புதியவன்
கதையாசிரியர்: பானுமதி வெங்கடேஸ்வரன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: April 25, 2026
பார்வையிட்டோர்: 72

“நான் வந்து கொண்டிருக்கிறேன்”
ரிதுவிடமிருந்து மெஸேஜ் வந்திருந்தது. ஜோ அதை இப்போதுதான் பார்த்தான். வேண்டாம் என்று இப்போது பதில் மெசேஜ் அனுப்ப முடியாது. அவள் வீட்டை அடைந்து, அழைப்பு மணியை அழுத்தி விட்டாள்.
கதவைத் திறந்த அவனை அணைத்துக் கொண்டு, முத்தமிட்டாள். அவனும் பதில் முத்தத்தால் அவளை வரவேற்றான்.
“எப்படி இருந்தது ஜர்னி?”
அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் இரண்டு கட்டை விரல்களை உயர்த்தி, “பத்து மணிக்கு டில்லியில் விமானம் ஏறினேன், பதினொன்றுக்கு லேண்டிங்” இங்கே ஹெலி டாக்ஸிக்குதான் கொஞ்சம் வெயிட் பண்ண வேண்டியிருந்தது” என்றவள், கிச்சனை நோட்டமிட்டு “என்ன எதுவும் பண்ணலயா? நான் மெஸேஜ் அனுப்பியிருந்தேனே?” என்றாள்.
“இப்போதுதான் பார்த்தேன்” அவன் சிரித்துக் கொண்டே சொன்னதும், அவனைப் பார்த்து முறைத்தாள்.
“நான் அனுப்பின மெசேஜைக் கூட பார்க்க முடியாமல் ஒலிம்பிக்ஸில் ஓட பிராக்டீஸ் பண்ணினாயா?”
“அப்படி பிராக்டீஸ் பண்ணினால் மெடலாவது வாங்கலாம்… அப்பாவுக்கு ஒரு அட்டெண்டர் தேடிக் கொண்டிருந்தேன்”
“இப்போதானே பழைய அட்டெண்டரை மாத்தி வேற ஒருத்தரை ஃபிக்ஸ் பண்ணினார்கள்?'”
“ப்ச்..இவரும் சரி படலையாம்.. ஜெரியாடிரிக் கேரிலிருந்து நேத்திக்கு கூப்பிட்டார்கள். நாளைக்கு போகணும்..” என்றவன் கொஞ்சம் தயங்கி, “நீ ரெஸ்ட் எடுத்துக்கறயா? நான் ரிடர்ன் ஆக நைட் ஆகிடும்” என்றான்.
“வொய்? லெட் மி ஆல்ஸோ கம் வித் யூ”
“உனக்கு கிடைக்கறதே ரெண்டு நாள், என்னோட வந்தால் ஒரு நாள் ஃபுல்லா வேஸ்ட் ஆயிடும்”
“வேஸ்ட்னு ஏன் சொல்ற? அப்பாவ பார்க்கப் போறது வேஸ்டா? வீட்ல தனியா இருக்கறதுக்கு பதிலா உன்னோட இருக்கலாம்” தன் தோளில் சாய்ந்து கொண்டவள் நெற்றியில் முத்தமிட்டவன், “சாப்பாடு வெளில ஆர்டர் பண்ணட்டுமா?” என்று கேட்டதற்கு
“நோ.. வீட்டு சாப்பாடு” என்றாள்.
“யாரு சமைக்கறது? நீயா? நானா?”
“ரெண்டு பேரும்”
இரண்டு பேரும் பேசிக்கொண்டே சமைத்தார்கள், சாப்பிட்டார்கள், காலையில் அலாரம் அடித்த பொழுது விழித்துக் கொண்டார்கள்.
ஃப்ரிட்ஜில் சாஷேயில் இருந்த ப்ரேக்ஃபாஸ்டை காலி பண்ணி, சப்ளிமெண்ட் எடுத்துக் கொண்டார்கள்.
“அப்பாவுக்கு எதுவுமே வாங்கிக்கலயே..?” ரிது, ஜோவிடம் கேட்டாள்.
“இல்லை, அதை ஜெரிகேரில் பர்மிட் பண்ணுவதில்லை” என்ற ஜோ, “கம் லெட்ஸ் கோ, ரெண்டல் ஹெலி டாக்ஸி ஹேட் கம்” என்றான்.
ஜெரிகேர், அமைதியாக இருந்தது. சில முதியவர்கள் அவர்கள் இருப்பிடத்தின் முகப்பில் உட்கார்ந்திருந்தார்கள். சிலர் உதவியாளர்களின் துணையோடும், சிலர் தனியாகவும் நடந்து கொண்டிருந்தனர்.
ஒரு மூதாட்டி அவனைப் பார்த்து புன்னகைத்து, “டிட் ஐ மீட் யூ பிஃபோர்? பார்த்த மாதிரி இருக்கு”
“யெஸ் ஆன்டி, போன மாசம் கூட பார்த்தீங்க,”
அவள் நெற்றியை சுருக்கி, லேசாக நெற்றிப் பொட்டில் தட்டி யோசித்து, ” ஓ… நீ கவினோட சன்னா?” என்று கேட்க, “ஆமாம்” என்றவன், அந்த பெண்மணியின் கையைப் பற்றி, லேசாக நீவி கொடுத்து, “அப்பாவை பார்த்துட்டு வரேன்”. என்றான்.
அவர்களுக்கு தலையசைத்து விடை கொடுத்ததும், அப்பாவின் விடுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.
“இங்க எல்லாரும் ரொம்ப வயசானவங்களா இருக்காங்க இல்ல?” ரிது கேட்கதற்கு
“இது ஜெரியாட்ரிக் கேர் சென்டர்மா, வயசானவங்கதான் இருப்பாங்க”
“ஐ மீன் ரொம்ப வயசானவங்களா இருக்காங்க”
ஜோ பதில் சொல்லாமல் தோளைக் குலுக்கினான்.
அவர்கள் அப்பாவின் வீட்டில் நுழைந்ததும், அப்பாவின் கேர் டேக்கர் கண்ணன், “வெல்கம் ஜோ, வெல்கம் யங் லேடி, பை த வே ஹூ இஸ் ஷி?” என்றுதும், அப்பா, “எல்லாம் உனக்கு சொல்லணும், கொஞ்சம் வெளில போ, எனக்கு என் பையனோட பேசணும்” என்று எரிச்சல் பட்டார். கண்ணன் வெளியேறினான்.
“ஏம்பா அவன் கிட்ட ரூடா பேசினீங்க?”
“இவன் ஒரு அதிகப்பிரசங்கி, மொதல்ல இவன மாத்தணும்” என்றவர், தொடர்ந்து,”ஹு இஸ் திஸ் யங் லேடி?” என்றார்.
“ஷீ இஸ் ரிது, நான் இவள கல்யாணம் பண்ணிக்கப் போறேன்”
“எப்போ?”
“ஆறு மாசம் முன்னாலேயே பண்ணிக் கொண்டிருப்போம், உங்களுக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு, இப்போ இவளோட பேரண்ட்ஸ் டூரில் இருக்காங்க, அவங்க வந்ததும் கல்யாணம்தான். எங்க வெச்சுக்கறதுனு யோசிக்கணும், பேசாம இங்கேயே வெச்சுண்டா என்ன?”
“தாராளமா…போன மாசம் கூட இங்க ஒருத்தரோட பெண்ணுக்கு கல்யாணம் நடந்தது. உனக்கு ஒகே யாமா?”
ரிது மெல்லிய சிரிப்போடு தலையசைத்தாள். இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்தாலும் வெட்கம் விட்டுப் போகவில்லை.
சிறிது நேரம் பொதுவாக பேசிக் கொண்டிருந்து விட்டு, “கண்ணனிடம் என்ன பிரச்சனை? ஏன் மாத்தணும்?” என்று கேட்டான்
“ஒவர் பேச்சு நை நைனு”
“முன்னால இருந்தவன் பேசவே மாட்டேங்கறான்னு சொன்னீங்க”
“ஆமாம், வாயைத் திறக்கவே மாட்டான், மிஷின் மாதிரி வேலை செய்வான், இவனானால் எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கிறான். தெரிஞ்சது, தெரியாதது..” வெறுப்போடு பேசினார்.
“உங்களுக்கு எப்படி வேணும்? பேசணுமா? பேசக்கூடாதா? ஒவ்வொரு அட்டென்டரையும் ஒவ்வொரு குறை சொல்றீங்க. ஹைஜினீக்கா இல்ல, தமிழ் தெரியல, பேசறதில்லை, ஜாஸ்தி பேச்சு…அட்டென்டர் கிடைக்கறது ஈசி இல்ல, கொஞ்ச நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க, பார்க்கலாம்”
ஜோ பேசிக்கொண்டே போக அப்பா பதில் சொல்லாமல் ஜன்னலுக்கு வெளியே வெறித்தார்.
அவரோடு மதிய உணவு உண்டு, மாலை வரை இருந்து விட்டு வீடு திரும்பும் பொழுது ஜெரி கேர் சென்டரின் அலுவலகத்திற்குச் சென்றார்கள்.
ஜோ, அட்டெண்டர் குறித்து தன் தகப்பனாரின் அதிருப்தியை சொன்னதும், “அவர் கேட்ட மாதிரி நாங்க அரேஞ்ச் பண்ணினோம். இன்னும் ஸ்பெஸிஃபிக்கா என்ன எதிர்பார்க்கிறார்னு சொல்லுங்க, அரேஞ்ச் பண்றோம்” என்றார்
ஒல்லியான கண்ணாடிக்காரர்.
மெளனமாக வந்த ஜோவிடம் ரீது,”அப்பா எந்த மாதிரி எதிர்பார்க்கராரோ, அந்த மாதிரி அரேஞ்ச் பண்ணிக் குடேன்” என்றாள்.
“அவர் என்ன எதிர்பார்க்கிறார்னு தெரிஞ்சாதானே..?”
அவருக்கு ஃபெமிலியரா இருக்கற மாதிரி யாராவது கிடைச்சா..? லைக் அவரோட கஸின், அல்லது ஃபிரண்ட் சாயலில் யாராவது”
“ரொம்ப கஷ்டம், கஸினுக்கு எங்க போறது? கஸின் என்பதெல்லாம் வெறும் வார்த்தையாகி மூணு தலைமுறை ஆச்சே, ரொம்ப ரேரா சில ஃபேமிலியில் இருக்கு. அப்பாக்கு கஸின்ஸ் கிடையாது. எனக்கும் கஸின்ஸ் கிடையாது. அட் லீஸ்ட் உனக்காவது ஒரு கஸின் இருக்கா”
“டோண் வொரி, நம்ப மூணு குழந்தைகள் பெத்துக்கலாம் கவ்ர்ன்மெண்ட் ஸப்சிடி” கண் சிமிட்டி கூறியவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.
“வாட் அபவ்ட் ஹிஸ் ஃப்ரண்ட்ஸ்..?”
“ஹவ் வில் தட் ஹெல்ப்?”
“தனக்கு நெருக்கமானவர்கள் தன்னோடு இருக்கிறார்கள் என்பது மொரேல பூஸ்ட் பண்ணாதா?”
“மே பி.. அப்பாக்கு கீரானு ஒரு ஃப்ரண்ட் உண்டு, அப்புறம் அப்பாவும் ராசு மாமாவும் ரொம்ப க்ளோஸ்”
“சரி, வீட்டுக்கு போனதும் அவங்களோட ஃபோட்டோஸ், வீடியோஸ் இருந்தா எடுத்துக் கொடு”
வீட்டில் கப்போர்டை குடைந்து பென் டிரைவுகளை எடுத்து அவற்றிலிருந்த புகைப்படங்கள், வீடியோக்களில் ராசு மாமாவையும், கீரா அங்கிளையும் அவளுக்கு காண்பித்தான்.
அவற்றில் சில படங்களை தன் பாம் டாப்பில் சேமித்த ரீது ஜெரிகேர் சென்டரை அழைத்து சில விவரங்கள் சொன்னாள். கேட்டுக் கொண்டவர், “ஓகே மேம்! பண்ணிடலாம், நோ ப்ராப்லம், தாங்க் யூ” என்றார்.
மறு நாள் ஜோவின் தந்தையிடம், “உங்கள் அட்டெண்டரை மாற்றப் போகிறோம். புதியவர் வரும்வரை இந்த ரோபோ உங்களுக்கு உதவியாக இருக்கும்” என்று கூறி அவருடைய அட்டெண்டரை அழைத்துச் சென்றார்கள்.
அவரை அலுவலகத்தின் பிரத்யேக அறைக்கு அழைத்துச் சென்றார்கள்.
“பேசுன்னா, ஒரேயடியா பேசுவயா?” என்று கேட்டுக் கொண்டே அவனின் உடையைக் களைந்தார்கள். அவனை கம்ப்யூட்டரோடு இணைத்து, ரீத்து சொன்ன விஷயங்களை கட்டளைகளாக கொடுக்க, அவனின் இல்லை அந்த மனித ரோபோவின் உடல் அமைப்பு, முகம் எல்லாம் மாறத் துவங்கின.
“சார் இவர்தான் உங்களுடைய புதிய அட்டெண்டர்”
“குட் மார்னிங்” என்று கை நீட்டிய அந்த புதியவனை வெறித்துப் பார்த்தார் கவின்.
“நீ ராசுவோட பையனா?”
“ஆமாம்”
“உன்னோட சிரிப்பு அப்படியே ராசு மாதிரியே இருக்கு” என்ற கவினுக்கு அந்த புதியவனை பிடித்து விட்டது.
தொடர்புள்ள சிறுகதைகள்
அவரும் நானும் ஒரு படகுப் பயணிகள்!
கடல்புத்திரன்
April 25, 2026
கமலா மாமி தேங்காய் பர்பி செய்கிறாள்
முனைவர் வெங்கடேஷ் கணபதி
April 25, 2026
அலமேலுவின் ஆச்சரியம்
இரா.கலைச்செல்வி
April 25, 2026