நெருடல்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 5, 2026
பார்வையிட்டோர்: 81 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பெங்களூர் சிட்டியிலிருந்து பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ஆமையாய் நகரத் தொடங்கியது சென்னையை நோக்கி. நான் எனது சீட் நம்பரை சரிபார்த்துக் கொண்டு அமர்ந்தேன். கையில் பாப்கார்னும், சில வார இதழ்களும், அதையும் இதையும் மாறி மாறி கொறித்துக் கொண்டிருந்தேன்.

எனது எதிர்சீட்டில் நல்ல ஆஜானுபாகுவான ஆசாமி ஒருவர் அமர்ந்திருந்தார். கையில் விலையுயர்ந்த கடிகாரம். விரலில் மோதிரம். கழுத்தில் செயின். இவற்றிற்கு சொந்தக்காரராக இருந்தார். அவருடைய உடையைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அவர் பணக்காரர் என்றே தோன்றியது.

அவரிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தேன். அவரைப் பற்றிக் கொஞ்சம் கொஞ்சமாகவே விசாரிக்க ஆரம்பித்தேன். நான் அவரைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டதைவிட, அவர் என்னைப் பற்றிதான் அதிகமாக விசாரித்து தெரிந்து கொண்டார்.

இந்த நேரத்தில் மிகவும் கால் ஊனமான பையன் ஒருவன் என்னருகில் வந்து பிச்சைக் கேட்டான். நான் ஏதாவது உதவி செய்யலாமென்று சட்டைப் பையில் கைவிட்டேன்.

அவர் உடனே, ‘சார் இது மாதிரி பசங்களுக்கெல்லாம் உதவி செய்யாதீங்க சார். திருட்டுப் பசங்க’ என்று ஆக்ரோஷமாக கத்தினார். ‘நான் உதவி செய்வதை இவர் ஏன் தடுக்க வேண்டும்? அதுவும் அவன் ஊனமானவன் தானே’ என்று நான் சிந்திப்பதற்குள் அந்தப் பையன் என்னை விட்டு நகர்ந்து போய் விட்டான்.

பிருந்தாவன் தன்னால் முடிந்த அளவு வேகத்தைக் காட்டியது. நானும் அயர்வின் காரணமாக தூங்கிவிட்டேன். பிருந்தாவன் சென்னையைத் தொட்டபோது, அவர் என்னை எழுப்பிவிட்டார். நானும் அவசரமாக எழுந்து கொண்டு, எனது லக்கேஜை சரி செய்துக் கொண்டு இறங்க ஆயத்தமானேன்.

அந்த ஆஜானுபாகு ஆசாமி விரைவாக இறங்கிக் கொண்டிருந்தார். அவரை கவனித்தேன். அவர் நொண்டி நொண்டி நடந்து கொண்டிருந்தார். நான் விரைவாக வந்து அவரை உற்று கவனித்ததில் ஊனமான அவரது காலுக்கு செயற்கைக் கால் பொருத்தப்பட்டிருப்பது தெரிந்தது. அதைக் கவனித்த என் மனதில் ஒரு மாதிரியான நெருடல் ஏற்பட்டது!

– நெகிழ்ச்சியூட்டும் சிறுகதைகள்!, முதற் பதிப்பு: 2005, மல்டி ஆர்ட்ஸ் கிரேஷன்ஸ், சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *