பாரத்தை சுமப்பது சுகமா! பாரமாக இருப்பது சுகமா!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 29, 2026
பார்வையிட்டோர்: 105 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

“விட்டு விடுதலையாகி நிற்பாய் – இந்தச் சிட்டுக் குருவியைப் போலே”

டாக்டர் மார்த்தாண்ட பூதம், Consultant Physician,

என்று போர்டு தொங்கிக்கொண்டு இருந்தது.

பார்வை நேரம்: மாலை -6 to 9,

என்று எழுதி இருந்தது.

அதற்கு கீழயே, Consultation by Appointment என்று ஒரு கைபேசி எண்ணும் எழுதி இருந்தது.

அங்கு வந்து சேர்ந்தனர் தாத்தாவும், பேத்தியும். கண்ணாடியை சற்று தூக்கி, போர்டை படித்து விட்டு, இவருக்கு பார்வை கோளாறா? என்று கேட்டார் தாத்தா.

ஏன் தாத்தா அப்படி சொல்றீங்க என்று பேத்தி கேட்டாள்.

பார்வை நேரம்: மாலை – 6 To 9, அப்படின்னு போட்டுருக்கே, மத்த நேரத்தில் பார்வை இருக்காதா? அதான் கேட்டேன்.

தாத்தா, உங்க குசும்பு எல்லாத்தையும் மூட்டை கட்டி வையுங்க, இந்த, மேக்கரிச்ச பேச்சு பேசுனா… டாக்டர், ஏடா கூடமா, ஏதாவது, எடக்கு பிடக்கு பன்னி வச்சுடுவார். அப்புறம் எசகு பிசகு ஆயிடும்.

ஐயையோ, நீ சொல்றது சரி தான். வாயில் அடித்துக் கொண்டார் தாத்தா.

உள்ளே சென்று அப்பாயிண்ட்மென்ட் மெசேஜ் காட்டினாள் பேத்தி. வரவேற்பாளர் சொன்னார். உக்காருங்க.. டாக்டர் வந்துடுவார் என்று சொன்னாள். அங்கே பலவிதமான சுவாமி படங்கள், அந்த டாக்டர் வாங்கிய விருதுகள், பட்டங்கள், பாராட்டுக்கள், போட்டோக்கள், எல்லாம் வரிசையாக வைக்கப் பட்டு இருந்தது.

அவற்றை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தாத்தா, ஒரு போட்டோவில், ஹிந்தியில் ஒரு பழமொழி எழுதி இருந்தது. “நா குச் மேரா, சப் குச் தேரா” என்பது அந்த பழமொழி.

அதைப் படித்த தாத்தா, பேத்தியிடம் கேட்டார், அதன் தமிழ் அர்த்தம் என்னவென்று.

அவள் சொன்னாள், இதன் பொருள் என்னவென்றால் “என்னுடையது எதுவும் இல்லை, இருப்பது எல்லாமே உன்னுடையது தான்” என்பதாகும்.

ஓஹோ., இந்த டாக்டர் பூதம், போட்டோவில் பார்க்கவே, கொஞ்சம் பூதம் மாதிரி தான் இருக்கிறார். வடநாட்டில் வேலை பாத்திருப்பார் போலிருக்கு. அதுதான் ஹிந்தி பழமொழி எல்லாம் போட்டுருக்கார், என்று அவருக்குள்ளேயே சொல்லிக்கொண்டார்.

இவ்வாறு, தாத்தாவும் பேத்தியும் பேசிக்கொண்டு இருந்த போது, வரவேற்பில் இருந்த பெண்மணி, உஷ், என்று கோர்ட்டில், நீதிபதி வரும்போது டவாலி, சொல்வது போல் சொல்லி, டாக்டர் வருகிறார் என்பதை அறிவித்தார். இவர்களுக்கு முன்பே, வந்தே இரண்டு நோயாளிகள், போய்விட்டு வந்த பின் தாத்தாவும் பேத்தியும், உள்ளே போனார்கள்.

வணக்கம் சொன்னார் தாத்தா.

நமஸ்காரம். வாங்க. என்ன செய்யுது, என்று கேட்டார் டாக்டர். உடம்பு நாம சொல்றத கேக்க மாட்டேங்குது, என்றார் தாத்தா.

அப்படியா..! செக் பன்னிடுவோம். கொஞ்சம் வந்து இந்த எக்ஸாமினேஷன் மேசை மேல படுங்க, என்றார் டாக்டர்.

சற்று சிரமப்பட்டு ஏறி படுத்துவிட்டு, தாத்தா கேட்டார், அது என்ன டாக்டர் ஹிந்தியில் ஒரு பழமொழி போட்ருக்கீங்க, என்று கேட்டார் தாத்தா.

அதுவா… “நா குச் மேரா.., சப் குச் தேரா” என்பது அந்த பழமொழி. இதன் பொருள் என்னவென்றால், என்னுடையது எதுவும் இல்லை, இருப்பது எல்லாமே உன்னுடையது தான், என்பதாகும்.

நாம் கண்களால் காணுகின்ற பொருள்கள் அனைத்தும் தொட்டு அனுபவிக்கின்ற பொருள்கள் அனைத்தும் நம்முடையது என்று தவறுதலாக நினைத்து கொண்டிருக்கிறோம். உண்மையில் அவைகள் ஈஸ்வரனால் படைக்கப்பட்ட அவனுக்கு சொந்தமான பொருள்களாகும். நமது உடம்பும் அப்படியே, என்றார் டாக்டர்.

அப்படின்னா… இந்த உடம்பு நமக்கு சொந்தம் இல்லையா டாக்டர்..?

“நெஞ்சகமே கோயில், நினைவே சுகந்தம், அன்பே மஞ்சனநீர், பூசை கொள்ள வாராய் பராபரமே!”

என்று தாயுமானவர் பாடியுள்ளாரே ? நம்முடைய உடம்பு என்பதால் தானே டாக்டர், என்று கேட்டார் தாத்தா.

ஆம். நீங்கள் சொல்வது சரி தான். இதையேதான் திருமூலர் “ஊனுடம்பே ஆலயம்” என்று சொல்கிறார். இந்த உன்னதமான இறைவன் வாழுகின்ற ஆலயம் என்ற உடம்பை நாம் எந்த வகையில் பாதுகாக்கிறோம் என்பதை சற்று ஆழமாக சிந்திக்க வேண்டும்.

நம்மில் யாருமே மரணமடைய விரும்புவது இல்லை. வாழவே விரும்புகிறோம். அதுவும் குறிப்பாக இன்பமாக, சந்தோசமாக, எந்த தொல்லையும் இல்லாமல், வாழ விரும்புகிறோம். நமக்கு இன்பம் தருகின்ற பொருள் எதுவாக இருந்தாலும் அதை பெற்று விட அலைந்து திரிந்து பெரும் முயற்சி எடுக்கவும் தயங்குவது இல்லை.

நமக்கு பாத்தியதை பட்ட சொத்துக்களை மட்டுமே சர்வ சுகந்திரமாக அனுபவிக்கும் உரிமை நமக்கு உண்டு. அவைகளை விற்கலாம், பாழ்படுத்தலாம், முற்றிலும் இல்லாமல் கூட அழித்து விடலாம். ஆனால் அடுத்தவருக்கு சொந்தமான பொருளை சேத படுத்துவற்கு நமக்கு எந்தவித உரிமையும் கிடையாது தகுதியும் கிடையாது, என்றார் டாக்டர்.

அப்படியென்றால் இந்த உடம்பும் இறைவனது சொத்து, இதை வதைப்பதற்கும் பாதுகாப்பு இல்லாமல் போட்டு வைப்பதற்கும் எனக்கு உரிமை இல்லை என்று சொல்றீங்களா, என்று கேட்டார் தாத்தா.

ஆம். கஷ்டப்பட்டு தேடி அலைந்து உழைத்து சம்பாதித்த பொருள்களை கெட்டு போகாமலும், கள்வர்கள் கவர்ந்து போகாமலும், இருக்க அல்லும் பகலும் பாடுபடுகிறோம். வெளியிலிருந்து பெற்ற பொருளை பாதுகாக்க எடுத்து கொண்ட முயற்சியில் நூற்றில் ஒரு பங்காவது அழிந்து போனால் மீண்டும் கிடைக்காத நமது உடம்பை பாதுகாக்க எடுக்கிறோமா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும், என்றார் டாக்டர்.

அப்போது, உடம்பின் பல பகுதிகளில் கையால் அழுத்திப் பார்த்து விட்டு, நெஞ்சகம், முதுகுப்பகுதியை சோதனை செய்துவிட்டு, எழுத்து சற்று நடந்து காட்டுங்கள், என்று சொன்னார் டாக்டர்.

இந்த சோதனையில் என்ன தெரியும் டாக்டர் என்று கேட்டார் தாத்தா.

நமது உடம்பு இருநூறுக்கும் மேல்பட்ட எலும்புகளாலும், ஐந்நூறுக்கும் மேற்பட்ட தசை நாறுகளாலும், ஆக்கபட்டது. எழுபத்தி இரண்டாயிரத்திற்கும் அதிகமான நரம்புகள் நமது உடம்பில் ஓடுகிறது. நம் கையளவே உள்ள இதயம் நிமிடத்திற்கு எழுபது முறை துடிக்கிறது. நீர் இறைக்கும் மோட்டார் பம்பை விட அதிக சக்தியோடு ரத்தத்தை, அந்த இதயம் உடல் முழுவதும் பிறந்த நாள் முதல் இறக்கும் நாள் வரை செலுத்தி கொண்டே இருக்கிறது. நுரையிரலில் உள்ள செல்களை பரப்பி வைப்போம் என்றால் அதன் பரப்பளவு நாற்பது சதுரடிக்கும் அதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட உடலை சோதனை செய்ய சில யுக்திகளை நாங்கள் படித்திருக்கிறோம். அதன் மூலம், உடலில் உள்ள உபாதைகளை கண்டுபிடிக்கலாம், என்றார் டாக்டர்.

இப்ப என்ன டாக்டர் என் உடம்புக்கு? என்று கேட்டார் தாத்தா.

உங்கள் உடல் நலமாக இருக்கு. உங்களுக்கு குறிப்பாக, ஏதாவது தொந்திரவு இருக்குதா? என்று கேட்டார் டாக்டர்.

எனக்கு மனசு பாரமா இருக்கு. என் பிள்ளைக்கு, பேர பிள்ளைங்களுக்கு நான் பாரமா இருக்கேனா என்று ஒரு பயமும் இருக்கு, என்றார் தாத்தா.

அதோடு, நான் என் மணைவியை, தனியே விட்டுவிட்டு போய்டுவேனோ அல்லது அவள் என்னை தனியே விட்டுவிட்டு முன்னே போய்டுவாளோ என்று ஒரு பயமும் இருக்கு, என்றார் தாத்தா.

சார், நீங்க ஓய்வு பெற்று எவ்வளவு வருடங்கள் ஆகுது, என்று கேட்டார் டாக்டர்.

டாக்டர், நான் சின்ன வயசுல கஷ்டப்பட்டு, எங்க அப்பா, அம்மா, சகோதர சகோதரிகளை நல்லா பாத்துகிட்டு, ஒவ்வொருத்தரையும் கரையேத்தி விட்டுட்டு, சுமார் 36 வருடம் வேலை பாத்துட்டு, ஓய்வு பெற்று பத்து வருடங்கள் ஆகுது, என்றார் தாத்தா.

ஐயா, அப்போ உங்களுக்கு எவ்வளவு அனுபவங்கள் இருக்கும்னு, நான் சொல்ல வேண்டியதில்லை. உங்கள் இளைய வயதிலிருந்து, நடுத்தர வயது வரை நீங்கள் குடும்ப பாரத்தை சுமந்ததை எப்படி உணர்ந்தீர்கள்? சுகமாவா? சுமையாகவா? என்று கேட்டார் டாக்டர்.

அது எப்படி டாக்டர் சொல்றது. உண்மையா சொன்னா, அப்ப கொஞ்சம் சுமையா தான் இருந்திச்சி.. ஆனா.. இப்ப நெனச்சா.. சுகமா இருக்கு.. நான் தான் குடும்பத்தோட அச்சாணி… என்னை நம்பி இவ்வளவு பேர் இருந்தாங்க… அதுக்கு கிடைச்ச மரியாதை.. அதையெல்ல இப்ப நெனச்சா… ரொம்ப பெருமையா … சுகமா தான இருக்கு டாக்டர்.

ஆமாம். பாரத்தை சுமப்பது என்பது நிலையான வளர்ச்சிக்கும் மனநிறைவுக்கும் அடித்தளம். பொறுப்புகளை ஏற்பது கடினமாகத் தெரிந்தாலும், அதுவே நமக்கு அனுபவத்தையும், ஆற்றலையும், சமூகத்தில் நற்பெயரையும் பெற்றுத் தரும். அது ஒரு சுகம் தான் .

அதே சமயம், நாம் யாருக்கும் பாரமாக இருப்பது (எந்தப் பொறுப்பும் இன்றி சோம்பேறியாக இருப்பது) சுயமரியாதையை இழந்தது போல இருக்கு, என்றார் தாத்தா.

சிரித்துக் கொண்டார் டாக்டர்.

ஐயா, அது எப்படி உங்களுக்கு ஒரு நியாயம், உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு நியாயம்? என்று கேட்டார் டாக்டர்.

நீங்க என்ன கேக்குறீங்கன்னு எனக்கு புரியல, என்றார் தாத்தா. ஆமாம். நீங்கள், உங்கள் இளைய வயதிலிருந்து, நடுத்தர வயது வரை நீங்கள் குடும்ப பாரத்தை சுமந்ததை, பெருமையா, சுகமா, கருதுறீங்க. ஆனால், அதே பெருமையை, சுகத்தை, உங்கள் சந்ததிகள் பெற நீங்கள் ஒரு வாய்ப்பு தர வேண்டாமா?

ஆமாம் ஐயா., இளைய வயதிலிருந்து, நடுத்தர வயது வரை சுமப்பது எவ்வாறு சுகமாக இருந்ததோ, அதே போல, வயதான காலத்தில், நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு சுமையாக இருப்பதில் சுகம் காணுங்கள்.

இப்போ, உங்க கூட வந்திருக்கது யார். உங்கள் பேத்தி தானே!

இந்த வயதில் என் மகன், மகள், மருமகள், பேரன், பேத்தி எல்லாரும் என்னை நல்லா பாத்துக்குறாங்கன்னு, நெனச்சு பெருமை படுங்க.., அது தான் சுகம். இந்த மன பாரத்திலிருந்து விட்டு விடுதலை ஆகுங்க…

அங்க பாருங்க, என்று காட்டினார் டாக்டர்…

பாரதியின் சிட்டுக்குருவி பாடலின் முழுவடிவம் கொடுக்கப்பட்டிருக்கிறது..

“விட்டு விடுதலையாகி நிற்பாய் – இந்தச் சிட்டுக் குருவியைப் போலே எட்டுத் திசையும் பறந்து திரிகுவை ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை மட்டுப்படாது எங்கும் கொட்டிக் கிடக்கும் இவ்வானொளி எனும் மதுவின் சுவையுண்டு பெட்டையி னோடு இன்பம் பேசிக்களிப்புற்றுப் பீடையிலாததோர் கூடு கட்டிக்கொண்டு முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு முற்றத்திலேயும் கழனி வெளியிலும் முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின் வைகறை ஆகுமுன் பாடி விழிப்புற்று.”

விட்டு விடுதலையாகி, பெருமையுடன் நடந்தார் தாத்தா, பேத்தியின் கையை பிடித்துக் கொண்டே..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *