‘ள்’ என்பதனால்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 23, 2026
பார்வையிட்டோர்: 100 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவள் பார்த்துக் கொண்டிருப்பாள். வழமையாக வரும் நேரமானதும் தேனீரைத் தயார் பண்ணி வீதியில் கண்களை வைத்திருப்பாள். போகமுடியாமல் போகும் நாட்களில் அவளது முகம் சிவந்து விடுவதாக அவளின் அம்மா சொல்வாள். அடுத்த தினத்தில் கோபிப்பாள். “இனிப் பேசப் போவதில்லை எப்போதுமே” 

இரண்டு நிமிடத்தில் “ஏன் வரவில்லை”
ஏதாவது பொய்க் காரணம் சொல்வேன். 

“உனக்கு பொய்கூட சொல்லத் தெரியாது’ எனது வரவினமைக்கான காரணத்தை அவளாகவே கூறுவாள். அது ஒன்றிரண்டு முறை மாத்திரமே தவறாக இருந்தது பெரும்பாலும் உண்மையைக் கண்டுபிடித்து விடுவாள். நான் புகைத்த சிகரட்டுகளின் எண்ணிக்கை தொடங்கி, என் சிரிப்பு – அழுகை, கவலை எல்லாவற்றுக்கும் காரணங்களை அறிந்து வைத்திருந்தாள். 

நீ கவலைப்படுகிறாய் 
ஏனெனில், 
நீ அவசரப்பட்டுக் கொண்டிருக்கிறாய், 
நீ அவசரப்படுகின்றாய். 
ஏனெனில், 
நீ கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறாய். 

என்ற கவிதையையும். பெஞ்சமின் ஸஃபானியாவையும் அவள்தான் அறிமுகப்படுத்தினாள். 

எனை உட்காரப்பண்ணி சென்ற ஆண்டின் சாதனைகளையும், புத்தாண்டின் எண்ணங்களையும் வரையச் சொல்வாள். அவள் தாதியாய் இருந்ததாலோ என்னவோ, அவளது அணுகுமுறைகள் மெதுவானதாயும், இதமானதாயும் இருந்தன. என் கால்கள் பந்தில் அடிப்பட்டு – பந்தின் பின் ஒருவனின் கால் இருந்தது – பாதம் விலகி வேறுபக்கமானபோது காலைத்தடவி எண்ணைவிட்டு சுளுக்கிழுத்து, என்னவெல்லாமோ வறுத்து கலவையாக்கி ஒத்தனம் கொடுத்தாள். காதை முறுக்கி விளையாடாமல் படிக்கச் சொல்வாள். பின்னர் மெதுவாக “விளையாடாமல் உன்னால் இருக்கமுடியாது. விளையாடு கவனமாய், காலுக்கு எதுவும் ஆகாமல்” 

அவளைக் காணாமல் கதைக்காமல் இருக்க முடியாதிருந்தது. என்னால் தாங்கமுடியாது, என நான் கருதியவற்றைக் கூட ஏற்றுக்கொள்ளக் கூடிய சக்தி அவளிடமிருந்துதான் வந்தது. கண்கள் இரண்டும் வீசிய ஒளி நெற்றிப் பொட்டை அருட்டி நரம்புகளுடாக உடலெங்கும் பரந்து திரட்சி தந்தது. என் வாழ்க்கையைக் கூட அண்ணளவாய் அவள்தான் ஓட்டிக்கொண்டிருந்தாள். என் நண்பர்களெல்லாம் அவளது நண்பர்கள். அவள் எப்போதும் இனிமையாகக் கதைப்பதாகவும், குறைவிடாமல் உபசரிப்பதாகவும் அவர்கள் சொன்னார்கள். வீட்டில் எல்லோருக்கும் அவளைத் தெரியும். அவள் எனக்கு யார் என்பதும், எனை எப்படி மாற்றியிருக்கிறாள் என்பதும் கூடத் தெரியும். அப்பா இறந்த போதும், அம்மப்பா இறந்திருந்த போதும் வந்து அந்நியப்பட்டு நின்று கொள்ளாமல் வேலைகளெல்லாம் செய்தார்கள். காலைச் சாப்பாட்டுக்கு இடியப்பமும், சம்பலும் கூடக் கொண்டு வந்து தந்தார்கள். ஆனாலும், செத்த வீட்டுக்கு வருமுன்பிருந்தே என் சொந்தங்களுக்கு அவர்களெல்லோரையும் தெரிந்திருந்தது. 

நானும் அவளும் கடைக்குக் கிளம்பினோம். அவளை அழைத்துக் கொண்டு சென்றுவர யாரும் இல்லாததனால், தன்னை அழைத்துப் போகும்படி நேற்றே கூறி இருந்தாள். நாளை அவளின் கல்வியகத்தில் நடைபெற இருக்கும் விழாவிற்குரிய பொருட்களைக் கொள்வனவு செய்து விடவேண்டுமெனவும், முன்புறம் நீளாமலும் – கட்டையாய் சுறுளாமலும் இருக்கும் தலைமயிரைச் சீர்படுத்திக்கொள்ள வேண்டும். என்ற நோக்கில்தான் கிளம்பினோம். இதற்கு முன்னம் பெண்கள் யாரையும் ஏற்றிக் கொண்டு சென்றதில்லை. அம்மாவுக்குச் சைக்கிளில் இருக்க முடியாது. அக்காவைச் சிறியவளாய் இருக்கும்போது ஏற்றிச் சென்றிருக்கின்றேன். அதுவும் மனதுக்குள் ஏசிக் கொண்டுதான், எனை தூக்கம் கவ்வும் போதுதான் அவளுக்கும் வகுப்புகள் இருக்கும். எனது கால்கள் பெடலை எட்டமுடியாத நிலையில் கஷ்டப்பட்டு வகுப்புகளுக்கு கொண்டு போய் விட்டிருக்கிறேன், வெள்ளைப்பால இறக்கத்திலும், நடராஜா டீச்சர் வீட்டுக்கு முன்னும் விழுத்தியும் இருக்கிறேன். இவற்றை விட சந்தைக்கருகில் நிற்கும்போது நகரினுள் வெடித்த குண்டுக்குப் பயந்து மிதித்ததில் முன்னே போய்க்கொண்டிருந்த கிழவரை இடித்து விழுத்தியும் இருக்கின்றேன். இதன் பின் அவள் தானாகவே சைக்கிளோட்டக் கற்றுக்கொண்டாள். எனக்கு இப்போது சைக்கிள் தொடர்பான சகல வல்லமைகளும் வந்துவிட்டது. கையை விட்டு ஓட, “பிரேக்கே” இல்லாத சைக்கிளில் ஓட, இன்னொன்றைப் பிடித்துக்கொண்டு இரு சைக்கிள்களைக் கொண்டு சேர்க்க எனவும், இன்னும் பல திறமைகளும் கைவந்துவிட்ட பின்னர் அவளை ஏற்றிச் செல்கிறேன். 

மனது அலைந்தது. வரண்ட நிலப்பரப்பில் குளிர்க்காற்றின் வீச்சம் கண்டது. தளர்வு கண்ட மனம் இளகி சந்தோசத்தில் துடித்தது. என்னை நம்பியும் ஒருத்தி, எனை நம்பி ஒப்படைக்கப்படும் பொறுப்புக்கள், அவளது தலைமயிர் பறந்து என் முகத்தில் படும்போதெல்லாம் அவளை மிகவும் நெருங்கியவனாகிப் போய்விட்டதாய் உணர்ந்தேன். இனங்கண்டு கொள்ள முடியாத சந்தோச உணர்வுடன் வேகமாய் பல முகங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தேன், சென்று கொண்டிருந்தோம். தெரிந்த – தெரியாத முகங்களெல்லாம் கலப்புண்டு கிடந்தன பிரித்துணர முடியாமல், எல்லா முகங்களும் அறிமுகப்பட்டவைபோலவே இருந்தன. எங்களால் பின்னோக்கித் தள்ளப்பட்ட முகங்களில் அதிகமானவை உற்றுநோக்கிக் கொண்டுதான் கடந்துசென்றன. 

கடைக்குச் சென்று இறங்கினோம். அவளுக்கு ஏற்கனவே அறிமுகமாயிருந்த கடையாக இருக்க வேண்டும் என அவளது கதையாடல்களினூடாக ஊகித்துக் கொண்டேன். எனைக் காட்டி ஒருத்தி ஏதோ கேட்டாள். இவள் சிரித்து விட்டுப்பதில் சொன்னாள். என்னவாக இருக்குமென்பதை ஊகித்துக் கொண்டதனால் சுவரில் அசையாமல் ஓடிக்கொண்டிருந்த குதிரையை அவதானித்தேன். தொடர்ந்து உரையாடலுடன் பொருட்களை வாங்கினாள். 

“அபி…” எனை அவ்வாறுதான் அழைப்பாள்.

“இது நன்றாய் இருக்குமா”? 

“உனக்குப் பிடித்திருக்குமானால்” 

“உனக்காக எதையும் செய்யமாட்டாயா?” 

அவளுக்குப் பிடித்த நிறமொன்றில் தொங்கவிடும் அலங்கரிப்பானை வாங்கினாள். அது எனக்கும் பிடித்துத்தான் இருந்தது. 

“நல்லநிறம் – அழகானது” 

“உனக்கெல்லாம் நல்லதுதான். நட சலூனுக்கு” விரைவாய் நடந்தாள். அவளின் பின்னே நானும். 

காற்றைக் கிழித்து, முகங்களைத் தள்ளி சைக்கிள் போனது. சலூனைத் தாண்டியே நிப்பாட்டச் சொன்னாள். எச்சரிக்கை உணர்வு மனது கேட்டது. ஏன் பயப்படவேண்டும். நானோ, நண்பர்களோ இப்படியான எச்சரிக்கையுடன் கண்ணைத் திருப்பி யாரையும் தேடுவதில்லை. “ன்” “ள்” ஆகும்போது எச்சரிக்கைப்பட அதிகமிருந்தது. 

சலூனுக்கு முன் நின்றவர்கள் கிண்டல் பேச்சுடன் விரிந்து கொண்டார்கள். அந்த விரிவு எனக்குமட்டுமோ, அவளுக்கு மட்டுமோ உரித்தானதல்ல, இருவருக்கும். உள்ளே தலை முடியைத் திருத்த, தாடியை வழிக்க யாரும் இருக்கவில்லை. தலை சீவிக்கொண்டிருந்தவன் மட்டும் இழித்துக்கொண்டு வெளியேறினான். 

இங்கு வருவதற்குப் பயமாம், அதனால்தான் கண்ணாடியில் பார்த்துக்கொண்டு, அவளது விம்பத்துக்கு மட்டும் தெரிய, முன்னுக்கு நீட்டிக் கொண்டிருந்ததை வெட்டும்போதே அழகில்லாமல் போய்விட்டதாம். 

எனக்கு காதருகில் முடி சுருண்டிருந்தால் முடிவெட்டிக்கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டதென்றால் சலூனில் வெட்டிக்கொள்வேன். யாருக்கும் தெரியாமல் வெட்டிக் கொள்வதில்லை. இவளும் கூட வெட்டிக் கொள்ளலாம். அது அவளுடைய முடி. 

“போவோமா”? 

மீண்டும் இருவரும் சைக்கிளில், அவள் தலைமயிர் என் முகத்தில் படர, தெரிந்து தெரியாத முகங்களைக் கடந்து விரைந்தோம். எங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு கூட்டமாய் ஒருமித்த முகங்களும், தனியான முகங்களும் பறந்தன. 

அம்மா அழைத்திருந்தாள் கிழமையொன்றாக அவளைப் பார்க்கச் செல்லாததால் இருக்கலாம். அவசரத் தகவல்களின் பொருட்டு இப்படி அழைப்பு விடுப்பாள். பெரும்பாலும் அவள் அழைப்புக்கெனக் காத்திராமல் அவளிடம் இருக்கும் தகவல்களைப் பெறச் சென்று வந்து விடுவேன். இக்கிழமைக்கான அறிவுறுத்தல்களை வழங்குவதாக இருக்கலாம். சுருங்கிய முகத்துடன், 

“வா” என்றாள் 

“தேனீர்” 

“வேண்டாம்.” 

“யாரையோ சைக்கிளில் ஏற்றிக்கொண்டு திரிகிறாயாம்”

“யார் தெரியுமா”? 

“நான் உனது அம்மா -தெரியாமல் இருக்காது.” 

“மகனைச் சந்தேகப்படும் தாய்.” 

“அவளைக் கட்டப்போவதாகக் கதையடிபடுகிறது.” 

“ஊர் ஆயிரம் கதைக்கும் “

“உனக்கும் புத்தி தேவை.” 

“அது நன்றாக இருப்பதாக உணர்கிறேன்”

“சொந்தக்காரர்கள் கூடக் கேட்டார்கள்.” 

“முட்டையில் மயிர்பிடுங்க எல்லோருக்கும் விரும்பம்.” 

கூரான ஊசியொன்றுடனும், முடிவில்லா நூலைக் கொண்டும் அலைய வேண்டும். இரு உதடுகளையும் சேர்த்துத் தைத்துவிட்டு மௌன உரையாடல்களில் எல்லோரையும் திணித்து விட்டால் புண்ணியம். 

எனக்குப்போல அவள் இனிப்பானவள் எல்லோருக்கும். வாய்க்குள் போட்டு மென்று கொண்டிருந்தார்கள். 

விடுதியில் கட்டிலில் சாய்ந்திருந்தபோது கஜன் – நண்பன் கேட்டான். 

“நீ அவளை ஏற்றிக் கொண்டு போனாயா?”

“….” 

“கடைக்கார அக்கா சொன்னாள்.” 

விரல்களின் எண்ணிக்கைக்குள் அடங்காதவர்களிடமிருந்து அவளைப் பற்றிய கதையாடல். அவளிடம் கூட நிறையப்பேர் கேட்டிருக்கலாம். இதுவரை அவள் சொல்லவில்லை. நான் நொந்துவிடுவேன் என்ற மௌனம். 

அங்கு நுழையும் போது ஒவ்வொருமுறையும் புதிதாய்ப் பிறப்பேன். குறும்பும், விளையாட்டும் முளைவிடும் மூலைகளில் கிடந்த சந்தோசமெல்லாம் திரட்சியடையும். அங்கிருந்த சக்தியொன்று எனை வசப்படுத்தி விட்டதாக உணர்வு உறுத்தியது. 

நான் வீட்டுள் நுழையும்போது அவள் இல்லை. அவள் அம்மா நின்றாள். எனக்குப் பெரியம்மா அவள் கடைக்குச் சென்றிருப்பதாகச் சொன்னாள். நேற்று வராததையிட்டு கண்டிப்புடனும், அதிகாரத்துடனும் கேட்டாள். நான் அம்மாவிடம் சென்று வந்தமையிட்டு சந்தோசித்தாள். குடும்ப நிலவரம் பற்றியும், சுகதுக்கங்கள் பற்றியும், இருவரும் சம்பாசித்துக் கொண்டிருக்கும்போது அவள் சில பொருட்களை இட்ட பையுடன் வந்து சேர்ந்தாள். சிரிப்புடன் தேனீர் ஊற்றி வருவதாகக் கூறி எனை அமர்ந்திருக்கப் பணித்துவிட்டுச் சமையலறைக்குள் நுழைந்தாள். 

மீண்டும் பெரியம்மா தான் விட்டதிலிருந்து கதையைத் தொடங்கி இருக்க வேண்டும். எனக்குள் அவள்-அம்மா கடைக்கார அக்கா -கஜன் – பெரியம்மா – அவள் -அம்மா….உருவங்கள் ‘பெண் – பெண்” என்ற பின்னணியுடன் வலம் வந்து கொண்டிருந்தார்கள். பெரியம்மா கதைத்துக் கொண்டிருந்தாள். ஆனாலும் விட்ட இடத்திலிருந்துதான் தொடர்ந்தாள…. அவள் கதைக்கின்ற வார்த்தையில் கவனம் செலுத்துபவள் என்பதால் விட்ட இடத்திலிருந்துதான் தொடர்ந்திருப்பாள். அவள் விட்ட இடம் ஞாபகமில்லை. தொடங்கிய இடத்தில் நான் இல்லை. எனக்குள் சுழன்ற விம்பங்களும், பின் குரலும் எனை எங்கோ கொண்டு சேர்த்தது. 

அவளை அறைக்குள் இட்டுப் பூட்டினார்கள், முன் கதவில் “ஆண்கள் இங்கே நுழையாதிருப்பார்களாக” வாசகம் ஒட்டப்பட்டிருந்தது. வீதியெங்கும் சுவரொட்டி “திருமணத்தின் பின் மட்டும் ஆண் – பெண் கதைக்கலாம், பார்க்கலாம்” தலையில் வெயில் சுட நடக்கிறேன். நேற்று முடிவெட்டிய சலூன் முன் அதன் பெயருடன் புதிதாய் சிவப்பு நிற வாசகம் “ஆண்களுக்கு மட்டும்” ஆண்கள் தனியாய் அல்லது மனைவியுடன் சைக்கிளில், தலையைக் குனிந்த வண்ணம் பெண்கள். 

பெரியம்மா “அப்படித்தானே” என்றாள். அவளின் கதையை நான் கவனிக்கவில்லை. என்பதை அவள் உணரவில்லைபோல். என்ன சொல்வது எனத் தடுமாறிய போது அவளை ஒருகுரல் அழைத்துப் போனது. அது அவளின் அக்காவினுடையது. 

தேனீருடன் வந்தவள் “என்ன” என்றாள்

“ஏன்? ஒன்றுமில்லை.”

“நல்லவார்த்தை” 

“இல்லை நீயார்?” என்றேன்

“பெண்”

“எனக்கு..”

“அக்கா” 

“வேறு உறவுமுறை இருக்கின்றதாம்”

“எனக்கும் தெரியும்” 

“நீ என்னிடம் சொல்லவில்லை.” 

“அனாவசியமானது எனக்கருதினேன்.” 

“….”

“எனக்கும் உனக்கும் புரிந்தால் போதும் ” எதுவும் தோணவில்லை, சிந்திக்கின்றேன். முன்னர் இருந்த பின் குரல் அரட்டுகிறது. 

“நீ பெண்ணாய்ப் பிறந்தது பற்றிச் சிந்தித்திருக்கிறாயா?” நிறைய நிறைய வார்த்தைகளுள் அடக்க முடியாத வண்ணம், அம்மா அடிக்கும்போது, நீ பெண்பிள்ளை தானே எனக் கேட்டுக் கொள்வாள். மேல்சட்டை பொத்தான் பூட்டப்படாமல் இருக்கின்றபோதும். தூங்கும் போது, முழங்கால் தெரிவது கண்டு, சிரிக்கும்போது, நண்பர்களுடன் கதைக்கும் போது, அண்ணன் இரவாகி வீடு திரும்பும் போது எனப் பலதடவைகளில் 

நினைத்தபடி வாழமுடியாததையிட்டு அழுவதாகச் சொன்னாள். இதுவரை முடிந்ததில்லை. இனியும் முடியப் போவதில்லை. என்ற நிலைக்கு வந்த போது சிரிக்க – சகிக்கப் பழகியதாகச் சொன்னாள். 

“நடக்கப் போவதையோ, நடந்ததையோ யாரோ தீர்மானிக்கின்றார்கள். நமது தோள்களிளெல்லாம் சிலுவைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. விரும்பியதை, இயலுமானதைச் செய்ய ஆசைப்படுகிறோம். அவைகள் அனுமதிக்கப்படுவதில்லை,” 

“தத்துவம் கதைக்கிறாய்” 

“எனக்குத் தெரியாது, ஏதோ நினைப்பு, ஏக்கமும் கூட, இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாதே – இதெல்லாம் சகஜம்.” 

எங்களின் கதையாடல் தொடர்ந்து கொண்டே போனது. சூரியன் மறைந்து, இருள் கவிழ்ந்து கொண்டதனால் புறப்படச் சொல்லித் தள்ளினாள். 

அவள் அடிக்கடி சொல்லும் வசனம் ஞாபகத்துள் நீண்டது. “பிரிவு தற்காலிகமானது மட்டுமல்ல அன்பைப் புரியவைப்பதும் கூட” புறப்பட்டேன். “அக்கா வருகிறேன்” கிண்டலுக்குச் சொன்னேன். இன்றுதான் முதல் முதலாக அக்காவென அழைத்தேனாக இருக்க வேண்டும். 

“நாளை கட்டாயம் வா” 

இழந்து போன வெறுமையுடன் நடக்கின்றேன். மனம் திரும்பச் சொன்னது. அம்மா இன்னும் பலருடன் வந்து துரத்தினாள். ஓடிவிடு – ஓடிவிடு, வேகமாய் நடக்கிறேன். அக்கா -நண்பியை நாளை சந்திக்கும் போது கதைப்பதைப்பற்றி நினைத்துக்கொண்டு தூரத்தே குரைக்கும் நாயைப் பொருட்படுத்தாமல் முன் கிடந்த கல்லை உதைத்து சிறுபிள்ளைத் தனத்தில் நடந்து கொண்டிருந்தேன். அது இருப்பிடம் செல்லும்வழி, என் வழியும் கூட. 

– பங்குனி 2000.

– வெள்ளைத்தோல் வீரர்கள் (சிறுகதைகளின் தொகுப்பு), முதற்பதிப்பு: 26 ஆகஸ்ட் -2004, மூன்றாவது மனிதன் பதிப்பகம், இலங்கை.

எழுத்தாளர் திசேரா, இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர், திறனாய்வாளர் மற்றும் கதைஞர் ஆவார். முக்கிய சிறப்பம்சங்கள்: படைப்புகள்: ஈழத்து இலக்கியச் சூழலில் நவீன சிறுகதை வடிவம் மற்றும் யதார்த்த கதைசொல்லும் முறையில் புதிய பாய்ச்சலை உருவாக்கியவர். இவரது 'ஏவிவிடப்பட்ட கொலையாளி' (2008) மற்றும் 'வெள்ளைத்தோல் வீரர்கள்' போன்ற படைப்புகள் பெரிதும் அறியப்பட்டவை. பின்னணி: மாற்றுப் பாலினத்தவரின் (ஓரினச் சேர்க்கையாளர்கள்) மன உணர்வுகள், யுத்தத்தின் பின்னரான வலிகள்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *