நாசகாரிகள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 28, 2025
பார்வையிட்டோர்: 141 
 
 

(பமீலா ஜார்ஜின் உண்மை தழுவிய கதை)

பரபரப்பாகவிருந்தது அந்த பல்கலைக் கழக நூலகம்..

ரெஜினா பல்கலைக் கழகத்து நான்கு சுவர்களைத் தவிர வேறு எதையுமே தெரியாதிருக்கிற, அவளோடு படிக்கிற பல மாணவர்களுக்கும் இந்த நூலகம் தான் கதி.

அவள் தேடலுள்ளவள். பாடங்களில் மட்டுமல்ல அனைவர்க்கும் ஓடியோடி உதவுவதிலும் அவள் சளைத்தவளல்ல.

இந்த அவளது தேடல் ஈழத்திலிருந்து அகதியான அவளது தாயின் கொடை. அவளும் இவள் போன்றவள் தான்..

நூலகத்து அலுமாரிகளில் அடுக்கப்பட்ட ஆவணங்களில் ஒன்றைக் கையிலெடுத்தாள்.

“17 ஏப்ரல் 1995 இல் ரெஜினாவின் பனி வெளியில் ஸ்டீவன் கும்மர்ஃபீல்ட் மற்றும் அலெக்ஸ் டெர்னோவெட்ஸ்கி ஆகியோரால் பமீலா ஜார்ஜ் கொடூரமாக வன்புணர்ந்து கொல்லப்பட்டாள்” என்றும் அந்தக் கொடூரச் செயலை செய்தவர்கள் இந்த ரெஜீனா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் எனவும் அந்த ஆவணப் பதிவு செய்தி சொல்லியது .

அந்தக் கொடூரம் நடந்து பல வருடங்களாகி விட்டன. ஆயினும் அந்தக் கொடுஞ்செய்தி அவளைப் பதைபதைக்க வைத்தது.

இதை தன் தாயான ரதியிடம் அவள் கண்ணீர் மல்கச் சொன்ன போது அவள் இவளின் கண்ணீரைத் துடைத்து விட்டுச் சொன்னாள்.

இப்படித்தான் மகளே… யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திற்கு வெளியே ரஜினி திரணகம நீதி கேட்டதால் படுகொலை செய்யப்பட்டு குருதிப் பெருவெள்ளத்தில் மூழ்கி கிடந்தாள் என்றாள்.

அன்றைய நாட்களில் யாழ் பல்கலைக்கழக மற்றொரு மாணவியான சிவரமணி ….

பேய்களால் சிதைக்கப்படும்

பிரேதத்தைப் போன்று
நான்
சிதைக்கப்பட்டேன்
ஆத்மாவின் உணர்ச்சிகள் எல்லாம்

இரத்தம் தீண்டிய கரங்களால்
அசுத்தப்படுத்தப்பட்டன.
என் இனிய தோழிகளே
இன்னுமா தலைவாரச் சீப்பும்,
கண்ணாடியும் தேடுகிறீர்?

என்று கேட்டு இக் கொடூர உலகினுள் வாழப் பிடிக்காமல், தன் அடையாளங்களை அழித்துத் தற்கொலை செய்து கொண்டாள்..

பாவிமனிதர்களின் கொலைவெறிக்குப் பல்கலைக் கழகங்கள் என்ன செய்யும் ?

கண்கலங்கக் கூறினாள் அவளது அம்மா.

அவளின் தாயும் ஓர் முன்னாள் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவிதான். அவளாலும் அங்கு படிப்பைத் தொடர முடியவில்லை. இனப்பகையும், உட்பகையும் துரத்த பட்டப் படிப்பை முடிக்காமலேயே அகதியாகிப் பல நாடுகளிடையே தப்பித்து ஓடியவள் கடைசியில் கனடாவில் அகதியாய்க் கால் தரித்தாள்.

பழங்குடிப் பள்ளி மாணவர்களை வெள்ளைய அதிகாரம் கொன்று புதைத்த எலும்புகள் இன்று கனேடிய மண்ணைத் தோண்டத் தோண்ட வந்து கொண்டு தான் இருக்கின்றன. எத்தனை ஆயிரம் பழங்குடிப் பெண்களை இங்கு அவர்கள் வதைத்துக் கொன்றிருப்பார்கள் ??

அதே போன்றுதான் எம் ஈழத்துப் பெண்களையும் அவர்கள் வன்புணர்ந்து கொன்றார்கள். பின் மூடிப் புதைத்தார்கள். பெண்களுக்கு எல்லாவிடமும் இதே அநீதிதான்….பெருமூச்சோடு சொன்னாள் அவள் அம்மா.

அவளுக்கு அது ஈழத்தில் பட்ட அனுபவம். அதை மகளிற்கு இத்தனை காலமும் அவள் சொன்னவளல்ல.

இவளுக்கோ இவை அனைத்தும் புதியது.

எழுத்தும், வாசிப்பும் தான் நாம் வாழ்வதற்கான பிடிமானம். உண்மையில் மரணத்திருந்து தப்பிப்பதற்கான முயற்சிதான் எழுத்து என்று அவளுக்கு நம்பிக்கை தருபவர் அந்தப் பல்கலைக் கழகப் பேராசான் ஜார்ஜ் எலியட்.

அவர் ஆப்பிரிக்க மற்றும் கறுப்பின கலாச்சாரம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதில் கனடாவில் முக்கியமானவர். கனேடிய அரசவைக் கவிஞர் எனும் ஆளுமை விருது பெற்றவர்.

அவர் ஒரு பழங்குடியின வம்சாவளி. அவர் உலகின் அற்புதக் கவிதைகளை தேர்ந்தெடுத்துக் கனேடிய நாடாளுமன்ற நூலக இணையதளத்தில் பதிவேற்றி தகுதியானவற்றிற்கு விருதளித்து அவற்றைத் தன் மாணவர்களுக்குக் கற்பித்து வருபவர். மாணவர்க்கு மட்டுமல்லாமல் அவரது விரிவுரையானது கவி என்பது மொழி தாண்டிய பரவசமெனக் கருதும் எல்லோர்க்கும் இனிக்கும். பிரபஞ்சத்தின் பிரமாண்டம் புத்தகங்களே என்பவர் அவர்.

அந்த நாட்களில்தான் அவர் பதிவேற்றிய இரண்டு கவிதைகள் அவரை நிலை குலைய வைத்து மிகப் பெரும் கேள்விக்குள்ளாக்கின. அவற்றில் ஒன்று பாலியல் தொழிலாளி ஒருத்தியைப் பின்தொடர்வது பற்றியது.

அந்தக் கவிதையை எழுதியவன் பமீலா ஜார்ஜை வன்புணர்ந்த கொலையாளி ஸ்டீவன் கும்மர்ஃபீல்ட் என்பவனுடயது. அவன் ஸ்டீபன் பிரவுன் என்கிற புனைபெயரில் மெக்சிக்கோவில் இருந்து எழுதிய கவிதையது.

ஓர் கொடூரக் கொலையாளியின் கவிதையை, அதுவும் உங்கள் பழங்குடிப் பெண்ணைச் சிதைத்தவன் கவிதையை எவ்வாறு இணையத்தில் சேர்த்தீர்கள் ? எப்படி அவனைத் தேர்ந்தெடுத்தீர்கள்? என்று மாணவர்களும், மக்களும் பேராசிரியரைத் துளைத்தெடுத்தார்கள்.

நான் அந்தக் கொலையாளிதான் இந்தக் கவிதையை எழுதியிருப்பான் என்று கனவிலும் எண்ணவில்லை.

இக் கொலையாளியின் கவிதைகளை அறியாது பிரசுரித்தமைக்கு வெட்கப் படுகின்றேன், என்னை மன்னியுங்கள் என்ற போது பேராசிரியரின் தலை கூனிக்குறுகித் தாழ்ந்து போனது அவளுக்கு மிகுந்த கவலை தந்தது.

மரணம் மணிக் கூட்டில் எம்மோடு சுற்றுவதைப்போல, கொலையாளிகளிடம் கூடக் கவி மனம் சுற்றுகின்றதா?

நாடளாவிய மாணவ போராட்டடங்களின் பின் அந்தக்கவிதைகளைப் பல்கலைக் கழக இணையம் இரத்து செய்து விட்டது.

இப்போது பமீலாவைப் பற்றி எவரும் கவலைப்படுவதாய்த் தெரியவில்லை. அதேபோலவே ஈழத்தில் அழிக்கப்பட்ட பெண்கள் பற்றியும் எவருக்கும் அக்கறையில்லை. திரும்பவும் முளைக்காமல் முறித்தெறியப்பட்ட முறிந்த பனைகளைப் பேசுவாரில்லை. காலம் எல்லாக் கொடுமைகளையும் மறக்கச் செய்து விடுகின்றது.

மறக்கடிக்கப்பட்ட அந்தக் கொலையை அறியப் பரபரப்பானாள் அவள். அவளின் நண்பர்கள் மூலமாக பல்கலைக்கழகத்து முன்னாள் நூலகரான சேவியர் அவளிற்குப் பரீட்சயமானார். அவர் அவளிற்கு அந்தச் சம்பவம் தொடர்பாக பல செய்திகளைச் சேகரித்து உதவினார். அதன் பேரில் பமீலாவின் கிராமத்திற்குப் போனாள் அவள்.

Saulteaux ல் ஒயிப்பே (Ojibwe) என்று அழைக்கப்படும் இந்த பழங்குடிக் கிராமம் பழங்குடிகளின் ஆதி மொழியான கிறே (‘Cree) பேசும் கிராமம். இந்த வம்சத்தில் வந்த சிறு தேவதை தான் பமீலா என்றாள் அந்தச் சமூகத் தலைவி சாரா.

கொடும்பனிக் காலத்திலும் காட்டெருமை, மூஸ், கரிபூ, எல்க், பீவர், கரடி, மான்,மற்றும் முயல்களை வேட்டையாடக் குதூகலமாக கூட்டமாகச் செல்வோம்.. ஆனால் வேட்டையாடிகளான எங்களைக் கொலம்பஸ் காலத்திருந்தே இந்த வெள்ளைய மனிதர்கள் தான் வேட்டையாடிக் கொன்று வருகின்றார்கள் என்றாள் அவள் சோகம் தோய்ந்த குரலில்.

கனடா , அமெரிக்கா என்றெல்லாம் சொல்லுகிற இந்த வல்லரசுகள் உருவாகியுள்ளதே ‘செவ்விந்தியர்’ என்று அவர்கள் அழைக்கிற ஆதிப் பழங்குடியினராகிய எம் உடல்கள் மீதும் எம் இரத்தத்தின் மீதும் தான்.

குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள் என்று எந்த பாகுபாடும் அற்று எம்மை அழித்தார்கள். அடிமைகள் ஆக்கினார்கள். சிசுக்களை கூட நிலத்தில் அறைந்து கொன்றார்கள். அம்மை நோய் வந்தோர் போர்த்திய போர்வைகள் தந்து எம்மை கொடுநோயாளர்களாக்கி மருந்தின்றிக் கொன்றொழித்தார்கள். இப்படித்தான் இந்த வெள்ளைய வெறியர்கள் எம் சந்ததியை, எம் கலாச்சாரத்தை நிர்மூலமாக்கி அழித்தார்கள். அழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அதற்கும் மேலாக பாடசாலைகள் என்ற பெயரில் எம் பிள்ளைகளை வன்புணர்நது புதைத்தார்கள் .

சாரா உணர்ச்சிப் பிளம்பாய் கொதித்தாள்.

கொலையுண்ட பமீலா என் வயதை ஒத்தவள் தான். அவள் சாகும் போது 28 வயதாக இருந்தவள். இந்தக் கிராமத்தின் மதிக்கத்தக்க உறுப்பினராகவும், இரண்டு குழந்தைகளின் அன்புத் தாயாகவும் அவள் இருந்தாள் . உங்களைப்போல் பாலியல் தர்மம் என்று விதிக்கப் பட்டிருக்கிற சட்டங்களை எமக்குத் தெரியாது. அதற்காக நாங்கள் விபசாரிகளல்ல என்றாள் அவள். பமீலா தன் இரண்டு குழந்தைகளையும் வளர்க்கப் படாத பாடு பட்டு வந்தவள். . கூச்ச சுபாவமுள்ள மிகவும் ஏழையான அவள் அத்துணை வேலைகளையும் தனித்து எளிதில் செய்கிற சுறுசுறுப்பான பேரழகி. அவள் இயற்கையை நேசிக்கிற ஓர் கவிதைக்காரி . நன்றாக எம் பூர்வீக மொழியில் பாடுவாள்.

ஆம்…எம் பழங்குடிக் கலாச்சார அடையாளமாகவிருந்த பமீலாவைத்தான் அவர்கள் கொடூரமாக்க் கொன்று விட்டார்கள். சாரா நிமிர்ந்து என்னைப் பார்த்தாள். அவள் கதையைக் கேட்டுத் திக்கித்து நின்றேன் நான்.

பமீலா எழுதிய டயறியின் பக்கங்களைப் பார்க்கத் தந்தாள் சாரா. மரணத்தின் முன்பே எழுதிய கவிதையது

என் கல்லறையில் நின்று
கதறாதீர் சோதரரே..
அங்கு நானில்லை..
எனக்கோ மரணமில்லை.
தூங்காமல் சுழன்றடிக்கும்
சுழல் காற்று நானேதான்…
பனியில் பளபளக்கும்
வைரவொளி நானாவேன்
கனிந்த பழ விதையுள்
முளைக்கும் மரம் நானே…
மென்மையாய் தூவுகிற
இலையுதிரின் மழைச் சிதறல்..
இறகுயர்த்திப் பறக்கின்ற
வானத்துப் பறவை..
என் கல்லறையில்
நின்று அழவேண்டாம் சோதரரே
எனக்கோ மரணமில்லை

மேலும் எழுதிருந்தாள்

நான் ஆசாபாசங்களுள்ள மனிசி.

அறம், நீதி என்கிற வார்த்தைகள் என்னோடு பல வேளைகளில் ஒத்துப் போவதில்லை. ஹார்மோனின் சேட்டை உந்த அவன் என்னைப் புணர்ந்த போது நான் மறுக்கவில்லை. எல்லோரையும் போலவே அது எனக்குத் தேவையாக இருந்தது. அவனது பிள்ளை எனக்கு பிறந்த போது நான் அள்ளிப் பால் கொடுக்கும் அன்னை தேவதையாக என்னை உணர்ந்தேன். கள்ளிப்பால் கொடுத்துக் கொன்று விட நானொன்றும் கொடூரமான கலாச்சாரக் குரூரியல்லவே.

எனக்குத் தெரியாது நான் எதற்காகப் பிறந்துள்ளேன் என்பது?? சாகப் போகிற நாம் எதற்காக இங்கு வாழ்கின்றோம் என்பதும் எனக்குத் தெரியாது. இந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரிந்தவர்களாக நான் இன்றுவரை எவரையும் கண்டதுமில்லை.

என் ஆதிக்குடியின் வாழ்விலிருந்து வெகு தொலைவில் நானுள்ளேன். இன்று நான் புதிய சிந்தனைப் பதிவுகளாலும், புது நவீன உலகக் கருத்தாக்கப் பரிமாணங்களாலும் சுழற்றி வீசப்பட்டுக் கிடக்கிற ஜடம். இன்று.

நான் எனக்காகவோ, என் பழங்குடிச் சமூகத்தினருக்காகவோ வாழவில்லை. எம்மைச் சூறையாடும் சமூகத்தினருக்காக வாழ்வதற்காகவே கற்பிக்கப்பட்டிருக்கின்றேன். அவர்கள் தங்கள் கொலைக் கலாசாரம் மிக மிக அழகானது என்கின்றார்கள். அத்தனை கொடூரங்களையும் எம்மேல் அதன் பேரில் தான் திணிக்கின்றார்கள்,

பமீலா தன் உள்ளத்து வேட்கையை அந்த வெற்றுக் கடதாசியில் கொட்டித் தீர்த்திருந்தாள்.

16ந் திகதியிரவு நகரம் இருளத் தொடங்கியிருந்தது. காற்று இரைச்சலோடு ஊளையிட்டது. வானத்தில் நட்சத்திரங்களில்லை. கூட்டத்தை விட்டுத் திசைமாறிப் போன மஞ்சள் சொண்டுப் Puffins பிலாக்கணமிட்டது.

தனித்து விடப்பட்ட இரண்டு தன் சிறு குழந்தைகளுக்கான உணவைக் கையேந்தி அவசர அவசரமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் பமீலா. பனிவிழாத பொழுது அது. மொட்டையாய்க் கிடந்த ஒயுப்பே மரங்கள் இலை துளிர்விடத் தொடங்கியிருந்தன. இருட்டைக் கிழித்தபடி கார் ஒன்று வேகமாக அவளைச் சுற்றி சுற்றி வருகிறது. கண்ணில் ஒளி பட்டுத் தவிக்கிற மானைப் போல அவள் மருண்டாள். கார் அவளருகில் மெதுவாக வந்து நின்றது. உள்ளிருந்து ஓர் வாலிபன் இறங்குகின்றான். நிறை வெறியில் தடுமாறியபடி அவள் கரங்களை இழுத்தான். அவள் அவன் கரங்களை உதறி விட்டாள். வா என்னோடு… அவள் கழுத்தை வளைத்துப் பிடித்தான். அவள் திமிறினாள் . நான் வீட்டிற்குப் போக வேண்டும். பசியால்த் துடிக்கும் பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும். கெஞ்சினாள். கும்பிட்டாள் அவள்.

செவ்விந்தியப் பெட்டை நாயே… வாயைப் பொத்து அவனது முரட்டுக் கரங்கள் இவள் முகத்தில் சம்மட்டியாய் இறங்கியது.

அதற்குள் காரின் பின்புறமிருந்து இன்னொருவன் இறங்கி்வந்தான். “”நீ இன்று எங்களின் இரை தான் பெட்டை நாயே”.. கொச்சை வசவில் திட்டியபடியே அவள் உடைகளை அவன் களையத் தொடங்கினான்.

அங்கமங்கமாக அவளை மானபங்கப் படுத்தி அவளை அணைத்தன அவர்களின் கரங்கள். இரண்டு பேரும் அளவிற்கு அதிகமாக குடித்து இருந்தனர்.. செவ்விந்திய வேசியே உனக்குத் தான் அத்தனையும் தெரியுமே பிறகேன் இந்தப் பிடிவாதம் ? என்ற படி …அவன் முரட்டு மூஞ்சியை அவள் மூஞ்சையில் தேய்க்க முயன்றான்.

அவள் பலங்கொண்ட மட்டும் இருவரையும் தள்ளி விட்டு என்னை விடுங்கள்… என்னை விடுங்கள்.. என்று கத்தியபடியே ஓடினாள். அந்தகார வெளியில் யாரும் அவளது அலறலைக் கேட்காமல் அது வெற்றுக் காற்றில் பட்டு அவளுக்கே எதிரொலித்தது. ஓடிய அவளை இரும்புக் கம்பியால் தலையில் சரமாரியாக தாக்கினார்கள். அவள் மயங்கி மண்ணில் சாய்கின்றாள். பிள்ளைகளின் உணவுப் பொட்டலம் சிதையுண்டு அந்த நிலமெங்கும் சிதறுகின்றது. விழுந்த அவள் உடலின்மேல் மல்லாக்காய் விழுந்தார்கள் அந்த வெள்ளைய வேட்டை நாய்கள்.

வேட்டை நாய்களாகி அவளைச் சிதைத்தவர்கள் வியர்வையை வழித்தபடியே வெற்றுக் கழிப்போடு சிகரெட்டைப் பற்ற வைத்தார்கள். இரத்தப் பேராற்றில் துடித்த அந்த தாயின் கடைசி மூச்சு அந்த மண்ணின் மடியில் அடங்கிப் போயிற்று இரண்டு பச்சிளம் குழந்தைகளை அனாதையாக்கிவிட்டு…..

ஏப்ரல் 17, 1995 அதிகாலை என்றைக்கும் போலவே அன்றும் பரபரப்போடு விடிந்தது. . சஸ்காட்சுவான் மாநில ரெஜினாவின் ஒரு ஒதுக்குப் புற பாதையோரத்தில் முகம் குப்புற இரத்த வெள்ளத்துள் கிடந்தது பமீலாவின் உயிரற்ற உடல் . விசாரணையில் பமீலா ஜார்ஜ் அந்த இரண்டு இளம் வெள்ளையர்களால் அடித்துக் கொல்லப்பட்டது தெரிய வந்தது.

அவர்களை நீதிமன்றத்தில் விசாரணை செய்த வெள்ளைய நீதவான் மலோன் அவர்கள் பமீலா செவ்விந்தியப் பெண். ஏற்கனவே கணவனற்றுப் பிள்ளை பெற்ற விபசாரி என்பதால் இதைப் பாலியல் வன்புணர்வு எனச் சொல்ல முடியாது என்று தீர்ப்பளித்தார்.

உலகின் நீதிமான்களாகத் தம்மைச் சிருஷ்டித்துக் கொண்டுள்ள வெள்ளைக்காரக் கொள்ளையர்களின் மனிதாபிமான நீதி இது தான் ! பெருமூச்சோடு நிறுத்தினாள் சாரா .

அந்தக் குற்றவாளிகளுக்குத் தண்டனையாக 61/2 வருடங்கள் சிறைத் தண்டனை எனத் தீர்ப்பளிக்கப் பட்ட போதும் நான்கு வருடங்களுக்குள்ளாகவே அவர்கள் பரோலில் வெளியே வந்து விட்டனர்.

குற்றத்திற்கான தண்டனையை முழுமையாக குற்றவாளி அனுபவிக்கா நிலையில் உலகம் சுற்றுவது வெள்ளையருக்கான கனேடிய நீதியா?? கனடிய குற்றவியல் நீதித் திறனின் தோல்விக்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்றாள் கோபாவேசமாக சாரா.

அவள் வாய் மூடி மெளனியாக நின்றாள்.

மூலையில் அடுக்கி வைத்திருந்த புத்தகக் குவியலில் இருந்து பழைய புத்தகமொன்றைத் தேடி எடுத்து அவளிடம் நீட்டினாள் சாரா..

வைத்துக்கொள் ..யார் கண்டது வருங்காலத்தில் இந்த நீதி உனக்கும் தேவைப் படலாம் என்றாள்.

ஒன்றும் புரியாமல் புத்தகத்தை வாங்கி விரித்தாள். “பண்டிட் குயின்” என்றிருந்தது. தன்னை பாலியல் வதை புரிந்த 22 பேரிடம் காலில் விழுந்து , தன்னை விடும்படி கெஞ்சிக் கூத்தாடி மன்றாடியும் முடியாமல் அவர்கள் அவளைச் சீரழித்தார்கள். பிறகு அதற்காக நீதி கேட்டு காவல் நிலையங்களுக்கு ஓயாது ஓடி நீதிக்காக அலைந்தவளை மறுபடி, மறுபடி அனுபவித்தெறிந்து விபசாரி என்றார்களே தவிர அவளின் நியாயத்திற்காக யாரும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. பூனையாயக் கிடந்தவள் ஒருநாள் புலியாகி ஆயுதமேந்தி தன்னை வன்புணர்ந்த 22 பேரையும் சுட்டுக் கொன்றாள்.

இந்தியா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமே அவளைத் திரும்பிப் பார்த்தது. அவளைப் பின் இந்திய மக்கள் பாராளுமன்றப் பிரதிநிதியாக்கி மகிழ்ந்தார்கள் ஆம் ஹீரோவாகிய பூலான் தேவியின் வரலாறு அது !

சாரா கட்டித்தழுவிக் கையசைத்தாள்.

அவள் கண்ணீரோடு விடை பெற்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *