நெருப்பு மலர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 3, 2025
பார்வையிட்டோர்: 83 
 
 

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ராஜு பிறப்பதற்கு முன்னரே அவனுக்கு ஏகப்பட்ட நேர்த்திக் கடன்களைச் செய்திருந்தாள் மாலதி. 

தென்னிந்தியாவில் உள்ள கோயில்கள் அனைத்துக்கும்- ஒவ்வோர் வகையான பிரார்த்தனை. அவளது வெகுளித் தனத்தை யெண்ணித் திலகன் சில சமயம் பரிகாசம் பண் ணினாலும் அவனுக்கும்— ‘இந்தக் குழந்தையாவது உயி ரோடு பிழைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு டாக்டர் களை மட்டும் நம்பிப் பிரயோசனமில்லை. ஆண்டவனின் அனுக்கிரகமும் வேண்டும்’ என்ற நினைப்பு இல்லாமல் இல்லை. 

ராஜுக்கு முன்னால் பிறந்த இரண்டு குழந்தைகளும் பிறந்த ஆறேழு மாதத்தில் இறந்து விட்டன. 

அதனால் ராஜு பிறக்கும்பொழுதே ஏகப்பட்ட பிரார்த்தனைகள், வேண்டுதல்கள். அதன் பலனோ அல்லது குழந்தையின் ஆயுள் பலமோ ராஜு நன்றாக வளர்ந்து ‘நர்ஸரி’க்குப் போக ஆரம்பித்திருந்தான். 

“ம்…மா… இன்னைக்கு ஸ்கூல் கிடையாதா? ஏன் எனக்கு ‘டிரஸ்’ பண்ணலை?”-ராஜு விடிந்ததிலிருந்து மாலதியிடம் கேட்டுக் கொண்டிருந்தான். 

அந்தக் குழந்தைக்கு நாட்டு நிலைமையை விளக்கி பயத்தை ஊட்ட விரும்பாத மாலதி, “இன்றைக்கு ஸ்கூல் கிடையாது கண்ணா” என்றாள். 

“இல்லம்மா, சமந்தா ஸ்கூலுக்குப் போறானே” 

“அவன் போகட்டும்; நீ இன்றைக்குப் போக வேண்டாம்.” 

சமந்தா எதிர் வீட்டுச் சில்வாவின் மகன். ராஜு வின் தோழன்; வஞ்சகம் தெரியாத இளங்குறுத்துக்கள். 

சில்வாவின் வீடு எதிர்புறமாக வீதியைத் தாண்டி வாய்க்கால் மேட்டில் இருந்தது, சிங்களவர்களிலேயே பெயர்போன ரவுடித்தனம் கொண்டவன் சில்வா. அந்தப் பகுதியில் அவனுக்குச் செல்வாக்கு அதிகம். 

இந்த வீட்டை வாடகைக்கு எடுத்துக் குடிவந்த கொஞ்ச நாட்களிலேயே இவைகளைத் தெரிந்துகொண்ட மாலதி, “இந்த வீட்டைச் சீக்கிரமாகக் காலிபண்ணி விட்டுப் போய்விட வேண்டும். இப்பொழுதெல்லாம்- அடிக்கடி நம்ம ராஜுவைப் பிடித்து விளையாட்டுப்போல் 

“உன் அப்பனும் ஒரு புலிதானே” என எதிர்வீட்டு சில்வா மிரட்டுகிறானாம். அவன், குழந்தை. அவனுக் கென்ன தெரியும். பயந்து போய் அழுது கொண்டே ஓடி வந்து விடுகிறான். வாடகை குறைச்சல் என இந்தச் சிங்களப் பகுதியில் குடிவந்ததே தப்பாப் போச்சுங்க,” எனத் திலகனிடம் கூறாத நாளில்லை. 

அவனும் தன் ‘பட்ஜெட்’டுக்குத் தகுந்த வீடு பார்க் கும்படி பல நண்பர்களிடம் கூறியிருந்தான். ஒன்றும் சரியாக வந்தமையவில்லை. எப்படியும் அடுத்த ஜனவரிக் கிடையில் வீட்டை மாற்றிவிட வேண்டும் என்று முடிவு பண்ணியிருந்தார்கள். 

ஆனால் அதற்கிடையே திருநெல்வேலியில் இருக்கும் திலகனின் தாயாருக்கு உடம்புக்கு முடியவில்லையென்று கடிதம் வந்ததும் “ஒரு வாரத்தில் போய்த் திரும்பி விடு. கிறேன்” எனக் கூறிவிட்டுத் திலகன் இந்தியாவுக்குச் சென்றிருந்தான். 

அவன் புறப்பட்டுச் சென்ற மறுநாளே நாடு முழுவதும் இனக் கலவரங்கள் வெடித்தன. 

‘பெட்டா’விலுள்ள திலகனின் பலசரக்குக் கடையில் அக்கவுண்ட் வைத்துள்ள ஒரு முஸ்லிம் நண்பர் அவசர மாகப் ‘போன்’ பண்ணி ‘குழந்தையைப் பள்ளிக்கூடத துக்கு அனுப்பாதீர்கள், நீங்களும் எங்கும் போக வேண்டாம். தமிழர்களை ஆடு, மாடு வெட்டுவது போல் ஈவு இரக்கமின்றி வெட்டித் தள்ளுகிறார்கள்” எனக் கூறியிருந்தார். 

அதனைக் கேட்டதிலிருந்து குழந்தையையும் தன் கூடவே வைத்துக் கொண்டு பயத்துடன் உட்கார்ந்திருந்தாள் மாலதி. சில்வாவை நினைக்கும் பொழுது மேலும் பயம் அதிகரித்தது. 

“அம்மா, பசிக்குதம்மா; ஏன் சமைக்காமல் உட்கார்ந்திருக்கே? பசிக்குதம்மா” ராஜு நச்சரிக்க ஆரம்பித்தான். 

“நீ அங்கேயிங்கே போகாமல் ‘ஹாலி’லேயே உட்கார்ந்து விளையாடு. நான் சீக்கிரமாய்ச் சமையல் பண்ணி விட்டு வந்து விடுகிறேன்.” 

ராஜுவிடம் கூறிய வண்ணம் எழுந்து சென்றாள் மாலதி. 

ராஜு கொஞ்ச நேரம் புத்தகத்தில் படம் போட் டான். தன்னிடமிருந்த மோட்டார் காரை ஒவ்வொரு பகுதியாகக் கழட்டினான்; பூட்டினான். சிறிது நேரத்தில் அதுவும் போரடித்தது. எழுந்து சென்று கதவைத் திறந்து, வெளியே எட்டிப் பார்த்தான். 

வெளியே மழையோ, வெயிலோ… இல்லை… பின் எதற்காக அம்மா என்னைப் போக வேண்டாம் எனத்தடுத்தாள். பயந்தாங்கொள்ளியம்மா – குழந்தை நெஞ்சு பயம் அறியவில்லை. 

அப்பொழுதுதான் சமந்தா பள்ளிக்கூடத்திலிருந்து புத்தகமும் கையுமாகத் திரும்பிக் கொண்டிருந்தான். 

“ஸ்… சமந்தா, செல்லங் கராண்டா எண்டத?சமந்தா விளையாட வரட்டா?” எனச் சிங்களத்தில் கேட்டான். 

“எண்ட அடோ போள செல்லங்கராமு- வாடா கோலியாடுவோம்” என்றான் சமந்தா. 

ராஜு உள்ளே எட்டிப் பார்த்தான். 

தாயின் சுவடே தெரியவில்லை. மெல்ல நழுவினான். 

சில்வாவின் வீட்டுக்கு முன்னால் கோலியாட்டம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. 

“ஒன்று… இரண்டு… மூன்று…” ராஜுவின் பக்கமே. எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வந்தன. 

சமந்தாவுக்குக் கோபம் கோபமாக வந்தது. 

‘பறத் தெமிழுல…’ சில்வா பேசும்பொழுது பொறுக்கி வைத்திருந்த வார்த்தைகளை ராஜுவின் மீது அர்ச்சனை பண்ணத் தொடங்கும் சமயம் ‘லாரி’யொன்று நிறைய ஆட்களுடன் வந்து நின்றது. 

சிறுவர்கள் விளையாட்டை நிறுத்தி விட்டு வேடிக்கைப் பார்த்தனர். 

‘லாரி’யில் இருந்து குதித்த சில்வா, மாலதியின் வீட்டைக் காட்டி ஏதோ சமிக்ஞை செய்துவிட்டு மீண்டும் லாரியில் ஏறி உட்கார்ந்தான். 

அடுத்த கணம் லாரியிலிருந்து பயங்கரமான ஆயுதங்களுடன் குதித்த சிங்கள குண்டர்களைப் பார்த்து மிரண்டு போன ராஜு “அ…ம்…மா…அ…ம்…மா…” கத்தியபடி உள்ளேயோட முயன்றான். 

“கொட்டியா பற்றியோ கொட்டியா பற்றியோ… அள்ளவா மரில்ல தாண்ட மரில்ல தாண்ட…” 

‘புலிக்குட்டி, புலிக்குட்டி. உயிரோடு விடாதே பிடித்துக் கொல்லு’ லாரியில் இருந்தபடியே சில்வா குரல் கொடுத்தான். 

‘விர்’ரென அம்புபோல் பாய்த்த குழந்தையை இரண்டு குண்டர்கள் துரத்திப் பிடித்து அவன் வயிற்றில் குத்தினார்கள். 

“அ…ம்…மா…” வீல்’லெனக் கத்திய ராஜுவின் குரல் கேட்டதும் கையிலிருந்த அரிவாள்மனையைக் கீழே போட்டு விட்டு ஓடி வந்தாள் மாலதி. 

அவர்கள் கைகளில் தொங்கிய ராஜு “…ம்மா…ம் … மா” எனத் தாயைப் பார்த்து ஈனஸ்வரத்தில் கதறினான். 

மாலதி துடித்தாள்; “குழந்தையை விட்டுடுங்க. வேண்டுமானால் என்னைக் கொன்னுடுங்க. குழந்தையை விட்டுடுங்க”-மாலதி அவர்களைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டபடி கதறினாள். 

“இவளை விடவா இது ஒரு புலி. இவன் அப்பன் இன்னொரு புலி. சிங்களவனைத் தூக்கில் மாட்ட வந்த பிசாசுகள். இவர்களை ஒழித்தால்தான்”- சிங்களத்தில் கர்ஜித்தபடி, ராஜு கதறக் கதற அவன் கை கால்களை பச்சைத் தடியை முறிப்பதுபோல் முறித்தார்கள். 

மாலதி தன் கண்களை இறுகப் பொத்திக் கொண்டு கதறினாள். 

குற்றுயிரும், குலையுயிருமாகத் துடித்துக் கொண்டிருந்த சிறுவனை அவளுக்கு முன்னால் வீசியெறிந்தார்கள். 

ஓடிச் சென்று தன் குழந்தையை வாரியெடுத்த மாலதியின் கைகளிலிருந்து பிடுங்கியெடுத்து அந்தப் பிஞ்சு உடலில் பொட்ரோலை ஊற்றி ‘தீ’ வைத்தார்கள். 

தான் தவமிருந்து பெற்ற குழந்தை, தன் கண்ணுக்கு முன்னால் பற்றியெரியும் கோரமான காட்சியைப் பார்த்த மாலதி வெறி கொண்டவளைப் போல் உள்ளே ஓடினாள். 

“அள்ளப்பாங் அள்ளப்பாங்” 

“பிடி பிடி, ஏண்டா இன்னும் பார்த்துக் கொண்டு சும்மா நிக்கிறீங்க” லாரியிலிருந்து புட்டியும் கையுமாக இறங்கிய சில்வா, சிங்களத்தில் கத்திய வண்ணம் மாலதி யைக் குறிவைத்தபடி கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னால் வந்தான். 

அவனது கண்களில் மின்னிய போதை வெறித்தனம் இரையைக் கண்டதும் சப்புக் கொட்டிக்கொண்டு வரும் வெறி நாயைப் போன்ற தோற்றம். மாலதிக்கு அவன் நோக்கம் ‘பளிச்’செனப் புலப்பட்டது. 

‘இவன் கைகளில் சிக்கி, மானத்தை இழப்பதைவிட யிர் போவதே மேல்’ மாலதியின் நெஞ்சம் செய்வதறியாமல் கலங்கித் துடித்தது. 

“என்னைக் கொன்னுடுங்க; என்னை ஒண்ணும் பண்ணாதீங்க; எது வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு போங்க. என்னை ஒண்ணும் பண்ணாதீங்க’ பயத்தில் மெல்ல மெல்ல நடுங்கியவாறு சமையல்கட்டுக்கள் நுழைந்தாள். 

சில்வா விடவில்லை; எல்லோருக்கும் முன்னால் தானே அவளை அனுபவித்துவிட வேண்டுமென்ற ஆசையில், போதை தலைக்கேறிய நிலையில் பின்னால் நுழைந்தான். மாலதியின் கொடிபோன்ற உடலையும், வாளிப்பான உடற்கட்டை யும் சிவந்த மேனியையும் எத்தனையோ தடவைகள் ரகசியமாய்ப் பார்த்து ரசித்துப் பொறாமைப்பட்டிருக்கிறான். இப்படியொரு சந்தர்ப்பம் தனக்குக் கிடைக்குமென அவன் கனவுகூடக் கண்டதில்லை. 

சில்வாவின் நெஞ்சம் கும்மாளமிட்டது. கையிலிருந்த புட்டியில் எஞ்சியிருந்த அரை ‘கிளாஸ்’ சாராயத் தையும் ‘கபக்’கென்று வாய்க்குள் ஊத்தினான். 

அவனுக்கு பூமியும், வானமும் ஒன்றாகத் தெரிந்தன. நடை தள்ளாடியது என்றாலும் வெறித்து நோக்கியபடியே மாலதியை அணுகினான். 

“என்னை ஒண்ணும் பண்ணிடா தீங்க. என்னை ஒண்ணும் பண்ணிடாதீங்” மழையில் நனைந்த குருவியைப் போல் சுவருடன் ஒட்டியபடி நகர்ந்த மாலதி, சமைய லறையில, குறிப்பிட்ட இடம் வந்ததும், ‘சட்’டென்று குனிந்து இரண்டொரு நாட்களுக்கு முன்னால் பள பள வெனச் சாணைபிடிப்பித்து வைத்திருந்த அரிவாள்மனையைக் கையில் தூக்கினாள். 

சில்வாவின் போதையேறிய கண்களுக்கு அவள் கையிலிருந்த ஒரு அரிவாள்மனை பல அரிவாள்மனைகளாகத் தென்பட்டன. நிஜம் எதுவென்று தெரியாத நிலை. 

அவளது சிவந்த மேனி; மருண்ட பார்வை; பயத்தில் நடுங்கும் தோற்றம். அவனுக்கு இன்னும் வேடிக்கையாக இருந்தது. 

“என்னை விட்டுடுங்க. என்னை ஒண்ணும் பண்ணாதீங்க, ஒண்ணும் பண்ணாதீங்க…என்னை விட்டுடுங்க”- வேண்டுமென்றே சற்று உரக்கக் கத்தியபடி நகர்ந்த மாலதி, சரியான இலக்கு வந்ததும் குறி தவறாமல் அரிவாள்மனையை அவன் கழுத்தை நோக்கி வீசினாள். 

பெண்புலியின் சீற்றத்துடன் வீசப்பட்ட அரிவாள் மனை, அவன் கழுத்தை ஆழமாக அறுத்துக் கொண்டு சென்றது. 

அவன் எழுப்பிய மரண ஓலத்தில், வெளியே மாலதியின் வீட்டு உடைமைகளைப் பங்கு போட்டுத் தூக்கிக் கொண்டிருந்த குண்டர்கள் தட தடவெனச் சமையல் கட்டுக்குள் ஓடி வந்தனர். 

அவர்கள் வந்து சேர்வதற்குப் பிடித்த ஒரு கணப் பொழுதுக்குள், அடுப்பங்கரையில் இருந்த மண்எண் ணையை எடுத்துத் தன் தலையில் கவிழ்த்தாள். தீக்குச்சியைத் தட்டித் தனக்குத் தானே ‘தீ’ மூட்டிக்கொண் டாள் மாலதி. 

மானத்தைவிட உயிர் பெரிதல்ல என்றெண்ணிய அத் தமிழ்ப் பெண்ணின் உடல் அக்கினிக்கு அர்ப்பணமாகிக் கொண்டிருந்தது.

– அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1985, தேனருவி வெளியீடு, சென்னை.

அக்கினி வளையம் அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள் - ஆகஸ்ட் 1985 தமிழினத் தலைவர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களின் அணிந்துரை  தென்னிலங்கைத் தீவில் தேம்பியழும் தமிழ் இனத்தினர் படும் சித்ரவதைக் கொடுமைகளைத் 'தேவி' இதழ் 'கண்ணீர்க் கதைகள்' என்ற தலைப்பில் வெளியிட்டது தொடர்ச்சியாக!  அதன் தொகுப்பே இந்த நூல்! நூல்அல்ல; நம் இதயத்தில் பாயும் வேல்!  இலங்கைத் தமிழ்க்குலத்தில் உதித்த எழுத் தாளர் ஞானப்பூங்கோதை அவர்கள் தாய் உள்ளத் தில் பொங்கிப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *