மின்மினிப்பூச்சிகள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 4, 2026
பார்வையிட்டோர்: 2,769 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

‘தாத்தா ஒரு கதை சொல்லேன்!’ என்று கேட்டுக் கொண்டே வந்தாள் தாரா. சின்னப் பெண்ணான தாராவுக்கு எப்போதுமே தாத்தா சொல்லும் கதைகள் மிகவும் பிடிக்கும். அவை சுருக்கமாகவும் இருக்கும்., சுவாரஸ்யமும் இருக்கும்!

‘சரி, உட்கார் சொல்றேன்! இன்னைக்கு நான் சொல்ற கதைல என்ன நீதி இருக்குன்னு, கதை முடிஞ்சதும் நீ எனக்குக் கடைசியில சொல்லணும்!’ என்றார் தாத்தா.

‘தாத்தா.. கதையைக் கவனமாக் கேக்கத்தானே அப்படிச் சொல்றீங்க?! நான் கவனமாக் கேட்டுக் கடைசில நீதி என்னன்னு சொல்றேன் தாத்தா அது சரியான்னு நீங்க பார்த்துங்க..! கதையைச் சொல்லுங்க!’ என்றாள் தாரா.

தாத்தா கதையை ஆரம்பித்தார்…!

இரவு நல்லா இருட்டுனதுக்கு அப்பறம்.. செடிகள் நிறைந்திருந்த இடத்தில் ‘மினுக்மினு’க்கென எதோ மின்னிக் கொண்டிருந்தது. யாரோ தவறுதலாக தங்க, வைர நகை எதையோ போட்டுவிட்டார்களோ? என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்தவர்கள்.

அப்போ…! ( தாத்தா கதையை நிறுத்த)

‘அப்ப என்ன ஆச்சு தாத்தா?! சொல்லுங்க!’ என்றாள் தாரா.

தாத்தா தொடர்ந்தார்…

அப்போ… அந்த இருட்டுலயும் தெரியறா மாதிரி ஒரு கருப்பு பறவை பறந்து வந்தது. அதுக்கு அங்கே மின்னுற பொருள் என்னன்னு பார்க்கணும்னு ஆசையா இருக்க, நெருங்கி அருகில் உட்கார்ந்து பார்த்தது.. அங்க மினுமினுன்னு மின்னினது மின்மினிப்பூச்சிகள்!.

‘தூக்கணாங்குருவிகூட, தன் கூட்டுல குஞ்சுகளுக்கு வெளிச்சம் கொடுக்க, கொண்டு போய் வைக்கும்!’னு சொல்லீருக்கீங்களே? அதுதானே தாத்தா?

ஆ! ஆமாம்! அதேதான்.

அந்தப் பூச்சியைத் தின்னும் ஆசையில அந்தக் கருப்புப் பறவை அதைக் கொத்தப் போக நெரிங்க…, அந்த கருப்புப் பறவை கிட்ட மின்மினிப்பூச்சி சொல்லிச்சாம். ‘அண்ணே…! இங்க, நான் ஒரே ஒருத்தன் தான் இருக்கேன். உங்களுக்கும் உங்க குஞ்சுகளுக்கும் நிறைய மின்மினிப் பூச்சிகள் இருக்கற இடத்தைக் காட்டட்டுமா? என்று கேட்க, அதுவும் அதிகம் தின்னும் ஆசையில் ‘சரி காட்டு!’ன்னு சொல்லிச்சாம்.

இந்த மின்மினிப் பூச்சி முன்னால் வழிகாட்டியபடியே பறந்து போக, கருப்புப் பறவை அதைப் பின் தொடர்ந்து போச்சாம். ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் அங்கே மக்கள் எல்லாம் குளிருக்கு தணல் மூட்டிக் குளிர் காய்ஞ்சிட்டிருக்கற ஒரு எடத்தை தூர நின்னே காட்டி, ‘அண்ணே அங்க பாருங்க! நிறைய மின்மினிப்பூச்சிகள் இருக்கு! போய் பிடிச்சுக்குங்கன்னு சொல்ல, கருப்புப் பறவையும் அது தீன்னு தெரியாம மின்மினின்னு நெனைச்சு அந்தத் தீயில விழுந்து இறந்து போச்சாம்! மின்மினிப்புச்சி நிம்மதியா. தன் இருப்பிடம் திரும்பி வந்துச்சாம்!

இதான் கதை. இதுல இருந்து நீ என்ன தெரிஞ்சுட்டே?? சொல்லு!’ என்றார் தாத்தா.

‘தாத்தா ஆபத்துங்கறது எல்லாருக்கும் வரும் ஆனா, அதை அறிவால் வென்று தப்பிக்கணும்னு புரிஞ்சுட்டேன்னு சொல்ல.., பலே! வெரி குட்! என்று பாராட்டினார் தாத்தா.

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *