மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 25, 2025
பார்வையிட்டோர்: 144 
 
 

அன்று ஆடி கடைசி வெள்ளிக் கிழமை. ரொம்பவும் விசேஷமான நாள். குளித்து முடித்து கோயிலுக்குப் போய், சாமி கும்பிட்டுவிட்டு கல்லூரிக்கு வேலைக்குப் போனார் வேல்முருகன்.

கல்லூரியில் அவர் பேராசிரியர். அதூம், உளவியல் துறைப் பேராசிரியர். மாணவர்கள் எல்லோருமே அவர் வகுப்பை மிகவும் விரும்புவார்கள். காரணம் ‘சைக்காலஜி’ வகுப்பை அவர் நடத்துப் பாங்கே தனி!. சிரித்து சிரித்து வயிறு வலியே வந்துவிடும்.

நெற்றியில் பட்டை அடித்துக் கொண்டு வகுப்பிற்குள் நுழைந்தார். நூறு பேர் இருக்கும் அந்த ஹாலில் அதை ஆடிட்டோரியம் என்று கூடச் சொல்லலாம். ஊசி போட்டால் ஊசி விழுகிற சப்தம் கேட்கும்.

‘என் வகுப்பு பிடிச்சா இருக்கலாம்., இல்லைனா பின் வாசல் வழியே இறங்கிப் போயிடலாம்!. மெயின் ரோடு போய் கடை கிடைல டீ கீ சாப்பிட்டுட்டு கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துட்டுத் திரும்பி அதே பின்வாசல் வழியே வந்தும் உக்காந்துக்கலாம். நான் ஏன்னு கேட்க மாட்டேன்!. என்ன ஒண்ணு, வகுப்புக்கு உள்ள இருந்தா தொந்தரவு பண்ணக் கூடாது!’ என்பார்.

‘போயிடலாம்பார்!’… ஆனா ஒரு பய போக மாட்டான். காசு கொடுத்து காமெடி ஷோ பார்க்கிற காலத்துல காசில்லாமா ஒரு கலகலப்பு ஃபிரியா கிடைக்குதுன்னா கேக்கவா வேணும்?!

சாக்பீஸை எடுப்பார்.. அன்னைக்கு நடத்தப்போற டாப்பிக்கை எழுதுவார். எல்லா மாணவர்களும் தங்கள் தங்கள் குறிப்பேட்டில் குறித்துக் கொண்டதும். மனுஷன் கலகலக்க ஆரம்பித்துவிடுவார்.

சில சமயங்களில் அவரே மெண்டலோ என எண்ணத் தோன்றும். ஆனா, அவர் அப்படி இல்லை. சைக்கியார்டிஸ்ட். உளவியல் நிபுணர்.

ஆடி கடைசி வெள்ளிக் கதையை நான் மறக்கலை!

சாக்பீஸை வழக்கம் போல் எடுத்து, போர்டில் டாப்பிக்கை எழுதப் போகும் வேளை ஃபியூன் பெரிய சாமி பயந்துட்டே வந்து,

‘சார்….னான்.

பெரிய சாமிக்கே பெரிய சாமிதானே நம்ம வேல்முருகன்.

‘என்ன?’ என்றார் வகுப்பு ஆரம்பிக்க இடையூறாக எண்ணிக் கொண்டு.

‘உங்களுக்கு அர்ஜெண்ட் போன்..’ என்றான் பியூன் பெரியசாமி.

‘போனில் என்ன அர்ஜெண்ட் ஆர்டினரி!’. சிரித்துக் கொண்டே மாணவர்களைப் பார்த்து ‘ஒரு நிமிஷம்!’ என்றபடி இறங்கிப் போனார்.

வகுப்பில் அவர் இல்லாதததால் சலசலப்பு. மெல்ல மண் உண்டியலைக் குலுக்கினா மாதிரி. ரூபாய் நோட்டுகள் உண்டியலில் சப்தமிட்டு உபத்திரம் செய்வதில்லை!. சில்லரைகள்தன் சிலுசிலுக்கின்றன. வகுப்பிலும் மெத்த அறிவாளிகள் அடங்கி அமதி காக்க, சிலர் மட்டுமே சப்தமிட்டார்கள்.

ஒரு ரெண்டே நிமிஷம்தான் இது.

வந்துவிட்டார் வேல்முருகன். சிரித்துக் கொண்டே சொன்னார்.

‘மூணு வருஷத்துக்கு முன்னால படிச்ச என் ஸ்டூடண்டு தான்.. தற்கொலை பண்ணிக்கப் போறேன்னார்!, ‘வாழ்க்கை வெறுத்துடுச்சாம்!’. சாகறதுக்கு முன்னாடி எங்கிட்ட சொல்லீட்டு சாகணும்னு தோணிச்சாம்!. அதான் ஃபோன் பண்ணீருக்கார்!’

வகுப்பு சிரிப்பில் சலசலத்தது…!

‘கிளாஸ் எடுக்கறேன்.. ஒரு பத்துநிமிஷத்துல வந்து பேசறேன்!. அப்புறம் தற்கொலை பண்ணிக்குங்க!’ன்னு சொன்னேன். சரின்னார். நிறுத்திவிட்டு…

அனேகமா அவர் சாகமாட்டார். என்றார் சிரித்துக்கொண்டே!

தற்கொலை செய்யத் தோன்றினவனை அந்த கணம் தடுத்துட்டா அப்புறம் அவன் தற்கொலை பண்ணிக் கொண்டு, சாகமாட்டான்.’ வகுப்பே சிரித்தது!!.

மனிதன் நினைப்பதுண்டு.. வாழ்வு நிலைக்குமென்று…! இறைவன் நினைப்பதுண்டு… பாவம் மனிதனென்று!

வாழ நினைத்தாலும், சாக நினைத்தாலும் இறைவன் சம்மதிக்காமல் எதுவும் நடக்காது!.

விவிலியம் சொல்லவில்லை.. ‘விதைக்க ஒருகாலம்! அறுக்க ஒரு காலம்!’ என்று?!

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *