சங்கர்லால் வந்துவிட்டார்!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: July 8, 2026
பார்வையிட்டோர்: 71 
வாசிப்பு நேரம்: 14 நிமிடங்கள்


(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 31-35 | அத்தியாயம் 36-40 | அத்தியாயம் 41-45

36 

சங்கர்லால் தொலைபேசியில் நீண்ட தொடர்பு கொண்டு கல்கத்தா விமான நிலையத்துக்குத் தங்கத்துரையின் பயணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்திருந்தார். ஆகையால் தங்கத்துரைக்கு எல்லாமே எளிதாகிவிட்டன. அவர் விமானத்தில் சென்னையை அடைந்த போது மணி பன்னிரண்டு. 

விமான நிலையத்தில் மாணிக்கம் தங்கத்துரைக்காகக் காத்திருந்தான். விமான நிலையத்துக்கு மாணிக்கம் வருவான் என்று தங்கத்துரை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை! மாணிக்கம் தங்கத்துரையைப் பார்த்து மெல்லச் சிரித்தபடியே காரில் ஏறி உட்கார்ந்ததும் அதைக் கிளப்பினான். தங்கத்துரை அவனுக்குப் பக்கத்தில் ஏறி உட்கார்ந்ததும், கார் விரைவாக ஓடியது. 

மாணிக்கம் காரை அவ்வளவு விரைவாக ஓட்டியது தங்கத்துரைக்கு அச்சமாக இருந்தது. “மாணிக்கம்! நான் விமானத்தில் அவ்வளவு விரைந்து வந்த போதுகூட அச்சம் கொள்ளவில்லை. இப்போது நீ காரை ஓட்டுவதைப் பார்த்தால், இன்னும் சிறிது நேரத்தில் கார் தலை கீழாகத்தான் ஓடும் போல் இருக்கிறதே!” என்றார் தங்கத்துரை. 

“அச்சம் கொள்ள வேண்டாம் தங்கத்துரை! முன்பெல்லாம் எழுபது எண்பது என்று பொருட்படுத்தாமல் போவேன்! இப்போது என் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன!’ என்றான் மாணிக்கம் 

தங்கத்துரை ஸ்பீடா மீட்டரைப் பார்த்தார். கார் அறுபது மைல் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது. மாணிக்கம் எதற்காகத் தன் கைகள் சுட்டப்பட்டிருப்பதாகச் சொல்லுகிறான் என்று தான் தங்கத்துரைக்குப் புரியவில்லை. அவர் வியப்புடன் மாணிக்கத்தைப் பார்த்தார். 

”தங்கத்துரை! ஏன் அப்படி விழிப்புடன் பார்க்கிறீர்கள்? என்னுடைய கைகள் கட்டப்படவில்லையே என்று பார்க்கிறீர்களா? அன்புக் கட்டளைக்கு நான் கட்டுண்டு கிடக்கிறேன். என் மனைவி கயல்விழி, மணமானவுடன் முதல் முதலில் என்னிடம் சொன்னது இதுதான். எந்தக் காரணத்தைக் கொண்டும் நாற்பது மைல் விரைவுக்கு மேல் போகக்கூடாது என்றும், அப்படித் தவறி அதிக விரைவுடன் காரைச் செலுத்தினால் அவள் இந்த காரிலேயே இனி ஏறமாட்டாள் என்று சொல்லி விட்டாள். இந்தப் பெண்களே! இப்படித்தான்! இத்தனை ஆண்டுகள் நான் எப்படி உயிருக்குக் கேடு இல்லாமல் வளர்ந்தேன். என்னை எவர் வளர்த்தார்கள் என்று எண்ணிப் பார்ப்பதில்லை. மணமானவுடன் கயல்விழியின் இந்தக் கட்டுப்பாட்டைக் கண்டு என் அண்ணி இந்திராதேவி கேலி செய்யத் தொடங்கிவிட்டார். இறுதியில் கயல்விழியிடம் வாதாடி, வழக்குத் தொடர்போடு வெளியே போகும் போது சில வேளைகளில் மிகவும் விரைவாகப் போக வேண்டியது அவசியம் என்றும், அதற்காக அறுபது மைல் விரைவு வரையில் போக ஒப்புதல் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன். இந்தச் செய்தியும் சங்கர்லாலுக்கு எட்டிவிட்டது. அடிக்கடி கேலி செய்யாவிட்டாலும், வகையாகச் சில தருணங்களில் கேலி செய்வதில் என் அண்ணாவுக்கு மிகவும் பிடிக்கும்! ஒரு நாள் பலர் முன்னிலையில் அவர் கேலிக்குப் பலியாகிவிட்டேன்?” 

மாணிக்கம் சொல்லும் கதை தங்கத்துரைக்குக் கேட்க மிகவும் வேடிக்கையாக இருந்தது. “என்ன சொன்னார் சங்கர்லால்?” என்று கேட்டார் தங்கத்துரை ஆவலுடன். 

மாணிக்கம் அமைதியாகச் சொன்னான் : “ஒருநாள் வகாப் வந்திருந்தார். அப்போது கூடத்தில் இந்திராவும், கயல் விழியும், மாது கத்திரிக்காய், மைனா முதலியவர்களும் உட்கார்ந்திருந்தார்கள். பேசுவதற்குப் புதிய வழக்கு ஏதும் இல்லை. வகாப், கயல்விழியைப் பார்த்து வேடிக்கையாக, ‘மணமான பின் மாணிக்கத்தை அதிகமாகப் பார்க்க முடியவில்லையே?” என்றார், நான் வெளியே போவதற்காக உடைகளை மாற்றிக் கொண்டு அப்போது தான் கூடத்திற்கு வந்தேன். கயல்விழி வெட்கத்துடன் தலையைத் திருப்பி இந்திராவைப் பார்த்தாள். இந்திராவுக்குச் சிரிப்பு அடக்க முடியவில்லை : நான் வந்ததும் வகாபிடம் சொன்னார் : ‘வகாப்! மாணிக்கம் இப்போதெல்லாம் ஐம்பது அறுபது மைல் விரைவுக்கு மேல் காரில் செல்லுவதில்லை. இத்தனை ஆண்டுகளில் போலீசு இலாகாவால் மாணிக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் இப்போது கயல்விழி அவனைக் கட்டுப்படுத்தி விட்டாள் இதைக் கேட்டதும் எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். என்றாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை!”, 

தங்கத்துரையும் அதைக் கேட்டு விட்டுச் சிரித்தார். 

கார் மலைப் பாதையில் சென்று கொண்டிருந்தது. முல்லைவனம் தோட்ட பங்களாவின் முன் கார் சென்று நின்றபோது, பொன்னன் ஓடிவந்து காரின் கதவை மெல்லத் திறந்தான். 

மாணிக்கம் காரைவிட்டு இறங்குவதற்கு முன் தங்கத்துரையின் காதில் மெல்லச் சொன்னான் : “முன்பெல்லாம், எனக்கு மணமாகாத முன்பு இந்தப் பொன்னன், நான் வந்தால் ஓடி வந்து காரின் கதவைத் திறக்க மாட்டான். இப்போது, மணமானபின் நான் பெரிய மனிதனாகி விட்டதாக எண்ணி, ஓடிவந்து கதவைத் திறக்கிறான். மணமான பின்பு எவ்வளவு மாறுதல்கள் தெரியுமா? எவரிடமாவது எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் போல் இருக்கிறது. என்றாவது ஒரு நாள், நீங்கள் சும்மாயிருக்கும் போது எல்லாவற்றையும் சொல்லுகிறேன்.” 

மாணிக்கமும், தங்கத்துரையும் ஒரே நேரத்தில் கீழே இறங்கினார்கள். காரின் கதவுகளை அடித்துச் சாத்திவிட்டு இருவரும் உள்ளே சென்றார்கள். 

கூடத்தில் – 

சங்கர்லால் இல்லை. விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. கூடத்தின் ஓரமாக நின்றிருந்த மாது மாணிக்கத்தைப் பார்த்து ஏதோ சாடை காட்டினான். அந்தச் சாடை மாணிக்கத்துக்கு மட்டுமே புரிந்தது. 

மாணிக்கம் தங்கத்துரையைப் பார்த்து, “உட்காருங்கள் தங்கத்துரை! அண்ணா மறைவு அறையின் ஆராய்ச்சிக் கூடத்தில் இருக்கிறாராம். நான் போய் அழைத்து வருகிறேன்” என்றார். பிறகு அங்கிருந்து உள்ளே போய்விட்டான். 

தங்கத்துரை ஒரு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தார். அவருக்குக் களைப்பாக இருந்தது. கண்களை மூடினார். விமானத்தில் மேலே எழும்பிப் பறப்பதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. விமானத்தில் வந்ததால் ஏற்பட்ட கோளாறு இது! அவர் ஏதோ மெல்லிய ஓசை கேட்டுக் கண்களைத் திறந்த போது. எதிரே மாது தேநீர்க் கோப்பையுடன் நின்றிருந்தான். சங்கர்லால் எதிரே மற்றொரு நாற்காலியில் உட்கார்ந்து தேநீர் குடித்துக் கொண்டிருந்தார். 

தங்கத்துரை சங்கர்லாலைப் பார்த்து சிரித்துக் கொண்டே, தேநீரைக் குடித்தார். பிறகு, “சங்கர்லால், புகைவண்டியில் கல்கத்தாவுக்குப் போகும் போது, நானும் பேரழகியும் பல இடங்களில் இறங்கிப், பல வண்டிகளில் மாறிப் போனோம். பேரழகி ஒரு சிறிய தோல் பெட்டி வைத்திருந்தாள். அவளுக்குப் புதிய ஆடைகள் பல வாங்கி அந்தத் தோல் பெட்டியில் போட்டுக் கொடுத்தான் சவரிமுத்து. என்னிடமும் உடைகள் இல்லாததால், புதிதாகச் சில உடைகளை அதில் வாங்கி வைத்தேன். வழியில் பல இடங்களில் தோல் பெட்டியை எடுக்கும்படி நேர்ந்தது. புகைவண்டியில் போகும் போதே தோல் பெட்டியின் அடிப்பாகம் பாதிக்குமேல் தேய்ந்துவிட்டது என்று சொல்லலாம். ஓர் இடத்தில் பெட்டியை விரைவாக எடுத்த போது, அடிப்பாகத்தில் ஓர் ஓரமாகத் தையல் விட்டு விட்டது. தையல் விட்ட இடத்தில், வாய் பிளந்து வெள்ளையாக ஏதோ காகிதம் தெரிந்தது. அதை எடுத்துப் பார்த்தபோது, பாதிக் கடிதம், அது யார் எழுதிய கடிதம், எவருக்கு எழுதிய கடிதம் என்று புரியவில்லை. கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறது என்றும் புரியவில்லை! கடிதம் தமிழில் தான் எழுதப்பட்டிருந்தது. அதை எப்படிப் படிப்பது என்றே புரியவில்லை. மீதிப் பாதி கடிதம் இருந்தால் கடிதத்தைப் படிக்க முடியுமோ என்னவோ?” என்று சொல்லிக் கொண்டே அவர் கால் சட்டைப் பையில் கையை விட்டார். மணிபர்சை எடுத்து, அதில் பத்திரபடுத்தியிருந்த அந்தப் பாதிக் கடிதத்தை அவர் எடுத்துச் சங்கர்லாலிடம் கொடுத்தார். 

சங்கர்லால் அதை வாங்கிப் பார்த்தார். நீண்ட நேரம் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு நிமிர்ந்து தங்கத்துரையைப் பார்த்தார். “மற்றொரு பாதிக் கடிதமும் இருந்தால் தான் இதைப் படிக்க முடியும். இப்போது படித்தால், கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்றே புரியவில்லையே!” என்றார். 

“அதைப் படிக்க முடிகிறதா?” 

“ஏன் முடியவில்லை? இரண்டு துண்டுகளும் இருந்தால் நீங்களே படித்து விடுவீர்கள்!” என்றார் சங்கர்லால், 

“மற்றொரு துண்டு அந்தப் பெட்டியிலேயே இருக்கிறதா என்று தேடி பார்த்தேன். கிடைக்கவில்லை” என்றார் தங்கத்துரை. 

“இந்தப் பாதிக் கடிதம் தான் சின்னத்துரையிடம் இருந்திருக்கிறது. இதைப் பத்திரப்படுத்தப் பேரழகியின் பெட்டியில் வைத்துத் தைத்து விட்டிருக்கிறார். மீதிப் பாதிக்கடிதம் சின்னத்துரையிடமும் இல்லை, சவரிமுத்திடமும் இல்லை. இருந்திருந்தால் சவரிமுத்து புதையலை எப்போதோ கிளப்பிவிட்டிருப்பானே!” என்றார் சங்கர்லால். 

புதையலா?” என்று வியப்புடன் கேட்டார் தங்கத்துரை. 

”சவரிமுத்து தேடும் புதையல் கடிதத்தில் எழுதியிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். இரண்டு பாதிக் கடிதங்களும் கிடைக்காமல் அவனால் புதையலைக் கிளப்ப முடியாது!” என்றார் சங்கர்லால் 

“கடிதத்தைப் பற்றிச் சவரிமுத்து என்னிடம் ஒன்றுமே சொல்லவில்லை. மற்றொரு பாதிக் கடிதம் சின்னத் துரையிடமே. இருக்கிறதோ என்னமோ? அதை அவர் வேறு எங்கேயாவது ஒளித்து வைத்திருந்தால்?” என்றார் தங்கத்துரை. 

சங்கர்லால் ஒன்றும் சொல்லவில்லை. 

அவர் சீரிய சிந்தனையில் ஆழ்த்தார். பிறகு அவர் சொன்னார் : “மீதிப் பாதிக் கடிதத்தைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம். ஒன்று, அந்தப் பாதிக் கடிதம் நம்மிடம் வரவேண்டும். அல்லது, மற்றொரு பாதிக் கடிதத்தை வைத்திருப்பவரிடம் இந்தப் பாதிக்கடிதத்தைச் சேர்க்க வேண்டும். புதையலைக் கிளப்ப இப்போது பலர் முனைந்திருப்பார்கள்!” 

“இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார் தங்கத்துரை. 

“சின்னத்துரைக்கு உங்கள் மீது ஐயம் ஏற்பட்டிருக்கும் இந்த நேரத்தில், நீங்கள் சென்னையில் இருப்பது மிகவும் தவறு!” என்றார் சங்கர்லால், 

“சின்னத்துரையைப் பார்த்து என்ன சொல்ல வேண்டும்?” என்று கேட்டார் தங்கத்துரை. 

“நீங்கள் கொடுத்த நகைகளை மூன்று பேர்களும் சேர்ந்து எடுத்துக் கொண்டு கல்கத்தாவுக்குப் போக வேண்டும் என்றும், கல்கத்தாவில் சவரிமுத்துவின் ஆள் சிறையிலிருப்பதாகவும், ஆகையால் நண்பர் ஒருவர் இல்லத்தில் பேரழகியை விட்டு விட்டு வந்ததாகவும் சொல்ல வேண்டும். கூடியவரையில் சவரிமுத்தை நீங்கள் பார்க்காமல் இருப்பது நல்லது!” 

“அப்படியானால், முதலில் நான் என்னூர் பங்களாவுக்குப் போய்ச் சின்னத்துரை இருக்கிறாரா என்று பார்க்கிறேன். நான் தொலைபேசியில் உங்களுடன் பேசிய போது சின்னத்துரை பார்த்துவிட்டதால், என் மீது ஓரளவு ஐயம் வந்திருக்கும் என்பது உண்மைதான். மீண்டும் சின்னத்துரை சவரிமுத்தைச் சந்தித்துப் பேசினாரா என்பது முக்கியம், சவரிமுத்துக்கு என் மீது ஐயம் ஏற்பட்டால் எல்லா ஏற்பாடுகளுமே கெட்டுவிடும்” என்றார் தங்கத்துரை. 

“தப்பித்தவறி சவரிமுத்தை நீங்கள் சந்தித்தால், சின்னத் துரையின் மீது ஐயம் ஏற்பட்டிருப்பதாகவும், அவர் போலீசு இலாகாவுடன் தொடர்பு கொண்டவர் என்றும் சொல்லித் தப்பிக்க வேண்டும்” 

“அப்படியானால் நான் உடனே புறப்படுகிறேன்!” என்றார் தங்கத்துரை. 

“மாணிக்கத்தின் காரில் செல்லுங்கள். மாணிக்கத்தையும் அழைத்துச் செல்லுங்கள்” என்றார் சங்கர்லால். 

37 

மாணிக்கம் காரை ஓட்டிச் சென்றான்.

“இன்று இரவு முழுவதும் காரை ஓட்டுவதிலேயே காலம் கழிந்து விடும் போல் இருக்கிறது?” என்றான் மாணிக்கம். 

தங்கத்துரை மெல்லச் சிரித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.

கார் என்னூரை அடைந்தது. தீலின் பக்கத்தில் ஓர் ஓரமாகக் காரை நிறுத்தினான் மாணிக்கம். 

“தீவுக்கு எப்படிப் போக வேண்டும் தெரியுமா? தண்ணீரைக் கடந்து செல்ல, அதோ அங்கே ஒரு படகு இருக்கிறது. அங்கே பார்த்துவிட்டு உடனே திரும்புங்கள். விடிந்ததும் உங்களுக்குக் கல்கத்தாவுக்கு விமானம் இருக்கிறது” என்றான் மாணிக்கம், 

தங்கத்துரை மெல்ல நடந்தார். 

தண்ணீரைக் கரை ஓரமாக் கட்டியிருந்த படகில் ஏறி உட்கார்ந்தார். படகை அவிழ்த்துவிட்டு, துடுப்பைப் போட்டுத் தள்ளினார். 

தீவில் – 

அஞ்சக்கூடிய அமைதி நிலவியது. 

அந்தப் பங்களாவில் எவருமே இல்லை. தீவு முழுவதும் இருட்டில் மூழ்கிக் கிடந்தது. தங்கத்துரை மின் பொறி விளக்குக் கொண்டு வரவில்லை. ஆனால் அவரிடம் தீப்பெட்டி இருந்தது. தீக்குச்சியை எடுத்துக் கிழித்துக் கொண்டே ஒவ்வொரு இடமாகப் பார்த்தார். அந்த இருட்டில், தனிமையான அந்த இடத்தில் அவர் தீக்குச்சியை கிழித்த போது, சுதந்தர நாள் விழாவைப் போல் இருந்தது அந்தச் சிறு ஒளியும்கூட! 

பங்களா பூட்டிக் கிடந்தது. 

பங்களாவைச் சுற்றிப் பார்த்தார். தோட்டத்தின் ஓரமாக, உள்ளே விளக்குகள் ஏதும் தெரியவில்லை. எல்லாச் சன்னல்களும் மூடப்பட்டிந்தன. ஆனால் சன்னல்கள் தாழிடப்படவில்லை. தங்கத்துரை பங்களாவின் பின் பக்கக் கதவைத் தள்ளிப் பார்த்தார். 

அதுவும் வெளியே பூட்டப்பட்டிருந்தது. பின் பக்கம் இருந்த மாடிப்படிகளைக் கடந்து மேலே சென்றார். மாடிக் கதவும் பூட்டிக் கிடந்தது. 

பங்களாலின் பக்கத்தில் இருந்த குடிசையில் பார்த்தார். அங்கேயும் – 

எவரும் இல்லை! 

சின்னத்துரை அடையாருக்குப் பக்கத்திலுள்ள காட்டில் சவரிமுத்துடன் தங்கியிருக்க வேண்டும் என்று எண்ணினார். பிறகு திரும்பினார். படகில் 

கரையை அடைந்ததும், மாணிக்கத்தைப் பார்த்து, “காரை அடையாருக்கு விடு!” என்றார். 

மாணிக்கம் காரைச் செலுத்தினான். 

அடையார் காட்டு வீட்டுக்குப் பக்கத்தில் தங்கத்துரை மட்டும் சென்றார். கொஞ்சம் தொலைவிலேயே தள்ளி மாணிக்கம் காரில் உட்கார்ந்திருந்தான். 

இருட்டில் – 

வீட்டின் வெளியே சவரிமுத்து படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். சிறிது தொலைவில் முனியப்பன் மற்றொரு கட்டிலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். சின்னத்துரை எப்போதுமே வீட்டிற்குள் படுப்பதில்லை. சின்னத்துரை இருக்கும் போது, முனியப்பன் வீட்டிற்குள் படுத்துவிடுவான். சின்னத்துரை மற்றொரு கட்டிலில் வெளியே படுத்துக் கொள்ளுவார். 

சின்னத்துரை எங்கே? 

தங்கத்துரை வியப்புடன் திருப்பினார். மாணிக்கம் இருந்த இடத்தை நோக்கி விரைவாக வந்தார். “முல்லைவனம் தோட்டத்துக்கு போ மாணிக்கம். சின்னத்துரையைக் காணோம்” என்றார். 

அவர்கள் பங்களாவை அடைந்த போது, சங்கர்லால் வியப்படையவில்லை. சின்னத்துரையைக் காணோம் என்றதும், உடனே தொலைபேசியில் சென்னை விமான நிலையத்துடன் தொடர்பு கொண்டு, சின்னத்துரை விமானத்தில் எங்காவது சென்றாரா? கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்கள்” என்றார். 

இரண்டே நிமிடங்களில் விடை கிடைத்தது. அன்று மாலைதான் சின்னத்துரை விமானத்தில் கல்கத்தாவுக்குப் பயணமாயிருக்கிறார் தனியாக! 

சங்கர்லால் தங்கத்துரையிடம் சொன்னார்; ‘உங்கள் மீது ஐயம் ஏற்பட்டதால் தான் சின்னத்துரை புறப்பட்டிருக்கிறார். பேரழகியின் பெட்டியில் பாதிக் கடிதத்தை ஒளித்து வைத்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை நீங்கள் கல்கத்தாவுக்குப் புறப்பட்ட பிறகுதான் அவர் உணர்ந்திருக்கிறார். அவருடைய அச்சம் உண்மையாகி விட்டது. உங்களைக் சுல்கத்தாவில் கண்டு பிடித்து எப்படியும் அந்தப் பாதிக் கடிதத்தை எடுத்துக் கொண்டு வந்துவிடலாம் என்ற எண்ணத்துடன் தான் அவர் புறப்பட்டுப் போயிருக்கிறார்!’ 

“அவர் புறப்பட்டுப் போகுமுன் சவரிமுத்துவிடம் என்மீது ஏற்பட்டிருக்கும் ஐயத்தைப் பற்றிச் சொல்லியிருப்பாரா?” என்று கேட்டார் தங்கத்துரை, 

“சொல்லியிருக்க மாட்டார். சின்னத்துரை சிந்தனை மிகுந்த மனிதர். எதை எந்த நேரத்தில் தட்ட வேண்டும் என்பது அவருக்கு நன்கு தெரியும். சவரிமுத்துக்கு உங்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்பட்ட பிறகு, நீங்கள் தொலைபேசியில் பேசிய ஒரே காரணத்தை வைத்துக் கதை கட்டினால் நம்ப மாட்டான் என்பது தெரியும். ஆதாரத்துடன் எதையும் மெய்ப்பிக்க வேண்டும் என்று எண்ணுபவர் சின்னத்துரை. பேரழகியை நீங்கள் கண்டு பிடித்துக் கொண்டு போய்ச் சவரிமுத்துவின் எதிரே நிறுத்திய ஒரே காரணத்திற்காக உங்கள் மீது சவரிமுத்துக்கு அளவு கடந்த நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. இப்போது மீண்டும் சின்னத்துரை திரும்பி வந்து சவரிமுத்தைக் காணுவதற்குள் நீங்கள் கவனம் மிகக் கொண்டு நடந்து கொள்ள வேண்டும்” என்றார் சங்கர்லால். 

“சின்னத்துரை கல்கத்தாவுக்குப் போனதும், சவரிமுத்தின் நண்பன் இருக்குமிடத்துக்குத் தேடிச் செல்வார். அந்த முகவரியில் அவன் இருக்க மாட்டான். அவன் சிறையில் அடைபட்டுக் கிடக்கிறான் என்பதை அறிந்ததும், என்னையும் பேரழகியையும் ஓட்டல்களில் தேடிப் பார்ப்பார். எங்களைப் பார்க்க முடியாமல் திரும்பி விடுவார். இல்லையா?” என்றார் தங்கத்துரை. 

“ஆமாம். சின்னத்துரை ஒரே நாளில் திரும்பிவிடுவார். அவர் வருவதற்குள் நாம் பல வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது. நீங்கள் ஓர் ஓட்டலில் தங்கியிருங்கள். அதிகமாக எங்கும் தலையைக் காட்ட வேண்டாம். கூடியவரையில் ஓட்டல் அறையிலேயே ஒளிந்திருப்பது நல்லது. தேவைப்படும் போது நான் தொலைபேசியில் உங்களுடன் தொடர்பு கொள்ளுகிறேன். எந்த ஓட்டலில் தங்கப் போகிறீர்கள், என்பதை மட்டும் தெரிவித்தால் போதும்!” என்றார் சங்கர்லால், 

“ஆகட்டும் சங்கர்லால்!” என்றார் தங்கத்துரை, 

“இப்போதே போக வேண்டிய அவசியமில்லை. பொழுது விடியும் தறுவாயில் மாணிக்கத்தின் காரிலேயே கொண்டு போய் விட்டு விடச் சொல்லுகிறேன். அதுவரையில் இங்கேயே நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்!” என்றார் சங்கர்லால். 

‘சின்னத்துரை திரும்பி வந்ததும் நான் என்ன செய்ய வேண்டும். சின்னத்துரை வருவதற்குள்ளே நான் சவரிமுத்தைப் பார்த்தால் என்ன? கையில் பணமில்லை என்றும், நான் கொடுத்த நகைகளை விற்றுப் பணமாக்கிப் போகவே வந்தாகவும் சொன்னால் நம்பமாட்டானா?” என்றார் தங்கத்துரை. 

“இப்போது அதற்கு அவசியமில்லை. பேரழகியைத் தனியாகக் கல்சுத்தாவில் விட்டுவிட்டு வந்தீர்கள் என்பதை அறிந்ததும் மதிகெட்டு போன புலியைப் போல் உங்கள் மேல் பாய்வான், உடனே சின்னத்துரையைத் தேடுவான். சின்னத்துரை சுல்கத்தாவுக்குப் போய்விட்டார் என்பதை அறிய அவனுக்கு வெகு நேரம் பிடிக்காது. அதன் பிறகு சவரிமுத்துக்கு உங்கள் மீதே ஐயம் வந்துவிடும்!” என்றார் சங்கர்லால், 

தங்கத்துரை அமைதியுடன் சிந்தனை செய்தார். 

சங்கர்லால் தொடர்ந்து சொன்னார் : “சின்னத்துரை எப்போது கல்கத்தாவிலிருந்து வருகிறார் என்று கண்டுபிடிப்பது என் பொறுப்பு. விமான நிலையத்துக்கு மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சின்னத்துரை வந்ததும் எனக்குச் சொல்லும்படி சொல்லுகிறேன். சின்னத்துரை விமானத்திலிருந்து இறங்குமுன்பே, எனக்குச் செய்தி வந்துவிடும். அப்போது உங்களுடன் தொடர்பு கொண்டு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லுகிறேன். அதன்படி கவனமாக நடந்து கொள்ளுங்கள்!” 

“ஆகட்டும் சங்கர்லால்” என்றார் தங்கத்துரை. 

சங்கர்லால் இப்போது மாணிக்கத்தைப் பார்த்தார். “மாணிக்கம், பெரிய ஓட்டல் ஒன்றில் தங்கத்துரை இருக்க ஏற்பாடு செய்துவிட்டு, அம்பிகா லாட்ஜ உரிமையாளரைப் பார்க்க வேண்டும்” என்றார். 

மாணிக்கத்தின் விழிகள் சங்கர்லாலை விழிப்புடன் நோக்கின. “அவரை மிரட்டி மீண்டும் ஏதாவது பணம் பிடுங்க வேண்டுமா?” என்று கேட்டான் மாணிக்கம். 

சங்கர்லால் சிரித்தார். இந்தத் தடவை மிரட்டிப் பணம் பறிக்க வேண்டிய அவசியமில்லை. இனிமேல் அவரை மிரட்டக் காரணம் எதுவும் இல்லை. தங்கத்துரை கொண்டு வந்திருக்கும் பாதிக் கடிதத்தை விற்றுத் தரும்படி சொல்ல வேண்டும். அந்தக் கடிதம் எப்படி உன்னிடம் வந்தது என்பதை மட்டும் சொல்லவே கூடாது!” என்றார். 

“என்ன கடிதத்தை விற்றுவிடுவதா?” என்று வியப்புடன் கேட்டார் தங்கத்துரை, 

“ஆமாம்! பாதிக் கடிதம் நம்மிடமிருந்து பயன் என்ன? அது சேர வேண்டிய இடத்திலே சேரட்டுமே! புதையலை நாம் ஏன் தேட வேண்டும்? புதையலைக் கிளப்ப பலர் முன் வந்திருக்கிறார்கள். மறைமுகமாகச் சிலர் தேடுகிறார்கள். நேரிடையாகச் சிலர் தேடுகிறார்கள். இவ்வளவு பேருக்கு நடுவிலே நாம் பாதிக் கடிதத்தை வைத்துக் கொண்டு, கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறது என்பதையே சரியாகப் புரிந்து கொள்ளாமல் புதையலைத் தேடுவது நம் தொழிலுக்கு இழுக்கு! புதையலைத் தேடுபவர்களுக்கு ஊக்கம் அளிக்கவே இந்தப் பாதிக் கடிதத்தைப் பேரம் பேசப் போறேன்!” என்றார் சங்கர்லால். 

தங்கத்துரையால் ஒன்றுமே பேசமுடியவில்லை. அவர் வெகுநேரம் சங்கர்லாலையே வைத்த விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். 

“ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள்? அப்படிப் பார்த்தாலாவது அண்ணா அடுத்துச் செய்யப் போவது என்ன என்று சொல்லுவார் என்று எண்ணுகிறீர்களா? தப்புக் கணக்குப் போட்டுவிட்டீர்கள். அவருடைய வலது கை என்ன செய்கிறது என்பது இடது கைக்குத் தெரியாது! எல்லாம் போகப் போக நம்மைப் பொறுத்தவரையில் குழப்பமாக இருக்கும். அவர் பாட்டிற்கு அமைதியாக இருப்பார்! எங்கள் அண்ணாவிடம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டி முதல் உண்மை இது!” என்றார் மாணிக்கம். 

தங்கத்துரை மென் சிரிப்புடன் மாணிக்கத்தைப் பார்த்தார், சிறிது நேரம் வரையில் பார்த்துவிட்டு, ‘மாணிக்கம்! நீ சொல்வது உண்மைதான். சாதாரண மனிதன் எவனுமே இந்த உண்மையைத் தெரிந்து கொண்டு நடப்பது சாதாரணம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். நீயும் நானும் துப்பறியும், தொழிலில் இருப்பதால், ஓரளவாவது என்ன செய்யப் போகிறார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டாமா?” என்றார். 

மாணிக்கம் வாய்விட்டுச் சிரித்தான், “தங்கத்துரை, நம் இருவரையும் மறந்து விடுங்கள். உதவிப் போலீஸ் கமிஷனர் வகாப் எத்தனை ஆண்டுகளாகப் பதவியில் இருக்கிறார்? அவர் பார்க்காத திருடர்கள் உண்டா? குற்றம் புரிபவன் தொழில் மேதையாக இருந்தாலும் சரி, அவன் அடுத்தபடியாக என்ன செய்வான். எங்கே இருப்பான், என்ன சிந்தனை செய்வான் என்பதை அப்படியே சொல்லிவிடுவார். உண்மைகளை முன் கூட்டியே எல்லோருக்கும் எடுத்துரைக்கும் திறமை அவருக்கு இருந்தும்கூட, என் அண்ணாவின் மனப்போக்கை அவரால் அறிந்திட முடியவில்லை. இன்றும், அவர் ஒன்று சொல்வார். அதற்கு நேர்மாறாக இருக்கும் சங்கர்லால் சொல்லுவது!” என்றான் மாணிக்கம். 

சங்கர்லால் சொன்னார்; “தங்கத்துரை சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளட்டும், பொழுது விடிய இன்னும் வெகு நேரம் இல்லை. உன்னிடம் சிறிது நேரம் பேச வேண்டும் என்னுடன் வா!” 

சங்கர்லால் எழுந்தார். நூல் நிலைய அறைக்குச் சென்றார். மாணிக்கம் அவரைத் தொடர்ந்து சென்றான். நூல் நிலைய அறையின் கதவைக் கொஞ்சம் சாத்திவிட்டுச் சங்கர்லால் மாணிக்கத்திடம் ஏதோ சொல்லிக் கொண்டே போனார். 

38 

விடிந்து விட்டது. காரில் ஓடிக் கொண்டிருந்த கடிகாரம் ஆறுமணி என்பதைக் காட்டியது. 

மாணிக்கத்தின் கார் ஓடிக் கொண்டிருந்தது. 

“என்னை எந்த ஓட்டலில் இறக்கிவிடப் போகிறாய் மாணிக்கம்?” என்று கேட்டார் தங்கத்துரை. 

“ஒரு பெரிய ஓட்டலாகப் பார்த்து இறக்கிவிடுகிறேன் நுங்கம்பாகத்தில் ஓர் ஓட்டல் இருக்கிறது. அமைதியான இடம். பெரிய ஓட்டல், எல்லா வசதிகளுடன் இருக்கும் அந்த ஓட்டலில் தங்கி விட்டால், பிறகு சொந்த வீட்டுக்குப் போகக்கூட மனம் வராது!” என்றான் மாணிக்கம். 

“ஓட்டலின் பெயர் என்ன? எனக்குத் தெரியாத ஓட்டல் சென்னையிலேயே கிடையாது!” என்றார் தங்கத்துரை. 

“தேனீ ஓட்டல் என்று பெயர் அதற்கு!” என்றான் மாணிக்கம் 

தங்கத்துரை அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார். “சரியான ஓட்டல்! தேன் கூட்டில் உள்ளதைப் போல் அதில் பல அறைகள் இருக்கின்றனவாம்! தேனீக்களைப் போல் அதில் மக்கள் வந்து தங்குகிறார்கள் என்று அண்மையில் எல்லாப் பத்திரிகைகளிலும் விளம்பரங்கள் வந்தன. அவற்றைப் பார்த்து விட்டுச் சொல்லுகிறாயா? அந்த ஓட்டல் எப்படியிருக்கிறது என்று தான் பார்த்து விடலாம்!” என்று சொல்லிவிட்டு “மாணிக்கம், நீ பத்திரிகையில் வரும் எல்லா விளம்பரங்களையும் விடாமல் படிப்பது உண்டா?” என்று கேட்டார். 

மாணிக்கம் சொன்னான் : “நல்ல கேள்வி கேட்டீர்கள். பத்திரிகைகளில் வரும் விளம்பரங்களைத் தவிர வேறு எதையுமே தான் படிப்பதில்லையே!” 

தங்கத்துரை இதைக் கேட்டு விட்டு விழுந்து விழுந்து சிரித்தார். பிறகு “ஆமாம். இப்போது வரும் செய்திகளைவிட விளம்பரங்கள தாம் படிக்க வேடிக்கையாக இருக்கின்றன என்றார்; 

தேனீ ஓட்டலில் அவரை இறக்கிவிட்டு மாணிக்கம் காரை வேறு திக்கில் செலுத்தினான். 

அவன் இப்போது அம்பிகா லாட்ஜை நோக்கிச் சென்றான், விடிந்ததும் முதல் முதலில் மாணிக்கத்தைக் கண்டதும், அம்பிகா லாட்ஜின் உரிமையாளர் என்ன எண்ணுவார் என்று எண்ணிய போது அவனுக்குச் சிரிப்பு வந்தது. பேரழகியின் விஷயத்தில் ஓட்டல்காரர் மாணிக்கத்திடம் உண்மையாகவே ஏமாந்து விட்டார். ஆனால் இதுவரையில் மாணிக்கம் யார் என்பது அவருக்குத் தெரியாது! 

மாணிக்கம் ஓட்டலுக்குச் சிறிது தூரத்தில் காரை நிறுத்தி விட்டுக் கீழே இறங்கினான். சாலையின் இரு பக்கங்களிலும் அவன் ஒரு தடவை பார்த்து விட்டு ஓட்டலை நோக்கி நடந்தான். 

அம்பிகா லாட்ஜின் கண்ணைப் பறிக்கும் விளக்குகள் அவனை வரவேற்றன. அவன் உள்ளே சென்று ஓர் ஓரமாகக் கிடந்த மேசையின் முன் நாற்காலியை நெருக்கமாக இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தான். பரிமாறுபவன் ஓடி வந்து எதிரில் நின்றான். முதலில் அவனைப் பார்த்ததும், “என்ன வேண்டும் ஐயா?” என்று மிக்க மரியாதையுடன் கேட்டவன், மாணிக்கத்தின் முகத்தை உற்றுப் பார்த்ததும் விழிகளை உருட்டிப் பார்த்தான். வேண்டுமென்று அவன் அப்படிப் பார்க்கவில்லை. இயற்கையாகவே மாணிக்கத்தைக் கண்டதும் அவன் விழிகள் பிதுங்கின. 

மாணிக்கம் தன் இரு கைகளையும் மேசை விளிம்பில் ஊன்றிக் கொண்டு பரிமாறுபவனைப் பார்த்துச் சொன்னான் “ஓட்டல்காரரைக் கூப்பிடு. அவரிடம் முதலில் நான் பேச வேண்டும். என்ன பேச வேண்டும் தெரியுமா? ஆந்தை விழிகளுடைய பரிமாறுபவர்களை இந்த ஓட்டலிலிருந்து முதலில் விரட்ட வேண்டும் என்று சொல்ல வேண்டும். அதன் பிறகு எனக்கு என்ன வேண்டுமோ, அதை ஓட்டல்காரரையே கொண்டுவரச் சொல்லுகிறேன்!” 

பரிமாறுபவன் முகத்தில் அறைந்ததைப் போலிருந்தது மாணிக்கத்தின் பேச்சு. மாணிக்கத்தை இதற்கு முன் அவன் பார்த்திருக்கிறான். அவனுக்கும் போலீசுக்கும் ஏதோ தொடர்பு உண்டு என்ற எண்ணம் அந்த ஓட்டலில் எல்லோருக்கும் பரவி விட்ட டது. உதவி போலீஸ் கமிஷனர் வகாப் ஒரு படையுடன் அந்த ஓட்டலைச் சோதனை போட்டு வீட்டுச் சென்றதால், மாணிக்கத்திடம் ஏற்பட்டிருந்த அச்சம் மிகுந்துவிட்டது! இப்போது மீண்டும் மாணிக்கம் வந்திருக்கிறானே? 

பரிமாறுபவன் பேசாமல் உள்ளே சென்றான். மீண்டும் அவன் அந்தப் பக்கம் வரவே இல்லை. 

சிறிது நேரம் கழித்து ஓட்டல்காரர் ஓடிவந்தார். அவர் மாணிக்கத்தைப் பார்த்ததும் சிரித்துக் கொண்டே, “என்ன வேண்டும்? காலையில் நீ வந்திருப்பதைப் பார்த்தால் ஏதாவது வேலையாகத்தான் வந்திருப்பாயோ என்று அச்சமாக இருக்கிறது!” என்று சொல்லிக் கொண்டே மற்றொரு நாற்காலியில் உட்கார்ந்தார். 

மாணிக்கம் அவரைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே, ‘அச்சப்பட வேண்டியதில்லை. முதலில் இரண்டு கோப்பைத் தேநீர் கொண்டு வாருங்கள். தேநீர் குடித்ததும் கொஞ்சம் அமைதியாகப் பேசுவோம். உங்களுக்கு ஓர் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!” என்றான் மாணிக்கம். 

ஓட்டல்காரர் உடனே எழுந்து ஓடினார். அவரே இரண்டு கோப்பைத் தேநீர் கொண்டு வந்தார். மாணிக்கத்திடம் ஒரு கோப்பைத் தேநீரைக் கொடுத்துவிட்டு, மற்றொரு கோப்பையிலிருந்த தேநீரை அவர் உறிஞ்சிக் குடித்தார். 

மாணிக்கம் ஆவி பறக்கும் தேநீரைக் குடித்துவிட்டுச் சொன்னான்: எனக்குக் கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது. இப்போதே கொடுக்க வேண்டியதில்லை. இரண்டு நாட்கள் கழித்துக் கொடுத்தால் போதும். ஐயாயிரம் ரூபாய் வேண்டும்!” 

‘ஐயாயிரமா?” என்று புருவங்களை நெறித்தார் 

ஓட்டல்காரர். 

“எனக்கு ஒன்றும் நீங்கள் ஐயாயிரத்தை இனாமாகத் தரவேண்டாம். நீங்கள் எப்படிப்பட்டவர் என்று எனக்கு நன்கு தெரியும். சுற்றி வளைத்துப் பேசாமல், தேரிடையாக விஷயத்துக்கு வருவோம். ஒளிவு மறைவின்றி நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்! என்று சொல்லிவிட்டு, “என்னிடம் ஒரு கடிதம் இருக்கிறது” அதை விலைக்கு வாங்கிக் கொள்வீர்களா?” என்றான் மெல்லிய குரலில் 

“என்ன கடிதம்?” என்றார் மெல்ல ஓட்டல்காரர். 

“கடிதம் என்றால் முழுக் கடிதம் உங்களிடம் நான் கொண்டுவர மாட்டேன். தெரியுமா? பாதிக் கடிதம் அது! அந்த பாதிக் கடிதத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?” என்றான் மாணிக்கம் 

“எவ்வளவு?” என்று கேட்டார். 

“ஓர் இலட்ச ரூபாய்! சுமார் ஓர் இலட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரு புதையலின் மர்மம் அந்தக் கடிதத்துள் புதைந்து கிடக்கிறது! பாதிக் கடிதத்தைக் கொண்டு புதையலைக் கிளப்ப முடியாது. மற்றொரு பாதிக் கடிதம் வைத்திருப்பவனிடம் இதை நீங்கள் விற்றுப் பெரும் பணம் பெறலாம். முதலில் ஐயாயிரம் ரூபாய் எனக்குக் கொடுங்கள். கடிதத்தை நீங்கள் விற்ற பிறகு வரும் பணத்தில் பாதி கொடுங்கள்!” 

“என்ன புதையல் என்று சொல்லவில்லையே?” 

“சவரிமுத்தை உங்களுக்குத் தெரியும் அல்லவா? அவன் கோயிலில் கொள்ளையடித்த நகைகளை எங்கேயோ புதைத்து வைத்து விட்டான். புதையல் இருக்குமிடம் ஒரு கடிதத்தில் எழுதப்பட்டு இரண்டாக கிழிக்கப்பட்டது. கிழிக்கப்பட்ட கடிதங்கள் இரண்டுமே அவன் கையைவிட்டுப் போய்விட்டன. அவற்றில் ஒன்று தான் என்னிடம் இருக்கிறது!” 

“நான் நம்பவில்லை!” என்றார் ஓட்டல்காரர். 

‘நம்ப வேண்டாம்! இரண்டே நாட்களில் அந்தக் கடிதத்தைக் கொண்டு வருகிறேன். அதற்குள் மற்றொரு பாதிக் கடிதம் எவரிடம் இருக்கிறது என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான் மாணிக்கம். 

ஓட்டல்காரர் அவனை வழியனுப்ப வெளியே வந்தார். 

“நானும் வருகிறேன், என்னைத் தொடர்ந்து வராதீர்கள். என் பின்னால் எவரையும் அனுப்பாதீர்கள். என்னைத் தொடர்ந்து வருபவர் எவராயினும் உருப்படியாகத் திரும்பிவர முடியாது!” என்று எச்சரித்து விட்டுக் காரை நோக்கி நடந்தான் மாணிக்கம். 

கார் புறப்பட்டுப் பறந்தது! 

39 

இரண்டு நாட்கள் ஓடிவிட்டன. 

தங்கத்துரை தங்கியிருந்த ஓட்டலுக்குச் சங்கர்லால் தொலைபேசியில் பேசினார். 

தங்கத்துரை தொலைபேசியை எடுத்ததும், சங்கர்லால் சொன்னார். “தங்கத்துரை, இன்று பிற்பகல் சின்னத்துரை கல்கத்தாவிலிருந்து திரும்பி வந்துவிட்டார். அவர் நேராக என்னூர் இல்லத்திற்குப் போவார் என்று எண்ணுகிறேன். 

இப்போது மணி ஏழு. இருட்டிவிட்டது. வாடகைக் கார் ஒன்றை வாங்கிக் கொண்டு நீங்கள் மட்டும் தனியாகச் செல்லுங்கள் என்னூர் தீவுக்கு! சின்னத்துரையிடம் நீங்கள் ஏன் சென்னை வந்தீர்கள் என்பதற்குச் சரியான காரணத்தைச் சொல்லிவிட்டுப் பிறகு சவரிமுத்தைப் பார்க்கப் புறப்படுங்கள்!” 

“இதோ புறப்பட்டு விட்டேன்!” என்றார் தங்கத்துரை. வாடகைக் கார் ஒன்றை வாங்கிக் கொண்டு தீவுக்குச் சென்றார். 

ஆனால் – 

அங்கே நிலவியிருந்த எதிர்பாராத அமைதியை அவர் கொஞ்சமும் விரும்பவில்லை. 

40 

தீவு இருளில் மூழ்கிக் கிடந்தது வழக்கம் போல்! 

தங்கத்துரை சிறிது நேரம் நின்று சிந்தனை செய்தார். அவருக்கு அப்போது இரண்டு செய்திகள் பிடிக்கவில்லை. ஒன்று, சின்னத்துரை கல்கத்தாவுக்குப் போய்த் திரும்பி வந்தது. இரண்டாவது, அந்தத் தீலில் நிலவிய அச்சம் தரும் அமைதி! 

சின்னத்துரை தீவுக்கு வராவிட்டால், வேறு எங்கே போயிருப்பான்? இதை அாகிக்கத் தங்கத்துரையின் துப்பறியும் திறமை வேண்டியதில்லை. எந்த ஒரு சாதாரண மனிதனும் எளிதில் கண்டு கொள்ளுவான். சின்னத்துரை தீவுக்கு வராவிட்டால், சவரிமுத்தின் இருப்பிடத்திற்குப் போயிருப்பான் என்பது திண்ணம். இரண்டும் இரண்டும் நான்கு என்பதை எவருமே தவறாகக் கணக்குப் போட முடியாது! ஆனால் – 

தங்கத்துரை திரும்பிப் போய்விடவில்லை. எதற்கும் வீட்டிற்குள் ஒரு முறை பார்த்துவிட்டுப் போய்விடலாம் என்று எண்ணி மெல்ல நடந்தார். வீட்டிற்குப் பக்கத்தில் சென்றார். வீட்டின் பக்கவாட்டில் இரு சன்னல்கள் திறந்திருந்தன! 

தங்கத்துரை சன்னல்களுக்குப் பக்கத்தில் போய்ப் பார்த்தார். உள்ளே இருட்டில் ஒன்றுமே தெரியவில்லை. அவர் முன்பக்கம் செல்லத் திரும்பினார். அப்போது –

ஏதோ சலசலப்பு ஓசை கேட்டது. தங்கத்துரை சுற்றுமுற்றும் பார்த்தார். மரத்தின் மீது உட்கார்ந்திருந்த கோட்டான் அச்சம் தரும் வகையில் அலறிவிட்டுப் பறந்து விட்டது! 

தங்கத்துரை வீட்டின் முன் பக்கம் சென்றார். தாழ்வாரத்தை அடைந்ததும் முன் கதவைப் பார்த்தார். கதவு பூட்டப்படவில்லை. 

சின்னத்துரை உள்ளே இருப்பார் என்று எண்ணினார் தங்கத்துரை. கால்சட்டைப் பையில் மின்பொறி விளக்கு இருந்தது. அதை எடுத்துக் கொண்டார். கதவை மெல்லத் தள்ளிப் பார்த்தார். அது திறந்து கொண்டது. கதவை மெல்லத் தள்ளிப் பார்த்தார். தங்கத்துரை உள்ளே சென்றார். மீண்டும் கதவை மூடிவிட்டு இருட்டில் பார்த்தார். எதிரே அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை. அவ்வளவு இருட்டாக இருந்தது. 

அவர் கையிலிருந்த மின்பொறி விளக்கை அடித்துச் சுவரில் மின்சார விளக்குப் பொத்தன் இருக்குமிடத்தைப் பார்த்தார். அது கதவின் ஓரத்திலேயே இருந்தது. அதைத் தட்டினார். உள்ளேகூடம் முழுவதும் விளக்கு ஒளி பரவியது. அங்கே கூடத்தில் குப்புற விழுந்து கிடந்தார் சின்னத்துரை! 

தங்கத்துரை அவருக்குப் பக்கத்தில் சென்றார். கீழே குனிந்து பார்த்தார். 

சின்னத்துரை ஆடவும் இல்லை, அசையவும் இல்லை! 

தங்கத்துரை அவரைப் புரட்டினார்.

சின்னத்துரை –

செத்துக் கிடந்தார். அந்தத் தனித்த வீட்டில்! அவருடைய மார்பில் ஆழப் புதைந்திருந்த ஒரு சுத்தி! அந்தக் கத்தியின் பிடி. மட்டுமே வெளியே தெரிந்தது! 

தங்கத்துரை அவருடைய உடலைத் தொட்டுப் பார்த்தார். அவருடைய உடலிலே இன்னும் கூடக் கொஞ்சம் கதகதப்பு இருந்தது. அவர் இறந்து வெகு நேரம் ஆகவில்லை என்பதைப் புரிந்து கொண்ட தங்கத்துரை நிமிர்ந்து நின்றார். அந்த வீடு முழுவதும் தேடிப் பார்த்தார். எவராவது அங்கே ஒளிந்திருப்பார்களோ என்ற எண்ணத்துடன் அவர் மூலைமுடுக்குகளிலும் கதவின் ஓரங்களிலும் சுற்றிப் பார்த்தார். ஆனால் – 

எவரையும் காணோம்! 

அவர் மீண்டும் சின்னத்துரை விழுந்து கிடந்த இடத்துக்கு வந்தார். அவர் நின்றபடியே சின்னத்துரையைப் பார்த்தார். சின்னத்துரைக்கு இப்படிப்பட்ட ஒரு முடிவு ஏற்படும் என்று தங்கத்துரை சிறிதும் எண்ணவில்லை. இதற்காகவா இவர் கல்கத்தாவுக்குப் போய் இவ்வளவு வேகமாகத் திரும்பி வந்தார் என்று எண்ணினார். அவர் சிந்தனை செய்து கொண்டிருந்த போது – 

பின்னால் கதவு திறக்கப்படும் ஓசை கேட்டது. 

தங்கத்துரை புயலைப் போல் திரும்பினார். வாயிற்படியில், உடம்பில் ஈரம் சொட்டச் சொட்ட நனைந்து போய் நின்றிருந்தான் சவரிமுத்து! 

அவன் தங்கத்துரையை உற்றுப் பார்த்தான். பிறகு கீழே விழுந்து கிடந்த சின்னத்துரையைப் பார்த்தான். மீண்டும் தங்கத்துரையைப் பார்த்தான். அவனுக்கு மூச்சு வாங்கியது. கண்கள் சிவந்திருந்தன. தீவை அடைய அவன் நீந்தி வந்திருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டார் தங்கத்துரை. 

“சவரிமுத்து, உள்ளே வா” என்றார் தங்கத்துரை. “இதற்காகத்தான் நீ கல்கத்தாவிலிருந்து திரும்பி வந்தாயா?” என்று உரக்கக் கேட்டான் சவரிமுத்து “இல்லை” என்றார் தங்கத்துரை. 

“வேறு எதற்காக இங்கே வந்தாய்?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான் சவரிமுத்து. சின்னத்துரையின் பக்கத்தில் போய், அவரைப் புரட்டிப் பார்த்தான், பிறகு வியப்புடன் தங்கத்துரையை விழித்துப் பார்த்தான். 

“சின்னத்துரையைப் பற்றி உன்னிடம் எச்சரிக்கை செய்யவே வந்தேன்!” என்றார் தங்கத்துரை. 

சவரிமுத்து ஆத்திரத்துடன் கேட்டான் : “எதைப் பற்றி எச்சரிக்கை செய்ய வந்தாய்? சின்னத்துரையைக் கொலை செய்துவிட்டு நீ எனக்கு எச்சரிக்கை செய்கிறாயா?” 

தங்கத்துரை மிகச் சிந்தித்தார். அவர் கொலை செய்யவில்லை என்றாலும் சவரிமுத்து அப்போது இருக்கும் நிலையிலே, கொதிப்பிலே சிறிதும் நம்பமாட்டான் என்பது உறுதி. ஆகையால் கொஞ்சம் விட்டுக் கொடுத்து வளைத்துப் பேசினார் தங்கத்துரை. 

“சவரிமுத்து, என்மீது நீ ஆத்திரப்படுவது உண்மையிலேயே எனக்கு வியப்பாக இருக்கிறது!” என்றார் தங்கத்துரை. 

“உன் மீது ஆத்திரப்படாமல், நீ செய்த வேலைக்குத் தங்கப்பதக்கம் தருவேன் என்றா எண்ணினாய்? உன்னை நம்பி என் மகளை, உயிரினும் மேலான என் ஒரே மகள் பேரழகியை அனுப்பி வைத்தேனே! அவளை எங்கே விட்டு வந்தாய்?” என்றான் சவரிமுத்து. 

“பேரழகி பத்திரமாக இருக்கிறாள் கல்கத்தாவில், அவளைப் பற்றி நீ வீண் கவலை கொள்ள வேண்டாம். நான் எதற்காக வந்தேன் தெரியுமா? நான் சொன்னால் நம்பமாட்டாய்? இப்போது சின்னத்துரையை நான் கொலை செய்து விட்டதாக எண்ணுகிறாய் அல்லவா? உன்னிடம் நான் வாதாடப் போவதில்லை. நான்தான் சின்னத்துரையைக் கொலை செய்து விட்டேன் என்று வைத்துக் கொள். அதனால் என்ன தவறு?” என்றார் தங்கத்துரை. 

சவரிமுத்தின் ஆத்திரம் அதிகமாகியது. “எதற்காக அவனைக் கொலை செய்தாய்?” என்று அவன் மீண்டும் கத்தினான். 

“சின்னத்துரை உயிருடன் இருந்தால் எனக்கு மட்டுமல்ல, உனக்கும் தான் ஆபத்து என்பதை நீ உணரவில்லை!” 

“அவன் உயிருடன் இருந்த போது அதைச் சொல்ல உனக்குத் துணிவில்லையா?” 

“துணிவு எப்போதும் தான் இருக்கிறது. அதைப் பயன்படுத்தச் சந்தர்ப்பம் வேண்டாமா? சின்னத்துரையின் மீது எனக்கு ஏற்பட்ட ஐயம், கல்கத்தாவுக்குச் சென்றதும் தான் உறுதி ஆயிற்று!” 

“கல்கத்தாவில் என்ன நடந்தது?” 

தங்கத்துரை சிந்தனை செய்யாமல் சவரிமுத்து நம்பும்படி பளிச்சென்று பதில் சொன்னார்: “கல்கத்தா போலீஸ் இலாகா என்னைக் கவனிக்க ஆரம்பித்தது. என்னை எங்குச் சென்றாலும் நிழல் போல ஒருவன் தொடர்ந்து வந்தான். அவன் போலீஸ் இலாகாவைச் சேர்ந்தவன் என்பதைக் கண்டுபிடிக்க வெகு நேரம் பிடிக்கவில்லை. கல்கத்தா போகும் வரையில் என்னை எவரும் தொடர்ந்து வரவில்லை. கல்கத்தா புகைவண்டி நிலையத்தை அடைந்ததும், போலீஸ் இலாகாவைச் சேர்ந்த அந்த மனிதன் எங்கள் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தான் எப்படி?” 

“எப்படி” என்று திருப்பிக் கேட்டான் சவரிமுத்து. 

“இது தெரியவில்லையா சின்னத்துரை? போலீஸ் இலாகாவுடன் தொடர்பு கொண்டவன் அவன். கல்கத்தாவுக்கு நானும் பேரழகியும் போவதைப் பற்றி முன் கூட்டியே போலீஸ் இலாகாவுக்குத் தகவல் கொடுத்திருக்கிறான். அதனால் தான் போலீஸ் இலாகாவைச் சேர்ந்த அந்த மனிதர். எங்களுக்காகப் புகைவண்டி நிலையத்தில் காத்திருந்தான். 

என்னைத் தொடர்ந்து என்னுடைய செய்கைகளை அடிக்கடி போலீஸ் இலாகவுக்கு அறிவிக்க வேண்டும் என்பது தான் அவனுடைய வேலை. அந்த மனிதனை ஏமாற்ற எனக்கு வெகு நேரம் பிடிக்கவில்லை. அவனை ஏமாற்றிவிட்டு, உன்னுடைய நண்பனைத் தேடிச் சென்றேன். உன்னுடைய நண்பன் சிறையிலிருப்பதாகத் தெரிய வந்தது. சிறையில் போய் அவனைப் பார்த்துப் பயன் என்ன? எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் வீட்டில் பேரழகியை விட்டுவிட்டு, சின்னத்துரையைப் பற்றி உன்னிடம் எச்சரிக்கை செய்ய ஓடி வந்தேன். எல்லாவற்றிற்கும் மேலாக, என்னுடைய நகைகள் அவ்வளவையும் அவனிடம் கொடுத்துவிட்டேன் அல்லவா? அவற்றைப் பெற்றுக் கொண்டு போகவே ஓடிவந்தேன்!” 

“தங்கத்துரை!” என்றான் சவரிமுத்து. அவனுக்குத் ங்கத்துரையின் மீது ஓரளவு நம்பிக்கை பிறந்த போதிலும், சின்னத்துரையின் மீது ஐயம் ஏற்படவில்லை. “சின்னத்துரையிடம் நகைப் பையை வாங்கிக் கொண்டீர்களா?” என்று அமைதியுடன் கேட்டான். 

“இல்லையே! அவனிடம் நகைப்பை இல்லை!” 

”சின்னத்துரை போலீஸ் இலாகாவுடன் தொடர்பு கொண்டவர் என்றால், நம் இருவரையும் முன்பே போலீசில் பிடித்துக் கொடுத்திருக்கலாமே?”” என்றான் சவரிமுத்து. 

“இன்னும் உன் ஐயம் தீரவில்லையா? சின்னத்துரை மூளையுள்ள மனிதன் நீ புதையலைக் கிளப்பியதும் போலீஸ் இலாகாவைத் திரட்டிக் கொண்டு வரலாம் என்று எண்ணியிருந்தான். அதுவரையில் உன்னையும் என்னையும் அவன் விட்டு வைத்தான்!” 

“அவனைப் பல ஆண்டுகளாகவே எனக்குத் தெரியுமே!” 

“அப்படியா? அப்படியானால் பல ஆண்டுகளாகவே உன்னைப் பற்றிப் போலீசில் தகவல் கொடுத்தவன் இவன்தான் என்பது உறுதியாகி விட்டது!” 

“இப்போது இவன் நகைப் பையை எங்கே வைத்திருப்பான் என்று தெரியவில்லையே?” 

‘அதைத்தான் நானும் சிந்தனை செய்கிறேன்! நகைப்பையை எங்கே வைத்திருப்பான் என்று உன்னைக் கேட்டால் தெரியும் என்று எண்ணினேன்!” என்றார் தங்கத்துரை. 

“மாடிக்கு வாருங்கள்” என்றான் சவரிமுத்து. 

இருவரும் வெளியே வந்தார்கள். வீட்டைச் சுற்றிக் கொண்டு பின் பக்கமிருந்த மாடிப் படிகளில் ஏறி மாடியின் மேல் சென்றார்கள். மாடிக் கதவு பூட்டியிருந்தது. சவரிமுத்து சாவிக் கொத்து ஒன்றை எடுத்தான். அந்தப் பூட்டைத் திறந்தான், கதவைத் திறந்துவிட்டு, அவன்தான் முதலில் உள்ளே சென்றான். 

பழக்கப்பட்டவனைப் போல் மின்சாரப் பொத்தான் இருக்குமிடத்தைத் தேடாமலே கண்டுபிடித்து விளக்கைப் போட்டான். அவன் பின்னால் தங்கத்துரை சென்றார். 

உள்ளே, வெளிச்சத்தில் எல்லா இடங்களையும் தேடிப் பார்த்தார்கள். மேசை அறைகளையும் அலமாரிகளையும் திறந்து அலசிப் பார்த்தார்கள். தங்கத்துரையின் தோல் பை, நகைகள் அடங்கிய தோல் பை-

எங்கேயுமே காணோம்! 

சவரிமுத்துக்கு ஓர் ஐயம், சின்னத் துரையைக் கொன்றவர்கள் தகைப்பையை எடுத்துப் போயிருக்க வேண்டும். தங்கத்துரைதான் அவனைக் கொன்று விட்டான் என்றால், நகைப்பையை தங்கத்துரை இதற்குள் எங்கே ஒளித்து வைத்திருக்க முடியும்? ஒரு வேளை சின்னத்துரை தகைப் பையை முன்பே எங்கேயாவது மறைத்து வைத்து விட்டிருந்தால்? 

எதுவும் அவனுக்குத் தெளிவாகப் புரியவில்லை. அவன் தனது ஐயத்தைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் “அப்படியானால் நீங்கள் சின்னத்துரையைக் கொல்லவில்லையா?” என்றான். 

“இல்லை” என்றார் தங்கத்துரை. 

“சின்னத்துரையைக் கொன்றவர்கள் எவராக இருக்கக்கூடும்?” என்று கேட்டான் சவரிமுத்து. 

“இந்தக் கேள்வியை நானே உன்னிடம் கேட்கலாம் என்றிருந்தேன். நான் கேட்பதற்கு முன்பு நீயே கேட்டுவிட்டாய். சின்னத்துரைக்கு எவராவது விரோதிகள் இருக்கிறார்களா என்று உனக்குத் தெரியுமா” 

சவரிமுத்து சிந்தனையுள் ஆழ்ந்தான். அவன் பதில் சொல்லவில்லை. அவன் மனம் ஆராய்ச்சியில் ஈடுபட்டது. சின்னத்துரையின் வாழ்க்கையே மருமமாகத்தான் இருந்தது. அவன் இதுவரையில் எவரையுமே விரோதித்துக் கொண்டதில்லை. 

சவரிமுத்து “தங்கத்துரையைப் பார்த்தான். “தங்கத்துரை, சின்னத்துரையைத் தீர்த்துக் சுட்டிய மனிதர் நாளை நம்மையும் ஒழித்துக் கட்டத் திட்டம் போட மாட்டான் என்று எப்படிச் சொல்ல முடியும்?” என்று கேட்டான். 

“அதுவும் உண்மைதான்! நாம் சின்னத்துரை மறைந்து விட்டதைப் பற்றிக் கவலைப்படாவிட்டால், நம்மைப் பற்றி எவரும் கவலைப்படமாட்டார்கள். போலீசாரைத் தவிர! எதற்கும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார் தங்கத்துரை, 

சவரிமுத்து சொன்னான் : “சின்னத்துரை போலீஸ் இலாகாவைச் சேர்ந்தவன் என்பது உண்மையாக இருக்கும் என்று எனக்கு இப்போது தான் தோன்றுகிறது. எத்தனை தடவைகள் அவனைப் போலீசார் பிடித்துச் சென்றாலும், உடனே அவன் வந்துவிடுவான்! கேட்டால். அவனைக் கைது செய்யப் போலீசாருக்குத் தகுந்த சாட்சியங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்பான்!” 

“போலீசார் அவனைப் பிடித்துச் செல்வது எதற்குத் தெரியுமா? அவன் சொல்ல வேண்டிய உண்மைகளைப் போலீஸ் இலாகாவுக்குத் தெரிவிக்க ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதற்காகத்தான்! போலீஸ் இலாகாவின் தொடர்பு கொண்டிருந்ததால் தான் அவன் சிறையில் கூட அடிக்கடி உன்னை எளிதில் பார்க்க அனுமதி கிடைத்திருக்கிறது!” என்றார் தங்கத்துரை. 

சவரிமுத்து திரும்பினான். விளக்கை அணைத்துவிட்டு வெளியே வந்தான். தங்கத்துரையும் வெளியே வந்தார். சுதவை இழுத்துப் பூட்டிவிட்டுக் கீழே இறங்கினார்கள். 

“இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்?” என்றான் சவரிமுத்து. 

“நீ புதையலைக் கிளப்பி விட்டாயா?” 

“இன்னும் இல்லையே!” 

“சீக்கிரம் புதையலைக் கிளப்பு. நான், சின்னத்துரை எங்கே என் தோல்பையை வைத்திருப்பான் என்று கண்டு பிடிக்க முயற்சி செய்கிறேன். பிறகு இருவருமே கல்கத்தாவுக்குப் போய்விடலாம்!” 

“இப்போது எங்கே தங்கியிருக்கிறீர்கள்?” 

“ஓர் ஓட்டலில் தங்கியிருக்கிறேன். நாளைக்கு வேறு ஓட்டலுக்குப் போகப் போகிறேன். ஆகையால், என்னை நீ தேட வேண்டாம். அவசியம் ஏற்பட்டால் உன்னை நான் சந்திக்கிறேன்!” 

“சின்னத்துரையின் பிரேதம் அங்கேயே கிடக்கட்டுமா?”

“அதைப்பற்றி நமக்குக் கவலை வேண்டாம். குறிப்பிட்ட நேரப்படி சின்னத்துரை போலீஸ் இலாகாவுடன் தொடர்பு கொள்ளாவிட்டால் போலீஸ் இலாகா எப்படியும் உண்மையைக் கண்டுபிடித்து விடும். அதிக நேரம் நாம் இங்கே தங்கியிருந்தது கூடத் தவறு” என்று சொன்னார் தங்கத்துரை, 

இருவரும் மெல்ல நடந்து வந்தார்கள். படகில் ஏறி அடுத்த கரைக்கு வந்ததும், “என்னுடைய காரில் ஏறிக் கொள் நீ போக வேண்டிய இடத்தில் உன்னை விட்டு விட்டு நான் ஓட்டலுக்குப் போய்விடுகிறேன்!” என்றார் தங்கத்துரை. 

கார் புறப்பட்டது. 

சவரிமுத்தை அடையாறுக்குப் பக்கத்தில் இறக்கிவிட்டுத் திரும்பினார் தங்கத்துரை. வழியில், தொலைபேசிப் பெட்டிக்குப் பக்கத்தில் காரை நிறுத்தினார். தொலைபேசிப் பெட்டிக்குள் சென்று கதவை மூடிக் கொண்டார். இரண்டணாக் காசை எடுத்துக் கொண்டு சங்கர்லாலின் எண்ணுக்கு டயலைத் திருப்பினார். சங்கர்லாலின் குரல், “ஹலோ” என்றதும் இரண்டணாக் காசைப் போட்டுவிட்டுப் பேசினார் : “சங்கர்லால் அவசரச் சேதி ஒன்று!” 

“யாரது? தங்கத்துரையா?”

“ஆமாம்”. 

“சொல்லுங்கள். எவரைப் பற்றி?’ 

“சின்னத்துரையைப் பற்றி”

“சின்னத்துரைக்கு என்ன?”

“அவருடைய விஷயம் அவ்வளவு நன்றாக இல்லை!” 

“மிகவும் மோசமா?” 

“ஆமாம். சங்கர்லால்! மிக மிக மோசம்!” 

*சுவலைப்பட வேண்டாம். நீங்கள் எச்சரிக்கையாக 

இருங்கள்! வகாபைத் தீவுக்கு அனுப்பி வைக்கிறேன்!” என்று சொல்லிவிட்டுத் தொலைபேசியை வைத்துவிட்டார். 

தங்கத்துரை காரை ஓட்டிக் கொண்டு ஓட்டலை நோக்கிச் சென்றார். 

தேனீ ஓட்டலின் வண்ண விளக்குகள் அவரை வாவாவென்று அழைப்பதைப் போலிருந்தன. ஓட்டலில் கூட்டம் வழக்கம் போலவே இருந்தது. தங்கத்துரை தமது அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டு பேசாமல் படுத்துவிட்டார். 

அவருக்கு மனக்குழப்பம் ஏற்பட்டிருந்தது. மனக்குழப்பத்துக்கு நல்ல மருந்து தூக்கம் தான் என்பதை தங்கத்துரை அறிவார். ஆகையால், அவர் தூங்க முயற்சி செய்தார். தூக்கம் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் எளிதில் வருவதில்லையே!  

அவர் கோட்டானைப் போல் வெகு நேரம் விழித்தபடியே படுத்துக் கொண்டிருந்தார்.

– தொடரும்…

– சங்கர்லால் வந்துவிட்டார்! (மர்ம நாவல்), சங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல்கள், மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *