சீமெந்துச் சிலை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 1, 2026
பார்வையிட்டோர்: 1,800 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(உண்மை தழுவிய கதை)

எகிப்தின் வீதிகள் வண்ணமயமாகிக் கொண்டிருந்தன. நைல் நதியின் குளிர்ந்த காற்றும், பூக்களின் வாசமும், பாரம்பரிய உணவுகளின் மணமும் ஜன்னலிற்கு வெளியே ஜாஸ்மினைக் கிறங்க வைத்தன. எகிப்தின் வசந்த காலமிது..

ஆனால் கெய்ரோவின் அவளது அந்த அடுக்குமாடி குடியிருப்பில் புழுக்கம் அதிகமாக இருந்தது. வெளியே ‘ஷாம் நசீம்’ பண்டிகைக்கான கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தன. எகிப்தியர்கள் தங்கள் வீடுகளை வண்ணங்களால் அலங்கரிப்பதும், வாசலில் அந்த வசந்தத்தை வரவேற்கப் பூக்களைக் கட்டுவதுமாக இருந்தனர்.

வாசலில் ‘பெசீக்’  எனப்படும் உப்பு மீன் உணவு மற்றும் பச்சை வெங்காயத்தின் மணம் காற்றில் மிதந்து வந்தது. 

சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு பார்வோன்களின் காலத்தில் ‘ஷேமு’ என்று கொண்டாடப்பட்ட வசந்தத்தின் பிறப்பு இது. இன்று அது ஷாம் நசீம்  எனப் பெயர் மாறி நிற்கிறது. 

ஜாஸ்மின் தன் மேஜையில் இருந்த வண்ண முட்டைகளைப் பார்த்தாள். பண்டைய எகிப்தியர்கள் முட்டை ஓடுகளில் தங்கள் கனவுகளை எழுதித் தொங்கவிடுவார்களாம்; சூரியன் அதை நிறைவேற்றுவான் என்பது நம்பிக்கை. ஆனால் ஜாஸ்மின் கனவெல்லாம் மிகச் சிறியது.அதை எழுதித் தொங்க விட முடியாது. அதை அவள் கணவனே தீர்க்கலாம். 

ஜாஸ்மின்  தன் பட்டுத் துணியால் ஆன ஹிஜாப்பைச் சரிசெய்தபடி, முகம் நிறைந்த  புன்னகையோடும் ஓர் குழந்தையின் குதூகலத்தோடும்    இசாமிடம் ஓடினாள்.

“இசாம்… இசாம்…நாளை “ஷாம் நசீம்” பண்டிகை நாள்… நாம் அலெக்ஸாண்ட்ரியாவுக்குச் செல்லலாமா? அங்குள்ள அதிநவீன நூலகத்தின் (Bibliotheca Alexandrina) பிரம்மாண்டத்தை நான் மீண்டும் பார்க்க வேண்டும். கிளியோபாட்ரா காலத்து ரகசியங்கள் புதைந்து கிடக்கும் அந்த மத்திய தரைக்கடலின் நீல நிறக் காற்றைச் சுவாசிக்க வேண்டும் போலிருக்கிறது…வருவாயா?? ஓர் குழந்தையின் ஏக்கத்தோடு அவனை அணைத்தாள். 

அவளைக் கண்டு கொள்ளாமலேயே இசாம் தன் செல்போனை உற்றுப் பார்த்தபடி நக்கலாகச் சிரித்தான். “நூலகமா? பழைய கதைகளா? இதையெல்லாம் கேட்கவே எனக்கு அலுப்பாக இருக்கிறது. லூசா நீ… ஜாஸ்மின். உனக்கு எப்போதும் அந்தப் பழைய குப்பைகளைப் பற்றியே பேச்சு.

ஜாஸ்மின் முகம் காற்றுடைந்த பலூன் போலச் சுருங்கியது. “அது வெறும் குப்பையல்ல இசாம், அது என் ஆன்மா.   ஊர் வம்பிற்கும்,  பெண்களுடன் ஊர் சுற்றவும், அவர்களிடம் சிரித்துப் பேசவும் நேரம் வைத்திருக்கிறீர்கள். ஆனால் என் ஆசைகளை மட்டும் ஏன் ஏளனம் செய்கிறீர்கள்? ஜாஸ்மின் கோபமாகக்  கேட்டாள். 

இசாம் ஆத்திரத்துடன் எழுந்தான். “ஆமாம்! அவர்கள் உன்னைப் போலப் புத்தகங்களுக்குள் புதைந்து கிடப்பவர்கள் அல்ல. அவர்கள் இளமையானவர்கள், இங்கிதந் தெரிந்தவர்கள், உற்சாகமானவர்கள். உன்போல கிணற்றுத் தவளைகளல்ல ..உன்னோடு அமர்ந்து பேசுவது ஒரு கல்லோடு பேசுவதைப் போல இருக்கிறது. போ… போய்ச் சமையலறையில் கிடந்து சாவு அல்லது புதகங்களோடு மாரடி..என்று கத்தியபடியே கதவை ஓங்கிச் சாத்திவிட்டு வெளியேறினான். 

பல ஆண்டுகளுக்கு முன்பு, அலெக்ஸாண்ட்ரியாவின் அந்தப் பிரம்மாண்டமான அநூலகத்தில் அமர்ந்து அவள் உலக நாகரிகங்களைப் புரட்டியபோது, அவளுக்கு ஒரு ஆச்சரியமான உண்மை புலப்பட்டது. எகிப்திய வசந்த விழாவான ‘ஷாம் நசீம்’ போலவே, தென்னாசியத் தமிழர்களுக்கும் இயற்கையை வணங்கும் ‘தைப்பொங்கல்’மற்றும் ‘இந்திர விழா’ போன்ற வசந்த விழாக்கள் இருப்பதை அவள் வரலாறாக வாசித்தறிந்தாள்.

அங்குதான் அவள் சில தமிழ் ஆய்வாளர்களைச் சந்தித்தாள். அவர்களிடம் உரையாடியபோது, எகிப்தியக் கலைகளுக்கும், தமிழ்க் கலைகளுக்கும் உள்ள ஒற்றுமையைக் கண்டு வியந்தாள். பூம்புகாரின் சிலப்பதிகாரக் கதைகளும், எகிப்தியப் புராணங்களும் அவளுக்குள் ஒன்றிணைந்தன. தமிழர்களின் சிகை அலங்காரக் கலைமற்றும் ஆபரண நுணுக்கங்களை அவள் ஆர்வத்துடன் கற்றாள். எகிப்தியப் பெண்களின் கூந்தல் அலங்காரமும், பழங்காலத் தமிழ் மங்கையரின் சிகை அலங்காரமும் ஒரு புள்ளியில் இணைவதை அவளது ஆய்வுகள் நிரூபித்தன. 

அந்த தருணத்தில் தான் தமிழர்களது ஆபரணங்களை, உடைகளை காப்பியடித்து எகிப்தில் விற்கிற டிசையினராக  இந்த இசாம்  அவளுக்கு அறிமுகமானான்..அவள் அவனை ஒரு கலைஞன் என்றே எண்ணினாள்.அவனோ சுத்த வியாபாரி என்பது போகப  போகத்தான் தெரிந்தது.,

அறிவுக்கூர்மை கொண்ட ஜாஸ்மினை, இசாம் ஒரு புத்தகப் பூச்சியாக, சமையலறை இயந்திரமாக மட்டுமே எப்போதும் பார்த்தான்். “நூலகத்தில் கிடந்து உன் மூளை பித்தாகிவிட்டது” என்று அவன் ஏளனம் செய்தபோதெல்லாம், அவள் மௌனமாகத் தன் புத்தகங்களுக்குள் தன் நினைவுகளோடு  தஞ்சம் புகுவாள். அலெக்ஸாண்ட்ரியா நூலகத்தின் அந்தப் பிரம்மாண்டமான கூரைக்குக் கீழ் அமர்ந்திருந்த  நினைவுகள் அவளது கவலைகளை மறைத்துப் போடும்.  , ஜாஷ்மின் தன்னை ஒரு பேரரசியாக உணரும் தருணமது… அவளுக்குப் புத்தகங்கள் வெறும் காகிதக் கற்றைகள் அல்ல; அவை அவளது தனிமையைப் போக்கும் உற்ற தோழிகள், வீழ்ந்து கிடக்கும்போது கை கொடுத்துத் தூக்கும் தேவதைகள்.

தன்னைச் சுற்றியிருந்த உலகம் அவளை ஒரு சாதாரணப் பெண்ணாகப் பார்த்தபோது, புத்தகங்கள் மட்டுமே அவளுக்குப் பேரண்டத்தின் இரகசியங்களைத் திறந்து காட்டின. எகிப்தின் மணல் பரப்பில் அமர்ந்து கொண்டு அவள் உலக  இலக்கியங்களைப் பயின்றாள். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற தமிழின் ஆழ்ந்த வரிகளை வாசிக்கும்போது, நைல் நதிக்கும் காவிரிக்கும் இடையே ஒரு மெல்லிய பாலம் உருவாகுவதை அவள் உணர்ந்திருந்தாள். எகிப்திய ‘ஷாம் நசீம்’ வசந்தமும், தமிழரின் ‘இந்திர விழாவும்’ ஒரே வேரில் முளைத்த பூக்கள் என்று அவள் கண்டறிந்தபோது, உலக மாந்தர் அனைவரும் ஒரே தொப்பிள் கொடி உறவு என்கிற உன்னதம்  அவளுக்குப் பேரின்பச் சொர்க்கத்தைத் தந்தது.

ஆனால், அந்தச் சொர்க்கம் நீடிப்பதில்லை. அந்த நினைவில் இருந்து மீண்டால் அவளது  வீட்டு  நரகம்  அவளை வரவேற்கும். “புத்தகங்களில் கிடந்து உன் மூளை காய்ந்துவிட்டது” என்று இசாம் அவளை ஏளனம் செய்தபோதெல்லாம், அவள் தன் காயங்களுக்குப் புத்தகங்களையே மருந்தாகப் பூசிக்கொண்டாள். புத்தகங்கள் மனிதனின் கவலையைத் தீர்க்கவல்லவை என்று அவள் நம்பினாள்.  அதே புத்தகங்கள் தான் அவளுக்கு வாழ்வின் அர்த்தங்களையும், அடக்குமுறைக்கு எதிரான கிளர்ச்சிகளையும் சொல்லிக்கொடுத்தன.

அன்று இரவு, இசாம் அவளை ஒரு ‘கல்’ என்று இகழ்ந்தபோது, ஜாஸ்மினின் மனதில் பல நூறு ஆண்டுகால மம்மியாக்கும் கலை நிழலாடியது. புத்தகங்களில் அவள் வாசித்திருந்த அந்தப் புனிதமான கலை, இன்று பழிவாங்கும் ஒரு ஆயுதமாக அவள் எண்ணத்துள் உருமாறியது.

“ஒரு மம்மி என்பது வெறும் பிணமல்ல. அது காலத்தால் அழியாத ஒரு கலாச்சாரச் சாட்சி. உன்னையும் நான் மம்மியாக்குகிறேன் இசாம். உன் துரோகமும், உன் கபடத்தனமும் இந்தச் சிமெண்ட் கவசத்திற்குள் என்றென்றும் உறைந்து கிடக்கட்டும்,” என்று அவள்  கோபத்தோடு முணுமுணுத்தாள்.

அந்த நிமிடமே ஜாஸ்மின் மனதிற்குள் அவனில்  இருந்த காதல் எரிந்து சாம்பலானது. உணர்வுகள் மரித்துப் போயின… நான் உனக்குக் கல்லாகத் தெரிகின்றேனா ? இனி நீயும் ஒரு சிலையாகவே இரு” என்று அவள் கண்கள் கோபத்தால்ச் சிவந்தன.

அவனில் ஏற்பட்ட கோபம் மெல்ல மெல்லக் கசப்பாகவும், ஏமாற்றமாகவும் பிறகு கட்டுக்கடங்காத ஆத்திரமாகவும் மாறியது. “நான் உனக்கு ஒரு பொருட்டே இல்லையா?” என்ற கேள்வி அவளைத் துளைத்தெடுத்தது. 

இரவு 11 மணிக்கு இசாம் போதையில் எப்போதையும் போலத் தள்ளாடியபடி உள்ளே வந்தான். ஜாஸ்மின் எதுவுமே நடக்காதது போல அமைதியாக இருந்தாள். “மன்னித்துவிடுங்கள் இசாம். இதோ உங்களுக்குப் பிடித்த தேநீர்,” என்று கனிவாக தேநீரை நீட்டினாள். அதில் அவள் ஏற்கனவே வீரியமிக்க மயக்க மருந்தைக் கலந்து வைத்திருந்தாள்.  அது இசாமின் போதையை மேலும்  ஆழ்ந்த உறக்கமாக மாற்றியது. அவன் கட்டிலில் பிணத்தைப் போலச் சரிந்தான். 

ஜாஸ்மின் விறாந்தைக்குச் சென்றாள். அங்கு கட்டிட வேலைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த சீமெண்ட மூட்டைகளுள்  இரண்டு மூட்டை சிமெண்ட்டைத் தூக்கி வந்தாள். தண்ணீரை ஊற்றிக் குழையக் குழையக் கலந்தாள். ஒவ்வொரு முறை கரண்டியால் கிளறும்போதும் இசாமின் ஏளனப் பேச்சும், கபடத்தனமான சிரிப்பும், அவனோடு சுற்றும் பெண்களின் கலகலப்பொலியும்  அவள் காதுகளில் நாராசமாய் ஒலித்தன.

குழைத்த சீமெண்டை அவன் கால்களில் இருந்து பூசத் தொடங்கினாள்.  முழங்கால், இடுப்பு, மார்பு என ஒவ்வொன்றாக அந்தச் சாம்பல் நிறப் போர்வை அவனை மூடிப் படர்ந்தது..

அலெக்ஸாண்ட்ரியாவின் கடலுக்கடியில் மூழ்கிக்கிடக்கும் அரண்மனைகளைப் போல, இசாமை அவள் ஒரு சிமெண்ட் கடலுக்குள் மூழ்கடித்தாள். , அவனது முகம் மட்டுமே வெளியே தெரியும்படி உடல் முழுவதும் ஒரு பாறை போன்ற கவசம் உருவானது. பண்டிகை விடியத் தொடங்கியது. ஊரே பூக்களாலும், கொண்டாட்டத்தாலும் நிறைந்திருந்தது. ஆனால் ஜாஸ்மினின் அறையில், அந்த மனிதன் மெல்ல மெல்லச் சிலையாக மாறிக் கொண்டிருந்தான். சிமெண்ட் இறுக இறுக, இசாமின் மூச்சுக்குழாய்கள் ஒடுங்கின. 

நேரம் போகப் போக, சிமெண்ட் இறுகத் தொடங்கியது. சூரியனின் முதல் கதிர் ஜன்னல் வழியாக விழுந்தபோது, ஜாஸ்மின் தான் செய்த காரியத்தைப் பார்த்து திடுக்கிட்டாள். இசாமின் முகம் கருமையாக மாறத் தொடங்கியது, அவனது மூச்சு அந்தச் சிமெண்ட் சிறைக்குள் திணறியது.

ஜாஸ்மினுக்கு அவன் மீதிருந்த கோபமும், ஆத்திரமும்  இப்போது அவன் மீது பரிதாபமாக  மாறியது . . அவனைக் கொல்லும் எண்ணம் அவளுக்கு இருந்ததில்லை; ஒரு பாடத்தைக் கற்பிக்கவே நினைத்தாள். ஆனால், மரணம் அவன் வாசலில்  நிற்பதைக் கண்டதும் பதறிப் போனாள். நடுங்கும் கைகளால் போனை எடுத்து மருத்துவ அவசரப் பிரிவிற்கும் , பொலிஸுக்கும் போன் செய்தாள்.

“தயவுசெய்து சீக்கிரம் வாருங்கள்! என் கணவர் உயிருக்குப் போராடுகிறார்… அவரைச் சிமெண்ட் மூடிவிட்டது ! காப்பாற்றுங்கள் என்று கதறினாள்.

மீட்புக் குழுவினர் வந்து அந்தச் சிமெண்ட் பாறையை உடைத்து இசாமை மீட்டபோது, அவன் உயிரிற்குப் போராடியபடியே கவலைக்கிடமான நிலையில் இருந்தான். ஆம்புலன்ஸ் கிளம்பியபோது, ஜாஸ்மின் தன் கைகளைப் பார்த்தாள். அலெக்ஸாண்ட்ரியாவின் நூலகத்தில் மென்மையான காகிதங்களைப் புரட்டிய அதே விரல்களில் இன்று காய்ந்துபோன சிமெண்ட் துகள்கள். மருத்துவமனையில் இசாம் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்க, ஜாஸ்மின்  தன் சிறை அறையில் அமர்ந்து சுவரில் ஒரு கற்பனைப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினாள். அதன்  முதல் வரி அறிவுப் பேரின்பத்தின் வழியில் ஆத்திரம் நுழையும்போது, சொர்க்கமும் ஒரு கல்லறையாகிறது்என்பதாகவிருந்தது . 

அவள் வாழ்வில் தேடிய வசந்தம் அவளுக்குக் கிடைக்கவில்லை. மாறாக, தான் நேசித்த ஒருவனையே கல்லாக்கிப் பார்த்த குற்ற உணர்ச்சியில், அந்தப் பண்டிகை நாளிலேயே கம்பிகளுக்குப் பின்னால் அவள் வாழ்க்கை முடங்கியது. அலெக்ஸாண்ட்ரியாவின் அலைகள் அவளின்றி இன்றும் கரை ஒதுங்கிக் கொண்டிருந்தன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *