நிலவில் நெருப்பு
கதையாசிரியர்: வாஷிங்டன் ஶ்ரீதர்
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: April 18, 2026
பார்வையிட்டோர்: 118

கோலிவுட்டில் வெடித்த இந்த திடீர் ஏப்ரல் புரட்சிக்கு இரண்டு எடுத்துக்காட்டு நிகழ்ச்சிகளே போதுமே – முதலாவது…
ஒரு முன்னணி இயக்குநரின் படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராத கலவரம் ஒன்று வெடித்தது.
இயக்குநர்: “யோவ் கவிஞரே! ஹீரோயின் நிலாவைப் பார்த்து பாடுற மாதிரி ஒரு காதல் பாட்டு எழுதிக்கொடும்யா!”
கவிஞர்: “முடியாது சார். நாசா (NASA) பதில் சொல்லும் வரை நிலவையும் காதலையும் இணைத்து பாட மாட்டோம். வேண்டுமானால் ‘வேகும் சூரியனே… எரியும் கொள்ளிக்கட்டையே…’ என்று எழுதித் தருகிறேன். ஹீரோயின் அதற்குத் தகுந்த மாதிரி கடுகடுக்க எக்ஸ்பிரஷன் கொடுக்கட்டும்…ஹீரோவும் குதிக்கட்டும்!”
இயக்குநர்: “அய்யோ! இது லவ் கனவா…இல்ல மயான கானாவா?” அன்று படப்பிடிப்பு அம்போ.
திரையுலக கவிஞர்கள் காதல் பாடல் எழுதும் வேலையை நிறுத்தியதால் கோலிவுட்டே நிலை குலைந்தது மட்டுமில்லாமல், ஓங்கி உயர்ந்த தென்னை மரங்கள் காதலர்கள் அண்டாமல் ஏங்கி நின்றன. இளநீர் தென்னையின் கண்ணீர் ஆனது.
இரண்டாவது…
சென்னை, வட பழனி பகுதியில் நடந்த நிகழ்ச்சி. காலை பதினோரு மணியிருக்கும். புலவர் சந்திரன் வீட்டுக்கு அருகில் ஒரு வெள்ளை நிற மாருதி-சுசுகி வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய இருவரில் ஒருவர் முரளி; சந்திரன் வீட்டு வெளியில் மணியைத் தட்டினார். மற்றவர் ஒரு வி.ஐ.பி. போல, வெள்ளை வேட்டி வெள்ளை சொக்காய், அழகான அங்கவஸ்திரம் அணிந்து, எதிர்பார்ப்புடன் நின்றபோது, சந்திரன் கதவைத் திறந்தார்.
“வாங்க… த. ந. ஐய்யா… சௌக்கியமா? என்ன முரளி, என் வீட்டை கண்டுபிடிக்க சிரமம் இருந்திச்சா…?” த. ந. ஒரு திரைப்பட தயாரிப்பாளர். முரளி த. ந.வின் பெர்சனல் அசிஸ்டன்ட். முரளி பதில் சொல்லாமல் அசட்டு சிரிப்பு உதிர்த்தார். த. ந..வுக்கு பி. ஏ வாக வேலை செய்ய ஆரம்பித்தது முதல் முரளிக்கு அசட்டு சிரிப்பை நன்றாகவே உதிர்க்க முடிகிறது; சாதாரணமாக சிரிப்பது எப்படி என்பதே மறந்துபோனது.
த. ந. பேசினார். “நம்ம இயக்குனர் அச்சுதன் இயக்கப் போற படத்துக்கு நீங்க இரண்டு காதல் பாட்டு எழுதிக் கொடுத்தா படம் சூப்பர் ஹிட் ஆயிடும்… இரண்டு பாட்டுமே ராத்திரி நேரத்துல, நிலா வெளிச்சத்துல…ரொம்பவே ரோமாண்டிக்க இருக்கணும்…”. த.ந. வுக்கு ராத்திரி நேரத்துலேதான் நிலா வரும் என்பது நன்றாக தெரிந்திருந்தது.
“அப்படியா…இவ்ளோ தூரம் நேர்லேயே வந்து என்னை நீங்க கேக்கறது பெருமையா இருக்கு…ஆனா…காதல் பாட்டு எழுத முடியாதே…”
“ஏன்? கையிலே ரொம்ப படம் இருக்கா? படம் இல்லாம ரொம்ப நாளாவே தாளம் போடறீங்கன்னு என் காதுல விழுந்தது…?”
“நான் வட பழனியிலே போடற தாள சத்தம் நீங்க இருக்கற நீலாங்கரையிலே கேக்கற அளவு இருக்கா என்ன? சரி, விடுங்க… நாங்க யாருமே காதல் பாட்டு எழுதக் கூடாதுன்னு முடிவு எடுத்திருக்கோம்…”
“நாங்க யாருமே அப்படின்னா…யாரு அந்த நாங்க?” த. ந. விடுவதாயில்லை…
“இப்படி உக்காருங்க… விவரமா சொல்றேன்…”
அவர் சொன்ன விவரத்தின் சுருக்கம் இதுதான் –
சந்திரன்தான் ‘தமிழ் திரையிசை கவிஞர்கள் சங்கம்‘ ( த. தி. க. ச.) என்ற அமைப்பின் இவ்வாண்டு தலைவர். த. தி. க. ச. வின் அவசரக் கூட்டம் ஏப்ரல் ஏழாம் தேதி நடந்தது. தலைவர் கவிஞர் சந்திரன் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்:
“நண்பர்களே! நம் பிழைப்பில் மண் விழுந்துவிட்டது! அமெரிக்காகாரன் ஆர்டெமிஸ் (Artemis) என்கிற பெயரில் வான ஊர்தியை அனுப்பி நிலவில் பனிக் கட்டிகளைத் தோண்டி எடுக்கப்போகிறான். அதை உருக்கி, அந்தத் தண்ணீரை வைத்து ஆக்சிஜனும், ராக்கெட் எரிபொருளாக ஹைட்ரஜனும் தயாரிக்கப் போகிறார்களாம். யோசித்துப் பாருங்கள்…”
திரையுலகில் இன்னொரு முக்கிய கவிஞரான வெண்ணிலா ஒரு வெகுளி…கேட்டார்: “ஆர்டெமிஸ் என்றால் என்ன?”
இதற்கு பதில் சொல்ல மூத்த கவிஞர் சந்தா மாமா தொண்டையை கனைத்துக் கொண்டார். அந்தக் காலத்தில் சந்தா மாமா எழுதின ‘வானத்துலே வட்ட நிலா’ என்ற பாடல் பிரசித்தி பெற்றது. அவர் மட்டும்தான் அந்தப் பாடலை மறக்கவில்லை.
“நல்ல கேள்வி…” சந்தா மாமா விளக்கினார். “1969ல் அப்பாலோ என்கிற விண்வெளி ஊர்தியில் சென்று நிலவில் கால் பதித்தார்களே அமெரிக்கர்கள். நினைவிருக்கிறதா? கிரேக்க புராணத்தில் அப்பாலோ சூரியனுக்கு கடவுள், ஆர்டெமிஸ் சந்திரனுக்கு கடவுள். அந்த அப்பாலோவின் சகோதரிதான் ஆர்டெமிஸ். அப்பாலோ, ஆர்டெமிஸ் இருவரும் இரட்டையர்கள்…”
“சந்திரனிலிருக்கும் தண்ணீரை என்னவோ செஞ்சிட்டுப் போகட்டுமே…வேணும்னா நைட்ரஜன், மீதேன், ஹைட்ரஜன் சல்பைடு இதெல்லாம் கூட எடுக்கட்டுமே…நமக்கென்ன?” கேட்டது மூன்றாம் பிறையன் என்ற துடிப்பான கவிஞர். அவருக்கு gas விஷயங்கள் பற்றி நிறைய தெரியும்! அவருடைய உடல் பிரச்னையே அதுதான். மூன்றாம் பிறையன் அமர்ந்திருந்த வரிசை விரைந்து காலியானது; அவர் மட்டும் நிலவில் கறை பட்டவர்போல தனியன் ஆனார்.
த. தி. க. ச. கூட்டமே அதிர்ந்து போனது…காதல் பாட்டு எழுதும் ஒரு கவிஞன் கேட்கும் கேள்வியா இது? காதலுக்கும் நிலவுக்கும் யுகம் யுகமாக இருக்கும் தொடர்பை இப்படி ஒரே நொடியில் தகர்த்தும் மூன்றாம் பிறையனை சங்கத்திலிருந்து மூன்று ஆண்டுகள் நீக்க வேண்டும்…
“பொறுமை, நண்பர்களே…மூன்றாம் பிறையன் கேட்டதில் பொருள் உண்டு…”. தலைவர் சந்திரன் குறுக்கிட்டார். “நிலவில் பனிக்கட்டிகள் உருகி, தண்ணீர் எரிபொருளானால் அப்புறம் நிலவு எப்படி குளிர்ச்சியாக இருக்கும்?” தான் கேட்டதற்கு இப்படியும் ஓர் உட்பொருள் இருப்பதாக மூன்றாம் பிறையனுக்கு இப்போது புரிந்துவிடவே நிமிர்ந்து அமர்ந்தார்.
கூட்டத்தில் இருந்த கவிஞர் நிலவன் எழுந்து, “ஆமாம் தலைவரே! நிலவு வெப்பமாகிவிட்டால், ‘இன்பம் பொங்கும் வெண்ணிலா’ என்று நாம் எப்படி எழுத முடியும்? ‘வெப்பம் பொங்கும் வெண்ணிலா’ என்றுதான் எழுதணும்…”
கவிஞர் வெண்மதி, “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்? நெருப்பாய் எரிகிறதே” அப்படின்னு அந்த தீர்க்கதரிசி கண்ணதாசன் அன்னிக்கே எழுதியாச்சே? இதையும் நாம எழுத முடியாதே” என்று எரிச்சலுடன் கூவினார்.
சந்திரன் கையை அமர்த்தி, “நாம் இப்போது எடுக்க வேண்டிய தீர்மானம் என்ன? “ என்று கேட்டபோது, அறையில் அமைதி. விவாதம் தொடங்கியது, தொடர்ந்தது…
இறுதியில் மூன்று முடிவுகள் எடுக்கப்பட்டன:
‘ஒன்று, நிலவின் குளிர்ச்சியைப் பாதுகாப்பதாக ஐநா சபையில் உறுதி அளிக்க வேண்டும்.
(ஐநா வுக்கு பிரச்னைகளை பிச்சி பிச்சி அலசத் தெரியும்; முழநீள தீர்மானம் எடுக்கவும் தெரியும்; ஆனா…எந்த தீர்மானத்தையும் உருப்படியா நிறைவேற்ற தெரியாதே…ஐநா சபை இல்லை, ஒரு சப்பை என்பதே அடிக்கடி மறந்து விடுகிறது! – இதை குறித்துக்கொண்ட சந்திரன், சாமர்த்தியமாக மூன்று முடிவுகளில் சேர்க்கவில்லை.)
இரண்டு, நாசா (NASA) உடனடியாக நிலவில் ஐஸ் தோண்டுவதையும், நிலவு நீரை எரிபொருளாக மாற்ற நினைப்பதையும் நிறுத்த வேண்டும்.
மூன்று, மேற்கூறிய கோரிக்கைகள் நிறைவேறும் வரை, த. தி. க. ச. தமிழ் சினிமாவுக்கு காதல் பாட்டுகளை எழுத மறுக்கும்.’
இந்த தீர்மானம் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், மற்றும் எக்ஸ் – அதான் பழைய ட்விட்டர்- மூலமாக நாசாவுக்கு போய் சேர்ந்தது. வாஷிங்டன் அருகில் உள்ள நாசா தலைமை அலுவலகத்தில் விஞ்ஞானிகள் மிகவும் குழப்பமடைந்தார்கள்.
“தமிழ்நாட்டுல சினிமா கவிஞர்கள் ஸ்ட்ரைக் பண்றாங்களாம். நிலவு சூடாயிடுச்சுனா அவங்க காதல் பாட்டு எழுத மாட்டாங்களாம்!” என்று ஒரு அதிகாரி கவலையுடன் சொன்னார்.
அதற்கு நாசா தலைவர், “அவங்களுக்குப் புரியும்படி சொல்லுங்க… நாங்க எடுக்கப்போற தண்ணி கொஞ்சம் தான். நிலவு மேல் பரப்புல நிறைய பனிக்கட்டி இருக்கு அதனால, எப்போதும் நிலவு ‘சில்’லுன்னுதான் இருக்கும்! கவிஞர்களை கொஞ்சம் ‘சில்’ பண்ண சொல்லுங்க. இன்னும் ஆயிரக்கணக்கான காதல் பாட்டு எழுதிகிட்டே இருக்கலாம்” என்று விளக்கம் அளித்தார்.
ஆனால் கவிஞர் சந்திரன் விடுவதாக இல்லை. “கொஞ்சம் கொஞ்சமாகத் தான் குடம் நிறையும்! சிறு துளி பெரு வெள்ளம். இன்று தண்ணீர் எடுப்பாய், நாளை நிலவில் ஹைட்ரஜன் பங்க் வைப்பாய்… ஏற்கெனவே இப்ப பெட்ரோல் தட்டுப்பாடு…” இப்படியாக எதற்கு எதையோ முடிபோட்டு பேசிவிட்டு, இறுதியில், “எங்கள் தமிழ் சினிமா காதலர்களுக்கு இது மாபெரும் துரோகம்!” என்று அறிக்கை விட்டார். அப்போது த. தி. க. ச. கூட்டத்தில் கைதட்டல் மேலோங்கி, சராசரி மூன்று லட்சத்து எண்பதாயிரம் கி. மீ. தொலைவில், ஆர்டெமிஸ் 2 விண்கலத்தை பூமிக்கு திருப்பி அனுப்பிய நிம்மதியில் பலத்த குறட்டையுடன் பகல் உறக்கத்திலிருந்த நிலாவை உலுக்கி எழுப்பிவிட்டது.
கடைசியில், நாசாவும் த. தி. க. ச. வும் ஒரு சமரசத்துக்கு வந்தார்கள். நிலவு, உலகுக்கு ஒரு பொது சொத்து. நாடுகள் நிலவில் நீர் எடுக்கக்கூடாது என்பது சாத்தியமில்லை என்பதால், நாசாவிடம் ஒரு புது நிபந்தனை விதித்தார்கள் –
“அடுத்தமுறை நிலவுக்கு ஆர்டெமிஸ் 3 நீங்கள் விடும்போது, அங்கிருந்து ஒரு பெரிய வெள்ளிக் குடத்தில் ( வெள்ளிக் குடத்தை நீங்கதான் வாங்கணும்) சுத்தமான குளிர் நிலவுத் தண்ணீரை எடுத்து, குடத்தை நன்றாக ‘சீல்’ செய்து எங்கள் தமிழ் திரையுலக கவிஞர்கள் சங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். அதை நாங்கள் ஃப்ரிட்ஜில் வைத்துப் பாதுகாப்போம். காதல் பாட்டு எழுதும் எந்த கவிஞரும் அதைத் தொட்டுப் பார்த்து அதன் குளிர்ச்சியால் மனம் குளிர்ந்த பிறகுதான் பாடல் எழுதுவார். மேலும், காதல் பாடல் எழுத விரும்பும் மற்ற மொழி கவிஞர்களிடம் நிலவு நீர் குட குளிர்ச்சியை நாடும் ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட கட்டணம் வசூலிப்போம். இந்த வசூலுக்கு எந்த நாடும் வரி போடக் கூடாது. வசூல் பணம் முழுக்க த. தி. க. ச. வுக்கே சேரும். அந்த வெள்ளிக் குடத்தையும் அது இருக்கும் பிரிட்ஜியும் பாதுகாக்க 24/7 காவலாளி வைப்போம். காவலாளியின் மொத்த சிலவும் நாசாவுடையது! இந்த நிபந்தனையை ஏற்றால் எங்கள் போராட்டம் நிற்கும்!”
நாசா இதற்கு நாசுக்காக தலையசைத்தது. நாசாவுக்கென்ன? அப்பாவி அமெரிக்க மக்களின் வரிப்பணம்தானே? கிடைச்சது கடைத்தேங்காய், எடுத்து உடை நாசா!
த. தி. கவிஞர்கள் மீண்டும் பேனாவை எடுத்தார்கள். முதல் பாட்டு இப்படித் தொடங்கியது:
“அந்த நிலாவை தான் கொடத்துல புடிச்சேன் எங்க நாசாவுக்காக…”
இரண்டாம் பாட்டு இதோ:
“வெள்ளிக் குடம் தான்…சங்க பிரிட்ஜிலே…”
தமிழ் சினிமா ரசிகர்கள் இந்த ஒவ்வொரு பாட்டுக்கும் விசிலடிக்க, த. தி. க. ச அமைப்பின் போராட்டம் இனிதே முடிவுக்கு வந்தது.
![]() |
பிறப்பு: உத்திரன்மேரூர், தமிழ்நாடு வசிப்பு: வாஷிங்டன் டி.சி. அருகில் விழுப்புரத்தில் உயர்நிலைப்பள்ளி முடித்துவிட்டு, சென்னை விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை, முதுகலை பட்டங்கள் பெற்றபின், அமெரிக்கா சென்று கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் வேதியிலில்முனைவர் பட்டம் பெற்றார். ஐந்து ஆண்டுகள் வேதியியலில் ஆராய்ச்சி முடிந்தபின், பால்டிமோர் வட்டாரத்தில்கல்லூரியிலும் பல்கலைக் கழகத்திலும் வேதியியல் பேராசிரியராக பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு முன்வேலை ஓய்வு பெற்றார். வாஷிங்டன் - பால்டிமோர் வட்டாரத் தமிழச்சங்கத்தின் பொறுப்புகள் ஏற்று, பிறகு…மேலும் படிக்க... |
