சாது..! சாது..! சா..து..

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 1, 2025
பார்வையிட்டோர்: 64 
 
 

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மும்தாஜன் வீட்டிலிருந்து ‘விர்’ரெனப் பறந்து வந்த சுமதி, தன் வீடிருந்த சந்தில் திரும்பியதும் வெலவெலத்துப் போனாள். 

சந்து முனையில் முதலில் தென்படுவது பார்ன்சாலை அதனையடுத்து ஒரு பெட்டிக்கடை. கடையை ஒட்டிய சந்தில் அவளது வீடிருந்தது.

சுமதி தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள். 

வீட்டுக்குள்ளிருந்து புறப்பட்ட அலறல்கள், கூச்சல் கள், காதைப்பிளக்கும் சத்தங்கள்… ஒரு வினாடிக்குள் அங்கு நடப்பதை ஊகித்துக்கொண்ட சுமதி ‘பட்’ டென்று பார்ன்சாலைக்கு எதிர்ப்புறமிருந்த பழைய பேப்பர் புட்டிக்கடைக்குள் புகுந்து கொண்டாள். 

வெகுநாளாக அவர்கள் குடும்பத்துக்குப் பரிச்சயமான திருநெல்வேலிக்காரர் ஒருவர், முனிசிபாலிட்டிக்கு ‘டிமிக்கி’ கொடுத்துவிட்டு பார்ன்சாலைக்கு எதிராகச் சின்னத் தகரக் கொட்ட கையொன்றைப் போட்டு, நான்கு பக்கமும் கோணிச்சாக்குகளைக் கட்டி மறைத்து, பழைய பேப்பர், கண்ணாடிப் புட்டிகள், காலித்தகர டப்பாக்கள் ஆகியவற்றை அதற்குள் சேர்த்து வைத்திருந்தார். அது அவரது வியாபார ஸ்தலமே தவிர வீடல்ல. வீடு, வேறெங்கோ இருந்தது. ஆனால் தவறா மல் நாளுக்கொருதடவை அங்கு வந்து போவார். 

ஏகப்பட்ட கண்ணாடிப் புட்டிகள் நிரம்பிய சாக்கு, மூட்டைகள் ஒன்றன்மேல் ஒன்றாய் குடிசைக்குள் நிரம்பி யிருந்தன. அவற்றுக்கிடையே கால்களை மடக்கிக்கொண்டு உட்கார்ந்தாள் சுமதி. 

அன்று – விடிந்ததிலிருந்தே சுமதிச்கு வீட்டிலிருக்கப் பிடிக்கவில்லை. 

அன்று பவுர்ணமிதினம். பௌத்தர்களுக்குப் புனித நாள். பார்ன்சாலையின் நான்கு பக்கமும் ஒலிபெருக் கியைப் பூட்டி, முதல் நாளிரவிலிருந்தே பிரீத் (பிரார்த் தனை மந்திரம்) ஓதத் தொடங்கியிருந்தார்கள். 

அதில் பங்கு பற்றும் மஞ்சள் காவியணிந்த புத்த பிக்குகள் ஒரு கையில் தாழங்குடையும் மறுகையில் விசிறியுமாகக் ‘கியூ’ வரிசையில் செல்லும்போது அவர்கள் வீட்டு முகப்பில் மாட்டியிருக்கும் ‘மகாதேவன்’ என்ற பெயர்ப்பலகையை ஒரு தடவைக்கு, இரண்டு தடவையாக முறைத்துப் பார்த்த வண்ணம் சென்று கொண்டிருந்தார்கள். 

அவர்களைத் தொடர்ந்து வெள்ளைத் துணியொன்றை இடுப்பைச் சுற்றித் தோளில் போட்டபடி; கைகளில் தாமரைப் பூக்களுடன் ஆண்களும், பெண்களும் ‘சாது… சாது…’ எனக் கோஷம் போட்ட வண்ணம் கூட்டம், கூட்டமாக வருவதும் போவதுமாக இருந்தனர். 

இதுவேறு சுமதிக்கு இனம்புரியாத எரிச்சலை மூட்டியது. 

வீட்டு முகப்பில் மாட்டியிருக்கும் ‘மகாதேவன்’ அப்பாவிடம் சொல்லி என்ற பெயர்ப் பலகையை இன்றைக்கே கழட்டிப் போட்டுவிட வேண்டுமெனப் பவானியிடம் கூறினாள். 

“அக்கா! நேற்று வந்த தெஹிவளைப்பாட்டி தமிழர் களுக்கெதிராய் ஏதோ கிளர்ச்சி பண்ணும் எண்ணம் சிங்களவர்களுக்கு இருக்கு போலிருக்கு சிறில் மத்யூவுக் காக எலக்ஷனில் வேலை செய்த சிங்களக்காடையன் ஒருவன் தெஹிவளை, களுபோவிலப் பகுதி எலக்ஷன் லிஸ்ட் ஒன்றை வைத்து அதில் தமிழர்களுடைய வீடு கள், எந்தெந்த ரோட்டில், எங்கெங்கே இருக்கென வேறு சில ரவுடிகளுக்குச் சொல்லிக் கொண்டிருநததை பாட்டி வீட்டு காம்பவுண்டில் இருக்கும் ஜேக்கப் மாமா பார்த் துக் கொண்டு வந்தாராம். நீங்களும் பார்ன்சாலைக்குப் பக்கத்தில் இருக்கிறீர்கள். கொஞ்சம் கவனமாக இருங்கள்: பார்ன்சாலையைச் சுற்றித்தான் சிங்கள ரௌடிக் கூட்டம் அத்தனையும் இருக்குமெனச் சொல்லிவிட்டுப் போகிறார். நீயானால் உன் இஷ்டத்துக்கு ரேடியோவை வைத்து எஸ். பி. பாலசுப்பிரமணியத்தை அலற விட்டுக்கொண்டிருக்கிறாய். சிங்களவன் வந்து உன் மண் டையைப் பிளக்கப் போகிறான்” என வேடிக்கையாகப் பயமுறுத்தினாள். 

“போடி…போ, உன் பாட்டியும் நீயும். தெஹிவளைப் பாட்டியைப்பற்றி எனக்குத் தெரியாதா? ஒரு நியூஸ் கிடைத்து விட்டால் போதும் அதற்குக் கை, கால், மூக் கெல்லாம் வைத்து வீடு, வீடாய்க் கொண்டு செல்லா விட்டால் தூக்கம் பிடிக்காத ஜன்மம். எழுபத்தி ஏழாம் ஆண்டு குத்துக்கல்லாட்டாம் இருந்த நம் மாமா பிள்ளையை கடையோடு வைத்து எரித்து விட்டார்கள் என்று ‘போன்’ போட்டுச் சொன்னதும் ஞாபக் மில்லையா?” பவானி சுமதியின் மீது எரிந்து விழுந்தாள். 

சுமதிக்கும் பாட்டியின் தகவலில் அவ்வளவு நம்பிக்கையில்லை. இருப்பினும் இன்றைக்கென்னவோ பார்ன்சாலைக்குப் போவதும், வருவதுமாக இருக்கும் சிங்களவர்களெல்லாம் தங்கள் வீட்டையே முறைத்துப் 

‘அம்மா, மும்தாஜ் வீட்டுக்குப் போய் ‘ஸ்டோரி புக்ஸ்’ வாங்கிவரட்டுமா?” சமையல்கட்டில் நின்றிருந்த தாயிடம் போய்க் குழைந்தாள் சுமதி. 

“நேற்றுப் பாட்டி சொன்னவைகள் மறந்து போச்சா. எங்கேயும் போக வேண்டாம். வீட்டிலேயே இரு” குமரனின் கையில் ‘ஆரஞ்ஜூஸ்’ஸைக் கொடுத்த படி மகளைக் கடிந்தாள். 

“அம்மா, ஒரு ஐந்து நிமிஷம்; பக்கத்துத் தெருதானே… வீட்டிலேயே உட்கார்ந்திருக்க ‘போர்’ அடிக்குது…’ 

“பாவம் சுமதியக்காக. அவர் ‘பிரண்ட்’டைப் பார்க் காட்டி அவளுக்குத் தூக்கமே பிடிக்காதே? போய் வரட்டும் விடுங்கம்மா.” 

ஏழு வயதுத் தம்பி அவளுக்காக சிபாரிசு பண்ணி னான். அம்மா செல்லம் அவன். தான் கூறினால் அம்மா எதுவும் செய்வாள் என்பது அப்பிஞ்சு மனதின் நம்பிக்கை. 

“போவதும் வருவதுமாக ஐந்து நிமிடத்துக்குள் வந்து விடவேண்டும். சினிமா, டிராமாவென நேரந் தெரியாமல் அரட்டையடித்துக் கொண்டிருக்கச்கூடாது.” 

அம்மா விடை கொடுத்தாளோ இல்லையோ சிட்டாய்ப் பறந்தாள் சுமதி. 

மும்தாஜ் வீட்டுக்குச் சென்று ஒரிரு நிமிடங்கள் கூட ஆகியிருக்காது; ஏதோ பெரிய கூச்சல்கள், குழப்பங்கள் வெடிச்சத்தங்கள் தன் வீட்டுப் பக்கம் கேட்கவே கையைப் பிடித்திழுத்து நிறுத்திய மும்தாஜையும் உதறித் தள்ளி விட்டு ஆவேசத்துடன் ஓடிவந்தாள். 

கொஞ்சம் அங்கேயிங்கே அசைத்தால் கூடப்போதும், தனக்குமேலேயே சரிந்து விழுந்து உடைந்து சிதறுவதற் குத் தயாராக இருந்த சாக்குமூட்டைகளின் இடுக்குக்குள் அமர்ந்தபடியே தைத்திருந்த கோணிச் சாக்கின் ஒரிழையை அறுத்து அதனூடே தன் ஒற்றைக் கண்ணைத் தைரியமாகப் பதித்தாள் சுமதி. அவள் வீட்டுக் காம்பவுண்ட் தெளிவாகத் தெரிந்தது. 

சில மணித்தியாலங்களுக்கு முன்னர் ‘சாது…சா…து” வென புத்தரை நினைத்து புனிதமந்திரம் ஓதியவர்களா இவர்கள்? கண்களை மூடி நிஷ்டையிலிருக்கும் புத்தரின் புனிதக் கோயிலுக்கு முன்னாலேயே கைகளில் கோடரியும். கத்தியும், வாளுமாய் கொலை வெறியுடன் பாய்ந்து கொண்டிருந்தார்கள். 

பார்ன்சாலையின் உள்ளேயிருந்து ‘பெற்றோல் டின் களுடன் மஞ்சள் துணி சுற்றிய காடையர்கள் ஓடுவது தெரிந்தது. 

“ஐயோ கடவுளே! எங்கள் வீட்டைக் கொளுத்தப் போகிறார்களா?” 

அம்மா… முருகா… அ…ம்…மா… 

“இது யார் குரல்? அக்காவா? அம்மாவா…?” 

சுமதி பதறினாள். மேலும் அவளால் மறைந்திருக்க முடியவில்லை. “அ…க்கா… நானும் வந்து விடுகிறேன்… வந்…து விடு…கிறேன்’ என்று அலறிக்கொண்டே எழுந்து ஓடினாள். 

அது யார் புடவை? அம்மா காலையில் குளித்து விட்டுக் கட்டிய சிவப்பு சின்னாளப்பட்டுப் புடவை அல்லவா? 

 “அ…ம்…மா” 

ஏழெட்டுக் காடையர்கள் தன் தாயை நிலத்தோடு அழுந்த தரதரவென வெளியே இழுத்து வருவது தெரிந் தது. தாயாருக்குப் பின்னால் அலறிக்கொண்டே ஓடி வரும் குமரன். 

 ‘ஐயோ…என் அம்மாவை என்ன பண்ணப் போகிறார்கள்?’ 

நிலத்தில் இழுபட்டு வந்த அவள் புடவை வீதியில் வந்து விழுந்தது. ஏழெட்டுப் பேர் மத்தியில் புழுவாய்த் துடிக்கும் தாயார். அவர்கள் முதுகில் தன் விளையாட்டுச் சக்கரத்தால் இடித்துத் தள்ளிவிட்டு தாயை விடுவிக்க கையில் சக்கரத்தைத் தூக்கியபடி ஆவேசங்கொண்டு நிற்கும் குமரன். 

‘காம்பவுண்ட்’ சுவருக்குள் மறைந்து நின்ற சுமதிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. 

“குமரா, வேண்டாம்டா… அவர்கள் கண்ணில் படா மல் ஓடிவா… இங்க…ஓடி…வா…” என்று வாய்விட்டு கத்த வேண்டும் போலிருந்தது சுமதிக்கு. 

ஆனால் நிலைமையை உணர்ந்து மௌனமாக நின்ற வண்ணம் அவன் கண்களில் படும்படியாகத் தன் கையைத்திருப்பித் திருப்பித் தன் பலங்கொண்டமட்டும் ஆட்டினாள் சுமதி. 

ஊக்கும்…அவன் திரும்பவேயில்லை. தன் தாயாரை அவர்களிடமிருந்து விடுவித்துவிடவேண்டும் என்பது போல் ஓடியோடி தன் வலிமைக்குத் தக்க கற்களைத் தூக்கி அவர்களுக்கு குறிவைத்து எறிந்தான். 

சுரீரென்று ஒரு சின்னக்கல் எவனோ ஒருவனின் இடுப் பில் படவே ‘பட்’டென்று தன்னுணர்வு வரப்பெற்ற சிங்கள வெறிநாய், குமரன் பக்கம் திரும்புவது தெரிந்தது. 

”குமரா, அங்கு நிற்காதே; இங்கே சுமதியக்கா இருக்கிறேன் ஓடிவாடா…த…ம்பி…” என்று வாய்வட்டு அலறியபடியே கையை ஆட்டினாள். 

அதற்குள்ளாக பின்னால் திரும்பிய சிங்களக் காடை யன் கையிலிருந்த இரும்புக் கழியால் குமரனின் மண்டை யில் அடித்தான். 

‘தம்…பி… குமரா…’ சுமதி ‘கிறீச்’செனக் கதறிய படி பின்னால் சரிந்தாள். 

அந்தச் சமயம் மகா தேவனின் ஹோட்டல் தீக்கிரை யாக்கப்பட்டு வெளியே ஓடிவந்த மகாதேவனையும் அதற் குள் தூக்கிப் போட்டதை கண்ணால் பார்த்து விட்டு, அதனை எப்படியும் வீட்டுக்குத் தெரியப் படுத்த வேண்டு மென ஒளிந்து மறைந்து ஓடிவந்த உறவுக்காரப்பைய னொருவன் சந்தில் திரும்பியதும் சுமதி நிற்கும் இடத்தை கண்டு கொண்டான். 

உடனே ஓடிச்சென்று சுமதி அலறும் சத்தம் வெளியே கேட்காதபடி அவள் வாயைப் பொத்தியபடி கீழே உட்காரவைத்தான். 

சில நிமிடங்களுக்குள் அந்தக் கும்பல் கலைந்து சென்றது. 

அதுவரையும் அழுகையும், விசும்பலுமாக உட்கார்ந் திருந்த சுமதியைத் தேற்றிய வண்ணம் வீட்டு முகப் புக்கு அழைத்துச் சென்றான். 

‘காம்பவுண்ட்’ டுக்குள் உயிரற்று அலங்கோலமாகக் கிடந்த தன் தாயின் வெற்றுடம்பைப் பார்த்ததும் மீண்டும் ‘அம்மா…அம்… மா’ வெனக்கதற ஆரம்பித்தாள் சுமதி. 

புத்தகோயிலுக்கு முன்னால் கட்டித்தொங்கிய வெள் ளைச் சீலையொன்றை அவ்வாலிபன் அறுத்துக் கொடுக்க அதனால் தாயின் சடலத்தை மூடினாள் சுமதி. 

தூரத்தே மண்டை பிளந்து கிடந்த தன் தம்பியின் உடலைத் தூக்கி வந்து தாய்க்குப் பக்கத்தில் வளர்த்தினாள். அதற்குமேல் அவளால் தன் வேதனையை அடக்க முடியவில்லை. 

‘அம்மோ… உங்களுக்கு நேர்ந்த கதி தெரியாமல் அப்பா போய்விட்டார். அப்பா போனது தெரியாமல் நீங்கள் எல்லோரும் ஒன்றாகப் போய்விட்டீர்கள் … நான் …பாவி… பாவி…” என்று வெறிகொண்டவள்போல் தன் மண்டையில் மடார் மடாரென அறைந்தாள். 

சுமதியைத் தேற்றும் வகை தெரியாமல் நின்ற அவ் வாலிபன் எங்கோ சத்தம் கேட்பது போலிருக்கவே ‘சட்’ டென்று அவளைப் பற்றியிழுத்துக்கொண்டு அகதிகள் முகாமைத் தேடி ஓடினான்.

– அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1985, தேனருவி வெளியீடு, சென்னை.

அக்கினி வளையம் அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள் - ஆகஸ்ட் 1985 தமிழினத் தலைவர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களின் அணிந்துரை  தென்னிலங்கைத் தீவில் தேம்பியழும் தமிழ் இனத்தினர் படும் சித்ரவதைக் கொடுமைகளைத் 'தேவி' இதழ் 'கண்ணீர்க் கதைகள்' என்ற தலைப்பில் வெளியிட்டது தொடர்ச்சியாக!  அதன் தொகுப்பே இந்த நூல்! நூல்அல்ல; நம் இதயத்தில் பாயும் வேல்!  இலங்கைத் தமிழ்க்குலத்தில் உதித்த எழுத் தாளர் ஞானப்பூங்கோதை அவர்கள் தாய் உள்ளத் தில் பொங்கிப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *