கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 28, 2026
பார்வையிட்டோர்: 112 

மதிய வெயில் தார்ச்சாலையை கொதிக்கவைத்துக்கொண்டிருந்தது — காலடியில் ஒட்டிக்கொள்ளும் வெப்பம்.

நரிமேட்டின் அந்த குறுகிய சந்திற்குள் பிரியாணி அண்டாக்கள் உரசும் உலோகச் சத்தம், அத்தர் வாசனை, வறுத்த வெங்காயத்தின் நெடி — எல்லாம் வழக்கம்போல காற்றில் குடியிருந்தன.

குரைசா கனமான பித்தளைத் தவலையை இடுப்பில் சுமந்துகொண்டு ஜைனப்பா மஸ்தான் வீட்டுப் படிக்கட்டில் ஏறினாள். புடவை ஓரங்களில் ஊறுகாய் கம்பெனியின் மஞ்சள் கறை படிந்திருந்தது. கை நிறைய வியர்வை.

“வாம்மா குரைசா பீவி… என்ன, இன்னைக்கு முகம் ரொம்ப டல்லா இருக்கு?”

பக்கத்து வீட்டு நசீமா மர ஜன்னல் கம்பிகளில் கை ஊன்றி சற்றே முன்னே குனிந்து கேட்டாள்.

குரைசா தவலையைக் கீழே வைத்து முந்தானையால் முகத்தைத் துடைத்துக்கொண்டாள். “என்னத்தச் சொல்ல… கம்பெனி வேலய முடிச்சிட்டு வீட்டுக்கு வந்தா, அந்தப் பொணம் நேத்து ராத்திரி பண்ணுன கூத்து இருக்கே… அல்லாஹ்!”

நசீமா ஃபிரிட்ஜ் திறந்து சில்லென்ற பன்னீர் சோடா நீட்டினாள். குரைசா வாங்கி அண்ணாந்து குடித்தாள் — பாட்டிலின் வாயில் சின்ன சிணுங்கல். சோடா கையில் இருந்தபடியே தொடர்ந்தாள்:

“வழக்கம்போல நேத்து நைட்டும் குடிச்சுட்டு ரோட்டுல ஆடிக்கிட்டே வந்திருக்கு… மையத்தாங்கொல்லை முனையிலே வர்றப்போ வேகமா வந்த ஒரு ‘பைக்’காரன் மேல போயி மோதி, அவன் இடிச்சு தள்ளிட்டு போய்ட்டான்…”

“அல்லாவே… அப்பறம்?”

“அப்பறமென்ன… சாக்கடை ஓரமா விழுந்து ஒரே வாடையில கெடந்திருக்கு. நைட் வேலைக்கு போன எங்க அக்கா பையன் ரஃபீக்குத்தான் தூக்கிட்டு வந்து வாசல்ல போட்டான்.

அப்பறம் எல்லாருமா சேர்ந்து குளிப்பாட்டி ஓரமா படுக்க வெச்சோம்…”

நசீமா சிரித்தாள். “அல்லாஹ்… ஒன்னோட வீட்டுக்காரரு எப்பதான் மாறப்போறாரோ…”

ஃபிரிட்ஜ் மேல் கைப்பையிலிருந்து நூறு ரூபாய் தாளை எடுத்து இரண்டாக மடித்தாள். “பிள்ளைகளுக்கு ஏதாவது வாங்கிக்கோ” என்று நீட்டினாள்.

குரைசா அதை வாங்கிப் புடவை மடிப்பில் நெருக்கி விரலால் தட்டி சரிபார்த்தாள். பக்கத்து வீட்டு ஜெரினாவும் மேல்மாடி பாத்திமா அக்காவும் கொடுத்த நோட்டுகள் விரல்களுக்குப் பட்டன. அந்த மடிப்பில் விரல்கள் சிறிது நேரம் தங்கின — நடுமகள் சமீராவின் கல்யாணம் மனதில் மின்னி மறைந்தது.


மாலையில் ஆஸ்பெஸ்டாஸ் வீட்டின் வாசலில் ஜலால் லுங்கியை இடுப்பில் தளர்த்திக் கட்டிக்கொண்டு சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தான். உடல் முழுக்க வியர்வை ஒட்டியிருந்தது. வெயிலின் எச்சமா, குடிப்பின் தடமா? பிரிக்க முடியாதபடி மூச்சில் வாடை கனமாக இருந்தது. கண்கள் திறந்தபடியே சுவரை சுவரை நோக்கிக் கிடந்தன.

அருகிலிருந்த பிளாஸ்டிக் ஸ்டூலை கைநுனியால் தட்டினான்.

“குடும்பத்தை ஒழுங்கா கவனிக்க துப்பில்லை… கையில காசு பொரளுதுங்கற திமிரு…”

அவன் பேசிக்கொண்டிருக்கும்போது தெருவில் நிறுத்தி வைத்திருந்த சைக்கிள் ஓரமாக சாய்ந்தது. ஒரு சிறுவன் அதைக் கவனித்து நின்று, அடுத்த நொடி எதுவும் நடக்காதது போல ஓடிவிட்டான். எதிர் வீட்டில் இரண்டு பேர் ஒரே சமயத்தில் பேசுவதை நிறுத்திக்கொண்டார்கள். ஒரு பெண் ஹிஜாப் ஓரத்தை சரிசெய்துகொண்டபடி, சற்றே தயக்கத்தோடு அவனைத் தாண்டி சென்றாள்.

பக்கத்து வீட்டு நசீமா ஜன்னல் கம்பிகளில் கை வைத்தபடி எட்டிப் பார்த்தாள். அவனை பார்த்தவுடன் முகம் சுளிந்தது; தாமதிக்காமல் நிழலுக்கு பின்னால் நகர்ந்தாள். ஜன்னலை மெதுவாக இழுத்து மூடினாள் — சத்தம் கொட்டாமல் இருக்கட்டும் என்பதுபோல.

ஜலால் அதைக் கவனிக்கவில்லை. தெருவின் வெறுமையைத் துளைத்துக்கொண்டிருந்த பார்வை கலையவில்லை. சற்று முன்னே குனிந்தபடி மீண்டும் பேசத் தொடங்கினான் — இப்போது சொற்கள் இன்னும் குழப்பமாக, இடையில் சிரிப்பு கலந்து, இடையில் எரிச்சல் கலந்து சிதறின.

“ஊரு முழுக்க என்னப் பொணம்னு வேற சொல்லிட்டு திரியர இல்ல…”

அவன் நெஞ்சு ஒரு முறை உயர்ந்து விழுந்தது.

“ஆமா… நான் பொணம்தாண்டி…

ஒன்ன என்னைக்கு என் தலையில கட்டி வெச்சாங்களோ… அன்னைக்கே நான் பொணமாயிட்டேன்…”

கடைசி வரியை சொல்லும்போது குரல் உயரவில்லை. அருகிலிருந்த நாய் அவனை நேரடியாகப் பார்க்காமல் திசை மாற்றிக்கொண்டது.

நசீமா ஜன்னலை முழுதாக மூடிவிட்டாள்.

ஜலாலின் சத்தம் தெருவை நிரப்பத் தொடங்கியது.

அந்த நேரம் பள்ளிவாசலிலிருந்து மஃஹ்ரிப் பாங்கு மெதுவாக எழுந்தது.

தெருவின் மூலையிலிருந்து ஜைனப்பா மஸ்தான் சாய்பு தாங்கி தாங்கி நடந்து வந்தார்.

அவர் அருகே வந்தபோது ஜலாலின் குரல் தானாகவே சுருண்டது.

சாய்புவுக்கு வழிவிட இரண்டு அடி பக்கமாக நகர்ந்தான்.

அவன் கண்கள் தரையைத் தேடின.

மஸ்தான் சாய்பு அவனை ஒருமுறை பார்த்தார் — நீண்ட காலம் பழகிய பார்வை; ஆச்சரியம் இல்லை, கேள்வியும் இல்லை.

சாய்பு நிதானமாக நடந்துபோனார்.

அவர் மறைந்த அடுத்த நொடியிலேயே ஜலால் மீண்டும் பேசத் தொடங்கினான்.

அந்நேரம் குரைசா ஒரு படி முன்னே வந்தாள்.

“வீட்டு செலவுக்கு நீயும் தர மாட்ட… நானும் நாலு இடத்துக்கு வேலைக்கு போகக்கூடாது?… இப்படி தெனம் தெனம் குடிச்சிட்டு வந்து ஊரைக் கூட்டி மானத்த வாங்குவ…”

அவள் வார்த்தைகள் முழுவதும் நிறைவடையாமல் இடையில் இடையில் மூச்சுடன் உதிர்ந்தன.

ஜலால் சிரித்தான் — வாயின் ஓரத்தில் மட்டும் சிக்கிக்கொண்ட சிரிப்பு.

“ஆமா… பெரிய மானம்…” சுவரை சாய்ந்தான். உடம்பு மெல்ல கீழே இறங்கியது. “போடி… போய் இந்தப் பொணத்துக்கு சோத்தை எடுத்து வையி…”

உட்கார்ந்தபோது குரல் குறைந்தது; கண்களில் இருந்த அசைவு மட்டும் நிற்கவில்லை.


உள்ளே, மூத்த மகள் சபீனா கைக்குழந்தையுடன் நின்றிருந்தாள். ஜலால் தள்ளாடியபடி உள்ளே வந்ததும் அவன் பேத்தி சின்ன ஓட்டம் போல அவன் கால்களைப் பிடித்தாள்.

“தாத்தா!”

ஜலால் உடனே குனிந்தான்.

ஈயப்பூச்சுப் பட்டறையில் நாள் முழுக்க முலாம் பூசின விரல்களால் பேத்தியின் முகத்தை வருடினான்.

நகங்களுக்குள் கருப்பு படிந்திருந்தது; மணிக்கட்டில் ஆசிட் பட்ட வெள்ளைத் தழும்புகள்.

உடம்பிலிருந்து இரும்பு, ஈயம், வியர்வை கலந்து ஒரு கசப்பான நெடி எழுந்தது.

அந்த நெடி ஒரு கணம் பட்டறையை திரும்பக் கொண்டு வந்தது — ஈயம் கொதிக்கும் சூடு, புகை, கைகள் நிற்காமல் ஓடியது.

விரல்கள் லேசாக நடுங்கின.

அவன் உடனே பிடியை இழுத்துக்கொண்டான்.

பேத்தி முகத்தைச் சுளித்தாள்.

மூக்கை சுருக்கிக்கொண்டு அவன் மார்பிலிருந்து கொஞ்சம் விலகினாள்.

நடுமகள் சமீரா உள்ளே சென்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.. அவள் காதில் இருந்த காலியான துளை, ஒரு நொடி வெளிச்சத்தில் மின்னியது.

வெளியே யாரோ —

“இன்னுமா கல்யாணமாகல?”

சமீரா சட்டென்று முடியால் காதை மறைத்துக்கொண்டாள்.

இளையவள் சலீமா அவன் சட்டையை மெதுவாகத் தட்டினாள்:

“அப்பா, இன்னைக்காச்சும் எதுவும் வாங்கிட்டு வந்தீங்களா?”

ஜலால் பதில் சொல்லவில்லை. அவளை ஒருமுறை பார்த்தான். பிறகு அவள் தலையை மெதுவாகக் கோதினான்.


இரவு கவிழ்ந்தது. தெருவின் சத்தங்கள் அடங்கின. வெளியே ஒரே ஒரு மின்விளக்கு காற்றில் அசைந்து வீட்டுக்குள் மங்கலான ஒளி வீசிக்கொண்டிருந்தது. குரைசா கதவைத் தாளிட்டாள்.

ஜலால் பாயில் அமர்ந்து இடுப்பில் மறைத்து வைத்திருந்த சிறு பொட்டலத்தை மெதுவாக அவிழ்த்தான். இரண்டு தங்கக் கம்மல்கள் மங்கலான விளக்கொளியில் சின்னதாக மின்னின.

“இந்தா…”

கம்மலை அவன் ஒரு விநாடி திருப்பிப் பார்த்தான் —

பிறகு குரைசா பக்கம் நீட்டினான்.

“இந்த மாசச் சம்பளம், ஓவர்டைம் காசு, அப்பறம் ஓனரு போனஸா கொடுத்தது… எல்லாம் சேர்த்து வாங்கினேன். சமீரா கல்யாணத்துக்கு…”

வார்த்தைகள் தட்டுத்தடுமாறாமல் வந்தன.

குரைசா கம்மல்களை வாங்கி அவன் கையைத் தொட்டாள். கருகிய கோடுகள், நகத்தின் ஓரத்தில் ஒட்டியிருந்த எண்ணெய் கருமை. எதுவும் சொல்லாமல் கம்மல்களை மடிப்புக்குள் நுழைத்தாள்.

“நாளைக்கு காலைல மொதல் வேலையா இதைக் கொண்டுபோயி உங்க அம்மா வீட்டு பீரோவுல வெச்சிடு,” என்றான்.

சட்டியிலிருந்த சோற்றை வழித்து அவன் தட்டில் பரப்பினாள். குழம்பை ஊற்றிக்கொண்டே பேசத் தொடங்கினாள்:

“அந்த மாடி வீட்டு சுபைதா அக்கா… உன் பொண்ணுக்கு கல்யாணம் வெச்சின்னா நான் ரெண்டு கிராம் மோதிரம் பண்ணி போடறேன்னு சொன்னாங்க…”

ஜலால் சோற்றை மெதுவாகப் பிசைந்தான். சிரிப்பு உடனே வரவில்லை — சற்று தாமதமாக, உதட்டின் ஓரத்தில் மட்டும் வந்து நின்றது.

“வேற யாராவது…”

“பக்கத்து வீட்டு பாத்திமா அக்காவும் ஏதாச்சும் செய்வாங்க,” என்றாள். குரலை கொஞ்சம் தாழ்த்தி, “ஆனா ஒன்னப்பத்தி அவங்கள்ட்ட கொறய பேசுறதுதான் கஷ்டமா இருக்கு…” என்றாள்.

ஜலால் சோற்றை அசைபோட்டபடி லேசாகச் சிரித்தான்.

குரைசா கண்ணிமைக்காமல் அவனை நேராகப் பார்த்தாள்.

சிறிது நேரம் கழித்து தட்டைப் பாதி வைத்துவிட்டு பின்னால் சாய்ந்தான். கண்கள் சுவரைத் தாண்டி எங்கோ பார்த்தன.

ஒரு கணம் எதுவும் நகரவில்லை.

உதடு அசைந்தது.

ஒரே ஒரு சொல் — “பொணம்…”

அந்தச் சொல்லின் ஓரத்தால் குரைசாவைத் தொட்டான்.

குரைசா தடுமாறினாள். “அது சும்மா…”

புன்னகை அவன் வாயில் நின்றுகொண்டே இருந்தது.

“தெரியும்…” என்றான்.

குரைசா எதுவும் பேசவில்லை. அவன் அருகில் வந்து அமர்ந்து அவன் கையை மெதுவாகப் பற்றினாள். வேலைக்குப் போய் கடினமடைந்த அந்த கைகள் சிறிது தளர்ந்திருந்தன — அவள் பிடித்ததும் அவை தப்பிக்கவில்லை.

விளக்கு இன்னும் எரிந்துகொண்டிருந்தது.


அடுத்த நாள் காலை.

குரைசா வாசலில் நின்றிருந்தாள். சில வீடுகளின் கதவுகள் அரைத் திறந்திருந்தன. பக்கத்து வீட்டுக்காரி வெளியே வந்தாள்.

“நேத்து ராத்திரி அந்தப் பொணம் மறுபடியும் கத்திக் கூப்பாடு போட்டுச்சு… எல்லாம் என் தலையெழுத்து!” என்று ஆரம்பித்தாள் குரைசா.

பக்கத்து வீட்டுக்காரி கையில் இருந்த பாத்திரத்தை மெதுவாக கீழே வைத்துவிட்டு பரிதாபமாகத் தலையசைத்தாள் — சொல்ல ஒன்றும் இல்லாத மாதிரி.

அதே நேரம் தெருவின் மூலையில் இன்னொருத்தி வாசலைத் துடைத்துக்கொண்டே நின்றாள். குரைசாவின் பேச்சை பாதியிலேயே பிடித்துக்கொண்டவளாக துடைப்பை நிறுத்தாமல், கீழே பார்த்தபடியே சொன்னாள்:

“பேசாம அந்தப் பொணத்த வீட்டை விட்டு தொரத்திடு குரைசா… பொறுப்பில்லாதவன் இருந்தா என்ன, போனா என்ன!”

சொன்ன உடனே அவள் கண்கள் தன் வீட்டுக்குள் ஓரமாகத் திரும்பின.

குரைசா அங்கேயே நின்றாள். உதடு அசைந்தது — சத்தம் வரவில்லை.

முகம் ஒரு கணம் இறுகி, கண்களின் ஓரம் கசங்கியது.

அடுத்த நொடியே அது தளர்ந்தது.

உதட்டில் சின்ன சிரிப்பு வந்தது — கண்களில் மட்டும் அந்த இறுக்கம் மங்காமல் நின்றது.

“அப்படித்தான் பண்ணப்போறேன்…”

சொல்லிவிட்டு, திரும்பிப் பார்க்காமல் அம்மா வீடு நோக்கி நடந்தாள்.

புடவை மடிப்பில் தங்கக் கம்மல்கள் நடையோடு இளகி இளகி சிணுங்கின.

அவள் நடந்தபடியே மெதுவாக அந்த மடிப்பைத் தொட்டாள் — கண்கள் மூடியது — கையை எடுத்தாள்.

சிணுங்கல் மட்டும் கேட்டது.

சு.அப்துல் கரீம் சு.அப்துல் கரீம் (மே 1979) மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர். கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் கணிதம் படித்து, பின்னர் கணினி பயன்பாடுகளில் முதுநிலை பெற்றார். தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் மென்பொருள் நிபுணராகப் பணியாற்றி வருகிறார். தொழில், வாசிப்பு, எழுத்து என அனைத்தையும் ஒருங்கே இணைத்து மதுரையில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். சிறுவயதிலிருந்தே புத்தக வாசிப்பில் ஆர்வம் கொண்ட இவருக்கு, அந்த வாசிப்பு தமிழின் மீதான காதலாகவும், பின்னர் எழுத்தின் மீதான…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *