நானும் வாழ வேண்டும்!





சரிதாவின் மனம் தனிமையை நாடியது. மனிதர்கள் இல்லாத காட்டில், சிறு ஓடையருகில், வளர்ந்து நிழல் தரும் மரங்களுக்கு அடியிலிருந்த பாறை மீது தடுமாறி ஏறிச்சென்று அமர்ந்து கொண்டாள்.
‘துறவிகளும், சாதுக்களும், சித்தர்களும், ஞானிகளும் காடுகளில் தனிமையில் வாழ்ந்தது இந்த சுகத்தை அனுபவிக்கத்தானா…?’ எனும் கேள்வியை தனக்குத்தானே கேட்டவாறு யோசனையில் மூழ்கியது அவள் மனம்.
பேசுவதற்கெல்லாம் எதிர் பேச்சு. காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கப்போகும் வரை பிறரின் விருப்பங்களுக்கான வேலைகள். இரவிலும் தனது விருப்பமின்றியே இயந்திரமாக செயல்பட வைக்கும் போக்கு, பூரணமில்லா நிலையையும் ஏற்றுக்கொள்ளும் கட்டாயம், தனது விருப்பங்களை, எண்ணத்தின் வெளிப்பாடுகளை காது கொடுத்துக்கேட்காத கணவன் மற்றும் குடும்பத்தினர்.
மாளிகை வீடாக இருப்பினும் மனநிறைவு சிறிதும் இல்லாத நிலையிலேயே வாழ்ந்தாள்.
இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்வதை விட செத்துப்போகலாம் என மனதில் தோன்றும். ‘எதற்காக சாக வேண்டும்? கை, கால்கள், கண்கள் செயல்படவில்லையா? படிக்கவில்லையா? படிக்காதவர்கள் வாழ்வதில்லையா? பிடிக்காமல் தான் வாழ முடியாதே தவிர படிக்காமல் வாழ முடியாமல் போவதில்லை….’ என அறிவு கேட்கும் போது மனம் தடுமாறும்.
‘படிக்காத பாமர மனிதர்களுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட முடியும். பிடிக்காத படித்த மனிதர்களுடன் வாழ்வதென்பது நகரத்தில் வாழ்ந்தும் நரகத்தில் வாழ்வதற்குச்சமம்’ எனும் யோசனை ஓடியது.
ஓடும் நீரை ரசித்தாள். ‘சுதந்திரமாக துள்ளியோடும் இந்த நீரைப்போலக்கூட நம்மால் வாழ இயலவில்லை. இதையும் மனிதன் தனது சுயநலத்திற்காக அணைகட்டி தடுத்து விடுகிறான். மனிதர்களை இறைவன் புத்தி இல்லாமல் படைத்திருந்தால் ஒரு வேளை ஆனந்தமாக வாழ்ந்திருப்பான். மற்றவர்களையும் வாழ விட்டிருப்பான்’ என நினைத்தவள், எழுந்து ஆடைகளை முற்றிலும் களைந்து, நீரோடையில் உடலை முழுவதுமாக மூழ்க வைத்து தலையை மட்டும் மூச்சுவிடும் நிலையில் வைத்து படுத்துக்கொண்டாள்.
‘குளிர்ந்த ஓடை நீர் தனது உடலை முழுமையாக ஆலிங்கனம் செய்து ஆக்கிரமித்துக் கொண்டதில் உடலிலிருந்த சூடு முற்றிலும் வெளியேறுவதை, மழை நீர் காய்ந்து கிடந்த பூமியை குளிர்விக்கும் நிலையை உணர முடிந்தது. குளிர்ந்த நீரும் காம வேட்கையை தணிக்கும் அருமருந்து என்பதை வாலிப வயதில் வாழும் நிலையில் முதலாகப்புரிந்து கொண்டு சாந்தமானாள்.
‘என்னதான் தேக்கி வைத்திருக்கும் நீச்சல் குளத்து நீரில் குளித்தாலும் இயற்கையாக ஓடும் நீரில் குளிக்கும் போது கிடைக்கும் சுகம் வேறெதிலும் இல்லை…’ என நினைத்தவள், வெகு நேரம் இருந்து விட்டு என்பதை விட கிடந்து விட்டு, பசி வயிற்றைக்கிள்ளியதும் எழுந்து சென்று உடைக்குள் புகுந்தவள், பக்கத்தில் கைக்கெட்டும் தூரத்தில் பழுத்து தொங்கிய மாம்பழத்தை பறித்து சுவைத்தாள்.
தேனினும் இனிய சுவை. இச்சுவையுள்ள மாம்பழங்களை இதுவரை அவள் தின்றதில்லை. ‘குமரியைப்போல் இளமை ததும்பும் இப்பழம் கடைக்கு வரும்போது கிழவி போல் ஆகி விடுகிறது’ என வாய்விட்டே கூறி தனது எண்ணத்தை வெளிப்படுத்தினாள். ‘வாலிபமும் அவ்வாறு தான்’ என நினைத்த போது கண்களில் கண்ணீர் துளி தெறித்து விழுந்தது.
இறந்து போக வேண்டும் எனும் உறுதியான மன நிலையில் தான் வீட்டிலிருந்து காரை ஓட்டிக்கொண்டு, விவசாயத்திற்கு பூச்சிகளைக்கொல்லப்பயன்படும் விச மருந்தை எடுத்துக்கொண்டு காட்டிற்குள் வந்தாள். ஆனால் தற்போது நீண்ட காலம் வாழ வேண்டும் எனும் மனநிலை கொண்டவளாக மாறி விசத்தை எடுத்து தூர வீசி விட்டு வரும் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும், யாரால் வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் எனும் தைரியத்தில் கணவன் வீட்டிற்கு புறப்பட்டாள்.
“எங்க போயிருந்தே….? எனக்கு நெஞ்சு வலியே வந்துருச்சு. போன் பண்ணுனாலும் டவர் இல்லீன்னு வருது. உங்கொப்பம் வேற உனக்கு கூப்புட்டு நீ எடுக்குலீன்னு பத்து தடவ என்ற செல்லுக்கு கூப்புட்டான். நாங்க எதாச்சும் புள்ளய கொன்னு போட்டமோன்னு நெனைச்சானோ, என்னவோ….?” மாமியார் மாலதி புலம்பியதை காதில் வாங்கிக்கொள்ளாமல் தனது அறைக்குச்சென்று கதவைச்சாத்தி தாழிட்டாள் சரிதா.
நகைகள் வைத்திருந்த சூட்கேஸ் திறக்கப்பட்டு, திரும்பவும் மூடாமல் வைக்கப்பட்டிருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தாள்.
‘சூட்கேஸ் லாக் திறக்கப்பயன்படும் ரகசிய எண்கள் கணவன் கவினுக்கும், தனக்கும் மட்டுமே தெரிந்திருந்த நிலையில் மாமியார் மட்டுமே திறந்து பார்த்திருக்க வாய்ப்பில்லை. கணவனும் சம்மந்தப்பட்டிருக்க வேண்டும். அப்படியென்றால் கணவனுக்கே நம்மீதும், நம் நகை மீதும் சந்தேகமா?’ நினைத்துப்பார்த்த போது வெறுப்பு மேலோங்கியது.
‘காலையிலிருந்து போன் எடுக்காமல் விட்டதால் நகையை எடுத்துக்கொண்டு போயிருப்பாளோ…? யாருடனாவது ஓடி விட்டாளோ…? என சந்தேகம் வந்திருக்க வேண்டும். நான்கு மணி நேரம் கூட எங்கும் சொல்லாமல் செல்ல முடியவில்லை யென்றால் இது என்ன வாழ்க்கை முறை? அனைத்தையும் முழுமையாக தன்னிடம் பகிர்ந்தவளை நம்பும் நிலை இது தானா?’ வேதனை மிகுந்ததால் கண்களில் கண்ணீர் பொங்கியது.
கதவு பட, பட என தட்டப்பட்டவுடன் படுக்கையில் கிடந்தவள் எழுந்து திறந்தாள். படபடப்புடன் கணவன் கவின் உள்ளே வந்தான்.
“சொல்லாம கூட எங்கடி போனே….? போனும் நாட் ரீச்சபில்னு வந்தா என்ன நினைக்கிறது? எங்காவது போயி ஆத்துலயோ, குளத்துலயோ விழுந்து செத்துட்டியோன்னு நெனைச்சிட்டேன். நான் என்னடி கொறை வெச்சேன் உனக்கு?” கண்கள் சிவக்கப்பேசினான்.
“கொறைதான்…? பூராமே கொறைதான்… அதைத்தவிர உன் கிட்ட, இந்த வீட்ல கல்யாணமாகி ஆறு மாசத்துல நான் வேற என்னத்தையும் பாக்கலியே....? அந்த சொத்து இருக்கு, இந்த சொத்து இருக்கு, மாசமானா வருமானம் இத்தன லட்சம்னு கல்யாணத்துக்கு முன்னாடி உங்க வீட்ல இருக்கறவங்க, எங்க வீட்ல இருக்கிறவங்க கிட்ட சொன்னதெல்லாம் உண்மைதான். ஆனா அந்த சொத்துமேல இத்தனை கடன் இருக்கு, அத்தனை கடன் இருக்கு, சொத்து பூராவுமே உங்க அம்மா பேர்ல இருக்கு, மாசத்தவணை பேங்க்காரங்களுக்கு இத்தனை லட்சம் கட்டனம், இத்தனை வருசத்துக்கு கட்டனம், பாதி சொத்து கோர்ட், கேசுன்னு போயிட்டிருக்குது, ஒரு சொத்து சப்தியாகற ஸ்டேஜ்ல இருக்குங்கற விசயத்தை மட்டும் சொல்லவே இல்லையே.…” என பதிலுக்கு கண்கள் சிவக்க தானும் பேசினாள்.
“உங்க வசதிய நம்பி மாசத்துக்கு ரெண்டு லட்சம் வந்த என்னோட ஐடி வேலைய வேற விட்டிருக்கேன் பைத்தியகாரி. என்னோட அம்மா சொன்னாங்க ‘கோடீஸ்வரனூட்டுக்கு மருமகளாப்போற உனக்கு எதுக்கு வேலை?’ ன்னு வெகுளியா... ஆனா இந்த கோடீஸ்வரமூட்டு மறுமக அவளோட அப்பா கல்யாணத்துக்கு வாங்கிக்கொடுத்த காருக்கு பெட்ரோல் போட அவரே ஜீபே பண்ணிகிட்டிருக்காரு….” கண்கலங்கினாள்.
“நாங்க மட்டும் இப்படியில்லை. எல்லா பணக்காரங்க வீட்டு நிலைமையும் இப்படித்தான் இருக்கும். உன்னை யாருக்கு கல்யாணம் பண்ணிக்கொடுத்திருந்தாலும் இதத்தான் பாத்திருப்பே. எல்லாரும் பேங்குக்கு கடன் கொடுத்திட்டிருக்கிற மாதிரி, நாங்க மட்டும் கடன்ல இருக்கற மாதிரி பேசறே….?”
“நாங்க ஒன்னும் பணக்கார மாப்பிள்ளை வேணும்னு அடம் பிடிக்கலே.... என்ன மாதிரி படிச்சு வேலைல இருக்கிற மிடில் க்ளாஸ் போதும்னு தான் வரனே பார்த்தோம். நீங்க தான் புரோக்கர் மேல புரோக்கரா அனுப்பி பையனுக்கு அது இருக்கு, இது இருக்குன்னு சொல்லி எங்களை ஏமாத்தியிருக்கீங்க. ஆனா எது இருக்கோணுமோ அது மட்டும் இல்லை….” வேதனையின் உச்சத்தில் முதலாக தனது மன வெளிப்பாட்டை உள்ளபடியே கொட்டினாள்.
“இத பாரு…. நீ எங்க சுத்தி எங்க வர்றீன்னு புரியுது…. அதெல்லாம் சரியாயிடும்னு டாக்டர் சொன்னதுனால தான் நானும் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன். இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்க….”
“எப்படிங்க…? வசதின்னு நம்பியும், வாலிபத்த நம்பியும் நல்லா ஏமாந்துட்டேன். வசதி இல்லேன்னா கூட வாழ்ந்திடலாம். ஒவ்வொரு பொண்ணுக்கும் எது முக்கியமான எதிர்பார்ப்போ அதுவே கிடைக்கலேன்னா…. இதுக்கு மேல என்னால முடியாது. என்னோட அப்பா, அம்மாவுக்கு இந்த உண்மை தெரிஞ்சா செத்திடுவாங்க, உங்களையும் ஊருலகம் கேவலமா பேசிடும். இதெல்லாம் நடக்காம இருக்கனம்னா நாஞ்சாகறது தான் வழின்னு காலைல திருமூர்த்தி மலைக்கு கிளம்பி போயி ஆளில்லாத பக்கம் காரை நிறுத்தி, கொண்டு போன விசத்தக்குடிக்க எடுத்தப்ப அங்கிருந்த மரங்கள்ல ஆனந்தமா, சுதந்திரமா பறவைகள் வாழறதப்பார்த்ததும் விசத்த வீசிட்டு அங்கிருந்த சுனை நீர்ல குளிச்சிட்டு, தென்றல சுவாசிச்சிட்டு நானும் இந்த பூமில வாழ படைக்கப்பட்டவள், சாக படைக்கப்பட்டவள் இல்லைனு புரிஞ்சதும் உசுரோட கிளம்பி வந்துட்டேன். நீங்க செஞ்ச தப்புக்கும், உங்க கிட்ட இருக்கிற குறைக்கும் நான் எதுக்குங்க சாகனம்….? நான் என்னோட அம்மா வீட்டுக்கு போறேன். திரும்பவும் வேலைல சாயிண்ட் பண்ணறேன். உங்கள டைவர்சும் பண்ணறேன்…” தைரியமாக சொன்ன சரிதா, தனது சூட்கேஸை எடுத்துக்கொண்டு காரில் கிளம்பியதைப்பார்த்து பேச்சிழந்து, திகைத்து நின்றான் கவின்.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |