மனச்சூளை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 16, 2026
பார்வையிட்டோர்: 65 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வீட்டுத் தோட்டம்.

தோட்டத்து மூலையில் மாதவன் வைத்து நீர் ஊற்றி வளர்த்த குட்டைத் தென்னை மரம் நின்றது.

அவனுக்கு அது நன்றிக் கடன் பட்டிருந்ததால் செவ்விளநீர்க் குலைகளையும் சுமந்து கொண்டு நின்றது.

மாதவன் கீழே நின்றபடியே கைக்கு எட்டிய உயரத்தில் தொங்கிய இளநீர்களைச் சுண்டிப் பார்த்தான். முற்றிய காயையும், குரும்பையையும் ஒதுக்கிவிட்டு வழுக்கையாயுள்ள நல்ல இளங்காயைப் பார்த்துப் பறித்தான்.

அதைச் சீவி நீரை ஒரு குவளையில் ஊற்றினான். நீர் வடிந்ததும் அந்த இளங்காயை வெட்டி இரண்டாகப் பிளந்து வழுக்கையை வழித்து நீருக்குள் போட்டுக் கலக்கிவிட்டுக் குடித்தான்.

இளநீர் நன்கு இனித்தது; அவன் வயிறும் குளுகுளுவென்று குளிர்ந்தது. ஆனால், அவனுக்கு இருந்த மனப்புழுக்கம் மட்டும் தணியவில்லை. அவன் தன் தந்தை திருவேங்கடத்தை நினைத்துப் புழுங்கிக்கொண்டிருந்தான்.

மாதவனின் தந்தை திருவேங்கடத்திற்கு அகவை ஐம்பத்தைந்துக்கு மேலாகி விட்டிருந்தது. முதுமை காரணமாக அவர் வேலையைவிட்டு நின்றிருந்தார்.

திருவேங்கடம் வேலையைவிட்டு நின்ற பிறகும் வீட்டில் முடங்கிக்கிடக்கவில்லை. மாலை நேரத்தில் தோட்ட வேலை செய்து வந்தார்.

அந்த வேலையையும் அவரால் செய்ய முடியாத நிலை வந்தது.

உடல் மேலும் தளர்ந்துவிட்டிருந்ததால் இரண்டு கிழமையாகத் தோட்ட வேலைக்குச் செல்லவில்லை.

கையிலும் காசில்லை.

தன் மகன் மாதவனைப் பார்த்து ஏதாகிலும் அஞ்சு பத்தை வரலாம் என்று வாங்கிக் கொண்டு எண்ணியபடி திருவேங்கடம் விசிப்பலகையில் இருந்து எழுந்தார்.

துணைவியை இழந்துவிட்டிருந்த திருவேங்கடம், கைத்தடியின் துணையோடு மெல்ல நடந்தார். தாம் குடியிருந்த பலகைவீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மகன் வீட்டுக்கு நடந்தே சென்றார்.

மகனுடைய வீட்டை அடைந்ததும் ஊன்றுகோலைப் பிடித்துக்கொண்டு நின்றார். அவருடைய பன்னிரண்டு அகவை நிறைந்த பேரன் விளையாடிக்கொண்டிருந்தான். திருவேங்கடத்தைப் பார்த்ததும் அவன், “தாத்தா தாத்தா” என்று ஓடிவந்தான்.

பேரனைப் பார்த்ததும் திருவேங்கடத்திற்கு நடந்து சென்ற களைப்பே தெரியவில்லை. ஊன்றுகோலைக் கீழே போட்டுவிட்டு தம் பேரனைக் கட்டிப் பிடித்து, உச்சி மோந்து அன்பை அள்ளிச் சொரிந்தார். அவர் கண்களில் இன்பக் கண்ணீர் சுரந்தது. அவர் உள்ளமும் பேசத் தொடங்கியது.

“நல்லா இருக்கிறியாடா?” என்றார்.

“நல்லா இருக்கிறேன் தாத்தா! நீங்க ஏன்தாத்தா ரொம்பநாளா வரவில்லை? இனிமேல் நீங்க இங்கேயே இருந்திடுங்க தாத்தா! அதோ அந்த வீட்டில் குடியிருக்கிற அறிவழகனுடைய தாத்தாகூட அவன்கிட்டேயே இருக்கிறார் தாத்தா!” என்றான்.

பேரனின் அன்புமொழி திருவேங்கடத்தின் காதில் தேனாகப் பொழிந்து உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களையும் புத்துயிர்பெறச் செய்தது. தன்னை மறந்த நிலையில் பேரனின் பால்வடியும் முகத்தைத் தடவிவிட்டு இருகைகளாலும் ஏந்தினார்.

அப்போது எரிமலை குமுறியது.

வீட்டிற்குள் இருந்து வந்த அவருடைய மருமகளின் குரல்தான் அது.

“என்னடா தாத்தாகூட கொஞ்சிக்கிட்டு இருக்கிறே! ஊரைப்போல தாத்தா உனக்கு இருந்திருந்தால் உன்னைப் பிடிக்க முடியாதுடா! போட்டுக் கொள்ள சட்டையும், தின்பதற்குச் சொக்கலேட்டும் வாங்கிக்கொண்டு வந்திருக்கிறாரா?” என்று வினையமாகச் சொன்னாள்.

இன்பத்தில் திளைத்துக்கொண்டிருந்த அவருடைய ஒவ்வொரு அணுவும் துன்பத்தால் துவண்டது.

‘காசு இல்லை’ என்பதை எவ்வளவு அழகாகச் சொல்கிறாள் என்று எண்ணியவாறு மருமகள் முகத்தை வெறித்துப் பார்த்தார். அவள் முகத்தைப் பார்க்கவே அவருக்கு அருவருப்பாக இருந்தது.

இதற்கு முன் பல முறை, பலவாறு அவள் பேசிய கடுஞ்சொற்களையெல்லாம் செரிமானம் செய்துவிட்டிருந்த திருவேங்கடம் அதையும் செரிமானம் செய்து கொண்டார்.

“தாத்தா ஊதாரிப் பிழைப்புப் பிழைத்துட்டேண்டா! உன் அப்பனைப் படிக்க வைத்தால் போதும் என்று இருந்துட்டேண்டா!” என்று தழுதழுத்த குரலில் பேரனைப் பார்த்துச் சொல்லும்போது அவர் கண் கலங்கிவிட்டது

“அழாதீங்க தாத்தா! அம்மா என்னையும் இப்படித்தான் பேசுவாங்க!” என்று பேரன் அவருடைய கண்ணீரைத் துடைத்துவிட்டான்.

“நீ இருக்கும்போது நான் ஏண்டா கவலைப்படுகிறேன்!” என்று திருவேங்கடம் ஆறுதல் அடைந்தார்.

“தாத்தா தாத்தா அதோ அப்பாவும் வந்திட்டாங்க தாத்தா!” என்றான் பேரன்.

திருவேங்கடம் திரும்பிப் பார்த்தார்.

மாதவன் சலவை மடிப்புக் கலையாமல் வந்து கொண்டிருந்தான்.

அவன் கையில் செய்தித்தாள் இருந்தது.

மகனைப் பார்த்ததும் அவருக்குப் பழைய நினைவும் வந்தது. “தான் நினைத்தபடியே தன் மகன் கிராணி ஆகிவிட்டான்” என்று எண்ணிக்கொண்டார்.

மருமகள் முகத்தில் ஆயிரம் சுருக்கங்கள் விழுந்திருந்தன.

திருவேங்கடத்தை வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்தவள் தன் கணவன் மாதவன் பக்கம் திரும்பி, “மகனையும், பேரனையும் பார்த்துவிட்டுப் போகிற சாக்கில் உங்க அப்பா வந்திருக்கிறார்! ஏதாகிலும் இருந்தால் கொடுத்து அனுப்புங்க; போகும்போது ஊத்திக்கிட்டுப் போகட்டும்!” என்றாள்.

திருவேங்கடத்தின் நெஞ்சில் தீயை அள்ளிக்கொண்டிக் கொட்டியதுபோல் இருந்தது.

அவர் தன் மகனைப்பார்த்தார்.

அவன் எதிர்பார்த்ததற்கு மாறாக, “ஏன் என் கழுத்தை அறுக்குறீங்க? கையில் காசிருந்தால் கொண்டு வந்து கொடுத்திருப்பேன்ல. இங்கே ஏன் வந்தீங்க?” என்றான்.

“உடம்பில் ரத்தம் இருக்கும்போது வைப்பாட்டி வீட்டில் கொண்டு போய் கொட்டினீங்களே! இப்பப் போய்க் கேட்கிறதுதானே!” என்றாள் மருமகள்.

“ஒவ்வொரு தகப்பனும் பிள்ளை நல்லா வாழ வேண்டும் என்று வீடு – வாசல் வாங்கி வைத்திருக்கிறான். நீங்க எதைத் தேடி வைத்திருக்கிறீங்க? மண்வெட்டியும், வாரியலுந்தான் வாங்கி வைத்திருக்கிறீங்க! பத்தாததிற்குக் கடனை வேறு என் தலையில் கட்டிவிட்டிருக்கிறீங்க?” என்று மகனும் தீக்குழம்பை வாரி அவர் நெஞ்சில் இறைத்தான்.

திருவேங்கடத்திற்கு எரிதழலில் நிற்பதைப்போல் இருந்தது.

மகன் மேல் இருந்த சிறு நம்பிக்கையும் பறந்தது.

தம் பேரன் பக்கம் பார்வையைத் திருப்பினார். அந்த நிலையிலும் அவர் மனம் பேரனுக்கு ஏதாகிலும் கொடுக்க வேண்டும்போல் இருந்தது.

தன் அரைக்கால் சட்டைப் பைக்குள் கையைவிட்டுத் துழாவினார். கையில் கழிப்பாக்குத்தான் காசுவடிவில் தட்டுப்பட்டது. தன் பேரன் கையில் கொடுக்கப் பத்துக்காசுக் கூட கையில் இல்லையே என்று நினைக்கும்போது அவர் கண்களில் கண்ணீர் மல்கியது. துக்கம் தொண்டையை அடைத்தது. உடல் நடுங்க, பேரன் கன்னத்தில் ‘த்ச்’ என்று முத்தமிட்டுவிட்டு கீழே கிடந்த ஊன்றுகோலை எடுத்து உறுதியாக ஊன்றினார். ஊன்றுகோலும் ஆடியது.

மனத்தில் சுமை ஏறியிருந்ததால் உடலும் நடுங்கியது. வெந்த உள்ளத்தோடு திரும்பி நடந்தார்.

பேரனும் அவரைப் பின் தொடர்ந்தான்.

அதைப் பார்த்துக்கொண்டு நின்ற அவருடைய மருமகள் விரைந்து சென்று அவனை இழுத்துக்கொண்டு வந்தாள்.

பேரன், “தாத்தா இங்கேயே இருங்க தாத்தா! என்னை விட்டுட்டுப் போக வேண்டாம் தாத்தா!” என்று கத்தினான். பேரனின் குரல் கேட்டதும் திருவேங்கடத்தின் நடை தடைபட்டது.

மெல்லத் திரும்பி அவனைப் பார்த்தார். ஏதோ சொல்ல நினைத்தார். ஆனால் ஒட்டியிருந்த உதடுகள் விரிய மறுத்தன. உணர்ச்சியை அடக்கிக்கொண்டு கையை அசைத்து விடைபெற்றுக்கொண்டு நடந்தார். நேராகத் தான் குடியிருக்கும் பலகை வீட்டுக்குச் சென்றார்.

விசிப்பலகையில் அமர்ந்தார்.

எரிந்து கொண்டிருந்த வயிற்றில் ஏதாகிலும் ஊற்றிக் கொள்ள வேண்டும்போல் இருந்தது.

பல நெளிவுகளைக் கண்டுவிட்டிருந்த அலுமினியப் பானையைத் திறந்து பார்த்தார். பழைய சோறு பானைக்கு அடியில் சிறிது கிடந்தது. அதை அள்ளித் தட்டில் போட்டார். சிறிது நீர்விட்டு, உப்புச் சேர்த்துப் பிசைந்தார். சோறு கஞ்சியாக மாறியது. முதல் நாள் வறுத்த தயிர் மிளகாய் பதற்று விட்டிருந்தது. அதையும் எடுத்துக் கடித்துக்கொண்டு கஞ்சியைக் குடித்தார்.

வயிறு நிறைந்தது. ஆனால் நெஞ்சம் குளிரவில்லை. அது மகனும் மருமகளும் மூட்டிவிட்டிருந்த தீயால் கனன்றுகொண்டே இருந்தது.

எண்ணெய்க் கக்கல் படிந்து அழுக்கேறி இருந்த தலையணையை எடுத்துத் தலைக்கு வைத்துக்கொண்டு மல்லாந்து படுத்தார். கூரை முகடு தெரிந்தது.

“மகனுக்குச் சுமையாக இருக்கிறேனா? இல்லை என் மகன் மனத்தை மருமகள் கெடுத்துவிட்டாளா? இல்லை நான் வளர்த்த முறைதான் சரியில்லையா? நான் நல்லாத்தானே அன்பைக் கொட்டி வளர்த்தேன்! பெற்று வளர்த்தவர்களை முதுமையில் காப்பது பிள்ளைகளின் கடன் என்பதைப் பொய்யாக்கிவிட்டானே! என்னை எடுத்தெறிந்து பேசிவிட்டானே!” என்று நினைக்கும் போது நெஞ்சம் விம்மி மேலெழுந்து அடங்கியது; நெடுமூச்செறிந்தார்.

அவர் மனம் அமைதியடையவில்லை.

தான் கடந்த காலத்தில் மாடாக உழைத்துச் சிறு வருவாயைக்கொண்டே மகனைப் படிக்க வைத்ததை எண்ணிப் பார்த்தார். வீட்டு மூலையில் சாத்தி வைத்திருந்த மண்வெட்டியும், புல்வெட்டுக் கத்தியும் பார்வையில் பட்டன. அவை பாதிக்கு மேல் தேய்ந்தும் இருந்தன.

தன் கைகளை முகத்திற்கு நேராக வைத்துப் பார்த்தார். உழைத்த கைகள் காய்த்துக் கறுத்துவிட்டிருந்தன. நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த மண்வெட்டியதும், புல்வெட்டியதும் கண்முன் தெரிந்தன. “என் வயிற்குக்கு மட்டுமா நான் உழைத்தேன்? இல்லையே! வரக்கோப்பியைக் குடித்துக்கொண்டு மண் வெட்டினேனே! பிள்ளைக்கு எந்தக் குறைவும் வைக்கக்கூடாது; அவன் என்னைப்போல் படிக்காத முட்டாளாக இருக்கக் கூடாது என்று தானே நான் படாத பாடுபட்டேன்! என் உடம்பைக் கூட நான் சரியாகப் பார்த்துக் கொள்ளவில்லையே!” என்று எண்ணியவாறு கறுத்துவிட்டிருந்த கைகளைக் கூட்டி உரசிப் பார்த்தார். கண்களில் குருதிக் கண்ணீர் பெருக்கெடுத்துக் கன்னங்களில் உருண்டோடி தலையணையை நனைத்தது.

நெஞ்சும் வலி எடுத்தது.

நெஞ்சை அழுத்திப் பிடித்துக்கொண்டார். நெஞ்சு வலியை அவரால் தாங்க முடியவில்லை. படுக்கையிலிருந்து எழ முயன்றார்; எழவும் முடியவில்லை.

“அம்மா!” என்று குரல் கொடுத்தார்.

யாரும் உதவிக்கு வரவில்லை; அந்த வீட்டில் அந்த நேரத்தில் உதவுவதற்கு யாருமே இல்லை!

திருவேங்கடத்தின் நெஞ்சக் கூட்டுக்குள் குடிகொண்டிருந்த ஆவியும் அவரைத் தன்னந்தனியாகக் கைவிட்டுவிட்டுப் பிரிந்து சென்றது.

கூட்டைவிட்டு ஆவி போன பின் கூட்டமும் கூடியது.

வீட்டில், ஒரு கோடியில் இருக்க இடங்கொடுக்காத அவர் மகன் மாதவன் காதுக்கும் செய்தி எட்டியது.

தந்தை இறந்துவிட்ட செய்தி கேட்டதும் மாதவன் கோடி வேட்டி எடுத்துக்கொண்டு ஓடிவந்தான். குடம் உடைத்துக் கொள்ளியும் வைத்தான்.

தந்தை உயிரோடு இருந்தபோது இல்லாத “ஞானம்” தந்தை இறந்த பின் மாதவனுக்குப் பிறந்தது.

தான் நட்டு வைத்து நீர்வார்த்து வளர்த்த தென்னை மரத்தைப் பார்த்தான்.

மரத்திற்குள்ள நற்பண்புகூட தனக்கில்லையே என்று நினைக்கும்போது மாதவன் மனம் மாதவனையே சுட்டது. தந்தை திருவேங்கடத்தை நினைத்து மாதவன் கண்ணீர் விட்டான்.

அப்போது வீட்டுத் தலைவாசலில் பள்ளிப்பேருந்து வந்து நின்றது.

மாதவன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு வண்டியைப் பார்த்தான்.

வண்டியில் இருந்து இறங்கிய மாதவனுடைய மகன், “அப்பா!” என்று ஓடிவந்தான்.

அருகில் வந்ததும் மாதவனைப் பார்த்து, “அப்பா, நாலடியாரிலிருந்து ஆசிரியர் ஒரு பாட்டுச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்! சொல்லட்டுமா அப்பா?” என்றான்.

“எங்கே, சொல்!” என்றான் மாதவன், அதைக் கேட்டாலாகிலும் ஆறுதலாக இருக்கும் எனும் எண்ணத்தில்.

“சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்குக்
குதலைமை தந்தைகட் டோன்றிற்றான் பெற்ற
புதல்வன் மறைப்பக் கெடும்.”,

“அதாவது, ‘கறையானால் அரிக்கப்பட்ட ஆலமரத்தை அதன் விழுது அதனைத் தாங்கும் வன்மையுடையதாக ஊன்றி நின்றாற் போலத் தன் தந்தையினிடத்தில் தளர்ச்சி தோன்றினால் அவன் பெற்றெடுத்த மகன் பாதுகாக்க அது நீங்கும்’ என்பதுதாம் அப்பா!” என்றவாறு தோளில் கிடந்த புத்தகப் பையை இறக்கினான்.

பாடல் மாதவனுக்கு ஆறுதல் அளிக்கவில்லை.

தன் தந்தை திருவேங்கடத்தைப் பாதுகாக்கத் தவறிய அவன் மனத்தைத்தான் அரித்தது.

– தூண்டில் மீன், முதல் பதிப்பு: சூலை 2001, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.

Elangkannan 1938இல் சிங்கப்பூரில் பிறந்தார். இவருடைய  தாயார் சிங்கப்பூரில் பிறந்தவர். தந்தை தமிழ் நாட்டில் பிறந்தவர். கலைமகள் தொடக்கப் பள்ளியில் கல்வியைத் தொடங்கிய இவர் இண்டர்மீடியட் வரை படித்தார். பின்னர் தகவல் கலை அமைச்சில் தமிழ்ச் தட்டச்சராக அரசுப் பணியில் சேர்ந்து 30 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஓய்வு பெற்றார். இவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் பாலகிருட்டிணன். பரிதிமாற்கலைஞர்     (சூரியநாராயண சாஸ்திரி) மறைமலையடிகளைப் பின்பற்றி இளங்கண்ணன் என்று பெயரை தமிழ்ப் படுத்தி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *