பூவரசு பூத்திருக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 28, 2026
பார்வையிட்டோர்: 50 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

அந்தப் பூவரசம் மரத்தைத் தறிப்பதற்கு தாத்தா உடன்படவில்லை. எங்கள் வீட்டுப் பின்பக்க வேலியின் எல்லைக்காக தாத்தா நட்ட கதியாலாக இருந்தலும் அது காணியின் உட்பக்கம் சரிந்து பெரிதாக வளர்ந்து கிளைகளைப் பரப்பியிருந்தது. இதனால் வேலியை நேராக அடைப்பது கொஞ்சம் கடினமாக இருப்பதாக அப்பாவிடம் சொன்ன போது, அப்பாவும் அதற்கு ஒன்றும் சொல்லவில்லை.

அப்பா தாத்தாவிடம் இது பற்றிக் கேட்டபோது நானும் அங்கே இருந்தேன். அப்போது நான் பள்ளி மாணவனாகப் படித்துக் கொண்டிருந்த காலம் அது.

‘நெஞ்சாங்கட்டைக்கு வைச்சிருக்கிறேன். அது இருக்கட்டும்’ என்று சொல்லிவிட்டு தாத்தா மௌனமாகிவிட்டார். பூவரசைத் தறித்து விடுவார்களோ என்ற பயம் தாத்தாவுக்கு ஏற்பட்டிருக்கலாம், அப்பாவிற்கும் ஏதோ தோன்றியிருக்க வேண்டும், மேற்கொண்டு எதையும் அவரிடம் கேட்கவில்லை.

‘நெஞ்சாங்கட்டையா?’ எனக்கு புரியவில்லை என்பதனால் அப்பாவிடம் அதைப்பற்றிக் கேட்டேன்.

‘தனக்கு ஏதாவது நடந்தால் தகனம் செய்யும் போது இந்தப் பூவரசைத்தான் நெஞ்சாங்கட்டையாக பாவிக்க வேணும் என்று தாத்தா விரும்புகின்றார். அவர் காணி வாங்கியபோது, எல்லைக் கதியாலாக அவர் நட்ட பூவரசாம். அதனாலே தான் நட்ட பூவரசு தான் வேணும் என்று ஆசைப்படுகின்றார். கடைசிக் காலத்தில் அவரது மனம் நோகாமல் அதை நாங்கள் நிறைவேற்ற வேணும்;’ என்றார் அப்பா.

‘நெஞ்சாங்கட்டை’ என்றால் என்ன என்பதை அப்புறம் தாத்தாவிடம் கேட்டபோது, எங்கள் ஊர் வழக்கப்படி வளவில் இருக்கும் ஒரு மரத்தைத் தறித்துத்தான் பச்சைமரமாகத் தகனத்தின் போது நெஞ்சாங்கட்டையாக வைப்பார்களாம், என்பதைத் தெரிந்து கொண்டேன். தாத்தாவுக்கும் இப்படியொரு கடைசியாசை இருந்தது.

எங்கள் சமூகத்தில் பெண்களையும், சிறியவர்களையும் மயானத்திற்குச் செல்ல அனுமதிக்காத காலமது என்பதால், மயானத்தில் இறுதிச் சடங்கின் போது, என்ன செய்வார்கள் என்பது எங்களுக்குத் தெரியாமலே இருந்தது.

தாத்தாவுக்குத் தொண்ணூறு வயதாகிறது. மெலிந்த உடம்பை அப்படியே வைத்திருந்தார். வயோதிபம்தான் அவரைப் பிடித்திருந்ததே தவிர, பெரிதாக

எந்தவொரு நோயும் அவரைப் பீடிக்கவில்லை. கண்பார்வை மட்டும் சற்று மங்கலாக இருந்தது.

‘ஏன் தாத்தா இந்த வயதிலும் எப்படி இவ்வளவு சுறுசுறுப்பாய் இருக்கிறீங்க?’ என்று ஒருநாள் கேட்டேன்.

‘அதுவா, எங்க காலத்தில குரக்கன் புட்டு, சாமியரிசிச் சோறு, வரகு, ஒடியல் கூழ், பனாட்டு, பாசிப்பயறு, அகத்தி, வல்லாரை, பொன்னாங்காணிக் கீரை, பாவற்காய், மரவெள்ளிக் கிழங்கு என்று சாப்பிட்டு வளர்ந்த உடம்பு, கெட்டபழக்கம் ஒன்றுமில்லை அதனாலேதான் ஒரு நோய் நொடியில்லாமல் இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.’ என்றார்.

யாழ்ப்பாணத்துக் கிராமத்துச் சூழலில் எங்கள் குடும்ப வாழ்க்கை எல்லாமே நல்லபடியாய் நடந்து கொண்டிருந்தது. சில மாதங்களாக எங்கள் பகுதியில் விடுதலைப் போராளிகளின் எழுச்சியைக் காணமுடிந்தது. ஒருநாள் சற்றும் எதிர்பார்க்காத விதமாக விடுதலைப் போராளிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையே போர் மூண்டது.

உயிரைக் காப்பாற்ற எல்லோரும் ஊரைவிட்டு வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றார்கள். தாத்தா தான் பிறந்த மண்ணைவிட்டு வேறு இடங்களுக்கு வரமறுத்து விட்டார். தாத்தாவைத் தனியே விட்டுச் செல்ல எங்களுக்கு மனம் வரவில்லை. அதனால் நானும், அப்பாவும் அவருடனே தங்க வேண்டி வந்தது.

கடற்கரையோரமாக இருந்த எங்கள் கிராமத்தையும் பாதுகாப்புக் காரணங்களுக்காக, உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவம் அறிவித்து அவ்வப்போது ஊரடங்குச் சட்டத்தையும் அமுல் படுத்தினார்கள். மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறியதால், அங்கிருந்த வீடுகள் எல்லாம் வெறிச்சேடிக் கிடந்தன. இராணுவத்தினர் முகாமில் இருந்து வீசிய செல்குண்டுகள் வீடுகள் மேல் வந்து விழுந்து அனேகமான வீடுகளைத் தரைமட்டமாக்கின. போதாக்குறைக்கு அவ்வப்போது விமானக் குண்டு வீச்சும் நடைபெற்றது. உயிர்த் துடிப்போடு கலகலப்பாக இருந்த கிராமம் ஒரே நாளில் மயானம் போலாகிவிட்டது.

செல்லடியில் இருந்து தப்புவதற்கு நானும் அப்பாவும் வீட்டின் சுவர்க்கரை ஓரமாக இராணுவ முகாம் இருந்த பக்கமாக மண் மூட்டைகளை பாதுகாப்புக்காக அடுக்கி வைத்தோம். இரவிலே முகாமில் இருந்து செல்லடித்தால் தாத்தாவையும் அதற்குள் படுக்க வைத்து நாங்களும் படுத்துக் கொள்வோம். விண்கூவும் சத்தம்போல, இரைச்சலைத் தொடர்ந்து இடி முழங்குவது போல செல்கள் வெடிக்கும். உயிரைக் கையிலே பிடித்துக் கொண்டு பயத்தோடு வாழவேண்டிய ஒரு வாழ்க்கைதான் எங்களுக்கு அப்போது கிடைத்தது.

அன்று இரவு முழுவதும் பாக்குநீரிணைப் பகுதியில் இருந்தும் கிழக்கே பலாலி இராணுவமுகாமில் இருந்தும் செல் அடித்தார்கள். ஒவ்வொருமுறையும் அவை வெடிக்கும் போது உயிர் போய் வந்தது. காலையில் சற்று ஓய்ந்தது போல இருந்தது.

வழமையாக எழுந்து குளித்து வீபூதி பூசிக்கொண்டு முன் விறாந்தையில் உட்கார்ந்திருந்து தேவாரம் படித்துக் கொண்டிருக்கும் தாத்தாவை அன்று காணவில்லை. தாத்தா படுக்கும் அறைப்பக்கம் சென்றேன், அப்பா கட்டிலுக்கு அருகே இருந்த கதிரையில் உட்கார்ந்திருந்தார்.

‘என்னப்பா என்னாச்சு?’ என்றேன்.

நிமிர்ந்து பார்த்த அப்பாவின் கண்கள் கலங்கியிருந்தன.

‘தாத்தா போய்விட்டார்’ என்று சொல்லி அப்பா விம்மினார்.

என்ன செய்வது என்று தெரியாமல் சிறிது நேரம் அதிர்ந்துபோய் உட்கார்ந்து இருந்தோம்.

‘உதவிக்கு ஒருவரும் இல்லையே அப்பா’ என்றேன்.

தகனம் செய்வதற்குத் தேவையான வசதிகளோ அல்லது உதவி செய்வதற்கோ யாரும் இருக்கவில்லை. மயானத்திற்கு குறுக்குப் பாதையால் சென்றாலும் பிரதான வீதியைக் கடக்க வேண்டும். ஊரடங்குச் சட்டம் என்பதால், இராணுவ வண்டிகள் எந்த நேரமும் அந்த வீதியால் வரலாம் அல்லது விமானப்படையின் ஹெலியும் வானத்தில் வட்டமிடலாம் என்ற பயமிருந்தது.

மரணமானவர்களைத் தகனம் செய்வதுதான் எங்கள் இனத்தின் வழக்கமாக இருந்தாலும், தாத்தாவின் விடயத்தில் அப்படிச் செய்ய முடியவில்லை. அதற்கான எந்தவொரு வசதியும் அன்று இருக்கவில்லை. ஊரடங்கு நேரத்தில் இராணுவ முகாமில் இருந்து செல்லடித்துக் கொண்டிருந்தார்கள். வீட்டை விட்டு வெளியேறவோ, அல்லது மயானத்தில் தகனத்திற்காக நெருப்பு எரிக்கவோ முடியாத சூழ்நிலை இந்த யுத்தக் கெடுபிடியால் அங்கே உருவாகியிருந்தது.

‘இப்போ இருக்கிற சூழ்நிலையில் நாங்கள் தாத்தாவை தகனம் செய்ய முடியாதே’ என்று அப்பா வருத்தப்பட்டார்.

‘ஒரே ஒரு வழிதான் இருக்கப்பா நாங்க தாத்தாவைப் புதைத்து விடுவோம்’ என்று சொன்னேன்.

சாஸ்திர விதிகளைக் கடைப்பிடிக்க முடியவில்லையே என்பதால் அப்பாவிற்கு அந்த யோசனை சரியாகப்படவில்லை, ஆனாலும் சற்று நேரம்

யோசித்துக் கொண்டிருந்தவர் வேறு வழியில்லாது ‘அப்படியே செய்வோம்’ என்றார்.

அப்பாவின் சைக்கிளையும், எனது சைக்கிளையும் அருகருகே வைத்து ஒரு தள்ளு வண்டி போலத் தடியால் பொருத்திக் கட்டினோம். அப்பா, தாத்தா குறிப்பிட்ட பூவரசம் மரத்தில் இருந்து சில தடிகளை வெட்டிக் கொண்டு வந்தார். அவற்றைச் சயிக்கிளில் நீட்டுப் பக்கமாகப் பாடைபோல வைத்துக்கட்டினோம். எங்களுக்குத் தெரிந்த வகையில் தாத்தாவிற்கு இறுதி மரியாதையைச் செய்து உடலை ஓலைப்பாயால் சுற்றிக் கட்டினோம். அதன் பின் தாத்தாவின் உடலைச் சயிக்கிளில் கட்டியிருந்த பாடையின் மேல் கிடத்தினோம். இருவரும் சேர்ந்து கடற்கரை ஓரத்தில் இருந்த மயானம்வரை குறுக்குப் பாதையால் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு சென்றோம்.

தாத்தா எங்கள் ஊர்;ப்பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஊரே சுமந்து செல்ல வேண்டிய ஒருவரை அநாதைப் பிணமாய் நாங்கள் கொண்டு சென்றது மனசை வருத்தியது. ஆனாலும் அந்தச் சந்தர்ப்பத்தில் எங்களுக்கு வேறு வழி கிடைக்கவில்லை.

செல்லடிப்பது சற்று ஓய்ந்து போயிருந்தது. நாங்கள் அவசரமாகக் குழியைத் தோண்டி தாத்தாவைப் புதைத்தோம். மணல் கலந்த தரை என்பதால் குழி தோண்டுவது கொஞ்சம் இலகுவாக இருந்தது.

தாத்தாவின் உடம்பைத் தகனம் செய்ய முடியவில்லை, தாத்தாவின் விருப்பப்படி பூவரசங்கட்டையை நெஞ்சாங்கட்டையாகப் பாவிக்க முடிடியவில்லையே என்ற மனவருத்தம் எனக்குள் குற்ற உணர்வுபோலக் கலங்க வைத்துக் கொண்டே இருந்தது. தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற அப்போதிருந்த சூழ்நிலை எங்களுக்கு இடம் தரவே இல்லை.

தாத்தாவிற்காகத்தான் நாங்கள் ஊரில் தங்கி இருந்தோம். தாத்தா இல்லாததால் நாங்களும் மறுநாள் ஊரைவிட்டுக் கிளம்பியிருந்தோம். முன்னேறிய இராணுவம் எங்கள் பகுதியைக் கைப்பற்றி அதை அதிபாதுகாப்பு வலயமாகப் பிரகடனப் படுத்தியிருந்ததால், பொதுமக்களை அப்பகுதிக்குச் செல்வதற்கு அனுமதிக்கவில்லை.

போர் ஓய்ந்து இருபது வருடங்களின் பின் இராணுவம் எங்க ஊரைவிட்டு நகர்ந்திருந்தது. நாங்கள் திரும்ப எங்கள் ஊருக்கு வந்தபோது வீடுகள் எல்லாம் கூரை இழந்து இடிந்து போயிருந்தன. திருத்தக்கூடிய ஒரு பகுதியைத் திருத்தி அதில் குடியேறினோம். இயற்கையாகவே மரங்கள் வளர்ந்து வீதிகள், காணிகள் எல்லாம் பற்றைக் காடாய்க் காட்சி தந்தது. இத்தனைக்கும் நெஞ்சாங்கட்டையாகப் போயிருக்க வேண்டிய தாத்தாவின் வேலிப் பூவரசு அப்படியே நின்றது.

தாத்தா இறந்த நினைவு நாளிலன்று ஒருநாள் மயானத்திற்கு வந்து தாத்தாவைப் புதைத்த இடத்தைத் தேடினோம். செடி கொடிகள் வளர்ந்து பாவனையற்ற மயானம் முழுவதும் புதராய்க் காட்சி தந்தது. இதிலே எங்கே போய்த் தாத்தாவைப் புதைத்த இடத்தைத் தேடுவது என்று மனம் சோர்ந்து போனாலும், சட்டென்று எனக்கு ஒரு ஞாபகம் வந்தது. நான் தாத்தாவைப் புதைப்பதற்காகக் குழி தோண்டிய போது, கடலில் இருந்து கடற்படையினர் செல்லடிக்கலாம் என்ற பயத்தோடுதான் குழியைத் தோண்டினேன். கடல் கொந்தளித்து ஆர்ப்பரிப்பதை எதிரே இருந்த மயானக் கட்டிடத்து அரைச் சுவருக்குள்ளால் என்னால் பார்க்க முடிந்தது. அப்படியானால் இங்கேதான் பிரேதங்களை எரிப்பதற்குப் பாவித்த சிறிய கட்டிடம் இருந்திருக்க வேண்டும். அதைத் தேடியபோது, செல் தாக்குதலில் உடைந்து போன அந்தக் கட்டிடத்தை மூடிப் புதர்கள் வளர்ந்திருப்பதைக் கண்டேன்.

அப்படியானால் வடக்கே கடல் இருந்ததால், கட்டிடத்தின் தெற்குப் பக்கத்தில்தான் தாத்தாவைப் நாங்கள் புதைத்திருக்க வேண்டும். கவனமாக ஒவ்வொரு புதராகத் தேடிக் கொண்டிருந்த எனக்குத் திடீரென ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. கண்களை அகல விரித்து மீண்டும் பார்த்தேன். பற்றையாக வளர்ந்திருந்த புதர்களுக்கு நடுவே மஞ்சள் ஆரேஞ்ச் நிறம் கலந்த அழகான பெரிய பூவரசம் பூக்கள் சூரிய வெளிச்சத்தில் குளித்துக் கொண்டிருந்தன. என்னால் நம்பமுடியவில்லை. தாத்தாவைப் புதைத்த இடம் இதுதான் என்பது எனக்கு உறுதியானது, ஆனால் எப்படிப் பூவரசம் மரம் அங்கே வந்தது?

தாத்தாவைப் புதைத்த குழியைத் தேடி இரத்தவாடைக்கு இரவிலே மிருகங்கள் வந்து மண்ணைக் கிளறலாம் என்ற பயம் இருந்ததால், பாடைபோலக் கட்டிக் கொண்டு வந்த பச்சைப் பூவரசம் தடிகளைச் சமாதியின் மேல் பரப்பி வைத்து, அருகே இருந்த பெரிய கற்களை தேடி எடுத்து அதன்மேல் அடுக்கியிருந்தோம். அந்த சூழ்நிலையில் வேறு எதுவும் எங்களால் அப்போது செய்ய முடியவில்லை. மழைக்காலம் என்பதால் மண்ணுக்குள் புதைந்த அந்தப் பச்சைப் பூவரசந்தடிகளில் ஏதாவது ஒன்றுதான் முளைவிட்டுப் பெரிதாக வளர்ந்து பூத்திருக்கிறது.

தாத்தாவின் கடைசி ஆசையான நெஞ்சாங்கட்டையாக அந்தப் பூவரசு இல்லாவிட்டாலும், ஏதோ ஒருவிதத்தில் தாத்தாவின் சமாதிக்கு அந்தப் பூவரசின்கிளை வளர்ந்து நிழல் கொடுத்ததில் தாத்தாவின் ஆசை நிறைவேறியிருப்பதை, நாங்கள் கைவிட்டாலும் இயற்கை கைவிடவில்லை என்பதை நினைக்க ஆச்சரியமாகவும், மனசுக்கு நிம்மதியாகவும் இருந்தது. தாத்தாவின் இறுதிச் சடங்குகளை முறைப்படி செய்யமுடியாமல் போன குறை இருந்தாலும், நிறைந்த மனதோடு, ‘தாத்தாவின் ஆத்மா சாந்தியடையட்டும், ஓம் சாந்தி’ என்று மனதுக்குள் பிரார்த்தித்துக் கொண்டு வீடு திரும்பினேன்.

தாத்தாவின் அந்த வேலிப் பூவரசு அப்பாவுக்காகத்தான் காத்திருக்கிறதோ தெரியவில்லை!

குரு அரவிந்தன் குரு அரவிந்தன் கனடாவில் வாழ்ந்து வரும் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம் எழுதுவதுடன் கனடாவில் இருந்து வெளிவரும் தமிழ்த் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனங்கள், மற்றும் நாடகங்களும் எழுதி வருகிறார். வாழ்க்கைக் குறிப்பு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தந்தை பெயர் அருணசலம் குருநாதபிள்ளை. காங்கேசன்துறை நடேசுவரா கல்லூரி, தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர். எழுத்துத் துறையில் இவரின் சிறுகதைகள், தென்னிந்திய சஞ்சிகைகளான ஆனந்த…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *