கதையாசிரியர்:
தின/வார இதழ்: மங்கையர் மலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: February 6, 2026
பார்வையிட்டோர்: 3,867 
 
 

(1983ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிங்காரவனம் என்ற காட்டைத் திறம்பட ஆண்டு வந்த விலங்கரசன் சிங்கம் மற்ற விலங்குகளால் பெரிதும் போற்றப்பட்டு வந்தது. அச்சிங்கம் பலசாலியாகவும் இருந்தது. அறிவாற்றலும் பெற்றிருந்தது. சிறு மிருகங்களைக் கூட அலட்சியம் செய்யாமல், மதிப்புக் கொடுத்து மதிப்பைப் பெற்றது. ஆண்டுதோறும் காட்டில் நடை பெற்று வந்த விழாக்களை மேற்பார்வையிட்டுத் தலைமை தாங்கி காட்டில் மகிழ்ச்சி பரவச் செய்தது.

இவ்விதம் குதூகலமாக நாட்கள் கழிந்து கொண்டிருந்த சமயத்தில் புது வருடம் பிறக்கப் போகும் தறுவாயில் இந்த அமைதியைக் குலைக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அது பிரும்மாண்டமான யானைக்கும், பலம் பொருத்திய புலிக்கும் திடீரென மூண்டுவிட்ட பகையேயாகும். தன்னை மிஞ்சிய பலசாலி கிடையாது என யானை கர்வத்துடன் கூற தன்னை வெல்லக் கூடியவன் கிடையாது எனப் புலி சீறியது.

இவற்றிடையே ஏற்பட்ட பகையில் இவை முட்டி மோதிய நேரங்களில் உறுமிப் பிளிறிய சமயங்களில் காடே கிடுகிடுத்தது. காட்டிலிருந்த சிறு பிராணிகள் அச்சம் கொண்டு இவ்விஷயத்தைச் சிங்கத்திடம் கூறின.

சிங்கம் கவலை கொண்டது. உண்மை யில் புலி, யானை இரண்டுமே பலசாலிகள்தான். ஆனால் பகை வெறியில் அவை காட்டை அதிரச் செய்தால் சிறு பிராணிகளின் கதி என்னவாகும்? காட்டில் நிம்மதி இராது. வேறொரு முக்கியமான விஷயமும் சிங்கத்தைக் கவலை கொள்ளச் செய்தது.

அதென்னவென்றால் புது வருடம் பிறக்கும் தறுவாயில், அன்றைய முன்னிரவில் சிங்கம் காட்டுப் பிராணிகள் யாவற்றையும் அழைத்துப் பிரமாதமான விருந்து அளிப்பதுண்டு. நடு நிசி கடந்ததும் சிங்கம் பலமாகக் கர்ஜனை செய்து தன் புது வருட வாழ்த்துக்களைக் கூற, பதிலுக்கு ஆர்ப்பரித்து மிருகங்கள் யாவும் ஒரே குரலில் சிங்கத்தை வாழ்த்த இவ்விதமே சிங்கார வனத்தில் புது வருடம் பிறப்பது வழக்கம். அழைப்பின் பேரில் விருந்துக்கு வந்த புலியும் யானையும் சந்திக்க நேர்ந்தால் விபரீதம் விளையுமே! சிங்கம் ஆழ்ந்து சிந்தித்தது.

மறுநாள் சிங்கம் யானையையும் புலியையும் தன் அவைக்கு அழைந்தது. அவை இரண்டும் வணங்கி நின்ற பின், சிங்கம் “புது வருடம் பிறக்க இன்னும் ஒரு நாள்தான் உள்ளது” என்றது.

“ஆம் அரசே! எந்த உதவியானாலும் நான் செய்யத்தயார்'” என வணங்கியது யானை, புலியும் அவ்வாறே கூறியது. ஏறிட்டு அவற்றை நோக்கிய சிங்கம் “நீங்கள் இருவரும் சேர்ந்து ஓர் உதலி செய்ய வேண்டும். அதாவது நீங்கள் இருவரும் காட்டினுள் புகுந்து துவம்சம் செய்து பிராணிகளையும் மிருகங்களையும் கூடியவரை அழிக்க வேண்டும்” என்றது.

புலியும் யானையும் அதிர்ச்சியுடன் திடுக்கிட்டு சிங்கத்தை நோக்கின. பின் னர் யானை, ”அரசே! நீங்கள் கூறியதன் பொருள் விளங்கவில்லை” என்றது.

”இந்த விபரீத எண்ணத்தின் காரணம் யாதோ?” என்றது புவி.

“உங்களுக்குப் புரியாத காரணம் எதுவும் இல்லை. உங்களிடையே உள்ள பசுை மறையவில்லை. பகை என்பது என்றுமே அழிவைத் தரக்கூடியதுதான். இன்றில்லாது போனால் நாளை இப்பகையின் காரணமாய் நீங்கள் சண்டையிட்டுக் கொள்ளும் போது எவ்வளவோ சிறு பிராணிகள் உங்கள் காலிடையே அகப்பட்டு நசுக்கப்படுவது திண்ணம். அந்தப் காரியத்தைப் புதுவருடமாகிய நாளையே செய்து விடுங்களேன் என்றேன்” என்றது சிங்கம்.

யாளையும் புலியும் தலை குனிந்து நின்றன.

“உங்கள் பகையின் காரணம் வீணான அகம்பாவம்தான். பலசாலியாக இருந்து விட்டால் எல்லாக் காரியமும் செய்துவிட முடியுமா என்ன? உங்களாலும் முடியாத காரியங்கள் உண்டு. அப்படியிருக்க அகம்பாவம் ஏன்?இதோ பார்” என்ற சிங்கம் ஒரு பிடி சர்க்கரையை வீசி எறிந்தது.

“நீங்கள் இருவரும் பலசாலிகள் தானே? எங்கே, இந்தச் சர்க்கரைத் துகள்களை ஐந்தே நொடியில் ஒன்று விடாமல் பொறுக்கி எடுத்து வாருங்கள் பார்ப்போம்” என்றது.

யானை அயர்ந்து விட்டது. பிரும்மாண்டமான மரங்களை வேரோடு பிடுங்கி, காட்டுத்தனமாய்க் கரும்புக் கொல்லையில் கரும்பு தின்னும் யானை, கண்ணுக்கே சரியாகத் தெரியாத சர்க்கரைத் துகளைப் பொறுக்குவதா? முடிகிற காரியமா?

அப்படியும் விடாது அது முயன்ற போது முதுகெலும்பு ஒடிவதுபோன்ற வேதனைதான் மிஞ்சியது. கண்டெடுத்த ஓரிரு சர்க்கரைத் துகளும் துதிக்கையிலேயே ஒட்டிக் கொண்டுவிட்டன. தன் தோல்வியை ஒப்புக் கொண்டு யானை திரும்பியதும் புலியின் முறை வந்தது. மிருகங்களை அடித்து மாமிசத்தைத் தின்று பழகிய புலி சர்க்கரைத் துகள்களைத் தேடிச் சென்றதில் அதற்கு மயக்கமே வந்து விட்டது.

அது கண்டு சிரித்த சிங்கம், “இப்போதாவது புரிகிறதா? ஒரு சிறு எறும்பு நொடியில் செய்துவிடக் கூடியதைப் பலசாலிகளான உங்கள் இருவராலும் முடியவில்லையே” என்றது. யானையும் புலியும் வெட்கி நின்றன.

“புதுவருட விருந்தை நல்ல முறையில் நடத்தி வைக்கும் பொறுப்பை உங்கள் இருவரிடமுமே ஒப்படைக்கிறேன்.” என்றது புத்திசாலி சிங்கம்.

யானை, புலியினிடையே இருந்த பகை நீங்கி அவற்றின் அகம்பாவம் ஒழிந்தது. சிங்கார வனத்தில் புது வருடம் களிப்பும் மகிழ்ச்சியுமாய் இனிது பிறந்தது.

– 01-01-1983, மழலை மலர், மங்கையர் மலர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *