தேர்வு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: August 5, 2026
பார்வையிட்டோர்: 145 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நானும், எனதுநண்பர்கள் இருவரும் தினமும் கிரவுண்டிற்கு விளையாடச் செல்வோம். வேறொன்றுமில்லை வாலிபால்தான்! இதில் நான் மாநிறம், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன். சுமாரான அழகு.

சேகர் மற்றொரு நண்பன், வசதியான இடத்துப் பையன். தோலின் நிறம் சிவப்பு. மிக அழகாக இருப்பான். கொஞ்சம் பகட்டுக்காரன்.

சைமன் இன்னொரு நண்பன். வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவன். நிறம் கறுப்புதான் என்றாலும் அமைதியானவன்.

தினமும் நாங்கள் விளையாடுவதை எதிர்வீட்டுப் பெண் கவனித்துக் கொண்டிருப்பாள் ரகசியமாக. எங்களுக்கு விஷயம் புரிந்தது முதல், ஆளுக்கு நூறுகிராம் பவுடரை முகத்தில் ஏற்றிக் கொள்வோம். எண்ணெய்க்கும் எங்களுக்கும் உறவேயில்லை.

நாளடைவில் எங்களுக்குள் பொறாமை வளர்ந்தது. ஒவ்வொருவரும் தன்னைத் தான் அவள் பார்ப்பதாக நினைத்துக் கொண்டோம். எங்களின் பொறாமை ஒரு போட்டியாக உருவெடுத்தது. இதற்கிடையில் ஒருவருக்கொருவர் தெரியாமல் அங்கு வந்து மன்மதத் தனம் செய்வதுண்டு.

இப்படியே நிலைமை போனால், எங்களுக்குள் சண்டை வந்துவிடும் போல் தெரிந்தது. ஆகவே மூவரும் சேர்ந்து ஒரு தீர்மானத்திற்கு வருகிறோம். ஒவ்வொருவரும் அவளுக்கு தனித்தனியாக காதல் கடிதம் எழுதுவது, யாருக்கு பதில் வருகிறது என்று பார்ப்பது என்பதே அது!

மூவரும் தனித்தனியாக காதல் காவியம் தீட்டினோம். உலகத்து கவிஞர்களையெல்லாம் எங்கள் கடிதங்களில் காணலாம். கடிதத்தில் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி வேறு. போட்டியென்று வந்துவிட்டதே பதில் பெற வேண்டுமென்பதற்காகத்தான்!

கடிதங்கள் தனித்தனியே கொடுக்கப்பட்டுவிட்டது. பதிலுக்காக மூவரும் ஆவலாக பல நாட்கள் காத்திருந்தோம். பின்பு ஒரு நாள் மூவருக்குமே மூன்று கடிதங்கள் வந்தது. ஆச்சரியத்தில் அவசரமாக பிரித்துப் பார்த்ததில் அவள் எழுதியிருந்தது இது!

அன்புடைய சகோதரர்களே!

தாங்கள் மூவருமே என் மேல் நிறைய அன்பு வைத்திருக்கின்றீர்கள். அதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன். மேலும், அதில் என்னை திருமணம் செய்துகொள்வதாகவும் எழுதியுள்ளீர்கள். எனக்கு திருமணம் செய்ய ஏற்கனவே ஒருவர்நிச்சயிக்கப்பட்டு விட்டார். இச் செய்தி தங்களுக்கு அதிர்ச்சியைத் தந்தாலும் மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள். திருமணப் பத்திரிகை அவசியம் உங்கள் மூவருக்கும் அனுப்பி வைக்கின்றேன். எனது திருமணத்தில் கலந்து கொள்ளுங்கள். சண்டை, சச்சரவில்லாமல் நட்போடு வாழுங்கள், என்னை வாழ்த்துங்கள்!

இப்படிக்கு
உங்கள் அன்பு சகோதரி

இதே கடிதத்தைத் தான் எங்கள் மூவருக்குமே அனுப்பி இருந்தாள். முதலில் மூவருக்குமே கடிதம் கண்டதில் அதிர்ச்சியாக இருந்தாலும், பதில் வந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி. மேலும் ஒருத்தியை சகோதரியாக ஏற்பதில் அதைவிட மகிழ்ச்சி. இதிலிருந்து நண்பர்களுக்குள் நட்பின் இறுக்கமும் அதிகமானது.

– நெகிழ்ச்சியூட்டும் சிறுகதைகள்!, முதற் பதிப்பு: 2005, மல்டி ஆர்ட்ஸ் கிரேஷன்ஸ், சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *