தூரப் போட்டுட்டுப் போயிட்டாங்க.
இவ,போனவ – அந்த வழியா திரும்பி வாரர். திரும்பி வரயில – குதுர செத்துக் கெடக்கு. இவங்களக் காணம், இந்தக் குதுரய வச்சு, பணஞ் சம்பாரிக்கணும்ண்டு நெனச்சுக்கிட்டு ஒக்காந்திருக்கா. ஒக்காந்திருக்கயில் குதுரயத் திங்கிறதுக்கு பொச்சு வழியா, ஒரு கழுகு மொளஞ்சு போயிருச்சு. ஈரலு கீரலுத் திங்கலாம்ண்டுப் போயிருச்சு.
போகவும் – பாத்துக்கிட்டு இருந்தவ, ஓட்டமா ஓடி, வைக்கோற்புல்ல சுருட்டிக்கிட்டுப் போயி பொச்ச அடச்சுப்பிட்டா அடைக்கவும் -, கழுகு பறக்குது. கழுகு பறக்கவும் -, குதுர எந்திரிச்சு நிண்டுகிருச்சு.
அப்ப, அந்த வழியா, தகப்பனும் – மகனும் மாடு புடிக்க வராங்க. வந்தவங்க, குதுரயப் பாத்தாங்க. பாக்கயில; இவ, குதுர பறக்கும்ண்டு சொல்றா. பறக்கும்ண்டு சொல்லவும் -, பத்தாயிரம் பவுன்காசு குடுத்து குதுரய வாங்கிக்கிறாங்க.
பத்தாயிரம் பவுங்காச வாங்கிக்கிட்டு, குதுரய வகுத்ல ஒரு தட்டுத் தட்னா சுமாராப் பறக்கும். ரெண்டு தட்டுத் தட்னா ரெம்ப ஒயரத்ல பறக்கும். ரெம்ப ஒயரத்ல் பறந்திச்ண்டா, குண்டில இருக்ற வைக்கோற் புல்ல, எடுத்து விட்ருங்கண்டு சொல்லிட்டுப் போயிட்டா.
இவங்க, அப்பனும் மகனும், குதுரயில ஏறுனாங்க. ஏறவும், குதுர வகுத்துக்குள்ள இருக்ற கழுகு பறக்க ஆரம்பிக்குது. வகுத்ல ரெண்டு தட்டு தட்டுனாங்க. குதுரயத் தூக்கிக்கிட்டு, கழுகு பறந்து போகுது. போகவும் ரெம்ப மேல போயிருச்சுண்ட்டு, குண்டில அடச்சு வச்சிருந்த வைக்கல எடுத்து விட்டுட்டாங்க. எடுத்து விடவும் -. கழுகு குண்டி வழியா வெளிய வந்திருச்சு. கழுகு வெளிய வந்திச்சோ இல்லயோ! குதுர, இவங்க, தல விழுதா வாராங்க. வந்து; மொந்து மொந்துண்டு விழுந்து செத்துப் போனாங்க. பெறகு பவுங்காசுகள வீட்டுக்குக் கொண்டு போயி -, அப்பங்கிட்டக் குடுத்து, நெலம்பொலம் வாங்கி, நல்லா பொளச்சாங்களாம்.
– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், நகைசுவைக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசா பல்கலைக் கழகம், மதுரை.
தொடர்புள்ள சிறுகதைகள்
லார்ட் பெட்லிங்டனும் அப்புசாமியும்
ஜ.ரா.சுந்தரேசன்
August 19, 2026
பங்கு – பாகம்
வீ.அய்யனார்
August 9, 2026
பூதம் – கீதம்
வீ.அய்யனார்
August 9, 2026