மாற்றத்தின் சீற்றங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 24, 2025
பார்வையிட்டோர்: 93 
 
 

அமுதவாணன் ஒரு காந்தியவாதி என்பதால், வட்டாட்சியர் அலுவலகத்தை விட்டு வெளியேறும் முன், அவன் துணை வட்டாட்சியரிடம் முறையிட்டபோது, அவனது நிதானம் உச்சகட்ட சோதனைக்கு உள்ளானது.

“உங்க அப்பாவோட சான்றிதழில் ஏற்பட்டிருக்கிற எழுத்துப் பிழையைச் சரிசெய்ய, இருநூறு ரூபாய்க்கான அஞ்சல் வில்லையை ஒட்டி, ஒரு மனுவை எழுதி கொடுத்துட்டு போங்க,” என்று அந்தத் துணை வட்டாட்சியர் சாதாரணமாகக் கூறினார். அவரது குரலில் எந்தப் பச்சாதாபமோ, அதிகாரிகளின் தவறுக்கான குற்ற உணர்ச்சியோ இல்லை.

“ஐயா, தவறு செய்தது நானல்ல. அரசு ஊழியர்தான். அதைச் சரிசெய்ய நான் ஏன் பணம் கட்ட வேண்டும்? மேலும், இந்தச் சான்றிதழை மேலொப்பம் இட்ட அதிகாரிகளுக்குத் தெரியாதா? ‘திங்களூர்’ எப்படி ‘சிங்கப்பூர்’ ஆகும்?” என்று அமுதவாணன் மிகுந்த பணிவுடன் கேட்டான்.

அதற்கு அந்த அதிகாரி, கண்களை இடுக்கி, கையில் வைத்திருந்த கோப்புகளைத் தட்டி, “மனு கொடுத்தாத்தான் நாங்க அதை மறுபரிசீலனை செய்ய முடியும். இதுதான் அரசாங்க விதி. எனக்கு நிறைய வேலை கிடக்கு. என் நேரத்தை வீணடிக்காம, சீக்கிரம் வேலையைப் பாருங்க,” என்று கையை அசைத்தார்.

அப்போதுதான் அமுதவாணனுக்கு கோபம் மூக்கு வரை வந்துவிட்டு மூர்க்கமாய் வெளியேறியது. ‘இதுவே அவனது சித்தப்பாவாக இருந்திருந்தால்_ அவர் எப்போதும் மது முகத்தில் இருப்பவர் _அந்த நபரை நேராக அவர் கன்னத்தில் ஒன்று கொடுத்திருப்பார்’ என்று நினைத்தான். நல்லவேளை அமுதவாணன் அவரை வீட்டிலேயே இருக்கச் சொல்லிவிட்டு வந்து விட்டான்.

யார் யாரோ செய்த தவறுக்கு அமுதவாணன் ஏன் அபராதம் கட்டுவது போல் 200 ரூபாய் கட்ட வேண்டும்? வட்டாட்சியர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த அமுதவாணனின் மனம், ஆகாயத்திற்கும் பூமிக்குமாய் ஆடி அசைந்தபடி ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தது.

கிராம நிர்வாக அலுவலர் தனது கவனக்குறைவால் செய்த தவறுக்கு அமுதவாணன் எப்படி பொறுப்பேற்றுக் கொள்ள முடியும்? சரி அந்த கிராம

நிர்வாக அலுவலர் தான் தவறி எழுதிவிட்டார் என்றால் அதனை மேலொப்பம் இட்ட வட்டாட்சியர்கள் என்ன தூக்க கலக்கத்திலா இருந்தார்கள்? முறையாக சரி பார்க்காமல் எப்படி அவர்கள் மேலப்பம் விட்டார்கள்? யார் செய்த தவறுக்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வது?

ஒரு கிராமத்தில் உள்ள ஒரு சாதாரண விஷயத்திற்கே இத்தனை குளறுபடிகள் என்றால் இன்னும் பல பல கிராமங்கள் சார்ந்த, பல்வேறு ஏழை எளிய விவசாயிகளின் நிலம் சார்ந்த கூறுபாடுகளை இவர்கள் எப்படி எல்லாம் மாறுபாடுகளோடு கொஞ்சமும் அக்கறை இல்லாமல் எத்தனை எத்தனை அபத்தங்களில், ஏராளமான எண்ணிக்கையில், நாளும் பொழுதும் இவர்கள் செய்திருப்பார்கள்; இன்னும் செய்யப் போகிறார்கள்; என்றெல்லாம் பலவாறு நினைக்கும் போது, “தர்மத்தின் சீற்றங்களை, நீதியின் நிதானத்தால் மட்டுமே சாந்தப்படுத்த முடியும்” என்று அவன் தன் தியானத்தின் போது கற்றறிந்ததை மீண்டும் மனதுக்குள் அசைபோட்டான்.

நல்ல முத்து அமுதவாணனின் தந்தை. அவர் இறந்து ஒரு மாதம் கழித்து நல்ல முத்துவின் இறப்புச் சான்றிதழ் அவனுக்கு கிடைத்தது. இறப்புச் சான்றிதழ் வழங்கியது அமுதவாணனின் பக்கத்து ஊரைச் சேர்ந்த மாயாண்டி என்ற கிராம நிர்வாக அலுவலர்தான்.

மாயாண்டிக்கு சொந்த ஊர் முசிறிக்கு பக்கத்திலே உள்ள ஒரு கிராமம். அவர் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு பக்கத்து ஊரான அரசூரில் உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு வீட்டுக்கு மாப்பிள்ளை ஆகி அங்கேயே தங்கி விட்டார். அமுதவாணனின் ஊரான திங்களூரும் மாயாண்டியின் மாமியார் ஊரான அரசூரும் பக்கத்து பக்கத்து ஊர்கள். இரண்டு ஊர்களையும் ஒரு வாய்க்கால் பிரிக்கின்றது. இரண்டு ஊர்களுக்கும் ஒரே பஞ்சாயத்து தான். ஒரே கிராம நிர்வாக அலுவலர் தான். மாயாண்டி என்ற கிராம நிர்வாக அலுவலருக்கு இரண்டு ஊர்களைச் சேர்ந்த நிலபுலன்கள், மனிதர்கள், அவர்கள் சார்ந்த அனைத்து விஷயங்களும் நன்றாக தெரியும்.

அதே மாயாண்டி தான் நல்ல முத்துவின் இறப்புச் சான்றிதழை வடிவமைத்தவர்.

அவர் வட்டாட்சியர் பார்வைக்கு அனுப்பிய நல்ல முத்துவின் இறப்புச் சான்றிதழில் “திங்களூர்” என்ற அமுதவாணனின் ஊரின் பெயரை “சிங்கப்பூர்” என மாற்றி எழுதியுள்ளார். சமீபகாலமாக தினசரி உற்சாக பானம் குடித்து மனம் மகிழ்ந்திருப்பது அவரது வழக்கமாகிவிட்டது என்பதை இரண்டு ஊர்களிலும் உள்ள அனைத்து குடிமக்களும் நன்கு உணர்வார்கள். அவரது வழக்கத்தின் தாக்கமே இந்த எதிர்பாராத எழுத்து பிறழ்வு என்பதை அமுதவாணன் அடுத்த கனமே புரிந்து கொண்டான்.

‘மாயாண்டி என்பவர் ஒரு நேர்மையான அதிகாரி. அவரது தனிப்பட்ட பலவீனத்தால், ஒரு சாதாரணத் தவறு நடந்துவிட்டது. அதை பெரிதுபடுத்தி, அவர் மீது புகார் அளித்து அவரது வாழ்க்கையைக் கெடுக்கக் கூடாது,’ என்று அவன் தீர்மானித்தான்.

அன்று மாலையே அந்த கிராம நிர்வாக அலுவலரை நயமாக கண்டிப்பதற்கும் நல்ல முத்துவின் இறப்புச் சான்றிதழில் உள்ள தவறை திருத்தி ஒரு புதிய திருந்திய அல்லது சரியான இறப்புச் சான்றிதழை வாங்கி வருவதற்கும் மாயாண்டியின் வீட்டிற்கு அமுதவாணன் செல்ல நினைத்தான். ஆனால் அப்போது அவனது அரசூர் நண்பன் பரந்தாமன் மாயாண்டியின் வீட்டில் தற்போது எவரும் இல்லை என்பதையும் கடந்த இரண்டு நாட்கள் ஆக வீட்டில் உள்ள எல்லோரும் வெளியூர் சென்றிருப்பதாகவும் வீடு பூட்டி கிடப்பதையும் சொல்ல, அமுதவாணன் தனது கூரான எண்ணத்தை வேராக்கி அதனை சீராக இருக்கும் படி சிறப்பாக மாற்றிக் கொண்டான்.

இனி மாயாண்டியை பார்ப்பது சரியாக இருக்காது என்பதை உணர்ந்த அமுதவாணன், அடுத்த நாள் வட்டாட்சியர் அலுவலகம் சென்று துணை வட்டாட்சியரிடம் அவனது தந்தையின் இறப்புச் சான்றிதழில் உள்ள தவறை சுட்டிக்காட்டி முறையிட்டான்.

அந்தத் துணை வட்டாட்சியர் அமுதவாணன் சொன்ன எந்த தகவலையும் உள்வாங்கிக் கொள்ளாமல் அவர் போக்கில் “ஒரு மனுவை எழுதி அதில் 200 ரூபாய் அஞ்சல் வில்லையை ஒட்டி இங்கு கொடுத்துவிட்டு போங்க. இப்ப நீங்க கிளம்புங்க,” என்று சொல்ல, அமுதவாணனுக்கு எரிச்சலும் கோபமும் ஏகமாய் வந்து அவனை வாட்டி வதைத்தது. அவன் வேகமாய் வீட்டிற்கு புறப்பட்டான். .

ஒரு வாரம் அமுதவாணன் தனது வயலில் நடவு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்ததனால், அப்பாவின் இறப்புச் சான்றிதழ் சம்பந்தப்பட்ட வேலைகளை மூட்டை கட்டி மூலையில் வைத்து விட்டான். வயல் வரப்புகளில் நின்று, சேற்று மண்ணில் கால்கள் சீராக புதைய, வியர்வை வழிய நாற்று நடும் உழவர்களின் உழைப்பைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு அவனை ஆக்கிரமித்தது.

அரசு அலுவலக நடைமுறைகளின் நிதானத்தை விட, விவசாய நிலத்தின் நிஜமான தேவை அவசரம் மிக்கதாய் இருந்தது.

அதைத் தொடர்ந்து, அடுத்த பத்து நாட்கள் அவனது பெரியப்பா மகன் திருமணம் சம்பந்தப்பட்ட வேலைகளில் கழிந்தது. அது ஒரு கிராமத்துத் திருமணம். பந்தல்கால் நடுவது முதல், சொந்த பந்தங்களுக்கு நேரடியாக அழைப்பிதழைக்

கொடுப்பது வரை அனைத்து வேலைகளிலும் அவன் பெரியப்பா வீட்டிற்கு மிகவும் ஒத்தாசையாக இருந்தான்.

பெரியப்பா வீட்டு திருமணம் முடிந்த பிறகு ஒரு நாள் அவனது அரசூர் நண்பனான பரந்தாமனை பார்ப்பதற்காக அவனது ஊருக்கு சென்றான். அப்போதுதான் அவனுக்கு மாயாண்டி நினைவு வந்தது. கூடவே அவனது தந்தையின் இறப்புச் சான்றிதழும் நினைவுக்கு வந்தது. அடுத்து அமுதவாணனுக்கு, மாயாண்டி மேல் அளவு கடந்த கோபமும் வந்தது. நண்பன் பரந்தாமனை பார்த்துவிட்டு வரும்போது அப்படியே மாயாண்டியையும் பார்த்து விசாரித்து விட்டு வர வேண்டும் என்ற எண்ணமும் அவனுள் ஓடிக் கொண்டிருந்தது.

அமுதவாணன் அரசூருக்கும் திங்களூருக்கும் இடையே இருக்கும் வாய்க்கால் பாலத்தைக் கடந்த போது, அவனது அப்பாவிற்கு தூரத்து சொந்தமான ஒரு பாட்டி வாய்க்காலில் குளித்துவிட்டு கரை ஏறி நின்று கொண்டிருந்தார்.

அமுதவாணனைப் பார்த்ததும் அந்தப் பாட்டி அவனைக் கனிவுடன் அழைத்து, “அமுதவாணா, நீ நல்ல மனுசன்ப்பா. உம் அப்பனும் அப்படித்தான். நல்ல மனுசங்களுக்கு ஆயுசு கெட்டியாக இருக்க மாட்டேங்குது. காலம் மாறிப் போச்சு. மனுசங்களோட உழைப்புக்கு மட்டும் இல்ல, உயிர்க்கும் கூட இப்ப மதிப்பில்லாமல் போயிடுச்சு. எல்லாமே ஒருநாள் சிங்கப்பூருன்னு மாறிப் போகும் போல,” என்று கூறி, தன் தந்தையின் எதிர்பாராத இறப்பைப் பற்றி நினைவு கூர்ந்தார்.

அந்தப் பாட்டியின் வார்த்தையில் இருந்த ‘சிங்கப்பூரு’ என்ற ஒற்றை வார்த்தை அமுதவாணனின் மனதில் ஓர் உறுத்தலை ஏற்படுத்தியது. மாயாண்டியின் தவறு எத்தனை சாதாரண மக்கள் மனதில் எத்தனை பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உணர்ந்தான். சில துளிகள் கண்ணீர் வடித்த பாட்டியிடம் அமுதவாணன் விடைபெற்று மேலே ஊருக்குள் சென்றான்.

அரசூரின் மையப் பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு எதிரே இருந்த இலுப்பை மரத்தின் நிழலில் பரந்தாமன் எண்பத்தி ஐந்து வயது நிரம்பிய காளியம்மாள் பாட்டியிடம் பேசிக் கொண்டிருந்தான்.

காளியம்மாள் பாட்டி, “அக்காலத்துல மனுசங்க, மனசைச் சுத்தமா வச்சுக்கிட்டாங்க. இப்ப, எல்லாரும் எதையோ தேடி ஓடுறாங்க. இந்த அரசூர்ல, நம்ம மாயாண்டிகூட அப்படித்தான். நல்ல மனுஷன். நேர்மையான ஆளு. நல்லாப் பேசுவாரு. ஆனா, சமீப காலமா அதிகமா ‘உற்சாக பானம்’ குடிச்சு, எப்பவும் ஒருவித சந்தோஷத்திலேயே திரியுறார். அது வேலையில பெரிய கோளாறைக் கொண்டு வந்திடுச்சு. மனுசங்க கட்டுப்பாட்டோட இல்லன்னா,

எவ்வளவு பெரிய பதவியும் ஒருநாள் கையை விட்டுப் போயிடும்,” என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

பரந்தாமன் தலையை அசைத்து, “ஆமாம் பாட்டி. அவர் போன வாரம் வீட்டுல இருந்து கிளம்பும்போதும் அப்படித்தான் இருந்தாராம். ரொம்ப வேகமா, யாரையோ துரத்திக்கிட்டுப் போற மாதிரி இருந்தது,” என்றான்.

அந்தப் பாட்டி தன் பேச்சில், அந்த காலத்து மனிதர்களின் பழக்கவழக்கங்களையும் இந்த காலத்து மக்களின் பழக்கவழக்கங்களையும் விலாவாரியாக எடுத்துரைத்தபடி, அமுதாவாணன், பரந்தாமன் இருவரிடமும் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேச்சில் தெளிவும் தீர்க்கமும் திடமும் ஒருங்கே அமைந்திருந்தது. அதில் அரை மணி நேரம் போனதே தெரியவில்லை.

அப்போது பள்ளிக்கூடத்திற்கு அருகே கீழ்புறம் இருந்த தேநீர் கடையில் வழக்கத்தை விட சற்று கூட்டம் அதிகமாகவே இருந்தது. பரந்தாமணியின் வீடு இருக்கும் வடக்குத்தெருவில் ஆட்களின் நடமாட்டம் அதிகமாக இருந்தது; குறிப்பாக வெளியூர் மக்களின் நடமாட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. ..

அப்போது பள்ளிக்கூடத்தின் முன்பு உள்ள மதில் சுவர் அருகே இரண்டு சிறுவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். ஒருவன் கையில் பசை டப்பாவும், இன்னொருவன் கையில் சுருட்டிய நிலையில் சுவரொட்டிகளும் இருந்தன. அவர்களில் ஒருவன் பள்ளிக்கூடத்து மதில் சுவரில் பசையை தடவினான். இன்னொருவன் அதன்மேல் சுவரொட்டியை பிரித்து நீட்டி பசை தடவப்பட்ட பகுதியின் மேல் மெல்ல ஒட்டினான்.

அதன் பிறகு அந்தச் சிறுவர்கள் மீதமுள்ள சுவரொட்டிகளை வேறு இடங்களில் ஒட்டுவதற்காக வேகமாகச் சென்று விட்டனர்.

பரந்தாமனும் அமுதவாணனும் பாட்டியிடம் பேசிக் கொண்டிருந்ததனால் அந்தச் சிறுவர்களையோ ஒட்டிய சுவரொட்டியையோ வடக்குத் தெருவில் வழக்கத்தை விட ஆட்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதையோ அவர்கள் கவனிக்கவில்லை.

காளியம்மாள் பாட்டி பேசிவிட்டு சென்ற பிறகு அமுதவாணன் தேநீர் கடை பக்கம் பார்வையை திருப்பினான். அப்போதுதான் அவன் கண்ணில் அந்த மதில் சுவரில் ஒட்டப்பட்ட சுவரொட்டி தென்பட்டது.

அமுதவாணனும் பரந்தாமனும் அருகில் சென்று அந்த சுவரொட்டியை பார்வையிட்டனர்.

சுவரில் சிரித்த முகத்துடன் இருக்கும் மாயாண்டியின் படத்தை தாங்கிய சுவரொட்டியை பார்த்து இருவரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். அதில் பெரிய எழுத்துக்களில் கருமை நிறத்தில் இருந்த “கண்ணீர் அஞ்சலி” வாசகம் எதிரே தேநீர் கடையில் இருந்த அனைவரையும் கண்கலங்க வைத்துக் கொண்டிருந்தது.

மாயாண்டியின் சிரித்த முகம் அமுதவாணனையும் பரந்தாமனையும் சிரமப்படுத்திக் கொண்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *